World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்French Socialist Party to elect new leadership பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளது By Peter Schwarz 2007 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பதினெட்டு மாதங்களுக்கு பின்னரும் கூட பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பிளவுபட்டு கிடக்கிறது. நவம்பர் 14-16 தேதிகளில் Reims இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில், கட்சி அதற்கான ஒரு புதிய தலைமையை தேர்ந்தெடுக்க உள்ளது. தற்போதைய கட்சி தலைவர் பிரான்சுவா ஹோலன்ட் பதவி இறங்க உள்ளார். புதிய தலைமையின் தேர்வு மற்றும் கட்சியின் நிலைநோக்கு, சிக்கலான உள் கேள்விகளை எழுப்புகிறது. கோடைகாலத்தில் இருந்து, கட்சி உறுப்பினர்களிடையே ஆறு வெவ்வேறு வரைவு வேலைத்திட்டங்கள் அனுப்பப்பட்டன; ஒவ்வொரு வரைவு வேலைத்திட்டமும் ஒவ்வொரு தலைமையை முன்மொழிந்தது. உள்ளூர் மற்றும் பிராந்திய கட்சி அமைப்புகளுக்குள் நடந்த விவாதங்களுக்கு பின்னர், நவம்பர் 6ல் உறுப்பினர்கள் இந்த முன்மொழிவுகளுக்கு வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்புகளில் இருந்து, கட்சிக்குள் சுமாராக சமமான ஆதரவைப் பெற்ற நான்கு குழுக்கள் உருவாகின. இந்த பட்டியலில் 29 சதவீத வாக்குகள் பெற்று, 2007ல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலின் ரோயால் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாரீஸ் மேயர் Bertrand Delanoë மற்றும் Lille நகர மேயர் Martine Aubry இருவரும் முறையே 25 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர். கட்சியின் இடது செய்தி தொடர்பாளரான (Spokesman) நாற்பத்தியொரு வயது நிரம்பிய Benoît Hamon 20 சதவீத வாக்குகள் பெற்று நல்ல வெளிப்பாட்டை காட்டியுள்ளார். ஆனால் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. மொத்தம் 233,000 கட்சி உறுப்பினர்களில் 128,000 உறுப்பினர்கள் மட்டுமே இதில் பங்கெடுத்தனர். வரும் வார இறுதியில் நடைபெற உள்ள காங்கிரசில் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை காங்கிரஸ் கூட்டப்படும்) வேலைத்திட்டத்தின் இறுதி வடிவம் விவாதிக்கப்பட்டு, புதிய கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். நவம்பர் 20ல், கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்புடன் தலைமையின் மாற்றம் உறுதிபடுத்தப்படும். வரைவு வேலைத்திட்டங்கள் மற்றும் சூத்திரப்படுத்தல்களில் உள்ள முரண்பாடுகள் வெளிப்பார்வையாளர்களுக்கு வெளிப்படையாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்த போதினும், அவற்றின் மீதான அரசியல் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட செல்வாக்கை பெறவும், கட்சியின் எதிர்கால பொறுப்பைப் பெறுவதிலும் போட்டி குழுக்களுக்கு இடையிலான ஒரு அதிகார போராட்டம் மறைவாக தென்படுகிறது. கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இருந்து செகொலென் ரோயால், Mouvement démocrate (MoDem) இன் மைய-வலதுசாரி அரசியல்வாதியான பிரான்சுவா பேய்ருவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தி வருகிறார். கட்சியின் பழைய சோசலிச மாதிரிகள் "மதிப்பிழந்து விட்டன" என்று அறிவித்த அப் பெண்மணி, அதன் "நவீனத்துவத்தை" கோருகிறார். ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு கிடைத்த பெரும் வாக்குகள், சோசலிஸ்ட் கட்சி மேலும் ஒரு வலதுசாரி போக்கை எடுப்பதையே காட்டுவதாக உள்ளது என்று பொதுவாக அர்த்தப்படுத்தப்படுகிறது. எவ்வாறிருப்பினும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரோயால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கட்சிக்குள் கிடைத்த வாக்குகளை விட தற்போது 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே அவருக்கு கிடைத்துள்ளது. ரோயால் அவர் பங்கிற்கு, அவரின் வலதுசாரி பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நிலைப்பாடு அதன் வலிமையை விட மிக அதிகமாக மேலாதிக்கத்தில் உள்ளது. அவரின் ஜனாதிபதி பிராச்சாரத்தின் போது மிக இறுக்கமான முதலாளித்துவ ஆடைகளை அணிந்திருந்த அவர், அதற்கு பதிலாக தற்போது தளர்ந்த உடைகளையே அணிகிறார். நீண்ட காலமாக Bertrand Delanoë ம் கட்சி தலைவருக்கான விருப்ப தேர்வாக இருக்கிறார். தற்போது பதவி விலக உள்ள பிரான்சுவா ஹோலன்டின் ஆதரவையும், அத்துடன் கட்சி தலைமைக்கான ஓட்டெடுப்பில் வாக்களிக்க போவதில்லை என்று இறுதி நேரத்தில் அறிவித்த முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனின் ஆதரவும் Bertrand Delanoë க்கு உள்ளது. வழக்கமாக, பாரீஸ் மேயர் ஒரு பாரம்பரியவாதி, அதாவது அவர் வலதுசாரி சமூக ஜனநாயக அரசியல் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார். ஆனால் ரோயாலுக்கு முரண்பாடாக, MoDem உடனான ஒரு கூட்டணிக்கு Delanoë ஆதரவளிக்கவில்லை, ஆனால் அதற்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமை கட்சியுடனான பழைய கூட்டணியின் ஒரு புதிய முறையை அவர் விரும்புகிறார். ஊடகங்களால் பெரிதும் ஆதரவளிக்கப்பட்ட Delanoë இன் செல்வாக்கு, பாரீஸ் நகர எல்லையைக் கடந்து செல்லவில்லை என்பதையே கட்சியின் வாக்குகள் காட்டியுள்ளன. சோசலிஸ்டுகளின் ஒரு பாரம்பரிய கோட்டையாக உள்ள நாட்டின் வடக்கு பகுதியில் Martine Aubry இன் அடித்தளம் அமைந்துள்ளது. ஐரோப்பிய கமிஷனின் முன்னாள் தலைவராக இருந்த Jacques Delors இன் மகளான இவர், அவரின் முகாமிற்குள் இரண்டு எதிர் குழுக்களைக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கத்தில், முன்னாள் நிதி மந்திரியும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தற்போதைய இயக்குனரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தீவிர ஆதரவாளருமான Dominque Strauss-Kahn இன் ஆதரவாளர்களை அவர் நயந்து வேண்டியுள்ளார். மற்றொரு பக்கத்தில், ஐரோப்பிய அரசியல்அமைப்பிற்கும் லிஸ்பன் உடன்பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்தவரான ஒரு முன்னாள் பிரதம மந்திரி Laurent Fabius இன் ஆதரவை பெற்றுள்ளார். Delanoë போன்றே, Aubry ம் வலதுசாரி சமூக ஜனநாயகவாதியாக கருதப்படுகிறார். Benoît Hanon கட்சியின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக காணப்படுகிறார். கட்சி காங்கிரஸிற்கு முந்தைய விவாதங்களில், நிறைய முதலாளித்துவ எதிர்ப்பு சொல்லாட்சியை பயன்படுத்தி சர்வதேச நிதி நெருக்கடி மோசமடைந்து வரும் வேளையில் ஆதரவை வென்றுள்ளார். ஆனால் கட்சியின் நவீனமயமாக்கம் என்ற பெயரில் செகோலின் ரோயாலுடன் தாம் ஒத்துப்போக முடியும் என்றும் குறிப்பாக சுட்டிக்காட்டினார். அவரின் ஒரே நிபந்தனை என்னவென்றால் MoDem உடனான கூட்டணியை மட்டும் ரோயால் கைவிட வேண்டும் என்பதாகும்.Reims மாநாட்டில், யார் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள், அதற்கு என்ன விலை பெறுவார்கள் என்பதன் அடிப்படையில் கட்சியின் பல்வேறு குழுக்கள், பிரிவுகள் மற்றும் அணிகளுக்கு இடையில் அங்கு தீவிரமான சச்சரவுகள் இருக்கும். உத்தியோகபூர்வ விவாதங்கள் மற்றும் வரைவு வேலைத்திட்டங்கள் மீதான கட்சி வாக்குகள் மற்றும் மாற்று தீர்மானங்கள் அனைத்தும், ஏற்கனவே பின்னறையில் கையெழுத்திடப்பட்டு, மூடப்பட்டு விட்ட உடன்பாடுகளை வெளிப்படையாக உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே இருக்கும்.வேலைவாய்ப்பின்மை, வாங்கும் திறன் இழப்பு, மந்தநிலைமை, வலதுசாரி ஆட்சி மீதான தாக்குதல் போன்ற ஒவ்வொரு நாள் வாழ்வையும் குறிக்கும் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் எதுவும் மாநாட்டின் விவாதங்களில் இருக்கப்போவதில்லை. சோசலிஸ்ட் கட்சி ஏற்கனவே இந்த பிரச்சனைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களில் இருந்து தன்னைத்தானே திரும்பி வரமுடியாத அளவிற்கு பிரித்துக் கொண்டுவிட்டது. வேலைநிறுத்த அலைகள் மற்றும் எதிர்ப்புக்களிலே திரும்பத்திரும்ப வெளிப்படுத்தப்படும் சமூக சீற்றத்துடன் அரசியல் ரீதியாக அடையாளம் காண்பதற்கு அவர்களின் இயலாமையையே மாநாட்டிற்கு முன்னதாக நடக்கும் உட்கட்சி பூசல் வெளிப்படுத்துகிறது. சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பிரெஞ்சு ஜனாதிபதியாக பிரான்சுவா மித்திரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 1981ல் சோசலிஸ்ட் கட்சி அதன் உச்சநிலையை எட்டியது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்டார். எவ்வாறிருப்பினும், "பொதுவேலைத்திட்டம்" குறித்த பிரமைகள் ஒரே ஆண்டில் இல்லாமல் போயின, அதன் பின்னர் சர்வதேச நிதிச்சந்தைகளின் அழுத்தத்தின்கீழ் மித்திரோன் திடீரென U வடிவ திருப்பத்தை மேற்கொண்டு, ஒரு வலதுசாரி முதலாளித்துவத்திற்கு நட்பு ரீதியான பாதையை வகுத்தார். அவரின் 14 ஆண்டு ஜனாதிபதி காலத்தின் முடிவில், ஜாக் சிராக் தலைமையின் கீழ் கோலிஸ்டுகள் ஜனாதிபதி பதவியை வென்றதுடன், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றதால் சோசலிஸ்ட் கட்சியினர் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். ஆனால் சிராக் தொழிலாள வர்க்கத்தை கணக்கில் சேர்த்து கொள்ளவில்லை. 1995ல், ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பல வாரங்களாக நாட்டை ஸ்தம்பிக்க செய்தது. இதனால் பாராளுமன்றத்தை கட்டாயமாக கலைக்கும் நிலைக்கு சிராக் தள்ளப்பட்டதுடன் புதிய தேர்தல்களுக்கும் அழைப்புவிடுத்தார். சோசலிச கட்சியினர் வெற்றி பெற்றார்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி தலைவர் லியோனல் ஜோஸ்பன், ஒவ்வொரு முறையும் சிராக்கின் வலதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கோலிச ஜனாதிபதி சிராக்குடன் பிரதம மந்திரியாக கூடி வாழ்ந்தார். 2002ல், கொடுக்க வேண்டிய நிலை வந்தது. ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் தீவிர-வலதுசாரி வேட்பாளர் ஜோன்-மரி லு பென்னை விட மிக குறைவாக வாக்குகள் பெற்ற நிலையில் ஜோஸ்பன் மிகவும் பிரபலமில்லாமல் இருந்தார். சோசலிஸ்ட் கட்சியினர் ஒருபோதும் இந்த வீழ்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. சோசலிஸ்ட் கட்சி தொடர்ந்து அதன் செல்வாக்கை இழந்தால் சமூக எதிர்ப்பு ஒரு தீவிர பாதையை கையில் எடுக்கும் என்ற அச்சம் நாட்டின் அரசியல் மேற்தட்டுக்களின் மத்தியில் வளர்ந்து வருகிறது. ஒருகாலத்தில் சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய இடதுசாரியாக முட்டுகொடுத்து நின்ற கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரை இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. அது அதன் முந்தைய சொந்த கட்சியின் நிழலாக மட்டுமே உள்ளது என்பதுடன் பல சில்லுகளாகவும் அது சிதறுண்டு உள்ளது. அதனால், சோசலிஸ்ட் கட்சியின் இடதிற்கு ஒரு புதிய அரசியல் பாதுகாப்பு வால்வை உருவாக்குவதற்கான முயற்சிகளில் உள்ளது. இந்த வகையில், சோசலிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி, ஜேர்மன் இடது கட்சி வடிவில் ஒரு புதிய இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான ஒரு குழுவின் முடிவு தென்படுகிறது. நவம்பர் 6ல் நடந்த உறுப்பினர் தேர்தலுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி நடவடிக்கைகள் தடுக்க முடியாதவை என்று அறிவித்த Jean-Luc Mélenchon மற்றும் Marc Dolez, வலதுசாரிக்கு எந்த சலுகைகளும் இல்லாமல் ஒரு புதிய கட்சி தோற்றுவிக்கப்படும் என்று உறுதியளித்தனர். 1951 ல் பிறந்த Mélenchon, பியர் லம்பேர்ட் தலைமையில் இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பிலிருந்து (Organisation Communiste Internationaliste- OCI) அரசியல் பாடம் படித்திருந்தார். 1970களின் மத்தியில் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், ஜோஸ்பன் கீழ் 2000 முதல் 2002 வரை கல்வி மந்திரியாக இருந்தார். தற்போது செனட்டில் அவர் சோசலிச கட்சியின் பிரதிநிதியாக உள்ளார்.ஜூன் 2009ல் வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தலில் "இடது சக்திகளின் ஒரு கூட்டு முன்னணியை" உருவாக்க Mélenchon மற்றும் Dolez இருவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஒலிவியே பெஸன்சநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிக்கும் (Nouveau parti anticapitaliste, NPA) அழைப்பு விடுத்துள்ளனர். NPA கட்சியின் செய்தி தொடர்பாளர்களான ஒலிவியே பெஸன்சநோ மற்றும் அலன் கிறிவின் இருவரும் தங்கள் நலன்களுடன் மிக எச்சரிக்கையாக இதற்கு விடையிறுத்துள்ளனர். NPA, ஐரோப்பிய முதலாளித்துவ எதிர்ப்பு சக்திகளின் கூட்டணிக்காக உள்ளது, ஆனால் Mélenchon ஆதரிக்கும் ஜேர்மன் இடது கட்சியின் அதே மாதிரியை இக்கட்சி பின்பற்றாது என்று Besancenot தெரிவித்தார். "பிரான்சில் Die Linke (ஜேர்மன் இடது கட்சி) ஐ புதிதாய் உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. சோசலிஸ்ட் கட்சியுடன் எந்த கூட்டணி விளையாட்டுகளிலும் ஈடுபடாத ஓர் முதலாளித்துவ எதிர்ப்பு இடது கட்சியை தான் நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.Mélenchon ன் அறிவிப்புக்கு Alain Krivineம் ஆர்வம் காட்டியுள்ளார். ஐரோப்பிய தேர்தல்கள் குறித்து "விவாதிக்க NPA தயாராக" உள்ளது என்று அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இது "தெளிவான அடிப்படையில்" செய்யப்பட வேண்டும். "பொது கோரிக்கைகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சியுடனான ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெறுவது குறித்த (பிரச்சனையையும்)" தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்றார். இதில் பிந்தைய கருத்தை NPA நிராகரிக்கிறது.ஜனவரி 2009ல் NPA உத்தியோகபூர்வமாக நிறுவப்படும். அது பப்லோவாத நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் (Pabloite United Secretariat) பிரெஞ்சு பிரிவான Ligue communiste révolutionnaireக்கு (LCR) மாற்றாக அமையும். Krivine மற்றும் Besancenotக்கு "இடது" அதிகாரத்துவ எந்திரங்களின் உடைவில் கிடைக்கும் மிச்ச சொச்சங்களை இணைக்கும் ஓர் அமைப்பும், அதேசமயம் அரசியல் அனுபவம் இல்லாத இளைஞர்களை ஈர்ப்பதும் தேவையாக உள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி வளைவரைவுகோட்டை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலைமையில் சோசலிஸ்ட் கட்சியினருடனான கூட்டணியை நிராகரிப்பதே சிறந்ததாக அவர்கள் கருதுகிறார்கள். எவ்வாறிருப்பினும், கடந்த மூன்று தசாப்தங்களாக சோசலிஸ்ட் கட்சியில் ஒரு முன்னணி உறுப்பினராகவும், ஒரு முன்னாள் மந்திரியாகவும் இருந்த Mélenchon னின் முன்னெடுப்புகளுக்கு NPA தலைவர்களின் விடையிறுப்பானது, தெளிவாக இந்த நிலைப்பாடு முற்றிலும் ஒரு தந்திரோபாய பண்பைத் தான் காட்டுகிறது. |