World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Leon Trotsky, Soviet Historiography, and the Fate of Classical Marxism

லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் வரலாறு பற்றிய எழுத்துக்களும் கற்கையும் மற்றும் தொல்சீர் மார்க்சிசத்தின் விதியும்

By David North
1 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

AAASS எனப்படும் ஸ்லாவிய கற்கைநெறியை முன்னெடுக்கும் அமெரிக்க கூட்டமைப்பு (American Association for the Advancement of Slavic Studies) அதன் 2008ம் ஆண்டு தேசிய மாநாட்டை நவம்பர் 20-23 தேதிகளில் பிலடெல்பியாவில் நடத்தியது. 600 குழுக்களுக்கும் மேலானவை ஆய்வுரைகளை அளித்தன அல்லது வரலாறு, பொருளாதாரம், அரசியல், இலக்கியம், மொழி, திரைப்படம் பற்றி 1,700க்கும் மேற்பட்ட தலைப்புக்களில் வட்டமேசை விவாதங்களை நடத்தியது. மாநாட்டின் கண்காட்சி அரங்கு மேர்றிங் நூல் வெளியீட்டகம் உட்பட, கிட்டத்தட்ட 50 பதிப்பாளர்கள், அமைப்புக்களால் வெளியிடப்பட்ட நூல்களை கொண்டிருந்தது.

மாநாட்டில் ஒரு முக்கிய நிகழ்வாக வெள்ளி பிற்பகல் ஒரு கலந்துரையாடல் கூட்டம் "லியோன் ட்ரொட்ஸ்கியின் அறிவிஜீவித மற்றும் அரசியல் மரபியம்" பற்றி இருந்தது. சுயாதீன அறிஞர் லார்ஸ் நீஹி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஜெருசலத்தின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் ஃபவ்ஸ் கினீ-பாஸ், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து சுயாதீன அறிஞரான விளாடிமிர் வோல்கோவ் ஆகியோர் ஆய்வுக் கட்டுரகளை அளித்தனர். மூன்று ஆய்வுக் கட்டுரைகளையும் கவனத்துடன் 40 பேர் செவிமடுத்த விதத்தில் வருகை சிறப்பாக இருந்தது. தன்னுடைய நூலான ''லியோன் ட்ரொட்ஸ்கியின் சமூக மற்றும் அரசியல் சிந்தனைகள்'' (The Social and Politcal Thought of Leon Trotsky) பற்றி ஒரு 30 ஆண்டு பின்னோக்கை கினீ-பாஸ் அளித்தார். "லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் வரலாறு பற்றிய எழுத்துக்களும் கற்கையும் தொல்சீர் மார்க்சிசத்தின் விதியும்" என்பது பற்றி நோர்த் ஒரு மாறுபட்ட முன்னோக்கை அளித்தார்; கீழே அது முழுமையாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. வோல்கோவ் "பெரஸ்த்துரோய்கா காலத்தில் இருந்து தற்காலம் வரை ரஷ்யாவில் ட்ரொட்ஸ்கிச மரபியம் பெற்றுள்ள வரவேற்பு" என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்தார்.

இவை பற்றிய விவாதங்கள் எஞ்சியிருந்த இரண்டு மணி நேரத்தில் பெரும் ஆர்வத்துடன் நடந்தன. 1917 அக்டோபர் புரட்சியின் தொடரும் மரபியம் பற்றி, ஒரு கேள்வியாளர் கவனக்குவிப்புக் காட்டினார். மற்றொருவர் 20ம் நூற்றாண்டு வரலாறு எப்படி 1924ல் லெனினுடைய மரணத்திற்கு பின்னர் ட்ரொட்ஸ்கியின் கொள்கைகள் மேலாதிக்கம் பெற்றிருந்தால் மாறியிருக்கும் என்ற வினாவை எழுப்பினார். சிக்கல் வாய்ந்த வரலாற்றுப் பிரச்சினைகளை ஆராய்கையில் வரலாற்றாளர்களின் பணிகள் எத்தகைய மாற்றீடுகளைக் கொண்டிருக்கும் என்பது பற்றி கருத்துக்களும் வெளிவந்தன.

இன்று நோர்த்தின் ஆய்வுக் கட்டுரையை வெளியிடுகையில், வரவிருக்கும் நாட்களில் மாநாட்டில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை பற்றிய கூடுதலான பகுப்பாய்வுகளையும் வெளியிட உள்ளோம். நவம்பர் 21ம் தேதி அளிக்கப்பட்ட நோர்த்தின் ஆய்வுக் கட்டுரை கீழ்வருமாறு:

லியோன் ட்ரொட்ஸ்கி பற்றிய, ஆயுதமேந்திய, நிராயுதபாணியாக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட தீர்க்கதரிசி (The Prophet Armed, Unarmed and Outcast) என்று வியக்கத்தக்க முறையில் வரலாற்றுக் கூறுபாடுகள் மூன்றையும் கொண்டிருந்த ஈசக் டொய்ட்ஷரின் (Isaac Deutscher) நூல்களின் கடைசித் தொகுப்பு வெளியிடப்பட்டு 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன. இவ்வாறான மிக ஆழ்ந்த மற்றும் தொலைநோக்கான அறிவார்ந்த, அரசியல் செல்வாக்கை உலகில் கொடுக்கக் கூடிய மற்றொரு வாழ்க்கை வரலாற்றை நினைத்துப் பார்ப்பதும் அரிதாகும். டொய்ட்ஷர் 1950களின் ஆரம்பத்தில் தன்னுடைய திட்டத்தை தொடங்கியபோது, ட்ரொட்ஸ்கி இறந்து ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆகியிருந்தது. ஆனால் அவருடைய கொலையாளியான ஜோசப் ஸ்ராலின் உலகம் முழுவதும் பெரும் மக்கள் மதிப்புப்பெறும் பிரச்சாரத்தின் இலக்காக கிரெம்ளினில் உயிரோடுதான் இருந்தார். இழிவானதும் அபத்தமானதுமாக இது இருந்தபோதிலும் கூட, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் பங்கு பெற்றது. டொய்ட்ஷர் வாழ்க்கை வரலாற்றை எழுதும் தன்னுடைய பணியை, கிராம்வெல் பற்றிய தனது ஆய்விற்கு அவர் "மலை போன்று இருந்த இறந்த நாய்கள், பாரியளவிலான அவதூறுகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டதில் இருந்து பாதுகாப்பாளர் பிரபுவை மீட்க வேண்டியது தேவையாக இருந்தது"[1] என்று குறைப்பட்டுக் கொண்ட, தோமஸ்.கார்லைலுடன் ஒப்பிட்டார்.

