World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Warnings of deep recession as US layoffs spread coast-to-coast

அமெரிக்காவில் ஒரு கடலோரப் பகுதியில் இருந்து மறு கடலோரப் பகுதி வரை வேலைகள் நீக்கம் நடக்கும் நிலையில் ஆழ்ந்த பொருளாதாரப் பின்னடைவு பற்றிய எச்சரிக்கைகள் வெளிப்படுகின்றன

By Patrick O'Connor
27 October 2008

Back to screen version

கடந்த சில நாட்களாக தனியார் மற்றும் பொதுத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் டஜன் கணக்கில் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. கீழ்நோக்குச் சரிவின் பாதிப்பு நிதியத் துறையின் உள்வெடிப்பை காட்டிலும், கார்த்தொழில் போன்ற நலிவுற்று வரும் தொழில்களையும் கடந்து மிகப் பரந்த அளவிற்கு வெளிப்பட்டு பொருளாதாரம் முழுவதும் பரவத் தலைப்பட்டுள்ளது.

அமெரிக்கா இப்பொழுது இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மந்த நிலையில் நுழையக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் பரந்த அளவில் எதிர்பார்க்கின்றனர். JP Morgan உடைய பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியன்று இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டு பகுதியில் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டு விகிதத்தில் 0.5 சதவீதம் குறைந்துள்ளது என்று கணித்துள்ளதுடன் டிசம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் 4 சதவீத சரிவு இருக்கும் என்றும் கூறுகின்றனர். இது 1981-82 பொருளாதாரப் பின்னடைவிற்கு பின்னர் ஏற்பட்ட மிக அதிகமான சரிவு என்பதைக் குறிக்கும்.

வேலையின்மை மிக அதிகமாக பெருகும். "அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது 8 அல்லது 8.5 சதவீதத்தை தொடும் என்பது என் கருத்து" என்று Global Insight தலைமை பொருளாதார வல்லுனரான Nigel Gault நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்.

வெளிநாடுகளுக்கு வேலை அளிக்கும் நிறுவனமான Challenger, Gray & Christmas தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் அதிக வேலைநீக்கம் செய்த உயர்மட்ட ஐந்து பிரிவுகள் வருமாறு: நிதியப் பிரிவு 111,200 வேலை இழப்புக்கள், கார்த் தொழில் 94,900 பணி நீக்கங்கள், அரசாங்க/இலாபநோக்கு அற்ற அமைப்புக்கள் 66,800 கதவடைப்புக்கள் போக்குவரத்துத் துறை 62,000 கதவடைப்புக்கள் மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவு 51,300 வேலைகள் இழப்பு ஆகும்.

அமெரிக்காவில் 29 எஃகு உருக்கு ஆலைகளில் 17 குறைந்து செல்லும் தேவையால் மூடப்பட்டுவிட்டன. உற்பத்திக் குறைவை இது விரைவுபடுத்தும்; ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பரில் சரிவு 4 சதவிகிதம் என்று ஆயிற்று. சிக்காகோவை தளமாகக் கொண்ட எஃகு பகுப்பாய்வாளர் Michelle Applebaum, டைம்ஸிடம் இந்தப் புள்ளி விவரங்கள் "உலக எஃகு தேவையின் சரிவிற்கு உற்பத்தி வெட்டுக்கள் உடனடி எதிர்விளைவு என்று காட்டுவதாகவும், எஃகு வாங்குபவர்கள் இந்த உறுதியற்ற காலத்தில் இருக்கும் இருப்புக்களோடு நின்று புதிதாக வாங்குதலை ஒத்திப் போடுவர்" என்றும் குறிப்பிட்டார்.

மிகப் பெரிய அமெரிக்க கார்த்தொழில் உற்பத்தியாளர்கள் கடந்த பதினைந்து நாட்களாக அநேகமாக ஒவ்வொரு நாளும் வேலை நீக்கங்களை அறிவித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஊதியம் பெறுபவர்களில் 25 சதவீதத்தினர் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்றும் சமீபத்தில் இன்னும் கூடுதலான மறுகட்டமைப்பும் ஏற்படக்கூடும் என்றும் கிறைஸ்லர் வெள்ளியன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட 5,000 வெள்ளைக் காலர் தொழிலாளர்களை பாதிக்கும்; மற்ற வேலைகள் கிட்டத்ட்ட 1,825 ஐக் குறைக்க இருப்பதாக கிறைஸ்லர் கூறிய மறுதினமே இந்த அறிவிப்பு வந்தது. நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் உள்நாட்டு விற்பனைக் குறைப்பினால் உந்தப் பெற்றவை என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் அல்லது நிசான் அல்லது ரெனோல்ட்டுடன் இணைவதுடன் தொடர்பு அற்றது என்றும் கூறினார்.

கார்த் தொழில் பற்றிய வல்லுனர்கள் இக்கூற்றை நிராகரித்துள்ளனர்; "இவர்களால் வேலை இழப்பு ஏற்படுபவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாது மற்ற மாற்றீடுகளை இவர்கள் பார்க்கின்றனர்" என்று டெட்ராயிட் உற்பத்தி நிறுவனமான MacKenzie & Dunleavy என்னும் மறுகட்டமைப்பு நிறுவனத்தின் மூத்த நிர்வாகப்பங்காளியான வான் கோன்வே கூறினார். "GM அல்லது ரெனோல்ட் அல்லது எவரோ வாங்க இருக்கையில் இவர்களையும் வைத்திருப்பானேன்? இவர்கள் வாங்குபவர்களுக்காக குறைப்புத்தான் நடத்துகின்றனர். இது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது."

இத்தகைய பணி நீக்கங்கள் முக்கிய கார் நிறுவனங்கள் இணைப்பு ஏற்பட்டவுடன் விளையக்கூடிய ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்களுக்கு ஒரு முன்னோடிதான்.

கடந்த வாரம் ஜெனரல் மோட்டார்ஸ் பல ஊதிய ஊழியர்களின் நலன்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது; இதில் தொழிலாளர்களுக்கு ஓய்வுத் திட்டத்தில் கொடுக்கக்கூடிய 401(k) பங்களிப்புக்கள் உள்ளடங்கும்; இதைத்தவிர, 2008 மற்றும் 2009 தொடக்கப்பகுதியில் ஊதியம் பெறுவோர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் தொகுப்பில் குறிப்பிடாத வகையில் பலர் குறைக்கப்படுவர் எனத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் பெரும் நிறுவனத்தின் விரைவான சரிவிற்கு மற்றொரு அடையாளத்தை காட்டும் வகையில் Journal சனிக்கிழமை அன்று டோயோடா GM க்குப் பதிலாக அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் அதிக விற்பனை செய்யும் நிறுவனமாக ஆகிவிடும் எனக் கூறியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக GM தான் அந்த இடத்தில் இருந்து வந்தது.

உற்பத்தித் துறையில் கீழ்நோக்கிய சரிவு ஏற்கனவே தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதர வகுப்புக்களின் பரந்த அடுக்குகளை பாதித்துக் கொண்டுள்ள சமூக நெருக்கடியை அதிகப்படுத்தும். உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் முறையே 8.7, 8.8 சதவீதம் என்று இருக்கும் மிச்சிகன், Rhode Island போன்ற தொழில்துறை வேலைகளை நம்பியிருக்கும் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வகையில் கடுமையான பாதிப்பிற்கு உட்படும்.

வேலை வெட்டுக்கள் ஒரு கடலோரப் பகுதியில் இருந்து மற்றொரு கடலோரப் பகுதி வரை ஒவ்வொரு தொழில்துறையிலும் பரவியுள்ளது; பல பணிகள் பிரிவுகளில் உள்ள ஊழியர்களும் இதில் அடங்குவர். கார் தொடர்புடைய உற்பத்தி முறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; Diez Group மூன்று மிச்சிகன் உலோக வார்ப்பு ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது; இதில் 352 வேலைகள் இழப்புக்கு உள்ளாகும். ஒகையோ மோரைனில் இருக்கும் GM மற்றும் Isuzu கூட்டு நிறுவனமான DMAX, 300 வேலைகளை குறைத்துள்ளது. B.F. Goodrich இந்தியானாவில் இருக்கும் Woodburn டயர் ஆலையில் 500 வேலைகளை நீக்கிவிட்டது. தோமஸ் பில்ட் வட கரோலினாவில் உள்ள High Point ல் இருக்கும் அதன் பஸ் ஆலையில் 250 வேலைகளை நீக்கிவிட்டது.

மூன்று வடக்கு கரோலினாவில் இருக்கும் ஆலைகளும் மூடப்பட உள்ளதால் பிற தொழில்துறை வெட்டுக்களில் மொத்தம் 1,000 பேர் வேலையிழப்பதும் சேர்ந்துள்ளது. அவை Durha வில் இருக்கும் Silver Line Building Products, ரோக்கிங்ஹாமில் இருக்கும் UCO Fabrics மற்றும் எல்ம் நகரத்தில் இருக்கும் IWC Direct ஆகியவை ஆகும். ADC தொலைத்தொடர்பு நிறுவனம் 190 வேலைகளை மின்னசோட்டாவிலும், கலிபோர்னியா சான்டா கிளாராவில் Align Technologies 111 வேலைகளையும் நீக்கி விட்டன.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பணிகளும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. மாசாச்சூசட்ஸில் உள்ள Cambridge Health Alliance 650 வேலைகளை குறைத்துவிட்டது, மிச்சிகனில் உள்ள Blue Cross Blue Shield 100 வேலைகளையும், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவ மையம் 500 வேலைகளையும் நீக்கிவிட்டன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகராட்சி பட்ஜேட் பற்றாக்குறையால் 200 தொழிலாளர்களுக்கு பதவி நீக்க அறிவிப்பு கொடுத்துள்ளது.

இன்னும் மிகப் பெரிய பொதுப் பணி வேலை குறைப்புக்கள் மாநில வரிகள் வருமானத்தை தாக்குகையில் குறைக்கப்பட உள்ளன. அரசாங்க வேலை கொடுக்கும் அமைப்புக்களில் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்க அஞ்சல் துறை தொழிற்சங்கங்களிடம் 16,000 பணிநீக்கம் கூடாது என்ற விதியின்கீழ் வராதவர்கள் நீக்கம் செய்யப்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

வேலைகள், வீடுகள், சேமிப்புக்கள் ஆகியவற்றை இழக்கும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள சாதாரண அமெரிக்கர்கள் மில்லியன் கணக்கில் இருப்பவர்களுக்கு அவசர மீட்புப் பொதி எதையும் புஷ் நிர்வாகம் முன்வைக்கவில்லை. பொருளாதாரப் பின்னடைவு ஆழ்ந்து போகையில், விவாதம் நிதியத் துறைக்கு பிணை எடுத்தல் பற்றிய மையத்தைத்தான் கண்டுள்ளது; அதற்கு $2 டிரில்லியன் தேவைப்படுகிறது; அதே போல் பெருவணிகத்தின் பரந்த பிரிவுகளுக்கும் உதவி செல்லும்.

சனிக்கிழமையன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கொடுத்த தகவல்: "நிதி அமைச்சரகம் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து பங்குகளை வாங்குவது பற்றி பரிசீலிக்கிறது; இது அரசாங்கத்தின் $700 பில்லியன் மீட்புத் திட்டம் பலவகைப்பட்ட இடர்பாடுகள் கொண்டுள்ள தொழில்களுக்கு சேமிப்பு வங்கி போல் மாறக்கூடும் என்பதின் அடையாளம் ஆகும்.... நிதியப் பணியின் வட்ட மேசை என்னும் வாஷிங்டன் வணிகக் குழு ஒன்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சரகத்திற்கு அரசாங்கத்தின் பங்கு உட்செலுத்தும் திட்டத்தில் இடைத்தரகர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் அயல்நாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றையும் சேர்க்குமாறு எழுதியிருப்பதாகக் கூறியுள்ளது."

காப்பீட்டு நிறுவனங்கள் நிதியச் சந்தைகளில் முக்கிய பங்கு கொண்டவை ஆகும்; $1.3 டிரில்லியன் பெறுநிறுவனக் கடன்கள் கணக்கில் உள்ளது. தொழில்துறையின் "மோசமான சொத்துக்களை" வாங்கும் திட்டம் பற்றி நிதி அமைச்சரகம் ஏற்கனவே அறிவித்துள்ளது; இப்பொழுது இன்னும் கூடுதலாக பொதுப் பணத்தை நேரடியாகவே இத்துறையில் பங்குகள் வாங்குவது மூலம் செலுத்தலாமா என்று யோசித்துவருகிறது. கார் நிறுவனங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என விரும்புகின்றன; அதையொட்டி அவற்றிற்கு இணைப்புத் திட்டங்களை தொடர போதுமான மூலதனம் கிடைக்க வழிவகை ஏற்படும். பிணை எடுப்புத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என்பது தொடக்கத்தில் முன்மொழியப்பட்ட பணத்தின் மீது "பெரும் அழுத்தத்தை கொடுக்கக்கூடும்" என்று ஜேர்னல் கூறியுள்ளது; மேலும் இது கூட்டாட்சி அரசாங்கத்தின் பட்ஜேட் பற்றாக்குறையையும் பெரிதும் அதிகரிக்கும்.

ஆளும் உயரடுக்கின் மிகப் பெரிய முன்னுரிமை இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான நிதியச் சிறுகுழுவிற்கு பாதிப்பு ஏதும் வராமல் இருப்பதைக் காக்கும் வகையில் பேரழிவின் முழுச்சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் ஏற்றுவது என்பதாக உள்ளது. இந்த மூலோபாயம் வரவிருக்கும் ஜனநாயகத் தேர்தலில் ஒரு ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றாலும் மாறாமல்தான் இருக்கும்.

பராக் ஒபாமாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் ரோபர்ட் ரூபின் CBS உடைய "Face the Nation" தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேற்று ஒரு பேட்டி கொடுத்தார். தற்பொழுது சிட்டிக்ரூப்பில் ஒரு இயக்குனராக இருக்கும் ரூபின் கிளின்டன் நிர்வாகத்தின்போது நிதியமைச்சரகத்தில் ஒரு செயலராக இருந்ததுடன் கோல்ட்மன் சாக்ஸில் ஒரு மூத்த நிர்வாகியாகவும் இருந்துள்ளார். கூடுதலான செலவினங்கள் ஜனநாயக வாதிகளின் "பொருளாதார மீட்பு" என்று கூறப்படும் ஊக்கத் திட்டத்தின் கீழ் "ஒரு நீண்ட கால நிதியக் கட்டுப்பாட்டை மதிக்கும் வகையில் இருக்கும் என்றும் அதையொட்டி எமது பத்திர சந்தை, எமது நாணயச் சந்தை ஆகியவற்றை குறைமதிபிற்கு உட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும்", இத்தகைய செயல்பாடு "உறுதியான நிதிய நிலைமைகளை மீண்டும் நீண்ட காலத்திற்கு நிறுவும் வகையில் மனத்திண்ணம் வேண்டும் என்றும்" கூறியுள்ளார்.

வேறுவிதமாகக் கூறினால், இச்செயற்பட்டியல் சமூகத் திட்டங்கள் மற்றும் உள்கட்டுமானங்களில் கணிசமான குறைந்த செலவுகளைத்தான் கொண்டிருக்கும்.

ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ள $150 பில்லியன் ஊக்கத் தொகை என்பது வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புப் பொதியுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளி நீர் போன்றதுதான்; மக்களுடைய உண்மையான சமூகத் தேவைகளை பற்றிக் கூறவே தேவையில்லை (அவை கவனத்திற்கு வராது). ஆனல் இந்த அற்பத் தொகைகூட குறிப்பிடப்படும் பொருளாதாரப் பிரிவுகளை உயர்த்த இலக்காக இருக்குமே ஒழிய எழுச்சி பெற்றுள்ள சமூக இடர்பாடுகளைக் களைவதற்கு பயன்படாது.

