World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialism vs. the government bailout of capitalism

சோசலிசம் (எதிர்) அரசாங்கம் முதலாளித்துவத்தை பிணை எடுப்பு

By Tom Eley
15 October 2008

Back to screen version


அமெரிக்க நிதிய அமைப்பு முறையின் வீழ்ச்சியும் அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்துள்ளதும் மிகத்தீவிரமான முறையில் முதலாளித்துவத்திற்கான கருத்தியல் நியாயப்படுத்தல்களை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன.

"சுதந்திர சந்தையை" வழிபடுதல் நீண்டகாலமாக அமெரிக்காவில் ஒரு மதசார்பற்ற சமயம் போன்ற ஒன்றாக இருந்து வந்துள்ளது. முதலாளித்துவ கருத்தியலானது, சந்தையின் "புலப்படாத கரங்கள்" வரலாற்று முன்னேற்றத்தின் நலன்களை சிறந்த முறையில் முன்னேற்றுவிக்கும், "ஆபத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்குத்தான்" இருப்புக்கள் எப்படிச் சிறந்த முறையில் ஒதுக்கப்படவேண்டும் எனத்தெரியும் எனவே, செல்வந்தர்கள் மீதான வரிகள் மற்றும் பெருவணிகங்கள் மீதான கட்டுப்பாடுகள் கட்டாயம் தளர்த்தப்பட வேண்டும், தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் முதியவர்கள், வேலையற்ற இளைஞர்களின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்கான எவ்வித அரசாங்க தலையீடும் ஒருவித "சார்ந்திருக்கும் சூழலை" ஏற்படுத்திவிடும், அரசாங்கம் பிரச்சினைகளில் இப்படி "பணத்தை தூக்கி எறியக்கூடாது" என்று பறைசாற்றுகிறது.

பொதுப் பணத்தை இப்பொழுது பெரிய நிதிய நிறுவனங்கள் விழுங்கிக் கொண்டு இருக்கையில், இத்தகைய வெற்றுப் பேச்சுக்கள் இப்பொழுது அப்பட்டமான பாசாங்குத்தனம் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், முதலாளித்துவத்தின் இந்த வரலாற்று நெருக்கடிக்கு இடையே நிதி மந்திரி ஹென்றி போல்சனின் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் சிலர் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் "சோசலிச வகையிலானவை" என்று கூறியுள்ளனர்.

திடீரென -- சோவியத் ஒன்றியம் சரிந்து 17 ஆண்டுகளுக்கு பின்னர், "சோசலிசம் மடிந்துவிட்டது" எனக் கூறப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பின்னர்-- "சோ" எழுத்து அமெரிக்க அரசியல்வாதிகளாலும் செய்தி ஊடக பண்டிதர்களாலும் உச்சரிக்கப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு சோசலிசம் என்ற குற்றச் சாட்டுக்கள் மிக அதிகமாக குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரியில் இருந்து வந்துள்ளது. ஒரு சில உதாரணங்கள் கவனிக்கப்பட வேண்டுமாயின், சட்டமன்ற உறுப்பினர் Jeb Hensarling, ஒரு டெக்சாஸ் குடியரசுக் கட்சிக்காரர் போல்சனின் திட்டம் அமெரிக்காவை "சோசலிசம் என்ற வழுக்கும் பாறையில் செலுத்திவிடக்கூடும்" என்றார். குடியரசுக் கட்சியின் சாம் ஜாக்சன், இவரும் டெக்சாஸை சேர்ந்தவர், "சுதந்திர தொழில்முயற்சியின் தளராத ஆதரவாளர் என்ற முறையில், நாம் சோசலிசத்தின்பால் தலைகீழாக விழுந்து கொண்டிருக்கிறோம் என அஞ்சுகிறேன்" என்று எச்சரித்தார். கென்டக்கியின் செனட்டரான ஜிம் பன்னிங், போல்சனுடைய நடவடிக்கைகள் "நிதிய சோசலிசம்" என்றும் "அமெரிக்க முறையற்றது " என்றும் கூறியுள்ளார். சட்ட மன்ற உறுப்பினரான மிச்சிகனின் தாடியஸ் மக்கோட்டர் இந்த பிணை எடுப்பை 1917 போல்ஷிவிக் புரட்சியுடன்கூட ஒப்பிட்டுள்ளார்.

வோல் ஸ்டரீட் பிணை எடுப்பு ஒரு சோசலிச நடவடிக்கை என்பது முதலிலேயே அபத்தம் என்று தெரியவரும். முன்னாள் கோல்ட்மன் சாக்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்த போல்சன், $700 மில்லியன் சொத்தை தனிப்பட்ட முறையில் கொண்டிருப்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளவர், அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வலது நிர்வாகத்தின் உறுப்பினர் ஒரு சட்டவரைவை இயற்றி, அது இறுதியில் டிரில்லியன் கணக்கான டாலர்களை நாட்டில் இருக்கும் பெரிய வங்கிகளுக்கு திருப்புகிறது. இது சோசலிச வழியா?

இத்தகைய கூற்றுக்கள் முட்டாள்தனம் மற்றும் ஏமாற்றுத்தனம் இரண்டும் இணைந்தவற்றை வெளிப்படுத்துகின்றன. இதைக் கூறுபவர்கள் மிகக் குறைந்த அளவு வரலாற்று அறிவையும் அமெரிக்க மக்களிடையே காணப்படும் குறைந்த அரசியல் அறிவிலும் தங்கியுள்ளனர்; இதற்கு மக்களை குறைகூறக் கூடாது. இது அறிவியல்மீது விரோதப் போக்கு வளர்க்கப்பட்டது உள்பட, பொதுக் கல்வி முறையும் குப்பையில் போடப்பட்டு, பல தசாப்தங்கள் கால அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் மிகப் பின்தங்கிய கருத்தியல்களும் கருத்துருக்களும் வளர்க்கப்பட்டதன் விளைபொருளாகும்.

இத்தகைய அரசியல் மற்றும் அறிவார்ந்த வாழ்வின் இழிநிலைக் கூறுபாட்டில்தான் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சார வளர்ச்சி இருந்தது; அது சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தை அவற்றின் அரசியல் எதிர்க்கருத்தான ஸ்ராலினிசத்துடன் தவறாக அடையாளம் கண்டதை தளமாகக் கொண்டது.

அதன் சமீபத்திய நிறுவன மாநாட்டில் சோசலிச சமத்துவக் கட்சி துல்லியமாக சோசலிசம் என்றால் என்ன என்பதை அதன் கோட்பாடுகள் பற்றிய அறிக்கையில் விளக்கியது:

"உலக வரலாற்றில் மனிதனின் சமூக அமைப்பில் மிகச் சிறந்த, மிக முன்னேற்றகரமான மாறுதல்களை சோசலிசம் கட்டியம் கூறி வரவேற்கிறது --வர்க்கத்தின் அடிப்படையில், எனவே அதையொட்டி பல மனிதர்களை சில மனிதர்கள் சுரண்டும் அடிப்படையைக் கொண்ட சமூகத்திற்கு முடிவுகட்டுகிறது."

"முக்கியமான தொழில்துறை, நிதிய, தொழில்நுட்ப மற்றும் இயற்கை ஆதாரங்கள் முதலாளித்துவ சந்தை முறை, தனியார் உடைமையின் செல்வாக்கில் இருந்து எடுக்கப்பட்டு சமூகத்திற்கு மாற்றப்பட வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கண்காணிப்பு முற்றும் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ மதிப்பு விதியின் அடிப்படையிலான பொருளாதார வாழ்வை ஒழுங்கமைத்தல் மாற்றப்பட்டு சமூகத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட, ஜனநாயக பொருளாதார திட்டமிடலின் அடிப்படையில் சோசலிச மறு ஒழுங்கமைத்தலால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

"உண்மையாக பங்குபெறும் ஜனநாயகத்தின் புதிய வடிவங்களும் அமைப்புக்களும் --புரட்சிகர பெரும் மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களில் பெரும்பாலானவர்களான தொழிலாள வர்க்க பிரதிநிதிகள் பங்கேற்பதன் மூலம் வருவது-- ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின், அதாவது தொழிலாளர்களுடைய, தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களால் நடத்தப்படும் அரசாங்கத்தின் அஸ்திவாரங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இத்தகைய அரசாங்கத்தின் கொள்கை, பொருளாதார வாழ்வு ஒரு சோசலிச மாற்றத்தைக் காண்பதற்காக அடிப்படை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகையில், ஜனநாயக முறையில் தொழிலாள வர்க்கம் பங்கேற்பதில், மற்றும் முடிவெடுக்கும் நிகழ்வின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளுதலில் ஜனநாயக ரீதியான பங்கேற்பை விரிவுபடுத்த செயலூக்கத்துடன் முனைவதும் மற்றும் தீவிரமாக ஊக்குவிப்பதுமாக இருக்கும்."

இந்த பிணை எடுப்பு நடவடிக்கைகள் உழைக்கும் மக்களால் சட்டமியற்றப்படவில்லை; மிக சக்தி வாய்ந்த வங்கியாளர்களால், இரு கட்சிகளிலும் இருக்கும் அவர்களுடைய அரசியல் பிரதிநதிகள் மூலம் மக்கள் தோள்கள்மீது சுமத்தப்படுகிறது. பொருளாதார வாழ்வின் நெம்புகோல்கள் மீதான உடைமை மற்றும் கட்டுப்பாடு முற்றிலும் நாட்டின் பெரும் செல்வந்தர்களுடைய கைகளில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் தோல்விக்கு தலைமை தாங்கியவர்கள் இப்பொழுது தாங்கள் தப்புவதற்கே மக்கள் இழப்பில் ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாதுகாக்கப்படும் சமூக நலன்கள் அரசு அதிகாரத்தின் வர்க்க இயல்பினால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. கடந்த மாதத்தின் நிகழ்வுகள் இதற்கு முன்பு இருந்ததைவிட கூடுதலாக அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்காவின் இரு கட்சி முறையும் மக்களுடைய அரசியல் கருவிகள் அல்ல, ஒரு நிதிய தன்னலக் குழுவின் அரசியல் கருவிகள் என்பதை நிரூபித்துள்ளன.

தங்கள் பங்கிற்கு வலதுசாரி குடியரசுக் கட்சியினர் தொடக்கத்தில் "தடையற்ற சந்தைமுறை" முதலாளித்துவ நிலைப்பாட்டின்படி பிணை எடுத்தலை எதிர்த்தனர். சந்தையில் அரசாங்கம் குறுக்கிடக்கூடாது என்பதை அவர்கள் அப்படியே எதிர்க்கவில்லை. மாறாக அவர்கள் நிதிய மூலதனத்தின் மிக சக்தி வாய்ந்த பிரிவுகளின் செயற்பாடுகளை தடைக்கு உட்படுத்தும் அரசாங்க நடவடிக்கைகளைத்தான் எதிர்க்கின்றனர்.

இவர்கள் முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியான குறைந்த ஊதியம், வேலை நேரம் சுகாதார, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு போன்றவற்றை நிர்ணயிக்கும் அரசாங்க நடவடிக்கைகள் அனைத்தையும் "சோசலிசம்" என்று முத்திரையிடுவர். இவர்கள் செல்வந்தர்களுக்கு கூடுதலான வரிவிதிப்பை எதிர்த்து, அரசாங்கம் கொடுக்கும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தையும் "பெரிய அரசாங்கம் " என்று கண்டிப்பர்.

ஜனநாயகக் கட்சியினரும் அவர்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபமாவும் பிணை எடுப்பிற்கு ஆர்வம் மிகுந்த ஆதரவாளர்களாக இருந்தது மற்றும் அதன் முக்கிய சட்டமன்ற செவிலித்தாயாக செயல்பட்டதால், குடியரசுக் கட்சியினர் வோல் ஸ்ட்ரீட்டை எதிர்க்கும், மக்களை திருப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட முடிந்தது. இது, குடியரசுக் கட்சியினர் சாதாரண மக்களின் காவலர் என்று தங்களை மாற்றிக் கொண்டுவிட்டனர் என்ற பொருளைத் தராது; ஆனால் எந்த அளவிற்கு அமெரிக்க அரசியல் நடைமுறை முழுவதுமாக வலதிற்கு நகர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. ஜனநாயகக் கட்சி நீண்டகாலம் முன்னரே சமூகச் சீர்திருத்தக் கொள்கையை கைவிட்ட நிலையில், இப்பொழுது வெளிப்படையாக நிதியப் பிரபுத்துவத்துடன் தன்னை அடையாளம் காண்கிறது.

நிதிய நெருக்கடிக்கு ஒரு சோசலிச அணுகுமுறை எப்படி இருக்கும்? பெரிய வங்கிகள், ஒதுக்கு நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதிய நிறுவனங்களை பொது நல நிறுவனங்காக மாற்ற அவசர நடவடிக்கை எடுக்கப்படும். அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்படும்; சிறு முதலீட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அவற்றின் ஆதாரங்கள் உற்பத்தி மற்றும் சமூக நல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மற்றும் மக்களின் இடர்பாடுகளை அகற்ற பயன்படுத்தப்படும்.

புதிய உயர்தர வீடுகள் வழங்க, கல்வியை முன்னேற்ற, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிக்க, உயர்கல்வி கிடைக்கச்செய்ய, சுற்றுச்சூழலை மேம்படுத்த என உள்கட்டுமானத்தை மறு கட்டமைக்க டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்படும். அனைவரும் வேலை மற்றும் கெளரவமான ஊதியத்திற்கு உத்தரவாதம் பெறுவர். வேலை வாரம் என்பது மணிகளில் குறைக்கப்படும், ஊதியம் குறைக்கப்பட மாட்டாது; ஊதியங்கள் பணவீக்கத்திற்கு ஈடு செய்யும் வகையில் முழுமையாக குறியீட்டிற்கு உட்படுத்தப்படும்.

வரிச்சுமை தொழிலாள வர்க்கத்தில் இருந்து மக்களின் உயர்மட்ட செல்வம் கொழிக்கும் 10 சதவிகிதத்திற்கு மாற்றப்படும்.

வங்கிகள் மற்றும் அனைத்து முக்கிய நிதிய நிறுவனங்களின் கணக்குகளும் செயற்பாடுகளும் பகிரங்க ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு ஒரு முழு பொது விசாரணையும் நடைபெற வேண்டும்.

நிதியத் தொழிலில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் பெரும் பங்குதாரர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; அவர்களும் அரசியல் உயரடுக்கில் இருக்கும் அவர்களுடைய ஊழியர்களும் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த பொருளாதாரக் கொள்ளையை செய்தது பற்றி குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த சோசலிச முன்னோக்கிற்கு போராடுவதற்காக உழைக்கும் மக்கள் பெருவணிகத்தின் இரு கட்சிகளில் இருந்தும் உடைத்துக் கொண்டு, ஒரு சுயாதீன அரசியல் கட்சியை கட்டமைக்க வேண்டும்; அதன் முக்கிய நோக்கம் பொருளாதாரம் ஒரு நிதிய சிறிய உயரடுக்கின் நலனுக்கு பதிலாக சமூக தேவைகளை நிறைவு செய்தல் என்ற வகையில் சீரமைப்பதாக இருக்க வேண்டும். நவம்பர் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெர்ரி வையிட் மற்றும் பில் வான் ஓகென் ஆகியோர்தான் சோசலிச மாற்றீட்டை முன்வைக்கின்றனர் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தந்து, ஜெர்ரி வையிட் மற்றும் பில் வான் ஓகெனுக்கு வாக்களிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் அழைப்பு விடுகிறோம்.

SEP யில் எப்படிச் சேருவது, இதைப்பற்றி கூடுதலாக அறிய எங்களுடன் இங்கு தொடர்பு கொள்ளவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved