World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காThe New York Times' endorsement of Obama நியூ யோர்க் டைம்ஸ் ஒபாமாவிற்கு ஒப்புதல் அளிக்கிறது By Patrick Martin வாஷிங்டன் போஸ்ட், சிக்காகோ ட்ரிபூன், செயின்ட் லூயி போஸ்ட்-டெஸ்பாட்ச், டெட்ரோயின் ப்ரீ பிரஸ் மற்றும் லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் உட்பட பல முக்கிய செய்தி ஏடுகளும் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமாவை ஜனாதிபதி பதவிக்கு உகந்தவர் என்று தங்கள் ஒப்புதலைக் கொடுத்துள்ளன. இப்படி ஒபாமாவிற்கு பின் ஆதரவாக ஒப்புதல் கொடுத்து நிற்பதில் வெள்ளிக் கிழமை அன்று அமெரிக்காவின் முக்கிய செய்தி ஏடும் அமெரிக்க அரசியல் நடைமுறையின் தாராளவாத பிரிவின் முக்கிய குரலுமான நியூ யோர்க் டைம்ஸும் சேர்ந்து கொண்டது. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முக்கிய பிரிவுகள் இவருடைய வேட்புத்தன்மைக்கு ஆதரவு எனத் திரும்பியுள்ளது என்ற உண்மையைத்தான் செய்தி ஊடகம் பொதுவாக ஒபாமா பற்றி சாதகமாகக் கொண்டுள்ள அணுகுமுறை பிரதிபலித்துக் காட்டுகிறது. ஒபாமாவைப் பற்றி மக்கள் கொண்டுள்ள போலித் தோற்றத்தில் இவர்களும் பங்கு பெறுகிறார்கள் என்ற பொருளை இது தராது; அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக் காலத்தில் இத்தகைய போலித்தோற்றங்கள் மிக மதிப்புடைய அரசியல் சொத்து என அவர்கள் உணர்வதால்தான் ஆகும். ஒபாமா கொடுத்துள்ள உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே அவர் முற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர், நிதிய பிரபுத்துவத்தின் நலன்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கன்சர்வேடிவ் முறையில் பேணிக்காப்பார் என்பதை இவர்கள் நம்புகின்றனர். இந்தக் கணக்குகள்தான் டைம்ஸ் அதன் ஒப்புதலுக்காகக் கொடுத்துள்ள ஒரு பக்கத் தலைப்பில் பிரதிபலிக்கின்றன. டைம்ஸ் கருத்தின்படி, "திரு. ஒபாமா சவாலுக்குப் பின் சவாலை நன்கு சந்தித்து, தலைவராக வளர்ந்து, நம்பிக்கை மற்றும் மாற்றம் என்ற தன்னுடைய ஆரம்ப உறுதிகளுக்கு உண்மையான பருமனையும் கொடுத்துள்ளார்." உள்நாட்டுப் பிரச்சினைகளில் ஒபாமா நிலைப்பாடு பற்றிக் கொடுத்துள்ள சுருக்கத்தில் டைம்ஸ் ஜனநாயக தேசியப் பேரவையில் அவருடைய ஏற்புரை பற்றி உயர்த்திக் காட்டுகிறது; அப்பொழுது ஒபாமா கூறியிருந்தார்: "எமது பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் தீர்க்க முடியாது; ஆனால் நாமே செய்ய முடியாததை அதுதான் செய்ய வேண்டும்; அதாவது தீமையில் இருந்து நம்மை காப்பாற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வி கொடுத்தல், எமது நீரைத் தூய்மையாக வைத்து, பாதுகாப்பான விளையாட்டு பொருட்களை கொடுத்து, புதிய பள்ளிகள், சாலைகள், புதிய அறிவியல், தொழில்நுட்பம் இவற்றில் முதலீட்டையும் செய்ய வேண்டும்." இத்தகைய மிகக் குறைந்த அரசாங்க செயற்பாடுகள் பற்றிய பட்டியல் கூட றேகன் ஆண்டுகளில் குடியரசுக் கட்சி பேரவையில் இடம் பெற்றிருக்காது. இந்த மேற்கோளை தேர்ந்தெடுத்ததில் டைம்ஸ் ஆனது ஒபாமா நிர்வாகம் வளர்ந்துவரும் வேலையின்மை, வீடுகள் இல்லாமை மற்றும், வறுமை பற்றிய குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினைகளுக்கான மக்களின் கோரிக்கைகளால் தள்ளாட்டம் அடையாது என்று பெரு வணிக நடைமுறைக்கு ஐயத்தை நீக்குகிறது. "பகிர்ந்து கொள்ளப்படும் தியாகங்கள், சமூகப் பொறுப்பு" ஆகியவற்றிற்கு ஒபாமா விடுத்துள்ள அழைப்பிற்காகவும் அவரை செய்தி ஏடு பாராட்டியுள்ளது -- இவை கடும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூகச் செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு சங்கேத சொற்கள் ஆகும். தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை நீதிமன்ற நீதிபதி மற்றும் கூட்டாட்சி நீதிபதிகளாக பெரு வணிக அடிப்படை நலன்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்களை முன்மொழிய மாட்டார் என்று நம்பலாம் என்றும், "அவருடைய ஆதரவாளர்கள் சிலர் எதிர்பார்ப்பதை விட குறைந்த எண்ணிக்கையில்தான் தாராளவாத நீதிபதிகளை நியமிக்கக்கூடும்" என்றும் எழுதியுள்ளது. வெளியுறவுக் கொள்கை பற்றி விவாதிக்கையில், டைம்ஸ் அமெரிக்க இராணுவம் "அதிக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை" கூறத் தொடங்கி "ஆப்கானிஸ்தானில் நடப்பது தேவையான போர்" என்றும், அதை "ஈராக்கில் நடக்கும் தேவையற்ற பெரும் செலவைக் கொடுத்துள்ள போருக்கு" எதிரானதாகவும் காட்டியுள்ளது. ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் குறைக்கப்பட்டு ஆப்கானிஸ்தானத்தில் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்னும் ஒபாமா கருத்துக்களுக்கு அது ஆதரவைக் கொடுத்துள்ளது. ஒரு நாள் முன்பு டைம்ஸிலேயே ஒரு நீண்ட கட்டுரையில் ஆவணமிட்டுள்ளவிதத்தில், இரு வேட்பாளர்கள் குடியரசுக் கட்சியின் ஜோன் மக்கெயின் அல்லது ஒபாமா இருவரில் எவர் சரியான முறையில் இன்னும் ஆக்கிரோஷமான, இராணுவவாதத்தை வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பவராக பண்பிடப்படுவர் என்று கூறுதல் கடினமாகும். ஈராக்கில் எப்படியும் "வெற்றி பெற வேண்டும்" என்பதில் மக்கெயின் உறுதியாக உள்ளார்; இன்னும் வெளிப்படையாக ரஷ்யா மீது ஆக்கிரோஷம் கொண்டுள்ளார்; ஆனால் ஒபாமா ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றின் மீதும் சமீபத்திய காலத்தில் ஈரான் மீதும் கூடுதலான கடுமையைக் காட்டியுள்ளார். டாபூர் போன்ற பகுதிகளில் மனிதாபிமானக் குறுக்கீடு என்ற பெயரில் அமெரிக்க இராணுவ வலிமை அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் ஆர்வம் கொண்டுள்ளார். இவருடைய துணை ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் ஜோசப் பிடென் "ஆழ்ந்த வெளியுறவுக் கொள்கை நுட்பத்திற்காக" டைம்ஸினால் பாராட்டப்பட்டுள்ளார். ஈராக் போருக்கு ஆரம்பத்திலேயே அவர் ஆதரவு கொடுத்தவர் என்றும் நீண்ட காலமாக அமெரிக்க இராணுவவாதத்தை ஆதரிக்கும் செனட் ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகவும் இருப்பவர் என்றும் கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறைக்குள் இருக்கும் ஒபாமா ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே அவர் உலகம் முழுவதும் மக்களிடையே வெறுப்பு உணர்வை தூண்டி விட்ட குடியரசுக் கட்சியின் எட்டு ஆண்டுகள் நிர்வாகத்தைவிட, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புதிய, முன்னேற்றமான தோற்றத்தை வெளிநாட்டில் கொடுக்க முடியும் என்று வாதிட்டுள்ளனர். டைம்ஸ் கூறுகிறது; "இரு வேட்பாளர்களும் உலகில் சேதப்பட்டுள்ள அமெரிக்கத் தோற்றத்தை சரி செய்வது பற்றி பேசியுள்ளனர். ஆனால் திரு. ஒபாமா செய்யக்கூடும் என்பதுதான் எமக்கு தெளிவாகத் தெரிந்துள்ளது--அவர் முதல் கறுப்பு ஜனாதிபதி உலகிற்கு ஒரு புதிய அமெரிக்க முகத்தை காட்டுவார் என்பதால் அல்ல." அரசியல் அமைப்பு, உரிமைகள் சட்டம் மற்றும் பொதுவான ஜனநாயக உரிமைகள் பற்றி புஷ் நிர்வாகம் நடத்திய "இடைவிடாத் தாக்குதல்" பற்றியும் டைம்ஸ் குறைகூறியுள்ளது. இது குவாண்டநாமோ குடா சிறை முகாம்கள், இரகசிய CIA சித்திரவதை அறைகள், அமெரிக்கர்கள் மீது மகத்தான வேவு பார்த்தல் மற்றும் "நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான இரகசிய உத்தரவுகளை" இயற்றல் ஆகியவற்றின் மூலம் புலனாகும். இதன் பின் "திரு. புஷ்ஷின் ஜனநாயக முறைமீதான தாக்குதல்களை அடையாளம் கண்டு சரி செய்யும் உறுதியைக் கொண்டுள்ளார்" ஒபாமா என்று செய்தித் தாள் கூறுகிறது. இங்கு செய்தித்தாள் முற்றிலும் தூய கற்பனையைத்தான் கடைப்பிடிக்கிறது. பொதுத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் ஒபாமா புஷ் நிர்வாகம் இயற்றிய போலீஸ் அரசாங்க நடவடிக்கைகள் பற்றி எந்த வித குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் கூறவில்லை. ஆனால் ஒபாமா உட்பட காங்கிரஸில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான போரில் முக்கிய துணையாக நின்றுள்ளனர். இன்னும் சமீபத்தில் கடந்த கால நிகழ்ச்சிகளை பாதிக்கின்ற வகையில் இரகசியமான முறையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டல், மின்னஞ்சல்கள் கண்காணிப்பு மற்றும் CIA, NSA, பென்டகனுடன் தங்களின் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை மீறுவதில் ஒத்துழைக்கும் பெருநிறுவனங்களை பாதுகாத்தல் திட்டத்தை சட்டரீதியானதாக்கும் மசோதாவிற்கு செனெட்டில் வாக்களிக்க ஒபாமா பிரச்சாரப் பயணத்தை கூட கைவிட்டு செனட் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொருளாதார நெருக்கடி பற்றி, தலையங்கம் தற்போதைய கொந்தளிப்பு உலக நிதிய சந்தைகளில் இருப்பதற்கு "பல தசாப்தகால குடியரசுக் கட்சி ஆட்சியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மற்றும் வரி எதிர்ப்புக் கொள்கைகள்" மாத்திரமே காரணம் என்று கூறியுள்ளது. இந்தக் கொள்கைகள் ஜனநாயக மற்றும் குடியரசு நிர்வாகங்கள் இரண்டிலுமே இயற்றப்பட்டது குறித்து தலையங்கம் மெளனமாக உள்ளது. இந்த நெருக்கடி ஆளும் உயரடுக்கிற்கு அமெரிக்காவில் வர்க்கப் போராட்ட வளர்ச்சி என்ற ஆபத்தை கொடுக்கிறது என்பது பற்றியும் டைம்ஸிற்கு நன்கு தெரியும். அவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளரை விட ஒபாமா இந்த அச்சுறுத்தலை குறைக்க வல்லவர் என்று அது கருதுவதை இது காட்டுகிறது. "ஒரு பரந்த அரசியல் ஒருமித்த உணர்வை" பிணைக்கும் ஆற்றல் நிறைந்தவர் என்று தலையங்கம் ஒபாமாவைப் போற்றுகிறது. அதே நேரத்தில் "ஒரு குறுகிய பிளவின் அடிப்படையில், வர்க்க நலனில், ஏன் இனவெறி என்ற குறிப்புக்களை காட்டும் விதத்தில் கூட" மக்கெயின் பிரச்சாரம் நடத்துகிறார் என்றும் இது கண்டித்துள்ளது. "ஆதாரம் நிறைந்த செய்தி ஏட்டிற்கு" உலகப் பொருளாதார பின்னடைவு நிலை மற்றும் நிதியக் கொந்தளிப்பு நிறைந்துள்ள சூழ்ந்த நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் உலகப் பொருளாதார நிலையின் சரிவை ஈடுகட்ட முன்பு இருந்ததை விட இராணுவ நடவடிக்கைகளை பெருகிய முறையில் நம்பியிருக்கும் என்பது நன்றாகத் தெரியும். தலையங்கம் நன்கு தெளிவாக்குவதுபோல் ஒபாமாவிற்கு டைம்ஸ் ஆதரவு கொடுப்பதற்கு காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை புத்திசாலித்துடனும் திறமையுடனும் அவரால் காக்க முடியும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இன்னும் பிற இடங்களலும் அமெரிக்க இராணுவக் குறுக்கீடுகளையும் அவர் நன்கு கண்காணிப்பார் என்றும் நம்புகிறது.
|