World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's crisis budget: government imposes new war burdens

இலங்கையின் நெருக்கடியான வரவுசெலவுத் திட்டம்: புதிய யுத்தச் சுமையைச் திணிக்கும் அரசாங்கம்

By Saman Gunadasa
18 November 2008

Back to screen version

ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ கடந்த வாரம் முன்வைத்த இலங்கை வரவுசெலவு திட்டத்தில் இரு பிரதான நெருக்கடிகள் மேலாதிக்கம் செய்கின்றன: அவை நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தமும், சர்வதேச நிதிக் கொந்தளிப்பு மற்றும் பூகோள பொருளாதார வீழ்ச்சியை நோக்கிய துரிதமான சரிவின் தாக்கமுமாகும். 2006 நடுப்பகுதியில் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்த அரசாங்கம், ஊதிப்பெருக்கும் இராணுவச் செலவீனங்களுக்கு செலவிட கடன் வாங்க போராடிக் கொண்டிருக்கின்றது.

2009ம் ஆண்டிக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 200 பில்லியன் ரூபாய்கள் (1.8 பில்லியன் அமெரிக்க டொலர்) அல்லது அரசாங்கத்தின் மொத்த செலவுத் தொகையான 1,191 பில்லியன் ரூபாயின் கிட்டத்தட்ட 17 வீத சாதனைத் தொகையாகும். அரசாங்கத்தின் வருமானம் வெறும் 855 பில்லியன் ரூபாய்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மறுபக்கம் துண்டுவிழும் தொகை 336 பில்லியன் ரூபாய்கள் என்ற பிராமண்டமான தொகையாக உள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் வடக்கு கோட்டைகளை பிடிப்பதற்கான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், இந்த வருடமே பாதுகாப்பு செலவு 166 பில்லியன் ரூபாயில் இருந்து 194 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.

நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களை தன்வசம் வைத்துள்ள இராஜபக்ஷ, நவம்பர் 6ல் ஆற்றிய உரையின் பெரும் பகுதியை, புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் "இறுதிக் கட்டத்தில்" இருப்பதாக தற்புகழ்ச்சிக்கு அர்ப்பணித்திருந்தார். "படையினர் நாட்டை விடுவிக்க போராடிக்கொண்டிருக்கின்ற அளவுக்கு" உழைக்கும் மக்களும் "ஐக்கியப்பட்டு யுத்த முயற்சிகளுக்கு தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

கடந்த 25 ஆண்டுகளாக, தொழிலாளர்களை இன ரீதியில் பிளவுபடுத்துவும் அரசாங்கத்தின் தொழிலாளர் வர்க்க விரோத நடவடிக்கைகள் மீதான எதிர்ப்புக்களை நசுக்கவும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த யுத்தத்தின் பிற்போக்குப் பண்பையே இராஜபக்ஷவின் கருத்துக்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. பணவீக்கம் 30 வீதத்தை எட்டியுள்ள நிலையில், யுத்த முயற்சிகளை கீழறுப்பதாகவும் புலிகளின் சார்பில் செயற்படுவதாகவும் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் மற்றும் மாணவர்களையும் இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் கண்டனம் செய்கின்றனர்.

இராஜபக்ஷ தனது உரையில் யுத்தத்தின் மீது கவனம் செலுத்தியமை, வரவு செலவுத் திட்டத்தின் எஞ்சியுள்ள நடவடிக்கைகள் மீதான எந்தவொரு எதிர்ப்பையும் முன்கூட்டியே தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும். பணவீக்கத்தைப் பொறுத்தளவில், அரசாங்க ஊழியர்களுக்கு 1,000 ரூபாவும் ஓய்வு பெற்றவர்களுக்கு 560 ரூபாவும் அடுத்த ஜனவரியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பணவை மட்டுமே வரவு செலவுத் திட்டம் வழங்குகிறது.

இந்த ஆண்டு முற்பகுதியில், அரசாங்க ஊழியர்கள் மாதம் சம்பளத்தில் 5,000 ரூபா அதிகரிப்புக்காக பிரச்சாரத்தில் இறங்கினர். இந்த செலவை தாங்கிக்கொள்ள முடியாது என இராஜபக்ஷ நிராகரித்தார். இராணுவ ஆள்சேர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சியின் பாகமாக, முன்னரங்கு பகுதிகளில் சேவையாற்றும் சிப்பாய்களுக்கான மாதாந்த கொடுப்பணவை 2,000 ரூபாவில் இருந்து 4,500 ரூபா வரை கனிசமானளவு அதிகரிப்பதை இந்த வரவுசெலவு உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

பணவீக்கம் சம்பந்தமான ஆத்திரத்தை தணிக்கும் முயற்சியில், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலைகள் முறையே லீட்டருக்கு 15, 30 மற்றும் 20 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளன. உழைக்கும் மக்களுக்கு சலுகை வழங்குவதற்கு மாறாக, அரசாங்கம் வீழ்ச்சி கண்டுவரும் உலக எண்ணெய் விலை வீழ்ச்சியை தனது நிதித் துறையில் உள்ள ஓட்டைகளை மூடும் ஒரு வழிமுறையாக பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு லீட்டர் பெற்றோல் 142 ரூபாவுக்கு அன்றி 85 ரூபாவுக்கே விற்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் அர்த்தம் ஒரு தொகையை அரசாங்கம் பைக்குள் போட்டுக்கொள்கிறது என்பதேயாகும்.

மோட்டார் வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானம் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு பெறுமதி சேர் வரியை 15 வீதத்தில் இருந்து 12 வீதமாகக் குறைப்பதாகவும் இராஜபக்ஷ அறிவித்தார். ஆயினும் அதே மூச்சில், சாதாரண உழைக்கும் மக்கள் மீதான சுமைகளை மட்டுமே கூட்டும் ஒரு தொடர் புதிய வரிகளையும் மற்றும் வரி அதிகரிப்புக்களையும் திணித்தார்.

இறக்குமதி பொருட்கள் மீதான ஒரு அடுக்கு புதிய வரிகளும் இவற்றில் அடங்கும். கோதுமை மீது 15 வீதம், கோதுமை மா மீது 5 வீதம், பால் மா ஒரு கிலோ 5 முதல் 15 ரூபா வீதம், சோளம் மற்றும் கால்நடை தீவனம் மீது 25 வீதம், கடதாசி மற்றும் தளபாடங்கள் மீது 5 மற்றும் 15 வீதம், இறக்குமதி செய்யப்படும் தோற்சரக்கு ஒரு கிலோவுக்கு 200 ரூபா வீதம் மற்றும் மொபைல் போன்கள், வயர் இணைப்பற்ற மற்றும் வயர் இணைப்புக்கொண்ட தொலை பேசிகளுக்கு 10 வீதம் என்ற அடிப்படையில் இந்த வரிகள் திணிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் பாதுகாப்பு படையினருக்கான நலன்புரி சேவைக்கு வழங்குவதன் பேரில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்தின் மீது அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஒரு வீத "தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி" என்ற ஒன்றையும் திணித்துள்ளது. இது தனியார் துறை மீது திணிக்கப்படும் போது, அந்த செலவு தவிர்க்க முடியாமல் முழு வெகுஜனங்கள் மீதும் சுமத்தப்படும்.

கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் முறையே 48, 60 மற்றும் 14 பில்லியன் ரூபாய்களாக உள்ளன. இவை பாதுகாப்புச் செலவிலும் பார்க்க அரைபங்கிற்கும் கொஞ்சமே அதிகமாகும்.

வரி அதிகரிக்கப்பட்டாலும், இன்னமும் அரசாங்கத்தின் வரவுசெலவில் ஆகக்கூடிய பற்றாக்குறை உள்ளது. சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவது பொறிந்து போனதன் பின்னர், குறைந்த வட்டியுடைய மற்றும் ஏனைய முறையிலான நிதி உதவிகளைப் பெறுவதில் அரசாங்கத்திற்கு இருந்த வாய்ப்பு வற்றிப்போய்விட்டது. கடந்த ஆண்டு 122 பில்லியன் ரூபாய்களை வெளிநாட்டில் கடனாகப் பெற்ற அரசாங்கம் இந்த ஆண்டு 153 பில்லியன் ரூபாய்களை பெற காத்திருக்கிறது.

எவ்வாறெனினும், தற்போதைய சர்வதேச கடன் நெருக்கடியின் மத்தியில், தேவையான கடன் கொழும்புக்கு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் சர்வதேச நாணய நிதியம் விளக்கியவாறு, இலங்கை வெளிநாட்டில் கடன்பெறுவது "சவாலாக" இருக்கும். மற்றும் அது அவ்வாறு செய்யத் தவறினால், தீவு துரிதமாக ஒரு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்.

கடனிருக்கும் ஆற்றலைத் தரமிடும் சர்வதேச முகவரான ஸ்டான்டர்ஸ் அன்ட் பூவர்ஸ் (Standard & Poor's -S&P) கடந்த வாரம் இலங்கையை ஆசியாவில் ஆகக்கூடிய ஆபத்தில் உள்ள நாடுகளோடு பட்டியலிட்டுள்ளது. "ஆகவும் பலவீனமாக இருப்பது பாகிஸ்தான் எனவும் அதையடுத்து இலங்கையும் பின்னர் வியட்னாமும் இருப்பாதாக பேச்சாளர் எலெனா ஒகோரோ-டெசென்கோ தெரிவித்தார். S&P இலங்கையின் நீண்டகால நாணயக் கடனை ஒரு எதிர்மறை போக்குடன் B+ தரத்தில் வகைப்படுத்தியுள்ளது. அதாவது மேலும் குறைத்து மதிப்பிடும் சாத்தியத்தில் வைத்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே இலங்கையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். இலங்கை திறைசேரி உண்டியல் மற்றும் கடன்பத்திரங்களில் வெளிநாட்டினரின் பங்கு அக்டோபர் முற்பகுதியில் 670 மில்லியன் டொலராக இருந்த போதிலும், நவம்பர் தொடக்கத்தில் 380 மில்லியன் டொலராக வீழ்ச்சிகண்டுள்ளது.

கடந்த ஜூலையில் 3.4 பில்லியன் டொலராக இருந்த நாட்டின் வெளிநாட்டு நாணய சேமிப்பு அக்டோபரில் 2.6 பில்லியன் டொலராக குறைந்து போனது. கடந்த இரு மாதங்களாக, ரூபாயின் நாணயமாற்று வீதத்தை அமெரிக்க டொலருக்கு 108 ரூபாயாக வைத்துக்கொள்ளும் பொருட்டு மத்திய வங்கி கிட்டத்தட்ட 600 மில்லியன் டொலர்களை விற்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெரும் வர்த்தகர்களின் ஆலோசனையின் படி வங்கியானது அண்மையில் நிதி சந்தையில் தனது தலையீட்டின் வேகத்தைக் குறைத்தது. இதன் விளைவாக ரூபாய் டொலருக்கு எதிராக கிட்டத்தட்ட 111 ரூபாவாக துரிதமாக பெறுமதி குறைந்தது.

சர்வதேச நாணய நிதிய தரவுகளின் படி, இலங்கை 3.5 டொலர் குறுகிய கால வெளிநாட்டு கடனைப் பெற்றுள்ளதோடு இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும். வெளிநாட்டு நாணய ஒதுக்கீடுகளில் இருந்து இந்தக் கடன்களை அடைக்க முடியாத அரசாங்கம், மீண்டும் கடன் வாங்கத் தள்ளப்படும். கடந்த ஆண்டு முதல், அது பூகோள சந்தைகளில் அதி உயர் வட்டி வீதத்துடன் ஏற்கனவே குறுகிய கால கடனாக 790 மில்லியன் டொலர்களைப் பெறத் தள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று, ஒருங்கு சேர்வமைப்பு கடனாக (syndicate) மேலும் 300 மில்லியன் டொலர்களைப் பெற அரசாங்கம் யோசனையை முன்வைத்துள்ளது.

கடைசி முயற்சியாக, அரசாங்கம் அச்சகத்தைப் பயன்படுத்தும். அது மேலும் பணவீக்கத்தை உயர்த்தும். இந்த ஆண்டில் மட்டும் அரசாங்கம் சுமார் 87 பில்லியன் ரூபாய்களை புழக்கத்தில் விட்டுள்ளது.

பெரும் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் நிதி நிலைமைகளைப் பற்றி கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு நாணய ஒதுக்கீட்டின் சரிவு மற்றும் உயர்ந்த வட்டியுடனான கடன்கள் போன்ற குவிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை பற்றிய கருத்துத் தெரிவித்த சிட்டி குருப் குளோபல் மார்க்கட்ஸ் ஏசியா, இலங்கையிலான நிலைமையை "விபத்து ஒன்று காத்திருப்பதாக" தெளிவாக விவரித்துள்ளது.

இலங்கையின் இரு பிரதான ஏற்றுமதிகளான தேயிலை மற்றும் இறப்பரின் உலக விலை வீழ்ச்சியின் மூலமும் பொருளாதாரம் கீழறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தேயிலை விலை 40 முதல் 50 வீதமாக இந்த ஆண்டு வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனை செய்யப்படாத தேயிலை கொழும்பு களஞ்சிய சாலைகளில் குவிந்துகொண்டிருக்கின்றன. இறப்பர் விலை, ஒரு கிலோ 397 ரூபாயில் இருந்து ஜூன் மாதம் 220 ரூபா வரை வீழ்ச்சி கண்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சந்தை சுருக்கத்தினால் ஆடை ஏற்றுமதியும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

அரசாங்க சமாதான செயலகத்தின் பொருளாதார விவகார தலைவர் ரொஹான்த அதுகோரல, இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 2009ம் ஆண்டு 300 முதல் 500 மில்லியன் டொலர் வரை சுருங்கிப் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் சுட்டிக் காட்டியிருந்தார்.

சகல பிரதான எதிர்க் கட்சிகளும் அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரிக்கின்றன. அதனால் வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றிய அவற்றின் விமர்சனம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) பாதுகாப்பு செலவுக்கு தனது முழு ஆதரவையும் வழங்கியதோடு படையினருக்கும் பொலிசாருக்கும் மேலும் சம்பள உயர்வை பிரேரித்துள்ளது. அதன் "நிழல் வரவுசெலவுத் திட்டத்தில்" யூ.என்.பி. அரசாங்கத் துறை ஊழியர்களுக்கும் 7,500 ரூபா மாத சம்பள உயர்வைக் கோரியுள்ளது. ஆயினும், மேலதிக செலவை எப்படி ஈடு செய்வது என்பது பற்றி அது எந்தவொரு சமிக்ஞையையும் காட்டவில்லை.

சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, அரசாங்கத்தின் மோசடிகள், விரயங்கள் மற்றும் வரி அதிகரிப்பையும் கூட கண்டனம் செய்துள்ளது. ஆனால், பாதுகாப்பு செலவு பற்றி ஜே.வி.பி.க்கு சொல்வதற்கு ஒன்றும் கிடையாது. இது யுத்தத்தை தொடர்வதற்கான அவர்களின் ஆதரவை பிரதிபலிக்கின்றது. கடந்த ஆண்டு, இதே போன்ற ஒரு தோரணையை காட்டிய ஜே.வி.பி., ஏறத்தாழ வரவுசெலவுத் திட்டத்துக்கு சார்பாகவே வாக்களித்தது.

இராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டம் நாட்டின் "நிரந்தர சமாதானம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி சேவை" போன்ற வெற்று வாக்குறுதிகளால் நிறைந்து போயுள்ளது. எவ்வாறெனினும், பூகோள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்துடன் கட்டுண்ட இனவாத யுத்தத்தின் உயர்ந்த செலவானது பிரமாண்டமான நிதிப் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றது. இது நாட்டின் ஆட்டங்கண்டுள்ள கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு பெரும் அரசியல் நெருக்கடியை துரிதமாக தோற்றுவிக்கக் கூடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved