World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan paramilitary leader convicted in Britain

இலங்கை துணைப்படைத் தலைவருக்கு பிரித்தானியாவில் குற்றத்தீர்ப்பு

By Athiyan Silva
13 March 2008

Back to screen version

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் (டீ.எம்.வி.பீ.) முன்நாள் தலைவரான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிரான பிரிட்டிஷ் நீதிமன்ற வழக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் பலவித துணைப்படைக் குழுக்களுக்கும் இடையிலான கூட்டின் மீது மேலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. கருணா குழு என்றழைக்கப்படும் டீ.எம்.வி.பீ. புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழுவாகும். இந்தக் குழு இலங்கையின் கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டுள்ளது.

ஜனவரி 25ம் திகதி, பிரிட்டனின் ஐல்வேர்த் கிரவுன் நீதிமன்றம், அடையாள மோசடி மற்றும் 2006 ஐக்கிய இராச்சிய அடையாள அட்டை விதியை மீறியமை தொடர்பாக கருணாவுக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த பிற்போக்குச் சட்டம் தனிநபர்களின் பெருந்தொகையான தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ள அரசாங்கத்தை அனுமதிப்பதோடு குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எவ்வாறெனினும், கருணாவைப் பொறுத்தளவில், அவர் போலியாக தன்னை அடையாளங் காட்டிக்கொண்டு பயணித்ததை ஏற்றுக்கொண்டதோடு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். இராஜதந்திரிகளின் பயணச் சீட்டில் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணித்ததே கருணாவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாகும். அதில் அவருடைய போட்டோ இருந்த போதிலும் வேறு ஒருவருடைய பெயர் இருந்தது. அவர் இராஜதந்திரிகளின் கடவுச் சீட்டையும் பிரிட்டிஷ் விசாவையும் எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்ற கேள்வி, இலங்கையில் உள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் அவருக்கு இருந்த உறவு பற்றிய கேள்விகளை எழுப்பியது.

நீதிமன்ற அறிக்கைகளின்படி, கருணா கடந்த ஆண்டு செப்டெம்பர் 18ம் திகதி பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார். நவம்பர் 2ம் திகதி, லண்டனில் தெற்கு கின்ஸிங்டனில் ஒரு அறையில் வைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் சிங்களப் பெயரான கோகில துஷ்மந்த குணவர்தன என்ற பெயரில் இராஜதந்திரிகளின் கடவுச் சீட்டு ஒன்றை வைத்திருந்தார்.

போலியான பெயரில் இருந்தாலும் பயண ஆவணங்கள் உண்மையானவை என்றும் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்திலேயே உணமையான விசா வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரிட்டிஷ் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கருணாவால் பயன்படுத்தப்பட்ட கடவுச் சீட்டை, சிபாரிசு கடிதத்துடன் இலங்கை வெளியுறவு அமைச்சிடமிருந்தே பெற்றுக்கொண்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.

உள்ளூரில் கிடைத்த தகவல்களைக் கொண்டு இலங்கை வாரப் பத்திரிகையான சண்டே லீடர், ஆகஸ்ட் 18ம் திகதி உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளின் கட்டளையின் கீழேயே இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அந்தக் கடவுச் சீட்டை வழங்கியுள்ளதாக தெரிவித்தது. அவரது விசா விண்ணப்பத்தில் அவர் வனஜீவி (Wildlife) பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் என பொய்யாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது என அந்த செய்தி தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் உட்பட ஏனைய செய்தித்தாள்கள், கருணா தனது பயணத்தின் போது ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் இராஜதந்திர உதவிகளைப் பெற்றுக்கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் இதனை சாதாரணமாக மழுப்பிவிட்டது. கருணாவுக்கு இராஜதந்திரிகளின் கடவுச் சீட்டொன்றை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் எந்தவித்திலும் தலையிடவில்லை என வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மறுத்துவிட்டார். ஆனால், அவர் ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரிக்கவில்லை.

ஜனவரி 25ம் திகதி பகிரங்க நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட கருணாவின் உத்தியோகபூர்வ வாக்குமூலம், இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு அவஸ்தையான தொந்தரவாகும். குற்றத்தை ஒப்புக்கொள்ளும் போது, தனது ஐக்கிய இராச்சிய பயணம் தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய இராஜபக்ஷ "சகலதையும் ஏற்பாடு செய்தார்" என கருணா தெரிவித்துள்ளார். புலிகளிடம் இருந்து பிரிந்ததில் இருந்தே தனக்கு கோதபாய இராஜபக்ஷவைத் தெரியும் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றை நிராகரித்து லக்பிம நியூஸ் பத்திரிகைக்கு ஜனவரி 17 கருத்துத் தெரிவித்த கோதபாய இராஜபக்ஷ: "நான் அவருக்கு (கருணாவுக்கு) உதவவில்லை," என தெரிவித்துள்ளார். "கருணா எவ்வாறு கடவுச் சீட்டைப் பெற்றார் என்பது எனக்குத் தெரியாது", என பாதுகாப்புச் செயலாளர் கூறியதாக ஐ.ஏ.என்.எஸ். நியூஸ் மேற்கோள் காட்டியுள்ளது. உயர் ஸ்தானிகர் அல்லது லண்டனில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக குறித்துக்காட்டும் வகையில், கருணா பிரிட்டிஷ் விசாவைப் பெற்றுக்கொண்டது எப்படி, என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறெனினும், ஐ.ஏ.என்.எஸ். நியூஸ் பெற்றுகொண்டுள்ள பேட்டியில், கருணாவை தனக்குத் தெரியும் எனவும் "நீண்ட காலத்திற்கு முன்னர்" ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிப்பதற்காக தன்னிடம் அவர் உதவி கேட்டதாகவும் இராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். ஏற்கனவே அங்கு சென்றுள்ள தனது பிள்ளைகளை பார்க்க கருணா விரும்பினார் என அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது நட்பு நாடு ஒன்றின் ஊடாக அந்தப் பயணத்தை ஏற்பாடு செய்ய தான் முயற்சித்ததாகவும் அது நிறைவேறவில்லை என்றும் இராஜபக்ஷ கூறிக்கொண்டுள்ளார்.

குறிப்பாக விடயங்களை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றில் இராஜபக்ஷ பிரகடனம் செய்துள்ளதாவது: "அவர் இலங்கையில் பயன்படக் கூடியவராக இருக்கும் போது நான் ஏன் அவரை அனுப்பவேண்டும்?" இராஜபக்ஷ அதை மேலும் விரிவுபடுத்தாவிட்டாலும், கடந்த இரு ஆண்டுகளாக கிழக்கில் தமிழ் மக்களுக்கு அச்சமூட்டுவதிலும் புலிகள் மீது தாக்குதல் தொடுப்பதிலும் கருணா குழு இராணுவத்துடன் கூட்டாக செயற்பட்டுள்ளது. அத்தகைய கூட்டு பற்றி அரசாங்கம் மீண்டும் மீண்டும் மறுப்புத் தெரிவிக்கின்ற போதிலும், பாதுகாப்பு செயலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை கருணாவுடனான நெருக்கமான உறவை உறுதிப்படுத்துகிறது.

புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னதாக, கருணா ஒரு சிரேஷ்ட புள்ளியாக விளங்கினார். பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் 2002ல் கொழும்பு அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்ட சமாதான பேச்சுக்களின் புலிகளின் பிரதிநிதியாக அவர் பங்கேற்றுள்ளார். இந்த சமாதான முன்னெடுப்புகள் தமிழ் வெகுஜனங்களுக்கு ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொள்வதற்கு மாறாக, அது தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர் வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதை இலகுவாக்கும் அதிகாரப் பரவல் ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதாகவே இருந்தது.

இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பேரினவாத குழுக்களுடன் சேர்ந்துகொண்டிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பின்னால் அணிதிரண்டுகொண்ட ஆளும் கும்பலின் சில பிரிவினர் "சமாதான முன்னெடுப்பு" ஒர் காட்டிக்கொடுப்பு எனக் கூறிக்கொண்டு அதை எதிர்த்தன. ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து 2003 நவம்பரில் மூன்று பிரதான அமைச்சுக்களை குமாரதுங்க அபகரித்துக்கொண்டதோடு 2004 பெப்பிரவரியில் அவர் முழு அமைச்சரவையையும் பதவி விலக்கினார்.

2004 மார்ச்சில் கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்றார். அவரும் அவரது அணியினரும், புலிகள் கிழக்கு பிரதேசம் தொடர்பாக பாரபட்சம் காட்டுவதாகவும் வடக்குக்கு சார்பாக நடந்துகொள்வதாகவும் கசப்புடன் விமர்சித்தனர். புலிகளின் கிழக்குப் பிரிவு "சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்படல் வேண்டும் என அவர் கோரியதோடு கிழக்கில் மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசத்திற்கு ஒரு தனியான மாவட்டத்தையும் கோரினார். கிழக்கில் தமிழ் முதலாளிகளின் இலாபத்திற்காக கொழும்புடன் ஏதாவதொரு ஒழுங்கை செய்துகொள்ளும் எதிர்பார்ப்பிலான கருணாவின் இலக்கானது, வெறுமனே புலிகளின் சொந்த அரசியலின் தர்க்கரீதியான இன்னுமொரு பகுதியே ஆகும்.

புலிகளின் சிரேஷ்ட பெண் கமாண்டர்களில் ஒருவரான நிலாவானி, கருணாவுடன் சேர்ந்து 2004 நடுப்பகுதியில் கொழும்புக்கு வந்திருந்தார். குறுகிய காலத்திற்குள் அவர் கருணாவுடன் பிரிந்து, பிராயசித்தமாக வடக்கில் கிளிநொச்சியில் உள்ள புலிகளின் தலைமையகத்துக்கு சென்றுவிட்டார். கொழும்பில் இலங்கை இராணுவ புலனாய்வுத் துறை எவ்வாறு கருணாவை பாதுகாத்து அவருடன் நீண்ட கலந்துரையாடல்களை செய்தது என்பதை 2004 ஜூன் மாதம் அவர் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

"ஆரம்பத்தில் நாம் அனைவரும் இலங்கை பாதுகாப்புப் படைகளின் கீழ் கொழும்பில் இருந்தோம். பின்னர் கருணா வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்," என நிலாவனி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இராணுவத்தின் இரகசிய இடத்திற்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னர் அவர்கள் மூன்று நாட்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டலான கொழும்பு ஹில்டனில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவரது அறிக்கை, இலங்கை மற்றும் சாத்தியமானால் இந்தியாவினதும் புலனாய்வுத் துறை, புலிகளுள் இத்தகைய பிளவை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன என்பதற்கு மேலும் சான்றாகும்.

சில மாதங்களின் பின்னர், பாதுகாப்புப் படையினரின் இரகசிய பாதுகாப்புடன் கொழும்பிலும் மற்றும் கிழக்கிலும் கருணா தனது அரசியல் கட்சியான டீ.எம்.வி.பீ. யின் பொது அலுவலகங்களை திறந்துவைத்தார். கிழக்கில் பலவீனமாகியுள்ள புலிகளின் நிலைமையில் முன்னேற்றமடைவதற்காக யுத்தத்தை புதுப்பிப்பதற்காக இராணுவத்தில் சில பகுதியினர் கொடுத்த அழுத்தத்திற்கு இந்த பிளவு ஒரு காரணியாக இருந்துள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யக் கோருவதன் மூலம் முரண்பாடு ஒன்றை தூண்டிவிடத் திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷ ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார்.

தேர்தலுக்குப் பின்னர் நடந்த வன்முறை ஆத்திரமூட்டல்களில் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது. புலிகளுக்குச் சார்பான முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோசப் பரராஜசிங்கம், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசமான மட்டக்களப்பு நகரில் 2005 கிறிஸ்மஸ் பூஜையின் போது புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

2006 ஏப்பிரல் 7ம் திகதி, புலிகளுக்குச் சார்பான இன்னுமொரு முன்னணி அரசியல்வாதியான வி. விக்னேஸ்வரன் திருகோணமலையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். புலிகளுக்கு எதிரானதாகக் கருதப்படும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யூ.டி.எச்.ஆர். யாழ்ப்பாணம்) அமைப்பு, 2006 அக்டோபரில், ரியசீலன் (சீலன்) என்ற பெயருடைய கருணா குழு உறுப்பினரால் விக்னேஸ்வரன் கொல்லப்பட்டதாக" தெரிவித்துள்ளது.

2006 நவம்பரில், சிறுவர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் தொடர்பான ஐ.நா. பிரதிநிதிகளுக்கான விசேட ஆலோசகர் அலன் ரொக், இலங்கையில் 10 நாட்கள் தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர், கருணா குழுவுக்கு சிறுவர்களைக் கடத்துவதில் இராணுவத்தின் பிரிவுகள் சம்பந்தப்பட்டுள்ளதற்கும் அதற்கு ஆதரவளித்துள்ளதற்கும் "பலமான நம்பகமான" ஆதாரங்கள் இருப்பதாக ஊடகங்களுகுத் தெரிவித்தார். கருணா குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் தண்டனையில் இருந்து விலக்கீட்டு உரிமையுடன் இராணுவச் சோதனைச் சாவடிகள் ஊடாக ஆயுதங்களை பகிரங்கமாக எடுத்துச் செல்வதாகவும் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களிலும் ஈடுபடுவதாகவும் அவர் முறைப்பாடு செய்தார்.

யுனிசெப் அறிக்கையின்படி, 2006 டிசம்பர் 31 வரை அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள குடும்பங்கள், கருணா குழுவால் 208 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. மனித உரிமை அமைப்புக்கள், அதே போல் யுத்தநிறுத்தத்தை மேற்பார்வை செய்த இலங்கை கண்காணிப்புக் குழுவும், கருணா குழுவுக்கு இராணுவம் மற்றும் பொலிசுடன் உள்ள கூட்டு பற்றி அறிவித்துள்ளன. 2006ல் இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்த பின்னர், கருணா குழுவின் பிரிவுகள் இராணுவ நடவடிக்கையில் ஒத்துழைப்பதாக செய்திகள் சுட்டிக்காட்டின.

2007 நடுப்பகுதியில், டீ.எம்.வி.பீ. யில் கருணாவுக்கும் அவருக்கு அடுத்ததாக இருந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சந்திரகாந்தனுக்கும் இடையில் உள் மோதலொன்று வெடித்தது. கிழக்கில் தனது குழுவின் சிறுவர் கடத்தல்கள் மற்றும் கொலைகளால் தமிழர்கள் மத்தியில் மேலும் மேலும் அதிருப்திக்குள்ளாகி வந்ததாலும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களாலும் தனது இராதந்திரிகளுக்கான கடவுச் சீட்டில் கருணா பிரிட்டனுக்கு பயணித்தார். அவர் கைதுசெய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், பிள்ளையான் விசுவாசிகள் துரிதமான மற்றும் தீர்க்கமான ஒரு திடீர்த் தாக்குதலில் நவம்பர் 5ம் திகதி மட்டக்களப்பில் உள்ள டீ.எம்.வி.பீ. அலுவலகங்களைக் கைப்பற்றியதோடு எஞ்சியிருந்த கருணா விசுவாசிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர்.

இப்போது கருணா குழு பிள்ளையான் குழு என அழைக்கப்படுகின்றது. அரசாங்கமும் இராணுவமும் வேகமாக புதிய தலைமைத்துவத்துடன் வேலைசெய்யும் திட்டமொன்றை ஸ்தாபித்துவிட்டன. இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது டீ.எம்.வி.பீ. உடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக உத்தியோகபூர்வ கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் மார்ச் 10ம் திகதி இடம்பெற்றது. முந்தைய அரசாங்கங்களும் புலிகளுக்கு எதிரான துணைப்படைகளுடன் கூட்டாகச் செயற்பட்டதாக கூறுவதன் மூலம் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்கள் இந்தக் தேர்தல் கூட்டணியை நியாயப்படுத்தினர்.

கருணாவுக்கு கடவுச் சீட்டு ஒன்றை பெற்றுக்கொடுப்பதிலும் மற்றும் அதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதிலும் இராஜபக்ஷ சகோதரர்களின் பங்களிப்புகள் இன்னும் தெரிந்துகொள்வதற்கு எஞ்சியுள்ளன. நீதிமன்றத்தில் கருணா வெளியிட்ட விடயங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கருணா பிரிட்டிஷ் சிறையிலடைக்கப்பட்டிருப்பது, அவரது வன்முறை குற்றங்களில் தமக்குள்ள தொடர்புபற்றிய முழு கதையையும் சொல்லிவிடுவாரோ என்ற பீதியில் உள்ள, இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் மிகவும் வசதியாகிவிட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved