World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lanka: Heavy fighting in battle for Kilinochchi இலங்கை: கிளிநொச்சிக்கான யுத்தத்தில் கடும் சமர் By Sarath Kumara இலங்கை இராணுவம் வடக்கு நகரான கிளிநொச்சி மீது தாக்குதலைத் தொடுக்கின்ற நிலையில் கடும் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. வன்னிப் பிராந்தியத்தில் உள்ள கிளிநொச்சியிலேயே பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகம் உள்ளது. மோதலில் ஈடுபடுத்தப்பட்டுவரும் குறைந்த பட்சம் நான்கு இராணுவ டிவிஷன்கள் மீது புலிப் போராளிகள் எதிர் தாக்குதல்களை நடத்துகின்ற நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக தெரியவருகிறது. சமர்க்களத்தில் தமது வெற்றிகளை மிகைப்படுத்துவதை வழமையாகக் கொண்டுள்ள இரு தரப்பினரும் மோதல் இடம்பெறும் பகுதிக்கு சுயாதீன செய்தியாளர்கள் செல்வதை தடுத்துள்ளனர். செவ்வாய்கிழமை கிளிநொச்சியை சூழ ஐந்து பகுதிகளில் நடந்த கடும் மோதல்களில் 130 அரசாங்கப் படையினர் கொல்லப்பட்டதாகவும் 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் தெரிவித்துள்ளது. வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிளாலியில் நடந்த வேறு ஒரு மோதலில் மேலும் 40 படையினர் கொல்லப்பட்டும் 120 பேர் காயமடைந்துமுள்ளனர். இராணுவம் 120 புலி உறுப்பினர்களைக் கொன்றதாகவும் 25 படையினரையே இழந்ததாகவும் கிளிநொச்சி மேற்கு மற்றும் வடமேற்கு பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளையும் சொக்கன்குளம் என்ற கிராமத்தை கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் திணைக்களத்தை மேற்கோள் காட்டியுள்ள இன்றைய டெயிலி மிரர் பத்திரிகை, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் புலிகள் தமது பிரதான பாதுகாப்பு நிலைகளைத் தக்கவைத்துக்கொண்டதோடு கைப்பற்றப்பட்ட சில இடங்களில் இருந்தும் இராணுவத்தை வெளியேற்றியுள்ளதாகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இராணுவத்தின் கூற்றை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டும். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் பகுதி ஆசிரியர் கடந்த வாரக் கடைசியில் சுட்டிக்காட்டியதாவது: "கிளிநொச்சிக்கு செல்கிறோம், செல்கிறோம், செல்கிறோம் என்று கூறி இப்போது நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. புலிகளுக்கு சார்பான தமிழ் மற்றும் ஆங்கில இணையங்கள் கொரில்லாக்களின் வெற்றிகளை கூறும் அதே வேளை, வன்னியில் பல கிராமங்களைக் கைப்பற்றிவிட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில், ஒரு வாரத்துக்கு முன்னர் கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்ட கிராமங்களின் பெயர்கள் ஏற்கனவேயும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை தெரிந்திராத, பெருமளவில் கேள்விப்பட்டிராத வன்னியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களால் மக்கள் குழம்பிப்போயுள்ளனர்''. இராணுவத்தின் பிரச்சாரமானது புலிகளை வெல்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் மூர்க்கத்தனத்தை கோடிட்டுக்காட்டுகிறது. 2005 கடைப்பகுதியில் குறுகிய வெற்றியைப் பெற்று அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஆழமடைந்துவரும் சமூக பதட்ட நிலைமைகளில் இருந்து கவனத்தை திருப்பும் வழியாக சிங்கள இனவாதத்தை கிளறிவிட்டதோடு 2006 நடுப்பகுதியில் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளினார். தீவின் தமிழ் சிறுபான்மையினர் மீது சிங்கள ஆளும் தட்டின் அரசியல் மேலாதிக்கத்தை திணிப்பதற்கான 25 ஆண்டுகால பிற்போக்கு யுத்தத்தில் 70,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சிக்கான மோதல் யுத்தத்தில் ஒரு திருப்புமுனையை குறிக்கும். 2006ல் இருந்து, இராணுவம் கிழக்கில் புலிகளின் கோட்டைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதோடு வன்னிப் பிராந்தியத்தில் மேற்குப் பிரதேசத்தில் பெரும்பகுதியை கைப்பற்றியது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிரதான நகரங்கள் வட-கிழக்கு கடற்கரையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மட்டுமே. யாழ்ப்பாணக் குடாநாட்டை கொழும்புடன் இணைக்கும் ஏ9 பிரதான நெடுஞ்சாலையில் உள்ள கிளிநொச்சியின் வீழ்ச்சி, கிழக்குப் பகுதி மீதான ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு வழி திறப்பதோடு எஞ்சியுள்ள புலிகளின் படைகளை பிரிக்கும். செவ்வாய் கிழமை தாக்குதல், இந்த மாதம் கிளிநொச்சி மீதான மூன்றாவது பிரதான தாக்குதலாகும். கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையின் "நிலவர அறிக்கையில்" புலிகள் "கிளிநொச்சியை சூழ தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதோடு" நவம்பர் 10 அன்று முன்னேறிய துருப்புக்கள் கிளிநொச்சிக்கு வெளியில் இருவேறு பகுதிகளில் கடுமையான மோதல்களில் ஈடுபட்டன. கடுமையான எதிர் தாக்குதலையடுத்து, அவர்கள் [இராணுவம்] தமது முன்னைய நிலைகளுக்குச் சென்றனர்," என சுட்டிக்காட்டியிருந்தது. புலிகள் தமது அரண்களுக்குள் பங்கர்களை அமைத்து வைத்துள்ளனர். இவை முன்னேறிவரும் அரசாங்கத் துருப்புக்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பங்கர்கள் மீதான திட்டமிடப்பட்ட குண்டுத் தாக்குதல்களும் ஆட்டிலறி தாக்குதல்களும் பயன்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சண்டைக்கு செல்லும் சிப்பாய்களில் பலர், தொழில் இன்மையின் காரணமாக அண்மையில் இராணுவத்தில் இணைந்துகொண்ட புதியவர்களாவர். இவர்களில் பெருமளவிலானவர்கள் உயிரிழப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. வடக்கு கிழக்கில் பருவமழையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெறுக்கத்தக்க நிலைமையிலும் அரசாங்கமும் இராணுவ உயர் மட்டத்தினரும் தாக்குதல்களை முன்னெடுக்க வலியுறுத்துகின்றனர். முதலைகள் வாழும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. சமர்க்களத்தின் சில பகுதிகளை படகுகள் மூலம் மட்டுமே அடைய முடியும். துருப்புக்களுக்கு காய்ந்த ஆடைகள் ஆடம்பரமானவையாக இருக்கும் அதே வேளை, முன்னரங்குப் பகுதிகளுக்கு தக்க உணவுகளை ஏற்பாடு செய்வது பிரதான பிரச்சினையாக உள்ளது என "நிலவர அறிக்கையில்" குறிப்பிடப்பட்டுள்ளது . கிடைக்கின்ற மிகக் குறைவான தகவல்கள் கூட, யுத்தத்தில் மோசமான இழப்புக்கள் ஏற்படுவதை தெளிவுபடுத்துகின்றன. அரசுக்கு சொந்தமான சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு டிசம்பர் 7 அன்று பேட்டியளித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, புலிகளின் மோட்டார் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களில் 16,000 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக விளக்கினார். இராணுவம் யுத்தத்தில் வெற்றிபெறும் இறுதித் தருவாயில் உள்ளது என தற்பெருமை பேசிக்கொள்ளும் அதே வேளை, சிப்பாய்களின் எண்ணிக்கையை 130,000 முதல் 200,000 வரை பிரமாண்டமாக விரிவுபடுத்துவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "யுத்தத்தை முன்னெடுத்து மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் 25 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் இரத்தம் தோய்ந்த ஆண்டை நாடு பொறுமையுடன் தாங்கிக்கொண்டுள்ளது" என கடந்த வார சண்டே லீடர் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. புலிகளிலும் மற்றும் இராணுவத்திலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய பாதுகாப்பு திணைக்களத்தின் செய்திகளையும் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிய ஊடக அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, 10,500 பேர் இந்த ஆண்டு இதுவரை உயிரிழந்திருப்பதாக அந்த பத்திரிகையின் நிருபர் மதிப்பிடுகின்றார். இதற்கு முன்னர் மிக மோசமாக இருந்த 1995ம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை இரு மடங்காகும். மோதல்களின் விபரங்களை மூடி மறைப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு, இராணுவத்தின் சொந்த உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எழுவது உட்பட ஒரு பெரும் எதிர்ப்பு வெடிக்கக் கூடும் என்ற பீதியினால் எடுக்கப்பட்டதாகும். வெகுஜனங்களின் ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் கூறிக்கொண்ட போதிலும், யுத்தம் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான அதன் பொருளாதார தாக்கம் மீதான பரந்த எதிர்ப்பு இருந்துகொண்டுள்ளது. ஆயினும், அனைத்து பிரதான கட்சிகளும் -அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சி- யுத்தத்தை ஆதரிக்கின்ற கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள் இந்த எதிர்ப்பு உணர்வு வெளிப்பாட்டைக் காணவில்லை. கடந்த சனிக்கிழமை, இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இராஜபக்ஷ, "இரசாயன ஆயுதங்கள், விமானத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், அழிவுகரமான பருவ மழை அல்லது பெரும் வெள்ளத்தினாலும் கூட இராணுவத் தாக்குதல்களை நிறுத்த முடியாது" என தெளிவாக பிரகடனம் செய்தார். இந்த வாரம் நத்தார் மற்றும் புதுவருட காலத்தை ஒட்டி ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்துக்கு தேவாலயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் அரசாங்கம் அதை மறுத்தது. யுத்தம் "சுதந்திரத்துக்கான ஒரு மோதல் மற்றும் அது அரசியல் இலாபம் பெறுவதற்காக பயன்படுத்தப்படமாட்டாது" என இராஜபக்ஷ போலியாக பிரகடனம் செய்கின்றார். உண்மையில், அவரது அரசாங்கத்துக்கு வேறு கொள்கைகள் எதுவும் கிடையாது. ஒரு ஆபத்தான பாராளுமன்ற பெரும்பான்மையின் உச்சியில் அமர்ந்துள்ள இராஜபக்ஷ, விமர்சகர்களை "துரோகிகள்" என அச்சுறுத்தி மெளனிகளாக்கவும், வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களையும் "தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக" கண்டனம் செய்யவும் மற்றும் யுத்த நோக்கத்திற்காக சீரழிந்துகொண்டிருக்கும் வாழ்க்கை நிலைமையின் சுமைகளை தாங்கிக்கொள்ளுமாறு உழைக்கும் மக்களை வலியுறுத்தவும் யுத்தத்தை சுரண்டிக்கொள்கின்றார். அதே நேரம் எந்தவொரு இராணுவப் பின்னடைவும் கொழும்பில் ஒரு அரசியல் நெருக்கடியை தூண்டுவதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளது. கிழக்கின் உதயம் போல் வடக்கின் வசந்தத்தைக் கொண்டு வருவதாக இராஜபக்ஷ கூறிக்கொள்கின்றார். ஆயினும், கிழக்கில் காணப்படும் நிலைமைகள் வடக்கில் "விடுதலைக்குப்" பின்னர் என்ன நடக்கும் என்பதற்கு எச்சரிக்கையாகும். கிழக்கு மகாணம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதோடு, புலிகளில் இருந்து பிரிந்து சென்ற அரசாங்கத்துக்கு சார்பான ஒரு குழுவின் தலைவரே கிழக்கின் முதலமைச்சாராக உள்ளார். இந்தக் குழு கப்பம் பெறுதல், கடத்தல் மற்றும் படுகொலைகளுக்கு பேர் போனதாகும். முன்னைய மோதலில் இடம்பெயர்ந்த சுமார் 200,000 பேர் இன்னமும் இழி நிலையிலான அகதி முகாம்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மேலும் இராணுவத்தில் தங்கியிருக்கின்ற இராஜபக்ஷ அரசாங்கம், சிங்களவர்கள் வாழும் தெற்கில் யுத்தம் மற்றும் பூகோள பொருளாதார நெருக்கடியால் உருவாக்கப்பட்டுள்ள மோசமடைந்துவரும் சமூக நெருக்கடிகள் சம்பந்தமாக உழைக்கும் மக்கள் மத்தியில் எழும் எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக மூர்க்கமாக செயற்படும். யுத்தத்தில் வெற்றி பெற எனக் கூறிக்கொண்டாலும், இராணுவத்தின் எண்ணிக்கையை 200,000 சிப்பாய்கள் வரை 50 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்ற உண்மையில் இருந்து எடுக்க வேண்டிய ஒரே முடிவு இது மட்டுமேயாகும். புலிகளைப் பொறுத்தளவில், அவர்களின் இராணுவப் பின்னடைவு அதன் பிரிவினைவாத முன்நோக்கின் அரசியல் வங்குரோத்தை கோடிட்டுக் காட்டுகிறது. சாதாரண தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு மாறாக, அது ஆரம்பத்தில் இருந்து ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கும் தமிழ் முதலாளித்துவ தட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றது. குறிப்பாக அமெரிக்காவால் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புலிகளின் தலைமைத்துவம், யுத்தத்தை ஆதரிக்கும் அதே "சர்வதேச சமூகத்துக்கு" பயனற்ற அழைப்பு விடுக்குமளவுக்கு இறங்கி வந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும், யுத்த நிறுத்தமொன்றை பிரகடனம் செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா மறுத்துவிட்டதாக டிசம்பர் 6 தமிழ்நெட் இணையம் கசப்புடன் தெரிவித்திருந்தது. உண்மையில், கொழும்பு அரசாங்கத்தின் மோசடியான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" அரசியல் ரீதியில் புது டில்லி ஆதரிப்பது மட்டுமன்றி, அது இலங்கை இராணுவத்துக்கு இரகசியமாக இராணுவ உதவிகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றது. |