World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama reassures big business on economic policy பொருளாதார கொள்கை மீது ஒபாமா பெருமுதலாளிகளுக்கு உத்திரவாதமளிக்கிறார் By Patrick Martin வங்கியாளர்கள், பெருநிறுவன செயலதிகாரிகள், தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளை உள்ளடக்கிய பொருளாதார ஆலோசகர்களின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடனான பல நேர சந்திப்புக்கு பின்னர், அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக தமது முதல் பொதுக்கூட்டத்தில், வெள்ளியன்று மதியம் சிகாகோவில் பராக் ஒபாமா ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு ஒபாமா பதிலளித்த போது, அவரின் பொருளாதார இடைமருவு ஆலோசனை குழு உறுப்பினர்களும், பெடரல் ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் போல் வோல்க்கர், கிளின்டன் சகாப்த கருவூல செயலாளர் மற்றும் சிட்டி குழுமத்தின் தற்போதைய செயலதிகாரி ரொபேர்ட் ரூபின் உட்பட பிற பொருளாதார ஆலோசகர்களும் ஒபாமாவின் பின்னால் அணிவகுத்து நின்றார்கள். பத்திரிகையாளர் கூட்டத்திற்கான அவரின் தொடக்க செய்தியில், அக்டோபரில் மொத்தமாக 240,000 அமெரிக்க பணிகள் வெட்டப்பட்டதாக முந்தைய நாளில் வெளியான செய்தியை குறிப்பிட்டதன் மூலம் பொருளாதார நெருக்கடியின் முக்கியத்துவத்தை ஒபாமா அடிக்கோடிட்டார். "மொத்தத்தில், இந்த ஆண்டில் மட்டும் நாம் 1.2 மில்லியனுக்கும் நெருக்கமாக வேலைகளை இழந்துள்ளோம்; 10 மில்லியனுக்கும் மேலான அமெரிக்கர்கள் தற்போது வேலை இல்லாமல் உள்ளனர்." என அவர் தெரிவித்தார். "பல மில்லியன்கணக்கான குடும்பங்கள் எவ்வாறு பில் தொகைகளை செலுத்தி, தங்களில் வீடுகளில் குடியிருப்பது என்று புரியாமல் போராடி வருகிறார்கள். நமது வாழ்நாளில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம் என்பதையும், நாம் பிரச்சனைகளை தீர்க்க கட்டாயம் விரைவாக செயல்பட வேண்டும் என்பதையும் தான் இந்த செய்திகள் நமக்கு உடனடியாக நினைவுபடுத்துகின்றன" என்றார். எவ்வாறிருப்பினும், உடனடியான எந்த நடவடிக்கைகளையும் முன்வைக்காத அவர், அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி புஷ் இருப்பார் என்பதை மட்டும் தெரிவித்தார். அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார இடர்ப்பாட்டில் ஏற்பட்டு வரும் விரைவான அதிகரிப்புக்கான பொறுப்பிலிருந்து ஒபாமா தெளிவாக தன்னைத்தானே விலக்கி வைக்க முயன்றார். அவர் கூறுகையில், "நான் ஜனாதிபதி ஆன உடனேயே, இந்த கடன் நெருக்கடியை சமாளிக்கவும், கடின உழைப்பாளர் குடும்பங்களுக்கு உதவவும், வளர்ச்சி மற்றும் வளத்தை மீண்டும் கொண்டு வரவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம் முன்னால் இருக்கும் இந்த பொருளாதார நெருக்கடியை நான் எதிர்கொள்வேன்" என்றார். அத்துடன் "பொருளாதார ஊக்க" திட்டத்தில், வேலைவாய்ப்பற்றோருக்கான நலன்களை தொடர்வது குறித்து குறிப்பிட்டது தவிர, அவர் முன்னெடுக்கவுள்ள கொள்கைகள் குறித்தும் சில தகவல்களை அளித்தார். அவர் இந்த நெருக்கடியின் ஆழத்தை ஒத்துக் கொண்ட போதினும், "நாம் மாட்டி கொண்டுள்ள இந்த பள்ளத்தில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவதென்பது அவ்வளவு சுலபமாக இருக்க போவதில்லை" என்று கூறியதன் மூலம், விரைவாக பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்க ஒபாமா சிரமப்பட்டார். "மத்தியதர வர்க்கத்திற்கான ஒரு மீட்பு திட்டம் நமக்கு தேவைப்படுகிறது" என்று அவர் அறிவித்தார். ஆனால் பொருளாதார இடைமருவு ஆலோசனை குழு கூட்டமைவானது, அவரின் கருத்துக்கள் சாதாரண மக்களின் பொருளாதார பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துவதாக கூறி முரண்படுகிறது. இந்த குழு முழுவதுமாக பெருநிறுவனங்கள், நிதி மேற்தட்டுக்கள் மற்றும் அரசியல் அமைப்பின் ஜனநாயக கட்சி குழு பிரதிநிதிகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த 17 உறுப்பினர் குழுவில் அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரரான வாரன் பபெட், ஜெராக்ஸ் மற்றும் கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரிகள், டைம் வார்னர் பொதுக் குழுவின் தலைவர். ஹெயட் ஹோட்டலின் (Hyatt Hotels) பெண் உரிமையாளர் பென்னி பிரிட்ஜ்கர் மற்றும் சிட்டி குழுமத்தின் துணை சேர்மேன் ரூபின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கிளிண்டன் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரிகள் வில்லியம் டேலே, ரொபேர்ட் ரீச், லோரா டைலர் மற்றும் லோரன்ஸ் சம்மர்ஸ் ஆகியோருடன் கடன்பத்திரங்கள் பரிமாற்ற ஆணையத்தின் இரண்டு முன்னாள் கமிஷனர்கள், வோல்கர் மற்றும் பெடரல் வங்கியின் முன்னாள் துணை தலைவர் ரோஜர் பெர்குசன், முன்னாள் ஜனநாயக கட்சியின் காங்கிரசில் இடம் பெற்றிருந்த டேவிட் போனியர், மிச்சிகன் கவர்னர் ஜெனீபர் கிரான்ஹோம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் அண்டோனியோ வில்லரைகோசா ஆகியோரும் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த குழு பாலியல் மற்றும் இன வேறுபாடுகளிலும் ஓர் ஒழுங்குமுறையை கொண்டிருந்தது. அதாவது இரண்டு கருப்பர்கள், இரண்டு ஹிஸ்பானிக்ஸ் (Hispanics) மற்றும் நான்கு பெண்கள் இதில் இடம் பெற்றிருந்தனர். ஆகவே இதில் இன வேற்றுமையின் சாயல் எதுவும் இல்லை. தொழிலாளர்கள், வேலைவாய்ப்பற்றோர், நுகர்வோர், வீட்டு உரிமையாளர்கள் அல்லது பணம் கட்டத்தவறியதால் அடைமான உரிமை இழப்பை எதிர்கொள்வோர் மற்றும் வீடற்றவர்கள் சார்பாக அந்த குழுவில் ஒரு நபர் கூட இடம் பெறவில்லை. ஒபாமாவின் பிராச்சாரத்திற்காக மில்லியன்கணக்கான டாலர்களை வாரி இறைத்த AFL-CIO மற்றும் Change To Win ஆகிய தொழிலாளர் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளோ அல்லது ஆபிரிக்க-அமெரிக்கன், ஹிஸ்பானிக் மற்றும் NAACP மற்றும் NOW போன்ற பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளோ கூட இந்த குழுவில் இடம் பெறவில்லை. 16 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த முறை ஜனநாயக கட்சி வெள்ளை மாளிகையில் குடியரசு கட்சியின் இடத்தை பிடித்த போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் பொருளாதார மாநாட்டில் உயர்மட்ட சங்க அதிகாரிகளை சேர்ப்பதில் சிரமப்பட்டார். ஆனால் தொழிற்சங்கங்கள் சமூகளவில் மிகவும் தொடர்பற்று இருப்பதாக கருதி, ஒபாமா மற்றும் அவரின் ஆலோசகர்கள் பொருளாதார கொள்கையை உருவாக்கும் போது பெயரளவில் கூட அவைகளை கலந்தாலோசிக்க தேவை இருப்பதாக கருதவில்லை. எதிர்கால ஜனநாயக கட்சி கொள்கை குறித்து பத்திரிகையாளர் மாநாட்டில் இரண்டு குறிப்புகள் வெளியாயின. வங்கிகளுக்கான புஷ் நிர்வாகத்தின் 700 பில்லியன் டாலர் சலுகையானது, (இந்த சலுகை ஒபாமாவின் சொந்த வாக்கையும் உள்ளடக்கி ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரசால் கொண்டு வரப்பட்டது) மோட்டார் தொழிற்துறையையும் உள்ளடக்கி விரிவாக்கப்படும் என ஒபாமா பலமாக வலியுறுத்தினார். ஆண்டுக்கு 200,000 டாலருக்கு குறைவாக சம்பாதித்தவர்களுக்கு வரிகள் வெட்டப்படும் என்றும், 250,000 டாலர் வருமானத்தில் இருப்பவர்களுக்கான வரி உயர்த்தப்படும் என்றும் அவர் தமது பிரச்சாரத்தில் கூறியதை நிறைவேற்றுவாரா என்று கேட்கப்பட்டபோது, கொள்கை மாற்றியமைக்கப்படும் என்று கூறியதன் மூலம் அவர் அதற்கான சாத்தியக்கூறையும் கைவிட்டார். ஒபாமா கூறுகையில், "நாங்கள் முன்வைத்த திட்டம் சரியானதே என்று நான் கருதுகிறேன். ஆனால் வெளிப்படையாக அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில், நாங்கள் தரவுகளை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். பின்னர் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்." என்றார். அவர் மேலும் தொடர்ந்தபோது, "வாழ்வில் போராடி வரும் குடும்பங்களுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதே என் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால் அதேசமயம் பொருளாதார திறனை அடிமட்டத்தில் இருந்து வளர்ச்சி பெற செய்ய ஊக்குவிக்க வேண்டியுள்ளது" என்றார். செல்வந்தர்கள் மீது சுமத்தப்படும் வரி உயர்வு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்ற வியாபார குழுமங்கள் மற்றும் காங்கிரஸில் உள்ள குடியரசு கட்சியினரின் வாதங்களுக்கான உட்குறிப்பான சலுகைகள் ஒபாமாவின் இந்த அறிவிப்பில் தான் அடங்கி உள்ளன. " வரி செலுத்துவோரை பாதுகாப்பது, வீட்டு உரிமையாளர்களுக்கு உதவுவது மற்றும் அரசாங்க உதவி பெறும் நிதி நிறுவனங்களின் மேலாண்மைக்கு கருவூலம் தவறாக சலுகை அளிக்காமல்" இருப்பதை அவரின் பொருளாதார இடைமருவு குழு கண்காணித்து உறுதிப்படுத்தும் என்பதை மட்டும் கூறி, வங்கி பிணையெடுப்பு (bailout) விவகாரத்தில் புஷ் நிர்வாகம் கையாண்ட உத்திகளை ஒபாமா விமர்சிக்கவில்லை.வோல் ஸ்ட்ரீட் ஊக வியாபாரிகள் மற்றும் தலைமை செயலதிகாரிகள் குறித்து எவ்வித விமர்சனத்தையும் தவிர்த்த இந்த வார்த்தைகள், ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தை எடுத்துக்காட்டுவதாகவும், மற்றும் அந்த போக்குடன் முற்றிலும் மாறுபாடில்லாமலும் உள்ளது. பிரச்சாரத்தின் போது, சில கண்டனங்களை தவிர, சமூக நலன்கள் குறித்து வெளிப்படையாக இருப்பதை ஒபாமா தவிர்க்கிறார். இந்த சமூக நலன்கள் தான் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்கின்றன என்பதுடன், இவை தான் புஷ் நிர்வாக கொள்கைகளுக்கும் அடிப்படையாய் அமைந்தன. புஷ் அல்லது குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் குறித்து ஒபாமாவின் விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், அமெரிக்காவை ஆளும் மற்றும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வை அவற்றின் தனிப்பட்ட செல்வக்கொழிப்புக்கு கீழ்ப்படுத்தும் நிதிய தன்னலக்குழுவின் அதே வர்க்க நலன்களையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சியின் ஜனாதிபதியும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். |