CBS அளிப்பாளர் Bob Schieffer, ரூபினிடம் இந்த ஊக்கப் பொதி "ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பெருமந்த காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்த மிகப் பெரிய பொதுப் பணிகளைப் போல் இருக்குமா" அல்லது அரசாங்க உதவியை மக்கள் வாங்கும் நிலைதான் இருக்குமா என்று கேட்டார்.

1930 களின் பொதுப்பணித் திட்டங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டபோது ஒருவித எள்ளி நகையாடிய சிரிப்பிற்குப்பின் ரூபின் விடையிறுத்தார்; "பாப், நீங்கள் விவரித்த இரண்டுமே இப்பொழுது நடைமுறைக்கு வராது." பணம் என்பது நகரத்திற்கும் அரசாங்க நிர்வாகங்களுக்கும் கொடுக்கப்படும்; அதையொட்டி இருக்கும் பொருளாதார, சமூகத் திட்டங்கள் --ஏற்கனவே மிகக் குறைந்த தன்மையில் இருப்பவை-- தக்க வைக்கப்படலாம். கூடுதலான வரிச்சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று நியூ யோர்க் டைம்ஸில் முதல் பக்க கட்டுரை ஒன்று, "ஜனநாயகக் கட்சியினர் கட்சி பெரும் வெற்றி பெற்றால்" வரக்கூடிய தொந்திரவுகள், வெகுமதி பற்றிக் குறிப்படுகையில் உள்நாட்டு பொருளாதார சமூகக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது; ஜனநாயகக் கட்சியினர் ஜனாதிபதி பதவியை வென்று, சட்டமன்றத்தின் இரு பிரிவுகளிலும் பெரும் வெற்றி பெற்றாலும் இந்த நிலைமைதான் இருக்கும். அத்தகைய வெற்றி என்பது டைம்ஸின் கருத்துப்படி பிலிபஸ்டர் முறையை முறிக்கும் வகையில் செனட்டில் 60 உறுப்பினர் பெரும்பான்மை ஏற்பட்டால், ஜனநாயகக் கட்சியினருக்கு சுகாதாரப் பாதுகாப்பு வரிகள், தொழிற்சங்க உரிமைகள், விசை, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றில் தன் விருப்பப்படி செயல்படுத்தக்கூடிய பேரவா செயற்பட்டியலைக் கொடுக்கக் கூடும்."

ஆனால் கட்டுரை தொடர்கிறது; "பல ஆண்டுகள் பதவியில் இல்லாமல் இருந்த நிலையில் கட்டுப்பாட்டிற்குட்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியினர் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் மீது இவர்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொடுத்தால், இத்தகைய குறைபாடுகளை [அதிக நம்பிக்கையால் விளைந்தவை] தவிர்க்கும் உறுதியை கொண்டுள்ளனர். ஜனநாயக கட்சி பெரும்பான்மையின் தன்மை, மையவாத மற்றும் கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் ஓரளவிற்கு விரிவாகும்போது, வெளிப்படையான சிந்தனைப் போக்கு செயல்பட்டியலை தொடரும் ஜனநாயகக் கட்சியின் ஆர்வத்தை நிதானமாக்கும் என்று கட்சியினர் கூறுகின்றனர்."

"மையவாதத்திற்கு" அழைப்பு என்ற போலித் தன்மை மற்றும் "ஒரு சிந்தனைப் போக்கு செயற்பட்டியலை" அகற்றிய முறையிலும் ஒபாமாவும் அவருடன் செயல்படுபவர்களும் தொடர்ச்சியான குடியரசு மற்றும் ஜனநாயக நிர்வாகங்கள் வளர்த்துள்ள வலதுசாரி செயற்பட்டியலை இன்னும் ஆழ்ந்த முறையில் உறுதியாக்க தயாராகின்றனர். இவை ஒபாமாவின் "தாராளவாதம்" மற்றும் "இடது" ஆதரவாளர்களை அம்பலப்படுத்தியுள்ளன; அவர்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது புஷ்ஷின் பிற்போக்கு திட்டத்தில் இருந்து ஒரு முறிவை ஏற்படுத்தும் என்ற போலித் தோற்றத்தை வளர்த்துள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved