World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Asian stocks tumble after rejection of US bailout package

அமெரிக்க பிணையெடுப்பு பொதி நிராகரிக்கப்பட்டதை அடுத்து ஆசிய பங்குகள் தடுமாறுகின்றன

By John Chan
2 October 2008

Back to screen version

வோல் ஸ்ட்ரீட்டை மீட்பதற்கு புஷ் நிர்வாகம் வழங்கவிருந்த 700 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீட்புப் பொதியை அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடந்த செவ்வாய்க் கிழமை நிராகரித்ததை அடுத்து ஆசியா பூராவும் உள்ள பிரதான பங்குச் சந்தைகள் மோசமாக தடுமாறுகின்றன. ஜப்பானின் நிக்கெய் (Nikkei) 5 வீதத்தை இழந்துள்ளது. தாய்வானின் பிரதான சுட்டெண் 6.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததோடு ஹொங்கொங் 6.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பினையெடுப்பு சம்பந்தமாக வாஷிங்டனில் நடந்துகொண்டிருந்த விவாதத்தை முதலீட்டாளர்கள் பதட்டத்துடன் கவனத்துக்கொண்டிருந்த நிலையில், புதன் கிழமை ஆசிய சந்தைகளில் ஒரு சிறிய மீளெழுச்சி காணப்பட்டது.

தென் கொரியாவும் தாய்வானும் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் பங்குகளில் இலாபம் பெறும் ஒரு வழியாக, சொற்ப விற்பனைகளை தடைசெய்ய அவசர நடவடிக்கைகளை அமுல்படுத்தின. அத்தகைய வியாபாரம் சந்தைகளை மேலும் கீழே இழுக்கும் என அதிகாரிகள் பீதியடைந்தனர். பேங்க் ஒஃப் ஜப்பான் (BoJ) செவ்வாயன்று 3,000 பில்லியன் யென்களை (28.8 பில்லியன் டொலர்) உட்செலுத்திய போதிலும், இந்த நடவடிகை நாட்டின் இறுக்கமான கடன் சந்தையை நெகிழ்வாக்க சிறிதளவே பங்காற்றியது. மொத்தத்தில், கடந்த மாதம் நிதி அமைப்புக்கு முண்டு கொடுக்கும் முயற்சியில் BoJ 19 பில்லியன் யென்களை செலவிட்டுள்ளது.

குறிப்பாக செவ்வாய் கிழமை ஆசிய வங்கிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சீனாவின் பங்குச் சந்தைகள் நாட்டின் ஒரு வாரகால தேசிய தின விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த போதிலும், அரசுக்கு சொந்தமானதும் உலகின் மிகப் பெரும் மூலதனத்தை கொண்டதுமான சீன கைத்தொழில் மற்றும் வர்த்தக வங்கி (Industrial & Commercial Bank of China), ஹொங் கொங்கில் -சந்தை மூடப்பட்ட போது 1.6 வீத சொற்ப மீளெழுச்சியுடன்- 8.7 வீதத்தை இழந்தது. HSBC ஹொங் கொங்க சந்தையில் 7.7 வீதத்தை இழந்தது. யூரோப்பியன் பேங்க் ஃபோர்டீஸின் (European bank Fortis) நெருக்கடியால் அதன் பிரமாண்டமான பங்குதாரரும் சீனாவின் முன்னணி காப்புறுதி நிறுவனமுமான பிங் ஆன் (Ping An) மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று மோர்கன் ஸ்ரான்லியில் (Morgan Stanley) 20 வீத பங்கை வாங்கிய, ஜப்பானின் மிகப்பெரிய வங்கி முதலீட்டாளரான மிட்சுபிசி யூ.எஃப்.ஜி பினான்ஷியல் (Mitsubishi UFJ Financial) 4.7 வீத வீழ்ச்சியை நெருங்கியது. அதன் மோர்கன் ஸ்ரான்லி உடமைகள் ஒரே நாளில் 500 மில்லியன் டொலர்களால் சுருங்கிப் போனது. தோல்விகண்ட லெஹ்மன் பிரதர்ஸின் (Lehman Brothers) ஆசிய நிர்வாகங்களை வாங்கிய ஜப்பானின் பிரமாண்டமான தகரகரான நொமுரா ஹோல்டிங் (Nomura Holding) 7.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது.

ஜப்பானின் பிரதான மின்னணு கூட்டுத்தாபனங்களான சோனி, கனொன் மற்றும் நின்டென்டோ, முறையே 7.1 வீதம், 6.1 வீதம் மற்றும் 4 வீதத்தால் வீழ்ந்தன. அமெரிக்க டொலருக்கு எதிராக யென் வளர்ச்சி கண்டதால் ஏற்றுமதிகளும் பாதிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு முந்திய காலத்தோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் 21.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததுடன் சேர்த்து, 26 வருடங்களில் முதல் தடவையாக ஆகஸ்ட்டில் ஜப்பானில் மாதாந்த வர்த்தக பற்றாக்குறை பதிவாகியிருந்தது.

ஜப்பானில் மேலும் பின்னடைவுகளுக்கான அறிகுறிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. கைத்தொழில் உற்பத்திகள் வருடாந்த அடிப்படையில் ஆகஸ்ட்டில் 6.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2001 ஜனவரியின் பின்னர் ஏற்பட்ட பிரமாண்டமான வீழ்ச்சியாகும். வேலையின்மை வீதம் 4.2 வீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பின் எதிரில் நுகர்வோர் செலவு 4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பிரமாண்டமான வாகன சந்தையான சீன வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் மத்தியில் சீனாவில் டொயோடாவின் (Toyota) உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து செய்வாய் கிழமை அதன் பங்கு விலை 4.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவில், நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான ICICI வங்கியின் ஆட்டங்கண்ட நிதி நிலைமைகள் தொடர்பான வதந்திகளுக்கு மத்தியில் அதன் பங்குகள் 7.2 வீதத்தால் கவிழ்ந்து போயுள்ளது. ICICI இன் சேமிப்புகளுக்கு இந்திய ரிசேர்வ் வங்கி உத்தரவாதம் அளித்த பின்னரே அதன் பங்கு விலைகள் மீண்டும் தலைதூக்கின. மும்பாயில் சென்செக்ஸ் (Sensex) பங்கு சுட்டெண்கள் செவ்வாய் கிழமை இருந்த 12,595 புள்ளிகளில் இருந்து இறங்காது என இந்திய அலுவலர்கள் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்த போதிலும், இந்தச் சுட்டெண்கள் அக்டோபரில் 11,000 புள்ளிகளையும் விட வீழ்ச்சியடையும் என சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூகோள பின்னடைவு தொடர்பான பீதியை வெளிப்படுத்திய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், "நிதி நெருக்கடி பிரதான வணிகத்தில் பின்னடைவை ஏற்படுத்துமெனில், அது எமது ஏற்றுமதிகளை இடருக்குள் ஆழ்த்திவிடும்," எனத் தெரிவித்தார். இந்தியாவின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பகுதியை அமெரிக்கா கொண்டுள்ளது, அல்லது அது கடந்த ஆண்டு 158 பில்லியன் டொலர்களாக இருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்படும் எந்தவொரு வீழ்ச்சியும் வேகமாக வளர்ச்சியுறும் இந்திய பொருளாதாரத்தில் கனமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆசியாவில் உள்ள ஆய்வாளர்கள் பொதுவில் ஐயத்தையே வெளிப்படுத்துகின்றனர். சம்சுங் செக்குரிட்டீஸை (Samsung Securities) சேர்ந்த ஒரு ஆய்வாளரபான கிம் ஹக்-ஜூ (Kim Hak-joo) புதன் கிழமை தென் கொரியாவின் சொசுன் இல்போவுக்கு (Chosun Ilbo) தெரிவித்ததாவது: "இப்போதைக்கு, அமெரிக்க நிதி நெருக்கடி ஒரு நிலையில் இருப்பதாக தெரிகின்ற போதிலும், நாம் இரண்டாவது அதிர்ச்சியை எதிர்நோக்குகிறோம். இது மக்கள் கடந்த காலத்தில் அதிகம் செலவிட்டுள்ளதால் நுகர்வோர் செலவில் ஒரு கவலைக்கிடமான முரண்பாட்டை இன்றியமையாததாக்கும். அண்மைய ஆண்டுகளில் தென் கொரிய நுகர்வோர் பெருமளவில் கடன் அட்டைகளிலும் மற்றும் மலிவு கடன்களிலும் தங்கியிருப்பவர்களாகியுள்ளனர் என அவர் சுட்டிக் காட்டினார்.

குறை மதிப்பு சொத்துக்களுக்கு பாதுகாப்பின்மை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருப்பதாக ஆசிய வங்கிகள் கூறிக்கொள்ளும் அதேவேளை, வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களும் வணிக கடன்களும் வரண்டு போகின்றமை, முழு பிராந்திய பொருளாதாரத்திற்கும் ஒரு பிரதான பிரச்சினையாகும். தென் கொரிய வங்கிகளின் சேமிப்புக்கு-கடன் விகிதமானது ஆசியாவிலேயே அதி உயர்ந்த 100 வீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது அவர்களை கடன் துன்பத்தில் பாதிக்கப்டக் கூடியவர்களாக ஆக்கும். டொலரில் மதிப்பிடப்படும் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தென் கொரிய உற்பத்திகள் -ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்து டொலருக்கு எதிராக 29 வீதத்தில் வீழ்ச்சியடைந்ததுடன் சேர்த்து-- தேசிய நாணய வீழ்ச்சியினால் பாதிக்கப்படுகின்றன.

ஹொங் கொங் நாணய அதிகார சபை (The Hong Kong Monetary Authority -HKMA) நெருங்கிவரும் நிதி நெருக்கடி "புயல்" தொடர்பாக எச்சரிக்க விடுத்தாலும் கூட, ஹொங் கொங் வங்கிகள் திடமாக இருக்கின்றன என பொது மக்களுக்கு உறுதியளிக்க நடவடிக்கை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்த லெஹ்மன் பிரதர்ஸின் (Lehman Brothers) கடன்களை கிழக்காசிய வங்கி (Bank of East Asia) வைத்துள்ளது என்ற இணையத்தள வதந்தியை அடுத்து, அந்த வங்கிக் கிளைகளுக்கு வெளியில் பணத்தை மீளப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான சேமிப்பாளர்கள் கடந்த வாரம் வரிசையில் நின்றபோது, நம்பிக்கை குறைவான நிலைமை வெளிப்பாடாகியது. லெஹ்மன் பிரதர்ஸில் பணத்தை இழந்த ஹொங் கொங்கில் உள்ள சிறிய முதலீட்டாளர்கள், நிதி உதவி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிதி நெருக்கடி பீதியின் சமநிலை

முழு பிராந்தியமும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கனமாக தங்கியிருக்கின்றமை, ஆசிய பொருளாதாரத்தை குறிப்பாக பூகோள நிதி நிலைகுலைவினால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளியுள்ளது. சீன, ஜப்பான், ஹொங் கொங் மற்றும் தென் கொரிய மத்திய வங்கிகள், ஏற்றுமதியில் சேர்த்த பிரமாண்டமான வெளிநாட்டு நாணய சேமிப்பை அமெரிக்க திறைசேரி பத்திரத்திலும் மற்றும் ஏனைய அரசாங்க கடன் பத்திரங்களிலும் பிரமாண்டமாக முதலீடு செய்வதற்காக பயன்படுத்தியுள்ளன. இந்த முதலீடுகள் அமெரிக்க டொலருக்கு எதிராக அவர்களின் நாணயத்தை வளர்ச்சியில் வைத்திருப்பதுடன், பிரமாண்டமான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறைக்கு உத்தரவாதமளிக்க உதவுகிறது இதன் மூலம் ஆசிய ஏற்றுமதிகளை தொடர்ந்தும் கொள்வனவு செய்வதை இயலச் செய்கின்றது.

அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பின் கடனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை சீனாவும் (1 ட்ரில்லியன் டொலர்களுக்கும் அதிகம்) மற்றும் ஜப்பானும் (860 பில்லியன் டொலர்) தாங்குகின்றன. இரு நாடுகளும் அமெரிக்க டொலரின் பலவீனத்தின் ஊடாக பிரமாண்டமான இழப்புக்களை தாங்குகின்றன. வோல் ஸ்ரீட்டின் நெருக்கடியின் பிரதிபலனாக, டொலரை அடிப்படையாகக் கொண்ட சொத்துக்களை வாங்குவதை நிறுத்துவதா அல்லது கைவிட்டு விடுவதா என்பது பற்றி பெய்ஜிங் மற்றும் டோக்கியோவில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன -இந்த நகர்வு அமெரிக்க நிதி அமைப்பில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

செப்டெம்பர் 29 வோல் ஸ்ரீட் ஜேர்னலின் படி, இரண்டு கடன் கொடுக்கும் இராட்சத வங்கிகளான ஃபன்னி மே (Fannie Mae) மற்றும் ஃப்ரெடி மெக் (Fannie Mae) ஆகியவற்றை பினையெடுத்ததற்கான பிரதான காரணம், "அமெரிக்க கடன் பத்திரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என, ஒரு மதிப்பீட்டின்படி 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை தாங்கும் சீனாவுக்கு உறுதியளிப்பதே" ஆகும். அமெரிக்க கடன்களை தாங்குவதற்காக ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள வங்கிகள் தொடர்ந்தும் கொண்டுள்ள விருப்பத்தில் பெருமளவில் சார்ந்திருப்பதை இந்த 700 பில்லியன் டொலர் பினையெடுப்பு சாத்தியமாக்கும் என அந்த செய்தித் தாள் சுட்டிக் காட்டியது.

அமெரிக்காவுக்கும் அதன் கடன்காரர்களுக்கும் இடையிலான தற்போதைதைய உறவை "நிதி நெருக்கடி பீதியின் சமநிலை" என ஒரு முறை முன்னாள் அமெரிக்க திறைசேரி செயலாளர் லோரன்ஸ் சும்மர்ஸ் (Lawrence Summers) விவரித்தார். சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகள் அமெரிக்காவின் கடனில் பெரும் பகுதியை தாங்குகின்ற நிலையில், டொலரை கீழறுக்கும் எந்தவொரு பின்னடைவும், எஞ்சியுள்ள சொத்துக்களில் பிரமாண்டமான இழப்புக்களை விளைவாக்கும். எவ்வாறெனினும், டொலர் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கினால், அனைவரும் தமது இழப்புக்களை குறைத்துக்கொள்ள முயற்சிக்கும் நிலையில் அது வெளியேற்றத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தி, மெரிக்க டொலரின் பொறிவை துரிதமாக்கும்.

தற்போது, அமெரிக்க மற்றும் பூகோள நிதி அமைப்பின் பொறிவு சீனாவில் வெடித்துச் சிதறும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில், அதன் டொலர் சொத்துக்களில் கைவிடுவதற்கு பனையமாக அதிகளவில் இருப்பதாக பெய்ஜிங் தீர்மானித்துள்ளது. கடந்த வாரக் கடைசியில் டைன்ஜினில் (Tianjin) நடந்த உலக பொருளாதார சபை கூட்டத்தில் சீன அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உதவ "சர்வதேச ஒத்துழைப்புக்கு" அழைப்பு விடுத்தனர். இந்த கூட்டத்தில் 2,000 பூகோள பிரதான நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொருளியலாளர்களும் வருகை தந்திருந்தனர்.

சைனா கன்ஸ்றக்ஷன் பேங்கின் (China Construction Bank) தலைவர் குவோ ஷுகுயிங் (Guo Shuqing) மாநாட்டில் தெரிவித்ததாவது: "அமெரிக்காவுக்கு எது நல்லதோ அது சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் நல்லதே." வோல் ஸ்ரீட்டில் நெருக்கடியை நெகிழ்வுபடுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்புடன் சீன நிதி அதிகாரிகள் கலந்துரையாடினர் என சிட்டிகுரூப் தலைவர் வில்லியம் ரொட்ஸ் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அளவில் சுமார் அரைவாசி சீன ஏற்றுமதியை பெறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுக்கான ஏற்றுமதியில் தெளிவான வீழ்ச்சியின் காரணாமக சீன பொருளாதாரம் மந்த நிலையடைந்துள்ளது. பத்தாயிரக்கணக்கான ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்றுமதி மந்தமடையும் நிலையில், ஏனைய இரு பொருளாதார தூண்களான தனியுரிமை சொத்து சந்தை மற்றும் வாகன சந்தையும் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. மறு பக்கம், இந்த காரணிகள் உருக்கு மற்றும் நிலக்கரி உற்பத்தியில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன, மற்றும் இதன் காரணமாக மூலப்பொருட்களுக்கான கேள்வியும் சரிகின்றது. வட்டி வீதம் மற்றும் கடன் வீதத்தையும் வெட்டி, அதேபோல் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு நிர்மாணிப்புகளையும் தூண்டுகின்ற போதிலும், பல பொருளியலாளர்கள் சீன அடுத்த ஆண்டு வெறும் 8 வீத வளர்ச்சியையே கொண்டிருக்கும் என கவலைகொண்டுள்ளனர். சிலர் வெறும் 5-6 வீதத்தை முன்னறிவிக்கின்றனர்.

சீனாவில் ஏற்படும் எந்தவொரு சரிவும், சீனாவிலான உற்பத்தியுடன் மேலும் மேலும் ஒருங்கிணைந்து வருகின்ற ஆசிய பிராந்தியம் பூராவும் அமெரிக்க மந்த நிலையின் தாக்கத்தை உக்கிரமாக்கும். தென் கிழக்காசிய நாடுகளின் சங்கத்தை (ASEAN) சேர்ந்த நாடுகள், அதேபோல் தென் கொரியா மற்றும தாய்வானும், சீனாவுக்கு மூலப் பொருட்களையும் மற்றும் பாகங்களையும் ஏற்றுமதி செய்கின்ற அதேவேளை, ஆஸ்திரேலியா சீனாவுக்கு பிரமாண்டமான தொகையில் கனிப்பொருட்களையும் ஜப்பான் தொழில் மூலதனப் பொருட்களையும் ஏற்றுமதி செய்கின்றது. உலகின் பிரதான வணிகங்களின் சரிவை எதிர்த்துப் போரிடும் பொருளாதார இயந்திரமாக சீனா இருக்கும் என்ற எந்தவொரு எதிர்பார்ப்பும், துரிதமாக ஆவியாகிக்கொண்டிருக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved