World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president issues threat against Supreme Court judges

இலங்கை ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கின்றார்

By Wije Dias
17 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் கோபத்தில் நாட்டின் உயர் நீதிமன்றத்தை வசைபாடினார். தனது அதிகாரங்களை கீழறுப்பதாக நீதிமன்றத்தின் மீது குற்றஞ்சாட்டிய அவர், நீதிபதிகள் வன்முறைக் குண்டர்களின் இலக்காகத் தம்மைக் காண்பர் என சற்றே மூடிமறைத்த அச்சுறுத்தலொன்றை விடுத்தார்.

டிசம்பர் 9, பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய இராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்தின் ஒரு தொகை முடிவுகள், ஜனாதிபதியின் தரத்தை "ஒரு மஜிட்ரேட்டின் தரத்தை விட" குறைத்துவிட்டதாக புலம்பினார். "பல தீர்ப்புகள் எங்களை எதிர்காலத்தில் சிரமத்தில் தள்ளலாம்" என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசாங்கம் மதிப்பதாக பிரகடனம் செய்த அதேவேளை, ஜனாதிபதி கடந்த காலத்தில் நடந்தவற்றை ஒரு முன்னறிவிப்பாக நீதிபதிகளுக்கு நினைவூட்டினார். "சட்டத்துறை அதிகாரிகளின் வீடுகள் மீது கல்லெறியப்பட்ட காலத்தையும் மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட காலத்தையும் சட்டத்துறையின் உயர்குடிமகன்கள் மறந்திருக்கலாம்," என அவர் தெரிவித்தார்.

இராஜபக்ஷ சுட்டிக்காட்டியது 1980களின் முற்பகுதியில் இடம்பெற்றவையாகும். அப்போது தனது அரசாங்கத்துக்கு எதிராக அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தீர்ப்பளித்ததை அடுத்து உயர் நீதிமன்றத்தை அச்சுறுத்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன முயற்சித்தார். ஜயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியை (யூ.என்.பி.) சேர்ந்த குண்டர்கள் நீதியரசர்களின் வீடுகளை தாக்கியதோடு நீதிபதிகள் மீது குற்றப் பிரேரணை முன்வைப்பதற்கான ஒரு தோல்விகண்ட முயற்சியும் மேற்கொளப்பட்டது.

இராஜபக்ஷவின் கருத்துக்கள் பயனற்ற அச்சுறுத்தல் அல்ல. அவரது அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜயவர்தன தொடக்கி வைத்த இனவாத யுத்தத்தை உக்கிரமாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், இராஜபக்ஷ அடிப்படை ஜனநாயக உரிமைகளை மோசமாக அழித்து, ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு விமர்சகர்களை மெளனிகளாக்கவும் முயற்சித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக, பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செயற்படும் கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது கொல்லப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போது இராஜபக்ஷ நீதித்துறை மீது பார்வையை திருப்பியுள்ளார். அவர் குறிப்பாக, 2001ல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 17வது திருத்தில் உள்ளவாறு அரசியலமைப்பு சபையை ஸ்தாபிக்குமாறு உயர் நீதிமன்று விடுத்த கட்டளையுடன் முரண்படுகின்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியலமைப்பு கோரிக்கையை சாதாரணமாக நிராகரித்த இராஜபக்ஷ, 17வது திருத்தம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கு பாராளுமன்ற ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் காரணம் தெரிவித்தார்.

அரசாங்கமும் எதிர்க் கட்சியும் இணைந்து நியமிக்கும் இந்த அரசியலமைப்பு ஆணைக்குழுவானது, 17வது திருத்த்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் ஏனைய ஆணைக்குழுக்களுக்கும் நியமனங்களை செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளது. ஏனைய ஆணைக்குழுக்கள், பொலிஸ், தேர்தல் திணைக்களம், நீதித்துறை மற்றும் பொது நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஏனைய பகுதகளையும் உள்ளடக்கியவையாகும். இந்த திருத்தம் அரச இயந்திரத்தில் உள்ள மட்டுமீறிய மோசடிகள் தொடர்பான வெகுஜன சீற்றத்தை தணிக்கும் உபாயமாக இருக்கின்ற அதேவேளை, இந்த மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கூட இராஜபக்ஷவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அதன் தாக்கம் தொடர்பாக வெகுஜன எதிர்ப்பு அதிகரிக்கின்ற நிலையில், இராஜபக்ஷ அதிகாரங்களை தனது சொந்தக் கைகளுக்குள்ளும் மற்றும் தன்னுடன் நெருக்கமாக செயற்படுபவர்களின், குறிப்பாக தனது சகோதரர்களின் கைகளுக்குள்ளும் ஒருமுகப்படுத்துகின்றார். பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு பதவிகள் ஜனாதிபதியிடமே உள்ளன. அவரது மூத்த சகோதர் சமல் துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். அவரது இளைய சகோதரர் கோடாபய பாதுகாப்புச் செயலாளர் என்ற அரச அதிகாரத்துவத்தின் அதிகாரம்வாய்ந்த பதவியை வகிப்பதோடு இன்னுமொரு தம்பியான பசில் புலிகளை வெளியேற்றி "விடுவிக்கப்பட்ட" கிழக்கிற்கு பொறுப்பாக உள்ளார்.

கையாள்வதற்கு கடினமான அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டணியை கண்காணிப்பில் வைத்திருக்கும் தேவையேற்படுகின்ற நிலையில் பசில் இராஜபக்ஷ ஜனாதிபதியின் வலதுகையாக உள்ளார். ஆளும் கூட்டணி பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியது. இவை அனைத்தும் அமைச்சுப் பதவிகள் மற்றும் ஏனைய வழிகளில் அரசியல் கொடுப்பனவுகளை பெறுகின்றன. உலகில் பெருந்தொகையான அமைச்சுப் பதவிகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை இருந்தாலும், அமைச்சரவையை விட ஜனாதிபதி செயலகத்திலேயே உண்மையான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதிகாரத்தில் தனது நிலையற்ற பிடியை தக்கவைத்துக்கொள்ள, இலங்கையின் தரத்தில் கூட முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தனிப்பட்ட நியமனங்களை நாடிச்செல்லத் தள்ளப்பட்டுள்ளார். இது கூட்டணியை பாதுகாத்துக்கொள்ள மட்டுமன்றி தனது கொள்கைகள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதன் பேரிலும் பிரதான பதவிகளில் தனது விசுவாசிகளை நியமிப்பதாகும்.

பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்திருக்கும் அரசியலமைப்பு சபையை ஸ்தாபிப்பது இராஜபக்ஷவுக்கு குறுக்கே நிற்கும் என்பதாலேயே அதை தடுப்பதற்கு அவர் திட்டமிடுகின்றார். டிசம்பர் 4ம் திகதி இந்த சபை நியமிக்கப்படல் வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், அந்த தினத்தில் ஜனாதிபதி நாட்டில் இருக்க மாட்டார் என்ற காரணத்தால் அந்த காலக்கெடுவை நீட்டுமாறு சட்டமா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது ஜனாதிபதி ஜனவரி 15ம் திகதி அரசியலமைப்பு சபையை நிறுவ வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு இராஜபக்ஷவுக்கு சட்டபூர்வமாக தப்பிச் செல்லும் வழியை இல்லாமல் ஆக்கியுள்ளது. இந்த நிலையிலேயே அவர் கடந்த வாரம் நீதிபதிகள் மீது வசைமாரி பொழிந்தார்.

இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் சாதனைகளை பரீட்சித்தால் அது அரசியலமைப்பு அல்லது ஜனநாயக உரிமைகளின் பெரும் பாதுகாவலன் அல்ல என்பது தெரியவரும். ஆயினும், அதன் அண்மைய தீர்ப்புகள், இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்ற நிலையில், அது மேலும் மேலும் பாராளுமன்ற ஜனநாயாக விதிகளை மீறுவதோடு ஒரு சர்வாதிகார வடிவத்தை எடுக்கின்றது என்று நாட்டின் ஆளும் தட்டிட்குள் வளர்ச்சி காணும் பீதியையே பிரதிபலிக்கின்றது. இத்தகைய வட்டாரங்கள் அக்கறை காட்டுவது, கொழும்பில் உள்ள முழு ஸ்தாபனமும் உடன்பாடு கொண்டுள்ள யுத்தம், தனிப்பட்ட மோசடிகள் அல்லது ஜனநாயக உரிமைகள் மீறப்படுவது சம்பந்தமாக அல்ல. இந்த ஆட்டங்கண்டுள்ள அரசாங்கம் குவிந்து வரும் வெகுஜன எதிர்ப்பின் மத்தியில் பகுதிகளாக பிரிவதோடு முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திர நிலைக்கே அச்சுறுத்தலாக கூடும் என்பதையிட்டே அவர்கள் உண்மையில் அஞ்சுகின்றனர்.

அரசியலமைப்பு சபை தொடர்பான தீர்ப்புகள், மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் சர்வதேச தெளிவுடைமை அமைப்பு உட்பட அரசாங்க சார்பற்ற பல அமைப்புக்கள் முன்கொணர்ந்த ஒரு தொடர்ச்சியான வழக்குகளில் புதியவையாகும்.

கடந்த ஜூலையில், அரசுக்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதில் திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தர ஆற்றிய பாத்திரம் சம்பந்தமாக அவரை உயர் நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியது. இந்த வழக்கில் குறிப்பிட்ட நிறுவனம் "ஒழுங்கின்மையாகவும் ஒரு தரப்பினருக்கு மட்டும் பொருத்தமான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்" நீதிபதிகள் கண்டனர். ஜயசுந்தரவை தொடர்ந்தும் சேவையில் இருத்தும் உறுதிப்பாட்டுடன், ஈரானுக்கான வர்த்தக பிரதிநிதிகளின் விசேட ஜனாதிபதி தூதராக அவரை அனுப்பிவைத்த ஜனாதிபதி, பின்னர் அவரை நிதி துறைக்கான விசேட ஜனாதிபதி ஆலோசகராக நியமித்தார்.

கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக ஜயசுந்தரவை விசாரிக்க பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கும் (சீ.ஐ.டி) லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் உயர் நீதிமன்றம் செய்த அறிவுறுத்தல் நிராகரிக்கபட்டுள்ளது. தாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்க நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு பொலிஸ், சீ.ஐ.டி. மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் சட்ட மா அதிபருக்கும் நீதிபதிகள் கட்டளை விடுத்திருந்தனர். ஜயசுந்தரவை பொலிசார் கூட விசாரிக்கவில்லை.

இந்த வழக்கு செப்டெம்பர் 29 எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சி.ஐ.டி. அதிகாரி "தனது கடமையை செய்யத் தவறியதன் காரணமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்" என பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தீர்ப்பளித்தார். அக்டோபர் 8 அன்று ஜயசுந்தரவை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு நீதிபதிகள் கட்டளையிட்ட அன்றுதான், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு தான் எதிர்காலத்தில் பொதுச் சேவையில் நுழைய மாட்டேன் என உத்தரவாதமளித்தார்.

இன்னுமொரு வழக்கு ஆகஸ்ட் 11 அன்று வெளியான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பானதாகும். அது "காலப் பொருத்தமானது என அவர் கருதினால்" எந்தவொரு அரச அதிகாரியையும் கட்டாயமாக ஓய்வு பெறும் காலத்துக்கும் மேலாக அவரது சேவையை விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவித்தலின் அடிப்படையில், இராஜபக்ஷ ஆகஸ்ட் மாத கடைசியில் ஓய்வுபெறவிருந்த சட்ட மா அதிபரின் சேவைக் காலத்தை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்தார். அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தால், அது எந்தவொரு சேவையினதும் விரிவாக்கத்தை மேற்பார்வை செய்யும்.

மாற்றுக்கொள்கைக்கான நிலையம், சட்டத்தின் மூலம் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சமமான பாதுகாப்பை மீறுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்தது. செப்டெம்பர் 22 அன்று அது அமுல்படுத்தப்படுவதை உயர் நீதிமன்றம் தடுத்தது. அக்டோபர் 8 அன்று, அதாவது இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் ஆராயவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சட்ட மா அதிபர் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மூன்றாவது வழக்கில், உயர் நீதிமன்றம் அக்டோபர் 8 அன்று தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அது கொல்ஃப் விளையாட்டு திடல் ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு பெரும் நிலத்தை தனியார் கம்பனிக்கு முன்நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விற்ற உடன்படிக்கை பற்றிய வழக்காகும். அவர் வெகுஜன நம்பிக்கையை "முழுமையாக காட்டிக்கொடுத்துவிட்டதாகவும்" "நாட்டை மோசமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும்" கண்ட நீதியரசர்கள் 30 மில்லியன் ரூபாவை திருப்பி செலுத்துமாறும் சொத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு திருப்பி கையளிக்குமாறும் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கு முன்நாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்டதாக இருக்கும் அதே வேளை, அரசியலம்பின் கீழ் தனது மிகப் பரந்த நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துவதில் இருந்து ஜனாதிபதியை விலக்கி வைக்கும் இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு, சாத்தியமானளவு பரந்த கிளைகளை கொண்டுள்ளது. தனது தீர்ப்பில் நீதிமன்றம் பிரகடனம் செய்ததாவது: "அரசியலமைப்பின் மூலம் ஸ்தாபிக்கப்படும் எந்தவொரு பதவிக்கோ அல்லது நிறுவனத்துக்கோ வரையறையற்ற அதிகாரங்கள் இல்லாததோடு, அரசியலமைப்பானது அதாகவே இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் எந்தவொரு ஜனாதிபதியிடமும் உள்ள அதிகாரத்தின் நோக்கத்தையும் மற்றும் அதிகார அளவையும் எல்லைக்குட்படுத்துகிறது."

தீவின் பிற்போக்கு இனவாத யுத்தத்தின் மூலம் குவிக்கப்பட்டுள்ள ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்ற நிலையில், நாட்டின் ஆளும் தட்டுக்குள் அடிநிலையில் நிலவும் யுத்தத்தின் ஒரு பகுதியே பலவிதமான நீதிமன்ற வழக்குகளாகும். இத்தகைய பதட்ட நிலைமைகள் எந்தளவு தீவிரமடைந்துள்ளன என்பதையே உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு எதிரான இராஜபக்ஷவின் அச்சுறுத்தல் வெளிப்படுத்துகிறது.