World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காA tale of two bailouts இரு பிணை எடுப்புக்களின் கதை By Bill Van Auken அமெரிக்க கார்த் தொழிலுக்கு ஒரு தீவிர கண்டனத்தை வழங்குவதற்கு திங்களன்று நடைபெற்ற தன்னுடைய செய்தியாளர் கூட்டத்தை பாரக் ஒபாமா பயன்படுத்திக் கொண்டு, அதை திவால்தன்மையில் இருந்து மீட்பதற்கு "வரம்பற்ற நிதி" கொடுக்கப்படமாட்டாது என்றும் கூறிவிட்டார். அதே மூச்சில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் அத்தகைய "வரம்பற்ற நிதி" வங்கிகளுக்கும், நிதிய அமைப்புக்களுக்கும் கொடுப்பதற்காக தன் ஆதரவை தெரிவித்தார்; அவற்றை காப்பாற்ற "அனைத்தையும்" தான் செய்ய இருப்பதாகவும் வலியுறுத்தினார். இத்தகைய இரட்டை தரத்தில் புதிதான சிறப்பு ஏதும் இல்லை. புஷ்ஷால் பின்பற்றப்பட்ட கொள்கைகளுக்கும் வரவிருக்கும் இவருடைய நிர்வாகத்தின் கொள்கைகளுக்கும் இடையே இருக்கும் அடிப்படை தொடர்ச்சியைத்தான் ஒபாமாவின் அறிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதேபோல் ஜனநாயக கட்சித் தலைமையில் இருக்கும் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டுடன் இணைந்தும்தான் ஒபமாவின் கருத்துக்கள் உள்ளன; அது 25 பில்லியன் டாலர் பிணை எடுப்புப் பொதி கார்த் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க அனுமதி வாங்குவதை காட்டிலும் கடந்தவாரம் கார்த் தொழிலுக்கு தன் முதுகைக் காட்டுவதை, மூன்று பெரும் நிறுவனங்கள் திவால் தன்மை அடையக்கூடிய ஆபத்தை, அதையொட்டி மூன்று மில்லியன் வேலைகள் அழிப்பு ஏற்படக் கூடியதை விரும்பித்தேர்ந்தது. இப்பொதிக்கு வாக்களிக்காததற்காக காங்கிரசை ஒபாமா பாராட்டினார். வோல் ஸ்ட்ரீட் என்று வரும்போது எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் வரிப்பணத்தை எவ்வளவு வரம்புமின்றி கொடுப்பதற்கு அனைவரும் தயாராக உள்ளனர். ஆனால் கார்த் தொழிலை பொறுத்தவரையில் அதன் தொழிலாளர்களின் மீது சுமத்தப்படும் இரக்கமற்ற சலுகைகள் மூலம் அவை திருப்பிப் பெற முடியும் என்றால் அரசாங்க உதவி என்பது கொடுக்கப்பட முடியாத தன்மையை அதிகம் கொண்டதாகும். தன்னுடைய செய்தியாளர் கூட்டத்தில், தன்னுடைய நிர்வாகம் "இந்த நெருக்கடியை தீர்க்க தற்போதைய நிர்வாகம் கொடுத்த பகிரங்க உறுதிகளை கெளரவப்படுத்தும்" என்று உறுதியளித்தார். திங்களன்று Bloomberg News கொடுத்த தகவல்படி, அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே $7.4 டிரில்லயன் --வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்த பணத்தை போல் 10 மடங்கு-- வங்கிகளையும் நிதிய நிறுவனங்களையும் காப்பாற்ற உறுதியளித்துள்ளது. இத்தகைய மகத்தான தொகை அமெரிக்காவின் முழு உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கு சமமாகும்; மேலும் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் தலைமீது 24,000 டாலரை சுமத்தும். இப்பணத்தின் பெரும் பங்கு பெடரல் ரிசேர்வில் இருந்து வருகிறது; அது $4.4 டிரில்லியன் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. ப்ளூம்பெர்கின் கருத்துப்படி பெடரல் இப்பொழுது ஒராண்டிற்கு முன் கொடுத்த சராசரி வார விகிதத்தைப் போல் 1,900 மடங்கு அதிகத்தில் பணத்தை கடன் கொடுக்கிறது. இப்படி வெள்ளம் எனக் கொடுக்கப்படும் ரொக்கம்தான், அமெரிக்க மக்களுடய ஒப்புதல் ஒருபுறம் இருக்க, காங்கிரஸில் வாக்குகூட போடப்படாமல் அளிக்கப்படுகிறது. எந்த வங்கிகள் நலன் அடைந்நதுள்ளன, எவ்வளவு ரொக்கம் அவை பெற்றன, இத்தகைய மாபெரும் கடனை கொடுப்பதற்கு அரசாங்கம் எந்த இணைப் பொறுப்பை பெற்றுக் கொண்டது ஆகியவற்றை கூறுவதற்குக் கூட பெடரல் ரிசேர்வ் மறுக்கிறது. சமீபத்திய தவணை ஞாயிற்றுக் கிழமை சிட்டி குழுமத்திற்கு மாபெரும் பிணை எடுப்பு என்ற வடிவில் வந்துள்ளது. நாங்கள் ஒன்றும் கார் முதலாளிகளுக்காக வக்காலத்து வாங்கவில்லை; அவர்களுடைய இலாப நலன்களுக்காக பிணை எடுப்பிற்கு ஆதரவையும் கொடுக்கவில்லை. ஆயினும்கூட GM, Ford, Chrysler ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் இழிவுடன் நடத்தப்படுவதற்கும் சிட்டிக்ரூப்பின் தலைமைக்கு கொடுக்கப்படும் பெரும் கனிவான முறைக்கும் பெரும் வேறுபாடு இருப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். கடந்த வாரம் வெறும் கையுடன் வாஷிங்டனில் இருந்து திரும்புவதற்கு முன் காங்கிரஸ் குழுக் கூட்டங்களில் இரண்டு நாட்கள் கடிந்துரையை எதிர்கொண்ட கார்த்தொழில் தலைமை நிர்வாக அதிகாரிகளை போல் இன்றி சிட்டி குழுமத்தின் தலைவர் விக்ரம் பண்டிட் அங்கு வரக்கூடிய தேவைகூட இருக்கவில்லை; அதே போல் காங்கிரஸ் வாக்கிற்குக் காத்திருக்கவும் இல்லை. வங்கியின் பிணை எடுப்பிற்கான விதிகள் அனைத்தும் மூடிய கதவுகளுக்குப் பின் நிதி மந்திரி ஹென்றி போல்சன் (முன்னாள் கோல்ட்மன் சாக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி) இன்னும் பல மூத்த அதிகாரிகளால் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிந்தன. கார் முதலாளிகளுக்கு மேலாண்மை தோல்வியில் இருந்து தனி ஜெட்டுக்களில் வாஷிங்டனுக்கு பயணிப்பது வரை அனைத்து பற்றியும் உபதேசம் கொடுக்கப்பட்டபோது, செய்தி ஊடகம் "கார்த் தொழிலாளர்களுக்கு "தங்க முலாம் பூசப்பட்ட நலன்கள்" பற்றி சீற்றத்துடன் உரக்கக் கூவியது வரை, எவரும் பண்டிட்டை அவர் ஏன் நெருக்கடி நிலைந்த வங்கியின் தலைவர் என்ற முறையில் பொதுப்பணத்தின் மூலம் பிணை எடுப்பை கேட்கிறார் என்று வினாவிற்கு உட்படுத்தவில்லை; எப்படி வங்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுவதற்காக $165 மில்லியன் ஒதுக்குநிதி கொடுக்கப்பட்டதற்கும் அதிகமாக அவருக்கு $30 மில்லியன் மதிப்புடைய போனஸ் தொகை கொடுக்கப்பட்டது என்ற வினாவை எழுப்பவில்லை. கேபிள் நியூஸ் "பண்டிதர்கள்" நியூ யோர்க் சென்ட்ரல் பார்க்கிற்கு அருகே $18 மில்லியன் மதிப்புடைய அடுக்ககத்தில் இருப்பவர் "கையில் தட்டை" ஏந்தி எதற்காக அரசாங்கத்திடம் வரவேண்டும் என்று கேட்கவில்லை. ஒபாமாவும் காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சித் தலைமையும் கார் நிறுவனங்கள் ஒரு சென்ட் பணம் பெறுவதற்கு முன் "வருங்கால உறுதியான செயல்பாட்டுத்திட்டத்தை" கொடுக்க வேண்டும் என்று கோரிய நிலையில், அத்தகைய திட்டம் ஒன்றும் சிட்டி குழுமத்திடம் இருந்து கேட்கப்படவில்லை. மக்களுக்குக் கூறப்பட்டதெல்லாம் ஒரு அரைப்பக்க அறிக்கைதான்; நிதி அமைச்சரகம், பெடர் ரிசர்வ் மற்றும் FDIC ஆகியவை கூட்டாகக் கொடுத்த அந்த அறிக்கை பிணை எடுப்பு பற்றிய அரசாங்க அறிவிப்பைக் கொண்டிருந்தது; ஆனால் அதில் சிட்டி குழுமத்திற்கான நிபந்தனை ஏதும் இல்லை. இத்தகைய இரட்டைத் தரம் மற்றும் பாசாங்குத்தனத்தை எப்படி விளக்க முடியும்? மூன்று பெரு நிறுவனங்களும் தவறான மேலாண்மையினால், தோல்வியடைய தகுதி உடையவைதான் என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால் நிர்வாகத்தின் மதிப்பில் 90 சதவிகிதத்திற்கும் மேலான தொகையை --$244 பில்லியனில் இருந்து $20.5 பில்லியன் என்று கொண்டுவந்ததை-- இரண்டு ஆண்டுகளுக்குள் இழந்துவிட்ட சிட்டி குழும நிர்வாகத்தை பற்றி என்ன கூறுவது? இன்னும் முக்கியமாக இத்தகைய மகத்தான இழப்புக்களுக்கு வங்கியின் பொறுப்பற்ற குறைந்த பிணை மதிப்பு கடன் கொடுத்தல், பாதுகாப்பு பத்திரமாக மாற்றுதல் என்று அளப்பரிய போனஸ் பணத்திற்காக சிட்டி குழுமத்தின் வணிகர்கள், மூத்த நிர்வாகிகள் செய்திருந்த ஊகச் செயல்கள்தான் காரணம் ஆகும். இல்லை, ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் அரசாங்கம் சிட்டி குழுமத்தின் தனியார் இலாபமாக்கலை விட்டுவிட்டு அதன் இழப்புக்களை சமூகமயப்படுத்தும் அதேவேளை, மூன்று பெருநிறுவனங்கள் காற்றில் அலைமோத விடுதல் என்பது திட்டவட்டமான வர்க்க நலன்களின் பேரில்தான் என்று கூறவேண்டும். வரவிருக்கும் கார் நிறுவனங்களின் திவால் நிகழ்வில், ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள், பணி நிலைமைகள் மற்றும் சமூக நலன்கள்மீது மகத்தான தாக்குதல் நடத்தி நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கம் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்துதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டுள்ளது. இதன் நோக்கம் தொழிலாள வர்க்கம் முழுவதற்கும் அடையாளக் குறிப்பாக வரலாற்றளவில் இருக்கும் கார் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டு தொகையை அடையாளம் காட்டுதல் ஆகும். இதூ முழுத் திவால் தன்மையினால் மற்றும் மில்லியன் கணக்கான வேலைகள் அழிப்பில் அடையப்படலாம் அல்லது ஊதியங்களைக் குறைத்து, வேலையில் இருப்பவருக்கு சுகாதார மற்றும் ஓய்வூதிய நலன்களை குறைப்பதற்கும் ஓய்வு பெற இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு ஓய்வுதியங்கள் சுகாதாரக் காப்பீட்டை அகற்றுவதற்கும் கைம்மாறாக நீட்டிக்கப்படும் மீட்பு என்று அழைக்கப்படுவதன் மூலம் அடையப்படலாம். இத்தகைய தாக்குதல் நாடெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் எதிராக நடத்தப்பட இருக்கும் தாக்குதல்களுக்கு முன்னோடியாகப் பயன்படுத்தப்படும். இந்த மூலோபாயம் அமெரிக்க முதலாளித்துவம், தொழில்துறை தகர்ப்பு மற்றும் மிகப் பெருகிய முறையில் அமெரிக்கப் பொருளாதாரத்தை நிதிய முறையில் செலுத்துதல் ஆகியவற்றின் சரிவுடன் பிணைந்துள்ளது. இவை அனைத்தும்தான் சிட்டி குழுமம் மற்றும் மற்ற முக்கிய வங்கிகளின் ஊக நடவடிக்கைகளை ஊக்குவித்து அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கின் இலாபத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தன; ஆனால் GM, போர்ட் மற்றும் கிறைஸ்லர் போன்ற நிறுவனங்களின் உற்பத்திச் செயற்பாடுகளுக்கு உதவவில்லை. வோல் ஸ்ட்ரீட்டிற்கு தடையின்றியும் மூன்று பெருநிறுவனங்களுக்கும் ஐக்கிய கார்த்தொழில் சங்கத்திற்கும் கொடுக்காமல் இருக்கப்படும் அரசாங்க பிணை எடுப்புக்கள் நிதிய நெருக்கடியின் பாதிப்பில் இருந்து சராசரி தொழிலாளர்களை காக்கும் நோக்கம் கொண்டது என்ற கூற்றுக்கள் பொய் ஆகும். மிகப் பரந்த மக்கள் தொகுப்பின் இழப்பில் உயர்மட்டத்தில் இருக்கும் 1 சதவிகிதத்தினரின் நலன்களைக் காக்கத்தான் இவை செயல்படுத்தப்படுகின்றன. 1930 களின் பெருமந்த நிலை சூழலுக்கு திரும்புவதற்கு எதிராக காக்கும் வகையில் தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடிக்கு தன்னுடைய தீர்வை முன்வைக்க வேண்டும். முதலாளித்துவ சொந்தக்காரர்களுக்கு பதிலாக இது கார்த் தொழில் தேசியமயமாக்கப்பட வேண்டும், அது பொதுப் பயன்பாடு என மாற்றப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோர வேண்டும். பொருளாதாரத்தை ஆழ்ந்த பாதாளத்தில் தள்ளி பல மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மை மற்றும் வறுமையில் தள்ள இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சிட்டி குழுமம் மற்றும் ஏனைய முக்கிய வங்கிகள், நிதிய நிறுவனங்களும் இதே போல் நிர்வாகிகளுக்கும் பெரும் பங்குதாரர்களுக்கும் இழப்பீடு ஏதும் இன்றி தேசியமயமாக்கப்பட வேண்டும். இவ்விதத்தில்தான் தொழிலாள வர்க்கத்தால் தோற்றுவிக்கப்படும் செல்வம் தரமான ஊதியங்கள் உடைய வேலைகள், வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியங்கள் என அனைவருக்கும் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட முடியும். இத்தகைய போராட்டத்திற்கு அரசியல் முன்னிபந்தனை தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து உறுதியாக முறித்துக் கொண்டு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்கு போராடும் தன்னுடைய சொந்தக் கட்சியை கட்டியமைப்பதுதான். |