World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

Sarkozy intends to partly nationalise "strategically important" companies

சார்க்கோசி "மூலோபாய முக்கியத்துவம்" வாய்ந்த நிறுவனங்களை பகுதியாக தேசியமயமாக்க விரும்புகிறார்

By Peter Schwarz
29 October 2008

Back to screen version

பிரான்சின் "மூலோபாய முக்கியத்துவம்" மிக்க நிறுவனங்களை அன்னிய முதலீட்டாளர்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக அவற்றை நிக்கோலா சார்க்கோசி பாதுகாக்க விரும்புகிறார். கடந்த வியாழன்று அன்னெசியில் வணிக பிரதிநிதிகளிடையே பேசிய பிரெஞ்சு ஜனாதிபதி அவரின் திட்டத்தை அறிவித்தார்.

இதன் முடிவாக, அவர் "முதலீட்டு நிதி" என்ற பெயரில் 175 பில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்ய திட்டமிடுகிறார். இதன் மூலம் கையகப்படுத்தப்படும் அபாயத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் அரசால் வாங்கப்படும். அதாவது, அந்த நிறுவனங்கள் பகுதியாக தேசியமயமாக்கப்படும். பின்னர், மீண்டும் இந்த பங்குகள் விற்கப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய தொழில்துறை ட்ரஸ்ட் நிறுவனங்களை வாங்குவதன் மூலம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் விலைகளில் உள்ள கடுமையான சரிவை சீனா அல்லது வளைகுடா நாடுகளில் உள்ள வளமான அரசு நிதிகள் சுரண்டாமல் தடுக்க சார்க்கோசி விரும்புகிறார். "ஒரு மூலோபாய பெருநிறுவனத்திற்கு ஒவ்வொரு முறை ஆதாரவளங்கள் தேவைப்படும் போதும் இந்த முதலீட்டு நிதியில் இருந்து அளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். "இந்த நிதி நெருக்கடிக்கு எதிர் நடவடிக்கை எடுக்க நாங்கள் தவறுவதன் மூலம், முக்கிய பிரெஞ்சு நிறுவனங்கள் வெறுமனே வெளிநாட்டவர் கைகளில் வீழ்வதை எங்களால் அனுமதிக்க முடியாது." என்றார்.

பொருளாதார விவகாரத்துறை அமைச்சக அரசு செயலாளர் Laurent Wauquiez கூறுகையில், விமானத்துறை மற்றும் போர்தளவாடங்களுக்கான EADS நிறுவனம் (இதில் விமானங்களும் உள்ளடங்கும்), டயர் உற்பத்தி நிறுவனமான மிஷ்லன் மற்றும் அணுசக்தி நிறுவனமான அரெவா ஆகியவை எடுத்துக்கொள்ளப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருப்பதாக அறிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இதேபோன்ற ஐரோப்பிய நிதிக்கான ஆலோசனையையும் சார்கோசி முன்வைத்தார், ஆனால் இது ஜேர்மனியால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பிரான்ஸ் முதலீட்டு நிதிக்கான அவரின் முனைவும் கூட ஜேர்மனியில் கணிசமான விமர்சனங்களை சந்தித்தது.

சார்கோசியின் "தனிப்பட்ட இந்த முயற்சி" "மிகவும் சந்தேகத்திற்கிடமானது" என ஜேர்மன் அரசாங்கம் உணர்கிறது. சார்கோசியின் திட்டம், "எங்கள் பொருளாதார கொள்கையின் அனைத்து வெற்றிகர கோட்பாடுகளுடனும்" முரண்படுகிறது என ஜேர்மனியின் பொருளாதார மந்திரி மெக்கேல் குளோஸ் (கிறிஸ்துவ ஜனநாயக சங்கம், CDU) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் தொழிற்சங்க பிரிவு செயலாளர் Norbert Röttgen (CDU) பாதுகாப்பு வாதம் குறித்து எச்சரித்தார். "ஐரோப்பா ஒரு சந்தை பகுதி, இது தீர்மானகரமாக பாதுகாப்பு வாதத்திற்கு எதிராக உள்ளது" என அவர் FAZ இதழிடம் தெரிவித்தார். பொருளாதார கொள்கையில் பாரம்பரிய வேறுபாடுகளை பிரான்ஸ் கடக்க வேண்டுமே தவிர, அவற்றை ஒவ்வொரு நாளும் அறுவடை செய்ய கூடாது." என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சார்க்கோசியின் திட்டங்கள் கட்டுப்பாடற்ற சந்தை கொள்கைகள் மீதான நேரடி தாக்குதல் என்று கூறி அவரின் முயற்சிக்கு வணிக பத்திரிகைகளும் கூட அவற்றின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

முப்பது ஆண்டுகள் மித்திரோன் (ஜனாதிபதி) காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரான்ஸ் இதுபோன்றதொரு அரசியலை அனுபவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய welt இணைய தளம், "அடக்கப்பட்ட நிக்காலோ சர்க்கோசி!" ("Tame Nicholas Sarkozy!") என்ற தலைப்பில், நாணய மதிப்பு குறைப்போ அல்லது வர்த்தக கட்டுப்பாடோ அல்லது 1929ம் ஆண்டை தொடர்ந்து வரலாற்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான பேரழிவு விளைவுகள் போன்ற சார்க்கோசி தலையிடுவது போல எதுவாயினும் ஏனையவற்றின் செலவில் ஒவ்வொரு அரசாங்கமும் அதனதன் பொருளாதாரத்தை பலப்படுத்த முயல வேண்டுமா?" என்று குறிப்பிட்டது.

"இது ஐரோப்பிய பொருளாதார கொள்கையின் மாற்றம்; இதன் அடிப்படை - அடிப்படையிலேயே தவறானது என்று ஜேர்மனி போன்ற முக்கிய கூட்டாளிகளின் தடைக்கு எதிராக கூட சார்க்கோசி அவரின் கருப்பொருளை தற்போது விரைவாக நகர்த்தி செல்கிறார்" என்று Financial Times Deutschland குறிப்பிட்டது. ஐரோப்பிய பொருளாதார மாடல்களை தூக்கி எறிவதற்கான ஜனாதிபதியின் இந்த முயற்சி மீது ஜேர்மனி ஒரு சிறிது கூட சமரசப்படக்கூடாது என்று, சார்க்கோசியை கடுமையாக எதிர்க்க ஜேர்மன் அரசாங்கத்திற்கு இந்த பத்திரிக்கை வேண்டுகோள் விடுத்தது.

ஓர் அரசு அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரம் மற்றும் நிதித்துறையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தைக் கொண்ட லூயி 14, Jean-Baptiste Colbert ன் தொடக்க காலத்தில் இருந்த நிதி மந்திரியின் பாரம்பரிய கட்டுக்கதைகளின் வரிசையில், The Wirtschaftswoche (ஜேர்மன் வணிக சஞ்சிகை) சார்க்கோசியின் முன்மொழிவை வைத்தது. "துணைக் கண்டமான ஐரோப்பா எந்தவொரு நிதி முதலீட்டாளரையும் இழக்க முடியாத போது பாதுகாப்புவாத பாணியில் ஐரோப்பா ஒவ்வொரு அன்னிய முதலீட்டிற்கு எதிராகவும் குறிப்பாக நிதி நெருக்கடி காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்."

The Wirtschaftswoche பின்வருமாறு தொடர்ந்தது: "இந்த நெருக்கடியில் தங்களின் சொந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மீது ஆதாயங்களை தெளிக்க விரும்பும் பிரான்சின் ஆர்வம் மிகவும் வெளிப்படையாக உள்ளது. புரூஸெல்சில் உள்ள பாரீஸ் இறைச்சிவெட்டும் கொட்டிலில் தங்களைத் தாங்களே அடைத்துக் கொள்ள எந்த முட்டாள் ஐரோப்பியர்களும் கூட சம்மதிக்க மாட்டார்கள். பிரான்சின் கெடுநோக்குடைய தேசியவாத முயற்சிகள் நிச்சயமாக பிரிட்டனால் அவர்களின் முழு ஆற்றலுடன் எதிர்க்கப்படும்."

ஐரோப்பிய "பொருளாதார அரசாங்கம்" உருவாக்குவதற்கான சார்க்கோசியின் அன்னெசியில் அறிவிக்கப்பட்ட மற்றொரு கூடுதல் ஆலோசனையும் ஜேர்மனியால் எதிர்க்கப்பட்டது. சார்க்கோசியின் கருத்துப்படி, "யூரோ குழும நாடுகளுக்குள் அரசு மற்றும் அரசாங்க தலைவர்கள் மட்டத்தில்" இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஐரோப்பாவிற்கு ஒரு வர்த்தக, தொழில்துறை மற்றும் பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது. "நிதி நெருக்கடியுடன் அரசின் கையாலாகாத் தன்மையும் சந்தை சர்வாதிகாரத்தின் கருத்தியலும் இறந்துவிட்டதன் காரணமாக இப்போதிருந்து அரசியல் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்." என்று அறிவித்தார்.

யூரோ குழுவில் பங்கு வகிக்காத பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அனைத்து முக்கிய முடிவு எடுப்புக்களில் இருந்தும் தள்ளி வைக்க வேண்டும் என்ற சார்க்கோசியின் ஆலோசனைக்கு எதிராக ஜேர்மனியின் கண்டனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிதி கொள்கைகள் குறித்து கடந்த சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறைந்த நாடுகளின் வட்டத்திற்குள் தான் எடுக்கப்பட்டன. இதற்கு பதிலாக, சார்க்கோசியின் முயற்சி ஐரோப்பிய மத்திய வங்கியின் சுதந்திரத்தை பாதிக்கும் ஒரு முயற்சியாக விமர்சிக்கப்படுகிறது. அதாவது, அரசியல் முதன்மைக்கு ஐரோப்பிய மத்திய வங்கியை கீழ்ப்படிய செய்வதற்கான முயற்சி (Financial Times Deutschland) என்றும், சுதந்திர அமைப்பான அதன் பல்லை பிடுங்குவதற்கான முயற்சி (Wirtschaftswoche) என்றும் விமர்சிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், சார்க்கோசியின் திட்டங்கள் "இடது" அரசியல் முகாமிடம் இருந்து ஆதரவை பெற்றுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சமூக ஜனநாயக கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர், Martin Schulz, தமக்கு "எந்த ஆட்சேபமும் இல்லை" என்று அறிவித்தார். "அரசின் பாதுகாப்பு குடையின் கீழ் வங்கிகள் கொண்டு வரப்பட முடியும் போது, நிறுவனங்களையும் அதேபோன்று கொண்டு வருவது சாத்தியமே." என்று Schulz தெரிவித்தார். எழுபதுகளில் இருந்த இளம் சோசலிசவாதிகளின் (SDP) Stamokap [அரச ஏகபோக முதலாளித்துவம்] கோட்பாட்டுடன் பிரெஞ்சு ஜனாதிபதியின் முயற்சியை ஒப்பிட்ட அவர், "ஒரு சிறந்த ஐரோப்பிய சோசலிசவாதி போன்று பேசியதற்கு" சார்க்கோசியை பாராட்டினார். Schulz இன் அறிக்கைக்கு பின்வருமாறு சார்க்கோசி பதிலளித்தார்: "ஒருவேளை நான் சோசலிஸ்ட் ஆகி இருப்பேன், ஆனால் நீங்கள் ஒரு பிரெஞ்சு சோசலிசவாதி போன்று பேசவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.

ஜேர்மன் இடது கட்சியின் தலைவர் ஆஸ்கார் லாபொன்டைனும் சார்க்கோசியின் முயற்சியை பாராட்டி உள்ளார். FAZ உடனான ஒரு நேர்முக பேட்டியில், இது "சரியான திசையில் எடுக்கப்படும் ஒரு படி" என்று குறிப்பிட்டார். லாபொன்டைனின் கருத்துப்படி, ஐரோப்பிய பொருளாதார அரசாங்கம் என்பது நீண்டகாலமாக "நிலுவையில்" உள்ளதாகும். "ஐரோப்பிய நிதிய கொள்கையுடன் ஐரோப்பிய நிதி மற்றும் பொருளாதார கொள்கையும் இணைக்கப்பட வேண்டும் என்ற சாதாரண தர்க்கவியல் தான் அது." என்றார் அவர்.

உண்மையில் சார்க்கோசியின் திட்டம் இடதுசாரி அல்லது சோசலிச கொள்கையுடன் எந்த வகையிலும் பொதுத்தன்மையை கொண்டிருக்கவில்லை. சார்க்கோசி மிகவும் நெருக்கமாக தொடர்பு வைத்திருக்கும் மிக முக்கிய பிரெஞ்சு நிறுவனங்களை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு முறைமைகளை அறிமுகப்படுத்துவது தான் அவரின் திட்டம்.

இதுபோன்ற தேசியவாத முறைமைகள் தொழிலாளர் வர்க்க நலன்களுக்கு எதிரானவையாகும். அவை போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே பதட்டங்களை தூண்டி விடவும், ஒரு நாட்டிலுள்ள தொழிலாளர்களை மற்றொரு நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பவும், இறுதி விளைவாக வர்த்தக யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு இட்டு செல்லவும் மட்டுமே உதவும்.

அவர் ஒரு கட்டுப்பாடற்ற சந்தை கோட்பாட்டு அடிப்படைவாதி அல்லர் என்பதையே சார்கோசியின் திட்டம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால் அதனால் மட்டுமே எவ்வகையிலும் அவர் ஒரு சோசலிசவாதியாகி விட முடியாது. அவர் முன்னர் பொருளாதார மந்திரியாக செயற்பட்ட காலத்தில், பிரெஞ்சு நிறுவனங்களை வெளிநாட்டு கையகப்படுத்தலுக்கு எதிராக காப்பாற்ற பல நிகழ்வுகளில் ஏற்கனவே சார்க்கோசி தலையிட்டுள்ளார். 2004ல், ஜேர்மன் சீமென்ஸ் நிறுவனத்தால் பிரெஞ்சு தொழில்துறையின் முன்னணி நிறுவனமான Alstomன் சில பகுதிகள் கையகப்படுத்தப்படுவதை தடுக்க பல பில்லியன் உதவியுடன் ஜேர்மன் அரசாங்கத்தை குறிப்பிடத்தக்க அளவில் அலைக்கழிக்க அவர் தலையிட்டார்.

பொருளாதார தேசியவாத வடிவம் என்பது பழமைவாத அரசாங்கங்களுக்கு புதியதல்ல. இதுபோன்ற பாதுகாப்புவாதம் பிரான்சில் மட்டுமின்றி அது ஒரு நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற பாசிச ஆட்சியாளர்கள் கூட பொருளாதாரத்தின் சில பகுதிகளை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இது முதலாளித்துவ பிற்போக்குத் தன்மையை எவ்வகையிலும் மாற்றவில்லை. இதற்கு மாறாகத்தான் இருந்தது, அரசின் கைகளில் குவிந்த பொருளாதார வளங்கள், அதன் போட்டியாளர்களின் பொருளாதார மற்றும் இராணுவத்தை அழிப்பதில் நாட்டின் மொத்த சக்தியையும் குவிக்கத்தான் பயன்பட்டது.

ஸ்கூல்ஜ் மற்றும் லாபொன்டைன் போன்ற பிரபலங்களால் சார்கோசியின் பொருளாதார தேசியவாதத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு நேர்முகமான அதிர்வு ஓர் எச்சரிக்கையாகவே அமைய வேண்டும். முதாலாளித்துவ போட்டிகளுக்கு எதிராக இந்த இடர்நிலையிலுள்ள இந்த பிரச்சனை "தேசிய நலன்களுக்கு" பாதுகாப்பு அளிக்கிறது.

அதே சமயத்தில், சார்க்கோசியின் பொருளாதார தேசியவாதத்திற்கான பதில், தற்போதைய நிதி நெருக்கடியில் அதன் முழு திவாலை எடுத்துக்காட்டிய சுதந்திர சந்தையின் பாதுகாப்பு அல்ல. அது அதே நாணயத்தின் மறுபக்கமாக இருக்கிறது. ஆகவே இதற்கு உண்மையான சோசலிச மாற்றீடு தேவைப்படுகிறது.

இது முக்கிய நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதை மட்டும் உட்குறிப்பாக கொள்ளவில்லை, அவை ஜனநாயக கட்டுப்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் தேவைகளுக்கு கீழ்ப்பட்டதாக செய்யப்பட்டவேண்டும். மேலும் வங்கிகளை காப்பாற்ற பில்லியன் கணக்காக செலவிடுவதற்கு பதிலாக, சமூக ரீதியாக தேவைப்படும் வேலைத்திட்டங்களில் கட்டாயம் முதலீடு செய்யப்பட வேண்டும். தற்போதைய நெருக்கடிக்கு பொறுப்பான ஊக வணிக நடவடிக்கைகளில் பெரும் தொகையை ஈட்டிய நிதிக்குழுக்களுக்கு ஒரு சென்ட் கூட உதவி வழங்கப்படக்கூடாது. முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அனைத்து நாடுகளின், கண்டங்களின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச மூலோபாயம் தான் இதுபோன்ற கொள்கைகளுக்கு தேவைப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved