World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

On the eve of the US elections

அமெரிக்கத் தேர்தல்களுக்கு முன்னதாக

By Patrick Martin
3 November 2008

Back to screen version

தேர்தல் தினத்திற்கு முன்பு, ஜனநாயகக் கட்சிக்கு ஒருதலைப்பட்சமான பெரும் வெற்றி என கருத்துக் கணிப்புக்கள் சுட்டிக் காட்டுகையில், பாரக் ஒபாமாவும் முக்கிய தேசியச் சட்டமன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் புஷ் நிர்வாகத்தை மக்கள் நிராகரித்தல் என்பது வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் கொள்கைகளையோ ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற கொள்கைகளையோ நிர்ணயிக்காது என்பதைத் முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷிற்கு எதிரான மக்கள் வெறுப்பை தமக்கான பெரும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் "மாற்றம்", "புதிய அரசியல்", "இப்பொழுதே உடனடியாகச் செய்யவேண்டிய கடுமையான கட்டாயம்" என்ற அழைப்பின் அடிப்படையில் அணிதிரட்டிய பிறகு, ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் இப்பொழுது ஆளும் உயரடுக்கிற்கு தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் முற்றிலும் மரபார்ந்த, பழமைவாத செயல்பட்டியலைச் செயல்படுத்த இருப்பதாகவும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்களை நிலைநிறுத்தப்போவதாகவும் உத்தரவாதம் அளிக்க பெரும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ஒவ்வொருவரின் மந்திரமும் "அதிகம் ஆசைப்பட்டுவிடக்கூடாது", "ஒரு கட்சி-ஆட்சி" என்ற கருத்தை நிராகரித்தல் மற்றும் புது நிர்வாகத்தின் இலக்கு இரு கட்சிகளின் ஒருமித்த உணர்வை அடைதல் என்பதாக இருக்க வேண்டும் என்பதாகும். வேறுவிதமாகக் கூறினால் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுபாடு ஒன்றான தேர்தல் தினத்தின்று வாக்காளர்கள் எடுக்கும் முடிவு பொதுக் கொள்கையை நிர்ணயிக்கும் என்பதை நிராகரித்துக்கொண்டிருக்கின்றனர்.

பல மில்லியன் கணக்கில் மக்கள் ஒபாமாவிற்கு வாக்களிப்பது ஈராக்கில் போரை முடிவிற்குக் கொண்டுவரும், புஷ் நிர்வாகத்தினால் ஊட்டிவளர்க்கப்பட்ட பெரு வணிகம் மற்றும் செல்வந்தர்களுடைய தடையற்ற இலாப முறைக்கு மாறான வகையில், வேலைகளையும் கெளரவமான வாழ்க்கைத் தரங்களையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு வாக்களிக்க உள்ளனர்.

ஆனால் வரவிருக்கும் நிர்வாகத்தின் கொள்கை இத்தகைய மக்களின் பிரமைகளினால் வழிகாட்டப்பட மாட்டாது; மாறாக யதார்த்தத்தில் ஒரு உலகளாவிய நிதிய நெருக்கடி, அமெரிக்காவில் இருக்கும் ஆழ்ந்த சரிவு, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு என்பவற்றால் வழிநடத்தப்படும்.

ஒபாமா மற்றும் அவருடைய முக்கிய மூலோபாய ஆலோசகர்களின் பிரதான கவலை என்னவெனில் ஜனநாயகக் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றால் அது இவர்கள் செய்து முடிக்க விருப்பமில்லாத மக்கள் எதிர்பார்ப்புக்களைத்தான் அதிகரிக்கும் என்பதாகும்.

செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு எவ்வித அரசியல் கட்டளையையும் கொடுக்காது என்ற கருத்து 2004ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் ஜோன் கெர்ரியினால், அவர் NBC ஞாயிறு "செய்தி ஊடக சந்திப்பு" என்ற நிகழ்வில் நடந்த பேட்டியினால் ஒபாமாவின் சார்பில் கூறப்பட்டது. நிகழ்ச்சியை நடத்திய Tom Brokaw கெர்ரியிடம் தேசிய சட்டமன்ற வழிவகைகள் குழுவின் தலைவரும், நியூ யோர்க் ஜனநாயகக் கட்சியின் Charles Rangel ஒபாமா விரைவில் மத்தியதர, குறைந்த வருமானப்பிரிவுக் குடும்பங்களுக்கு வரிக் குறைப்பு கொடுக்க, சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தம் பற்றி மற்றும் மாற்றீட்டு சக்திதிட்டத்தை வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி வெளியிட்டுள்ள அறிக்கைகள் பற்றி வினவப்பட்டார்.

இத்தகைய கொள்கைகளுக்கு நிதி எப்படி திரட்டப்படும் எனக் கேட்கப்பட்டதற்கு ரேஞ்சல் கூறியிருந்தார்; "பணம் எங்கு இருந்து வரும் என்று என்னைக் கேட்காதீர்கள். போல்சன் சென்ற அதே இடத்திற்குத்தான் நானும் போகிறேன்". இது நிதி மந்திரி ஹென்ரி போல்சன் திட்டமிட்ட வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கான $700 பில்லியனைக் குறிப்பிட்டது.

கெர்ரியிடம் ப்ரோகா கேட்டார்; "அது ஒரு பொறுப்பான நிதியக் கொள்கையா? செனட்டர் விடையிறுத்தார்: "அக்கருத்துக்கள் அனைத்துடனும் நான் உடன்பாடு கொள்ளவில்லை; பராக் ஒபாமாவும் உடன்படவில்லை. ஜனாதிபதி பதவிக்கு நிற்பவர் ஒபாமா, வாஷிங்டனில் மிகப்பொறுப்புமிக்க நிதிய கொள்கையை தொடரவேண்டும் என அவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்."

ஒபாமா தன் நிர்வாகத்தில் கணிசமான அளவு குடியரசுக் கட்சியின் கணிசமான கருத்துக்கள் மற்றும் ஈடுபாட்டை நாட இருக்கிறார். "நாட்டை ஒன்றாகக் கொண்டுவரும் விதத்தில் அவர் நிர்வகிக்க உள்ளார்; எங்கள் பெரும்பான்மை எப்படி இருந்தாலும், அவர் பரந்த ஒருமித்த உணர்விற்குத்தான் பாடுபடுவார்; ஏனெனில் அது ஒன்றுதான் அமெரிக்காவை இப்பொழுது ஆள்வதற்கு ஒரே வழியாகும்." ஜனநாயகக் கட்சியினர் தங்கள் பெரும்பான்மையைப் பயன்படுத்தி குடியரசுக் கட்சி எதிர்க்கும் கொள்கைகளை திணிக்க முற்பட மாட்டார்கள் என்று செனட்டர் கூறினார் "51 அல்லது 60 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டம் இயற்றப் போவதில்லை" என்று அவர் கூறினார்; இது செனட் பற்றிய குறிப்பு ஆகும். "நாங்கள் 85 வாக்குகள் பெரும்பான்மை என்ற விதத்தைத்தான் நாடப் போகிறோம்."

இந்த அறிக்கை மிகத் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்ப வேண்டும். "85 சதவிகிதப் பெரும்பான்மையை" செனட்டில் வலியுறுத்துவது என்றால் சிறுபான்மை குடியரசுக் கட்சிக்கு அரசாங்கக் கொள்கைமீது தடுப்பதிகாரத்தைக் கொடுப்பது என்று பொருள்படும். இது ஜனநாயகம் பற்றிய எத்தகைய கருத்தாய்வையும் மறுப்பதாகும்.

செவ்வாயன்று ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெறுவார்களானால், அது கடந்த எட்டு ஆண்டுகளாக புஷ் நிர்வாகம் தொடர்ந்து வரும் போர் மற்றும் சமூகப் பிற்போக்குக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்ற பரந்த மக்களின் உணர்வு இருப்பதால்தான். ஆனால் கெர்ரி, முழு மக்கள் ஆணை இருந்தாலும் அது போல் நடந்து கொள்ளுதல் ஜனநாயகக் கட்சியைப்பொறுத்தவரை தவறு ஆகும் என்று வலியுறுத்துகிறார்.

இத்தகைய நிலைப்பாட்டின் ஜனநாயக விரோத தன்மை முன்னாள் ஜனநாயக செனட்டரான பாப் கெர்ரியால் கூறப்பட்ட கருத்துக்களுடன் கெர்ரி தன்னுடைய உடன்பாட்டைக் கூறியவகையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; பாப்கெர்ரி சமீபத்தில் "என்னுடைய சிந்தனையில் ஜனாதிபதி ஒபாமா வெற்றிக்கு முக்கிய அச்சுறுத்தல் சட்டமன்றப் பெரும்பான்மையினால் தைரியம் பெற்ற ஜனநாயகக் கட்சியினர் சிலரிடம் இருந்துதான் வரும்......காங்கிரசிற்கு ஒபாமா இதனை தெளிவாக அறிவிக்க வேண்டும்: தங்கள் கொள்கைகளால் ஒன்றும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று விடவில்லை. மாறாக அமெரிக்க மக்கள் நிலவும் ஒரு தோற்றுவிட்ட நிலைக்கு எதிராக தங்கள் பெரும் திகைப்பை அதிக அளவில் பதிவு செய்துள்ளனர், அடுத்த ஜனாதிபதி ஒரு புதிய, ஒருதலைப்பட்ச போக்கு இல்லாத பாதையை நாடவேண்டும் என்பதை."அறிவித்தார்.

இத்தகைய நிலைப்பாடு தலைமை நீதி மன்றத்தால் 2000ம் ஆண்டில் புஷ் வெள்ளை மாளிகையில் இருத்தப்பட்டு குடியரசுக் கட்சி ஆண்ட முறைக்கு முற்றிலும் மாறானது ஆகும். தன்னுடைய ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளரான அல் கோரிடம் மொத்த மக்கள் வாக்குகள் எண்ணிக்கையில் புஷ் தோற்றிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் கீழ் சபையிலும் செனட்டிலும் ஜனநாயகக் கட்சியினர் நவம்பர் 4க்குப் பிறகு கொள்ளக்கூடிய பெரும்பான்மையை விட குறைவாகப் பெற்றிருந்தாலும், வரவிருந்த புஷ் நிர்வாகம் தேர்தல் தம்மிடம் 100 சதவிகித அதிகாரத்தைக் கொடுத்துவிட்டதாகத்தான் பீற்றிக் கொண்டது.

அக்கருத்தை ஒட்டித்தான் புஷ் கொள்கையை இயற்றினார்; கணிசமான ஜனநாயகக் கட்சி ஆதரவுடன் மகத்தான வரிக் குறைப்புக்களை செல்வந்தர்களுக்கு கொடுத்தார்; பின் ஆப்கானிஸ்தான, ஈராக்கில் போர்களைத் துவக்கினார்; பின்னர் அமெரிக்க மக்களால் பரந்த அளவில் எதிர்க்கப்பட்ட மற்ற கொள்கைகளையும் செயல்படுத்தினார்.

வரவிருக்கும் ஜனநாயக நிர்வாகம், 2006 தேர்தலில் மகத்தான சட்டமன்ற வெற்றிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் எப்படி நடந்து கொண்டனரோ அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதற்கான குறிப்பைத்தான் கெர்ரியின் கருத்துக்கள் காட்டுகின்றன; அதாவது அந்த வெற்றி ஈராக் போருக்கு எதிரான பெரும் மக்கள் எதிர்ப்பு உந்துதலில் கிடைத்தது என்பது பொருட்படுத்தப்படவில்லை. புதிதாக நிறுவப்படும் மன்ற, செனட் ஜனநாயகப் பெரும்பான்மைகள் ஜனாதிபதி புஷ்ஷுடன் இருகட்சி முறை அடிப்படையில் ஒத்துழைக்க உறுதி கொடுத்தன. மன்றத்தின் புதிய சபாநாயகரான நான்ஸி பெலோசி, புஷ் மீது பெரிய குற்ற விசாரணை பற்றி எந்த முயற்சியும் இல்லை என்று உடனடியாகக் கூறியதுடன், பின்னர் புஷ் ஜனாதிபதி பதவிக்காலத்தின் இறுதிவரை ஈராக் போருக்கு தொடர்ந்து நிதி அளிக்கவும் ஒப்புக் கொண்டார்.

கெர்ரி மற்றும் பிற ஜனநாயகக் கட்சிச் செய்தித் தொடர்பாளர்கள் 2008 தேர்தலின் அடிப்படை மோசடித்தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். மிக அதிக அளவில் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்தும், மிகப் பரந்த முறையில் மக்களின் புதிய தட்டுக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் தேர்தலில் பங்கு கொள்வதும், அமெரிக்க மக்கள் இறுதியில் ஆளும் உயரடுக்கினுள் இருக்கும் பூசல் பற்றிய ஒரு புள்ளிவிபர பங்காக இருக்கப்போவதை தவிர வேறு எதையும் செய்யப் போவதில்லை. தேர்தல் தினம் கடந்தவுடன், ஒபாமா , "நம்பிக்கை", "மாற்றம்" ஆகியவற்றை அவருடைய கைப்பெட்டிக்குள் திணித்துவிட்டு, அவருடைய உண்மையான பணியைத்தான் செய்வார்; அதாவது அமெரிக்க பெருநிறுவன நலன்களைக் காப்பார்.

நிதியச் சந்தைகள் உருகிவழிதலின் அபாயத்தை ஜனநாயகக் கட்சியினர் மிகுந்த கவனத்துடன் எதிர் கொண்டனர்; வங்கிகளும் ஊகவணிகர்களும் பிணை எடுக்கப்படுவதற்கு பொது நிதியில் இருந்து டிரில்லியன்களை எடுத்துக் கொடுத்தனர். இதே அரசியல் நபர்கள்தான் தேர்தலுக்குப் பிறகு தொழிலாளர்களிடம் திரும்பி, குறிப்பாக மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் நடக்கும் போர்ச் செலவுகள் வேறு இருக்கும் நிலையில், தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, வேலைகள் கல்வி மற்ற சமூக நலன்களைக் கொடுக்க பணம் இல்லை, என்று கூறுவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved