World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama's Team of Reactionaries ஒபாமா நியமித்துள்ள பிற்போக்குக் குழுவினர் By Tom Eley சமீபத்திய வாரங்களில் ஜனாதிபதியாக வரவிருக்கும் பாரக் ஒபாமாவின் மந்திரிசபை தேர்வுகளை "போட்டியாளர்களின் குழு" என்று செய்தி ஊடகங்கள் பல குறித்துள்ளன. இந்தக் குறிப்பு 1860 தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் தனது வெற்றிக்குப் பின்னர், அவர் பிரிவினைவாத நெருக்கடியையும் பின்னர் உள்நாட்டுப் போரையும் எதிர்கொண்டபொழுது, முக்கிய அமைச்சரவை பதவிகளுக்கான அவரது தேர்வுகள் பற்றி வரலாற்றாளர் Doris Kearns Goddwin இதே பெயரில் கொடுத்துள்ளதை அடுத்து வந்துள்ளது. லிங்கன் மற்றும் ஒபாமா மந்திரிசபைகளை பற்றிய செய்தி ஊடக ஒப்புமைகள் பொருத்தமற்றவை; வரலாற்று அறியாமை மற்றும் வெற்றுத்தனத்தைத்தான் காட்டுகின்றன. இந்தத் தவறான ஒப்புமை இரு அரசியல் செயல்களுக்கு உதவுகின்றன. முதலில் இது ஒபாமாவிற்கு ஒரு முன்னேற்றமான, ஜனநாயக ஒளிவட்டத்தை கொடுக்கிறது; உண்மையில் அவருடைய அமைச்சகத் தேர்வுகள் அக்கருத்தை பொய்யாக்குகின்றன; அவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இராணுவவாதம் மற்றும் உள்நாட்டில் பெரும் சிக்கனம் இரண்டையும் ஆதரிப்பவர்கள். இரண்டாவதாக, இந்த ஒப்புமை லிங்கன் மற்றும் அவருடைய அரசாங்கத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முற்போக்கு தன்மையை சிதைத்து இழிவுபடுத்துகிறது மட்டுமின்றி, இறுதியில் நாட்டு ஒற்றுமையைக் காப்பதற்காக அடிமை முறைக்கு எதிரான போராட்டத்தின் மீது மையம் கொண்டிருந்த புரட்சிகர செயல்பட்டியலையும் கேவலப்படுத்துகிறது. ஒபாமா அமைச்சர் குழுவைப் பொறுத்த வரையில் "போட்டியாளர்கள் குழு" என்ற சொல் பயன்படுத்தப்படுவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அவர் நிற்பதற்குப் போட்டியாக இருந்த ஹில்லாரி கிளின்டனை வெளியுறவு மந்திரியாக தேர்ந்தெடுத்தது, புஷ் நிர்வாகத்தின் ரோபர்ட் கேட்ஸை பாதுகாப்பு மந்திரியாக தொடர வைத்துள்ளது பற்றிய ஜனாதிபதியாக வரவிருப்பவர் தேர்ந்தெடுத்துள்ளதை அடுத்து கூறப்படுவது ஆகும். தொடக்கத்தில் வெற்றி வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருந்த கிளின்டனை ஒபாமா வெற்றி கொண்ட முக்கிய காரணம் இவர் ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையேயும் பொதுமக்கள் இடையேயும் இருந்த போருக்கு எதிரான உணர்விற்கு முறையீடு செய்ததை ஒட்டி பெற்றது ஆகும். மேலும் ஹில்லாரி கிளின்டன் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து பின்னர் போரை விரைவில் முடிவிற்குக் கொண்டுவருவதாக கூறுவது "முற்றிலும் அவருடைய தவறான அணுகுமுறை" என்று இடைவிடாமல் கூறியும் வந்தார். இதன் பின் அவர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் புஷ் நிர்வாகத்தின் இராணுவவாதம் நிறைந்த வெளிநாட்டுக் கொள்கை, அதன் பெருவிணக மற்றும் ஜனநாயக விரோத உள்நாட்டுச் செயற்பட்டியல் ஆகியவற்றை சக்தி வாய்ந்த மக்கள் வாக்குகள் நிராகரித்ததை அடுத்து நிகழ்ந்தது. ஈராக்கில் "படைகள் பெருக்க செயற்பாட்டை" கேட்ஸ் மேற்பார்வையிட்டார்; அதுதான் சுன்னி எதிர்ப்பை குருதி கொட்டி அமிழ்த்துவிட்டதுடன் நாட்டின் பரந்த பகுதிகளில் ஒரு மக்கட் தொகுப்பையும் அழித்தது. அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக் கெடு வேண்டும் என்பதையும் அவர் பகிரங்கமாக எதிர்த்துள்ளார். ஒபாமாவில் உயர்மட்ட மந்திரிசபைக்கான நியமனங்கள் இவ்விதத்தில் அவருடைய பிரச்சார அலங்காரச் சொற்களை திமிர்த்தனமாக நிராகரிப்பதுடன், இவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடைய கன்னத்தில் அறைந்ததுபோலவும் ஆகின்றன; ஏனெனில் அவர்கள் "மாறுகை; வேட்பாளரின் வெற்றி உண்மையில் ஒரு நல்ல மாற்றத்திற்கு அறிகுறியாக இருக்கும் என்று நம்பினர்; மேலும் அவருடைய நிர்வாகம் அனைத்து அடிப்படைகளிலும் புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய, இராணுவவாத கொள்கைகளை தொடரும் என்பதை ஆளும் உயரடுக்கிற்குத் தெளிவாகவும் காட்டியுள்ளன. இது லிங்கனுடைய அணுகுமுறையுடன் சிறிதும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது என்பது மட்டும் இல்லாமல் அதற்கு முற்றிலும் எதிரிடையானதும் ஆகும். லிங்கனின் முக்கிய தெரிந்தெடுப்புக்கள் 1860 குடியரசுக் கட்சி வேட்பு மனுக்களால் முக்கிய போட்டியாளர்களாக இருந்த போதிலும் கூட, அவருடைய பிரச்சாரத்தின் மையக் கொள்கைகள் மற்றும் வாக்காளர்களின் விழைவுகளை மதிப்பதில் இருந்து பின்வாங்குதல் என்பதை ஒருவிதத்திலும் பிரதிபலித்தது இல்லை: அதாவது கூட்டாட்சி ஒற்றுமை காத்தல், அடிமைத்தன விரிவாக்கம் தடுக்கப்பட வேண்டும் என்பவற்றை. அந்த நியமனங்களில் வெளியுறவு மந்திரியாக வில்லியம் சீவர்ட், நிதி மந்திரியாக சால்மன் சேஸ் மற்றும் அரசாங்கத் தலைமை வக்கீலாக எட்வேர்ட் பேட்ஸ் ஆகியோர் இருந்தனர். இளம் குடியரசுக் கட்சியின் முக்கியத்துவத்திற்கு லிங்கன் உயர்ந்தவிதம் புதிய மாநிலங்களிலும் மேற்கில் இருக்கும் பகுதிகளிலும் அடிமைத்தனம் விரிவாக்கப்படக்கூடாது என்ற மக்கள் உணர்விற்கு அரசியல் குரல் கொடுத்தது ஆகும். அடிமைத்தனத்துடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல் பிரச்சினைகளை திறனாய்ந்த முறையில் தெளிவாகக் காட்டும் மேதைத்தன்மை இருந்ததால்தால் அவர் இவரை விட புகழ் பெற்றிருந்த சீவர்ட் (நியூ யோர்க் செனட்டர்), சேஸ் (ஒகையோ கவர்னர்) ஆகியோரை 1860 குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்புமனுத் தேர்தலில் வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் பல அரசியல், மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, சீவர்ட், சேஸ் மற்றும் லிங்கனின் மற்ற அமைச்சரவை தேர்வில் இருந்தவர்கள் அனைவருமே குடியரசுக் கட்சியின் மைய இலக்கைப் பகிர்ந்து கொண்டனர் -- அதாவது கூட்டாட்சியை காத்தல் மற்றும் தெற்கில் இருக்கும் அடிமை வைத்திருக்கும் கிளர்ச்சி செய்யும் பிரபுக்களை தோற்கடித்தல் ஆகியவற்றில். 1860 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வலது பிரிவைப் பிரதிபலித்திருந்த இல்லிநோய் செனட்டர் ஸ்டீபன் டுக்லாஸ் போல் அடிப்படைக் கொள்கைகள் பிரச்சினையில் தன்னுடன் வேறுபாடு கொண்டிருந்த போட்டியாளர்களை லிங்கன் அமைச்சரவையில் சேர அழைக்கவில்லை; அதே போல் அடிமைப் பிரச்சினையில் கூடுதலான சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டிருந்தடிருந்த தெற்கத்திய அரசியல் உயரடுக்கினருக்கும் அவர் இடம் அளிக்கவில்லை; அடிமை முறை விரிவாக்ககப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்திருந்த ஜனநாயகக் கட்சியின் தென் பிரிவின் வேட்பாளரான ஜோன் சி பிரெக்கின் ரிட்ஜிற்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ஒபாமாவின் அவநம்பிக்கைத்தன செயற்பாடுகளுக்கு ஒப்பாக என்றால் லிங்கன் டுக்லாசை வெளியுறவு மந்திரியாகவும், பிரெக்கின்ரிட்ஜை போர் மந்திரியாகவும் நியமித்திருக்க வேண்டும். அவர் நியமித்திருந்த "போட்டியாளர்கள் அனைவரும் அடிமை முறை பற்றி அவர் கொண்டிருந்த வெறுப்பு உணர்வைப் பகிர்ந்து கொண்டவர்கள்; அதேபோல் தேவைப்பட்டால் வலிமையைப் பயன்படுத்தி அடிமைமுறைக்கு ஆதரவு சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அவருடைய உறுதிப்பாட்டையும் பகிர்ந்து கொண்டவர்கள் ஆவர். 1850 களில் ஒரு செனட்டர் என்ற முறையில் சீவர் அடிமை முறைக்கு எதிராக மிகத் தெளிவாகப் பேசியவர்களுள் ஒருவர் என்ற புகழ் பெற்றவர் ஆவார். 1850 சமரசத்தை அவர் கண்டித்தார்; அது அடிமை முறை விரிவாக்கப்பட அனுமதி கொடுத்தது; மற்றும் பிற்போக்குத்தன புகலிடம் கோரும் அடிமைகள் பற்றிய சட்டத்தையும் இயற்றியிருந்தது. இவ்வாறு செய்கையில், சீவர்ட் போற்றத்தக்க வகையில் அரசியலமைப்பை விட 'உயர்ந்த சட்டநெறிக்கு" முறையீடு செய்திருந்தார். மக்கள் இறைமை என்ற பெயரில் புதிய மாநிலங்களில் அடிமை முறையை அனுமதித்த கன்சாஸ் நெப்ராஸ்கா சட்டத்தை ஒட்டி, அவர் அடிமை முறையை டுக்லாஸ் மற்றும் பிற வடபகுதி ஜனநாயக வாதிகள் ஆதரவு கொடுத்திருந்த சமரச முயற்சிகள் மூலம் "அடக்க முடியாத பூசல்களான" அடிமைப் பிரச்சினை தவிர்க்கப்பட முடியாது என்றும் கூறியிருந்தார். மிசெளரியில் இருந்து வந்த எட்வேர்ட் பேட்ஸ், ஒரு முன்னாள் விக் கட்சியை சேர்ந்தவர் ஆவார்; அவர் நீண்ட காலம் பகுதி ஓய்வில் இருந்து அண்மையில் இருக்கும் கன்சாஸ் மாநிலத்தில் அடிமை முறை விரிவாக்கத்தை எதிர்த்ததை அடிப்படையாகக் கொண்டதில் தன்னுடைய அரசியல் முக்கியத்துவத்தை மீட்டுக் கொண்டவர். அரசாங்க வழக்கறிஞராக அவரைத் தேர்ந்தெடுத்தது லிங்கன் நிர்வாகத்திற்கு எல்லைப் புறங்களில் இருக்கும் மாநிலங்களிடையே ஆதரவை வெற்றி கொள்ளுவதற்கும் தெற்குப் பகுதி அடிமைமுறை பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. லிங்கன் மீது சேஸ் கொண்டிருந்த பொறாமை பற்றி கீர்ன்ஸ் குட்வின் அதிகமாகப் பேசியுள்ளார். அவர் ஒரு இளம் ஒகையோ வக்கீல் என்ற முறையில் அரசியலில் புகழ் பெற்றிருந்தார்; எஜமானர்களுக்க எதிராக தப்பியோடி வந்த அடிமைகளுக்காக வாதிட்டார்; சுதந்திர மண் கட்சி (Free-Soil Party) என்பதை நிறுவியிருந்தார்; அதுதான் குடியரசுக் கட்சியின் முன்னோடியாக இருந்தது. 1864ம் ஆண்டு லிங்கன் அவருடைய நிதி மந்திரி இராஜிநானவை ஏற்றபின், அவர் சேஸை தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார்; அவர் அங்கு கொடுத்த தீர்ப்புக்கள் தெற்கில் மறு சீரமைப்பு சரியென உறுதிப்படுத்தின. 1860 ம் ஆண்டு குடியரசுக் கட்சி வேட்புத் தன்மையை பெறுவதற்கு லிங்கன் தன்னுடைய முக்கிய போட்டியாளர்களான சீவர்ட், சேஸ், பேட்ஸ் ஆகியோரைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது. பின், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றபின், அவர் அவர்களை முக்கிய அமைச்சரவை பதவிகளை ஏற்கமாறு அழைப்பு விடுத்தார். இதற்குக் காரணம் அவர் புத்திக் கூர்மையான அரசியல்வாதி என்பது இல்லாமல், குடியரசுக் கட்சியின் பல பிரிவினரையும் ஒற்றுமைப்படுத்தி நாட்டில் இருக்கும் உண்மையான ஜனநாயக சக்திகளின் விழைவுகள் பிரதிபலிக்கப்பட வேண்டும், தெற்குப் பகுதி தோட்ட முதலாளிகளின் எழுச்சியை நசுக்குவதற்கு சிறந்த நிலைமை தோற்றுவிக்க வேண்டும் என்பதால்தான்.லிங்கனுடைய போட்டியாளர்கள் குழுவிற்கு எதிரிடையாக ஒபாமா ஒரு பிற்போக்காளர்களின் குழுவைத் தேர்ந்து எடுத்துள்ளார்; இக்குழு இவருடைய பிரச்சாரத்தில் இருந்த வனப்புரை மற்றும் இவருக்கு வாக்களித்த பரந்த பெரும்பான்மையினரின் விழைவுகளை இகழ்வுடனும் அவநம்பிக்கையுடனும் நிராகரிக்கும் குணத்தைத்தான் கொண்டுள்ளது. |