World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்The US, Pakistan and the "terrorist" Hamid Gul அமெரிக்கா, பாக்கிஸ்தான் மற்றும் "பயங்கரவாதி" ஹமீது குல் By Peter Symonds மும்பை பயங்கரவாதிகள் தாக்குதல்களை ஒட்டி, ISI எனப்படும் பாக்கிஸ்தான் இராணுவ உளவுத் துறையின் முன்னாள் தலைவர், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜேனரல் ஹமித் குல்லின் பெயர் சர்வதேச செய்தி ஊடகத்தில் முக்கியமாக வெளிவந்துள்ளது. மும்பை தாக்குதலை ஊக்கம் கொடுத்து நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா உட்பட பல பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஐ.நா.வின் கறுப்புப் பட்டியலில் உள்ள குல் மற்றும் குறைந்தது மூன்று மற்ற குடிமக்களையும் புஷ் நிர்வாகம் கோரியுள்ளதாக பல செய்தித்தாட்கள் தகவல் அளித்துள்ளன. இந்த நடவடிக்கை பற்றி அமெரிக்க வெளியுறவு இலாகா இன்னும் உறுதி அளிக்க இருக்கையில், பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட News கடந்த வாரம் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு கொடுத்துள்ள குற்றச் சாட்டுப் பட்டியலின் விவரங்களை கசிய விட்டுள்ளது. "பல ஆண்டுகளாக குல் தாலிபன் மற்றும் அல் கொய்தாவுடன் பரந்த உறவுகளைக் கொண்டிருந்ததாகவும்", 2005ம் ஆண்டு தாலிபனுக்கு "ஆப்கானிஸ்தானிய செயல்முறைகளில் மிக அதிகமான வழிகாட்டு நெறிகளை அளித்ததாகவும்" அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்களை தெரிவு செய்து, பயிற்சி அளித்ததாகவும், இன்னும் பலவும் அக்குற்றச்சாட்டுப் பட்டியலில் உள்ளன. அமெரிக்காவிடம் கொண்டுள்ள தன்னுடைய விரோத உணர்வைப் பற்றி இரகசியமாக ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படுவது "கட்டுக் கதை" என்று அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் குல் அப்பட்டமாக நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் திங்களன்று பேசிய அவர், பாக்கிஸ்தானில் ஒரு சர்வதேச குழுவை நியமிக்குமாறு ஐ.நா.வை தான் கோர இருப்பதாகவும் "குற்றச் சாட்டு பற்றிய விளக்கங்களை கொடுக்க நான் அதில் கலந்து கொள்ளுவேன்" என்றும் கூறினார். வாஷிங்டனுடைய குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு அவர் அறிவித்ததார்: "ஒரு காலத்தில் நான் அவர்களுக்கு மிகவும் பிரியமாக இருந்தேன். இப்பொழுது என்ன கூறுகிறார்கள் என்றே தெரியவில்லை. தங்கள் நண்பர்களை காட்டிக் கொடுப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்." குல்லின் கருத்துக்கள் "பயங்கரவாதத்தின் மீதான போர்" பற்றிப் பொதுவாகவும், மும்பை தாக்குதல்கள் பற்றிக் குறிப்பாகவும் கூறப்பட்டு வரும் கருத்துக்களில் இல்லாத தொந்திரவான உண்மையைத்தான் உயர்த்திக் காட்டுகின்றன. பாக்கிஸ்தானிய நடைமுறை, இராணுவம் மற்றும் ISI க்கும் பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு 1980 களில் சோவியத் ஆப்கானிஸ்தானை அக்கிரமித்த காலத்தில் அதற்கு எதிராக CIA ஆதரவு பெற்ற ஜிகத்திற்காக அமைக்கப்பட்டது ஆகும். வாஷிங்டனுக்கு "பிரியமானவராக" குல் மட்டும் இருந்தது இல்லை; ISI முழுவதும் மற்றும் இப்பொழுது தாலிபான், அல் குவைதா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் பல இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களின் முதுகெலும்பாக இருக்கும் ஆப்கானிய "சுதந்திரப் போராட்டக்காரர்கள் அனவருமே "பிரியமானவர்களாகத்தான்" இருந்தனர். பனிப்போர்க் காலம் முழுவதும் அமெரிக்கா பாக்கிஸ்தானை ஒரு முக்கிய "முன்னணியில் இருக்கும்" சோவியத் அரசு எதிர்ப்பு நாடாக கருதியது. பாக்கிஸ்தானிய சமூகத்தில் இராணுவத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் சோவியத் ஒன்றியம் மற்றும் தெற்கு ஆசியாவில் அதன் நட்பு நாடான இந்தியா ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பாக இஸ்லாமாபாத்தில் இருந்த, தொடர்ந்த இராணுவக் குழு ஆட்சிகளுக்கு அமெரிக்க ஆதரவு கொடுக்கப்பட்டதால் அதிகமாயிற்று. 1977ம் ஆண்டு அதிகாரத்தை தளபதி ஜியா உல் ஹக் கைப்பற்றியதை வாஷிங்டன் ஆதரித்து, 1979ம் ஆண்டு அவர் வெளியேற்றிய பிரதம மந்திரி ஜுல்பிகார் அலி புட்டோவை தூக்கிலிட்டதையும், பாக்கிஸ்தானை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றியதையும், உள்நாட்டு எதிர்ப்பை அடக்கியது பற்றியும் கண்டு கொள்ளவில்லை. சோவியத் ஆதரவு பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் ஆட்சியின் உறுதியைச் சீர்குலைப்பதில் அமெரிக்கா கொண்டிருந்த முயற்சிகளுக்கு தளபதி ஜியா ஒரு முக்கிய பங்காளியாக இருந்தார். பனிப்போரில் முக்கிய திருப்பு முனை எனக் குறிப்பிடத்தக்க விதத்தில் அமெரிக்கா முதலில் ஜனாதிபதி கார்ட்டர், பின்னர் ஜனாதிபதி றேகன் காலத்தில் அதற்கு முன்பு இருந்த சமாதானக் கொளைகையை கைவிட்டு சோவியத் ஒன்றியத்தின் உறுதியைக் குலைக்கும் வகையில் ஆப்கானிஸ்தானை "மாஸ்கோவின் வியட்நாமாக" மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் மிகப் பெரிய "இரகசிய" நவடிக்கையில், CIA, ISI மற்றும் செளதி உளவுத்துறையுடன் இணைந்து மிகப் பெரிய தளத்தை ஆப்கானிய முஜாகிதினுக்கு உதவும் வகையில் தெரிந்தெடுத்தல், நிதியளித்தல், ஆயுதம் கொடுத்தல், பயிற்சி அளித்தல் ஆகியவற்றை செய்தது; இதில் உலகம் முழுவதும் இருந்த இஸ்லாமிய வெறியர்கள் பல்லாயிரக்கணக்கில் ஆதரவு கொடுத்துச் சேர்ந்தனர். இதையொட்டி ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் பேரழிவு தரக்கூடிய விளைவுகள் ஏற்பட்டன. அமெரிக்காவின் ஆதரவுடன் ஜியா தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மத பிற்போக்குத்தனம் மற்றும் வலதுசாரி இஸ்லாமியக் கட்சிகளை மோதும் கடா போல் வளர்த்து, மகளிர் உரிமைகளை தாக்கி குறுகிய பற்றுக்கொண்ட பிளவுகளுக்கும் எரியூட்டினார். ISI யினால் ஒருங்கிணைக்கப்பட்ட கொரில்லாப் போர் முறை போதைப் பொருள் கடத்தல் பரந்த அளவில் செய்யப்பட்டதால் கிடைத்த பணத்தின் மூலம் ஓரளவு நிதியம் பெற்றது; இது போதைகள் மற்றும் துப்பாக்கிப் பண்பாட்டு வளர்ச்சிக்கு வழிவகுத்து, இன்றளவும் பாக்கிஸ்தான் சமூகத்தைத் தொடர்ந்து அரிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. இந்தப் பிற்போக்குத்தன கொள்கையின் சாரம்சம் நிறைந்த விளைவுதான் குல் ஆவார். இவரை 1987ம் ஆண்டு ஜியா ISI யின் தலைவராக ஆப்கானிஸ்தான் போரின் உச்சக்கட்டத்தின்போது நியமித்தார். ஜியா 1988ல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் அந்தப் பதவியில் புட்டோவின் மகள் பெனாசீர் பிரதம மந்திரியான பின்னரும் தொடர்ந்து இருந்தார். ஆப்கானி்ஸ்தானில் இருந்து சோவியத் படைகள் திரும்பப் பெறப்பட்டது, 1989ல் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காஷ்மீரில் ஏற்பட்ட சீற்ற, அதிருப்தி அலைகளைப் பயன்படுத்திக் கொள்ள ISI க்குப் பெரிதும் உதவின. பூட்டோவின் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சி (PPP) க்கு எதிராக ஒரு வலதுசாரி இஸ்லாமியக் கூட்டணியை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்ததை அடுத்து ISI பதவியில் இருந்து 1989ம் ஆண்டு இவர் மாற்றப்பட்டார். இந்தியத் துணைக் கண்டத்தில் தன்னுடைய முக்கியமான நட்பு நாடாக பாக்கிஸ்தானைத்தான் வாஷிங்டன் 1990 களிலும் தொடர்ந்து வந்தது. சோவியத் பின்வாங்கிய பிறகு பூசல்களிடும் போராளிகளின் பெரும் குழப்பம் ஆப்கானிஸ்தானில் நிலவியதை அடுத்து, அமெரிக்க பாக்கிஸ்தானும் ISI யும் தாலிபான் இயக்கத்தைக் அமைக்க உட்குறிப்பாக ஆதரவு கொடுத்தது. அமெரிக்க எண்ணெய் தொழில் நலன்கள் மத்திய ஆசியாவில் அவை திட்டமிட்டிருந்த எண்ணெய், எரிவாயுக் குழாய்களுக்கு பாதை வேண்டும் என்றதற்கு ஒரு உறுதியான ஆப்கானிஸ்தானத்தை நிலைநாட்ட முற்பட்டிருந்தன. 1990 களின் கடைசியில்தான் அமெரிக்க இலக்குகள் மீது அல்குவைதா தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் வாஷிங்டன் அதன் மூன்னாள் நட்பு அமைப்புக்களுக்கு எதிராக தீவிரமாக இறங்கி 1998ல் ஆப்கானிஸ்தானில் இருந்த அல் குவைதா முகாம்கள் எனப்படுவதை தாக்க தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கக் கோரிக்கைகள், பாக்கிஸ்தான் தாலிபான் ஆட்சியை ஒழுங்கிற்குள் கொண்டுவர வேண்டும் என்பவை இந்தியாவுடன் இருந்த பரந்த மூலோபாய கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்துடன் பிணைந்து இருந்தது; இந்தியாவோ விரைவில் ஒரு முக்கியமான பொருளாதார சக்தியாக வெளிப்பட்டு வந்தது. 1999ம் ஆண்டு ஜனாதிபதி கிளின்டன் பாக்கிஸ்தானிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கார்கில் மலைப் பகுதிகளை கைப்பற்றியிருந்த ஆயுமேந்திய காஷ்மீரி பிரிவினைவாதிகளுக்கு கொடுத்து வந்த ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறு இராணுவத்திற்கு உத்தரவிடும் அழுத்தம் கொடுத்தார். ஷெரிப் பின்வாங்கியது பாக்கிஸ்தானிய இராணுவத்திற்குள் பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தி, அதையொட்டி தளபதி பர்வேஸ் முஷாரஃப் சில மாதங்களுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றினார். பாக்கிஸ்தான் இராணுவத்தை இஸ்லாமிய பிற்போக்குத்தனத்தின் கோட்டையாக மாற்றியதில் உதவியபின்னர், அமெரிக்கா செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின் முற்றிலும் எதிரிடையான நிலைப்பாட்டை கோரியது. தன்னுடைய சுயசரிதையில் முஷாரஃப் பின்னர் விளக்கியுள்ளபடி, புஷ் நிர்வாகம் பாக்கிஸ்தான் மறுக்க முடியாத அளிப்பைக் கொடுத்தது. அமெரிக்க உதவி வெளியுறவு மந்திரியாக இருந்த ரிச்சர் ஆர்மிடேஜ் உடனடியாக டாலிபன் ஆட்சிக்குக் கொடுக்கும் ஆதரவை நிறுத்திவிட்டு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் படையெடுப்பிற்கு உதவாவிட்டால் பாக்கிஸ்தான் மீது பொழியும் குண்டுகள் அதை "கற்காலத்திற்கு" மாற்றிவிடும் என்று அப்பட்டமாக முஷாரஃப்பிடம் கூறிவிட்டார். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுப்பு அந்நாட்டில் இருக்கும் நெருக்கடியை அதிகரித்து அண்டை நாடான பாக்கிஸ்தானிலும் நெருக்கடியை கொடுத்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏழு ஆண்டுகளாக இருப்பதால் ஏற்பட்டுள்ள கோபம் ஆப்கானிஸ்தான் மற்றும் அருகில் எல்லைப் பகுதியில் பாக்கிஸ்தானில் இருக்கும் பல இஸ்லாமியப் போராளிகள் அமைப்புக்களுக்கு ஏராளமான புதிய உறுப்பினர்களை தொடர்ந்து கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியது. பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் ISI ன் ஒரு பிரிவு, மற்றும் காஷ்மீர் போராளிகள் வாஷிங்டனுடன் எதிர்ப்பு உணர்வுகாட்டுவதில் வியப்பு ஏதும் இல்லை. இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்ட குல் இந்த அடுக்கின் சார்பாகத்தான் பேசியுள்ளார். வாஷிங்டனுக்கு "பிரியமானவர்" என்பதில் இருந்து அமெரிக்க பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய நபராக குல் மாறியிருப்பது அமெரிக்கக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு ஆகும். அவரை உதாரணமாகக் காட்டியிருப்பதன் மூலம், இப்பகுதி முழுவதும் அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பொறுப்பற்ற முறையில் தொடரும் வெள்ளை மாளிகை பாக்கிஸ்தானிய நடைமுறை முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முற்பட்டுள்ளது. |