World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China slumps as global recession deepens

உலகப் பொருளாதார மந்தம் தீவிரமடைவதால் சீனா திடீர் வீழ்ச்சியடைகிறது

By Mike Head
17 December 2008

Back to screen version

உலகப் பொருளாதாரத்திற்கு சமீபத்திய அதிர்ச்சி என்ற வகையில் சீனாவின் தொழில்துறை உற்பத்தி தீவிரமாக சரிந்துள்ளது, முழு தேசிய உற்பத்தியும் குறைந்து வருகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. நவம்பர் மாதத்திற்கான உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் எந்த அளவிற்கு உலக வீழ்ச்சி மோசமாகிக் கொண்டிருக்கிறது, சீன ஏற்றுமதிகளுக்கான தேவையை குறைக்கிறது என்பதை மிகப் பெரிய அளவில் காட்டுகின்றன.

சில மாதங்கள் முன்வரைகூட சீனா இன்னமும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை காட்டிக் கொண்டிருந்தது; சீனாவின் வளர்ச்சி, 1930களின் பெருமந்தநிலை வராத அளவிற்கு உலக முதலாளித்துவத்திற்கு உதவும் என்று கருத்துக்கணிப்பாளர்கள் ஊகித்திருந்தனர். ஆனால், தற்போது சீனப் பொருளாதாரம் சாத்தியமான வகையில் இந்த காலாண்டு குறைந்துகொண்டிருக்கிறது மேலும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டு பகுதியிலும் மீண்டும் சுருக்கமடையும் என்று மேற்கத்தைய பகுப்பாய்வாளர்கள் கணிக்கின்றார்கள் --இதன் பொருள் சீனாவும் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் பொருளாதாரப் பின்னடைவை அடையும் என்பதாகும்.

சீனாவின் மொத்த தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டில் இருந்து 5.4 சதவிகிதம்தான் நவம்பர் வரை வளர்ந்தது; இதன் உட்குறிப்பு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து திடீரென ஒரு குறைப்பு ஏற்பட்டது என்பதாகும்; அப்பொழுது ஆண்டுவிகிதம் 17 சதவிகிதம் என்று இருந்தது. கனரகத் தொழில்கள் மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன; எஃகு உற்பத்தி நவம்பர் 2007ல் இருந்து 12 சதவிகிதத்திற்கும் மேலாக 35.2 மில்லியன் டன்கள் என்று குறைந்துவிட்டது.

மின்சார உற்பத்தி ஓராண்டில் 9.6 சதவிகிதம் குறைந்துவிட்டது; மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பெய்ஜிங் தலைமை அதன் பகிரங்க சந்தை ஆதரவுக் கொள்கையை ஏற்றதிலிருந்து இது மிகப் பெரிய சரிவு என்று பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இக்காலாண்டில் "குறைந்து கொண்டிருக்க வேண்டும், அனைத்துமே மிக மோசமாக உள்ளது" என்று Macquarie Bank உடைய சீனப் பொருளாதார வல்லுனர் பால் கேவி Melborne Age இடம் தெரிவித்தார். "மேலும் நாம் இன்னும் மோசமான நிலையைக் கடந்துவிடவில்லை" என்றார்.

சரிந்து கொண்டிருக்கும் விற்பனையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீன எஃகு உற்பத்தியாளர்கள் ஜூலை மாதத்தில் இருந்து உலக எஃகு விலை சரிவையும் எதிர்கொண்டுள்ளனர். ஒரு அசாதாரண, வெளிப்படையான அறிக்கையில் தொழில்துறை மந்திரி Yizhong இன்னும் மோசமானது இனி வரக்கூடும் என்றும் எச்சரித்தார். "தொழில் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பல காரணிகள் இணைந்துள்ளன. நாம் இன்னும் கீழ்மட்டத்திற்கு வரவில்லை, டிசம்பர் மாதம் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என்பதுதான் நம் கணிப்பு" என்று லி கூறினார்.

மார்ச் மாதம் வரை இந்த ஆண்டு முன்னதாக உயர்ந்த விலையில் வாங்கிய மூலப்பொருட்களின் இருப்பு எஃகு நிறுவனங்களிடம் இருக்கும் என்றும் லி கூறினார். இதற்கிடையில் பெரும்பாலான உற்பத்தியாளர்களுக்கு பணத்தைக் காண்பது கிட்டத்தட்ட இயலாததாகிவிடும். "சிறு நிறுவனங்கள் மட்டும் பணத்தை இழக்கவில்லை, மிகப் பெரிய நிறுவனங்களும் இழக்கின்றன; எனவே நிலைமை உண்மையில் ஆபத்தாகத்தான் உள்ளது" என்று லி கூறினார்.

சீனாவின் பின்னடைவு உலகப் பொருளாதாரத்திற்கு மகத்தான விளைவுகளை கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய எஃகு உற்பத்தியாளர் மற்றும் நுகர்வு நாடாக சீனா உள்ளது; இத்தொழிலின் சரிவு நாட்டின் எஃகு ஏற்றத்தை வளர்ச்சிக்காக நம்பியிருக்கும் நிறுவனங்களை பெரிதும் தாக்கியுள்ளது; இவற்றின் சீன மின்சாரத் தயாரிப்பாளர்கள் தொடங்கி பெரிய இரும்பு தாது சுரங்க நிறுவனங்களான BHP Billiton, Rio Tinto போன்றவையும் அடங்கும்.

பெய்ஜிங்கின் டிரில்லியன் டாலர் ஊக்க நடவடிக்கைகள் உலகச் சரிவின் பாதிப்பை ஓரளவு அகற்றும் வகையில் உள்நாட்டு நுகர்வுக்கு ஏற்றம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இப்பொழுது வீடுகள்-நிலங்கள் கட்டுமானம் ஆகியவற்றில் ஆண்டிற்கு 20-30 சதவிகிதச் சரிவு என்பதினால் நொருங்கியுள்ளன; இவைதான் பொருளாதாரத்திற்கு ஒரு தலையாய சக்தியாக இருப்பவை ஆகும். பயணிகள் வாகனங்கள் விற்பனையும் இந்த ஆண்டு நவம்பர் வரை 10 சதவிகிதம் குறைந்து விட்டது; இந்த ஆண்டு அக்டோபர் வரை டிரக் வாகனங்களின் விற்பனையும் 25 சதவிகிதம் குறைந்து விட்டது.

சீனாவின் சரிவு உலக சரிவைத் தீவிரப்படுத்தும் என்பது மட்டுமின்றி மகத்தான வேலையின்மை, அதையடுத்து சீனாவிற்குள் சமூக அமைதியின்மையின் வெடிப்பும் தீவிரமாகக்கூடும் என்ற பெரும் கவலை உலக நிதிய வட்டங்களிலுள்ளது. சீனாவின் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை நடத்தும் ஆட்சிதான் கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு மையமாக இருந்துள்ளது.

"சீனப் பொருளாதாரம் சுவரில் மோதுகிறது" என்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் கிடியன் ராச்மான் எழுதுவதாவது: "2009ம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடி 1989 ல் நடைபெற்ற மாணவர் எழுச்சிக்கு பின்னர் சீன அரசாங்கத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்தக் கூடும்; அதன் 20வது ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டு வருகிறது. ஆனால் உலக நிதிய நெருக்கடியில் இருந்து பாதிப்பு இல்லை என்ற நிலைக்கு முற்றிலும் மாறாக சீனாவிலும் பெரும் பாதிப்பு இருக்கும் என்பதுதான் தெளிவு. 1989ல் கம்யூனிசத்தின் சரிவினால் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடிக்கு உட்படவில்லை ஆனால் 2009ல் முதலாளித்துவத்தின் அதிர்வுகளினால் நெருக்கடியில் உள்ளது என்பது பெரிய விந்தையாகும்." என்றும் அது குறிப்பிடுகிறது.

இத்தகைய சீனாவிற்கான நம்பிக்கையற்ற பார்வை, ஆழ்ந்த உலக பொருளாதாரப் பின்னடைவின் கூடுதலான அடையாளங்களுக்கு நடுவே வந்துள்ளது; இது Bank of Japan உடைய அதிகம் கவனிக்கப்படும் Tankan வணிகக் குறியீட்டு மூலமும் புலனாகிறது. டிசம்பரில் முடியும் காலாண்டிற்கான கணக்கெடுப்பில், பெரிய உற்பத்தியாளர்களுடைய நம்பிக்கை சிதறல் கூறியீடு -24 என்று குறைந்துவிட்டது; இது செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கில் இருந்து 21 புள்ளிகள் குறைவு ஆகும். சற்று முன்னோக்கிப் பார்த்தால் பெருநிறுவனங்களின் கணிப்புக்கள் இன்னும் 12 புள்ளிகள் சரிவு குறியீட்டில் அடுத்த காலண்டிற்கு வரும், அதாவது -36க்கு செல்லும் என்று காட்டுகின்றன.

இதன் விளைவு ஆகஸ்ட் 1974ல் இருந்து இரண்டாம் மிக அதிக அளவு காலாண்டுச் சரிவு ஆகும்; அது முதல் உலக எண்ணெய் அதிர்ச்சியை ஒட்டி வந்தது; மேலும் மார்ச் 2002ல் இருந்து இது பெரும் உற்பத்தியாளர்கள் பற்றி மிகக் குறைந்த மதிப்பீட்டுக் குறியாகும்; அதை ஜப்பான் கடந்த கடுமையான பின்னடைவின் இறுதியில் சந்தித்திருந்தது.

இப்பொழுது இந்த மாதக் கடைசியில் உத்தியோகபூர்வமாக மூன்றாம் காலாண்டு பொருளாதார பின்னடைவினை ஜப்பான் உறுதியாக சந்திக்க இருக்கையில், அதுவும் செப்டம்பர் முடிந்த காலண்டில் 1.8 சதவிகித ஆண்டுக் குறைப்பை கண்ட பின்னர், 210,000 நிறுவனங்களை பற்றிய ஆய்வில் எந்தப் பிரிவும் இன்னமும் சரிவின் அடிப்பகுதியை கண்டுவிட்டதாக தெரியவில்லை. உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் அனைத்தும், எல்லா மட்டத்திலும் இப்பொழுதிலிருந்து மார்ச் வரை நிலைமை இன்னும் மோசம் அடையும் என்றுதான் கணித்துள்ளன.

தங்கள் ஏற்றுமதிச் சந்தைகளில் முன்னோடியில்லா வகையில் சரிவை எதிர்கொண்டுள்ள சொனி முதல் டொயோட்டா நிறுவனங்கள், வேலைகள் குறைப்பை தொடங்கிவிட்டன. கார் உற்பத்தியாளர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு திட்டமிட்ட வகையில் 20 சதவிகித உற்பத்திக் குறைப்பை மேற்கொள்ளுகின்றன. "பொருளாதாரம் மிக விரைவில் மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலை வெட்டுக்கள் அலை, சேவைத் தொழிலுக்கும் கார் டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றிற்கும் பரவும்" என்று Daiwa Institute of Research ல் இருக்கும் ஒரு பொருளாதார வல்லுனரான Hiroshi Watanabe, AFP இடம் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் பிரச்சினைகள் தீவிரமாவதற்கான கூடுதலான அடையாளங்களும் உள்ளன; யூரோ பகுதி முழுவதும் வேலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை முந்தைய மூன்று மாதங்களை விட மூன்றாம் காலாண்டில் குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரங்கள் வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை மொத்த தொழிலாளர் தொகுப்பில் 0.1 குறைந்துவிட்டது, அதாவது 80,000 பேர் ஜூலை - செப்டம்பர் காலத்தில் வேலை இழந்தனர்; இரண்டாம் காலாண்டில் வேலையில் இருந்தவர்களுடைய எண்ணிக்கையோ 146.1 மில்லியன் ஆகும். இத்தகைய குறைவு 1995ல் யூரோஸ்டாட் தகவல்கள் பதிவு செய்யப்பட்டதில் இருந்து முதல் முறையாக ஒரு காலாண்டில் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே அதன் முதல் உத்தியோகபூர்வ மந்தநிலையில் இருக்கும் 15 உறுப்பினர்களைக் கொண்ட யூரோ பகுதி இன்னும் ஆழ்ந்த முறையில் நான்காம் காலாண்டில் சரிவைக் காணும் என்பது உறுதி. உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில் நன்கு கவனிக்கப்படக்கூடிய அளவு முறை இதுவரை இல்லாத குறைப்பைத்தான் காட்டியுள்ளது. தொடக்க Markit கூட்டு வாங்கும் மேலாளர்கள் குறியீடு டிசம்பர் மாதம் 38.3 சதவிகிதம் சரிந்தது; இது நவம்பரில் 38.9 ஆக இருந்தது. 50க் குறைவான எண்ணிக்கை என்பது உற்பத்தியில் ஒரு சரிவைக் குறிக்கும்.

இந்த விளைவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவிகிதம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் குறைந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கிறது; இது இரண்டு, மூன்றாம் காலாண்டுகளில் இருந்த 0.2 சதவிகிதத்தைவிட மோசமாகும். Uni Credit MIB என்று மிலானில் இருக்கும் அமைப்பிலுள்ள பொருளாதார வல்லுனர் Marco Valli லண்டனை தளமாக கொண்டுள்ள Market Watch இடம் செயல்பாடு அடிமட்ட நிலையை தொட்டுவிட்ட அடையாளத்தை தகவல்கள் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய வங்கிகள், அமெரிக்க முதலீட்டு ஆலோசகர் பேர்னார்ட் மாடோப் செய்துவிட்ட 50 பில்லியன் அமெரிக்க டாலர் மோசடியின் விளைவினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனை தளமாக கொண்டுள்ள HSBC அது $1 பில்லியனை இழக்கக்கூடும் என்று உறுதிபடுத்தியுள்ளது; பிணை எடுப்பு கொடுக்கப்பட்ட பெல்ஜியன் வங்கி போர்ட்டிசின் டச்சுக் கிளை இழப்புக்கள் $1.4 பில்லியனாக கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. BNP Paribas, Banco Santander ஆகியவற்றுடன் Royal Bank of Scotland ம் சேர்ந்துள்ளது; அவைகள் கிட்டத்தட்ட $612 மில்லியன் இழப்பை கொள்ளக்கூடும் என்று அது கூறியுள்ளது.

ஆண்டு முழுவதும் பொருளாதாரச் சரிவு மோசமாகிவிட்டதின் மிகப் பெரிய குறிப்பு அமெரிக்காவில் வந்துள்ளது; அங்கு பெடரல் ரிசேர்வ் வட்டி விகிதங்களை பூஜ்யத்தில் இருந்து 0.25 சதவிகிதம் என்று குறைத்துவிட்டது --இது ஜூலை 1954க்கு பின்னர் மிகக் குறைந்த அளவு ஆகும்; "சிறிது காலத்திற்கு அசாதாரணமான முறையில் குறைவாகத்தான் இருக்கும்" என்றும் அது கூறியுள்ளது.

சமீபத்திய 75-அடிப்படைப் புள்ளி வெட்டு உலகின் மிகப் பெரிய பொருளாதாத்திற்கு வட்டிவிகிதத்தை குறைத்து ஊக்கம் தருவதற்கு இனி இடமில்லை என்பதை காட்டுகிறது. முன்னோடியில்லாத வகையில் பல பில்லியன் டாலர் முன்முயற்சிகள் கடன் கொடுப்பதற்கு ஊக்கம் கொடுக்க வடிவமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு, இழப்பில் அவதியுற்ற வங்கிகள், நிதிய நிறுவனங்களுக்கு வழங்கியும் கூட, பொருளாதரப் பின்னடைவு தீவிரமாவதை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்த முடியவில்லை.

Reuters நடத்திய பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்கணிப்பின்படி அமெரிக்க பொருளாதாரம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 4.3 சதவிகித குறைப்பை கண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது; மேலும் 2009ன் முதல் ஆறு மாதங்களிலும் இச் சரிவு தொடரும் என்றும் தெரிகிறது. அதற்குப் பின் வந்துள்ள கடுமையான சீனா பற்றிய தகவலை பல பொருளாதார வல்லுனர்களையும் இன்னும் ஆழ்ந்த குறைப்பு வரும் என்ற கணிப்பைக் கூற வைத்துள்ளது; சிலர் உற்பத்தி நான்காம் காலாண்டில் 6 சதவிகிதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடையும் என்றும் கூறியுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved