World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Romanian autoworkers strike against rock-bottom wages

அடிமட்ட கூலிக்கு எதிராக ருமேனிய வாகனத்துறை தொழிலாளர்கள் போராட்டம்

By Markus Salzmann
7 April 2008

Back to screen version

ருமேனியாவின் பிடெஸ்டி (Pitesti) இலுள்ள டாசியா (Dacia) ஆலையில் சுமார் 10,000 தொழிலாளர்கள் இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரான்சின் வாகனத்துறை உற்பத்தியாளரான ரெனோல்ட் இன் சேய் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 42 சதவீத ஊதிய உயர்வு, கூடுதல் கிறிஸ்துமஸ் சலுகைகள் மற்றும் நிறுவன இலாபத்தில் ஒரு பங்கும் தரக் கோரி வருகிறார்கள்.

புக்காரெஸ்டில் இருந்து 120 கிலோமீட்டரில் அமைந்துள்ள ஆலையில் மார்ச் இறுதியிலிருந்து நடந்து வரும் இந்த வேலைநிறுத்தத்தால் உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது. இதனால் டாசியாவின் உற்பத்தியில் கணிசமான தாமதமும், இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தால் நாளொன்றுக்கு பல மில்லியன் யூரோ இழப்பை இந்த நிறுவனம் சந்திக்க வேண்டி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாதிக்கும் குறைவான தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்திருப்பதை முன்வைத்து வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்கும் ஒரு நீதிமன்ற ஆணையை பெற ருமேனிய நிர்வாகம் தற்போது முயற்சி செய்து வருகிறது. ருமேனிய சட்டப்படி, தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தெளிவான பெரும்பான்மை இருக்க வேண்டும். உண்மையில், மொத்தமுள்ள 13,000 தொழிலாளர்களில் சிறுபான்மையினர் மட்டுமே இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க தவறி இருக்கிறார்கள். இருமுறை தனது உத்தரவைத் தள்ளி வைக்கத்திருக்கும் நீதிமன்றம், வரும் புதனன்று மீண்டும் இதற்காக கூடுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப நிறுவனத்தின் நிர்வாகம் முயற்சி செய்தது. பல சுற்று தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பாத வரை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்திருக்கும் டாசியா நிர்வாகம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் ஊதியங்களையும் நிறுத்தி வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. "தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும்" போராட்டத்தை தொடர வேண்டுமா என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் ஆத்திரமூட்டலுடன் அறிவித்தார்.

நாளாந்தம் ஒரேயொரு திருப்தியான உணவான இலவச உணவு உட்பட வாராந்திர கூலியையும் பெருமளவிலான தொழிலாளர்கள் இழந்திருப்பது என்பது அவர்களை பட்டினி நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளது. எனினும், நிர்வாகத்தின் தீவிர அழுத்தம் இருந்தபோதிலும் கூட, இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பின்வாங்க மறுத்திருக்கிறார்கள்.

டாசியாவின் கடைசி ஊதிய உயர்வு 12 சதவீதமாகும். இது தொழிலாளர்களை ஆத்திரமூட்டுவதை தவிர வேறொன்றுமில்லை. ஆலையில் சராசரி ஊதியம் மாதத்திற்கு சுமார் 280 யூரோவாகும் மற்றும் 3,000 தொழிலாளர்கள் உத்தியோகபூர்வமான குறைந்தபட்ச ஊதியமாக 160 யூரோ பெற்று வருகிறார்கள். உற்பத்தி அளவு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சமீபத்திய ஆண்டுகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும், பெரும்பான்மையான புதிய தொழிலாளர்கள், மாதத்திற்கு வெறும் 209 யூரோ மட்டுமே பெற்று வருகிறார்கள்.

ஒரு ருமேனிய டாசியா தொழிலாளருக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டாலும் கூட, அவர் பிரான்ஸ் ரெனோல்ட் தொழிலாளியின் ஊதியத்தில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே பெறுவார். அதே சமயம், ருமேனியாவின் வாழ்க்கை செலவுகள் ஏறத்தாழ மேற்கத்திய ஐரோப்பாவிற்கு இணையாக உயர்ந்திருக்கிறது. உத்தியோகபூர்வ குறைந்தபட்ச ஊதியத்தின் மூன்றில் ஒரு பங்கு வீடுகளை சூடேற்றும் செலவுக்கே சென்றுவிடுவதுடன், கடந்த ஆண்டு இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததிலிருந்து உணவு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. தற்போது பணவீக்க விகிதம் 7.3 ஆக உள்ளது.

தொழிலாளர்களின் செலவில் அளவுகடந்த இலாபத்தை பெறும் கிழக்கு ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிடெஸ்டியின் நிலைமை ஒரு உதாரணமாகும். 1969லிருந்து பிரான்ஸ் உரிமத்தின் கீழ், ருமேனிய வகை "வோல்ஸ்வேகன்" கார்களை டாசியா உற்பத்தி செய்து வருகிறது. 1999ல், ரெனோல்ட் இந்த ஆலையை கையேற்றுக்கொண்டது. ருமேனியா மற்றும் கிழக்கு ஐரோப்பியாவின் பிற பெரிய தொழில் நிறுவனங்களும் கூட இந்த துரதிஷ்டத்திற்கு உள்ளாயின. அவை அடிமட்ட விலைக்கு மேற்கத்திய நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு, இதனால் பாரிய வேலைநீக்கங்களும் மற்றும் குறைந்த ஊதியத்தை அடித்தளமாக கொண்ட மிகக்கூடிய இலாபம் தரக்கூடிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

2007ல், டாசியா 150 மில்லியன் டாலர் இலாபத்தை பெற்றது. தாய் நிறுவனம் ரெனோல்ட் 1.8 சதவீதமும் மற்றும் ரெனோல்ட் சாம்சுங் 3.4 சதவீதமும் விற்பனை சரிவை கண்டபோது, இந்நிறுவனத்தின் விற்பனை வருமானம் 68 சதவீதம் உயர்ந்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, டாசியா தொடர்ச்சியாக விரிவடைகின்றது. 2006ல் 121,00 கார்களையும், 2007ல் 215,000 கார்களையும் உற்பத்தி செய்திருக்கும் இந்த ஆலை நடப்பு ஆண்டில் 300,000 கார்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சிலுள்ள ரெனோல்ட் செயல்பாடுகள் தனிநபர் கையாளும் முறைகளை குறைவாக கொண்ட உற்பத்தியின் அடிப்படையில் பெருமளவில் நவீனமயமாக்கப்பட்டு இருக்கும் நிலையில், ருமேனிய நிறுவனங்கள் பழைய உற்பத்தி முறைகளையே பின்பற்றி வருகின்றன. அதாவது பெருமளவில் தானியங்கி முறைகளும், இயந்திர மனிதர்களின் (Robots) பயன்பாடுகள் அல்லாமல், அதற்கு பதிலாக மனிதவள ஆற்றலில் தங்கியுள்ளன.

டாசியா மேலாளர் கிறிஸ்டியன் எஸ்டீவ் சமீபத்தில் பால்கன் நாட்டிலுள்ள குறைந்த ஊதிய தொழிலாளர்களை பாராட்டி இருந்தார்: "நாம் இயந்திரமனிதர்களுக்கு பதிலாக ஒன்றிணைக்கும் பட்டடை (Assembly lines) பயன்படுத்தினாலும் கூட உற்பத்தி செலவுகளை பொறுத்த வரை ருமேனியா தற்போது மிகவும் போட்டி மிக்க நாடாக உள்ளது." எனத் தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பாவில் டாசியா கார்களின் உயர்ந்த அளவு தேவை இருப்பதற்கும் அப்பாற்பட்டு, அந்த நிறுவனம் மேற்கு ஐரோப்பாவிலும் விற்பனையை அதிகரித்து வருகிறது. ஜேர்மனியில் மட்டும், 2008 ஜனவரியில் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது டாசியாவின் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. குறிப்பாக, பரந்துபட்ட சமூக பிரிவினரின் வருமானத்தின் அளவு குறைந்துவருவதால் ஜேர்மனியிலும் மற்றும் பிற மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளிலும் மலிவு விலை வாகனங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

வெளியிடப்பட்டிருக்கும் டாசியா அறிக்கையில் சந்தேகத்திற்கிடமின்றி ஜேர்மனியில் இருந்து ருமேனியாவிற்கு தனது உற்பத்தி ஆலையை மாற்றத் தீர்மானித்திருக்கும் செல்பேசி உற்பத்தியாளரான நோக்கியாவின் முடிவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையில், ரேனோல்டின் முனைவை, பிற வாகனத்துறை நிறுவனங்களும் பின்பற்ற திட்டமிட்டிருக்கின்றன. பைனான்சியல் டைம்ஸ் இன்படி, ஜனவரி இறுதியில், போலாந்தில் அல்லது ருமேனியாவில் "ஒரு புதிய ரக சிறிய கார்களை" உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்க Daimler திட்டமிட்டு வருகிறது.

உயர்ந்த ஊதியத்திற்காக பிடெஸ்டியில் எழுந்திருக்கும் கோரிக்கை, கிழக்கு ஐரோப்பாவின் பிற ஆலைகளிலும் பரவும் என்ற அச்சத்தை போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. தொழிலாளர் பிரச்சனைகள் முதலீட்டாளர்களை பின்வாங்கச் செய்யும் என பொருளாதார நிபுணர்கள் தங்கள் கவலையை வெளியிட்டிருந்தார்கள்.

மார்ச் இறுதியில், "கிழக்கு ஐரோப்பியர்களின் கை உயர்கிறது" என்ற தலைப்பில் Süddeutsche Zeitung இதழ் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. அதில், "ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் இந்த காலவரையற்ற போராட்டம் கம்யூனிசத்திற்கு பின்னான குறைந்த ஊதிய தொழிலாளர்களை கொண்ட ருமேனியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.... அங்கு மக்கள் எவ்வித முனகல்களுமின்றி இதுவரை பன்னாட்டு நிறுவனங்களில் 100 யூரோவிற்கு தையல்காரர்களாகவும் அல்லது 400 யூரோவிற்கு வாகனத்துறை தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்." எனக் குறிப்பிடப்பட்டது.

ருமேனிய பொருளாதார இதழான Ziarul Financiar, "டாசியாவின் போராட்டம் எவ்வாறு வாகனத்துறை முதலீட்டாளர்களின் கவனத்தை பாதிக்கும்?" என்ற கேள்வியை எழுப்பியது. மேற்கில் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிரயோவாவில் 1990களில் தென் கொரிய நிறுவனமான டேவு வசமிருந்த ஓர் ஆலையை சமீபத்தில் போர்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. தாய் நிறுவனத்துடன் ருமேனிய கூட்டாளிக்கு ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து, டேவு வெளியேற்றப்பட்டு அரசு அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. தற்போது, அரசு அவ்வாலையை மீண்டும் விற்க இருக்கும் நிலையில், போர்ட் நிறுவனம் மட்டுமே அதற்கான ஒப்பந்தத்தை கோரியுள்ளது. உற்பத்தி தொழிலாளர்களின் ஊதியம் வெறும் 200 யூரோ மட்டுமே அளிக்கும் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு எதிராக கிரயோவாவில் எதிர்ப்புகள் இருப்பதாக ஏற்கனவே அங்கு செய்திகள் நிலவுகின்றன.

டாசியவில் நடக்கும் போராட்டம் முக்கிய அன்னிய முதலீட்டாளர்களை பின்வாங்கச் செய்யும் என Ziarul Financiar இதழில் ருமேனிய வெளிநாட்டு முதலீட்டு அமைப்பின் பிரதிநிதிகள் குரல் கொடுத்திருந்தனர். ருமேனியாவின் இந்த ஆண்டிற்கான திட்டமிட்ட அன்னிய முதலீடு வரவு 7 பில்லியன் யூரோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற அச்சங்கள் உண்மையில்லாதவையல்ல. ரஷ்யா, மொராக்கோ, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய பிற முதலீட்டை ஈர்க்கும் இடங்களிலும் சில காலங்களில் ரெனோல்ட் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. பெப்ரவரியில், ரேனோல்டின் தலைவர் கார்லோ கோஸ்ன் ஒரு ரஷ்ய கார் உற்பத்தியாளரான AvtoVAZ உடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ருமேனியாவில் இருந்து உற்பத்தியை மிக எளிமையாக தம்மால் மாற்றிக் கொள்ள முடியம் என்று ரெனோல்ட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. Le Figaro பத்திரிகையுடன் பேசும் போது டாசியாவின் பொதுச்செயலாளர் பிரான்சுவா போர்மோன்ட் கூறிய கருத்துப்படி, தொழிற்சங்கங்களால் எழுப்பப்பட்டிருக்கும் ஊதிய கோரிக்கையால் ஆலையின் "எதிர்காலம் பாதிக்கப்படும்." என்பதாகும்.

கிழக்கு ஐரோப்பால் அதிகரித்து வரும் தொழிலாளர் பிரச்சனைகளின் எண்ணிக்கையை சர்வதேச நிறுவனங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டில், மின்சார வினியோக தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பங்கு பெற்றிருக்கும் பிறரும் ருமேனியாவில் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சகிக்க முடியாத குறைந்த ஊதியத்தாலும், விலைவாசி உயர்வாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சமூக அமைப்பில் அவர்களுக்கு மீதியாக இருக்கும் உரிமைகளில் இருந்தும் அவர்களும் படிப்படியாக பிரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதே செயல்முறை பிற புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் காண முடிகிறது. சமீபத்திய மாதங்களில், சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கு எதிராக போலாந்தின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களாலும், பல்கேரியாவில் ஆசிரியர்களாலும் மற்றும் ஹங்கேரியில் இரயில்துறை தொழிலாளர்களாலும் எதிர்ப்பு நடவடிக்கைகளும், வேலைநிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தமுடியாத மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க முன்னோக்கு இந்த போராட்டங்கள் மூலம் மிகவும் தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றது. இந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச இலாபங்களை பெற்றுக்கொள்ளவே இப்போராட்டங்களுடன் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. பிடெஸ்டியிலும், தொழிற்சங்கங்கள் டாசியா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முழுமையாக தயாராக உள்ளன.

பிடெஸ்டியின் தொழிலாளர் பிரச்சனையில் இதுவரை வெளிப்படையாக தலையிடுவதை தவிர்த்து வந்த ருமேனிய அரசாங்கம், மறைமுகமாக செயல்பட்டு வந்தது. ஆனால் வேலைநிறுத்தம் தொடரும் பட்சத்தில் இந்த நிலையிலேயே அதனால் தொடர்ந்து அவ்வாறு இருக்க முடியாது. 1990களின் இறுதியில் ருமேனிய சுரங்கத்துறை தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டம் ஓர் எச்சரிக்கையாக அமையவேண்டும். அச்சமயத்தில், சுரங்கங்களை மூடுதல் மற்றும் குறைந்த ஊதியத்திற்கு எதிராக போராடிய சுரங்க தொழிலாளர்களின் எதிர்ப்புகளை முறியடிக்க அரசாங்கம் கடுமையான முறைமைகளை கையாண்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved