WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
நேபாளம்
Nepali Maoists rejoin interim government
to contest election
நேபாள மாவோவாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக இடைக்கால அரசாங்கத்துடன்
மீண்டும் இணைகின்றனர்
By W.A. Sunil
18 January 2008
Use this version to
print | Send this link by email |
Email the
author
நேபாள மாவோவாதிகள் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கடந்த
மாத இறுதியில் ஏழு கட்சி கூட்டணியுடன் கொடுக்கல் வாங்கலுக்கு சென்ற பின்னர் இடைக்கால அரசாங்கத்துடன்
மீண்டும் இணைகின்றனர். நேபாளத்தை ஒரு குடியரசாக ஸ்தாபிக்கும் முடிவை அங்கீகரிக்கவுள்ள அரசியல் நிர்ணயசபைக்கான
தேர்தலை ஏப்ரல் 10 திகதி வரை ஒத்திவைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி திறந்துவிட்டுள்ளது.
நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி (Communist
Party of Nepal Maoist -CPN-M), கடந்த செப்டெம்பரில்,
தேர்தலுக்கு முன்னர் குடியரசை பிரகடனப்படுத்த வேண்டும் எனவும், அதே போல் தேர்தல் முறையை மாற்றியமைக்க
வேண்டும் எனவும் கோரி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது முதல் இருந்து வந்த நீண்ட விட்டுக்கொடுப்பற்ற
நிலைக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் முடிவுகட்டியுள்ளது. அரசாங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும்
தூர விலகியிருப்பதன் மூலம் சரிந்துபோன செல்வாக்கை மீண்டும் தூக்கிநிறுத்துவதற்கே
CPN--M
உடைய வெளியேற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.
CPN-M மற்றும் ஏழுகட்சி
கூட்டுக்கும் இடையில் 2006 நவம்பரில் எடுக்கப்பட்ட நகல் தீர்மானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு அரசியல்
அமைப்புசபையினாலேயே முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என
இடைக்கால அரசாங்கம் வலியுறுத்தியது. 2006 ஏப்ரலில் நடந்த தொடர்ச்சியான மக்கள் போராட்டம், மன்னர்
கயேந்திரா தனது சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அதிகாரத்தை எதிர்க் கட்சிகளிடம் ஒப்படைக்குமாறு
நிர்பந்தித்ததை அடுத்து ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், மாவோவாதிகள் தமது ஆயுதங்களை கைவிட்டனர்.
கடந்த சில மாதங்களாக நீண்ட காரசாரமான விவாதங்களை அடுத்து, முகத்தைக்
காப்பாற்றிக்கொள்ளும் சமரசம் ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. பாராளுமன்றம் முடியாட்சியை தூக்கியெறிய
வாக்களித்ததோடு நேபாளத்தை ஒரு சமஷ்டி ஜனநாயக குடியரசாக பிரகடனப்படுத்திய போதிலும், அது
அரசியலமைப்புச் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.
பெயரளவில் அரசியல் அமைப்புசபையால் தீர்மானத்தை திருத்தவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது.
அரசியலமைப்புச் சபை தேர்தலை மன்னர் மறுத்தாலும், இடைக்கால பாராளுமன்றமும் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை வாக்குகளால் நேபாளத்தை குடியரசாக பிரகடனப்படுத்த முடியும் என உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 497 முதல் 601 வரை
அதிகரிப்பதற்கு பிரதியுபகாரமாக, விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற தமது
கோரிக்கையை CPN-M
கைவிட்டுள்ளது. தமக்கு ஆதரவு குறைந்து வருவதையிட்டு கவலையடைந்துள்ள
மாவோவாதிகள், சிறிய தேர்தல் தொகுதிகள் அரசியலமைப்பு சபையில் தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
நீண்ட காலமாக கெரில்லா யுத்தம் செய்த, ஒரு மதிப்பீட்டின்படி 30,000 மாவோவாத போராளிகளை,
நாட்டின் இராணுவத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வதை துரிதப்படுத்த முயற்சிக்கவும் அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
ஐந்து அமைச்சர் பதவிகள் மற்றும் மூன்று பிரதி அமைச்சர் பதவிகளுடன் மீண்டும்
மாவோவாதிகள் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.
CPN-M முக்கிய பதவிகளுக்காக நெருக்கி வந்திருந்த அதே
வேளை, வகிக்கின்ற ஐந்து பதவிகள் பாதுகாப்பு, பொருளாதாரம் அல்லது வெளிவிவகாரம் போன்ற முக்கிய
துறைகள் எதையும் கொண்டிருக்கவில்லை. கட்சியின் தலைவர், பிரசண்ட என்று அழைக்கப்படும் புஷ்பா கமல் டால்
உட்பட கட்சியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் தேர்தலில் வேட்பாளர்களாக இருப்பார்கள் என
CPN-M இந்த
வாரம் அறிவித்துள்ளது.
CPN-M அமெரிக்காவின்
வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் இருந்த போதிலும் கூட, கட்சி மீண்டும் அரசாங்கத்தில் இணைவது
சாதகமான நடவடிக்கை என நேபாளத்துக்கான அமெரிக்க தூதுவர் நான்சி பவல் விபரித்துள்ளார். இந்தியா
பிரதான தரகர் பாத்திரத்தை வகித்த 2006 மூல உடன்படிக்கையை புஷ் நிர்வாகம் தயக்கத்துடன் அங்கீகரித்தது.
புதிய உடன்பாடானது "சரியான
திசையிலான ஒரு உற்சாகமான அபிவிருத்தி" என, இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் நவ்டெஜ் சர்னா
தெரிவித்தார்.
நேபாளத்தின் அரசியல் சமூக அமைதியின்மை, பல மாவோவாத மற்றும்
பிரிவினைவாத கெரில்லா குழுக்கள் இயங்கும் இந்தியாவினுள்ளும் பரவும் வாய்ப்புகள் பற்றி புது டில்லி விழிப்புடன்
உள்ளது. நேபாள மாவோவாதிகள் தமது ஆயுதங்களை கைவிட்டுள்ளதோடு ஐ.நா வின் மேற்பார்வையின் கீழ்
இருக்கும் அதே சமயம், நேபாள மக்களின் அரைப்பகுதியினரின் வசிப்பிடமான டெராய் பிராந்தியத்திற்கு
சுயாட்சியை வலியுறுத்திக் கொண்டு பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியுள்ளன.
சமூக அமைதியின்மையும் பரந்தளவில் காணப்படுகிறது. உலகில் மிக வறிய
நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஜனத்தொகையில் அரைப் பங்கினரான 26 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின்
கீழ் வாழ்கிறார்கள். அவர்களுடைய வருமானம் ஒரு நாளைக்கு 1 அமெரிக்க டொலருக்கும் குறைவானதாகும்.
மாவோவாதிகள் வேரூன்றியுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற பிரதேசங்களில் சுகாதார சேவை
மற்றும் கல்வி சேவை உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. இடைக்கால கூட்டரசாங்கத்தைப் பொறுத்தளவில்
எந்தவொரு எதிர்ப்பையும் கட்டுப்படுத்தும் பிரயோசமான அரசியல் பாதுகாப்பு வாயிலாக மாவோவாதிகள்
தொழிற்படுகிறரர்கள்.
குடியரசாக பிரகடனப்படுத்த எடுத்த தீர்மானத்தை மாபெரும் வெற்றியாக
CPN-M
பற்றிக்கொண்டது. "இப்பொழுது ஒன்றும் செய்யவேண்டிய தேவையில்லை.
நாட்டில் முடியாட்சி இல்லை" என பிரசன்ட தற்புகழ்ச்சியாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கள்
CPN-M
உடைய மட்டுப்படுத்தப்பட்ட தேசிவாத வேலைத்திட்டத்தின் பண்பை
எடுத்துக்காட்டுகிறது.
நேபாளம் போன்ற பின்தங்கிய நாடுகளில் நீண்டகால ஐனநாயக முதலாளித்துவம்
தேவை என்ற ஸ்டாலினிச இரண்டு-கட்ட கோட்பாட்டை ஆரம்பத்தில் இருந்தே
CPN-M
அடிப்படையாக கொண்டிருந்தது. இற்றைவரை சோசலிசம் கவனத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது இரண்டாம்
பட்சமாக நீண்ட எதிர்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பிற்போக்கு நிலைப்பாடு, இடைக்கால
அரசாங்கத்துடன் இணைவதையும் தனியார் வியாபாரத்தை அணைத்துக்கொள்வதையும் நியாயப்படுத்த
பயன்படுத்தப்படுகின்றது.
பிரசண்டவும் அவரது உபதலைவருமான டாக்டர்.பாபுரம் பாட்டாராயும் நேபாள
தேசிய மாவரி சபையில் (ஒரு வர்த்தக சங்கம்) பேசும் போது, கட்சியின் முதலாளித்துவ வேலைத்திட்டத்தை
தெளிவுபடுத்தினார்கள். CPN-M
"நேபாளத்தில் முதலாளித்துவ அபிவிருத்தியை பலப்படுத்த விரும்புவதோடு" தனியார் தொழிற்சாலைகள் மற்றும்
நிறுவனங்களையும் தேசியமயமாக்கும் திட்டம் இல்லை எனவும் பாட்டாராய் பிரகடனப்படுத்தினார்.
" தனியார் துறை, பொருளாதார
அபிவிருத்தியில் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டியிருக்கின்றது என தமது கட்சி நம்புகிறது" என பாட்டாரி
தெளிவுபடுத்தினார். நாட்டை தொழிற் துறையில் கட்டியெழுப்புவதற்காக, "தனியார்-பொதுமக்கள் இணை
பங்களிப்பை ஊக்குவிக்கும் கொள்கையை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது" என அவர் தெரிவித்தார். ர்-மின் உற்பத்தி
போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு அவசியம் எனவும் பட்டாரி சுட்டிக்காட்டினார்.
CPN-M கடந்தகாலத்தில் நிலமற்ற
விவசாயிகளின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தது. ஆயினும், "தற்போதய விவசாய முறை, வர்த்தக விவசாய
முறையாக மாற்றப்பட வேண்டும்" எனவும் பட்டாராய் தெளிவு படுத்தினார். "அரசியற் புரட்சியை" நிறைவு
செய்த பின் -அதாவது முடியாட்சியை நீக்கிய பின்னர்- "பொருளாதார புரட்சி ஒன்று நிகழும் என அவர்
வியாபார சமூகத்திற்கு உறுதியளித்தார்.
வியாபார துறை முகம் கொடுக்கின்ற வளர்ச்சிகண்டுவரும் பாதுகாப்பின்மை, கடத்தல்
மற்றும் கப்பம் வாங்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு இளம் கம்யூனிஸ்ட் கழகம் உதவும் எனவும் அதே
கூட்டத்தில் பிரசண்ட பேசும்போது உறுதியளித்தார்.
மாவோவாத வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் நலனைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
அவர்கள் முன்வைக்கின்ற "பொருளாதார புரட்சி" மக்களின் வாழ்க்கைத் தரங்களை தவிர்க்க முடியாதபடி
பாதிக்கும். ஆனால், நேபாள ஆளும் தட்டின் ஒரு பகுதியினர், முடியாட்சியும் அதனது அடிவருடிகளும் தமது வியாபார
நலனுக்கு தடையாக இருப்பதாக கருதுகிறார்கள். மாவோவாதிகள், சீனாவில் உள்ள அவர்களின் சகாக்களைப்
போல், நேபாளத்தை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்பு களமாக மாற்றிக்கொடுக்க
விரும்புகிறார்கள்.
முடியாட்சியை அகற்றுவது மற்றும் மாவோவாதிகளை இராணுவத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வது
சம்பந்தமான நேர்மை பற்றி, நேபாளி ஆளும்வர்க்கத்தினுள் கூர்மையான வேறுபாடுகள் உண்டு. மன்னரும் இராணுவமும்
முதலாளித்துவ ஆட்சியின் தீர்க்கமான அரசியல் முண்டுகோல்களாகும். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரும்
பிரதமருமான ஜி.பி. கொய்ராலா, அரசியலமைப்பு முடியரசு என்ற வடிவில் மீண்டும் மன்னரை தொடர்ந்தும்
வைத்திருப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு குடியரசை ஸ்தாபிக்க
CPN-M முன்வைத்த
கோரிக்கைக்கு தயக்கத்துடன் உடன்பட்டார்.
முடியாட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய இராணுவ உயர்மட்டத்தினர் மத்தியில்
மாவோவாத போராளிகளை உள்ளீர்த்துக்கொள்வது தொடர்பாக பாரிய எதிர்ப்பு உள்ளது. ஐனவரி 6ம் திகதி
நேபாள இராணுவத் தளபதி, இராணுவத்திற்கு அரசியல் தத்துவம் அறிமுகப்படுத்த முடியாது என ஊடகங்களுக்குத்
தெரிவித்தார். இரண்டு நாட்களின் பின்னர் கொய்ராலாவும் மாவோவாத கெரிலாக்களை இராணுவத்துடன்
இணைப்பதை இதே முறையில் நிராகரித்தார்.
நேபாளக் குடியரசின் எதிர்கால ஐனாதிபதியாக வரவிருப்பதாக கடந்த வருடம்
பிரசண்ட ஊடகங்களுக்கு தற்பெருமையாக கூறிக்கொண்டார். ஆயினும், ஏப்பிரலில் நடைபெற இருக்கும் தேர்தலில்
CPN-M
பெரும்பான்மை சட்டமன்ற ஆசனங்களை பெறும் என்பது நிச்சயமில்லாததாக
உள்ளது. அரசாங்கத்துடன் இணைந்ததன் மூலம், பெரும்பான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள திகைப்பூட்டும் சமூக
நிலைமைகள், அதே போல் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு தொடர்சியாக பிரயோகிக்கப்படும்
ஒடுக்குமுறை வழிமுறைகளுக்கும் இவர்கள் மேலும் மேலும் பொறுப்பாளிகளாக இருக்கப் போகின்றனர். |