World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan university meeting discusses: Leon Trotsky & the Post-Soviet School of Historical Falsificationஇலங்கை பல்கலைக்கழக கூட்டத்தில் நடந்த கலந்துரையாடல்: லியோன் ட்ரொட்ஸ்கியும் சோவியத்துக்குப் பின்னரான வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் பள்ளியும்11 September 2008லியோன் ட்ரொட்ஸ்கியும் சோவியத்துக்குப் பின்னரான வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளியும் என்ற நூல் சம்பந்தமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். பல்கலைக்கழகத்தின் தத்துவஞான சங்கம் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்புடன் (ISSE) இணைந்து இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. ஜியோஃபெரி சுவைன், அயன் டி. தட்சர் ஆகிய இரு கல்விமான்களால் அன்மையில் எழுதப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமான நூல்களில் உள்ளடங்கியுள்ள வரலாற்று பொய்களுக்கு பதிலளித்து, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த்தினால் எழுதப்பட்ட இந்த நூல் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. தத்துவஞான சங்கத்தின் அழைப்பின் பேரில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) பொதுச் செயாலாளர் விஜே டயஸ் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார். புதிய பரம்பரை சோசலிச போராளிகளை, கடந்த நூற்றாண்டின் தொழிலாள வர்க்கத்தின் முழு அனுபவங்களின் தீர்க்கமான படிப்பினைகளில் ஆயுபாணிகளாக்குவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடுத்த அரசியல் போராட்டத்தின் விளைவே இந்த நூல் என அவர் விளக்கினார். ''அந்தப் போராட்டங்களில் ட்ரொட்ஸ்கி வகித்த கோட்பாட்டு மற்றும் அரசியல் பாத்திரம், இந்த வரலாற்றை விளங்குவதற்கு மையமாக இருக்கிறது. இந்த வரலாறு தற்போதைய காலகட்டத்தில் புரட்சியாளர்கள் எடுக்க வேண்டிய புறநிலை ரீதியில் அவசியமான அரசியல் பாதையை தெளிவாகக் காண்பதற்கு இன்றியமையாததாகும்," என டயஸ் கூறினார். பல்கலைக்கழக பேராசிரியர்களான சுவைன், தட்சர் ஆகியோர் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு நூல்கள் மிகவும் தெளிவாக மாணவ வாசகர்களை இலக்காக் கொண்டு எழுதப்பட்டது என நோர்த்தின் கட்டுரையில் மேற்கோள்காட்டி டயஸ் விளக்கினார். நோர்த் குறிப்பிட்டவாறு: ''நிச்சயமாக, அவை அவற்றின் பெரும்பாலான வாசகர்களுக்கு ட்ரொட்ஸ்கியை முதலாவதாக அறிமுகப்படுத்தும் நூல்களாகும் என்பதை ஆசிரியர்கள் அறிவர்; மற்றும் தமது துறையில் மேலும் அக்கறை காட்டும் வாசகர்களின் ஐயத்தை போக்குவதற்கு பயன்படும் வகையிலேயே அவர்கள் இந்த இரு நூல்களையும் எழுதியுள்ளனர். பேராசிரியர் சுவைன் தனது நூலின் முதல் பந்தியில் தெளிவான திருப்தியுடன் பறைசாற்றுவது போல், 'இந்த வாழ்க்கை வரலாறு நூலின் வாசகர்கள் ட்ரொஸ்கிசத்திற்கான தமது பாதையை காணமாட்டார்கள்'.'' திரிபுபடுத்தப்பட இரு வாழ்க்கை வரலாறு வெளியீடுகளும், பரந்த அரசியல் உள்ளடக்கத்துக்குள் வைக்கப்பட வேண்டும் என டயஸ் தெரிவித்தார். உலக முதலாளித்துவத்திற்குள் பூகோளப் பொருளாதார மீள்கட்டமைப்பானது ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது தேசிய சீர்திருத்தவாதத்தை அடிப்படையாக கொண்ட சகல கட்சிகளும், அமைப்புக்களும் வீழ்ச்சியடைந்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ''இரண்டு நூல்களும் ட்ரொட்ஸ்கியின் செல்வாக்கு மீண்டும் தோன்றுவதற்கு எதிரான முன்கூட்டிய தாக்குதலாகும்'' என இந்த இரு வேலைகளையும் பண்புமயப்படுத்திய நோர்த் விளக்கியதாவது: ''வர்க்க முரண்பாடு கூர்மையடையும் தருணத்தில் அது அரசியல் வெளிப்பாட்டை காணும். அப்போது தற்போதைய அமைப்பை பதிலீடு செய்வதற்கான தேடல் ஏற்படும். இது, கடந்தகால புரட்சிகர போராட்டங்களில் சோசலிச இயக்கத்தின் வரலாற்றின் மீதான ஆர்வத்துக்கு புத்துயிரூட்டுவதற்கான ஒரு புத்திஜீவி மற்றும் சமூகத் தொகுதியை உருவாக்கிவிடும். லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் படைப்புக்கள் மீதான ஆர்வத்தை புதுப்பிக்க வழிவகுக்கும் அத்தகைய ஒரு சூழலின் அபிவிருத்தி தவிர்க்க முடியாததாகும்." 1991ல் சோவியத் யூனியன் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் கலைக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவ வட்டாரத்துக்குள் வெற்றிக்களிப்புவாத அலை உருவாகிய போது, வரலாறுக்கு முதலாளித்துவத்திற்கு மேலாக முன்னேற முடியவில்லை மற்றும் சோவியத் அமைப்பு ஆரம்பத்திலேயே அழியத் தொடங்கிவிட்டது என ஆய்வாளர்கள் பறைசாற்றியதை டயஸ் சுட்டிக் காட்டினார். சுவைன் மற்றும் தட்சரும் கூட ஏற்றுக்கொண்டுள்ள இத்தகைய ஆய்வின் அடிப்படை குறைபாட்டை நோர்த் இனங்கண்டார் என அவர் விளக்கினார். 1917 அக்டோபர் புரட்சிக்கு குழி தோண்டியது ஸ்ராலினிசமே என்பதை விளங்கிக் கொண்டதும், மற்றும் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புரட்சியின் பெறு பேறுகளை பாதுகாக்க ஸ்ராலினிசத்துக்கு எதிராக துணிவுடன் போராடியதுமான சோசலிச எதிர்ப்பு இருந்தது என்ற வரலாற்று உண்மைக்கு புறம்பாகவே அவர்கள் எல்லோரும் எழுதினார்கள். நோர்த்திடமிருந்து மேற்கோள்காட்டி டயஸ் கேள்வி எழுப்பினார்: "சோவியத் யூனியன் அதன் 74 ஆண்டு வரலாற்றில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறுபட்ட கொள்கைகளை பின்பற்றி இருந்திருக்குமாயின், குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட வரலாற்று விளைவுகள் ஏற்பட்டிருக்க முடியும்? சோவியத் யூனியனில் பதிலீடு இருந்தது என்ற உண்மையை வலியுறுத்துவதற்கு, அவர் இதற்கு முக்கியமான சமாந்தரமான நிகழ்வுகளை இலங்கை தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் இருந்து எடுத்துக் காட்டினார். ''இது முற்றிலும் சாத்தியமானது. ஆட்சிக்கு வரும் முதலாளித்துவ அரசாங்கங்கள் நடாத்திவரும் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியிலும், லங்கா சமசமாஜக் கட்சி உட்பட்ட பழைய இடதுசாரிக் கட்சிகளின் பொறிவின் மத்தியிலும் வளர்ந்த புதிய பரம்பரை மாணவர்களுக்கு, சரியாக 55 ஆண்டுகளுக்கு முன்பு 1953 ஆகஸ்ட்டில் புரட்சிக்கு ஒப்பான போராட்டங்கள் இந்த நாட்டில் வெடித்துக் கிளம்பியது என்பது தெரியாது. அது ஹர்த்தால் என்று அழைக்கப்பட்டது --கிராமப்புற மக்களின் ஆதரவுடனான பொது வேலைநிறுத்தம். அந்தப் போராட்டம் முதலாளித்துவ நிர்வாகத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீழ்ச்சியின் எல்லைக்கு இட்டுச் சென்றது,'' என டயஸ் விளக்கினார் "அந்த குறிப்பிட்ட நேரத்தில் தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்ற முடிந்திருக்குமா என்பது விவாதத்திற்குரியதாக இருந்த போதிலும், முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள இரண்டு பிரதான வர்க்கங்களான முதலாளி வர்க்க மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கட்சிகள், அந்தப் போராட்டங்களில் இருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளை கவனத்தில் எடுப்பது முக்கியமானது. தேசிய அரசுக்கும் பாராளுமன்ற அரசியலுக்கும் இணங்கிப் போன சம சமாஜக் கட்சி, முதலாளித்துவ அமைப்பை சவால் செய்கின்ற எந்தவொரு போராட்டத்திலும் பங்குபற்றுவதில்லை எனத் தீர்மானித்தது. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள இனவாதத்தை கிளறி விடுவதன் மூலம் பிரித்து ஆளும் கொள்கையை மேலும் தீவிரமாக தொடருவதற்கு முதலாளித்துவம் முடிவு செய்தது. சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக கொண்டுவரும் கொள்கை, முதலாளித்துவ அரசியலின் மையத்துக்கு கொண்டுவரப்பட்டது. "1953 ஹர்த்தாலை ரஷ்யாவின் வரலாற்றுடன் ஒப்பிடுவோமாயின், 1917ம் ஆண்டு வெற்றிகரமான புரட்சிக்கான ஒத்திகையாக விளங்கிய 1905ம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்கு சமமானதாகும் எனக் கூறமுடியும். விவசாயிகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதன் பேரில், முதலாளித்துவத்தின் சகல பகுதியினரில் இருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்துக்கு கல்வியூட்டுவதற்கும் அதை ஒழுங்குபடுத்துவதற்கும் அணிதிரட்டுவதற்கும் 1905ம் ஆண்டு புரட்சியின் அனுபவத்தின் அடிப்படையிலும் மற்றும் அப்போதைய உலக சூழ்நிலையை பரீட்சிப்பதன் மூலமும் ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி கோட்பாட்டை விரிவாக்கினார். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமைத்துவத்தின் கீழ் அக்டோபர் புரட்சியில் போல்ஷவிக் கட்சியால் புரிந்துகொள்ளப்பட்ட முன்நோக்கு இதுவேயாகும். "1953 ஆண்டின் பின்னர் சம சமாஜக் கட்சி இதற்கு நேர் எதிராக தொழிற்பட்டது. அது சொலமன் பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதன் மூலம் 1956ம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது. சம சமாஜக் கட்சி முதலாளித்துவ வரம்புக்குள் விசுவாசமான எதிர்க்கட்சியாக விளங்கியது. இந்த தேசிய சந்தர்ப்பவாத பாதை, சமசமாஜக் கட்சி 1964ல் சிறீமா பண்டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்துடன் சேர்ந்ததில் முடிவுற்றது. தொழிலாள வர்க்கம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய மோதலுக்கு மீண்டும் தயாராகிக் கொண்டிருந்த சமயத்திலேயே சம சமாஜக் கட்சி ட்ரொட்கிச கொள்கைகளையும், தொழிலாள வர்க்க அரசியல் சுயாதீனத்தையும் காட்டிக் கொடுத்தது. 21 கோரிக்கைகள் இயக்கம் இன வேறுபாடுகளை கடந்து சகல பிரிவு தொழிலாளர்களையும் ஒன்றிணைத்தது. பிரதம மந்திரி பண்டாரநாயக்கா, நாட்டு நிலைமை ஆட்சி செய்ய முடியாத நிலைக்கு வந்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார். சம சமாஜக் கட்சி அவருடைய அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டமை இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியம் பூராவும் தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது. "இப்போது, சோவியத் யூனியன் சம்பந்தமான நோர்த்தினுடைய கேள்வியை வேறு விதமாக கேட்க முடியும்: 1964ல் சம சமாஜக் கட்சி வேறுவிதமான கொள்கையை முன்னெடுத்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை கைவிடாது இருந்திருக்குமாயின், வரலாற்று விளைவுகள் குறிப்பிடத்தக்கவாறு வேறுவிதமாக இருந்திருக்காதா? ஆளும் தட்டினரின் இனவாத அரசியலை குறுக்கே வெட்டி, தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குட்டி முதலாளித்துவ இனவாத இயக்கங்கள் தோன்றுவதை தடுத்திருக்காதா? யுத்தத்திற்கு பின்னய முதலாளித்துவ உலக ஒழுங்கில் ஏற்கனவே வெடிப்புகள் தோன்ற ஆரம்பித்த நிலையில், தொழிலாள அதிகாரத்தை நிறுவுவதற்கான சாத்தியத்தை அது ஏற்படுத்தியிருக்காதா? ''இவை கற்பனையான விடயங்கள் அல்ல. சம சமாஜக் கட்சியின் வர்க்கக் கூட்டு கொள்கைக்கு ஒரு பதிலீடு இருந்தது. சம சமாஜக் கட்சி தம்மை ட்ரொட்கிஸ நான்காம் அகிலத்தின் பகுதியாக பிரகடனம் செய்துகொண்ட பொழுதும், நிரந்தரப் புரட்சி கோட்பாடு உட்பட ட்ரொட்கிச வேலைத்திட்டத்தை கைவிட்ட பப்லோவாத திரிபுவாதிகளுக்கு எதிராக 1953ல் இருந்து போராடிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைவதற்கு மறுப்பு தெரிவித்தது. பப்லோவாத சந்தர்ப்பவாதம், சம சமாஜக் கட்சிக்கும் அதன் தேசியவாத திசையமைவுக்கும் பொருத்தமாக இருந்தது. கடந்த 44 வருடங்களாக எண்ணிலடங்கா சமூக அழிவுகளுக்கு பொறுப்பான அதே முதலாளித்துவ அரசுகளில் சமசமாஜக் கட்சி தொங்கிக்கொண்டிருந்த நிலையில், அதன் ஒவ்வொரு அரசியல் பின்னடைவுகளிலும் அது பப்லோவாதிகளிடமிருந்து முழு ஊக்குவிப்பை பெற்றது" இலங்கையிலும் மற்றும் இப் பிராந்தியம் பூராகவும் மீண்டும் ட்ரொட்கிஸத்திற்கு புத்துயிரூட்டும் போராட்டத்திற்காக சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1968ல் அமைக்கப்பட்டது, என டயஸ் விளக்கினார். தற்கால பரம்பரையை அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவற்கு, நோர்த்தினுடைய கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள வரலாற்று விளக்கங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி அவர் உரையை நிறைவு செய்தார். ''சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான பாதையை வெளிக்கொணரும் வரலாற்று தெளிவுபடுத்தல்கள் இன்றி இன்று உலகம் பூராகவும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முகம் கொடுக்கும் பேரழிவுகளில் இருந்து மீள ஒரு முற்போக்கான வழிவகையை காண முடியாது," என டயஸ் கூறினார். அதற்கு பின்னர் கலந்துரையாடல் நடைபெற்ற போது, இனவாத ஜாதிக கெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு புத்த பிக்குகளும், பார்வையாளர் மாணவர் ஒருவரும் சேர்ந்து கலந்துரையாடலை திசைதிருப்ப முயற்சித்தார்கள். ஹெல உறுமயவின் ஒரு பிக்கு, கிறிஸ்தவ எதிர்ப்பு பிற்போக்கு பிரச்சாரத்திற்கு ஆதரவு தேடும் முயற்சியில், ரஷ்யாவில் கிறிஸ்தவ தேவாலயம் மன்னராட்சிக்கு ஆதரவாக ஆற்றிய பாத்திரத்தை பேச்சாளர் குறிப்பிடவில்லை என குற்றம் சாட்டினார். இலங்கையில் சோசலிச புரட்சிக்கான சாத்தியத்தை நிராகரிக்கும் முயற்சியாக, இன்று இலங்கையில் இருப்பதை பார்க்கிலும் அன்று ரஷ்யாவில் சமூக நிலைமைகள் மோசமாக இருந்தன என அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த டயஸ், இன்று இலங்கையில் கொழும்பு ஸ்தாபனத்தை தூக்கி நிறுத்தவும், சிங்களப் பேரினவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் மற்றும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்துக்கு ஆதரவளிப்பதிலும் பெளத்த ஸ்தாபனம் பாத்திரம் ஆற்றுவதைப் போலவே, அன்று பழைய ரஷ்யாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கேடுகெட்ட பாத்திரத்தை ஆற்றின, என சுட்டிக் காட்டினார். சமூக நிலைமைகளை பொறுத்தளவில், கடந்த இரு தசாப்தங்களில் வடக்கில் யுத்தத்தினாலும் தெற்கில் இரத்தக்களரி மிக்க ஒடுக்குமுறையினாலும் 200,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என டயஸ் சுட்டிக் காட்டினார். மேலும் 400,000 பேர் தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து, மிகவும் இழிநிலையிலான அகதி முகாம்களில் தங்கியுள்ளார்கள். மொத்தத்தில் இது நாட்டின் சனத்தொகையின் கிட்டத்தட்ட 3 வீதமாகும். அடிப்படை உணவுப் பொருட்களின் விலையின் படி பணவீக்கம் 40 வீதத்திற்கு மேலானதாக இருக்கும் நிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் தாங்க முடியாத பொருளாதார சுமைகள் சம்பந்தமாக டயஸ் விபரித்தார். ஏமாறும் பக்தர்களிடம் இருந்து தொடர்ந்து தானத்தை பெறும் புத்த பிக்குகள் இத்தகைய சிரமங்களை உணராமல் இருக்கலாம், ஆனால் அந்த சிரமங்கள் உழைக்கும் மக்களை முதலாளித்துவத்துக்கு ஒரு பதிலீட்டை தேட நெருக்கும். இந்தக் கட்டத்தில் ஹெல உறுமய ஆதரவாளர்கள் திடீரென இடைமறித்து பேச்சாளரை கண்டித்ததுடன், தம்மை ஆதரிக்க அழைப்பு விடுத்தார்கள். ஆனால் தாம் முழுமையாக தனிமைப்பட்டதை அறிந்தவுடன் அவர்கள் பின்வாங்கிவிட்டனர். அவர்களின் கோமாளித்தனத்திற்கு பார்வையாளர்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்திற்கு பின்னர் பல மாணவர்கள் ஐ.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்களுடன் உரையாடுவதற்காக காத்திருந்தனர். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் விருப்பத்தையும் மற்றும் சோசலிச பதிலீட்டுக்கான போராட்டத்தில் ஆர்வத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அரசியல் கலந்துரையாடலை தடுப்பதற்கு ஹெல உறுமயவும் மற்றும் ஏனைய பேரினவாதிகளும் பயன்படுத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பலர் கண்டித்ததுடன், ஒரு வருடத்திற்கு முன்பு ஜே.வி.பி. குண்டர்கள் ஐ.எஸ்.எஸ்.ஈ. நடத்திய புத்தக கண்காட்சியை தடுக்க செயற்பட்ட விதத்தையும் நினைவுபடுத்தினார்கள். |