World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சீனாCan China fund the US and European bailouts? அமெரிக்க, ஐரோப்பிய பிணை எடுப்பிற்கு சீனா நிதியளிக்க முடியுமா? By John Chan தங்கள் நாடுகளின் வங்கி முறைகளுக்கு பெரும் பிணை எடுப்பிற்காக அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் உறுதி கொடுத்துள்ள நிலையில், வெளிப்படையாக வந்துள்ள வினா இதுதான்: அவை எங்கிருந்து பணம் பெறும்? குறிப்பாக அமெரிக்கா அடுத்த ஆண்டு அதனுடைய $700 பில்லியன் ஆரம்ப வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புப் பொதியை ஈடு செய்வதற்குமட்டுமே $1.3 டிரில்லியனுக்கான புதிய பத்திரங்களை அது வெளியிட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ள அளவு மிகவும் கடனில் உள்ளது. நாணய இருப்புக்கள் பெரிதும் குறைந்துள்ள நிலையை எதிர்கொள்கையில், பணத்தை அடைவதற்கு ஒரு ஆதாரமாக $4.35 டிரில்லியனை வெளிநாட்டு இருப்புக்களாக வைத்திருக்கும் சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள்மீது பார்வை திரும்பியுள்ளது. அக்டோபர் 14ம் தேதி Forbes இதழில் வந்துள்ள கட்டுரை ஒன்று அமெரிக்க, ஐரோப்பிய பிணை எடுப்பிற்கான செலவை எவர் கொடுப்பர் என்ற வினாவை எழுப்பி, "முதலில் வெளிநாட்டார்" என்ற பதிலையும் கொடுத்துள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் தான் சர்வதேச கடன் சந்தையில் பணம் திரட்ட இருப்பதாகவும் வரி செலுத்துபவர்கள் தற்போதைக்கு ஒரு சென்ட் கூட கொடுக்க வேண்டாம் என்று உறுதி கொடுத்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. "அதுவும் இயலக் கூடியதே" என்று கூறிய Forbes ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவில் இருக்கும் மத்திய வங்கிகள், முழு உரிமை கொண்ட நிதியங்களை சுட்டிக் காட்டியது. அமெரிக்க கருவூலங்கள் மற்றும் ஜேர்மனிய பத்திரங்கள் கொடுக்கும் வட்டியில் ஈர்க்கும் தன்மை இல்லை என்றாலும், "மேலை நாடுகள், சீனா போன்ற நாடுகள் புதிதாக இவற்றை வாங்க விரும்பும் என்பதில் உறுதியாக இருக்கலாம்" என்று Forbes கூறியுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களும் சீராக நடக்க வேண்டும் என்பதில் சீனாவிற்கு பெரும் அக்கறை உண்டு -- அமெரிக்காதான் சீனப் பொருட்களுக்கு பெரிய சந்தையாகும். மேலும் உலகின் வெளிநாட்டு நாணய இருப்புக்களை மிக அதிகம் கொண்டுள்ள நாடு என்ற முறையில் --கிட்டத்தட்ட 1.9 டிரில்லியன் டாலர்-- மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அது உதவி செய்யும் நிலையில் இருப்பது போல் தோன்றும். சீன அதிகாரிகள் மறுத்தாலும், புஷ் நிர்வாகத்தின் 700 பில்லியன் டாலர் பிணை எடுப்புப் பொதியில் சீன மக்கள் வங்கி மற்றும் ஒரு 200 பில்லியன் டாலர் கடனை வாங்குவது பற்றி ஆலோசிப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன; ஆனால் சீனாவின் நாணய இருப்புக்களை கவனமாக ஆராய்ந்தால் பெய்ஜிங்கின் நிதியச் செல்வாக்கு இன்னும் குறைவாக இருப்பது தெரிய வருகிறது. சீனாவின் 1.9 டிரில்லியன் டாலர் இருப்புக்களில் 60 ல் இருந்து 70 சதவிகிதம் வரை ஏற்கனவே டாலர் சொத்துக்களான அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன, முக்கியமாக பெரும் அடைமான நிறுவனங்களான Fannie Mae மற்றும் Freddie Mac ஆகியவற்றில் என்று பகுப்பாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக சீனாவிடம் புதிதாக அமெரிக்க கடன்களை வாங்குவதற்கு 600 முதல் 760 பில்லியன் டாலர்கள் வரைதான் இருப்புக்களாக உள்ளன; இவற்றில் சில யூரோ ஆதிக்கம் கொண்ட சொத்துக்கள் ஆகும். இது மொத்த அமெரிக்க பொதுக் கடன்களில் மிகச் சிறிய பகுதியாகும்; கடனோ செப்டம்பர் மாத இறுதியில் 10 டிரில்லியன் டாலர் அளவை, அதாவது 2000 ஆண்டில் இருந்தது போன்று இரு மடங்கை எட்டியது. ஆகஸ்ட் மாதத்தை ஒட்டி ஜப்பான் (585 பில்லியன் டாலர்), சீனா (541 பில்லியன் டாலர்) ஆகிய இரு நாடுகளும் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் வெளியார் வைத்துள்ளதில் 40 சதவீதத்திற்கும் மேல் உரிமை உடையவை ஆகும். ஜப்பான் ஏற்கனவே கடந்த ஆண்டு அது வைத்திருந்த மிக அதிக 600 பில்லியன் டாலரை பெரும் நிதிய இழப்புக்கள் வருமோ என்ற பயத்தில் குறைத்துவிட்டது. சீனா தொடர்ந்து இருப்புக்களை அதிகரித்து வந்தாலும், சில சீன அதிகாரிகள் இது வாஷிங்டனுக்கு காட்டும் தாராள உணர்வு என்று கூறிவருகின்றனர். இன்னும் அமெரிக்க கடனை வாங்கினால் டாலர் இருப்புக்கள் மதிப்பை இழந்தால் மிகப் பெரிய நிதிய இழப்புக்கள் ஏற்பக்கூடும் என்பதுதான் பெய்ஜிங்கின் தற்போதைய கவலை ஆகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிணை எடுத்தலுக்கு உதவினாலும்கூட, அதன் உதவி வரவேற்கப்படும் எனக் கூறுவதற்கு இல்லை. அமெரிக்கா எந்த அளவிற்கு வெளிநாட்டு கடன் கொடுத்தவர்கள் மீது நம்பிக்கையை கொண்டுள்ளது என்பது "அரசியல் அளவில் ஆராயாது ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அதன் செப்டம்பர் 29 பதிப்பில் கூறியுள்ளது. 1956ம் ஆண்டு வாஷிங்டன் சூயஸ் கால்வாய் கட்டுப்பாட்டை பிரிட்டனிடம் இருந்து அகற்றுவதற்கு முக்கிய கருவியாக பெற்றிருந்தது "பிரிட்டனுக்கு நிதிய உதவி குறைக்கப்படும் என்ற அதன் அச்சுறுத்தலாகும்; ஏனெனில் பிரிட்டிஷ் பொருளாதாரம் இரண்டாம் உலகப் போரை ஒட்டி சிதைந்திருந்தது" என்பதையும் அது நினைவு கூர்ந்துள்ளது. போருக்கு பிந்தைய இங்கிலாந்தை விட அமெரிக்க நல்ல நிலையில் உள்ளது என்பதை வாசகர்களுக்கு உறுதியளித்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தொடர்ந்து எழுதியது: "அப்படி இருந்த போதிலும்கூட, வெளிநாட்டுக் கடன் கொடுத்தவர்கள் அதிக செல்வாக்கை பெறுவர். அமெரிக்க அரசாங்கக் கடனை தூக்கி எறிய நினைத்தால் அல்லது இன்னும் அதிகமாக வாங்க தயாராக இல்ல என்ற நிலை ஏற்பட்டால், கருவூலப் பத்திரங்களை வாங்குபவர்களை ஈர்ப்பதற்கான வட்டி விகிதம் உயரும். ஏற்கனவே நலிந்துள்ள அமெரிக்க பொருளாதாரம் மற்றொரு தாக்குதலையும் சமாளிக்கும் கட்டாயத்திற்கு உட்படும். ஐரோப்பிய கட்டுரையாளர்கள் இதே போன்ற சந்தேகங்களைத்தான் எழுப்பியுள்ளனர். பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனரான ஆண்ட்ரூ கிரஹாம் அக்டோபர் 15 கார்டியன் பதிப்பில் சீனா அதன் "டிரில்லியன்களை" செலவழித்தால் உலகம் ஒரு பொருளாதாரப் பின்னடைவை தவிர்க்க முடியும்; எனவே G7 சீனாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதன் விளைவு "ஆங்கிலோ-சாக்சன் முறையின்" இழப்பில் சீனச் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற விளைவு ஏற்படக்கூடும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அக்டோபர் 15 அன்று BBC கொடுத்த கருத்து "சீனா, மேற்கை பிணை எடுக்குமா?" என்ற தலைப்பில் வந்தது தன்னுடைய வளர்ச்சிக் குறைவை பற்றி பெய்ஜிங் அதிக குறிப்பு காட்ட வேண்டும் என்றும் பிற நாடுகளுக்கு அது கடன் கொடுத்தால் "அத்துடன் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சில நிபந்தனைகள் இருக்கக் கூடும்" என்றும் கூறப்பட்டுள்ளது. சீனா அதன் வளங்களைப் பயன்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தும் கட்டாயத்திற்கு அதிகரித்த அளவில் ஆளாகும். சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மூன்றாம் காலாண்டில் 9 சதவீதத்திற்கு குறைந்துள்ளதாக காட்டுகின்றன --இது எதிர்பார்க்கப்பட்ட 9.7 சதவீதம் மற்றும் 2007 எண்ணிக்கையான 11.9 சதவீதம் ஆகியவற்றைவிட மிகக் குறைவாகும். கடந்த ஞாயிறன்று சீன அமைச்சரவை உயர்ந்த வளர்ச்சி வீதத்தை தக்க வைப்பது பற்றி ஆராய்வதற்கு கூட்டப்பட்டது. வட்டி வீதங்கள், வங்கிகளுக்கான வட்டி வீதங்களை குறைத்தல், ஏற்றுமதி பொருட்களுக்கு வரிவிலக்கு, விவசாயிகளுக்கு உதவித் தொகை மற்றும் அதிக அளவில் உள்கட்டுமானத்திற்கு செலவழித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. Standard Chartered China வின் பொருளாதார வல்லுனர் Stephen Green உடைய கருத்தின்படி, நிதி அமைச்சரகம் நாட்டின் மத்திய வங்கியில் இந்த ஊக்கப் பொதிக்காக $400 பில்லியனை இருப்பாக வைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இப்புள்ளி விவரங்கள் வேலையின்மையின் தீவிர அதிகரிப்பை தடுப்பதற்கு சீனப் பொருளாதார வளர்ச்சி எந்த அளவிற்கு விரைவாகப் பெருக வேண்டும் என்பதையும் எவ்வாறு ஒரு சமூக வெடிப்பு அப்பொழுதுதான் தவிர்க்கப்பட முடியும் என்பதையும் காட்டுகின்றன. Moody's Economy.com என்பதின் பகுப்பாய்வாளரான Sheman Chan உடைய கருத்தின்படி, சீனாவில் ஆண்டு ஒன்றிற்கு 24 மில்லியன வேலைகள் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவையின் காரணமாக, சீனாவில் 8 சதவிகிதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதம் என்பது-- உலகில் மற்ற பகுதிகளுக்கு மிக அதிகமானதாக இருக்கும்-- "முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் பொருளாதாரப் பின்னடைவு என்பதற்கு ஒப்பாக இருக்கும்" என்றார். ஒரு உலக நெருக்கடி வெளிப்பட்டுவரும் நெருக்கடி பிரதானமாய் அமெரிக்க அல்லது ஐரோப்பிய நெருக்கடி என்று இல்லாமல் உலகளாவிய தன்மையை கொண்டு சீனா ஒரு மத்திய பங்கைக் கொண்டிருந்த நீண்டகால பொருளாதார உறவுகளை சிதைத்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனா மிக முக்கியமான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு அரங்காக உலகெங்கிலும் இருக்கும் பெருநிறுவனங்களின் சரியும் இலாபவிகிதங்களை உயர்த்தும் வகையில் வெளிப்பட்டது. சீனா, ஜப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகள் தங்கள் மிகப் பெரிய ஏற்றுமதி வருமானங்களை அமெரிக்காவிற்குள் உட்செலுத்தின; இதையொட்டி அவற்றின் நாணய மதிப்பைக் குறைத்து தக்க வைத்துக் கொண்டன; இந்தவிதத்தில்தான் மிகப் பெரிய அளவில் அமெரிக்க வணிக மற்றும் வரவு/செலவுத் திட்ட பற்றாக்குறைகள் தீர்க்கப்படலாயின. இத்தகைய பணவரத்து அமெரிக்க மத்திய வங்கிகள் குழுமத்தை ஒரு குறைந்த வட்டிக் கொள்கையை தக்க வைத்துக்கொள்ள உதவியது; அதையொட்டி வீடுகள் குமிழி மற்றும் கடன் உந்துதலால் நிறைந்திருந்த அமெரிக்க நுகர்வு முறை ஆகியவை தூண்டிவிடப்பட்டன; அது பதிலுக்கு சீனப் பொருட்களுக்கான சந்தையை பராமரித்தது. இந்த வழிவகைகளின் முறிவு அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மட்டும் இல்லாமல் சீனாவிற்கும் பெரும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். மதிப்பு கூட்டு என்ற விதத்தில் சீனாவின் உற்பத்தித் துறை இப்பொழுது கிட்டத்தட்ட அமெரிக்க அளவில்தான் உள்ளது. ஆனால் அதன் தலா தனிநபர் வருமானம் உலகில் 100 வது இடத்தில்தான் உள்ளது. இதன் 1.3 பில்லியன் மக்கள் 2007ல் மொத்தத்தில் $1.2 டிரில்லியன் மதிப்பைத்தான் நுகர்ந்தனர் --300 மில்லியன் அமெரிக்கர்கள் நுகரும் $9.7 டிரில்லியனுடன் இது ஒப்பிட்டுப்பார்க்கப்பட வேண்டியதாகும். வேறுவிதமாகக் கூறினால் சீனாவின் தொழிற்துறை வரம்பு குறைந்த உள்நாட்டிற்கு என்று இல்லாமல் கூடுதலாக வெளிநாட்டு நுகர்விற்கு என்று கட்டமைக்கப்பட்டுள்ளது எனலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதாரப் பின்னடைவு என்பது தவிர்க்க முடியாமல் சீனாவில் மகத்தான அதிகத் திறைனை ஏற்படுத்தி உற்பத்திப் பொருட்கள் தேக்கம், விலைகள் குறைவு, ஆலைகள் மூடல் மற்றும் மிகப் பெரிய அளவில் வேலையின்மைப் பெருக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். சமூக அமைதியின்மை என்பது ஏற்கனவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் விளையாட்டுப் பொருட்களில் 70 சதவீதம் சீனாவில் உற்பத்தியாகின்றன; ஆனால் பொருளாதாரத்தின் விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் செயல்படுவதை நிறுத்திவிட்டன. கடந்த ஆண்டு ஹாங்காங்கை தளமாகக் கொண்ட விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Smart Union 6,500 தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில் திவாலாகியது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் தளத்தை கொண்ட மின்கருவி உற்பத்தி நிறுவனம் BEP 1,500 வேலகளை அகற்றுவதாக அறிவிப்பை கொடுத்தது. இரு நிறுவனங்களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்; ஊதியங்கள் கொடுக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்ததை அடுத்து அவை நின்றன. ஆனால் அரசாங்கம் பல மில்லியன் கணக்கான வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எப்படி பல மில்லியன் யென்கள் சம்பளங்களை கொடுக்க முடியும்? புயலென வேலையிழப்புக்கள் ஏற்கனவே தொடுவானத்தில் தோன்றியுள்ளன. ஹாங்காங் தொழில்பிரிவுக் கூட்டமைப்பின் தலைவரான Chen Cheng-jen, South China Morning Post இடம் அக்டோபர் 19ம் தேதி சீனாவின் முக்கிய ஏற்றுமதிப் பகுதிகளில் ஒன்றான Pearl River Delta என்னும் பகுதியில் ஹாங்காங் முதலீடு செய்துள்ள நடுத்தர நிறுவனங்களில் கால் பகுதி, தை மாதமளவில் மூடப்படலாம் என்றும் இது 2.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பேர்ல் ரிவர் டெல்டாவில் இருப்பவர்களும் இதே போன்ற இடர்ப்பாடுகளை அதாவது பகுதி முழுவதும் இருக்கும் 45 மில்லியன் தொழிலாளர்களிடையே பரந்த அமைதியின்மையின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கின்றனர். ஷங்காயை சுற்றி இருக்கும் மற்ற உற்பத்திப் பகுதிகளான Yangtze River Delta விலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. சீனாவில் உறுதியற்ற நிதி நெருக்கடி பெருகியுள்ளது என்பதற்கான அடையாளங்கள் அதிகரித்த ஊக வகை முதலீடு வருவதின் மூலம் புலப்பட்டுள்ளது. Societe General SA இன் ஆசிய பொருளாதாரப் பிரிவுத் தலைவர் Glenn Maguire ஜூலை மாதத்தில் இருந்து 10 முதல் 20 பில்லியன் டாலர்கள் வரை "ரொக்கப் பணம்" வெளியேறியிருக்கலாம் என்று Bloomberg.com இடம் கூறினார். பீக்கிங் பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பேராசிரியராக இருக்கும் Michael Pettis, இந்த ஆண்டு முதல் பாதியில் சீனாவில் இருந்து 200 பில்லியன் டாலர் ஊகவகை நிதி வெளியேறியிருக்கக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளார். அமெரிக்க டாலருக்கு எதிராக யுவான் வலுவிழந்தால் "மிகப் பெரும் பண வெளியேற்றம்" இருக்கும் என்று சீன மத்திய வங்கி எச்சரித்துள்ளது; இது 1997-98 ஆசிய நெருக்கடிக்கு ஒப்பான நிதியக் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும். சந்தேகத்திற்கு இடமில்லாமல் அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ள G 20 மாநாட்டில் உலக நிதிய முறையை உறுதிப்படுத்த உதவியளிக்குமாறு பெய்ஜிங்கிற்கு நிறைய அழுத்தம் இருக்கும். ஆயினும், தெளிவின்றித் தோன்றும் தன்னுடைய பொருளாதார, நிதிய நெருக்கடியில் தன்னை மறந்திருக்கும் நிலையில் சீன ஆட்சியானது அதனிடம் பணம் இருந்தாலும், மிக அதிக அளவில் இருக்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பிணை எடுத்தலுக்கு பணஉதவி அளிக்கும் நிலையில் இல்லை. இப்பொதிகளின் வானளாவிய செலவானது அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்களால் மிருகத்தனமான ஊதியக் குறைப்பு, சமூகச் செலவினக் குறைப்புக்கள், சரியும் வாழ்க்கைத் தரங்கள் என்ற விதத்தில் ஏற்கப்பட நேரும்; எப்படி சீனாவில் உள்ள தொழிலாளர்கள் உலக முதலாளித்துவ அராஜகத்திற்கு மிக அதிக அளவு வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை விலையாகக் கொடுக்கிறார்களோ, அப்படித்தான் இதுவும். |