World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பாEuropean leaders fail to agree on a common strategy for the financial crisis நிதிய நெருக்கடிக்கு பொது மூலோபாய உடன்பாடு காண்பதில் ஐரோப்பிய தலைவர்கள் தோல்வி By Stefan Steinberg 1930களுக்கு பின்னர் ஐரோப்பிய நிதியச் சந்தைகளில் மிகக் கொந்தளிப்பான வாரத்தை தொடர்ந்து சனிக்கிழமையன்று பாரிஸில் ஐரோப்பிய தலைவர்கள் குழு ஒன்று ஐரோப்பிய வங்கி முறை பொறிவுறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதித்தது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அரசாங்க தலைவர்கள், ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் Jean-Claude Trichet, ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவர் Jose Manuel Barroso, லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி Jean-Claude Juncker (யூரோக் குழு நிதி மந்திரிகளின் தலைவரும் கூட) ஆகியோருடன் ஒரு அவசர கூட்டத்தில் சந்தித்தனர். பாரிஸ் உச்சிமாநாட்டின்போது வங்கி மற்றும் நிதிய நெருக்கடிகளுக்கு அமெரிக்காதான் மூலகாரணம் என்ற குறை பெரிதும் கூறப்பட்டது; ஆனால் இப்பொழுது கூடிய ஐரோப்பிய தலைவர்கள் ஐரோப்பிய வங்கிகளை சூழ்ந்துள்ள பெரும் நிதியப் புயலை குறைப்பதற்கான செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த மூலோபாயத்தை முன்வைக்க இயலவில்லை. இக்கூட்டத்தில் வெளிப்பட்ட ஒரே உருப்படியான திட்டம் 15 பில்லியன் யூரோக்கள் கொண்ட நிதி ஒன்றை சிறு வணிகர்களுக்கு உதவுவதற்காக நிறுவதல் என்று எடுக்கப்பட்ட முடிவுதான். ஐரோப்பிய நிதிய இலக்குகளை தளர்த்தவும், அதிக அளவு ஊகத்தை கட்டுப்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவருவது பற்றியும் தெளிவற்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டதுடன், நெருக்கடி பற்றி விவாதிக்க ஒரு உலக உச்சிமாநாட்டிற்கான அழைப்பும் வெளியிடப்பட்டது. உச்சிமாநாட்டின் செயற்பட்டியலில் கடந்த வாரம் பேசப்பட்ட ஒரு ஐரோப்பிய பிணை எடுப்பு நிதிக்கான திட்டம் இடம் பெறவில்லை. பல பெரிய ஐரோப்பிய வங்கிகள் தொடர்ச்சியாக பொறிந்ததை அடுத்து, பிரான்ஸின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஒரு குறுகிய அறிவிப்பில் சனிக்கிழமை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஒரு வாரம் முன்புதான், ஐரோப்பிய அரசாங்கங்களும் தனியார் வங்கிகளும் சேர்ந்து ஜேர்மனியின் Hypo Real Estate, பிரிட்டனின் Bradford & Bingley, டச்சு-பெல்ஜிய Fortis group, பெல்ஜிய டெக்சியா வங்கி மற்றும் ஐஸ்லாந்தின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்று என ஐந்து பெரிய வங்கிகளின் பிணை எடுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தன. பல அரசாங்க பிணை எடுப்பு பொதிகளுக்கு பின்னரும்கூட, பெரும்பாலான துன்பத்திற்கு ஆளான வங்கிகளின் நிலை மோசமாகிவிட்டது. கடந்த வெள்ளிக் கிழமையன்று டச்சு அரசாங்கம் மீண்டும் தலையீடு செய்து ஃபோர்ட்டிஸின் அனைத்து டச்சு சொத்துக்களையும் வாங்கியது; இவற்றின் பங்கு விலை பெரும் வீழ்ச்சியை அடைந்திருந்தது. ஜேர்மனியில் பிணை எடுப்புப் பொதி நாட்டின் இரண்டாம் மிகப் பெரிய அடைமான கடன் கொடுக்கும் நிறுவனமான Hypo Real Estate (HRE) கொடுக்கப்பட்டும் பொறிவு நின்றுவிடவில்லை. கடைசியாக வந்த மதிப்பீடுகளின் படி HRE க்குப் புதிய மீள்விக்கும் பொதிக்கு ஜேர்மனிய வரி செலுத்துவோர் பணத்தில் 50 பில்லியன் யூரோக்கள் வரை போகக் கூடும் என்று தெரிகிறது. ஸ்விட்சர்லாந்தில், அமெரிக்க குறைந்த பிணை மதிப்பு சந்தை நெருக்கடியினால் ஏற்கனவே 4,100 வேலைகளை தகர்த்துவிட்ட UBS கடந்த வாரம் இன்னும் ஒரு 2,000 முதலீட்டு வங்கி வேலைகளையும் அகற்றும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தாலியின் வங்கிப் பிரிவும் கடந்தவாரம் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது; நாட்டின் மிகப் பெரிய வங்கியான Unicredit கிட்டத்தட்ட அதன் பங்கு மதிப்பில் கால் பகுதியை இழந்துவிட்டது. அனைத்து முக்கிய ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் கடந்த வாரம் பெரும் இழப்புக்களை கண்டன; வங்கிகளின் பங்கு விலைகள் மிகப் பெரிய பொறிவுகளைக் கண்டன. மேலும் பிரான்சின் பொருளாதார அமைப்புக்கள் கடந்த வாரம் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் நுழைந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தின இந்த ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுப் பகுதிகள் எதிர்மறை வளர்ச்சியைத்தான் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனும் ஸ்பெயினும் ஏற்கனவே மந்த நிலையில் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது; இதே கதி அல்லது விதிதான் வெகு விரைவில் ஜேர்மனிய பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும். இதன் பொருள் ஒரு சங்கிலித் தொடர்போன்ற விளைவு ஏற்பட்ட முழு யூரோப் பகுதியையும் மந்த நிலைக்கு தள்ளிவிடும் என்பதாகும். இந்தப் பின்னணியில்தான் முக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வல்லுனர்கள் குழு ஒன்று ஐரோப்பிய நாடுகள் மிக அவசரமான, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை "கட்டுப்பாட்டை மீறி இந்த நெருக்கடி போவதற்கு முன் அதைச் சமாளிக்க முயல வேண்டும்" என்று எச்சரித்துள்ளது. இவர்களுடைய கடுமையான முன்கணிப்பை அடிக்கோடிடும் வகையில், பொருளாதார வல்லுனர்கள் ஜேர்மன் பொருளாதாரக் கழகம் (DIW) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 1930 களுடன் ஒப்புமைக் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்: "வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை வரக்கூடிய நெருக்கடிக்கு நடுவில் ஐரோப்பா இப்பொழுது உள்ளது. 1930களின் இருண்ட ஆண்டுகளில் நிதியச் சந்தைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒவ்வொரு ஐரோப்பியருக்கும் தெரியும். அரசாங்கங்கள் செயல்படுவதில் தோல்வி அடைந்தால் என்ன நேரிடும் என்பது பற்றிக் கூறுவது மிகையாகாது." DIW வெளியிட்டுள்ள அறிக்கை ஐரோப்பிய நாடுகள் ஒரு மத்திய நிதியை ஏற்படுத்தி அமெரிக்க நிதி மந்திரி ஹென்றி போல்சன் வரைந்துள்ள $700 பில்லியன் பிணை எடுப்புத் திட்டம், கடந்த வாரம் அமெரிக்க காங்கிரசில் இயற்றப்பட்டது போல், நிறுவ வேண்டும் என்று முறையிட்டுள்ளது.ஐரோப்பா முழுவதற்குமான பிணை எடுப்பிற்கான ஸ்தூலமான திட்டங்கள் முதலில் கடந்த வாரம் டச்சுப் பிரதம மந்திரி Jan Peter Balkenende யினால் முன்வைக்கப்பட்டது; இவர்தான் சர்வதேச நிதிய நெருக்கடியினால் வீழ்ச்சியுற்ற மிகப் பெரிய வங்கி நிறுவனமான ஃபோர்ட்டிஸுக்கு பிணை எடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் வாடியிருக்கும் வங்கிகளுக்கு உதவுவதற்காக 300 பில்லியன் யூரோக்கள் ($415 பில்லியன்) தேவைப்படும் நிதிய பொதிக்கு தத்தம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்று சதவீதம் அளிக்க வேண்டும் என்று Balkenende அழைப்பு விடுத்தார். ஜேர்மனியின் மிகப் பெரிய வங்கியான Deutsche Bank ன் தலைவர் Joseph Ackerman, ஜேர்மனிய வங்கிகள் சங்கத்தின் தலைவர் Klaus-Peter Muller உட்பட முக்கிய வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இத்திட்டத்திற்கு உற்சாக ஆதரவைக் கொடுத்தனர். ஒரு ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புப் பொதி நிறுவப்படுவதற்கான கூடுதல் அழுத்தம் IMF இன் நிர்வாக இயக்குனரான Dominique Strauss-Kahn இடமிருந்து வந்தது. திட்டத்திற்கான ஆதரவிற்கு முன்வைக்கப்பட்ட வாதம் ஐரோப்பிய போட்டியாளர்களின் இழப்பில் இந்த நெருக்கடியில் இருந்து தனி நாடுகளும் அவற்றின் வங்கி முறைகளும் நலன்களைப் பெற முயலும் நிலையை தவிர்க்க இப்பொதித் திட்டம் தேவை என்பதாகும். கடந்த வாரம் வியாழக்கிழமை அயர்லாந்தின் அரசாங்கம் நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் இருக்கும் அனைத்து சேமிப்புக்களுக்கும் ஒட்டு மொத்தமாக உத்தரவாதம் கொடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. பிரிட்டிஷ் வங்கியாளர்கள் உடனடியாக இந்த நடவடிக்கையை குறைகூறினர்; இது அயர்லாந்து வங்கிளுக்கு நியாயமற்ற நலனைக் கொடுக்கிறது என்றும் இங்கிலாந்தில் இருக்கும் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களை திருடுவதற்கு அதற்கு இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வங்கியாளர்கள் உடனடியாகக் குறைகூறினர்.அன்றே கிரேக்க அரசாங்கம் இதேபோன்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது; அந்நாட்டு நிதி மந்திரி George Alogoskoufis கிரேக்கத்தின் வங்கி முறை "முற்றிலும் பாதுகாப்பாகவும், நம்பகத் தன்மை உடையதாகவும் உள்ளது" என்று அறிவித்தார். இந்த விவாதத்திற்கு நடுவே பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சிறு உச்சிமாட்டிற்கு, அதாவது G8 என்னும் தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள உறுப்பு நாடுகளின் கூட்டத்தை சனிக்கிழமையன்று கூட அழைப்புவிடுத்தார். பிரான்ஸ் மற்றும் லுக்சம்பேர்க் நாடுகளின் நிதி மந்திரிகள், மற்றும் முக்கிய ஐரோப்பிய வங்கியாளர்களின் ஆதரவு இருந்த போதிலும் கூட ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புத் திட்டம் பாரிஸில் சனியன்று நடைபெற்ற கூட்டத்தின் செயற்பட்டியலில் இடம் பெற முடியவில்லை. உச்சிமாநாட்டிற்கு முன்பு ஜேர்மனியின் நிதி மந்திரி மற்றும் பொருளாதார மந்திரி ஆகியோர் பிணை எடுப்புத் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்; இதற்கு ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆதரவு கொடுத்தார். இத்தகைய ஐரோப்பிய ஒன்றிய நிதி பற்றிய ஜேர்மனியின் மன உளைச்சல்கள் வங்கிகளுக்கு பிணை எடுப்பு பற்றி எவ்வித கொள்கையளவு எதிர்ப்பையும் தளமாகக் கொண்டிருக்கவில்லை. ஜேர்மனியத் தலைவர்கள், மற்றும் பிரிட்டன், இத்தாலி மற்றும் பிரான்ஸ் தலைவர்களும் அமெரிக்க போல்சன் திட்டத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் வங்கிகளின் இலாபங்களை மிக அதிக அளவிற்கு உயர்த்தக்கூடிய பொருளாதார, சமூகக் கொள்கைகளைத்தான் தொடர்கின்றன. சமீப நாட்களில், மேர்க்கெல், சார்க்கோசி மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் ஆகியோர் அனைவரும் தங்கள் நாடுகளின் பொது கருவூலத்தில் இருந்து முக்கிய வங்கிகள், நிதிய நிறுவனங்கள் ஆகியவற்றின் மோசமான கடன்களை காப்பாற்றும் வகையில் மாபெரும் நிதிகளை திசைதிருப்பும் கருவிகளாக இருந்துள்ளனர். ஆனால் ஜேர்மனிய மந்திரிகளின் தொடர்ந்த கருத்துக்கள், ஜேர்மனியின் வரி செலுத்துபவர்களின் பணத்தை ஜேர்மனிய வங்கிக்கு முட்டுக் கொடுக்கும் முயற்சிக்கு கறக்கப்படுவதற்கு தாங்கள் மிக விருப்பம் கொண்டாலும், HRE ஐப் பொறுத்தவரையில் நடந்ததைப் போல், அவர்கள் போட்டி ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளுக்கு நலன் தரக்கூடிய திட்டத்தில் பங்கு பெறத் தயாராக இல்லை. முக்கியமாக ஜேர்மனியின் அழுத்தத்தின் காரணமாக லுக்சம்பேர்க் மற்றும் பிரான்ஸ் ஆகியவை உச்சமாநாட்டின் செயல்பட்டியலில் இருந்து தாங்கள் கொண்டுவர இருந்த பிணை எடுப்புத் திட்டத்தை கைவிட நேர்ந்தது. அப்படிப்பட்ட திட்டம் எதையுமே தான் வகுக்கவில்லை என்று கூறும் அளவிற்கு ஜனாதிபதி சார்க்கோசி சென்றார். அதே நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள் இருக்கும் ஆதாரங்கள் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நிதியப் பிரிவான அதன் நிதியப் பிரிவின் மீது எந்தவித கட்டுப்பாடு, விதிகள் போன்ற தொலை விளைவுதரக்கூடிய நடவடிக்கைகளை எதிர்ப்பதாகத் தெளிவுபடுத்தி விட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையின்மையை அடிக்கோடிடும் வகையில், பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், குறிப்பாக ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய 23 நாடுகளை அழைக்காததற்காக உச்சிமாநாட்டை குறைகூறின. பாரிஸ் உச்சிமாநாடு நடப்பதற்கு முன்பு, கூடியிருந்த தலைவர்கள் அதிகம் சாதிக்க மாட்டார்கள் என்பதுதான் தெளிவாக இருந்தது. ஜேர்மனியின் அதிபர் இந்த உச்சிமாநாடு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பங்குதாரர்களும் மோசமான கடன் கொடுத்ததற்கு பொறுப்பானவர்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கான செலவில் தங்கள் பங்கைக் கொடுக்கும் பொறுப்பு உடையவர்கள் என்று வலியுறுத்தினார்; அதே நேரத்தில் சார்க்கோசி "ஊக வணிகர்களைவிட", "சிறந்த முயல்வோர்களுக்கு" வெகுமதி அளிக்கும் முதலாளித்துவ அமைப்பு தேவை என்ற அழைப்பைக் கொடுத்தார். இத்தகைய அறிக்கைகள் முற்றிலும் பொதுமக்களுக்காக கூறப்படுபவை ஆகும். பாரிசில் கூடிய தலைவர்கள் எவரும் நிதிய நெருக்கடிக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என நினைப்பது முற்றிலும் ஒரு பொய்தோற்றம் ஆகும். இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியும் நாட்டின் தனிப்பட்ட பெரும் செல்வந்தர் ஆவார்; இவர் தன்னுடைய சொத்துக் குவிப்புக்களை சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் தொடர்புடைய உடன்பாடுகள் மூலம்தான் ஏற்படுத்திக் கொண்டவர். பல பில்லியன்களுக்கு உரிமையாளரான இவர் இத்தாலிய நிதிய உயரடுக்கில் ஒரு முக்கிய நபர் ஆவார். முன்பு சார்க்கோசி பிரான்சின் மிகச் செல்வம் கொழித்த செய்தி ஊடக பிரமுகர்களுடனான நட்பை பறை சாற்றிக் கொள்ளுவது வழக்கம். Lazard நிதியக் குழு என்னும் பில்லியன்கள் மதிப்புடைய வங்கியாளர்கள் பணம் கொடுத்த வகையில் இவர் விடுமுறைகளைக் கழித்துள்ளார். ஜேர்மனிய நிதி மந்திரி Peer Steinbrück ஐ பொறுத்தவரையில், Der Spiegel இதழ் அவருடைய HRE க்கு கொடுத்த பிணை எடுப்பு நிதியான 27 பில்லியன் யூரோ, ஜேர்மனியின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் வங்கியாளர் Joseph Ackermann உடன் நள்ளிரவிற்குப் பின் சொந்த தொலைபேசி உரையாடலை தொடர்ந்துதான் உடன்பாடு காணப்பட்டது என்று தகவல் கொடுக்கிறது. பாரிஸ் உச்சிமாநாடு உருப்படியான விளைவுகளை சாதிக்க முடியாத நிலை முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருக்கும் பெருகிய தேசிய அழுத்தங்களின் வெளிப்பாடாகும்; இறுதிப்பகுப்பாய்வில், ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் தற்போதைய நெருக்கடியை தீர்க்க திறனின்மை ஆகும். ஒரு புதிய வாரம் ஆரம்பித்திருக்கையில், எந்த ஐரோப்பிய வங்கி அடுத்து வீழ்ச்சியுறும் என்பது பற்றிப் புதுப்பிக்கப்பட்ட ஊகங்கள் உள்ளன. |