World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Class divisions begin to emerge in Obama coalition

ஒபாமா கூட்டணியில் வர்க்க பேதங்கள் வெளிப்பட தொடங்குகின்றன

6 November 2008

Back to screen version

புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அலையை ஒட்டி செவ்வாய் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். பல மில்லியன் வாக்காளர்கள் பல தசாப்தங்களாக அமெரிக்காவின்மீது மேலாதிக்கம் செலுத்திய சமூகப் பிற்போக்குத்தன அரசியலுக்கு மகத்தான முறையில் ஒரு நிராகரிப்பை அளித்தனர்.

ஆனால் "ஒபாமா கூட்டணியோ" முரண்பாடுகளில் நிறைந்துள்ளது. ஒபாமாவிற்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் அரிப்பு, இராணுவவாதம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகின்றனர். ஆயினும்கூட "பிரதான வீதியையும் வோல் ஸ்ட்ரீட்டையும்" இணத்தல், "வறியவர்களையும் செல்வந்தர்களையும்" இணைத்தல் போன்ற ஒபாமாவின் அலங்காரச் சொற்கள் இருந்தபோதிலும்கூட, அவர் அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கின் மிக சக்தி வாய்ந்த பிரிவுகளின் நலன்களை காப்பதற்கு உறுதி கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி ஏற்கனவே வரவிருக்கும் நிர்வாகத்தை பற்றிய மக்கள் எதிர்பார்ப்புக்களை உற்சாகக் குறைவிற்கு உட்படுத்த முற்பட்டுள்ளது. சிக்காகோவில் வெற்றியுரை நடத்தும்போது ஒபாமாவே இதைத் தெரிவிக்கும் வகையில் கூறினார்: "நமக்கு முன்னே உள்ள பாதை நீண்டதாகும்... ஓராண்டிலோ அல்லது கூடுதலான காலத்திலோ நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாது... ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் நான் எடுக்கும் ஒவ்வொரு கொள்கை மற்றும் முடிவு பற்றி பலரும் உடன்படமாட்டார்கள், அரசாங்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்பதையும் நாம் அறிவோம்."

முன்னணி ஜனநாயகக் கட்சியினர், தேர்தல் முடிவு கொள்கைகளில் கணிசமான மாற்றம் என்பதற்கான கட்டளை என விளக்குவது தவறாகும் என்று வரிசையாக நின்று கூறுகின்றனர். மாறாக, அவர்கள் அடுத்த நிர்வாகம் "மையத்தில் இருந்து" ஆட்சி நடத்த வேண்டும், குடியரசுக் கட்சியுடன் இருகட்சி முறை என்ற வகையில் உடன்பாட்டை நம்பியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

புதனன்று வந்த "வெற்றியைத் தொடர்ந்து கடினமான விருப்பத்தேர்வுகளும் சவால்களும் உள்ளன" என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் வாஷிங்டன் போஸ்ட், ஒபாமா ஆலோசகர்கள் "ஒரு தடையற்ற தாராளவாத அரசாங்கத்திற்கு கட்டளைதான் இந்த முடிவுகள் என்று எடுத்துக் கொள்வதில் இருக்கும் ஆபத்துக்கள் பற்றி நன்கு உணர்ந்துள்ளதாக" பெயரிடப்படாத ஒபாமா ஆலோசகர்கள் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க மக்களுடைய விருப்பத்தை --வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரசில் பெரும்பான்மையை கொடுத்த மக்களுடைய விருப்பத்தை-- நிராகரித்து தேர்தலில் மிகப் பெரிய அளவில் நிராகரிக்கப்பட்ட அரசியல் நடைமுறையின் மிக வலதுசாரிப் போக்கு மற்றும் வணிக சார்பு நிறைந்த பிரிவுகளுடன் இணைந்து கொள்கையை உருவாக்க விரும்புகின்றனர்.

புஷ் மக்களின் மொத்த வாக்கை 2000த்தில் இழந்தாலும் 2004ல் பெரும்பான்மையை அடைவதில் தோல்வியுற்றாலும் எப்படி தனது வலதுசாரி செயற்பட்டியலுக்கு அவர்கள் இசைவு கொடுத்துள்ளனர் என்று வலியுறுத்தியதுடன் இது ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது ஆகும்.

குடியரசுக் கட்சியினருடன் ஒத்துழைக்கும் நேரத்தில் ஜனநாயகக் கட்சியினர், அடுத்த நிர்வாகம் பெருகி வரும் பொருளாதாரப் பேரழிவில் இருந்து சற்று ஆறுதல் அளிக்கும் என்று கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களை மீறுவதற்குத்தான் தயாரிப்பு செய்கின்றனர். போஸ்ட் குறிப்பிட்டுள்ளபடி, ஒபாமாவின் ஆலோசகர்கள் "சில ஜனநாயகக் கட்சித் தளங்களுடன் மோதல் திறனுக்குத் தயாராக உள்ளனர்; அல்லது காங்கிரசில் இருக்கும் சில தாராளவாத ஜனநாயகக் கட்சியினருடன் மோதவும் தயாராக உள்ளனர்; இவ்வுறுப்பினர்கள் ஒபாமாவின் முன்னுரிமைகளை எதிர்த்து மோதக்கூடும் அவர் கூறுவதற்கு "முடியாது" என்று சொல்லத் தயாராக உள்ளனர்.

வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பின் செலவினங்கள், பெருகிய இராணுவ நடவடிக்கைச் செலவுகள், பெரும் பற்றாக்குறையினால் ஊதிப்போயிருக்கும் பட்ஜெட் ஆகியவை சமூகச் செலவினங்களை விரிவாக்கம் செய்வதற்கு வழி கொடுக்காது. மாறாக ஜனநாயகக் கட்சியும், தொழிலாள வர்க்கந்தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலை முறிவுக்கும், நிதியப் பிரபுத்துவத்திற்கு பிணை எடுப்பதற்கு அரசாங்கம் செலவழிப்பதற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளது.

ஒபாமாவின் இடைமருவுக் குழுவிற்கு ஆலோசனை கொடுத்துக் கொண்டிருக்கும், முன்னாள் வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவரான லியோன் பானெட்டா, புதிய ஜனாதிபதியை பற்றிக் குறிப்பிடுகையில் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: "மிகக் கடுமையான வகையில் முன்னிற்க வேண்டும்; ஏனெனில் கடுமையான முடிவுகள் எடுப்பதை தாமதப்படுத்தும் வகையில் கல்லறைக்கு செல்லும்போது மெதுவாக நகர வேண்டும் என்று நினைத்தால், மிக அதிக பூசல்கள் விளையும்". "வேதனை தருவது மற்றும் முன்னணியில் முரண்டு பிடித்து நிற்பது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும்."

பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி காகசின் தலைவராக இருக்கும் Rahm Emanuel ஐ வெள்ளை மாளிகையின் ஊழியர்கள் தலைவராக ஒபாமா தேர்ந்து எடுத்துள்ளது அவர் தன்னுடைய நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பிற்போக்கு சமூக மாதிரிகளைப் பற்றிய குறிப்பைக் காட்டுகிறது. முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடைய மூத்த ஆலோசகர் என்ற முறையில் அவர் சட்டம்-ஒழுங்கு, "பொதுநலச் சீர்திருத்தம்" மற்றும் கடந்த காலத்தில் இருந்த தாராள சீர்திருத்தங்களுடன் ஜனநாயகக் கட்சியினர் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய பிற பிற்போக்குத்தன நடவடிக்கைகள் முக்கியம் என்று கூறியுள்ளார்.

கிளின்டன் நிர்வாகத்தைவிட்டு நீங்கிய பின்னர், எமானுவல் உலக முதலீட்டு வங்கியான சிக்காகோவில் இருக்கும் Dresdner Kleinwort Wasserstein ல் $18 மில்லியனை சம்பாதித்தாக கூறப்படுகிறது; இவர் அங்கு 1999ல் இருந்து 2002 வரை பணிபுரிந்தார்.

2002 காங்கிரஸ் தேர்தலில் நிற்கும் முன்பு, எமானுவல் ஜனநாயகக் கட்சியின் இல்லிநோய் சட்டமன்ற பிரதிநிதிகள் குழுவிடம் இருந்து முறித்துக் கொண்டு, ஈராக்கிற்கு எதிரான போருக்கு இசைவு கொடுத்து, வெளிப்படையாக ஜனாதிபதி புஷ்ஷிற்கு ஆதரவு கொடுத்தார். மன்ற ஜனநாயக கட்சி தலைமையில் நான்காம் உயர்ந்த இடத்தைப் பெற்று எமானுவல் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புக்கு $700 பில்லியன் கொடுக்கப்பட்ட சட்டத்தை இயற்றுவதில் முக்கிய பங்கை கொண்டிருந்தார்.

எமானுவல் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார்; இவர் கிளின்டன்கள் மற்றும் செனட்டர் ஜோசப் லீபர்மன் போன்றவர்களை அடக்கியுள்ள ஜனநாயகக் கட்சி தலைமைக் குழுவின் வலதுசாரிப் பிரிவில் ஒரு முக்கிய உறுப்பினர் ஆவார். காபினெட் மந்திரிகள் நியமனம், நிதி மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் உட்பட, பல தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளில் இவர் முக்கிய பங்கை கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; அப்பொழுதுதான் சந்தைகளும், வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ அமைப்பு ஆகியவை நிம்மதியை அடையும்.

நிதிமந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுபவர்களில் முன்னாள் கிளின்டனின் நிதி மந்திரி லோரன்ஸ் சம்மர்ஸ், நியூ யோர்க் பெடரல் ரிசேர்வ் வங்கியின் தலைவரான டிமோதி கீத்னெர், முன்னாள் பெடரல் ரிசேர்வின் தலைவர் போல் வோல்க்கர் ஆகியோர் உள்ளனர். 1980 களில் இருந்து "வோல்க்கர் அதிர்ச்சி" என்பதுடன் வோல்க்கர் எப்பொழுதும் அடையாளம் காணப்படுவார். அப்பொழுது அவர் வட்டி விகிதங்களை 20சதவிகிதத்திற்கு உயர்த்தி வேண்டுமென்றே உற்பத்தி வேலைகள் மில்லியன் கணக்கில் அழிக்கப்படுவதற்கு முன்கூட்டியே வகை செய்தார்; இதையொட்டி அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. 1981ம் ஆண்டு பாற்கோ எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முறித்ததற்காக றேகனை வோல்க்கர் பெரிதும் பாராட்டினார்; அந்த நடவடிக்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கைக் கொண்டுத்தது என்றும் கூறினார்.

அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்புக்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தொடர்கையில் ராய்ட்டர்ஸ், ரோபர்ட் கேட்ஸை பாதுகாப்பு மந்திரியாகத் தொடர வைப்பதை பரிசீலிக்கிறார் என்றும் அல்லது முன்னாள் கடற்படை செயலர் ரிச்சர்ட் டான்சிங் என்று, ஒரு நெருக்கமான ஒபாமா ஆலோசகரை போடலாம் என இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு பரிசீலிக்கப்படும் மற்றவர்களில் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் கெர்ரி, முன்னாள் தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், வெளியேறும் செனட் உறுப்பினர் சக் கேகல் மற்றும் முன்னாள் ஜோர்ஜிய ஜனநாயகக் கட்சி செனட்டர் சாம் நன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க்குற்றங்களில் ஏதேனும் ஒருவிதத்தில் பால்கன்களில் இருந்து ஹைத்தி வரை, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா பகுதிகள் வரை தொடர்பு உடையவர்கள் ஆவர்.

செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய உரையில் ஒபாமா புஷ்ஷின் "பயங்கரவாத்திற்கு எதிரான போர்" பற்றிய தன்னுடைய உறுதியையும் வலியுறுத்தனார்; இப்போர்தான் போலிக்காரணமாக அமெரிக்க ஆளும் உயரடுக்கின் புவி-அரசியல் நலன்களை ஆற்றல் நிறைந்துள்ள உலக பகுதிகளில் உயர்த்துவதற்கு பயன்பட்டது. "இந்த உலகைச் சின்னாபின்னமாக ஆக்க வேண்டும் என்று விரும்புவர்களே - நாங்கள் உங்களை தோற்கடிப்போம்" என்ற எச்சரிக்கையை கொடுத்தார்.

அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் அனுப்பபட்டுள்ளது "நமக்காக அவர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்துத்தான்" என்ற அப்பட்டமான கூற்றையும் பல முறை கூறியுள்ளார்; அதாவது அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை முன்வைக்கிறது என்பதற்கு பதிலாக அமெரிக்க மக்களைக் காப்பதற்கு என்று கூறுகிறார். ஒரு "புதிய பணி உணர்வு, ஒரு புதிய தியாக உணர்வு" வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் --இது ஒருவிதத்தில் கட்டாய இராணுவ சேவைக்கு ஒரு குறிப்பு ஆகும்.

பொருளாதாரக் கொள்கையை போலவே, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி, புஷ் ஆண்டுகளின் இராணுவ ஆக்கிரமிப்பு முறைகளுக்கு முடிவு வைக்க முன்னிற்பார் என்று எண்ணும் வாக்காளர்களுடன் தவிர்க்க முடியாமல் அடுத்த நிர்வாகம் மோதும். மீண்டும் ஜனநாயகக் கட்சியினர் ஈராக்கில் இருந்து "முன்கூட்டியே" வெளியேறுதலுக்கு எதிர்ப்பை வலியுறுத்துவதன் மூலமும் ஆப்கானிஸ்தானில் "நேர்மையான போர்" விரிவாக்கப்படுவதின் தேவையை வலியுறுத்துவதன் மூலமும் இந்த எதிர்பார்ப்புக்களை ஊக்கம்கெடுப்பதற்கு செயற்படுகின்றனர்.

Jerry White, Socialist Equality Party 2008 Presidential Candidate


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved