World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's huge stimulus package: another sign of economic crisis

சீனாவின் மாபெரும் ஊக்கப் பொதி : பொருளாதார நெருக்கடி பற்றிய மற்றொரு அடையாளம்

By John Chan
11 November 2008

Back to screen version

ஞாயிறன்று சீன அரசாங்கம் 4 டிரில்லியன் யுவான், அதாவது $US586 பில்லியன் டாலர் மதிப்பு உடைய மாபெரும் ஊக்கப் பொதியை அறிவித்துள்ளது, நாட்டின் விரைவான பொருளாதாரச் சரிவை மாற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு கடினமான முயற்சி ஆகும். எதிர்பார்த்ததைவிட ஏற்றுமதிகளில் விரைவான சரிவு வந்துள்ள நிலைமையில் வீட்டு மனை, நில வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில், உள்நாட்டு தேவைக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்தில் இந்த இரண்டாண்டு திட்டம் அடிப்படைக் கட்டுமான செயற்திட்டங்கள் மற்றும் சமூக செலவினங்களில் குவிப்புக் காட்டுகிறது.

இப்பொதித் தொகை சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியாககிறது; இது ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 2 சதவீதம் கூடுதலாக உயர்த்தும் என்று கருதப்படுகிறது. இரயில்வேக்கள், சுரங்கப் பாதைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கும் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பேரழிவிற்கு உட்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் சீரமைப்பதற்கும் இது பயன்படுத்தப்படும். குறிப்பாக விவசாயம் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்கள் சற்று தளர்த்தப்படும். மூலதன இயந்திரங்களுக்கு செலவழிப்பதில் தள்ளுபடி செய்ய அனைத்துத் தொழிற்சாலைகளையும் அனுமதிப்பதன் மூலம் வணிகத்தின் மீதான வரிகள் ஆண்டு ஒன்றுக்கு 120 பில்லியன் யுவான்களாக குறைக்கப்படும். குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வீடு, அதிகமான விவசாயப் பொருட்களுக்கு உதவித் தொகைகள் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் ஆகியவை நுகர்வோர் செலவினத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் மந்திரி சபையான அரசு அவையானது, ஒரு அறிக்கையில் "கடந்த இரு மாதங்களில் உலக நிதிய நெருக்கடி நாளாந்தம் உக்கிரமடைந்து வருகிறது" என்றும், அதையொட்டி "பொருளாதாரத்திற்கு ஊக்கம் தருவதற்காக விரைவாக, கடுமையான" நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் இந்த மாபெரும் உதவிப் பொதி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவினால் சீன ஏற்றுமதிகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டு வரத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினாலும் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குத் தக்க இழப்பீட்டைக் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சியைக் கண்டபின் சீனப் பொருளாதாரம் இப்பொழுது விரைவில் சரிந்து கொண்டிருக்கிறது. 2007ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் உயர்ந்த பட்ச 12.7 சதவிகித வளர்ச்சிக்கு பின்னர், வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலண்டுப் பகுதியில் அது 9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட சர்வதேச நிதிய அமைப்பின் அறிக்கை ஒன்று அடுத்த ஆண்டு சீனாவின் வளர்ச்சி 8.5 சதவிகிதம்தான் இருக்கும், அதுவும் ஊக்கப் பொதிக் காரணியையும் கணக்கில் எடுத்துக் கொண்டபின்னர், என்று தெரிவித்துள்ளது. Credit Suisse AG, UBS AG இரண்டும் 2009ம் ஆண்டில் 7.5 சதவிகித வளர்ச்சிதான் இருக்கும் என்று கணித்துள்ளன; இது 1990ல் இருந்து மிகக் குறைவான சதவிகிதம் ஆகும். சில பகுப்பாய்வாளர்கள் வளர்ச்சி விகிதம் 5.6 என்று கூட குறையக்கூடும் என்று கணித்துள்ளனர்.

ஊக்கப் பொதி பெரியதாக இருந்தாலும், ஏற்கனவே இதன் விளைபயன் பற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன. சீன சர்வதேச முதலீட்டுக் கழகத்தில் பொருளாதார வல்லுனராக இருக்கும் Xing Ziquiang, இந்த நடவடிக்கைகள் "சுழற்சியில் வரும் கீழ்நோக்கிய போக்கை எதிர்த்துப் போரிடமுடியாது, அதே போல் உலகத் தேவையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறித்தான் இருக்கும்" என்று Bloomberg இடம் கூறினார். ஏற்றுமதித் துறையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ள நிலை "வேலை இழப்புக்கள் என்று மாறிவிடும்; அதுவே அரசாங்கத்திற்குப் பெரும் கவலையைக் கொடுக்கும்".

சீனாவின் உள் கட்டுமானச் செலவீனம் ஏற்கனவே கடந்த இரு தசாப்தங்களாக ஆண்டிற்கு 20 சதவிகிதம் பெருகியுள்ளதாகவும், ஆகையால் "எவ்வளவு செலவழிப்பது மேலும் கூடுதலாக விரைவுபடுத்தக்கூடியதாக இருக்க முடியும் என்பது பற்றி பெளதீக மற்றும் கணிப்பியல் திட்டம் சார்ந்த வரம்புகள் உள்ளன" என்றும் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது. ஊக்கப் பொதி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதற்கு முன்னதாக சீனா குறைந்தது இரு காலண்டு காலமாவது குறைந்த வளர்ச்சி விகிதத்தைத்தான் அனுபவிக்கும் என்று அது கணித்துக் கூறியுள்ளது.

இந்த பொதியின் பல கூறுபாடுகள் தெளிவாக இல்லை என்று பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது. குழாய்வழிப்பாதையில் ஏற்கனவே உள்ள செயற்திட்டங்களுக்கு மாறாக துல்லியமாக எவ்வளவு புதிய உள்கட்டுமான செலவினம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை. Dragonomics ன் நிர்வாக மேலாளரான Arthur Kroeber இந்த செய்தித்தாளிடம் உண்மையான மேலதிக முதலீடு தலைப்பில் கொடுத்திருக்கும் எண்ணிக்கையைவிட அதில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 1.3 டிரில்லியன் யுவான் ஆகத்தான் இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

ஊக்கப் பொதியின் பாதிப்பு கட்டுமானத்தில் ஏற்றுமதியை நம்பியிருக்கும் ஒரு பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு உரியதாகும்; எனவே இது ஏற்றுமதிச் சந்தைகளில் கீழ்நோக்கிய சரிவு ஏதேனும் இருந்தால் அதனால் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். Forbes இதழில் சமீபத்தில் வந்துள்ள ஒரு கட்டுரை விளக்கியுள்ளது; "ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் என பிரதிபலிக்கின்றன. சீனாவில் உண்மையான முதலீடு GDP யில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் ஆகும்; இதில் வீடுகள் மற்றும் உள் கட்டுமான செலவினங்களைத் தவிர, முதலீட்டுச் செலவில் பாதிக்கும் மேலாக வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் புதிய மூதலீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் செலவிடப்படுகிறது. எனவே ஏற்றுமதிகளும் அதற்கான முதலீடுகளும் கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவிகிதத்தை பிரதிபலிக்கையில், பெரும்பாலான சீன மொத்தத் தேவை அதன் ஏற்றுமதியை நம்பியிருக்கும் பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் திறனில்தான் உள்ளது."

அமெரிக்காவிற்கு --சீனாவின் பிரதான சந்தை-- சீனாவின் ஏற்றுமதிகள் வளர்ச்சி ஒரு வருடத்திற்கு முன்னர் இருபது சதவிகித்தில் இருந்து இந்த ஆண்டு பூஜ்யம் என்று குறைந்துவிட்டது. 2009 ஆண்டிற்கு எதிர்மறை வளர்ச்சிதான் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுக்கு, மற்றும் எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்கள் எனக் கூறப்படும் நாடுகளுக்கும் கூட சீன ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புவளத்தை பொறுத்தவரை வேறுபாடு அதிகமாக இருக்காது.

பணம் கொடுக்க முடியாத நிலை, திவால்கள் என்பதை எதிர்நோக்கி அஞ்சியிருக்கும் பெரிய வங்கிகள் சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறும் பெய்ஜிங்கின் விருப்பங்களை எதிர்த்து நிற்கின்றன. நாட்டின் 20 பெரிய கடன் கொடுக்கும் அமைப்புக்கள் சிறு தொழில்களுக்கு கொடுக்கும் கடன்கள் இந்த ஆண்டு முதல் அரைப்பகுதியில் 6.2 சதவிகிதம் அளவில் உயர்ந்தது என்று சீன வங்கி ஒழுங்கமைப்புக் குழு (The China Banking Regulatory Commission) கூறியுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் 75 சதவிகித வேலை வாய்ப்புக்களுக்கு வகை செய்வதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதத்தையும் கொண்டுள்ள சிறுநிறுவனங்களுக்கான மொத்த கடன்கொடுக்கல் 14.1 சதவிகிதத்துடன் இது ஒப்பிடத்தக்கது.

நாட்டை விட்டு ஊக வகை முதலீடு பெருமளவு வெளியேறிக் கொண்டிருக்கிறது; இதையொட்டி பங்குச் சந்தைகள் விலை, சொத்துக்கள் விலை ஆகியவை சரிந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் மாதம் மட்டும் $10ல் இருந்து $25 பில்லியன் வரை முதலீடு வெளியே சென்றுவிட்டது; இது வீட்டு மணை, நிலம் வர்த்தகத் துறையை இன்னும் பெரிதாகப் பாதித்துள்ளது; அதில்தான் தொழிலாளர் தொகுப்பில் 10 சதவிகிதத்தினர் உள்ளனர்; மேலும் மொத்த சொத்து முதலீட்டில் இது கால் பகுதியைக் கொண்டிருக்கிறது. இதையொட்டி இச்சரிவுகள் ஏற்கனவே அளவிற்கதிகமான கொள்தளத்தை கொண்டுள்ள எஃகு, சிமெண்ட் ஆகியவற்றிற்கான தேவையை மேலும் கீழிறக்கும்.

சீனாவில் உள்நாட்டு நுகர்விற்கு ஏற்றம் கொடுக்க வேண்டிய தேவை பற்றிய தற்பொழுதைய விவாதம் இருந்தபோதிலும்கூட, உலக முதலாளித்துவ முறைக்கு மாபெரும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு அரங்கமாகத்தான் சீனா செயல்படுகிறது. சீனாவில் தொழில்துறை விரிவாக்கம் என்பது சீன மக்களுடைய நுகர்வோடு கிட்டத்தட்ட எந்த பிணைப்பையும் கொண்டிருக்கவில்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 15 சதவிகிதம்தான் உள்ளது; அமெரிக்காவில் இது 70 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மூலதன வருகை குறைந்த ஊதியத்தை முன்னிலையாக கொண்டுள்ளது ஆகும் -- உள்நாட்டு நுகர்வு தொடர்ந்து குறைவாக இருப்பதற்கு இது முக்கிய காரணி ஆகும். 2005ம் ஆண்டில் சீன ஊதியங்கள் GDP யில் 11 சதவிகிதம்தான் இருந்தன; பெரும்பாலான வளர்ச்சியுற்ற நாடுகளில் இருக்கும் 50- முதல் 60 சதவிகிதம் வரை இது ஒப்பிடத்தக்கது ஆகும். அதே நேரத்தில் 1,000 நபர்கள் கொண்ட சீனாவின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டியல் அக்டோபரில் வெளியிடப்பட்டது 101 (அமெரிக்க டாலர்) பில்லியனர்களைக் காட்டியுள்ளது; இது பெரும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் கூட, கடந்த ஆண்டில் இருந்ததை விட 5 பேர்தான் குறைவாகும்

இந்த மாபெரும் சமூக சமத்துவமின்மையை சமாளிக்கும் வகையில் பெய்ஜிங் ஒவ்வொரு ஆண்டும் வேலைத் தொகுப்பில் சேரும் மில்லியன் கணக்கான புதிய தொழிலாளர்களுக்கு வேலைகள் கொடுத்து வந்துள்ளது. ஆனால் பொருளாதாரம் குறைவான வளர்ச்சியைக் கொண்டிருக்கையில் அது இனி இயலாது. பொதுவாக சீனா ஆண்டு ஒன்றுக்கு 8 சதவிகித வளர்ச்சியைக் கொண்டால்தான் நாட்டில் வேலை இன்மைப் பெருக்கத்தைத் தடுத்து, பரந்த சமூக அமைதியின்மையையும் தடுக்க முடியும் என்று பொதுவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆலை மூடல்கள் என்பது பெரிய அளவில் வந்து கொண்டிருக்கின்றன. சீன சமூக விஞ்ஞானக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் Gao Jiahai, இந்த ஆண்டு முதல் பகுதியில் சீனாவில் 67,000 ஆலைகள் மூடப்பட்டுவிட்டதாக Boston Globe இடம் கூறினார். ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 100,.000 ஐ கடக்கக் கூடும். ஜேஜியாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் யே ஹாங் அந்த ஏட்டிடம் கூறியதாவது: "உண்மையில், அரசாங்கம் இந்தக் கட்டத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இப்போக்கை மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. இங்கும் அங்கும் ஓரிரு இடங்களில் மட்டுமே அரசாங்கம் நெருப்பை அணைக்க முடியும்."

ழெய்ஜியாங் மாநிலத்தின் உற்பத்தித் தொழில்துறை கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஆறு பெரிய திவால்கள் நடந்துள்ளதாக Ye குறிப்பிட்டுள்ளார். இதில் சீனாவின் மிகப் பெரிய தையல் இயந்திர உற்பத்தி நிறுவனமான Feiyue ம் அடங்கும்; மற்ற நடுத்தர, சிறிய நிறுவனங்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை. "இந்த ஆறு நிறுவனங்களில் ஒன்றின் முதலாளி தற்கொலை செய்து கொண்டார், ஒன்றின் முதலாளியை போலீசார் விசாரணைக்குப் பிடித்துள்ளனர் மற்ற நான்கு பேர் தப்பியோடிவிட்டனர்" என்று யே கூறியுள்ளார்.

சீனாவில் திவால் பற்றிய சட்டங்கள் ஊதியம் கொடுக்கப்படாத தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும், மிக அதிகமான அளவு ஆலை முதலாளிகள் அப்படியே சில சொத்துக்களை விட்டு விட்டு, ஓடிப் போய் விடுகின்றனர். வேலையை இழந்த தொழிலாளர்கள் அரசாங்கம் எல்லா மட்டத்திலும் அவர்களுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும் என்று பெருகிய முறையில் கோரியுள்ளனர். சீற்றமான எதிர்ப்புக்களைத் தடுக்கும் வகையில் சில தொழிலாளர்கள் பணம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பெய்ஜிங்கும் அதிக அளவில் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை அடக்குவதற்கு அதன் போலீஸ் அரச எந்திரத்தைத்தான் அதிகமாக நம்ப வேண்டியிருக்கும்.

சீனாவிலும், ஆசியா நெடுகிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பங்குச் சந்தைகள் ஆரம்பத்தில் சீன ஊக்க பொதியானது மெதுவாகச் செல்லும் உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு ஏற்றம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உயர்ந்தன. மலர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் சமீப ஆண்டுகளில் ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு மூலதனப் பொருட்களுக்கு முக்கிய சந்தையாகவும், மற்ற ஆசியப் பொருளாதாரங்கள், ஆஸ்திரேலியா போன்றவற்றிற்கு பகுதிப் பொருட்கள் மற்றும் பல பண்டங்களுக்கு முக்கிய சந்தையாகவும் மாறியுள்ளது. ஆனால் உலகப் பொருளாதாரம் ஒருபுறம் இருக்க, சீனாவின் வளர்ச்சியை உயர்த்தும் நடவடிக்கைகளின் குறைந்த திறனைக் கருத்தில் கொண்டால், இத்தகைய வருங்காலம் பற்றிய உற்சாகம் விரைவில் மறைந்துவிடும் என்பதுதான் தெளிவாகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved