World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Auto bailout provides pretext for assault on US workers

வாகனத்துறை பிணையெடுப்பு அமெரிக்க தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு போலிகாரணம் அளிக்கிறது

By Jerry White
21 November 2008

Back to screen version

ஒட்டுமொத்தமாக வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் அதன் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்த, அமெரிக்காவின் பெரிய மூன்று வாகனத்துறை நிறுவனங்களுக்காக முன்வைக்கப்பட்ட 25 பில்லியன் டாலர் பிணையெடுப்பை பயன்படுத்தி வருகிறது என்பதை கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள், மருத்துவ சலுகைகள், கூலிகள் மற்றும் பணியிட நிலைமைகளை அழிக்கவும், சங்கங்களின் ஒப்பந்தங்களை முறிக்கவும் வழிவகுக்கும் அண்மை பொறிவில் நிறுவனங்கள் சிக்கியிருக்கும் நிலையில், ஊடகங்களும், இரண்டு கட்சியின் அரசியல்வாதிகளும் முற்றிலும் ஏற்க முடியாத வகையில் ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறிஸ்லர் நிறுவனங்கள் குறித்து போலியான குற்றச்சாட்டுக்களை வெளிக்காட்டி வருகின்றன. இது பல ஆலைகள் மூடப்படுவதையும், பத்து ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்படுவதையும் உட்கொண்ட இரக்கமற்ற தொழில்துறை மறுசீரமைப்பின் மையப்புள்ளியாக உள்ளது. வோல் ஸ்டிரீட் வங்கியாளர்கள் மற்றும் ஊக வணிகர்களுக்கு இலாபம் தரும் முதலீடுகளுக்கான ஓர் ஆதாரமாக ஒரு மிகச்சிறிய மற்றும் உயர்ந்தளவில் சுரண்டும் தொழிற்துறை வடிவத்தை அளிப்பதே இதன் நோக்கமாகும்.

வாகனத்துறை வேலைகளை அழிப்பது மற்றும் 1930களின் பரந்த போராட்டங்களில் இருந்து வாகனத்துறை தொழிலாளர்களின் முந்தைய தலைமுறைகளால் வென்றெடுக்கப்பட்ட ஆதாயங்களை நீக்குவது என்பது பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும், நாட்டின் ஒவ்வொரு பாகத்திலும் உள்ள தொழிலாளர்கள் மீதும் இதேபோன்ற தாக்குதலை தொடுப்பதற்கு பயன்படுத்தப்படும். 1979-80ன் கிறிஸ்லர் பிணையெடுப்பை போன்றே, ஆனால் அதை விட பரந்த அளவிலும், கொடூரமான முறையிலும் பாரியளவிலான வேலைவாய்ப்பின்மையால் தொழிலாளர் வர்க்கம் பாதிக்கப்பட இதுவோர் ஆயுதமாக பயன்படுத்தப்படும்.

திவால் நீதிமன்றங்கள் மூலமாகவோ அல்லது (United Auto Workers சங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, செயல்படுத்த உதவப்படும்) முன்னொருபோதும் இல்லாத சலுகைகளுடன் கூடிய பிணையெடுப்பு மசோதா மூலமாகவோ தொழிலாளர்கள் வறிய கூலிக்காக உழைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதுடன் அடிப்படை மருத்துவ மற்றும் ஓய்வூதிய நலன்களும் விலக்கி கொள்ளப்படும்.

இந்த இரண்டு நாட்கள் காங்கிரஸ் கூட்டத்தில், அந்த பெரிய மூன்று நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளையும், United Auto Workers (UAW) தலைவர் ரோன் கெட்டெல்பிங்கரையும் இரண்டு பக்கமிருந்த அரசியல்வாதிகளும் வசை பாடினார்கள். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, ஒரு வாகனத்துறை பிணையெடுப்பு மசோதாவிற்கான எந்த வாக்கெடுப்பையும், காங்கிரசில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் டிசம்பர் 8க்கு முன்னதாக அனுமதிக்க மாட்டார்கள் என்று அறிவிக்க வியாழனன்று மதியம் இவர்கள் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினர். இதற்கிடையில், வாகனத்துறை நிறுவனங்கள் "பொறுப்புமிக்க தன்மை மற்றும் சாத்தியமான தன்மைக்கு" உறுதியளிக்க ஒரு மறுசீரமைப்பு திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவித்தார்கள்.

செனட்டில் பெரும்பான்மை பெற்றிருக்கும் தலைவர் ஹேரி ரெய்ட் மற்றும் சபாநாயகர் நான்சி பிலோசி ஆகியோருக்கு ஒத்திசைவாக செனட்டின் வங்கியியல் குழுத்தலைவர் கிறிஸ்டோபர் டோட், வீட்டுத்துறை நிதியியல் சேவைகள் குழு தலைவர் பார்னே பிரான்க், கூட்டு பொருளாதார குழு தலைவர் சார்லஸ் ஸ்கூமெர் மற்றும் முக்கிய ஜனநாயக கட்சியினரும், வரிசெலுத்துவோர் நலன்களுக்கும், வாகனத்துறை நிறுவனங்களின் விமர்சனங்களுக்கும் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக்கொண்டனர்.எவ்வாறிருந்தபோதிலும் இந்த துணை பந்தியானது, அரசாங்கத்தின் எவ்விதமான கடனுதவியும் தொழிலாளர்களுக்கான சலுகைகளை இல்லாதொழிப்பதுடன் தொடர்புபட்டதாக இருக்கவேண்டும் என வலியுறுத்துவதாகும்.

ஒன்றோ அல்லது பல நிறுவனங்களோ திவாலாவதை தடுக்க உடனடியாக ஒரு தொகையை அனுமதிப்பதற்கு பதிலாக, இந்த பெரிய நிறுவனங்கள் எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனங்கள் தயாரிக்க உதவியாக முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 25 பில்லியன் டாலரை பயன்படுத்தலாம் என்றவொரு இருகட்சியின் திட்டம் குறித்து ஊடகங்களிடம் பேச, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சட்ட வல்லுனர்களின் மற்றொரு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு சில வினாடிகளுக்கு முன்னர் தான் முந்தைய முன்னறிவிக்கப்படாத அந்த பத்திரிகையாளர் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த குழு, முக்கிய அந்த மூன்று ஆலைகளுடன் இணைந்து, இந்த வார இறுதிக்கு முன்னால் அவர்களின் முறைமைகளை அளிப்பதற்கான ஒரு வாக்கெடுப்பிற்கு திட்டமிட்டன. இந்த திட்டமும், வேலை வெட்டுகள் மற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் குறைப்பு ஆகியவற்றுடன் கூடிய வாகனத்துறை நிறுவனங்களின் ஒரு திட்டத்தால் நிர்பந்திக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அவர்கள் மேடையில் தோன்றுவதற்குள், அவர்களின் திட்டம் ரெய்டு, பிலோசி மற்றும் நிறுவனங்களால் விவாதிக்கப்பட்டது. தெளிவாக, மூத்த ஜனநாயக கட்சி தலைவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டம், உடன்பாடு காணப்பட்ட பிணையெடுப்பில் ஒரு பிரிவினை பயனற்றதாக ஆக்குவதற்கான உள்நோக்கத்தை கொண்டிருந்தது. ஏன்? ஏனென்றால், எந்த பிணையெடுப்பு மசோதாவும் தொழிலாளர்கள் மீது போதியளவு இரக்கமற்ற தாக்குதல்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகத் தான்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியான பராக் ஒபாமா அவருடைய பங்கிற்கு, எந்தவித வாகனத்துறை பிணையெடுப்பும் தொழில்துறையின் எதிர்கால "நிலைப்புத்தன்மைக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவித்ததன் மூலம், ஒப்பந்த முறை சலுகைகளை வீசுவதற்கான கோரிக்கைகளில் தன்னைத்தானே ஐக்கியப்படுத்தி உள்ளனர். அவரின் மூத்த பொருளாதார ஆலோசகர்களின் ஒருவரும், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி ஜிம்மி கேட்டரியின் ஆட்சியில் பெடரல் ரிசர்வின் சேர்மேனாக நியமிக்கப்பட்ட முன்னாள் வோல் ஸ்டிரீட் வங்கியாளருமான பால் வோல்கர், வேலைவாய்ப்பின்மையில் பாரிய உயர்வு ஏற்படும் என்று கணக்கிட்டார். இது, சங்கங்களின் அதிகாரத்தை உடைக்கவும், பணிவிடுப்பு மற்றும் சம்பள வெட்டுகளுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை குழி தோண்டவும் பயன்படுத்தப்பட்டது. கிறிஸ்லர் பிணையெடுப்பு, அவர் மத்திய வங்கிக்கூட்டமைப்பில் இருக்கையில் அவரின் இறுதி காலத்தின் போது கொண்டு வரப்பட்டது.

இதே ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தான், இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திலிருந்து, ஊடகங்களின் முழு ஒத்துழைப்புடன், எவ்வித பொது விவாதமும் அல்லது பேச்சுவார்த்தையும் இல்லாமல், தங்களின் பேராசை, திறமையின்மை மற்றும் கவனமின்மையால் இந்த நிதியியல் முறையை பொறிவிற்கு கொண்டு வந்திருக்கும் கோடீஸ்வர வங்கியாளர்கள் மீது எவ்வித நிபந்தனைகளோ அல்லது அபராதமோ இல்லாமல் உடனடியாக வோல் ஸ்டிரீட்டிற்கான 700 பில்லியன் டாலர் பிணையெடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதில் புஷ் நிர்வாகத்துடன் சேர்ந்திருந்தனர்.

வங்கிகளுக்கு அவர்கள் அடிபணிவதற்கும், வாகனத்துறை நிறுவனங்கள் குறித்த அவர்களின் நிலைப்பாட்டிக்கும் இடையிலான இந்த மாறுபாடும், வெளிப்படையான முரண்பாடும், தொழில்துறை தொழிலாளர்கள் வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த பிரிவின் நல்மதிப்பை பெறுவதற்கு இந்த வாகனத்துறை நெருக்கடியை அவர்கள் பயன்படுத்த விரும்புவதை தான் எடுத்து காட்டுகிறது.

இந்த நிலைப்பாடு, பல ஆலைகளை மூடுவதையும், பத்து ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைப்பதையும் மற்றும் வாகனத்துறை நிறுவனங்களிலிருந்து மருத்துவ நலன்கள் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை வெட்டுவதையும் வலியுறுத்தும் ஒரு மாபெரும் ஊடக பிராச்சார நோக்கத்தில் அமைந்துள்ளது. வியாழனன்று, நியூயோர்க் டைம்ஸின் நிதியியல் துறை கட்டுரையாளர் ஆண்ட்ரூ ரோஸ் சோர்கின், ABC Newsன் "குட்மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் தோன்றிய போது, வாகன தொழில்துறையில் மறுசீரமைப்பு என்பது "தொழிற்சங்கங்களை நீங்கள் உண்மையில் உடைக்க இருக்கிறீர்கள்" என்பதை தான் பொருள்படுத்துகிறது என்றார்.

இந்த வார தொடக்கத்தில் டைம்ஸ் கட்டுரையில் அரசாங்கத்தின் பிணையெடுப்பை எதிர்த்த சோர்கின், அதற்கு பதிலாக அரசாங்க அனுமதியுடன் ஜெனரல் மோட்டார்சின் திவால் நிலையை அறிவிக்க அழைப்புவிடுத்தார். தங்களின் வேலை மற்றும் வாழ்க்கை தரங்கள் அழிந்து வருவதற்கான தொழிலாளர் எதிர்ப்பை உடைக்க இதுவே சிறந்த வழியாகும் என்று அவர் அறிவித்தார்.

மேலும் அவர் எழுதுகையில், "மிச்சிகனின் லேக் ஓரியனில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் Chery Malibu மற்றும் Pontiac G6 ஆகியவற்றை உருவாக்கும் ஓர் பொருத்துனரான, 39 வயது நிரம்பிய Kandy O'Neill எனும் பெண்மணியால், Detroit Free Pressக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற கருத்துக்களாலேயே "பாதி பிரச்சனையைத்" தொகுத்து விடலாம். அவரின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய திட்டம் மீதான வெட்டுக்கள் குறித்து அந்த பெண்மணி கூறுகையில், `நாம் போதியளவு விட்டு கொடுத்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன்' என்று தெரிவித்தார்.

எல்லோரும் தொழிலாளர்கள் மீது கடுமையான நடந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று தெரிவித்த அவர், "அங்கு வேலை செய்பவர்களைத் தவிர, நாங்கள் அங்கு என்ன செய்கிறோம் என்பது வேறு யாருக்கும் தெரியாது. அங்கு வேலை மிகவும் கடினமானது. அது சாதாரண வேலை இல்லை." என்றார்.

"இதுபோன்றதொரு வரியை நீங்கள் படிக்கும் போது, நீங்கள் அந்த பெண்மணி மீது இரக்கப்படலாம். ஆனால் பின்னர் திவாலாகாமல் இருக்க எதையும் செய்யலாம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்." என்று சோர்லின் குறிப்பிட்டார்.

அமெரிக்க வாகனத்துறை பொறிவிற்கு தொழிலாளர்கள காரணமல்ல. உரிமையாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் எடுத்த எந்த வியாபார முடிவுகளையும் அவர்கள் வேண்டாம் என்று கூறவில்லை. ஒரு பெருநிறுவன சர்வாதிகாரத்தில் மிதந்த இந்த உரிமையாளர்களும், மேலதிகாரிகளும் தான், தங்களின் பேராசையும், திறமையின்மையும் பேரழிவுக்கு இட்டு சென்ற போது தொழிலாளர்களைக் குற்றஞ்சாட்டினார்கள்.

தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தாத பல தசாப்தங்களாக பெருநிறுவனங்களின் தொங்குதசைகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் UAW, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலேயே குறியாய் உள்ளது.

வாகனத்துறை தொழிலாளர்களையும் மொத்த தொழிலாள வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்க ஒரேயொரு கொள்கை தான் உள்ளது. அதாவது, வாகனத்துறையை தேசிய உடமையாக்குவதுடன், அதை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் ஒரு பொது சொத்துள்ள நிறுவனமாக மாற்றும் ஒரு சோசலிச கொள்கை தான் அது. இந்த நடவடிக்கை, வங்கிகளையும் பொதுமக்களின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டுடைமை ஆக்குவதுடன் இணைத்து செய்யப்பட வேண்டும். இதன் மூலம், பொருளாதார வாழ்க்கை என்பது தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் மனித தேவைக்கான உற்பத்தி கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்படும்.

வாகனங்களின் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தி என்பது உலகளவிலுள்ள மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கி உள்ளது என்பதுடன் பெருமளவிலான இயற்கை வளங்கள், நிதி மற்றும் மனித ஆதாரங்களையும் உள்ளடக்கி உள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு நாகரீகமான வாழ்க்கை நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவும், பேரழிவுமிக்க தேசிய போட்டியை முடிவுக்கு கொண்டு வருவதற்குமான ஒரே வழி என்னவென்றால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாகனத்துறை தொழிலாளர்களை சர்வதேச அளவில் ஒன்றுபடுத்துவதேயாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved