World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian politicians threaten to resign over Sri Lankan war இந்திய அரசியல்வாதிகள் இலங்கைப்போர் பற்றி இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்துகின்றனர் By Sasi Kumar and Arun Kumar இலங்கையில் தீவிரமாகி வரும் உள்நாட்டுப்போர் ஓர் அண்டை இந்திய நாட்டு மாநிலமான தமிழ்நாட்டில், பூசலில் தமிழ் சிறுபான்மையினர் படும் துயரம், மற்றும் இந்திய அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கும் ஆதரவு மீதாக பரந்த சீற்றத்தை தூண்டியுள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் வகுப்புவாத அரசியலை தளமாகக் கொண்ட அரசியல் கட்சிகள், போருக்கு எதிரிகள் போல் காட்டிக் கொள்ள பெரும் பரபரப்பைக் காட்டியுள்ளன. தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.கருணாநிதி அக்டோபர் 14ம் தேதி போர் பற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்; இது புது டெல்லியில் இருக்கும் கூட்டாட்சி அராங்கத்திற்கு ஒரு "எச்சரிக்கையை" விடுத்தது. இரண்டு வாரங்களுக்குள் இந்திய அரசாங்கம் "இலங்கையில் போரை நிறுத்த முன்வராவிட்டால்" தேசிய பாராளுமன்றத்தில் இருக்கும் மாநில உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக இராஜிநாமா செய்துவிடுவர் என்று முக்கிய தீர்மானம் அறிவித்தது. இரண்டாம் தீர்மானம் அரசாங்கம் "இலங்கைத் தமிழர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்", "இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ உதவியும் நிறுத்தப்பட வேண்டும்" என்றும் கோரியது. "இலங்கை கடற்படை அடிக்கடி தமிழ்நாட்டு மீனவர்களை கொல்வதையும்" அனைத்துக் கட்சிக் கூட்டம் கண்டித்தது. மொத்தத்தில் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட 23 கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. இந்த "எச்சரிக்கையை" உறுதிப்படுத்தும் வகையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) அனைத்து 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் பின் தேதியிட்ட இராஜிநாமா கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தனர். அவர்கள் இராஜிநாமா புது டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கணிசமான ஆதரவு இழப்பை ஏற்படுத்தும்; இக்கூட்டணியில் தி மு க வும் அங்கம் வகிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி (PMK) யும் மத்திய அரசாங்கத்தில் பங்கு கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) அக்டோபர் 14 கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; மாறாக அதன் நீண்ட நாள் கடும் போட்டிக் கட்சியான தி.மு.க.வை மதிப்புக் குறைவிற்கு உட்படுத்தும் வகையில் தன்னுடைய பிரத்தியேகமான எதிர்ப்புக்களை நடத்த அது முடிவெடுத்தது. இத்தகைய மனப்பாங்கு எந்த விதத்திலும் இலங்கைப் போரினால் உழைக்கும் மக்கள்மீது ஏற்படும் பாதிப்பு பற்றி அக்கறை எதையும் காட்டவில்லை. மாறாக இப்பிரச்சாரங்கள் பரந்த போர் எதிர்ப்பு உணர்வை தமிழ் வகுப்புவாதத்தின் புறம் திசை திருப்பவும் தத்தம் அரசியல் தளத்தைப் பெருக்கிக் கொள்ளவும்தான் நோக்கம் கொண்டிருக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் அடுத்த மே மாதம் வரவிருக்கும் தேசியத் தேர்தல்களில் ஒரு கண்ணாக இருக்கின்றன. தீவின் வடக்கே இலங்கை இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் இப்பொழுது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE யின்) நிர்வாக மையப் பகுதி இருக்கும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் தறுவாயில் உள்ளது; இந்தச் செயற்பாடு நூறாயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளில் இருந்து அகற்றியுள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவுகள் மாவட்டங்களில் இருந்து உதவி நிறுவனங்கள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் வெளியேற்றிய பின்னர் பல அகதிகளும் பரிதாபத்திற்குரிய நிலையில் வசித்துவருகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் என்று அனைவரும் தொடர்பு உடைய பல போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சமீப வாரங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. கடந்த வெள்ளியன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பல்கலக்கழகத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தில் இலங்கை போர் அகதிகளுக்கு பரிவுணர்வு காட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செவ்வாயன்று நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்து இடம் பெயர்ந்துள்ள மக்களுக்க உடனடி உதவியையும் நாடினர். ஞாயிறன்று தமிழ்த் திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று 25 சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தென் தமிழ்நாட்டில் வட இலங்கைக்கு அருகில் உள்ள இராமேஸ்வரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அவர்களுடைய முழக்க அட்டைகள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ "மனித உரிமைகள்" மற்றும் சர்வதேச மரபுகளை மதிக்க வேண்டும் என்று கோரின. இந்து நாளேட்டில் வந்துள்ள தகவல்படி, பேச்சாளர்கள் இலங்கைக்கு இரகசியமாக இராணுவ உதவி அளிப்பதற்காக இந்திய அரசாங்கத்தை கடிந்துரைத்தனர். தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ள பெருகிய அழுத்தம் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங்கை பொறுத்தவரை தி.மு.ம மற்றும் பா.ம.க கட்சிகள் மொத்தத்தில் 22 எம்.பி.க்களை முக்கிய கூட்டணி பங்காளிகளாக கொண்டிருக்கிறார். உலகப் பொருளாதார கொந்தளிப்பின் தாக்கம் வேலைகள், விலை வாசிகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து வந்துள்ள பெருகிய அதிருப்தியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிலையில், இதுவும் உளைச்சலை கொடுக்கிறது. தேசிய தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஏற்கனவே பல மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. முந்தைய இந்திய நிர்வாகத்தை போலவே, சிங் அரசாங்கமும் அரசியல் வழியில் கழைக்கூத்தாடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது. ஒரு புறம் புது டெல்லி இலங்கையின் வடக்கில் தனி நாடு என்ற LTTE -ன் கோரிக்கைகளை எதிர்க்கிறது; இது இந்தியாவிற்குள்ளும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அது கருதுகிறது. அதன் பிராந்திய போட்டி நாடுகள், குறிப்பாக பாக்கிஸ்தானும் சீனாவும் கொழும்பில் வேரூன்றுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவியை அளித்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய அரசாங்கம் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் உணர்வையும் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. தமிழ்நாட்டின் சமீபத்திய எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில், இந்திய அரசாங்கம் அதன் சற்றே குறைந்த தன்மையுடைய தூதரக கடிந்துரைகளை வெளியிடும் கட்டாயத்திற்கு ஆளானது. இலங்கை உயர் அதிகாரி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் வெளியுறவு அமைச்சக செயலர் சிவசங்கர் மேனனை சந்திக்க அழைக்கப்பட்டார்; இலங்கைப் போரினால் வந்துள்ள அகதிகள் பற்றிய இந்தியாவின் "கவலைகளை" பதிவு செய்வதற்கு இந்த அழைப்பு இருந்தது. இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியப் பிரதம மந்திரி சிங்கிடம் தொலைபேசித் தொடர்பு கொண்டு பிரச்சினையின் தீவிரத்தை குறைக்க முற்பட்டார். "தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் பொது நலன்கள்... LTTE க்கு எதிராக நடைபெற்று வரும் நடவடிக்கைகளில் சிக்கிவிடக்கூடாது" என்று சிங் அறிவித்துள்ளதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் அவர் ஜனாதிபதியை மீண்டும் ஒரு ஐக்கியப்பட்ட இலங்கை என்ற வடிவமைப்பிற்குள் போருக்கு அரசியல் ரீதியாக முடிவு காணுமாறும் வலியுறுத்தியுள்ளார். சிங்கின் கருத்துக்கள் முற்றிலும் போலித்தனமானவை 2006 ல் மீண்டும் நாட்டைப் போரில் மூழ்கடித்த வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் சீனாவின் மறைமுகமான ஆதரவைப் பெற்றிருந்தது. இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி, உளவுக் குறிப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் கொடுக்கும் வகையில் வெளிப்படையாக உதவுகிறது தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் உணர்வை மதிக்கும் வகையில் புது டெல்லி, தான் "ஆபத்து இல்லாத கருவிகளைத்தான் கொடுத்து வருவதாக" கூறுகிறது. இந்தியாவின் "மரணம் விளைவிக்காத" உதவி என்பதன் பண்பானது, இலங்கை இராணுவ முகாம் ஒன்றை LTTE தாக்கியபொழுது, இலங்கையின் விமானப் படைக்காக புதிய ராடர் முறையை இயக்கிய இரண்டு இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் காயப்பட்ட வகையில் வெளிப்பட்டது. இந்தியா இலங்கை கடற்படைக்கு முக்கிய உளவுத் தகவல் கொடுத்து, பொருட்கள் விநியோகம் செய்யும் பல LTTE-இன் கப்பல்களை கண்டுபிடித்து அழிக்க உதவியுள்ளது. அக்டோபர் 13ம் தேதி கொழும்பை தளமாக கொண்டுள்ள Sunday Observer இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் முக்கிய ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ "எமது அண்டை நாட்டிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் முக்கியம். இந்தியா எப்பொழுதும் எம்முடன் இருந்துவருகிறது. LTTE ஐ நசுக்குவற்கு இந்தியாவில் இருந்து மிக அதிக உதவியைப் பெற்றுள்ளோம்" என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இந்தியா குறுக்கீடு செய்து "அங்கு உள்ள தமிழ் சிறுபான்மையினரின் இடர்பாடுகளைக் குறைக்க வேண்டும்" என்று கடந்த வெள்ளியன்று கருணாநிதி விடுத்த அழைப்பை இந்திய அரசாங்கம் ஏற்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. 1987ல் இலங்கையின் வட பகுதிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிப் படை என்று அழைக்கப்பட்டிருந்த இந்திய படைகள் முன்பு அனுப்பப்பட்டதை பற்றி குறிப்பிடவில்லை. அந்தக் குறுக்கீடு இந்த இராணுவத்திற்கு பேரழிவு என ஆயிற்று; அது LTTE உடன் மோதலில் ஈடுபட்டு இறுதியில் 1,200 பேர் இறந்ததை அடுத்து பின்வாங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஒப்பந்தத்திற்கு தி.மு.க. உட்பட அனைத்து தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஆதரவு கொடுத்திருந்தன. இலங்கையில் தமிழ் நாட்டின் எதிர்ப்புக்கள் இன்னும் கூடுதலான வகையில் வகுப்புவாத அழுத்தங்களை தூண்டிவிடத்தான் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கைப் போருக்கு எதிராக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் தீர்மானங்களை இயற்றுகையில், பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதியின் சகோதரர்களில் மற்றும் ஒருவருமான, கோதபய ராஜபக்ஷ உடனடியாக LTTE தான் இந்த எதிர்ப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். எதிர் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (JVP), சிங்கள பேரினவாதத்தில் ஆழ்ந்துள்ளது, அதன் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை அதிகமாக முடுக்கியுள்ளது. JVP யின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா சமீபத்தில் ராஜபக்ஷ அரசாங்கம் இறுதியில் இந்திய அழுத்தத்திற்கு பணிந்து போரை நிறுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார்; இந்திய அரசாங்கம் இலங்கையில் குறுக்கிடுவதற்கு தமிழ்நாட்டை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ வகையில் முற்றுகையின்கீழ் இருக்கும் LTTE தமிழ் நாட்டு எதிர்ப்புக்கள் கொடுத்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு புது டெல்லிக்கு தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் ஒரு சென்னை செய்தித்தாளிடம் கூறினார்: "LTTE மீதான தடையை இந்தியா அகற்றும் என எதிர்பார்க்கிறோம்; இதுதான் அனைத்து தமிழர்களின் ஒரே பிரதிநிதித்துவ அமைப்பு ஆகும்; எங்கள் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு கோருகிறோம்.... தமிழர்களுக்கான தாய்நாட்டிற்கு உதவுதல் என்பது உண்மையில் சிங்கள நாட்டிற்கு உதவுவதைவிட இந்தியாவிற்குப் பாதுகாப்பானது ஆகும்." இவ்வாறு பயன்படுத்தப்படும் சொற்கள் LTTE யின் வகுப்புவாத பார்வையைத்தான் வெளிப்படுத்துகின்றன. சிங்கள தொழிலாள வர்க்கம் ஒன்றும் போருக்குப் பொறுப்பு அல்ல; மாறாக தொடர்ச்சியான கொழும்பு அரசாங்கங்கள்தாம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த வகுப்புவாதத்தை கிளறுகின்றன. புது டெல்லிக்கு LTTE கொடுத்துள்ள முறையீடு, இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனியான சிறு முதலாளித்துவ நாட்டை நிறுவுவதற்கு முக்கிய சக்திகளின் ஆதரவை நாடும் அதன் நீண்டகால முன்னோக்கின் தொடர்ச்சிதான். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் இலங்கை அல்லது அண்டை நாடான இந்தியாவில் முதலாளித்துவ வர்க்கம் எதற்கும் வகுப்புவாத பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறன் இல்லை என்பதைத்தான் பலமுறையும் நிரூபணம் செய்துள்ளது. முன்மொழியப்படும் "தீர்வுகள்" அனைத்தும் இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஏதேனும் ஒரு பிரிவின் நலன்களை திருப்தி செய்யும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன --அதுவும் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் ஆகும். |