1963ம் ஆண்டு டொய்ட்ஷர் மூன்றாம் தொகுதியை முடித்தபோது, அரசியல் சூழ்நிலை வியத்தகு அளவில் மாறியிருந்தது. 1953 மார்ச் மாதம் ஸ்ராலின் இறந்து போனார். பெப்ருவரி 1956ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) 20வது மாநாட்டில், "இரகசிய உரை" என்று கூறப்பட்ட உரையை குரூஷ்சேவ் வழங்கினார். அவர் ஸ்ராலினை ஒரு அரசியல் குற்றவாளி, 1930களின் களையெடுப்பின்போது, பழைய போல்ஷிவிக்குகள் ஆயிரக்கணக்கானோர் சிறைத் தண்டனை, சித்திரவதை மற்றும் கொலையுண்டதற்கு பொறுப்பானவர் என்று ஸ்ராலின் மீது கிட்டத்தட்ட கண்டனம் தெரிவித்தார். ஸ்ராலினுடைய குற்றங்களின் முழுப் பரப்பையும் குரூஷ்சேவ் ஒப்புக் கொண்டார் என்று கூறுவதற்கு இல்லை. குற்றச்சாட்டு முற்றுப்பெறா தன்மையைக் கொண்டிருந்தது போலவே தவிர்க்கப்பட்ட தன்மையையும் கொண்டிருந்தது. ஆனால் குரூஷ்சேவ் உரையின் தாக்கம் அரசியல்ரீதியாக பேரழிவுத் தன்மையை கொண்டிருந்தது. ஸ்ராலினின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டதிலிருந்து, 1936-38 மாஸ்கோ விசாரணைகளை வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டவை மற்றும் பழைய போல்ஷிவிக் ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர் என்ற கூறப்படாத ஆனால் தவிர்க்க முடியாத முடிவுரை ஊற்றெடுக்கிறது. "ட்ரொட்ஸ்கி செய்தது சரியே" என்ற நினைப்புத்தான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்த ஸ்ராலினிச கட்சியினரிடையேயும் பரவத்தொடங்கியது. இந்த விசாரணைகள் பற்றியதில் ட்ரொட்ஸ்கி சரியானால், வேறு எதுபற்றி அவர் சரியாக இருந்திருக்க முடியும்?

ஸ்ராலினிச கட்சிகளுக்குள் உள்ளார்ந்த சிதைவுப்போக்கினை ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்குள்ளாக அவற்றின் அரசியல் சிதைவையும் ஏற்படுத்தி வெடித்த கொந்தளிப்பிற்கு இடையே டொய்ட்ஷரின் முப்பெரும் நூல்கள் மகத்தான அரசியல் முக்கியத்துவத்தை அடந்தன. ஸ்ராலின் இழிவிற்கு உட்படுதல் என்பது பெரும் அளவிற்கு ட்ரொட்ஸ்கி சரியென்ற பொருளைத் தரும். அப்பொழுது இருந்த சூழ்நிலையில் டொய்ட்ஷரின் வாழ்க்கை வரலாற்றில் உருவகத்திற்காக கொடுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி பற்றிய வீரத் தோற்றம் மிகைப்படுத்தப்பட்டது என்றே தோன்றவில்லை. சில முக்கியமான வரம்புகள் இருந்தபோதிலும் கூட, குறிப்பாக இறுதி தொகுப்பில் டொய்ட்ஷர் தன்னுடைய கடந்தகால ட்ரொட்ஸ்கியுடனான அரசியல் பூசல்களை சற்றே மறைமுகமாகத் தொடர்ந்திருந்தாலும் மூன்று தொகுதிகளும் அரசியலில் தீவிரமடைந்துவரும் அறிவாளிகள், இளைஞர்கள் கொண்ட ஒரு புதிய தலைமுறைக்கு இந்த உயர்ந்த புரட்சியாளனின் வீரம்மிக்க ஆளுமையை அறிமுகப்படுத்தின. எப்படிப்பட்ட ஆளுமை அவருடையது! தற்கால வரலாற்றில் வேறு எந்த மனிதர் இத்தகைய பரந்த அறிவார்ந்த அரசியல், இலக்கிய, இராணுவத் திறைமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்? தன்னுடைய விவரிப்பில் மகத்தான, வியத்தகு அழுத்தங்களை வெளியிடுவதில் டொய்ட்ஷர் வெற்றி பெற்றார். ஆனால் ட்ரொட்ஸ்கி வாழ்வின் நாடகம் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக இருக்கவில்லை, அதற்கு கலைப்படைப்பு என்றவகையில் மிகைப்படுத்தலும் தேவையாக இருக்கவில்லை. உண்மையில் பரந்த வரலாற்று நாடகத்தினதும், துன்பகரமான ரஷ்ய புரட்சியினதும் ஒருமுகப்படுத்தப்பட்ட வெளிப்பாடாகத்தான் அவருடைய வாழ்வு இருந்தது.

1960 களை ஒட்டி சோவியத் ஒன்றியம் அறிவார்ந்தவர்கள் மற்றும் மாணவர்களின் கற்பனையில் தன் ஈர்ப்பை இழந்துவிட்டிருந்தது. டொய்ட்ஷருடைய வாழ்க்கை வரலாறு 1920 களின் பழைய பூசல்கள் பற்றி ஒரு அறிமுகமாக செயல்பட்டது; இதில் ட்ரொட்ஸ்கியின் பணி மிகப் பெரியதாக வெளிவந்தது. டொய்ட்ஷரின் நூலைப் படித்தவர்கள் பலரும் பின்னர் நாளடைவில் பரந்த அளவில் கிடைக்கத் தொடங்கிவிட்ட ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை படிக்க முற்பட்டனர்.

1960கள் முழுவதும் மற்றும் 1970 லும் ட்ரொட்ஸ்கி வாழ்வு, படைப்புக்கள் பற்றிய ஆர்வம் தீவிரமாகத்தான் இருந்தது. 1978ம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழாவிற்கு முன்னதாக பேராசிரியர் கினீ-பாஸ் இன் லியோன் ட்ரொட்ஸ்கியின் சமூக மற்றும் அரசியல் சிந்தனை என்ற நூல் வெளியிடப்பட்டது. தன் கதாநாயகன் பற்றிய கினீ-பாஸ் உடைய அணுகுமுறை, மிகவும் திறனாய்ந்த தன்மை கொண்டிருந்தாலும்கூட, ட்ரொட்ஸ்கி ஒரு முக்கிய அரசியல் மற்றும் அறிவார்ந்த குணநலனை கொண்டிருந்தார் என்று சோவியத் அறிஞர்களிடையே இருந்த மிக மேன்மையான உணர்வைத்தான் வெளிப்படுத்தியது. "இப்பொழுதும் கூட, நியாயமான முறையில், புரட்சியாளர்களுக்கு பற்றாக்குறையில்லாத சகாப்தத்தில் முன்னுதாரணமான புரட்சியாளர் என்றுதான் ட்ரொட்ஸ்கி கருதப்படுகிறார்" என்று கினீ-பாஸ் குறிப்பிட்டுள்ளார். "கோட்பாடு மற்றும் சிந்தனைகளை பொறுத்தவரையில் ட்ரொட்ஸ்கியின் சாதனைகள் மகத்தானவை" என்று அவர் விளக்கினார். "இருபதாம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்திராத சமூகங்களில் ஏற்படும் மாறுதலின் வெளிப்பாடு பற்றி பகுப்பாய்ந்தவர்களில் ட்ரொட்ஸ்கி முதல் வரிசையில் இருந்தார் என்பதுடன், அத்தகைய மாற்றத்தில் இருந்து ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைப் பற்றி விளக்க முற்பட்டவர்களுள்ளும் முதலாவதாக இருந்தார்.[2] ட்ரொட்ஸ்கியின் அரசியல் கருத்தாய்வுகளை பின்பற்றுகிறவர், ஒரு மார்க்சிசவாதி என்னும் முறையில், பேராசிரியர் கினீ-பாஸ் உடைய பகுப்பாய்வு மற்றும் விளக்கத்தின் பல கூறுபாடுகளை பற்றி உரிய மதிப்புடன் நான் கருத்து வேறுபாடு கொண்டவன் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் அப்பழுக்கற்ற அவருடைய சான்றாண்மை ட்ரொட்ஸ்கியின் வாழ்வு தீவிர ஆராய்ச்சிக்கு வளமையான இடமாக உள்ளது என்பதை உறுதியாக நிரூபணம் செய்துள்ளது. மிகச் சிறந்த செயல்பாட்டு வீரராக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்றாலும், அவர் ஒரு மிகப் பெரிய சிந்தனையாளராகவும் இருந்தார். ஒற்றைத் தொகுப்பில் அனைத்து ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களையும் கொண்டுவரவேண்டும் என்றால், "ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ட்ரொட்ஸ்கியின் பாரிய ஆவணங்களை அதில் சேர்க்காது எளிதில் ..50 முதல் 70 கனத்த புத்தகங்களை கொண்ட தொகுதியாக இருக்கும்--." என்று கினீ-பாஸ் மதிப்பிட்டுள்ளார். [3]

தனக்கென்று பேராசிரியர் கினீ-பாஸ் ஒரு குறிப்பிட்ட வரம்புகளை கொண்டுள்ளார்--ட்ரொட்ஸ்கியின் வாழ்வு, காலம் என்ற சிக்கல் வாய்ந்த, பரந்த விஷயத்தை ஆராய முற்படும் எந்த அறிஞருக்கும் அது உகந்த தேவைதான். "ட்ரொட்ஸ்கியின் சொந்த சிந்தனை, அவருடைய எதிர்ப்பாளர்கள் அல்லது ஆதரவாளர்களுடையது என்று இல்லாமல், அதேபோல் அவருடைய பெயருடன் அடையாளம் காணப்படும் சிந்தனைப்போக்கு மற்றும் அரசியல் இயக்கத்தினுடையது என்றுமில்லாமல், தன்னுடைய நூலில் ஆராயப்படுகிறது" என்று அவர் விளக்கினார்.[4] இத்தகைய கட்டுப்பாட்டான மத்தியப்படுத்தல் இருந்தும்கூட, பேராசிரியர் கினீ-பாஸ் இற்கு Clarendon Press உடைய கச்சிதமான அச்சுருத் தோற்றத்தைக் கடைப்பிடித்தும் தன் பணியை முடிக்க 598 பக்கங்கள் தேவைப்பட்டன. அப்படி இருந்தும்கூட அவர் அறிவார்ந்த சமூகத்தை நிறைய வாதிடுவதற்கு மட்டும் இல்லாமல் நிறைய செய்வதற்கும் வகை செய்துவிட்டார்.

ஆயினும்கூட, ட்ரொட்ஸ்கி ஆய்வுகள் பிரிவில் கிட்டத்தட்ட குறிப்பிடத்தக்க கல்வித்துறை பங்களிப்பு என்று கினீ-பாஸ் உடைய நூல் அமைந்தது. 1978ல் இவ்விதத்தில் இருக்கும் என்று கணித்துக் கூறுவது மிகக் கடினமாக இருந்திருக்கும்; ஏனெனில் ட்ரொட்ஸ்கிய ஆய்விற்கு ஊக்கம் கொடுத்திருக்கக் கூடிய நிகழ்விற்கு சற்று முன்னர் வெளியிடப்பட்ட நிலையில் --ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஹெளட்டன் நூலகத்தில் முன்பு மூடப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி ஆவணக்காப்பகம் (Trotsky Archive) மீண்டும் ஜனவரி 2, 1980ல் திறக்கப்பட்டது. அதுவரை இந்த நூலக, ஆவணக்காப்பகத்தில், ட்ரொட்ஸ்கியின் விதவையார் நத்தலியா செடோவாவின் அனுமதியுடன் ஐசக் டொய்ட்ஷர் ஒருவர்தான் புரட்சியாளரின் பரந்த தனி எழுத்துக்களை ஆராயும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த ஆவணக்காப்பகம் திறந்துவிடப்பட்டதும் சோவியத் வரலாறு பற்றிய துறையில் ஆராய்ச்சி செய்த அமெரிக்க, பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த 28 ஆண்டுகளில் இந்த பரந்த ஆவணக்காப்பகத்தில் இருந்து மிகக் குறைந்த கருத்துக்களே கல்வித்துறை வெளியீடுகளில் இடம் பெற்றுள்ளன.

1978க்கு பின்னர் இவ்விதத்தில் ட்ரொட்ஸ்கியை பற்றி உயர்கல்வியினர் எழுதுவது வறண்டு போயிருப்பது விந்தையான நிகழ்வு ஆகும். எப்படியும் 1980 களில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட ஆழ்ந்த நெருக்கடி ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை பற்றி இன்னும் தீவிர பரிசீலனையை நியாயப்படுத்தியிருக்க வேண்டும்; ஏனெனில் அவர்தான் ஸ்ராலின் மற்றும் ஸ்ராலினிசம் பற்றி முதன்மையான எதிர்ப்பாளராக இருந்து சோவியத்தின் அழிவையும் கணித்திருந்தார். காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி (The Revolution Betrayed 1936 ல் வெளியிடப்பட்டது) என்னும் புத்தகத்தில் ட்ரொட்ஸ்கியினால், பின்னர் 1990 களின் தொடக்கத்தில் யெல்ட்சினின் கீழ் நடந்த பொருளாதார மாற்றமும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் முதலாளித்துவ மீட்பு நிகழ்வுப்போக்கு, வியத்தகு துல்லியத் தன்மையுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் வரலாறு, பொருளாதாரம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சமூகக் கட்டமைப்பு பற்றிக் கூறும் பெரும்பாலான ஆங்கில மொழி படைப்புக்களில், ட்ரொட்ஸ்கி ஒரு சிறிய, ஒதுக்கப்பட்ட நபராகத்தான் காட்டப்படுகிறார். 1980 களில் --சோவியத் வரலாற்றில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த சகாப்தத்தில் -- ட்ரொட்ஸ்கிச ஆய்வுகள் பற்றி வெளிவந்த ஒரே குறிப்பிடத்தக்க முதன்மை அளிப்பு ஒரு சிறிய ஆய்வுக் கட்டுரை ஆகும்; லியோன் ட்ரொட்ஸ்கியும், கிளர்ச்சியின் கலையும் (Leon Trotsky and the Art of Insurrection) என்ற தலைப்பில் வந்த இது இராணுவ மூலோபாய திட்டமிடுபவர் என்ற முறையில் ட்ரொட்ஸ்கியின் சாதனைகளைக் கூறியிருந்தது. போர் என்னும் கலை, அறிவியல் துறையில் ட்ரொட்ஸ்கியின் சாதனை பற்றி மிக உயர்ந்த சாதகமான மதிப்பீடு வியக்கத்தக்க வகையில், அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அமெரிக்க இராணுவ அதிகாரியான தளபதி ஹரால்ட் வில்சனால் எழுதப்பட்டிருந்தது.

1990களில் ட்ரொட்ஸ்கிச ஆய்வு நூல்கள் பற்றிய நிலைமை மோசமாக சரிந்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். அமெரிக்க, பிரிட்டிஷ் கல்வித்துறை அறிவாளிகள் இந்த தசாப்தம் முழுவதும் குறிப்பிடத்தக்க வகையில் எதையும் எழுதவில்லை. இதற்கு ஒரே விதிவிலக்கு, அதுவும் சிறிய வகை என்ற விதத்தில் இருந்தது, 1992ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி மறு மதிப்பீடு (The Trotsky Reapprisal) என்ற தலைப்பில் எடின்பரோ பல்கலைக் கழகம் வெளயிட்ட கட்டுரைகள் தொகுப்பு ஒன்றுதான். இந்த தசாப்தத்தில், பிரிட்டனில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற போக்கு வெளிப்பட்டது; இது முன்பு இருந்த ட்ரொட்ஸ்கிச-அவதுறூகளை மீண்டும் கூறி, நெறிப்படுத்தும் தன்மையைக் கொண்டிருந்தது. Journal of Trotsky Studies என்று அழைக்கப்பட்ட அமைப்பின் மூலம் இப்போக்கு உதாரணமாகியிருந்தது; அது கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்த சஞ்சிகையின் விருப்பமான பல்லவி ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் முழுவதும் தன்னையே உயர்த்திக் கொள்ளும் சிதைவுகளை முழுமையாகக் கொண்டுள்ளன என்பதாகும். இவ் உரிமைகோரல் திரும்பத் திரும்ப உண்மையான சான்றுகளுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்கப்படாமல் செய்யப்பட்டது. தன்னுடைய ரஷ்ய புரட்சியின் வரலாறு என்ற நூலில் அக்டோபர் எழுச்சியில் தன்னுடைய பங்கை பரந்த அளவில் மிகைப்படுத்திவிட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை இதன் அபத்தத்தின் ஒரு துளியாகும். ஸ்ராலின் போன்ற தீவிரப் புரட்சியாளர்கள் தெருக்களுக்கு சென்று பெரும் காரியங்களில் ஈடுபட்டபோது, சற்றே குழப்பமுற்றிருந்த ட்ரொட்ஸ்கி Smolny Institute இல் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்ற தகவலை இது கொடுத்துள்ளது. அதிருஷ்டவசமாக நான்கு இதழ்களுக்கு பின்னர் இந்த சஞ்சிகை மடிந்துவிட்டது.

தற்போதைய தசாப்தத்திலும் அதிக முன்னேற்றம் இல்லை. இரு புதிய ட்ரொட்ஸ்கி வாழ்க்கைச் சரிதங்கள், ஒன்று 2003லும் இரண்டாவது 2006லும் பேராசிரியர்கள் இயன் தாட்சர் மற்றும் ஜெப்ரி ஸ்வைன் ஆகியோரால் வெளியிடப்பட்டன. இப்படைப்புக்களில் புதிய ஆராய்ச்சியை காண்பதற்கு இல்லை; அவர்களுடைய நூல்களைப் பற்றி விரிவான பகுப்பாய்வும், பரந்த பரிசீலனையையும் நான் அளித்துள்ளேன்; அதன் தலைப்பு Leon Trotsky and the Post Soviety School of Historical Falsification (லியோன் ட்ரொட்ஸ்கியும் வரலாற்று பொய்மைப்படுத்தல் பற்றிய சோவியத்திற்குப் பிந்தைய பள்ளியும்). [5]

ஸ்ராலின் பற்றி மிகப் பெரிய அளவில் கூறப்பட்டுள்ள நூல்களை ட்ரொட்ஸ்கியை நடத்தும் விதம் பற்றி எதிரிடையாக காண்பது பலனளிக்கும். வரலாற்றாளர்களுக்கு ஸ்ராலின் முடிவிலா ஈர்ப்பைக் கொண்டுள்ளார் போலும். ஹிட்லருக்குச் சிறிதும் குறையாத வகையில், ஸ்ராலின் அறிவார்ந்த ஆராய்ச்சிக்கு முறையான விடயம்தான். வரலாற்று ஆய்வைப் பொறுத்தவரை பொருத்தமானது அல்லது பொருத்தமற்றது என்று எதுவும் கிடையாது. ஆனால் வரலாற்றை பற்றி எழுதுவதுற்கு நிபந்தனையற்ற ஒரு தேவை என்னவென்றால், குறுநாவல்கள் எழுதுவது போல், அது மிக நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று வைல்ட் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்ராலினை பற்றிய படைப்புக்கள் பெரும்பாலும் மோசமாக எழுதப்பட்டுள்ளன என்பதுதான் பிரச்சினை.

பல படைப்புக்களும் செய்தித்தாள் பரபரப்பை கொண்டவை; சோவியத் ஆவணக் காப்பங்களில் இருந்து எடுக்கப்பட்ட பரபரப்பு கொடுக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டவை. Radzinsky, Sebag Montfiore ஆகியோரின் நூல்கள் இத்தகைய முறைக்கு உதாரணங்கள் ஆகும். ஆனால் இன்னும் உளைச்சல் கொடுப்பவை ஸ்ராலின் மற்றும் ஸ்ராலினிசத்தை செப்பனிட்டுக் காட்ட வேண்டும் என்ற உண்மை ஆர்வத்துடன் சில அறிஞர்கள் எழுதியுள்ள ஆய்வுகள் ஆகும். உதாரணமாக பேராசிரியர் Stephen Kotkin தன்னுடைய புத்தகமான Magnetic Mountain இல் புத்தெழுச்சி காலகட்டத்தின் உச்சக்கட்டம்தான் ஸ்ராலினிசம் என்று வாதிட்டுள்ளார். அவர் எழுகிறார்:

"ஸ்ராலினிசம்... அறிவொளி கால கற்பனையின் ஐந்தாம் நுண்கூறாகும்; அரசின் மூலம் சமூகத்தின்மீது அறிவார்ந்த முறையை சுமத்தும் ஒரு கருவியாகும்; அதே நேரத்தில் 19ம் நூற்றாண்டு தொழில்புரட்சியின் விளைவாக வந்த வர்க்க பேதங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அந்த முயற்சி, முறையே, அறிவொளியை சாத்தியமாக்க உதவும் நகர்ப்புற மாதிரி மரபில், சமூக நோக்குநிலை கொண்ட கற்பனாவாதங்களில் வேரூன்றி இருந்தது. Magnitogorak (பாரிய தொழில்துறை நகரம்) ஆழ்ந்த வேர்களை கொண்டுள்ளது. [6]

மிக மோசமான தன்மையில்கூட, இந்தப் போக்கு, வரலாற்று நிகழ்வுகளுக்கு "நுட்பங்கள் நிறைந்த" பாராட்டுக்களை அளிப்பது என்ற மறைப்பில் ஸ்ராலின், மற்றும் அவருடைய குற்றங்களுக்கு விந்தையான நியாப்படுத்துதல்களை முன்வைக்கிறது. இந்த வழியில் பார்த்தால் 1996ல் யேல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, 1934-1941 ஸ்ராலினினது ரஷ்யாவில் வாழ்க்கையும் பயங்கரமும் (Life and Terror in Stalin's Russia 1934-1941) என்ற ரொபேர்ட் டபுள்யூ தர்ஸ்டனின் புத்தகத்தில், ஸ்ராலினின் விசாரணை அதிகாரி ஆண்ட்ரே வியிஷின்ஸ்கி பற்றிய மதிப்பீடு இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது: இவ்விதத்தில் 1935-36ல், ஆகஸ்ட் 1936 ல் தொடங்கிய போலி வழக்குகளில் கொண்டிருந்த இழிவான பங்கு ஒருபுறம் இருந்தாலும், விஷின்ஸ்கி சட்ட நடைமுறைகளில் முக்கிய முன்னேற்றங்களுக்காக வாதிட்டார். அதே நேரத்தில் இவர் NKVD (உள்துறை விவகாரங்களுக்கான அமைப்பு) இன் முக்கிய நடைமுறைகளை இகழ்ந்ததுடன், அடிப்படைக் கொள்கையை தொடாத வரையில் சாதாரண மக்களுடைய குறைகூறல்கள் கூடுதலான பொறுமையுடன் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். [7]

1936 வழக்கில் மற்ற குற்றம் சாட்டப்பட்டிருந்த காமனேவ், சினோவியேவ் பற்றிக் குறிப்பிடுகையில் தர்ஸ்டன், ஸ்ராலின் பற்றி அவர்கள் கண்டித்ததை குறைந்த மறைப்பைக் காட்டிய வகையில் நெறிப்படுத்தியுள்ளார்.

அரசியல் மாற்றங்களை பற்றி பேசியது என்ற குற்றத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத இந்த மனிதர்கள், மேலைநாட்டு நீதித் தரங்களின் அடிப்படையில் தண்டனைக்கு உரியவர்களல்ல. ஆனால் அவர்கள் எதிர்த்தரப்பினருடன் தொடர்பு கொண்டிருந்தனர், ட்ரொட்ஸ்கியுடன் தொடர்பு கொண்டிருந்தனர், மேலை நாடுகளுக்கு இரகசிய ஆவணங்களை கசியவிட்டனர், மற்றும் ஸ்ராலினை அகற்ற விரும்பினர்; எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் முழு விசுவாசத்தை பிரகடனப்படுத்துகையில் பொய்களையும் கூறியுள்ளனர். இக்கருத்துக்கள் ஸ்ராலினின் சந்தேக புத்தி பற்றி தகவல்கள் கொடுக்கின்றன. ஏன் இத்தகையவர்கள் பொய் பேசி வந்தனர்? இவர்களைப் போல் எத்தனை பேர் இருந்தனர் அவர்களுடைய உண்மையான நோக்கங்கள் என்ன? ட்ரொட்ஸ்கிச முகாம் மற்றும் Riutin இன் அறிக்கையின் சொல்லாட்சியை காண்கையில், ஸ்ராலினை விட குறைந்த கொடூரம் கொண்டவர்களுக்கு அக்காலத்தில் நடைபெற்ற தொழில்துறை விபத்துக்கள், நடைமுறையில் இருந்து பயங்கரங்களை கற்பனை செய்வது எளிதாக இருந்திருக்கலாம். அவர் பல விஷயங்களுக்கு மெருகு கொடுத்து தன்னைப் பற்றி மிகப் பெரிய பொய்களையும் கூறினார்--ஆனால் கொடுக்கப்பட்டுள்ள சான்றுகள் இக்காலக்கட்டத்தில் அவர் தன்னைத் தவறாக வழிநடத்தியவர்கள் மற்றும் தன்னுடைய முதல் விரோதியான ட்ரொட்ஸ்கியுடன் சேர்ந்து சதி செய்தவர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இந்த முடிவு, நியாயமற்றது என்றாலும், அரசியல் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி அல்ல. [8]

சோவியத் அறிஞர்கள் ஆராய்ச்சிப் பிரிவில் ஸ்ராலின் பற்றி எழுதுவது நல்ல தொழிலாக இருக்கும் எனத் தோன்றுகையில், ட்ரொட்ஸ்கி ஆய்வுகள் பற்றி நீடித்த மந்த நிலை இருப்பது தொடர்கிறது. இது ட்ரொட்ஸ்கி வாழ்வு பற்றிய ஆய்வில் குறைந்த தரம் பொதுவாக இருப்பது என்று மட்டும் இல்லாமல், இடது எதிர்ப்பில் அவருடன் இருந்த அரசியல் தோழர்களுடைய முக்கிய பணியை பற்றி ஏதும் இல்லாது இருப்பதின் மூலமும் வெளியாகிறது. Christian Rakovsky, Adolph Joffe தொடங்கி இடது எதிர்ப்பு தலைவர்களில் எத்தனை பேர், ஆங்கில மொழி வாழ்க்கை வரலாற்று நூல்களின் முழுமையான கருப்பொருளாக இருந்திருக்கின்றனர்? Skirnov, Smilga, Bogoslavskii, Ter-Veganian, Voronskii ஆகியோரைப் பற்றி என்ன படைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன?

இதுவரை இடது எதிர்ப்பு மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பெரும் பயங்கரகாலம் பற்றிய சமகாலத்திய படைப்புக்களின் தொடர்ந்த விடயங்கங்களில் சோவியத் ஒன்றியத்தில் 1930 களை ஒட்டி எந்தச் செல்வாக்கும் இல்லாதவர் என கூறப்படும் ட்ரொட்ஸ்கி பற்றி ஏதும் கூறப்படவில்லை. இது உண்மையில் சரிதானா? எதிர்ப்பினரின் செயல்பாடுகள் பற்றி என்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

அப்படியே ஸ்ராலினின் அடக்குமுறை திட்டமிட்ட கிளர்ச்சி இயலாது எனச் செய்திருந்தாலும், இடது எதிர்ப்பு வெளியிட்டு வந்த Trotskyist Biulletin சோவியத் அரசு மற்றும் கட்சிக் கருவிகளுக்குள் இருந்த அதிருப்திக் கூறுபாடுகளின் சிந்தனைப் போக்கில் எவ்வித செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லையா? மேலும், உள்நாட்டுப் போரின் மூத்தவர்களாக செம்படையில் இருந்தவர்கள், அதிகாரிகள் குழு மற்றும் சாதாரண வீரர்கள் அனைவரிடமும் இருந்து ட்ரொட்ஸ்கியின் நினைவுகள் 1936 க்குள் மறைந்து போயினவா? 1937 ல் ட்ரொட்ஸ்கியின் நிலை பற்றி விக்டர் சேர்ஜ் எழுதுகையில் "அவரைப் பற்றி நினைப்பது தடுக்கப்பட்டுவிட்டதிலிருந்து சோவியத் ஒன்றியத்திற்குள் அனைவரும் அவரைப் பற்றி நினைக்கிறார்கள்......மூத்த மனிதன் வாழும் வரை வெற்றி பெற்றுள்ள அதிகாரத்துவத்திற்கு பாதுகாப்பு இல்லை; [9] என்று கூறியிருப்பது கலைப் படைப்பு உரிமையை வெளிப்படுத்தியிருப்பதுதானா? இந்த வினாக்களுக்கு போதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாமல் விடையிறுக்க இயலாது.

ஆனால் இந்தப் பணி ஏன் செய்யப்படவில்லை? இது ஒரு சிக்கல் வாய்ந்த பிரச்சினை ஆகும்; அறிவார்ந்த வரலாற்று மாணவர்கள் அனைவருக்கும் ஒரு காலக் கட்டத்தில் இதுவே ஒரு முக்கியமான பொருள் ஆகும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு உறுதியான விடை என்னிடம் இருப்பதாக நான் கருதவில்லை; ஆனால் கல்வித்துறை அறிவார்ந்த சமூகத்தில் ட்ரொட்ஸ்கியை பற்றிய உய்த்துணர்தல் மற்றும் வரவேற்பை சில காரணிகள் பாதித்திருக்கக்கூடும் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ட்ரொட்ஸ்கி அரசியலில் "பொருத்தமற்றவராகப் போய்விட்டார்" என்று கூறுவது நம்பிக்கை கொடுப்பதும் அல்ல தீவிரமானதும் அல்ல என்று முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். மிகத் தெளிவான முறையில் 20ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய ரஷ்ய புரட்சியில் ட்ரொட்ஸ்கியின் முக்கியப் பங்கு இருந்தது. அந்த நூற்றாண்டின் மகத்தான தேர்ச்சி பெற்றிருந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் அவர் இருந்தார். 1931ம் ஆண்டு Bertolt Brecht "ட்ரொட்ஸ்கிதான் உயிரோடு உள்ள ஐரோப்பிய எழுத்தாளர்களில் மகத்தானவர் என்று கருதுவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன" என்று தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியதாக Walter Benjamin தெரிவிக்கிறார். [10] இத்தகுதிகளுடன் ட்ரொட்ஸ்கி பற்றி "இன்னும் ஒரு நூல்" எழுதி அதை நியாப்படுத்த தேவையில்லை. ஆனால் எத்தகைய முரண்பாடான, எதிர்ப்பு இருக்கும் கருத்துக்கள் ட்ரொட்ஸ்கியின் அரசியல், அறிவார்ந்த தன்மையின் மரபியம் பற்றி இருந்தாலும், அவை தற்கால அரசியலில் செல்வாக்கை தொடர்ந்து கொண்டுள்ளன என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். வரலாற்றை பொறுத்தவரையில் ட்ரொட்ஸ்கி ஒன்றும் பொருத்தமற்றவர் அல்லர். அப்படியானால் வரலாற்றாளர்களுக்கு அவர் எவ்விதம் பொருத்தமற்றவர் ஆவார்?

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நிலவிய பழைமைவாத அரசியல் மற்றும் புத்திஜீவித சூழ்நிலை அறிவார்ந்த சமூகத்தில் ட்ரொட்ஸ்கியை வரவேற்பதை நிர்ணயித்த கணிசமான காரணமாக இருந்தது. தலைமை நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் முடிவுகளை கருத்தில் கொள்ளுகின்றனர்; வரலாற்றாளர்கள் செய்தித்தாளைப் படிக்கின்றனர். 1938ல் ட்ரொட்ஸ்கி பொருத்தமாகக் கூறியது போல், அரசியல் பிற்போக்கின் சக்தி அது வெற்றி பெறுகிறது என்று மட்டும் இல்லாமல் நம்பவும் வைக்கிறது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முழு சோவியத் அனுபவத்தையும் கசப்புடன் கண்டித்த வெள்ளமென வந்த கருத்துக்களை கொண்டுவந்தது. சோசலிச வேலைத்திட்டம் பற்றிய வலதுசாரி எதிர்ப்பாளர்களின் படைப்புக்கள், Martin Malia, Robert Conquest, சற்றும் அயராத Richard Pipes, Francois Furet (ஒரு முன்னாள் ஸ்ராலினிஸ்ட்), ஆகியவை ரஷ்ய மற்றும் ஐரோப்பிய மார்க்சிசத்தின் அரசியல் மரபியம் பற்றி பரிவுணர்வுடன் கூடிய விசாரணை ஒருபுறம் இருக்க, தீவிர விசாரணைக்குக்கூட ஊக்கம் கொடுக்காத ஒரு அறிவுப் பார்வையை நெரிக்கும் சூழ்நிலையைத்தான் வளர்த்தன. 1950 களில் இருந்து 1960 கள் வரை சோவியத் ஆய்வுகளை பற்றி வெளிவந்துள்ள சிறப்பான நூல்களை கற்பனை செய்து பார்ப்பதும் கடினமாகும்; Leopole Himson இன் போல்ஷிவிசத்தின் மூலங்கள் (Originsl of Bolshevism), Samuel Baron உடைய பிளெக்காநோவ் (Plekhanov) அல்லது அப்படிப்பார்த்தால் E.H.Carr உடைய ஆரம்ப சோவியத் வரலாறு பற்றிய களஞ்சிய நூல் போன்றவை 1990 களில் எழுதப்படுவது பற்றி கற்பனை கூட செய்ய முடியாது. அப்பொழுது இருந்த அறிவார்ந்த சூழல் இவற்றிற்கு இடம் தரவில்லை; ஸ்ராலினிசத்திற்கு புரட்சிகர சோசலிச மாற்றீடுகளை மார்க்சிச போல்ஷிவிக் மரபுகள் பின்னணியில் ஆராய வேண்டும் என்று நினைத்த Vadim Rogovin போன்றவர்களுக்கு சூழல் உகந்ததாக இருக்கவில்லை.

ஆனால் ட்ரொட்ஸ்கியை உயர்கல்விப் பிரிவு வரவேற்பது குறித்த பிரச்சினைகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளில் உள்ள அரசியல் சூழ்நிலையில் இருந்து நேரடியாக வரவில்லை. இதைத்தவிர இங்கிலாந்தில் மார்க்ரெட் தாட்சர் மற்றும் அமெரிக்காவில் ரொனால்ட் றேகன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மிகவும் முன்னரே கணிசமாக இருந்த நீண்ட கால அறிவார்ந்த போக்குகளும் செயல்படுகின்றன. ஒரு நீடித்த வகை பற்றி, பல தசாப்தங்கள் தொடர்ந்திருந்த வகை பற்றி நான் குறிப்பிடுகிறேன்; அது "தொல்சீர் மார்க்சிசத்துடன்" தொடர்புடைய கோட்பாட்டு வடிவமைப்பு அல்லது அரசியல் பார்வையில் இருந்து பல தசாப்தங்களாக பெருகிய முறையில் இடது அறிவாளிகள் ஆழ்ந்த முறையில் விரோதப் போக்குடன் வெளிநின்றதில் உறைந்துள்ளது; தொல்சீர் மார்க்சிசத்திற்கு பிரதிநிதியாக, உறுதியாக அவர்களுள் மிகத் தேர்ச்சியுடன் கடைசிப் பிரதிநிதியாக ட்ரொட்ஸ்கி இருந்தார்.

இந்த நேரத்தில் ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த உலகப் பார்வை அல்லது அவருடைய அரசியல் மற்றும் மனித கலாச்சாரம் பற்றிய கருத்தாய்வுகளுக்கு ஒரு விளக்கம் கொடுக்க இயலாது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்ட வாதத்தைக் கருத்திற்கொண்டு, உலகப் பார்வையின் முக்கியமான கூறுபாடுகளில் தவிர்க்க முடியாத வகையில் தத்துவார்த்த பொருள்முதல்வாதத்திற்கு விசுவாசம் என்பது, வரலாற்று நிகழ்போக்கின் விதிகளால் ஆளப்படுவதற்கு உட்பட்டு நடப்பவை என்ற நம்பிக்கை, மனிதனின் காரணம் கண்டுபிடிக்கும் சக்தியில் நம்பிக்கை (சடப்பொருள் தன்மையில் இச்சிறப்பு அறிந்து கொள்ளப்படும் வரை), மற்றும் புறநிலை உண்மையைக் கண்டறியும் திறன், மற்றும் அத்துடன் தொடர்பு உடைய அறிவியலில் முன்னேற்றத்தின் பங்கில் நம்பிக்கை ஆகியவை உள்ளன. ட்ரொட்ஸ்கி ஒரு உறுதியான பிடிப்பு உடையவர், ஒரு பெரும் நம்பிக்கையாளர், ஒரு சர்வதேசியவாதி, உலக முதலாளித்துவ முறையின் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் இருந்து சோசலிசப் புரட்சி தோன்றக்கூடும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தவர்.

தொல்சீர் மார்க்சிசத்தின் இக்கூறுபாட்டுப் பார்வையில் எவையும் --அதிலும் அதன் நம்பிக்கைத்தன்மை-- இடது அறிவார்ந்த பிரிவின் கணிசமான பிரிவிற்குள் தப்பிப் பிழைத்திருப்பதாகத் தோன்றவில்லை. 1920 களில்கூட முதல் உலகப்போரின் சிதறடிக்கும் பாதிப்பு, இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி, சற்று பிந்தைய காலத்தில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னரும் கூட, தொழிலாள வர்க்கம் மத்திய, மேலை ஐரோப்பிய நாடுகளில் அனுபவித்த அரசியல் தோல்விகள் குட்டி முதலாளித்துவ இடது பிரிவினரின் கணிசமான பகுதியினர் மத்தியில் மார்க்சிச பார்வையில் கொள்ளப்பட்டிருந்த நம்பிக்கையையும் முன்னோக்கையும் கீழறுத்தன. 1926ம் ஆண்டின்போது, மார்க்சிசத்தின் மீதான Hendrick de Man உடைய நேரடித்தாக்குதலாக இருந்த சோசலிசத்தின் உளவியல் (The Psychology of Socialism), அரசியல் நனவின் அபிவிருத்தியின் பொருள்முதல்வாத விளக்கம் பற்றியதிலும் மார்க்சிச நடைமுறை அரசியல் பற்றியதிலும் பெருகிய முறையில் ஐயுறவாதத்திற்கு குதல் கொடுத்தன. பரந்த தொழிலாள வர்க்க நனவின் மீது புறநிலை சமூகப் பொருளாதார நிகழ்வுப்போக்குகள் மூலம் புரட்சிகர தாக்கம் ஏற்படுவதில் மார்க்சிசத்தின் நம்பிக்கை தவறானது என்று de Man வாதிட்டார். புறநிலை வர்க்க நலன்களுக்கு அறிவார்ந்த முறையில் மார்க்சிஸ்ட்டுக்கள் விடுக்கும் முறையீடுகள் சோசலிசத்திற்கு தொழிலாள வர்க்கத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையப் போதாது என்றார். de Man முன்வைத்த வாதங்கள் பலவும் பின்னர் பிராங்பேர்ட் கூடத்தின் தத்துவார்த்தவியலாளர்களின் எழுத்துக்களை சென்றடைந்தன.

1933ம் ஆண்டு ஹிட்லர் அடைந்த வெற்றி, மாஸ்கோ விசாரணைகள், ஸ்பெயின் புரட்சியின் தோல்வி, இறுதியாக ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் ஆகியவை இடது அறிவாளிகளின் அரசியல் மனத்தளர்வை முழுமையாக்கின. சோசலிசத்தின் அடிப்படை முன்னோக்கு செல்வாக்கிழந்துவிட்டது என்று அவர்கள் நம்பினர். தொழிலாள வர்க்கம் தோற்றுவிட்டது. தற்கால சமூகத்தில் புரட்சிகர பொருள் ஏதும் இல்லை என்ற கருந்து நின்றது. தன்னுடைய கடைசி முக்கிய கட்டுரைகள் ஒன்றில் இத்தகைய வாதங்களின் உட்குறிப்புக்களை நன்கு ட்ரொட்ஸ்கி புலப்படுத்தினார்: "தொழிலாள வர்க்கத்தின் சமூகப் பண்புகளில்தான் தோல்விகளுக்கான காரணம் உள்ளது என்பதை உண்மை என்று நாம் எடுத்துக் கொண்டால், நவீன சமுதாஅறிவுஜீவிகள் சூழ்ந்து கொள்ளப்பட்டு இரு உலகப் போர்கள், பாசிசம், ஸ்ராலினிசத்தால் சோசலிசம் காட்டிக்கொடுப்பு, அதிகாரத்துவ பாரத்தின்கீழ் நீண்ட காலம் தொழிலாளர்கள் இயக்கம் முடங்கிப்போனது என 20ம் நூற்றாண்டு சோகங்களால் களைத்துவிட்டனர் என்று கூறுவது மிகையாகாது எனத் தோன்றுகிறது. அவநம்பிக்கைத்தன்மையில் இருந்து முற்றிலும் ஏற்காத்தன்மை மற்றும் மெத்தனம் இரண்டும் ஏற்பட்டன. புதிரான வகையில் அறிவுஜீவுகள் மனத்தளர்ச்சி அடைதல் என்பதைக் கடக்க கடந்த தோல்விகளின் காரணங்களை பற்றி முறையான ஆய்வுகள் தேவைப்படும். இதையொட்டி ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் மற்றும் மகத்தான தொல்சீர் மார்க்சிச பயிலகத்தின் கருத்துக்களுடன் ஈடுபாடுகொள்வது தேவைப்படும். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நீண்ட முதலாளித்துவ விரிவாக்கப் பொருளாதாரத்துடன் இயைந்த புறநிலைச் சூழல் அத்தகைய ஈடுபாட்டிற்கு எதிராக வேலை செய்துவிட்டது.

அப்படியானால் மீண்டும் ட்ரொட்ஸ்கிய சிந்தனைகளுக்கான ஒரு மறுமுயற்சி பற்றிய சாத்தியப்பாடுகள் எப்படி இருக்கும்? நான் கருதுகின்றேன், இந்தப் பிரச்சினைக்கு விடையிறுப்பதற்கு ட்ரொட்ஸ்கியே இத்தகைய நிலைக்கு மேற்கொண்ட அணுகுமுறையை பயன்படுத்துவது சிறந்தது ஆகும். ரஷ்யாவிற்குள், ஐரோப்பாவிற்குள், உலக முழுவதுமான சோசலிசப் புரட்சிக்கான வளர்ச்சி என்ற உள்ளடக்கத்தில் ஒருவர் தன்னுடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை விளங்கிக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ட்ரொட்ஸ்கி சொந்த தலைவிதியின் ஏற்ற இறக்கங்கள் எதையும் தனது தனிப்பட்ட துன்பகரமானதாக காணவில்லை என்றும் மாறாக உலக சோசலிசப் புரட்சியின் முரண்பாடான தொடர்ச்சியின் பல கட்டங்களாக பார்த்ததாகவும்தான் கூறினார். புரட்சி அலையின் எழுச்சி ட்ரொட்ஸ்கியை அதிகாரத்திற்குள் எடுத்துச் சென்றது. அதன் வீழ்ச்சி அவரை நாட்டை விட்டே வெளியேற்றியது.

ட்ரொட்ஸ்கி அச்சொல்லை அறிந்த வகையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்வில் மார்க்சிசம் கணிசமான பங்கு வகித்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆனால் அந்த தசாப்தங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உறுதிப்பாடு மற்றும் கணிசமான வளர்ச்சியை கண்டவை. எந்த அளவிற்கு வெளிப்பட்டதோ அந்த விதத்தில் வர்க்கப்போராட்டம் மரபார்ந்த வழிவகைகளுக்குள் போலீஸ் மேற்பார்வை போல் இருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்பொழுது வரலாறு திடீரென அதன் வியப்பான திருப்பங்களை கண்டு கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நாம் சென்று கொண்டிருக்கும் உலகம் இப்பொழுது AAASS கடந்த ஆண்டு நியூ ஓர்லியன்சில் சந்தித்தபோது இருந்ததைவிட மாறுபட்ட முறையில் காட்சி அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக 1930 களின் பெருமந்த நிலை பற்றிய குறிப்புக்கள் வாடிக்கையாகப் போய்விட்டன. அமெரிக்க ஜனாதிபதி கூட வெளிப்பட்டு வரும் நெருக்கடி அமெரிக்காவையும் உலக முதலாளித்துவத்தையும் சரிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது என ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடியில், "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" என்ற சொற்றொடரை இயற்றிய லியோன் ட்ரொட்ஸ்கி, இதைப் பற்றி நன்கு உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. மார்க்சிச எதிர்ப்பாளர்கள் பலரும் கூறிய பழைய "பேரழிவுக் கோட்பாடு" பலரும் எள்ளி நகையாடியது, ஒருபோதும் நடக்காது என்று கூறவது ஒருபுறம் இருக்க, இப்பொழுது நகைப்பிற்கு இடமாகத் தெரியவில்லை.

இறுதிப் பகுப்பாய்வில் சமூக இருப்புத்தான் சமூக நனவை நிர்ணயிக்கிறது. இந்த ஆழ்ந்த நெருக்கடி, வரலாற்றாளர்களை நீண்டகாலமாக அவநம்பிக்கைக்குள்ளாக்கியுள்ள ஊகங்களை மறு ஆய்வு செய்யும் கட்டாயத்தில் தள்ளக்கூடியது ஏற்படக்கூடியதுதான்; அத்துடன் நிலவும் சமூகத்தின் வடிவமைப்புக்கள் பற்றி கூடுதலான விமர்சன நோக்கை மேற்கொள்ள வைக்கும்; மிக விரைவிலேயே நாம் லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்வு, பணிகள் பற்றி ஆழ்ந்த, அறிவார்ந்த அக்கறையின் ஒரு புதுப்பிப்பை விரைவில் காண்போம் என நான் உத்தேசமாயக் கருதுகிறேன்.

Notes:

1. Isaac Deutscher, The Prophet Unarmed (London: Verso, 2003), p. vii.

2. Baruch Knei-Paz, The Social and Political Thought of Leon Trotsky (Oxford: Oxford University Press, 1978), p. viii.

3. Ibid, p. xi.

4. Ibid, p. xiii.

5. David North, Leon Trotsky and the Post-Soviet School of Historical Falsification

Mehring Books (Oak Park, 2007).

6. Stephen Kotkin, Magnetic Mountain (Berkeley: University of California Press, 1995), p. 364.

7. Robert W. Thurston, Life and Terror in Stalin's Russia 1934-1941, p. 9.

8. Ibid, pp. 26-27.

9. Victor Serge, From Lenin to Stalin (New York: Pathfinder, 1973), p. 109.

10. Walter Benjamin, Selected Writings, Volume 2: 1927-1934 (Cambridge, MA: Belknap Press, 1999), p. 477.

11. Leon Trotsky, "The USSR in War," from In Defence of Marxism (London: New Park, 1971), p. 15.