World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan troops capture LTTE stronghold of Pooneryn

இலங்கை துருப்புக்கள் புலிகளின் கோட்டையான பூநகரியைக் கைப்பற்றியது

By Sarath Kumara
20 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கத் துருப்புக்கள் கடந்த சனிக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு நகரான பூநகரியைக் கைப்பற்றியது. தீவின் வடமேற்குக் கடற்கரை பிரதேசத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த பிரதேசமே பூநகரியாகும். புலிகள் பல நாட்கள் நடந்த கடுமையான மோதல்களின் பின்னர் வெளிப்படையாக அங்கிருந்து வெளியேறிவிட்டனர். 1997ல் இருந்து பூநகரியையும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகளுக்கு அதன் இழப்பு பெரும் அடியாகும்.

இப்போது நாட்டின் முழு மேற்குக் கரையோரப் பிரதேசத்தையும் இராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளமை, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள குறுகிய பாக்கு நீரிணை ஊடாக இருந்த மிகவும் நேரடியான விநியோக வழியில் இருந்து புலிகளை துண்டிக்கின்றது. வடகிழக்கு கடற்கரை பிரதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளின் கோட்டைகளுக்கான புலிகளின் கடற் போக்குவரத்து, நீண்ட கடற் பாதைகளை எடுக்க நேரும். இதனால் இலங்கை கடற்படையின் வழிமறிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகும்.

பூநகரி ஏனைய நோக்குநிலைகளில் இருந்தும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது கடலேரியின் தென் கரையோரத்துக்கு அருகில் உள்ளது. இந்த ஏரியின் வட பகுதி, யாழ்ப்பாண நகர் உட்பட அரசாங்கக் கட்டுப்பாட்டிலான யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தொடுகிறது. இங்கிருக்கும் படைகளுக்கான விநியோகத்தை இராணுவம் விமானம் மூலமோ கடல் மார்க்கமாகவோ மேற்கொள்ள வேண்டிருந்தது. இப்போது ஏ32 நெடுஞ்சாலை மற்றும் கிளாலி கடல் ஏரியூடாக யாழ்ப்பாணத்துக்கான முன்னைய நேரடிப் பாதையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியம் உள்ளது.

பூநகரி கைப்பற்றப்பட்டமையால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாலாலி இராணுவத் தலைமையத்துக்கு ஷெல் தாக்குதல் தொடுக்கப் பயன்படுத்தப்பட்ட நீண்ட தூர ஆட்டிலறி ஏவு தளத்தையும் புலிகள் கைவிடத் தள்ளப்பட்டனர்.

2006 ஜூலையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்ததில் இருந்து, கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களையும் இராணுவம் கைப்பற்றியது. கடந்த ஆண்டு பூராவும், வடக்கில் வன்னி பிராந்தியத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இராணுவ நடவடிக்கைகள் ஆழமான ஊடுருவல்களை ஏற்படுத்தியுள்ளன.

பூநகரியைக் கைப்பற்றியதோடு, வன்னியின் மேற்கில் பெரும் பகுதியை அரசாங்கப் படைகள் இப்போது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதோடு, புலிகளின் பிரதான இராணுவ மற்றும் நிர்வாக மையம் உள்ள கிளிநொச்சிக்கும் அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றது. நூற்றுக்கு அறுபது கிலோமீட்டருக்கும் அதிகமில்லாத பிரதேசத்துக்குள் இப்போது புலிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சிக்கு வெளியே, கிழக்கு கடற்கறை பிரதேசமான முல்லைத்தீவு, வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டுக்கான குறுகிய நுழைவாயிலான ஆனையிறவு போன்றவை புலிகளின் பிரதான தளங்களாக உள்ளன.

கிளிநொச்சியைக் கைப்பற்றப்போவதாக அரசாங்கம் பறைசாற்றிக் கொண்டாலும், புலிகள் நகரைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஏனைய பிரதேசங்களில் இருந்து போராளிகள் அழைத்துள்ள நிலையில் மோதல்கள் இடைநடுவில் நின்றுள்ளதாகவே தோன்றுகின்றது. முன்னரங்கு பகுதிகளுக்கு சுயாதீன பத்திரிகையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆயினும், இரு தரப்பினரும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிக்கொள்ளும் நிலையில் கடுமையான மோதல்கள் நடப்பதாகவே தோன்றுகிறது.

கிளிநொச்சியின் வடக்கு நோக்கி இராணுவம் இன்னுமொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஆனையிறவுக்கு வடக்கே உள்ள முகமாலையில் நவம்பர் 16 அன்று நடந்த மோதலில் 20 படையினர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர். நவம்பர் 18 அன்று, அதே பிரதேசத்தில் 36 புலி போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் இராணுவம் அறிவித்தது. இந்த உரிமை கோரல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வழியில்லை.

திங்களன்று, கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரதான நகரும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியுமான மாங்குளத்தை இராணுவம் கைப்பற்றியது. முல்லைத்தீவில் இருந்து வரும் ஏ34 நெடுஞ்சாலை ஏ9 பாதையுடன் இணையும் பிரதான சந்தியிலேயே மாங்குளம் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரையில் முல்லைத்தீவில் இருந்து நகரும் இன்னுமொரு இராணுவப் பிரிவுடன் இணைவதற்கான உந்துதல் ஒரு அச்சுறுத்தலாகும்.

இராணுவம் புலிகளின் நிலைகளைத் தாக்குவதற்கு மட்டுமன்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள பொது மக்களை அச்சுறுத்துவதற்கும் தனது உயர்தர சுடுசக்தியை பயன்படுத்த தயங்காது. இந்த மோதல்களில் சுமார் 300,000 பொது மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட உணவு, தங்குமிடம், தண்ணீர் மற்றும் சுகாதார நிலைமைகளுடன் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கடந்த செப்டெம்பரில் அனைத்து ஐ.நா மற்றும் அரச சார்பற்ற உதவி அமைப்புக்களையும் அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் கட்டளையிட்டது.

பெப்பிரவரி வரை தொடரும் வட-கிழக்கு பருவ மழையின் ஆரம்பத்தால் அகதிகள் எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலைமைகளை விபரித்து நேற்று சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "மழை இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீது பெரும் துன்பத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மருந்துகள் பற்றாக்குறையால் தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு அல்லது இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதால் ஆஸ்பத்திரிகளை நகர்த்த தள்ளப்பட்டுள்ளதால் வன்னியில் சுகாதார சேவையில் ஊழியர்கள் மற்றும் விநியோகப் பற்றாக்குறை மோசமாகக் காணப்படுகிறது."

துருப்புக்களும் புலி போராளிகளும் சிரமமான நிலைமைகளில் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். படையினர் எதிர்கொள்ளும் நிலைமையை விளக்கி கடந்த வார இறுதியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில்: "குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. மிகப் பெருந்தொகையான தண்ணீர் போத்தல்கள் கொழும்பில் இருந்து கொண்டு செல்லப்பட வேண்டும். முன்னரங்குகளில் உள்ள சிலருக்கு சூடான சாப்பாடு ஆடம்பரப் பொருளாகும்... தண்ணீர் வசதி கிடைக்கும் போது மட்டுமே குளியல். அது ஒன்று அல்லது இரு வாரங்களாகக் கூட இருக்கலாம். பல வாரங்களாக உறவினர்களுடன் தொடர்பு கிடையாது," என குறிப்பிடப்பட்டுள்ளது.

"அவர்கள் சமர்க்களத்தில் காயப்படும் போது, அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பின்புறத்தில் காவிச் செல்லும் ட்றக் வண்டியின் குலுக்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் செல்லும். அதன் பின்னரே அவர்கள் விமானத்தில் அல்லது வீதி வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவார்கள்," என அந்த கட்டுரை மேலும் தெரிவிக்கின்றது.

எவ்வாறெனினும், நாடு பூராவும் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமையில் இருந்து கவனத்தை திசைதிருப்ப அரசாங்கம் வெற்றிக்காக அலைகின்றது. பூநகரியைக் கைப்பற்றியதை அடுத்து, "யுத்த வீரர்களுக்கு புகழ் பாராட்ட" கொடியேற்றும் ஆரவாரத்தை ஒரு வாரத்திற்கு அது அறிவித்துள்ளது. துருப்புக்களை புகழ்வதற்காக தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி இராஜபக்ஷ, ஆயுதங்களை உடனடியாக கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்தின் கொண்டாட்டங்கள், யுத்தத்தின் பொருளாதார சுமைகளைத் தாங்கத் தள்ளப்பட்டுள்ள சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் இருந்து சிறிய பிரதிபலிப்பையே ஏற்படுத்தியது. முன்னெப்போதும் இல்லாதவாறு 200 பில்லியன் ரூபா (1.8 பில்லியன் அமெரிக்க டொலர்) வரை பாதுகாப்பு செலவை மேலும் உயர்த்தியுள்ள மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள் மீது உட்பட வரிகளை மேலும் அதிகரித்துள்ள 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இப்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. பணவீக்கம் இப்போது 30 வீதத்தை சூழ நகர்ந்து கொண்டிருக்கின்றது.

புது டில்லியில் உரையாற்றிய இராஜபக்ஷ, "தமிழர்களை பாதுகாக்கும் அதே வேளை பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதாக" மீண்டும் ஒரு முறை கூறிக்கொண்டார். அரசாங்கம் "தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை" வழங்கும் என அவர் பிரகடனம் செய்தார். "அத்தகைய அரசியல் தீர்வு" அவசியமாவது ஏன் என்ற கேள்வியை அந்த கருத்துக்கள் எழுப்புகின்றன. 25 ஆண்டு கால யுத்தம் "பயங்கரவாதத்துக்கு" முடிவு கட்ட அன்றி, தீவின் தமிழ் சிறுபான்மையினர் மீது கொழும்பில் உள்ள சிங்கள ஆளும் தட்டின் மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது என்பதே யாதார்த்தாமாகும்.

நவம்பர் 6 அன்று, வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த இராஜபக்ஷ, கிழக்கைக் கைப்பற்றிய பின்னர் முன்னெடுத்த கொள்கை போன்று, வடக்கில் புலிகளின் கோட்டைகளைக் கைப்பற்றிய பின்னரும் வடக்கின் வசந்தம் என்ற வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதியளித்தார். "பல தசாப்தங்களின் பின்னர், வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஒரு அபிவிருத்தி மூலோபாயத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் தோன்றுகின்றது" என அவர் பெருமையாக பிதற்றிக் கொண்டார்.

அரசாங்கம் கிழக்கில் ஸ்தாபித்திருப்பது என்னவெனில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி.) என்ற இழிபுகழ்பெற்ற துணைப்படை கருவியின் கட்டுப்பாட்டிலான மாகாண நிர்வாகத்தின் தலைமையிலான ஒரு இராணுவ ஆக்கிரமிப்பாகும். உள்ளூர் மக்களை மலிவு கூலிகளாக சுரண்டுவதன் பேரில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சுதந்திர வர்த்தக வலயங்களை ஸ்தாபிப்பதையே "அபிவிருத்தி" என்பதன் உள்ளடக்கமாகும். இதே முறையிலான "விடுதலையே" வடக்கிலும் அமுல்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது.