World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பாEuropean Union remains paralysed in face of market turmoil சந்தைக் கொந்தளிப்பை எதிர்கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் செயலிழந்துள்ளது By Chris Marsden and Julie Hyland செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி மந்திரிகள் வங்கி சேமிப்புக்களின் மீது குறைந்த பட்ச பணத்திற்கான உத்தரவாதத்தை 50,000 யூரோக்கள் ($68,160) என உயர்த்துவதாகவும், "நம் வங்கிமுறையின் ஒழுங்குமுறை, உறுதித்தன்மை ஆகியவற்றை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படும் என்பதோடு தனிநபர்களின் சேமிப்புக்களையும் பாதுகாக்கவும்" உடன்பட்டுள்ளனர். இந்த கூட்டறிக்கை "இவை தற்போதைய நிலைமைக்கு விரிவான ஒருங்கிணைந்த விடையிறுப்பை அளிக்கும்" என அறிவித்துள்ளது. நிதி மந்திரிகள் ஒரு அமெரிக்க மாதிரியான பிணையெடுப்பு இல்லை எனக் கூறிவிட்டனர்; ஆனால் "முழு அமைப்பு முறைக்கு தேவையான" நிறுவனங்களை சரிவில் இருந்து காப்பாற்றுவர் என்று கூறியுள்ளனர். இந்த அறிக்கை, பல நாட்கள் முடிவெடுக்காத நிலையில் நிறைய கருத்து வேறுபாடுகளுக்கு பின்னர் ஒரு ஒற்றுமையான முன்னணியை அளிக்கும் ஒரு முயற்சி ஆகும். முக்கிய பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் மாபெரும் சரிவிற்கு உட்படக் காரணமான ஐரோப்பிய வங்கி முறையின் நிலைமை பற்றிய பரபரப்பு "கறுப்பு திங்கள்'' பற்றி வந்ததை அடுத்து இந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் பெல்ஜியம், லுக்சம்பேர்க் மற்றும் ஜேர்மனியின் அரசாங்கங்கள் வங்கிகள் மீட்பு நடவடிக்கைகளை அவசரமாக எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின; ஐஸ்லாந்தில் பங்கு வணிகம் நிறுத்தப்பட்டது; அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் சரியக்கூடிய சாத்தியம் உள்ளது பற்றி எச்சரித்துள்ளது. ரஷ்யா திங்கள் மற்றும் செவ்வாயன்று இரு முறை வணிகத்தை நிறுத்திவைத்தது; அங்கு பங்கு மதிப்புக்கள் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்தன. ஐரோப்பா வோல் ஸ்ட்ரீட்டை பீடித்துள்ள நிதிய நெருக்கடியில் இருந்து ஒப்புமையில் அதிக பாதிப்பு இல்லை என்ற கூற்று இந்த சந்தைக் கொந்தளிப்பின் பின்னர் தகர்த்துள்ளது. பல ஐரோப்பிய பங்குகள் அமெரிக்காவுடனும் பிரிட்டனுடம் மிக நெருக்கமாக இணைந்துள்ள ஊக நடவடிக்கைகளில் எத்தகைய நேரடித் தொடர்பு கொண்டிருந்தாலும், உலக நிதிய அமைப்புக்கள் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. மேலும் பண பற்றாக்குறை பற்றிய நெருக்கடி எனத் தொடங்கியது பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிட்டது. ஐரோப்பிய தலைவர்கள், அமெரிக்கத் தலைவர்கள் போல், உலகப் பொருளாதரத்தை பீடிக்கும் நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை, விரைவாக அதன் தாக்கும் திறன் ஆகியவற்றைப் பற்றி குறைமதிப்பிட்டனர். BBC யின் பீட்டர் செஸ்டன் கூறியது: "ஒன்று, ஒன்றுமட்டும்தான் தெள்ளத் தெளிவாக உள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்களும் நம்மில் பலரைப் போவே உலக வங்கி முறையில் நிகழ்ந்துள்ள பெரும் குழப்பம் பற்றி அதிர்ச்சியும் விளங்காத் தன்மையையும் கொண்டுள்ளனர்". திங்களன்று நிதி மந்திரிகள் தங்கள் கூட்டத்தைத் தொடக்கியவுடன், பீர் ஸ்ரைன்புறூக் அதில் தான் பங்கு கொள்ள இயலாமை பற்றித் தெரிவித்தார்; இதற்குக் காரணம் அவர் "ஜேர்மனியில் முழு அமைப்பையும் காப்பாற்றவேண்டிய திட்டம்" பற்றி உடனடியாக ஈடுபடும் வேலையை கொண்டிருந்ததாகும். இது ஜேர்மனிய அடைமானக் கடன் கொடுக்கும் நிறுவனமான Hypo Reak Estate ஐ நிலைநிறுத்த ஒரே வாரத்தில் இரண்டாம் முறை பிணை எடுப்பிற்கு ஏற்பாடு நடந்தவுடன் தெரிவிக்கப்பட்டது, நிகழும் உறுதியற்ற தன்மையைவிட சர்வதேச சந்தைகளை அச்சுறுத்துவது உங்களுடைய அண்டை வீட்டுக்காரர்களை பிச்சைக்காரர்களாக்குக என்ற விதத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஐரோப்பாவை இன்னும் உறுதி குலைத்துவிடும் என்பதுதான். ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் ஆகியவை நாட்டு எல்லைகளுக்கு அப்பால் பாரிய முறையில் முதலீடு சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஒருதலைப்பட்ச பாதுகாப்பு உறுதியை சேமிப்புக்களுக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிறன்று "அரசியல்ரீதியாக கொடுத்த உறுதிப்பாடு", வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகள் பாதுகாக்கப்படும் எனக் கூறியது, கண்டம் முழுவதும் வங்கிகளுக்கு இடையிலான கழுத்தறுக்கும் போட்டியை மிக அதிகமாக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தி விட்டது. மேர்க்கெலின் அறிவிப்பு பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை பாரிஸ் உச்சிமாநாட்டில் அத்தகைய ஒருதலைப்பட்ச உறுதிமொழிகளைக் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் வந்தது. பிரிட்டனும் அதே போல் செய்யுமோ என்ற உடனடி ஊகம் எழுந்தது. ஜேர்மனியில் வழங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கான பாதுகாப்பு போல் இரு மடங்கு என்றவிதத்தில் 950 பில்லியன் பவுண்டுகளுக்கும் மேலான பொறுப்பை எடுக்க அது பிரெளன் அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கும். பேர்லின், டப்ளின் மற்றும் ஏதென்ஸ் ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்புக்கள் கூறப்பட்டிருந்த போதிலும்கூட, பாரிஸ் உச்சிமாநாட்டில் உண்மையில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி கூறியிருந்த பிணை எடுப்பு ஒருங்கிணைப்பிற்கான திட்டங்களை தடுப்பதிகாரம் பயன்படுத்தி வேண்டாம் என்று நிராகரித்தபின் அந்தந்த நாடு தனக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றுதான் செய்துள்ளது. இத்திட்டம் ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தால் எதிர்க்கப்பட்டது; தங்கள் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு பிணை எடுப்பு செய்ய அவை விருப்பம் காட்டாதவை. பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி பின்னர் இத்திட்டத்தை முன்வைக்க இருந்தார் என்ற கருத்தை மறுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, ஒவ்வொரு ஐரோப்பிய அரசாங்கமும் அதனதன் தேசிய நிறுவனங்களை காக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் என்று ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டார். இது Forbes ஐ "ஐரோப்பாவின் மிகச் சக்தி வாய்ந்த அரச தலைவர்கள் அவரவர் நலன்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அமைதியான முறையில் கண்டுபிடித்து விட்டனர்" என்ற கருத்தைக் கூற வைத்துள்ளது. கார்டியனின் நிதிய நிருபர் David Gow பாரிஸ் உச்சிமாநாடு பற்றிக் கொடுத்துள்ள தீர்ப்பு இன்னும் கடுமையாக உள்ளது. "ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு முக்கிய தலைவர்கள், உண்மையில் இருந்து தப்பி ஓடுகின்றனர்" என்று கூறிய கட்டுரை மேலும் எழுதியது: "வெளியே ஒரு குளிரான ஆனால் சூரிய ஒளி மிக்க மாலை; ஐரோப்பாவின் ஒன்றிணைந்த வங்கியமைப்பு முறையை பால்க்கன் மயமாக்கும் நிகழ்வு உச்சவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. உள்ளே இவர்கள் ஒருங்கிணைந்த கூட்டான விடையிறுப்பு 1930 முறையில் வந்துள்ள மந்த நிலையை எதிர் கொள்ளுவது பற்றி பேசுகின்றனர். ...ஆனால் அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிய முறை சேய்ன் ஆற்றோடு போய்க்கொண்டிருக்கிறது என்பது நன்கு தெரியும்; எனவே தங்கள் அவசர "தேசிய நடவடிக்கைகள்" பற்றித் தயாரிப்பு நடத்துகின்றனர். அரசியல் உறவுகளை சிதைப்பது என்பது இன்னும் வெளிப்படையான முறையில் நான்கு பேரும் பிற ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளுடன் ஆலோசிக்காமல் செய்ததில் இருந்து தெளிவாகிறது; இதில் யூரோப்பகுதியில் இருக்கும் 12 நாடுகளும் உள்ளன. தான் ஒதுக்கப்பட்டது பற்றி மிகக் கடுமையாக ஸ்பெயின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சந்தைகள் பெரும் போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐரோப்பா ஒரு பொதுவான நிலைப்பாட்டுத் தன்மையைக் காட்ட வேண்டும் என்பதற்கு பரபரப்பான கோரிக்கைகள் வந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான், "ஐரோப்பா ஒரு கூட்டு பாதுகாப்பு வழிவகையை தயாரித்துச் செயல்படுத்த வேண்டும். உலகப் பொருளாதாரத்தின் உறுதிப்பாடு ஆபத்து நிறைந்ததாக உள்ளது." என்று வலியுறுத்தியுள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில் திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செயல்பட்ட சார்க்கோசி, "எமது நாடுகளில் இருக்கும் வங்கிகளின் எந்த சேமிப்பாளரும் இழப்பை அனுபவிக்கவில்லை; இந்த முறை மற்றும் சேமிப்பாளர்களை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து நாம் செய்வோம்.... இந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது, ஐரோப்பிய தலைவர்கள் நெருக்கமான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் தேவையை உறுதிபடுத்துகின்றனர்." என்று கூறினார். கடைசி நேரத்தில் கூட பிளவு மனப்பான்மை தொடர்ந்தது. இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பல முறையும் ஒரே அறிக்கையை படித்தார் (ஏதோ இவருடையது என்பதைப்போல்); அதே நேரத்தில் ஐரோப்பா முழுவதும் பரந்த பிணை எடுப்பு என்பது வரக்கூடியதுதான் என்று கூறினாலும், "மேர்க்கெலுக்கு அதிகாரம் இல்லாததால்தான் ஜேர்மனி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது" என்றார். பின்னர் பேர்லினில் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மேர்க்கெல் மீண்டும் ஒரு ஐரோப்பா முழுவதிலுமான பிணை எடுப்பை நிராகரித்து, "ஒவ்வொரு நாடும் அதன் பொறுப்புக்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், ஐஸ்லாந்தின் பிரதம மந்திரி Geir Haarde தன்னுடைய நாட்டின் "நண்பர்களை" வாடியுள்ள பொருளாதாரத்திற்கு நிதிய உதவி அளிக்காததத்காக தாக்கினார்; இதையொட்டி அவர் ரஷ்யாவை $5.4 பில்லியன் (4பில்லியன் யூரோ) கடன் கேட்க தொப்பியை தாழ்த்தி நிற்க வேண்டியதாயிற்று. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட திட்டம் ஐரோப்பிய தலைவர்கள் நெருக்கடியில் விளிம்பில் இருந்து சிறிது சிறிதாக பின்வாங்கி ஒரு ஒற்றுமை அடையாளம் காட்டுவதின் முயற்சி ஆகும். ஆனால் இது ஒன்றும் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. ப்ளூம்பேர்க் என்னும் நிதிய ஏடு மந்திரிகள் "உறைந்து நிற்கும் கடன் சந்தைகள் பற்றி ஒரு தீர்வு காண்பதில் வெற்றி அடையவில்லை; அதுவோ மிகப் பெரிய நிதிய நெருக்கடியை பெருமந்த நிலைக்கு பின் ஏற்படுத்தி நுகர்வோர் சேமிப்பு காப்பீட்டை அதிகப்படுத்தியுள்ளது." இந்த குறைந்த நடவடிக்கை கூட ஒரு சமரசம்தான்; சில நாடுகள் 100,000 யூரோக்கள் வரையிலான சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. குறைந்த அளவு ஆதரவு எனக் குறிக்கப்பட்டுள்ளது கண்டம் முழுவதும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டிய பணத்தை வெவ்வேறு அளவில் வைத்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இது ஐரோப்பா முழுவதுமான பரந்த நடவடிக்கை என்பதற்கு பதிலாக ஒரு தேசிய நடவடிக்கையாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாடும் "அதன் முழுப் பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்" எனக் கூறும்போது மேர்க்கெல் என்ன பொருளில் கூறுகிறார்; கண்டம் பொருளாதார பூசலில் இறங்க வேண்டும் என்ற பொருளைத் தருகிறாரா? இந்த அறிக்கை வந்த ஒரு மணி நேரத்திற்குள் ஸ்பெயின் தான் சேமிப்பு கணக்குகளுக்கான உத்தரவாதத்தை 20,000த்தில் இருந்து 100,000 யூரோக்கள் என்று உயர்தியுள்ளதாக அறிவித்தது. பாரிஸ் உச்சி மாநாடு, ஏற்கனவே அரசாங்க உதவிகள் மற்றும் தேசிய வரவுசெலவுத்திட்ட வரம்புகள் பற்றிய யூரோ பகுதி விதிகளை தற்காலிகமாக தளர்த்துவதாக உடன்பட்டுள்ளது; இது ஒருங்கிணைந்த நிதியக் கொள்கைக்கு முற்றுப்புள்ளியை வைக்கிறது. யூரோப்பகுதியே பெருகிய முறையில் மாறுபட்ட தேசிய நலன்களின் பாரத்தினால் உடைந்து பாதிப்படையக்கூடும் என்றுகூட ஊகங்கள் உள்ளன. சமீபத்திய ஆண்டுகள் "போட்டித்தன்மை, தொழிலாளர் செலவினங்கள் மற்றும் வணிக பாக்கிகளில் யூரோப் பகுதி முழுவதும் தீவிரமான தன்மையைக் கண்டன" என்று கார்டியன் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸின் Charles Goodhart ஐ மேற்கோளிட்டுக் கூறியுள்ளது; நிதிய ஒன்றியம் 10 முதல் 20 சதவிகிதம் வரை உடைந்துவிடக் கூடிய ஆபத்திலும் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய இறுதி நாள் காட்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு, திட்டமிடப்பட்டுள்ளதின் பொருளாதார சமூக தாக்கங்களை பார்த்தால் அவை பரந்த தன்மை உடையவை எனத் தெரியும். வங்கிகளும் பெரிய நிறுவனங்களும் தங்களுக்கு பில்லியன்கள் தேவை எனக் கோருகின்றன. ஆனால் பிரான்சில் உத்தியோகபூர்வ மந்த நிலை உள்ளது; பிரிட்டனின் வணிகக் குழு இங்கிலாந்தும் மந்த நிலையில் இருப்பதாக கூறுகிறது; ஐரோப்பாவின் மற்ற பகுதிகளும் இந்த நிலைக்கு தொடர்ந்து செல்லும். கடந்த தசாப்தத்தில் ஐரோப்பிய தலைவர்கள் பொதுநல செலவினங்களையும் மற்றும் அரச செலவீனங்களையும் பெரிதும் குறைத்தனர்; இதற்குக் காரணம் போதிய பணம் இல்லை என்று கூறப்பட்டதுடன் தனியார் துறை கூடுதலான திறைமையுடன் உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இப்பொழுது, இதுபற்றி வாக்கெடுப்பு நடத்துவது என்பது ஒருபுறம் இருக்க, எத்தகைய ஜனநாயக ஆலோசனைகளும் இல்லாமல் இவர்கள் மிகப் பெரிய அளவிற்கு பொதுப்பணங்களை உறுதியற்ற நிதிய நிறுவனங்களுக்கு பெரும் செல்வந்தர்களின் அட்டூழிய ஊகவகை செலவுகளுக்காக திசைதிருப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழிவகை இங்கிலாந்தில் மிக அதிகமாக நடந்துள்ளது உலகின் முக்கிய நிதிய மையங்களில் அதுவும் ஒன்றாகும். ஏற்கனவே இந்த ஆண்டு 200 பில்லியன் பவுண்டுகள் நிதி இரு வங்கிகள் காப்பற்றப்படக் கொடுக்கப்பட்டுள்ளன. செவ்வாய் இரவு பாங் ஆப் இங்கிலாந்துடன் பிரெளன் அவசர பேச்சு வார்த்தைகள் நடத்தியில், 40 சதவிகிதத்தை ஒட்டி பங்கு விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ள முக்கிய வங்கிகளுக்கு அரசாங்கம் மூலதனம் கொடுக்க வேண்டும் என்ற முறையீடுகள் வந்துள்ளன. இது பெரும் பனிக்கட்டிப் பாறையின் உச்சிமட்டும்தான். இது சரியாக தீர்வைக் கொடுக்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை. நிதிய தன்னலக் குழு செல்வ கொழிப்பை கூடுதலாகக் காண்பதற்காக தொழிலாளர்கள் இதுவரை ஊதிய வெட்டுக்கள், வரி உயர்வு ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே ஐரோப்பா முழுவதும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை ஆகஸ்ட் மாதம் 7.5 சதவிகிதம் என்று போயிற்று; இதையொட்டி ஆண்டு இறுதிக்குள் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வேலைகளை இழக்கக்கூடும் என்ற கணிப்புக்கள் வந்துள்ளன. |