World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Despite spreading recession, US CEOs rake in huge pay raises பொருளாதாரப் பின்னடைவு பரவினாலும், அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பெரும் சம்பள அதிகரிப்பை பெறுகிறார்கள் By Alex Lantier வீட்டு அடமான குமிழி நெருக்கடியால் விளைந்த பொருளாதாரப் பின்னடைவின் ஆரம்பம், மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பெரும் அளவிலான சம்பள மற்றும் ஆதாய வெட்டுக்கான அழைப்புகள் இவற்றுக்கு இடையே, அமெரிக்க பெருநிறுவன நிர்வாகமானது தொடர்ந்து படோடாபமான சம்பளங்களையும் வேலை இழப்பின் போது அளிக்கப்படும் ஆதாயங்களின் தொகுப்பையும் தனக்கே அளித்துக் கொள்கிறது. 6.5 பில்லியன் டாலருக்கு மேல் வருட வருவாய் கொண்ட 200 நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) சம்பளம் குறித்து Equilar எனும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வே குறித்து, ஏப்ரல் 6 அன்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இரண்டு வருடங்களும் அதற்கு மேலும் அனுபவம் உடைய தலைமை நிர்வாக அதிகாரிகளின் சராசரி சம்பளம் 2007 இல் 11.2 மில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது, இது 2006 இல் இருந்ததை விட 5 சதவீதம் அதிகமாகும் என்று Equilar கண்டறிந்தது. புதிதாக பணியமர்த்தப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சேர்த்து, சராசரி சம்பளம் 11.7 மில்லியன் டாலர்களாகும். ஒப்பீட்டளவில், 2006 இல் அமெரிக்காவின் சராசரி வருடாந்தர வீட்டு வருமானம் என்பது 48,000 டாலர்கள் தான். தங்களது தலைமையிலேயே நிறுவனத்தில் பெரும் நிதித் துயரங்களைக் கண்ட பின்னரும் கூட பெரிய நிறுவனங்களில் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகள் மிக அதிக சம்பளங்களில் பணத்தை வாரிக் குவிக்கிறார்கள். 10 மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மொத்தமாக 320 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருப்பதையும், அதே சமயத்தில் அந்த நிறுவனங்கள் 55 பில்லியன் டாலர் அளவுக்கு அடமானச் சந்தை தொடர்பான இழப்புகளைக் கண்டன என்றும் அவற்றின் பங்குச் சந்தை விலை 200 பில்லியன் டாலருக்கும் மேல் சரிந்தன என்றும் கண்டறிந்து சர்வேயில் Equilar சுட்டிக் காட்டியிருக்கிறது. தனது அடமானச் சந்தை ஆதரவு பத்திரங்களால் மதிப்பில் சரிவினைச் சந்தித்து மார்ச் மாதத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த வோல் ஸ்ட்ரீட்டின் முக்கிய முதலீட்டு வங்கியான பியர் ஸ்டேர்ன்ஸ் தனது உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த சம்பளம் குறித்து பிஸினஸ் வீக் இதழ், மார்ச் 19 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி தலையிட்டு பியர் ஸ்டேர்ன்ஸின் கடன்களை தனது கணக்கில் ஏற்றிக் கொண்டு, ஜேபி மோர்கன் சேஸ் உதவியுடன் இந்த நிறுவனத்தை காப்பாற்றிக் கொணர்ந்தது. பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்திருக்கிறார்கள், பியர் ஸ்டேர்ன்ஸ் பங்குச் சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருப்பதை அடுத்து தங்கள் ஓய்வு ஆதாயங்களையும் இழந்திருக்கிறார்கள். 2002 முதல் 2006 வரை, பியர் ஸ்டேர்ன்ஸ் நிறுவன சேர்மன் ஜேம்ஸ் கேய்ன், தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஸ்க்வார்ட்ஸ், மற்றும் முன்னாள் இணைத் தலைவர் வாரன் ஸ்பெக்டர் ஆகியோர் மொத்த ஆதாயமாக - அதாவது சம்பளம், போனஸ்கள், வரம்புக்குட்பட்ட பங்குகள், மற்றும் பங்கு வாய்ப்புகள் எனச் சேர்த்து - முறையே 156 மில்லியன் டாலர், 141 மில்லியன் டாலர், மற்றும் 168 மில்லியன் டாலர் தொகையை பெற்றிருக்கிறார்கள். 2002 முதல் 2005 வரையிலான அவர்களின் போனஸ்கள் 9 மில்லியன் டாலர்கள் தொடங்கி 12 மில்லியன் டாலர்கள் வரை வேறுபட்டது. பிஸினஸ் வீக் எழுதுகிறது: "அதற்குப் பின் வந்தது எல்லாவற்றிலும் கொழுத்த ஆண்டாக 2006 ஆம் ஆண்டு. பியர் நிறுவனத்தின் அடமான மூலங்களும் பிற கடன் தயாரிப்புகளும் 27 சதவீத வளர்ச்சி பெற்று, இந்த பகுதிகளில் நிறுவனத்தின் விரிவாக்கம் உண்மையில் நல்ல பலனைக் கொடுத்தது, குறைந்தபட்சம் சம்பள பிரமிடில் உச்சத்தில் இருந்தவர்களுக்காவது.... கெய்ன், ஸ்க்வார்ட்ஸ் மற்றும் ஸ்பெக்டாருக்கு பணமாக வழங்கப்பட்ட போனஸ்களே 16 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகச் சென்றது". அதற்குப் பின்18 மாதங்கள் கூடக் கடந்திராத நிலையில், இந்த போனஸ்களுக்கு எல்லாம் பின்னால் இருந்த "கடன் உற்பத்திகள்" மதிப்பிழந்து போயின. பதவியை ஏற்கும் போதோ அல்லது விலகும் போதோ தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தொகையின் தொகுப்பானது இன்னும் பெரியதாய் இருக்கிறது. 2007ல் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பில் காட்டிய, 47 சதவீதம் சந்தை விலைச் சரிவை கண்ட சிட்டிகுரூப் நிறுவனம் தனது புதிய தலைமை நிர்வாகியான விக்ரம் பண்டிட்டை சேர்க்க 216 மில்லியன் டாலர் தொகையை செலவு செய்கிறது. சிட்டிகுரூப்பின் 800 மில்லியன் டாலர் கையகப்படுத்தல் நடவடிக்கையில் பண்டிட்டின் முந்தைய நிறுவனத்தை ("மாற்று முதலீட்டு" நிபுணர்கள் ஓல்டு லேன் பார்ட்னர்ஸ்) கையகப்படுத்துவதற்கான 165.2 மில்லியன் டாலர் செலவு, சிட்டிகுரூப்பின் மாற்று முதலீட்டுகள் பிரிவின் தலைவராக பண்டிட்டின் ஆறு மாத சம்பளமாக 2.7 மில்லியன் டாலர் தொகை, மற்றும் பங்கு வாய்ப்புகளாக 48 மில்லியன் டாலர் தொகை ஆகியவை இதில் அடக்கம். சமீப மாதங்களில், ஏராளமான நிதி நிர்வாகிகளின் சம்பளத் தொகுப்புகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன, குறிப்பாக அடமானச் சந்தை ஆதரவிலான "மாற்று" அல்லது "மாறுபட்ட" முதலீடுகளின் வீழ்ச்சியை அடுத்து, சிட்டிகுரூப்பின் சேதாரம் மிகுந்த செயல்திறனுக்கு பின்னும், அதன் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரியான சார்லஸ் பிரின்ஸ் நவம்பர் 2007 இல் 68 மில்லியன் டாலர் ஓய்வூதியத் தொகுப்புடன் தான் ஓய்வு பெற்றார். அக்டோபர் 2007 இல், முதலீட்டு வங்கியான மெரில் லிஞ்ச் 12 பில்லியன் டாலர் தொகையை அடமானச் சந்தையில் வாராக் கடனாக எழுதிய பிறகு, அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டான்லி ஓ' நீல் தனது 48 மில்லியன் டாலர் சம்பளத்துடன் சேர்த்து, விலகல் தொகுப்பாக 161 மில்லியன் டாலர் தொகையுடன் தான் விலகினார். தலைமை நிர்வாக அதிகாரிகளின் எக்கச்சக்க பணத் தேவைகளானவை ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நிறைந்திருக்கிறது, நிதி நிறுவனங்களை கடந்தும் வெகு ஆழத்திற்கு. ஜனவரி 2007 ஆம் ஆண்டு சில்லறை விற்பனை நிறுவனமான Home Depot நிறுவனம் பரிதாபமான சந்தை செயல்திறனுக்காகவும், உரசல் மிகுந்த குணத்தினை கண்டும் தனது தலைமை நிர்வாக அதிகாரியான நார்தெலியை வெளியே அனுப்பியது. அங்கிருந்து சென்று வாகனத் தயாரிப்பு நிறுவனமான கிரைஸ்லரின் தலைமை நிர்வாக அதிகாரியாகி விட்ட நார்தெலி, விலகல் தொகுப்பாக மட்டும் 210 மில்லியன் டாலர் தொகையை பெற்றார். ஜுலை 2007 இல் பிஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை இழப்பு மற்றும் 4 பில்லியன் டாலர் நஷ்டத்திற்கு இடையே, தனது தலைமை நிர்வாக அதிகாரி ஹேங்க் மெக்கினெலை வெளியேற்றிய போது, மெக்கினெல் விலகல் தொகுப்பாக பெற்றுக் கொண்ட தொகை 180 மில்லியன் டாலருக்கும் மேல் ஆகும். தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எக்கச்சக்க சம்பளம் நிறுவனங்களுக்கு அவர்கள் சேர்க்கக் கூடிய மதிப்பினால் நியாயப்படுத்தப்படுகிறது என்றும், ஒரு பெரிய நிறுவனத்தை திறம்பட வழிநடத்திச் செல்லும் ஒரு நிர்வாகியை பணியமர்த்துவதற்கு பெரும் செலவு ஆகும் என்றும் தொடர்ந்து எப்போதும் கூறப்படுவதான கூற்றுகளை இந்த நிகழ்வுகள் உடைத்தெறிந்திருக்கின்றன. மாறாக, உயர் நிர்வாகிகள் எல்லாம் தங்கள் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்களை சுருட்டிக் கொள்கின்றனர், அவர்களது பொறுப்பற்ற நிர்வாகம் - இவற்றின் பொறுப்பற்ற தன்மை மிகவும் அபாயகரமான முதலீடுகளாக வரையறுக்கப்பட்ட வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்து, சூதாட்டத் தோல்வியுற்றதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது - தங்களது நிறுவனங்களின் கீழ் வரிசைகளையும் பங்கு மதிப்பையும் மதிப்பைக் குறைத்தது போல வெளிப்படுத்தப்படுகிறது. இத்தகைய நிர்வாகிகளுக்கு மாற்றாக, இதே ஊதியத் தொகுப்பை பெறும் இதே வகைகளில் நடந்து கொள்ளும் அதிகாரிகள் கிடைப்பது கண்டறிய முடியாத மட்டத்திற்கு, இது ஒரு அகன்ற சமூகப் பிரச்சினையைத் தான் சுட்டிக் காட்டுகிறது: பெரிய பெருநிறுவனங்களின் அனைத்து முக்கிய முடிவுகளுமே, தங்களின் செறிவான சொத்தே தங்களது நடவடிக்கைகளின் விளைவுகளில் இருந்து தங்களைத் திறம்படக் காத்து விடும் நிலையில் இருக்கும் மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதிகளால் தான் எடுக்கப்படுகிறது. இந்த அடுக்கின் சிடுமூஞ்சித்தனமும் மெத்தனப் போக்கும் ஏப்ரல் 6 அன்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான "In the Boardroom, Every Back Gets Scratched" என்னும் தலைப்பிட்டு பென் ஸ்டீன் எழுதியிருந்த கட்டுரையில் வெளிப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளங்கள், அவர்களால் அவ்வப்போது சிபாரிசு செய்யப்பட்டு பங்குதாரர்களால் ஒப்புதல் அளிக்கப்படுவதான பெருநிறுவன போர்டுகள் மூலம் ஒப்புதல் அளிக்கப்படுவதை இந்த கட்டுரையில் ஸ்டீன் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது தங்களது சம்பளங்களை நிர்ணயிக்கும் போர்ட் உறுப்பினர்களை விட தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு பெரும் அதிகாரத்தை அளிப்பதாக இருக்கிறது. ஒரு பெருநிறுவன போர்டில் உறுப்பினர்களாக இருப்பவர்களின், இவர்கள் பெரும்பாலும் பிற பெருநிருவன உயர் நிர்வாகத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள், வாழ்க்கை குறித்து ஸ்டீன் ஒரு குறிப்பிடத்தக்க விவரிப்பை செய்கிறார். அவர் எழுதுகிறார்: "ஒரு பெரிய நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவது என்பது சொர்க்கத்தின் ஒரு சிறு உதாரணமாகும். ஒரு கூட்டத்தில் சும்மா உட்கார்ந்திருந்து விட்டு சுருக்கமான விளக்கப் படங்களைக் கேட்டு விட்டு வருவதற்கு உங்களுக்கு நல்ல சம்பளம் கிட்டுகிறது. உங்களுக்கு காப்பீடும் ஓய்வூதியமும் கூடக் கிடைக்கிறது. ஆடம்பரமான ரிசார்டுகளுக்குச் சென்று நீங்கள் கோல்ஃப் விளையாடலாம். [விமான நிலையத்தில்] என்ன பெரிய பாதுகாப்பு வளையங்கள்? நீங்கள் தனியார் ஜெட்டுகளில் பறக்கலாம். சில நேரங்களில் உங்களுக்கு பங்கு வாய்ப்புகள் கிடைக்கும், இவையும் மிகவும் பொருள் வாய்ந்தவையாக மாறலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு பொது நிறுவனத்தின் இயக்குநராக ஆவதென்றால் அது சுகமானது. உங்களது வேலையை நீங்கள் எவ்வாறு தக்க வைத்துக் கொள்வீர்கள்? உங்களை அங்கு அமர வைத்த மனிதரிடம் நீங்கள் ரொம்பவும் தன்மையாக நடந்து கொள்கிறீர்கள்". இருந்தாலும், "உயரத்தில் இருக்கும் சிலருக்கு இந்த தேசம் ஒரு குடும்பமாக இருப்பதை விட கொள்ளையடிப்பதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் ஆகி விட்டிருக்கிறது" என்று வேதனைப்படும் ஸ்டீன், அந்த சூழ்நிலையை கண்டிக்க முன்வரவில்லை. மாறாக, உப்புச்சப்பின்றி முடிக்கிறார்: "உங்களது அடிப்படை மனிதம் இத்தகையதொரு விலை பேசும் விஷயம் அல்ல----மற்றும் கூட்டுப் பங்கு நிறுவனத்தின் கட்டமைப்பானது நம்மிடம் இருக்கும் சிறந்த விஷயங்களை வெளிக் கொணருவதாக இல்லை". இன்றைய கூட்டு பங்கு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் நடத்தை விஷயத்தை பொறுத்தவரையில் சந்தேகத்திற்கிடமில்லாமல் ஸ்டீன் கூறியது சரிதான் என்றாலும், மனிதம் குறித்த அவரது நச்சுத்தன்மை வாய்ந்த அவநம்பிக்கையைப் பொறுத்தவரை ஒருவர் சொல்ல முடிந்த பதிலெல்லாம் இது தான்: நீங்கள் உங்களுக்குப் பேசுங்கள். பெருநிறுவனங்களுக்காக உழைக்கும் அவர்களின் முடிவுகளைச் சார்ந்திருக்கும் உழைக்கும் மக்களைப் பொறுத்த வரை, உயர் நிர்வாகிகள் மேற்கொள்ளும் சுருட்டல் மனித இயல்பின் தவிர்க்க இயலாத பிரதிபலிப்பு அல்ல, மாறாக தங்களது வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கான நேரடியான அச்சுறுத்தல். அவர்களுக்கு, கூட்டு பங்கு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் போர்டுகளின் நடத்தையானது பிற எல்லாவற்றையும் விட, சமூகத்தின் தேவைகளுக்கு மேலாக தனியார் இலாபத்தை வைப்பதால் நிகழக் கூடிய சிதைவுத்தன்மையை வெளிச்சம் போடுவதாக இருக்கிறது. |