World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fighting intensifies as Sri Lankan army advances on LTTE stronghold

இலங்கை இராணுவம் புலிகளின் கோட்டைக்குள் நுழையும் நிலையில் மோதல்கள் உக்கிரமடைகின்றன

By Sarath Kumara
29 September 2008

Back to screen version

இலங்கைப் படைகள் கடந்த தசாப்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவத் தலமையகங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்த வட இலங்கையின் கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் கடுமையான மோதல்கள் இடம் பெறுகின்றன. இராணுவத்திடம் தோல்வியடைவது புலிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இராணுவத் தோல்வியாக இருப்பது மட்டுமன்றி தனித் தமிழ் அரசுக்கான புலிகளின் அரசியல் குறிக்கோளுக்கும் ஒரு அடியாக விளங்கும்.

தீவின் கிழக்கிற்குள் எஞ்சியிருந்த பகுதிகளில் இருந்து புலிகள் வெளியேற்றப்பட்ட பின், இலங்கை இராணுவம் வடக்கு வன்னிப் பிராந்தியத்தின் மீது 2007 ஜூலையில் இருந்து தனது தாக்குதலைக் குவிமையப்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த மன்னார், விடத்தல்தீவு, மற்றும் மல்லாவி உட்பட வன்னியின் மேற்குப் பகுதியில் கனிசமான பிரதேசங்களை இழந்துள்ளனர். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால், வன்னியின் மேற்குப் பகுதிக்கும் யாழ்ப்பாணக் குடநாட்டில் எஞ்சியுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் மற்றும் வன்னி கிழக்கில் குறிப்பாக கிழக்குக் கடற்கரை பகுதியில் முல்லைத் தீவில் உள்ள பிரதான தளத்துக்கும் இடையிலான தொலைத் தொடர்பு மற்றும் விநியோகப் பாதைகளையும் இராணுவத்தால் துண்டிக்க முடியும்.

நன்கு தயாரிக்கப்பட்ட தற்காப்பு நிலைகளில் இருந்து பெருமளவில் புலிகளின் படைகள் மோதலில் ஈடுபட்டுள்ள போதிலும், தமது உயர் எண்ணிக்கையிலான துருப்புக்களையும் அதி உயர் சுடு திறனையும் பயன்படுத்தும் இராணுவத்தின் முற்றுகை யுத்தத்தை நிறுத்த புலிகளால் முடியவில்லை. கடந்த திங்கட்கிழமை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா, "எமது படையினர் கிளிநொச்சியைச் சுற்றி 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கிறார்கள்," என பெருமையாக கூறிக்கொண்டார். "உண்மையிலேயே எங்களால் சில கட்டிடங்களைப் பார்க்க முடிகிறது... நாங்கள் அடுத்த வாரத்தில் கிளிநொச்சி நகரை நோக்கி முதலாவது தாக்குதலை நடத்துவோம்," எனவும் அவர் கூறினார்.

நேற்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி உட்பட வன்னியில் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படை குண்டு வீச்சுக்களை உக்கிரமாக்கியுள்ளது. இராணுவத்தின் உடனடி இலக்கு, இலங்கையின் வடக்கு-தெற்கு பிரதான வீதியான ஏ9 இல் அமைந்துள்ள கொக்காவில் கிராமத்துக்கு முன்னேறுவதேயாகும். அதைக் கைப்பற்றினால் கொக்காவிலுக்கு தெற்குப் பக்கமாக உள்ள பிரதான வீதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கிளிநொச்சியில் இருந்து துண்டிக்கமுடியும்.

ஏற்கனவே அதிகளவிலான மக்கள் வன்னியின் பெரிய நகரமான கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள். சண்டே டைம்ஸ் எழுதியதாவது: "நேற்று நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள சிவிலியன்களில் 85 வீதமானவர்கள் வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரில்லாக்களால் இயக்கப்பட்ட சில அலுவலகங்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன. கெரில்லாக்கள் நின்ற போதிலும் சில முகாம்களும் இடம் மாற்றப்பட்டுள்ளன. 30,000 பிள்ளைகள் கல்வி கற்றுக் கொண்டிருந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கச்சேரி (மாவட்ட செயலாளர் காரியாலயம்) மட்டும் குறைவான ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது."

மும்முனைகளில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிரதான நகரமான மல்லாவியை மீட்ட பின்பு, இரணுவம் தனது துருப்புகளை கிளிநொச்சிக்கு அண்மையாகக் கொண்டுவரக் கூடியவாறு அக்கராயன்குளம் பகுதி மீது கவனம் செலுத்தியது. பூநகரியைக் கைப்பற்றி யாழ் குடாநாட்டுக்கான ஏ-32 பிரதான பாதையைத் திறப்பதற்கான பரந்த தாக்குதல் திட்டத்தின் ஒரு பாகமாக மேற்குக் கரையோரத்தில் நாச்சிக்குடா நோக்கி இராணுவம் நகர்ந்தது. மேற்கு கரையோரத்தில் புலிகளின் தளங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தென் இந்தியாவில் இருந்து புலிகளுக்கு கிடைக்கும் விநியோகங்களை துண்டிக்க இராணுவம் முயற்சிக்கின்றது. மும்முனைகளில் ஒன்றான கிழக்கில் உள்ள வெலிஓயாவில் அரசாங்கப் படைகள் பல பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ளன.

இராணுவம் மற்றும் புலிகளும் கடும் மோதல்கள் நடைபெறுவதாக செய்திகள் வெளியிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்ததாவது: "இராணுவத் தாக்குதலை நீடிக்கச் செய்வதற்காக புலிகள் உறுதியான எதிர்த் தாக்குதல்களை நடத்தும் நிலையில், குறிப்பாக அக்கராயன்குளம் மற்றும் நாச்சிக்குடா பிரதேசங்களில் இருந்து புலிகளுக்கும் துருப்புக்களுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்பான செய்திகள் இடைவிடாது வந்துகொண்டிருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மூலோபாய ரீதியில் வன்னிக்குள் இராணுவத்தின் முன்னேற்றத்தில் இது முக்கியமான அம்சம்: ஏ-32 பாதை அருகில் உள்ள பூநகரியே அடுத்த தரிப்பிடம். இங்கு புலிகள் தமது ஆட்டிலறி கணைகளை குவித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது."

இரு பகுதிகளும் வழங்கும் தரவுகள் பரந்தளவில் மாறுபடுவதுடன், சாவு எண்ணிக்கை தொடர்ந்தும் குவிந்துகொண்டிருக்கின்றது. செப்டம்பர் 15ம் திகதி, அக்கராயன்குளத்தைச் சூழ நடைபெற்ற மோதல்களில் இராணுவம் தமது தரப்பில் மூன்றுபேர் மட்டும் உயிரிழந்து 9 பேர் காயமடைந்ததாக ஏற்றுக்கொண்ட அதேவேளை, புலிகள் 22 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும் 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர். இதே பிரதேசத்தில் செப்டம்பர் 19 அன்று பாதுகாப்பு அமைச்சு 17 புலிகள் கொல்லப்பட்டதாகவும் அதேவேளை தமது தரப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது. முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் பத்திரிகையாளர்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதோடு இராணுவத்துடன் தொடர்புள்ள செய்தியாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் தரவுகளை விமர்சித்தாலோ அல்லது முரண்பட்டலோ அச்சுறுத்தப்படும் நிலையில் இந்த தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வழியில்லை.

மனவலிமையை தூக்கி நிறுத்தும் முயற்சியில், செப்டம்பர் 9 ம் திகதி வவுனியா கூட்டுப்படை இராணுவத் தளம் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். இரண்டு இலகுரக விமானங்களினதும் மற்றும் ஆட்லறியினதும் பின்பலத்துடனும் ஒரு தொகை தற்கொலைக் குண்டுதாரிகள் இராணுவத்தின் பிரதான ராடார் கோபுரத்தை இலக்கு வைத்தனர். இந்த ராடார் கோபுரம் புலிகளின் விமானங்களைக் கண்காணிப்பதற்கும் மற்றும் விமானப்படைகளின் தாக்குதலுக்கு வழிகாட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாகும். இத் தாக்குதலில் ஆகக் குறைந்தது 11 புலிப் போராளிகள் மற்றும் ஒரு பொலிசார் 12 சிப்பாய்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். விமானப்படை புலிகளின் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் ஆவர். இது அரசாங்கத்தின் இனவாத யுத்தத்திற்கு இந்தியாவின் ஆதரவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தென் இந்தியாவில் இருக்கும் தமிழ் வெகுஜனங்களுக்கு மத்தியிலான ஆத்திரத்தை தணிக்கும் வழிமுறையாகவே இந்திய அரசாங்கம் இந்த மோதல்களுக்கு அரசியல் தீர்வு காணுமாறு தொடர்ந்தும் அழைப்பு விடுக்கின்றது. எவ்வாறாயினும், அதே நேரம், புலிகளால் பெறப்படும் எந்தவொரு வெற்றியும் இந்தியாவுக்குள் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கும் என புது டில்லி கவலைகொண்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கை இராணுவத்தை இந்தியா இரகசியமாக தூக்கி நிறுத்துகிறது.

பலவீனமடைந்துள்ள புலிகள்

புலிகளின் இராணுவ நிலைமை மென்மேலும் அவநம்பிக்கையானதாகவே தோன்றுகிறது. அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் உள்ள அனைத்து இயலுமானவர்களையும் இராணுவப் பயிற்சிக்கு புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர். தனது அமைப்பு கடந்த காலத்தில் "மக்கள் படைகளை" கட்டி எழுப்பி அரசாங்கத்தின் நிலைகளை "ஓயாத அலைகள்" முலம் கைப்பற்றியது, என்று புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்தார். தாங்கள் இராணுவத்துக்கு ஒரு பொறியை அமைத்துக் கொண்டிருப்பதாக சமிக்கை காட்டுவதுடன் தற்போதைய தாக்குதல்களின் முக்கியத்துவத்தை அவர் மூடிமறைக்கிறார்.

"1990 நடுப்பகுதியில் யாழ்ப்பாண சிவிலியன்கள் இடம்பெயர்ந்தபோது, புலிகள் நலிவுற்றிருந்ததாக ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால், நாம் முல்லைத் தீவை மீண்டும் கைப்பற்றியபோது மக்கள் எங்களுடன் இருந்தார்கள் என்பதை நாங்கள் உலகுக்குக் காட்டினோம்... புலிகள் சுவருடன் ஒட்டியிருந்து அரசாங்க இராணுவத்தை எதிர்கொண்டது இது முதற் தடவை அல்ல," என நடேசன் கூறினார். ஆயினும், கடந்த காலப் பெருமைகளை சமர்ப்பித்தல் புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ பலவீனத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

புலிகளின் தனித் தமிழ் குட்டி அரசு முன்னோக்கு எப்போதும் இந்தியாவினதும் மற்றும் ஏதாவதொரு பெரும் வல்லரசிலேயே தங்கயிருந்தது. குறிப்பாக 2000ல் புலிகள் பெற்ற இராணுவ வெற்றியின் பின்பு, 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் அவர்கள் கைச்சாத்திட்டதோடு வடக்கு, கிழக்கில் அரசியல் சுயாட்சியை வழங்கும் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் தலமையிலான அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைக்குள் நுழைந்தனர். இந்தியாவும் ஆதரவளிக்க, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையளித்தன. ஆனால், இந்த சக்திகளில் எதுவும் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை பங்கிட ஆதரவளிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைவதற்கு முன்னர் புலிகள் "பயங்கரவாதத்தை" கைவிட்டு நிராயுதபாணியாக வேண்டும் என வலியுறுத்தியது.

ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ 2006 நடுப்பகுதியில் நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் மூழ்கடிக்க அல்லது இந்த வருட முற்பகுதியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய எடுத்த முடிவினை எந்தவொரு பெரும் வல்லரசும் எதிர்க்கவில்லை. ஆனால், மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்த வேளை, புதிய ஆயுதக் கொள்வனவு ஊடாக இலங்கை இராணுவத்தின் இயலுமை அதிகரிக்கப்பட்டது. 2000ல் பல்குழல் ஏவுகனை ஏவிகள் மற்றும் ஆட்டிலறிகளுடன் இருந்த இராணுவ நிலைகளை புலிகள் தகர்த்த அதே இடங்கள், இன்று இராணுவத்தின் தீர்க்கமான விளிம்புகளாக இருக்கின்றன. இராணுவம் புதிய யுத்த விமானங்களையும் மற்றும் நீண்ட தூரம் ஏவக்கூடிய ஆட்டிலறிகளையும் கண்மூடித்தனமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது பயன்படுத்த தயங்கவில்லை.

அதே நேரத்தில், புலிகள் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனும் புலிகளை "பயங்கரவாத அமைப்பாக'' தடை செய்து, பெருந்தொகையான தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்த நிதி மற்றும் அரசியல் ஆதரவை கீழறுத்தன.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோர்வே ஆகிய சமாதான முன்னெடுப்புக்கான இணைத் தலைமை நாடுகள் கடந்த புதன்கிழமை ஐ.நா வில் சந்தித்தோடு, மோதல்களில் அகப்பட்டுள்ள பொது மக்கள் பற்றி கவலை தெரிவிக்கும் ஒரு முற்று முழுதான பாசாங்கான அறிக்கையை அவை வெளியிட்டன. அமெரிக்கப் பிரதி இராஜாங்கச் செயலாளர் றிச்சட் பெளச்சர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில், இந்தக் கூட்டம் "சிவிலியன்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இப்பொழுதே ஒரு தொகை அழுத்தங்களை" முன்வைத்துள்ளதோடு "அரசாங்கம் உடனடியாக அது கைப்பற்றிய பிரதேசங்களில் மனித உரிமை காப்பை" விரிவுபடுத்தவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது, என்றார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. உதவிப் பணியாளர்களை கிளிநொச்சியில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகங்களைக் கட்டுப்படுத்துவதோடு விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆட்லறிக் குண்டுகளைப் பொழிவதன் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னியைச் சுற்றி தமது மரணப் பிடியை இறுக்கமாக்குவதே அரசாங்கத்தின் உபாயமாகும். விமானப்படை சிவிலியன்களை அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் வருமாறு அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரங்களை போட்டது. ஒரு பக்கத்தில் புலிகளின் கட்டுப்பாடு காரணமாகவும் அரசாங்கத்தின் மீதும் இராணுவத்தின் மீதும் உள்ள வெறுப்பின் காரணமாகவும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அதைக் கடைப்பிடித்தார்கள்.

புலிகளிடம் இருந்து மக்களை "விடுவித்து", "மனித உரிமைகளை" உறுதிப்படுத்துவதற்கு மாறாக, இலங்கை அரசாங்கம் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பிரதேசங்களில் மட்டுமன்றி, தீவு பூராகவும் யுத்தத்தைப் பயன்படுத்தி பொலிஸ்-அரச சட்டங்களை விரிவு படுத்துகிறது. குறிப்பாக திட்டமிட்ட அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் விசாரணையற்ற எதேச்சதிகாரமான கைதுகளுக்கு தமிழ் சிறுபான்மையினர் இலக்காகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, நூற்றுக் கணக்கான மக்கள் இராணுவத்தின் நேரடி வழிநடத்தலுடன் அல்லது உதவியுடன் தொழிற்படும் கொலைப்படைகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளர்கள்.

வடக்கில் நடக்கும் மோதல்களில் ஒரு மதிப்பீட்டின் படி 300,000 பேர் இடம்பெயரத் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டுள்ள ஐ.நா. உதவி நிறுவனங்கள், போதிய உணவு, தங்குமிடம் மற்றும் மருந்து இன்றி அல்லலுறும் அகதிகளின் நிலைமையைப் பற்றி கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா. கூட்டத்தை அடுத்து ஒரு சிறிய சலுகையாக, வன்னியில் உள்ள அகதிகளுக்கு உணவு வழங்க ஐ.நா. அதிகாரிகளும் கூடச் செல்ல அனுமதிப்பதாக இலங்கை அரசாங்கம் அனுமதித்தது.

யுத்தத்தின் தாக்கம் தொடர்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் பரந்த பகைமையை திசை திருப்ப, புலிகளை வெல்வதில் இராஜபக்ஷ அரசாங்கம் அக்கறை செலுத்துகிறது. 25 ஆண்டுகால யுத்தம் ஏற்கனவே 70,000 க்கும் அதிகமான உயிர்களை பலியெடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக யுத்தத்துக்கான பிரமாண்டமான செலவு 30 வீதமான பணவீக்கத்தையும் வாழ்க்கை நிலைமை சீரழிவையும் இயக்கும் பிரதான காரணியாகி இருந்து வந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பதிலாக, புலிகள் மீதான இராணுவ வெற்றி, தீவின் முதலாளித்துவ ஆட்சியின் அடிப்படை தோற்றத்தில் வேரூன்றியுள்ள இனவாத மோதல்களின் பண்பில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோபூர்வ சுதந்திரத்தில் இருந்தே, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிரித்து பலவீனப்படுத்த சிங்கள இனவாதத்தை அவ்வப்போது பயன்படுத்தி வந்துள்ளன. 1983ல் யுத்தம் வெடிப்பதற்கான முன் நிகழ்வாக, தீவு பூராவும் தமிழர் விரோத படுகொலைகள் இடம்பெற்றன. இதன் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் தமிழர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டன. 25 ஆண்டுகளின் பின்னர், தீவின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாத இராஜபக்ஷ அரசாங்கம், யுத்தத்தையும் மற்றும் அதன் பொலிஸ் அரச நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் சாதாரண உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பை கோரவும் இரக்கமின்றி அதே இனவாத சீட்டை ஆடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved