World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The election of Barack Obama

பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுகிறார்

5 November 2008

Back to screen version

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா, செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி ஜோன் மக்கெயினை தோற்கடித்து மகத்தான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சியினரும் கணிசமான முறையில் தேசிய சட்ட மன்ற பிரதிநிதிகள் பிரிவு மற்றும் செனட்டில் தங்கள் பெரும்பான்மையை அதிகரித்துள்ளனர்.

நள்ளிரவு வரை ஒபாமா மக்கெயினின் 156 தேர்தல் குழு வாக்குகளுக்கு எதிராக 338 வாக்குகள் பெற்று வெற்றியடைவார் என்று கணிக்கப்பட்டுள்ளது ஐந்து மாநிலங்களில் போட்டி மிக நெருக்கமாக உள்ளது. வெற்றிக்கு தேர்தல் குழுவில் 270 வாக்குகள் பெற வேண்டும். ஜனநாயகக் கட்சியினர் குறைந்தது ஐந்து இடங்களையாவது செனட்டிலும் கிட்டத்தட்ட 20 இடங்களை பிரதிநிதிகள் மன்றத்திலும் அதிகரித்துள்ளனர்; பல போட்டிகளின் முடிவு இன்னும் வெளியாகவில்லை.

ஒபாமா 26 மாநிலங்களில் வெற்றி பெற்றார்: 2004ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரி வெற்றி பெற்ற அனைத்து 19 மாநிலங்களிலும், புஷ் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வர்ஜீனியா, புளோரிடா, ஓகையோ, அயோவா, கொலராடோ, நியூ மெக்சிகோ மற்றும் நெவடா என்று 9 மாநிலங்களிலும் இவர் வெற்றி அடைந்துள்ளார். புஷ் 2004ல் வெற்றி பெற்ற இந்தியானா, வடகரோலினா மற்றும் மோன்டனா என்னும் மூன்று மாநிலங்களில் முன்னிலையில் உள்ளார்.

ஒபாமாவின் மொத்த மக்கள் வாக்குகளில் வித்தியாசம் கிட்டத்தட்ட பத்து மில்லியன் என்ற எண்ணிக்கையை அடையும். 1952ல் ஐசன்ஹோவர் அடைந்த வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி பதவியில் இல்லாத ஒரு வேட்பாளர் இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இப்பொழுதுதான்.

முதலாவதும், முக்கியமானதுமாக தேர்தல் முடிவு என்பது புஷ்ஷின் ஜனாதிபதி ஆட்சி, குடியரசுக் கட்சி மற்றும் அமெரிக்க அரசியலை மூன்று தசாப்தங்களாக வலதுசாரி ஆதிக்கம் செலுத்தியது ஆகியவை மகத்தான முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது அறியப்பட வேண்டும். தேர்தல் கட்டமைப்பில் கடந்த 25 ஆண்டுகளில் மிகப் பெரிய முறையில் மகத்தான மக்கள் தொகுப்பு, சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் அடையப்பட்ட தேர்தலாகும் இது.

சமீபத்திய காலத்தில் செய்தி ஊடகம் மற்றும் இரு கட்சிகளின் அரசியல் அமைப்பாலும் வலியுறுத்தப்பட்ட அனைத்து வலதுசாரி கைமருந்துகளும், --அதாவது அமெரிக்கா ஒரு "வலது" அல்லது "மையம்-வலது" நாடு, பெரும்பாலான "சிவப்பு மாநிலங்கள்" அசைவின்றி குடியரசுக் கட்சிக்கு விசுவாசமாக உள்ளன, சமய, பண்பாட்டு "மதிப்பீடுகள்" அரசியலில் முக்கிய பிரச்சினைகள் என்று கூறப்பட்டவை-- சிதறடிக்கப்பட்டுள்ளன.

இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், தேர்தலின் முடிவு அமரிக்கா ஒரு இனவெறி நாடு எனக் கூறப்பட்டதை நிராகரித்துள்ளது; பகுத்தறிவிற்குப் பொருந்தாத இனவழி கசப்பு உணர்வுகள்தான் மற்ற பிரச்சினைகளையும் விட முக்கியத்துவம் பெறும் என்று கூறப்பட்டதும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் முடிந்த பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களின்படி, தாங்கள் அளித்த வாக்குகளில் இனப் பிரச்சினை முக்கியம் என்று மிக சிறய சதவீதத்தினரேதான் கூறினர். மாறாக போரின் பாதிப்பு, நிதிய நெருக்கடி, ஆழ்ந்த பொருளாதாரப் பின்னடைவு ஆகியவற்றின் தாக்கத்தில் முற்றிலும் அறிவார்ந்த முறையில் பல மில்லியன் மக்கள் தங்கள் ஜனநாயக மற்றும் அடிப்படையில் சமத்துவமான விழைவுகளை வெளிப்படுத்தும் வகையில்தான் வாக்களித்தனர்; உத்தியோகபூர்வ அரசியலின் குறைந்த மற்றும் சிதைந்த கட்டமைப்பை எடுத்துக்கொண்டால், அவர்களுடைய உணர்வுகளுக்கு ஒரே வடிகால் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தது.

வாக்குப்பதிவுகள் மிகப்பெரிய இளைஞர் தொகுப்பில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு ஒபாமாவிற்கு வாக்களித்ததாக காட்டுகின்றன.

இந்த முடிவு குடியரசுக் கட்சிக்கு ஒரு கப்பல் கவிழ்ந்தது போல் ஆகும்; இதன் ஜனாதிபதி தளம் ஒரு வட்டார எஞ்சிய பகுதியாகக் குறைக்கப்பட்டது, அது ஆழ்ந்த தெற்கு மற்றும் மேற்கில் அதிகமான கிராமப்புறப் பகுதிகளையும் கொண்டுள்ளது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் மைன் முதல் புளோரிடா வரை ஒபாமா பெரும் வெற்றியைக் கண்டார்; இதைத்தவிர தொழில்துறைப் பகுதியான நடு மேற்கு (Midwest) மற்றும் முழு பசிபிக் கடலோரப் பகுதி மற்றும் மலைப் பகுதி மேற்கு ஆகியவற்றையும் கைப்பற்றினார்.

குடியரசுக் கட்சியினர் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் செனட் இடங்களை இழந்தனர். ஜனநாயகக் கட்சியினர் வர்ஜீனியா, கொலராடோ மற்றும் நியூ மெக்சிகோவில் இருந்த காலியிடங்களைக் கைப்பற்றியதுடன், நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் வட கரோலினாவில் பதவியில் இருக்கும் குடியரசு பிரதிநிதிகளை தோற்கடித்தனர்; ஒரேகான், அலாஸ்கா மற்றும் மின்னிசோட்டாவில் இன்னும் முடிவுகள் உறுதியாகவில்லை. பதவியில் இருக்கும் ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டர் கூட தோற்கடிக்கப்படவில்லை.

பிரதிநிதிகள் மன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் மூன்று குடியரசுக் கட்சியினரின் இடங்களை நியூ யோர்க்கிலும், வர்ஜீனியாவில் மூன்று தொகுதிகளிலும், புளோரிடாவில் இரு இடங்களிலும், நியு மெக்சிகில் இரு தொகுதிகளிலும், கனெக்கடிக்கட், பென்சில்வேனியா, வட கரோலினா, அலபாமா, இல்லினோய், கொலராடோ, அரிசோனா, நெவடா, ஐடாஹோ ஆகியவற்றில் ஒவ்வொரு இடத்தையும் கைப்பற்றினர். புளோரிடா, லூசியானா மற்றும் டெக்ஸாஸ் என்ற மாநிலங்களில்தான் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய மன்ற உறுப்பினர்கள் மூவர் தோற்கடிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்கள் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்ததை ஒருவித நிம்மதியுடனும், ஏன் களிப்புடனும்கூட வரவேற்றுள்ளனர். ஆனால் ஒபாமா வெற்றி பற்றிய அவர்களுடைய விளக்கம் ஒபாமா உட்பட ஜனநாயகக் கட்சியின் தலைமை, இல்லிநோய் செனட்டருக்கு ஆதரவு கொடுத்த ஆளும் உயரடுக்கு கொண்டிருக்கும் விளக்கம் ஆகியவற்றில் இருந்து மாறுபட்டது ஆகும்.

அமெரிக்க செய்தி ஊடகம் ஐயத்திற்கு இடமின்றி ஜனநாயகக் கட்சியின் வெற்றி போக்கின் மாற்றத்திற்கான கட்டளை என்று கூறாது. ஏற்கனவே, வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு, ஒபாமாவின் வெற்றி உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே, முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டைத்தான் துல்லியமாக முன்வைத்தனர். ஜனநாயகக் கட்சியின் துவக்கத் தேர்தலில் ஒபாமாவிற்கு ஆதரவை கொடுத்த, நியூ மெக்சிகோவின் கவர்னரான பில் ரிச்சர்ட்சன், செவ்வாய் இரவு ஜனநாயகக் கட்சியினர் "நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்", "உடன்பாடுகளைக் கொள்ள வேண்டும்" என்று எச்சரிகை விடுத்தார். ஜோர்ஜியாவின் பிரதிநிதிகள் மன்ற உறுப்பினரான ஜோன் லெவிஸ் இதே கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியினர் மெதுவாகச் செயல்பட வேண்டும் என்றும் "இரு கட்சிகளையும்" அரவணைத்துச் செல்லவேண்டும் என்றும் கூறினார்.

உண்மையில், செவ்வாய் தேர்தல் முடிவுகள், பொதுவாக இருகட்சித் தன்மையைக் கொண்டிருந்த வலதுசாரிக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்பதற்கு மக்கள் கொடுத்துள்ள தெளிவான கட்டளை ஆகும்.

ஜனநாயகக் கட்சி அதன் வெற்றியில் இருந்து எந்தத் திருப்தி அடைந்தாலும், மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேர்தலினால் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் ஆகியவை எளிதில் கட்டுப்படுத்தமுடியாது என்று ஜனாதிபதி பதவிக்கு வரவிருப்பவருடைய உள்வட்டம் உணர்வதால் தணிக்கப்படுகிறது. தேர்தலின் விளைவு ஒரு புதிய மற்றும் நீடித்த ஆழ்ந்த வர்க்கப் பூசலுக்கு அரங்கைத்தான் அமைக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved