World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan soldiers and their families speak to the WSWS

இலங்கை படையினரும் அவர்களது குடும்பத்தினரும் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர்

By our correspondents
28 November 2008

Back to screen version

வட இலங்கையில் அண்மைய வாரங்களாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெறும் கடுமையான மோதல்களில் இரு தரப்பினருக்கும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதோடு பெருந்தொகையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

வடக்கில் வன்னி பிராந்தியத்தில் புலிகளின் இராணுவ மற்றும் நிர்வாகத் தலைமையகம் உள்ள கிளிநொச்சியை கைப்பற்றுவதையே தற்போதைய இராணுவத் தாக்குதல்கள் இலக்காக கொண்டுள்ளன. புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றும் நேற்றைய வருடாந்த "மாவீரர் தினத்துக்கு" முன்னதாக இந்த நகரைக் கைப்பற்ற இலங்கை அரசாங்கம் எண்ணியிருந்தது.

இதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிக அதிகமாகும். மோட்டார் மற்றும் ஆட்டிலறி குண்டுகளை சரமாரியாக வீசி மூன்று நாட்கள் நடந்த கடும் சமரின் பின்னர், 122 எதிரிகளைக் கொன்றதாகவும் 27 சிப்பாய்களை இழந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்தது. இரு தரப்பினரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொய்மைபடுத்துவது வழமையாகும்.

தற்போதைய இராணுவத் தாக்குதல்கள் "புதியதோ அல்லது பிரமாண்டமானதோ" அல்ல என பிரபாகரன் தனது உரையில் தெரிவித்ததோடு சமாதானப் பேச்சுக்களை மீண்டும் திறக்கவும் விருப்பம் தெரிவித்தார். எவ்வாறெனினும், அவரது தற்புகழ்ச்சி ஒருபுறமிருக்க, 2006 நடுப்பகுதியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தீவின் உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடக்கியதில் இருந்து புலிகள் கணிசமான இழப்புக்களை சந்தித்துள்ளனர். புலிகள் கிழக்கில் தனது அனைத்து கோட்டைகளையும் மற்றும் வன்னியில் அதன் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதியையும் இழந்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக, இராணுவம் பூநகரி மற்றும் மாங்குளம் ஆகிய இரு மூலோபாய முக்கியத்துவம் கொண்ட நகரங்களைக் கைப்பற்றியதோடு இப்போது மூன்று பகுதிகளில் இருந்து கிளிநொச்சியை நெருக்கிக் கொண்டிருக்கின்றது.

இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தமானது அரசாங்கம் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் நசுக்குவதற்கு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரத்தையும் இணைத்துக் கொண்டுள்ளது. யுத்தப் பிராந்தியத்தில் இருந்து சுயாதீனமாக செய்தி வெளியிடுவது அனுமதிக்கப்படுவதில்லை. தேசப்பற்று காய்ச்சலை கிளறிவிடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள், இராணுவத்தினர் மத்தியில் உட்பட, யுத்தம் மற்றும் அதன் பொருளாதார சுமைகள் தொடர்பான பரந்த அதிருப்தியை மூழ்கடிப்பதற்காக திட்டமிடப்பட்டதாகும்.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள், யுத்தம் மற்றும் அதன் தாக்கம் பற்றி கடந்த இரு வாரங்களாக பல சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடனும் உரையாடினர். இராணுவம் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் பேரினவாத குண்டர்களின் தொந்தரவுகள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்பன இடம்பெறுவதற்கான சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களை அதில் இருந்து காப்பதன் பேரில் அவர்களது பெயர்கள் இங்கு வெளியிடப்படவில்லை.

அரசாங்கம் அல்லது இராணுவப் பேச்சாளர் ஏற்றுக்கொள்வதை விட உயிரிழந்த இராணுவத்தினரின் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. தேசிய வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, கொழும்பு தெற்கு மற்றும் ஜயவர்தனபுர ஆகிய நான்கு வைத்தியசாலைகளில் தமது இயலுமையைப் பயன்படுத்தி WSWS தெரிந்துகொண்டவாறு, முறையே 200, 400, 60 மற்றும் 200 பேர்கள் காயமடைந்த படையினராவர். இந்த ஆஸ்பத்திரிகள் கொழும்பிலும் மற்றும் அதைச் சூழவும் உள்ளன.

ஒரு வைத்தியசாலையில் எமது நிருபர்கள் 20 சிப்பாய்களைக் கண்டனர். அவர்களில் சிலர் கால்கள் இன்றியும் மேலும் பலர் கைகள் இன்றியும் இருந்தனர். சிலர் பார்வை இழந்திருந்தனர், சிலர் கேட்கும் சக்தியை இழந்திருந்தனர். அவர்களில் பலர் கிளிநொச்சிக்கான மோதலில் ஈடுபட்டிருந்தவர்களாவர். பெரும்பாலானவர்கள் பேசுவதற்கு தயங்கிய போதும் ஒரு சிப்பாய் மூர்க்கமான மோதல்களின் தோற்றத்தை அரைகுறையாக சித்தரித்தார்.

"யுத்தத்தின் இறுதி விளைவு என்னவாக இருக்கும் என எங்களால் சொல்ல முடியாது. புலிகள் பலவீனமாக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் இன்னமும் தாக்குதல் தொடுக்க முடியும். ஒரு குழுவினர் [சிப்பாய்கள்] எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தனர். அவர்கள் எங்களது படையினர் என நாம் நினைத்தோம். ஆனால் திடீரென அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். எங்களில் பலர் கொல்லப்பட்டதோடு காயமடைந்தவர்களில் நானும் ஒருவன். பலர் உயிரிழப்பர் அல்லது காயமடைவர். பலர் ஊனமுற்றோர் வரிசையில் இணைந்துகொள்வர்," என அவர் WSWS க்குத் தெரிவித்தார்.

பண்டாரவளைக்கு அருகில் வசிக்கும் ஒரு உயிரிழந்த சிப்பாயின் குடும்ப உறுப்பினருடன் எமது நிருபர்கள் பேசினர். கடந்த மாத முற்பகுதியில் மோதலில் கொல்லப்படும் போது அந்த சிப்பாய்க்கு வயது 21 மட்டுமே. பெரும்பாலான சிப்பாய்கள் பொருளாதார காரணங்களால் படையில் இணைந்தவர்கள் ஆவர். இந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பிரதானமாக சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகள் பற்றாக்குறையின் காரணமாக இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டார்கள்.

இந்த சிப்பாய் குடும்பத்தில் ஒரே மகன். அவருக்கு இரு தங்கைகள் உள்ளனர். ஒரு தங்கை மணம் முடித்தவர் மற்றையவர் பத்தாம் வகுப்பில் இன்னமும் படித்துக்கொண்டிருக்கின்றார். அவரது அப்பாவுக்கு இதய நோய் இருந்த போதிலும் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக ஒரு சாரதியாக பணிபுரிகின்றார். தான் தயக்கத்துடனேயே மகன் இராணுவத்தில் சேர்வதற்கு உடன்பட்டதாக அந்த சிப்பாயின் தாய் தெரிவித்தார். "எங்களை நேராக சண்டையில் ஈடுபடுத்த மாட்டார்கள், கவலைப்பட வேண்டாம் அம்மா" என அவர் தெரிவித்தாக அந்த தாய் கூறினார்.

"பல இராணுவ அலுவலர்கள் எங்களிடம் வந்து சில ஆவணங்களில் கையொப்பமிடுமாறு கேட்டுக்கொண்டனர். எனது மகன் பயிற்சியை முடித்து வெளியேறியது ஜூலை 5ம் திகதி. அவர் சில மாதங்களே இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த யுத்தத்தினால் இப்போது எங்களது மகனை இழந்துவிட்டோம். அவர்கள் அவரது சம்பளத்தை தருவதாக கூறிய போதிலும் எதுவும் நடக்கவில்லை. இறுதிச் சடங்குக்காக எங்களுக்கு 100,000 ரூபா [1000 டொலர்களையும் விட குறைவு] கிடைத்தது.

"இந்த அனைத்தும் எங்களது வறுமையின் காரணமாக நடந்தது. எனது கனவரின் வருமானத்தில் எங்களால் இந்த வீட்டின் இரு அறைகளை கட்டிக்கொள்ள முடிந்தது. இப்போது நாங்கள் என்ன செய்வோம்? அடுத்த ஜனவரியில் இருந்து தனது சம்பளத்தில் வீட்டைக் கட்டத் தொடங்கலாம் என எனது மகன் தெரிவித்தார். அவர் இராணுவத்தில் இணையாமல் இருந்திருந்தால் எப்படியாவது நாம் வீட்டைக் கட்டியிருப்போம். அவர் இன்றி எப்படி வாழ்வதென்று தெரியவில்லை."

அயலவர் ஒருவர் அரசாங்கம் மற்றும் யுத்தம் தொடர்பான தனது வெறுப்பை சுருக்கமாகத் தெரிவித்தார். "யுத்தம் அவர்கள் உயிர் வாழ்வதற்கே. கிழக்கில் என்ன நடந்தது? இப்போது கிழக்கு பிள்ளையானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது!" கிழக்கு மாகாணத்தை இராணுவம் "விடுவித்த" பின்னர், அரசாங்கம் இழிபுகழ்பெற்ற துணைப்படைக் கருவியொன்றின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் எஸ். சந்திரகாந்தனை முதலமைச்சராக இருத்தியுள்ளது.

WSWS நிருபர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஒரு இளம் சிப்பாயின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசினர். அந்த சிப்பாய் இந்த மாதம் வடக்கில் கிளாலியில் கொல்லப்பட்டார். அவர் 2004 நடுப்பகுதியில் இராணுவத்தில் சேர்ந்திருந்ததோடு ஒரு முறை ஏற்கனவே காயமடைந்திருந்தார். அவர் வீட்டுக்கு வருவதாக வாக்குறுதியளித்திருந்த அன்றே கொல்லப்பட்டார். மனமுடைந்திருந்த அவரது தாயார் "இந்த சோகத்தை நான் எப்படி தாங்கிக்கொள்வேன்" என அழுது கொண்டிருந்தார்.

தனது மகனுடன் 8 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்தார். பாதுகாப்புப் படையில் உள்ள அவரது சகோதரர் மரணச் சடங்கிற்கு சமூகமளிக்க 10 நாள் விடுமுறை பெற்றிருந்தார். அவர் 20 காயமடைந்த சிப்பாய்களையும் இரு சடலங்களையும் வடக்கில் இருந்து எடுத்து வந்த விமானத்தில் வந்ததாக தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு காயமடைந்த சிப்பாய்களும் சடலங்களும் கொண்டு வரப்படுகின்றன.

அந்தக் குடும்பம் வறிய குடும்பம். அவரது தந்தை தச்சு வேலை செய்பவராக இருந்தாலும் கண்பார்வை குறைவினால் அவரால் வேலை செய்ய முடியாது. யுத்தப் பிராந்தியத்தில் இருந்து இடமாற்றம் பெறுமாறு தனது மற்ற மகனை அவர் நெருக்கிக்கொண்டிருந்தார்.

கொடூரமான நிலைமைகள் மற்றும் துஷ்பிரயோகத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் இராணுவத்தை விட்டு ஓடியுள்ளனர். 2007 பெப்பிரவரியில் இராணுவத்தில் சேர்ந்த 22 வயதான ஒரு இளம் சிப்பாய், அவரது திருமணத்துக்கு விடுமுறை வழங்க அதிகாரிகள் மறுத்ததால் அவர் இராணுவத்தை விட்டு ஓடியுள்ளார்.

இராணுவ பொலிசார் அவரது வீட்டில் செப்டெம்பர் 14 அன்று விடியற் காலை தேடுதல் நடத்தியதோடு அவரை பூஸ்ஸ தடுப்பு முகாமில் தடுத்து வைத்தனர். அவரது மனைவி அவரை பார்க்கச் சென்ற போது, அவர் பேசுவதற்கு நான்கு நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார். அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதோடு வாழ்வதற்கு வழியின்றி இப்போது அவர் தனது சகோதரருடன் குருணாகலையில் வசிக்கின்றார். அவர்கள் தங்கியிருக்கும் வீடு ஒரு அறை, ஒரு சமையலறை மற்றும் ஒரு விராந்தையும் கொண்ட ஒரு சிறிய வீடாகும்.

அவரது கனவர் இப்போது கொழும்பில் இருந்து 75 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவிட்ட முகாமில் மேலும் 120 பேருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனது தந்தையுடன் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்ட அவர், தனது மைத்துனரை இராணுவத்தில் இணைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளுமாறு தெரிவித்தார். ஏனைய பலரைப் போல், அவரது குடும்பமும் வறிய குடும்பமாகும். அவர் சிறுவனாக இருக்கும் போதே அவரது தாய் அவரைப் பிரிந்தார். அவரது தந்தைக்கு சிறு வேலைகள் கிடைத்தன. அவர் நான்காம் வகுப்பின் பின்னர் பாடசாலையை விட்டு விலகி இராணுவத்தில் இணைந்துகொண்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved