World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan officials offer empty reassurances over the global financial crisis இலங்கை அதிகாரிகள் பூகோள நிதி நெருக்கடி தொடர்பாக வெற்று நம்பிக்கையை வழங்குகின்றனர் By K. Ratnayake இலங்கை தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் ஏனைய நாடுகளில் உள்ள தமது சமதரப்பினரைப் போலவே அமெரிக்க நிதி நெருக்கடியின் சாத்தியமான தாக்கத்தை மூடி மறைக்க அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றனர். நிதி மற்றும் பாதுகாப்பு போன்ற பிரதான பொறுப்புக்களை வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உட்பட அரசாங்க அமைச்சர்களும், இந்த நிலைகுலைவு தொடர்பாக ஏறத்தாழ அமைதி காக்கின்றனர். சந்தேகத்திற்கிடமின்றி, இந்த நிலைகுலைவு பொருளாதாரத்தை அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது செலவுமிக்க இனவாத யுத்தத்தை பாதிக்காது என அவர்கள் எண்ணிக்கொண்டுள்ளனர். யுத்தமானது ஏற்கனவே பணவீக்கம் சாதனை மட்டத்திற்கு உயர்வதற்கு காரணமாக இருந்து வருகின்றது. நம்பிக்கை ஏற்படுத்தும் பணி இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் விடப்பபட்டுள்ளது. பூகோள பங்குச் சந்தைகள் வீழ்ச்சிகண்ட மறுநாள், செப்டெம்பர் 30 அன்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "இலங்கை பூகோள நிதி நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்படுவது நிகழ்தற்கரியது." இலங்கை இந்த நெருக்கடியில் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு உதவுவதன் பேரில் வங்கிகள் கடன் வழங்குவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மத்திய வங்கி எடுத்து வருகின்றது என அவர் தெரிவித்தார். ஒப்பீட்டளவில் பங்கு விலைகளிலான உடனடித் தாக்கம் சிறியதாகும். கப்ரால் பேசிக்கொண்டிருக்கும் போது, கொழும்பில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 43 புள்ளிகளால் அல்லது எல்லாமாக 2 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது -ஆனாலும், புஷ் நிர்வாகத்தின் 700 பில்லியன் அமெரிக்க டொலர் பினையெடுப்புத் திட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் முதலில் நிராகரித்ததை அடுத்து, ஆசியாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் மிகப் பிரமாண்டமான பொருளாதாரங்களில் ஏனைய சந்தைகளை தாக்கிய பல வீழ்ச்சிகளை விட இது இன்னமும் சிறியதே ஆகும். பலவித பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டவாறு, இலங்கை பொருளாதாரத்தின் வரையறுக்கப்பட்ட பண்பானது குறைந்த பட்சம் ஆரம்பத்தில் அதற்குச் சார்பாக செயற்படும். இலங்கையில் உள்ள நிதிச் சந்தை "ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால் [நெருக்கடியின்] தாக்கமும் சிறியதாக இருக்கும் என பாகிஸ்தான் இணையம் ஒன்றுக்கு முன்நாள் பொருளியலாளரான பேராசிரியர் என். பாலகிருஷ்னன் தெரிவித்தார். "எங்களது பொருளாதாரத்தை தாங்குவதற்கு நாம் பிரமாண்டமான அளவில் வெளிநாட்டு முதலீட்டில் தங்கியிராததால், இலங்கை மோசமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானது" என ஓய்வு பெற்ற வங்கி நிர்வாகி ஆர். நடராஜா தெரிவித்தார். ஆயினும், இலங்கை பொருளாதாரத்தின் அளவு, பூகோள நிதி சூறாவளி மற்றும் ஒரு சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கு எதிரில் உத்தரவாதமற்றதாகும். உண்மையில், தீவின் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தினதும் தாக்கத்தால் இலங்கையின் வெளிநாட்டு முதலீடு முகவும் குறைவாகும். இது அதன் பொருளாதர பலவீனம் மற்றும் வலுவின்மைக்கான ஒரு அறிகுறியாகும். வெறும் 30 பில்லியன் டொலராக உள்ள நாட்டின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொறிந்து போன சில வங்கிகளை விட மிகச் சிறியதாகும், மற்றும் கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸால் தீர்மானிக்கப்பட்ட பிணையெடுப்பு பொதியில் இருபதில் ஒரு பங்குக்கும் குறைவாகும். கப்ரால் பகிரங்கமாக உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், அக்டோபர் 2ம் திகதியில் இருந்து, ஒரு மாதத்தில் ஆறு முறை, 12 சதவிகிதம் என்ற வீதத்தில் ஒரே இரவில் எதிர்மாறாக மீள்கொள்வனவு செய்யும் வசதியை வங்கிகளுக்கு வழங்க மத்திய வங்கி தாயாராகிக் கொண்டிருக்கின்றது. முதலில் இந்த வசதி ஒரு மாதத்தின் மூன்று முறைகள் மட்டுமே வழங்கப்பட்டது. அரசாங்க கடன் பத்திரங்களை 12 சதவிகிதம் என்ற வீதத்தில் எதிர்மாறாக மீள் கொள்வனவு செய்வதன் மூலம் வங்கி முறைக்கு 7.5 பில்லியன் ரூபாய்களை (69 மில்லியன் டொலர்) சேர்க்க தயாராக இருப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்தது. பூகோள கடன் நெருக்கடி மற்றும் வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலைமகளின் கீழ், இந்த நடவடிக்கைகள் வங்கி முறையை தூக்கி நிறுத்துவதற்காகவே எடுக்கப்படுகின்றன என்பது தெளிவு. கொழும்பில் உள்ள செலிங்கோ ஸ்ரீராம் செக்யூரிடீஸ் கம்பனியின் பிரதான முகாமையாளர் சஞ்சீவ தயாரட்ன, மத்திய வங்கியின் முடிவு இறுக்கமான இரவு நிதி சந்தையை எளிதாக்கும் மற்றும் "அரசாங்க கடன் பத்திரங்களை விற்பதில் பீதியைக் குறைக்கக்கூடும்" என புளூம்பேர்க் டொட் கொம் (Bloomberg.com) இணையத்திற்குத் தெரிவித்தார். நிதி இயக்குனரான சக்விதி ரணசிங்க சம்பந்தப்பட்ட ஒரு மோசடியானது நிதி முறைக்குள் உள்ள நெருக்குவாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட சேவைசெய்கிறது. சக்விதி திருப்பித் தரும்போது உயர்ந்த வட்டியுடன் தருவதாக வாக்குறுதியளித்து தனது வீட்டுத்திட்ட கம்பனிக்கு முதலீட்டாளர்கள் நிதியில் இருந்து சுமார் ஒரு பில்லியன் ரூபாய்களை எடுத்துள்ளார். அவரது நிறுவனம் மத்திய வங்கியில் ஒரு நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த நிறுவனத்தின் நிதி ஒழுங்கின்மை குறித்து பொலிஸ் அறிக்கை செய்திருந்தாலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறியுள்ள சக்விதி, இப்போது ஒரு முழு மோசடிக்காரன் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆனால் இலங்கை பொருளாதாரத்தின் நிலைமை, பெருமளவில் மதிப்பீடு அல்லது முழு சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளது. இதற்குக் காரணம் முதலீட்டாளர்கள் உயர்ந்த வீதத்திலான திருப்பி செலுத்தலுக்கு தயங்குவதேயாகும். நாட்டின் பணவீக்க வீதம் இப்போது சுமார் 30 வீதமாகும். 18 முதல் 20 வீதம் வரையான சாதாரண வட்டி விகித மட்டத்தையும் விட மிகவும் அதிகமாகும். மத்திய வங்கி ஆளுனர் கப்ரால், 84 வீதம் உயர்ந்த வீதத்துடனான மீள் செலுத்துகை தரும் ஏனைய "போலியான நிறுவனங்கள்" உள்ளன, அவை "தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக வலிமையற்றவையாகும்," என எச்சரித்தார். கடன் நெருக்கடியின் தாக்கம் சந்தேகமான நிதி நிறுவனங்களுடன் கட்டுப்படுவதில்லை. கடந்த இரு ஆண்டுகளாக, இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு செலவை அதிகரித்துள்ளது -2008ல் 20 வீத அதிகரிப்பு. யுத்தத்திற்கு செலவிடுவதற்காக, அரசாங்கம் 181,449 மில்லியன் ரூபா பாதுகாப்பு கடனாக நிதி பெறுவதற்கு சர்வதேச நிதி சந்தையை அதிகரித்தளவில் நாடியது. அதிகரித்தளவில் அந்த நிதி ஊற்று வற்றிப் போகும். கடந்த வாரம் வெளியான அறிக்கையில், சர்வதேச தரப்படுத்தும் நிறுவனமான ஸ்டன்டர்ஸ் அன்ட் புவர்ஸ் (Standard and Poor's), சந்தைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றது என எச்சரித்துள்ளதோடு, டொமினிகன் குடியரசு, எல் சல்வாடர், ஹங்கேரி, கஸகஸ்தான், பாகிஸ்தான், சேர்பியா மற்றும் வியட்னாம் போன்ற "பின்னடைவு தோற்றமுள்ள" எட்டு நாடுகளுடன் இலங்கையையும் பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏற்றுமதி சந்தைகளில் எந்தவொரு பின்னடைவு ஏற்படும் போதும், இலங்கை போன்ற நாடுகள் பாதிக்கப்படும் வாய்ப்பைப் பற்றி அது சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரம் கருத்து வெளியிட்ட கப்ரால், இலங்கை ஆடைத் தொழிற்துறை "அமெரிக்கா பின்னடைவுக்குச் சென்றாலும் கூட [வழமையை விட] குறைந்தளவே பாதிக்கப்படும்" என நன்நம்பிக்கையுடன் கூறிக்கொண்டார். ஆயினும், 2007 மத்திய வங்கி அறிக்கையின் படி, இலங்கையின் நெசவு மற்றும் ஆடைத்தொழிற்சாலை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 வீதம் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ள அதே வேளை, இன்னும் 45 வீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் துறை அந்நிய செலாவனியைப் பெரும் மிகப்பெரும் ஊற்றாகும். இது மொத்தமாக சுமார் 43 வீதமாகும். தற்போதைய சர்வதேச நிதி சூறாவளி இலங்கையை பாதிக்காது என இலங்கை ஊடகங்கள் தமது வாசகர்களுக்கு வெற்று நம்பிக்கைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, டெயிலி மிரர் பத்திரிகையில் கடந்த வாரம் வெளியான ஆசிரியர் தலைப்பு, "இதை [நெருக்கடியை] ஏற்படுத்தியது அமெரிக்க முறையிலான முதலாளித்துவமே" என்ற ஐரோப்பிய விமர்சனத்தை எதிரொலித்தது. ஆயினும், வாரக் கடைசியில், ஒரு தொகை பெரிய ஐரோப்பிய வங்கிகளையும் நிறுவனங்களையும் கைப்பற்ற அல்லது பிணையெடுக்க நேரிட்டது. இது ஐரோப்பிய முதலாளித்துவமும் அதன் அமெரிக்க சமதரப்பைப் போலவே பாதிக்கக்கூடியது என்பதை தெளிவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் ஊது குழலாகச் செயற்படும் அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகை, கடந்த வாரம் வெளியிட்ட ஒரு ஆசிரியர் தலைப்பில், "மோசமான பீதி அமெரிக்காவில் தற்காலிக பிணையெடுப்பின் மூலம் குறைந்த பட்சம் தற்போதைக்கு தணிந்துள்ளது" என பிரகடனம் செய்தது. இந்த நெருக்கடி "உலகின் நிதி வல்லரசின் திடீர் மாற்றத்தில் பூகோள பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடியது" என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த பின்னர், "ஈர்ப்பின் மையத்தில் இருந்து மேலும் தூர இருப்பதன் மூலம், இலங்கை போன்ற நாடுகள் நிதி கொந்தளிப்பின் உடனடி துன்பங்களை உணராமல் இருக்கலாம்" என்ற நம்பிக்கையையும் அந்த ஆசிரியர் வழங்குகின்றார். எந்தவொரு பொருளாதார அவசர நிலைமையையும் கையாள்வதற்கு பயன்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய சந்தேகத்தை வெளியிடாத அந்த ஆசிரியர் தலைப்பு: "தற்போதைய நெருக்கடி மீண்டும் ஒரு முறை பொருளியல் விவேகத்தின் தேவையை நோக்கி நாட்டை தள்ளுகின்றது" என பிரகடனம் செய்கின்றது. இந்த அழைப்பு, அரசாங்க செலவுகளை வெட்டுவதற்கான புதிய மூர்க்கமான நடவடிக்கைகளை இலேசாக மூடி மறைத்து கோருகிறது. இது அரசாங்க ஊழியர்களின் சம்பளம், நிலைமைகள் மற்றும் தொழில்கள் மற்றும் சமூக சேவைகள் மற்றும் விவசாயிகளுக்கு உதவும் மானியங்களை மேலும் மோசமாக வெட்டிக் குறைப்பதையே தவிர்க்க முடியாமல் அர்த்தப்படுத்துகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வறியவர்களின் மத்தியில் இருந்து தோன்றும் எதிர்ப்புக்களை எதிரிகளுக்கு -"புலி பயங்கரவாதிகளுக்கு"- உதவும் நடவடிக்கை என அரசாங்கம் வகைப்படுத்துகின்ற நிலையில், போர் வெறி ஆரவாரங்கள் மற்றும் மேலும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்குவதோடு சேர்த்து கடுமையான நடவடிக்கைகள் பின் தொடரும். பூகோள நிதி கொந்தளிப்பால் "பாதிக்கப்படாமல்" இருப்பதற்கும் அப்பால், ஏற்கனவே கடுமையாக உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளில் இலங்கை மேலும் ஆழமாக மூழ்கிப் போகும். |