World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP 2008 Election Campaign

US government expands bank bailout on Wall Street's terms

SEP தேர்தல் பிரச்சாரம்

அமெரிக்க அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட்டின் கட்டளைகளுக்கு ஏற்ப பிணை எடுப்பை விரிவுபடுத்துகிறது

By Barry Grey
15 October 2008

Back to screen version

செவ்வாயன்று புஷ் நிர்வாகம் முக்கிய அமெரிக்க வங்கிகளை முட்டுக் கொடுத்து நிறுத்தும் வகையில் வரிப்பணத்தில் $250 பில்லியனை நேரடியாக உட்செலுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை அறிவித்தது. வங்கிகள் வெளியிட்டுள்ள அனைத்து கடன்களுக்கும் தான் உறுதியளிக்க இருப்பதாகவும் அரசாங்கம் கூறி, வட்டியில்லாத வணிக சேமிப்புக்கள் அனைத்திற்கும் வரம்பில்லாத ஆதரவையும் கொடுத்தது.

இத்தகைய பணத்தை உட்செலுத்துதல் கருவூலத்திற்கு நிதிய அமைப்புக்கள் சிறப்பு பங்குகளை தானே முன்வந்து அளிக்கும் விற்பனை என்ற விதத்தில் இருக்கும். கோல்ட்மன் சார்க்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் தற்போதைய நிதி மந்திரியுமான ஹென்றி போல்சனுக்கு அக்டோபர் 3ம் தேதி காங்கிரஸ் இயற்றிய $700 பில்லியன் ஒதுக்கப்பட்டபிணை எடுப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இது செயல்படுத்தப்படுகிறது.

இச்சட்டம் இயற்றப்பட்டபோது, போல்சனும் பெடரல் ரிசேர்வ் குழுவின் தலைவரான பென் பெர்னன்கேயும் இதன் முக்கிய நோக்கம் அரசாங்கம் $700 பில்லியன் வரை அடைமான ஆதரவு உடைய பாதுகாப்பு பத்திரங்கள் மற்றும் மோசமான கடன்களை வங்கிகளிடம் இருந்து வாங்குவது என்றனர். இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உலக நிதிய முறை சரிவதை தடுக்கும் வகையில் விரைவில் நேரடியாக பங்குகளை பெரிய வங்கிகளிடம் இருந்து வாங்கி அவற்றின் ரொக்கத்தொகை இருப்புக்களுக்கு ஏற்றம் கொடுக்கும் விதத்தில் செயல்படுதல் என்ற வகையில் நடத்தப்படுகிறது.

மேலும் செவ்வாயன்றே, பெடரல் தலைவர் பெர்னன்கே அமெரிக்க மத்திய வங்கி தன்னுடைய முந்தைய உறுதிமொழியான அமெரிக்க வணிகங்கள் வெளியிட்ட வணிக ஆவணத்தை வேறு எவரும் வாங்கவில்லை என்றால் கடைசியில் தான் வாங்க இருப்பதாக கூறியதை விரைவில் செயல்படுத்தும் என்றார். வாஷிங்டன் போஸ்ட்டின் நிதியப்பிரிவு கட்டுரையாளரான Steven Pealstein உடைய கருத்தின்படி இத்தகைய பெரும் செயல்கள் "அரசாங்க நிதியங்கள் பல டிரில்லியன் டாலர்களை" வங்கிகளுக்கு முட்டுக் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தும்.

செவ்வாய்க்கிழமை காலையில் புதிய திட்டம் ஜனாதிபதி புஷ் ஒரு புறமும், மற்றும் போல்சன், பெர்னன்கே தலைமையில் உயர்மட்ட நிதிய ஆலோசகர்கள் மறு புறமும் என தனித்தனியே அறிவிக்கப்பட்டது. இவர்களுடைய அறிக்கைகள் திங்களன்று நிதி அமைச்சரகத்தில் அமெரிக்காவில் மிகப் பெரிய வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்குப் பின் நடந்த கூட்டத்திற்கு பின் வந்தது; அக்கூட்டத்தில் முன்னாள் மற்றும் தற்போதைய வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகளால் பிணை எடுப்பு விதிகள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன; இவர்களுடைய கூட்டுச் சொத்தே பல பில்லியன் டாலர்கள் பெறுமதியானது.

சிட்டி குழுமம், ஜே.பி. மோர்கன் சாஸ், பாங்க் ஆப் அமெரிக்கா மற்றும் வெல்ஸ் பார்கோ என்னும் நான்கு பெரிய வங்கிகள் ஒவ்வொன்றும் $25 பில்லியன் பெறும். கோல்ட்மன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்ரான்லி இரண்டும் தலா $10 பில்லியன் பெறும்; பாங்க் ஆப் நியூ யோர்க் மெல்லன் $3 பில்லியனையும், State Street $2 பில்லியனையும் பெறும். பங்குகள் வாங்கும் திட்டத்தில் உள்ள மிச்சம் இருக்கும் $125 பில்லியன்களும் ஆயிரக்கணக்கான சிறு வங்கிகளுக்கும் கிடைக்கக்கூடியதாக ஆக்கப்படும்.

இப்புதிய பிணை எடுப்பு திட்டம், பரந்த அளவில் செய்தி ஊடகத்தில் "பகுதி தேசியமயமாக்கப்படுதல்" என்று குறிப்பிடப்படுகிறது. இது அந்த விதத்தில் சேர்க்கப்பட முடியாதது ஆகும். மாறாக இது அரசாங்கம் பொது நிதியைப் பயன்படுத்தி பெருமந்த நிலைக்கு பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பான நிதிய அடுக்கின் சமூக நலன்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஆகும்.

முழு பிணை எடுப்பு திட்ட நிர்வாகமும் அரசாங்கம் கொடுக்கும் பணத்தினால் ஆதாயம் அடையக்கூடிய அதே நிதிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று அரசாங்கம் உட்செலுத்தும் பணத்தை பெறும் நிறுவனங்களில் ஒன்றான Bank of New Yok Mellon இந்த நடவடிக்கையை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம், போல்சனால் அவருடைய வங்கி நண்பர்களுடன் ஆலோசனைக்கு பின் தயாரிக்கப்பட்டது, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகளின் தனிப்பட்ட, நிறுவன நலன்களைகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வோல் ஸ்ட்ரீட்டிடம் நாட்டின் இருப்புக்களை அள்ளிக் கொடுத்ததற்கு ஈடாக எந்த கட்டமைப்பு மாற்றம் அல்லது கட்டுப்பாட்டு மாற்றங்களைக் கூடக் கேட்கவில்லை.

அவர்களுடைய நிறுவனங்கள் அநேகமாக சரிவின் விளிம்பிற்கு வந்ததற்கு காரணமான ஊக நடவடிக்கைகளில் ஈடுபட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மீது நிதிய அல்லது குற்றப்பிரிவு நடவடிக்கை எதிர்கொள்ளுவது ஒருபுறம் இருக்க, அவர்கள் இராஜிநாமா செய்வதுகூட அவற்றுக்கு தேவைப்படவில்லை. இத்திட்டம் வங்கிகள் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை மற்ற நிறுவனங்கள், வணிக அமைப்புக்கள் தனிநபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுகூட கோரப்படவில்லை.

போல்சன், அரசாங்கம் பெறும் பங்குகள் "வாக்களிக்கும் உரிமை அற்றவை" என்று தெளிவாக்கியுள்ளார்; அதாவது வங்கிகள்மீது அரசாங்கம் எவ்விதக் கட்டுப்பாட்டையும் கொள்ளாது. தன்னுடைய ரோசா தோட்டத்தில் செவ்வாயன்று புஷ் வலியுறுத்தியதுபோல், "...இந்த நடவடிக்கைகள் தடையற்ற சந்தையை எடுத்துக் கொள்ளுவதற்கு அல்ல, மாறாக காப்பாற்றுவதற்காகும்."

தன்னுடைய கூற்றில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பெரிய பங்குதாரரங்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அது எழுதியது:"அத்தகைய தனியார் முதலீட்டாளர்கள் பயந்து ஓடாமல் இருக்க, கருவூலம் அதன் மூலதனத்தை வங்கிகளுக்கு சாதாகமாக இருக்கும் வகையில் கட்டமைத்து மூலதனத்தை சிறப்பு பங்குகள் அல்லது பத்திரங்களுக்கு ஈடாக உட்செலுத்த வேண்டும்... இந்த நடவடிக்கை இருக்கும் பங்குதாரர்களுக்கு பாதிப்பு தராது."

"அரசாங்கத்தின் நம்பிக்கை புதிய திட்டம்.... தனியார் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அவர்களுடைய இழப்பில் வராது என்ற விதத்தில் ஆதரவு தரும் வகையில் இருக்க வேண்டும்" என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

தன்னுடைய கருத்துக்களில் போல்சன் வோல் ஸ்ட்ரீட்டிற்கு இத்திட்டம் வங்கிகளுக்கு "நல்ல முறையில் மூலதனம் கிடைக்க ஏற்பாடு செய்யும்" என்று உறுதி கொடுத்தார்.

இத்தகைய அக்கறை ஏதும், வீடுகள் சந்தை சரிவு மற்றும் மந்தநிலை பெருகுவதால் ஏற்பட்ட பேரழிவிற்கு உட்பட்டுள்ள பல மில்லியன் உழைக்கும் மக்களுக்கு காட்டப்படவில்லை. செவ்வாயன்று தன்னுடைய கருத்துக்களில் போல்சன் கூறினார்: "பங்கு பெறும் அனைத்து வங்கிகளும் தங்கள் முயற்சிகளை வலுப்படுத்தி, முன்கூட்டி விற்பனை இல்லாமல் தங்கள் வீடுகளை காப்பாற்ற பாடுபடும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டு சொந்தக்காரர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கிறோம்."

இது ஒரு மோசடி ஆகும். இரண்டு மில்லியன் குடும்பங்கள் ஏற்கனவே முன்கூட்டி வீடிழந்த நிலையில், பகுப்பாய்வாளர்கள் அடுத்த சில ஆண்டுகளில் துரத்தப்படுவர் என்று கணித்துள்ள நிலையில், வங்கிகள் "கஷ்டப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு" எந்த உண்மை முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக, தங்கள் கொள்ளை முறை கடன் கொடுக்கும் கொள்கையில் இருந்து ஏற்பட்டுள்ள இழப்புக்களை குறைத்துக் கொள்ளும் வகையில் கட்டணங்கள் இன்னும் பல விதத்தில் தாங்கள் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள குடும்பங்களிலிருந்தே வசூலிக்கின்றனர்.

போல்சனுடைய கருத்துக்கள் தெளிவாக்கியுள்ளது போல் வீடுகள் துன்பத்தில் அவதியுறும் சொந்தக்காரர்களுக்கு எத்தேவையும் அளிக்கப்படவில்லை; "தங்கள் வீடுகளைக் காப்பாற்றும் வசதி இல்லாத" வீட்டு உரிமையாளர்கள் மில்லியன் கணக்கானவர்களை அவர்களுடைய தலைவிதிக்கு விட்டுவிட்டனர்.

இந்தவிதத்தில்தான் அதேமாதிரியான மோசடித்தனம் CEO ஊதியங்களிலும் உள்ளது; போல்சன் பங்குகள் வாங்கும் திட்டத்தில் சேரும் நிறுவனங்கள் மீது சில விதிகள் சுமத்தப்படும் என்றார். இந்த நடவடிக்கைகள் ஜனநாயக்கட்சி ஆதரவாளர்கள் வலியுறுத்தியதின் பேரில் பிணை எடுப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது; அவர்கள் இதையொட்டி சட்ட வரைவிற்கு மக்களிடையே இருக்கும் எதிர்ப்பில் இருந்து மறைப்புப் பெறலாம் என்று நம்பினர். ஆனால் விதிகள் நிர்வாகிகள் இழப்பீட்டில் எந்த குறிப்பான வரம்பையும் சுமத்தவில்லை; இருக்கும் பல மில்லியன் டாலர் ஓய்வூதிய பொதியை அப்படியே இருக்குமாறு செய்துள்ளன.

தான் கோல்ட்மன் சாக்ஸில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது பல நூற்றுக்கணக்கான மில்லியன்களை பெற்ற போல்சன்தான் இப்பொழுது "நிர்வாகிகள் ஊதியத்தில் தக்க தரம்" இருக்க வேண்டும் என்று வரையறை செய்துள்ளார்; Washington.com செவ்வாயன்று கூறியுள்ளதுபோல், நிதி அமைச்சரக அதிகாரிகள், "நிர்வாக ஊதியம் பற்றி "மிகக் குறைந்த" தடைகள்தான் சட்டத்தில் தேவை என்று வாதிட்டு, சட்ட மன்ற அதிகாரிகளிடம் "இருக்கும் சட்டத்தின்படி" பலரும் "தப்ப இடம் உள்ளது" என்று கூறினர்.

சமூகப் பேரழிவு வெளிப்படுதல்

அமெரிக்க மக்களை சூழ்ந்து கொண்டுவரும் சமூகப் பேரழிவை தீர்க்க எந்த திட்ட நடவடிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. பங்குச் சந்தையில் உடனடி மாற்றம் எப்படி இருந்தாலும், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் ஒரு ஆழ்ந்த, நீடித்த மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பது பரந்த முறையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் நிதியச் சந்தைகளில் பெரிதும் மையம் கொண்டுள்ள இந்த நெருக்கடி பரந்த பொருளாதாரத்தையும் பற்றிக் கொண்டு புதிய கட்டத்தில் நுழைகிறது; இதில் இரட்டை இலக்க வேலையின்மை வருவதுடன் வறுமை மற்றும் சமூக கொடுமைகளும் பெருகும்.

கார்த்தொழில் ஏற்கனவே ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது; மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களும் திவாலின் விளிம்பில் உள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறைஸ்லர் ஆகியவை இணைப்புக்கள் மூலம் தப்பிப் பிழைக்க நினைக்கும் முயற்சிகள் புதிதாக ஆலை மூடல்கள் சுற்றுக்களை தொடக்க பல ஆயிரக்கணக்கான கூடுதல் பணி நீக்கங்களுக்கும் வகை செய்யும்.

திங்கன்று ஜெனரல் மோட்டர்ஸ் தான் தன்னுடைய உலோகப் பாகங்கள் ஆலை, மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராபிட்ஸுக்கு அருகே இருப்பதை ஆண்டு இறுதிக்குள் மூட இருப்பதாக அறிவித்தது; இதையொட்டி 1,500 வேலைகள் தகர்க்கப்படும்: மேலும் விஸ்கான்சினில் உள்ள Janesville ஆலையை மூடுதலை விரைவுபடுத்த உள்ளதாகவும் அது டிசம்பர் 21ல் நடைபெறும் என்றும் கூறியுள்ளது; இதில் 1,200 பேர் வேலையிழப்பர்.

செவ்வாயன்று ஜேர்மனிய கார்த் தொழில் பெருநிறுவனம் Daimler தான் அதன் Sterling Trucks பிரிவை மூடப்போவதாகவும், ஓன்டாரியோ மற்றும் ஓரேகோன் ஆலைகளையும் மூடப்போவதாகவும் அறிதவித்துள்ளது; இதையொட்டி 3,500 வேலைகள் இழக்கப்படும்.

PepsoCo மூன்றாம் காலாண்டில் மிகக் குறைவான வருமானங்கள் ஏற்பட்டன என்றும் அமெரிக்காவில் 3,300 வேலைகளை நீக்கம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகம் கூறியபடி "பிரதான தெருவை" காப்பாற்ற உதவுவதற்கு பதிலாக பிணை எடுப்பு நடவடிக்கைகள் ஒரு சில மகத்தான வங்கிகளிடம் அதிகாரக் குவிப்பை கூடுதலான முறையில் செய்யும் விதத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள் மீது தீய விளைவுகளை ஏற்படுத்தும்; இவர்களுடைய கடன் வாங்கும் திறன் நாணயம் ஆகியவை பாதிப்பிற்கு உட்படும், அவர்கள் கொடுக்க வேண்டிய கட்டணம் மற்றும் வட்டி ஆகியவை நிதிய முறையின்மீது ஏகபோக உரிமை கொண்டிருக்கும் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும்.

பிணை எடுப்பு நடவடிக்கைகளின் பொருள் உரை மற்றும் அவை சுமத்தப்படும் விதம் ஆகியவை வோல் ஸ்ர்ட்ரீட், அரசின்மீது கொண்டிருக்கும் இரும்புப்பிடியின் அப்பட்டமான நிரூபணத்தை கொடுக்கிறது; அதேபோல் நிதிய மூலதனம் செலுத்தும் சர்வாதிகாரம் எப்படி அமெரிக்காவில் ஜனநாயகம் என்ற முகப்பிற்குப் பின் உள்ளது என்பதும் புலனாகிறது.

ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதி வேட்பாளர் பாரக் ஒபமாவில் இருந்து இந்த பிணை எடுப்பு சட்டத்திற்கு முக்கிய ஆதரவாளர்களாக இருந்து தங்களுடைய ஆரவாரமான ஆதரவை பிணை எடுப்பு நடவடிக்கைகள் விரிவாக்கத்திற்கும் கொடுத்துள்ளனர். மன்றத் தலைவர் நான்ஸி பெலோசி போல்சனுக்கு அவருடைய புதிய திட்டத்தை பாராட்டி ஒரு கடிதமும் எழுதினார்.

கூட்டு பொருளாதாரக் குழுவின் தலைவரும் நியூ யோர்க்கின் செனட்டருமான சார்ல்ஸ் ஷ்யூமெர், செவ்வாயன்று வோல் ஸ்ர்ட்ரீட் ஜேர்னலில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, போல்சனின் முடிவான வங்கிகளுக்கு மூலதன உட்செலுத்துதல் என்பது "வரவேற்கத்தக்க செய்தி" என்று குறிப்பிட்டார்; மன்றத்தின் நிதிய பணிகள் குழுவின் தலைவரான Barney Frank தான் திட்டத்தின் விதியான அரசாங்கத்திற்கு சொந்தம் எனப்படும் பங்கு, வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருத்தலுக்கு அதாவது வங்கிகள் வரிப் பணத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு ஈடாக எந்தவிதக் கட்டுப்பாட்டையும் இழக்கவில்லை என்பதற்கு உடன்படுவதாகக் கூறினார்.

செவ்வாயன்று வெளியிட்ட கருத்துக்களில் புஷ் புதிய நடவடிக்கைகள் பிரச்சினையின் "மூலக் காரணத்தை" ஆராயும் நோக்கத்தை கொண்டது என்றார். இது மற்றொரு பொய் ஆகும்.

நெருக்கடியின் மூலகாரணம் முதலாளித்துவ முறையின் தோல்வி ஆகும். தொழிலாள வர்க்கத்தின் தேவைகளை தீர்க்கக்கூடிய ஒரே விடை சோசலிசம்தான்.

சோசலிச சமத்துவக் கட்சி, அரசாங்கத்தின் முழு பிணை எடுப்பு வடிவமைப்பையும் உறுதியாக எதிர்க்கிறது. வங்கிகள் தேசியமயமாக்கப்படல் என்ற உண்மையான திட்டத்திற்கு அழைப்பு விடுகிறோம் --அதாவது அவற்றை தனியார் உடைமையில் இருந்து எடுத்து பொது நலன் நிறுவனங்களாக தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும்.

அத்தகைய ஒரு சோசலிச கொள்கையின் அடிப்படையில்தான் தொழிலாள வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இருப்புக்களை பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவியை அளிக்க முடியும்; வீடுகள் முன்கூட்டி மூடப்படல், பயன்பாடுகள் அகற்றப்படுவதை தடுத்தல், வேலையின்மை நலன்களின் பரந்த விரிவாக்கம், வேலை அற்றவர்களுக்கு கெளரவமான ஊதியங்களுடன் அவசர பொதுப்பணித் திட்டம் கொடுத்தல் ஆகியவை செயல்படுத்தப்பட முடியும்.

சந்தை முறையின் அராஜகம், வங்கிகளின் சர்வாதிகாரம் ஆகியவை திட்டமிட்ட ஒரு சோசலிச பொருளாதாரத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும்; அப்பொழுதுதான் மக்கள் அனைவருடைய வாழ்க்கை தரங்களும் பண்பாட்டு கூறுபாடுகளும் உயர்த்தப்பட்டு அடிப்படை தேவைகளும் அளிக்கப்பட முடியும்.

இதற்கு தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியில் இருந்தும் இரு கட்சி முறையில் இருந்தும் உடைத்துக் கொண்டு தொழிலாளர் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு போராடுவதற்காக தன்னுடைய சொந்தக் கட்சி ஒன்றை கட்டமைக்க வேண்டும்.

இத்திட்டம்தான் 2008 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெர்ரி வையிட், பில் வான் ஒகென் ஆகியோரால் முன்வைக்கப்படுகிறது. பெருமந்த நிலைக்கு ஒரு சோசலிச மாற்றீடு, போருக்கு ஒரு மாற்றீடு ஆகியவற்றின் தேவையை காண்பவர்கள் அனைவரும் எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும், எங்கள் கட்சி வாக்காளர்ளுக்கு ஆதரவு கொடுக்குமாறும் சோசலிச சமத்துவ கட்சியில் சேருமாறும் அழைப்பு விடுகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளுவதற்கு www.socialequality.com ஐ காணவும், அல்லது எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved