:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government imposes new taxes
to fund war
இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு நிதி வழங்க புதிய வரிகளை விதிக்கின்றது
By Saman Gunadasa
19 September 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
இலங்கை அரசாங்கம் அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு நிதி சேகரிக்க எடுத்த
அவநம்பிக்கையான முயற்சியொன்றில், ஐந்து நிதி மசோதாக்களை பாராளுமன்றத்தின் ஊடாக செப்டெம்பர் 6
நிறைவேற்றியது. இதன் மூலம் ஒரு தொகை பொருட்களுக்கும் சேவைகளுக்குமான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் முற்பகுதியில் வெளியிடவேண்டியுள்ள நிலையில், இது சுமார்
10 பில்லியன் (88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ரூபாய்களை சேகரிப்பதற்கும் அரசாங்கத்தின் நிதித்துறையில்
உள்ள ஓட்டையை அடைப்பதற்குமான இடை நிரப்பு நடவடிக்கையாகும்.
இந்த புதிய வரி விதிப்பின் கீழ், செல்லிடத் தொலைபேசிகளுக்கான வரி 2.5 வீதத்தில்
இருந்து 10 வீதம் வரையும், பெரிய வாகனங்களுக்கான வரி 2.5 வீதத்தில் இருந்து 5 வீதம் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 10 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான உற்பத்தி வரி 10 முதல் 15 வீதம் வரை அதிகரிக்கப்படும்.
இவற்றுக்கிடையில், பெரும்பாலான பொருட்கள் மீதான சுங்க வரியும் உற்பத்தி வரியும் ஏற்கனவே கூர்மையாக
அதிகரித்துள்ள விலைவாசியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
பாராளுமன்ற விவாதத்தில் பேசிய உப நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இந்த மசோதாக்களை நியாயப்படுத்தினார். "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு மானியங்கள்
வழங்குதல் உட்பட அரசாங்கத்தின் ஏனைய கடமைகளோடு ஒப்பிடும் போது இத்தகைய வரிகளை அமுல்படுத்துவது
அவசியமானதாகும்," என அவர் பிரகடனம் செய்தார். உண்மையில், அரசாங்கம் மானியங்களை வெட்டிக்
குறைக்கின்ற நிலையில், இந்த பணம் "மானியங்கள் வழங்குவதற்கு" அல்ல. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை முன்னெடுப்பதற்கேயாகும்.
2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி, தீவின் கிழக்கில் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 2006 ஜூலையில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான
இராணுவத் தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு செலவு கூர்மையாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நிதி
அமைச்சுக்களையும் தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 2007ம் ஆண்டுக்கான பாதுகாப்புச்
செலவை 139 பில்லியன்கள் வரை அதிகரித்தார். இது 2006ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45 வீத அதிகரிப்பாகும்.
வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இராணுவச் செலவு தொடர்ந்தும் அதிகரித்துக்
கொண்டிருக்கின்றது.
கிழக்கில் "வெற்றியை" கொண்டாடிய இராஜபக்ஷ அரசாங்கம், வடக்கில் புலிகளின்
கோட்டைக்கு எதிராக புதிய தாக்குதல்களை முன்னெடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. செலவு அல்லது
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளால் எழும் வெகுஜன எதிர்ப்புக்களை காரணமாகக் கொண்டு இராணுவ
நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதியும் மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச்
செயலாளர் கோதபாய இராஜபக்ஷவும் தெளிவுபடுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு பூராவும் இராணுவம் பெருமளவில்
விமானத் தாக்குதல்களையும், ஆட்டிலறி மற்றும் பல்குழல் ஏவுகணைகளையும் பயன்படுத்தியது. இவை அனைத்தையும்
பராமரிப்பதும் இயக்குவதும் செலவு மிகுந்ததாகும்.
வாக்காளர்கள் மீது புதிய சுமைகளை திணிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும்
(ஐ.தே.க.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) அரசாங்கத்தை கடுமையாக கண்டனம் செய்ததை
அடுத்து இந்த மசோதா பாராளுமன்றத்தில் கேலிக்கூத்தான விவாதத்தை தூண்டிவிட்டது. எதிர்க் கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க மின்னியல் வாக்களிப்பை எதிர்த்ததோடு கைகளை உயர்த்தி வாக்களிக்க வேண்டும் என
கோரினார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகரின் கைகளில் இருந்த ஆவனங்களை பறிக்க
முற்பட்டதால் சபையில் கைகலப்பு ஏற்பட்டது. தமது செல்லிடத் தொலைபேசிகளை உயர்த்திப் பிடித்த எதிர்க்கட்சி
எம்.பி.க்கள் தாம் "வரிக்கு எதிரானவர்கள்" என பிரகடனம் செய்தனர். இந்த கூச்சல்களுக்கு மத்தியில், 106
க்கு 81 வாக்குகள் அடிப்படையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.
யுடன் சேர்ந்து புலிகளுக்கு சார்பான தமிழ் கூட்டமைப்பும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது.
இந்த அரசியல் ஊமைக் கூத்து, ஐ.தே.க. அல்லது ஜே.வி.பி. யோ
மசோதாக்களுக்கு எதிராக எந்தவொரு அடிப்படையான எதிர்ப்பையும் காட்டவில்லை என்ற உண்மை
வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவே நடத்தப்பட்டது. யுத்தமும் மற்றும் அதன் பொருளாதார
சுமைகளும் வெகுஜனங்களால் கடுமையாக வெறுக்கப்படுகின்றன என்பதையிட்டு அவர்கள் விழிப்பாக இருப்பதால்
மட்டுமே அவர்கள் வெகுஜனங்கள் தொடர்பாக அக்கறையை வெளிப்படுத்துகின்றனர். எவ்வாறெனினும், ஐ.தே.க.
மற்றும் ஜே.வி.பி. யும் புலிகளுக்கு எதிரான புதிய இராணுவத் தாக்குதல்களை ஆதரிப்பதோடு அந்த நிதி
செலவாகப் போகும் பிற்போக்கு காரணத்தை எதிர்க்கவில்லை.
ஜே.வி.பி. யைப் பொருத்தளவில், அதன் எதிர்ப்பு குறிப்பாக இரண்டு முகங்களைக்
கொண்டது. யுத்தம் உக்கிரமாக்கப்பட வேண்டும் என்ற அதன் கோரிக்கையின் தர்க்கம் மேலும் வரிகளை
அதிகரிப்பதேயன்றி குறைப்பது அல்ல. "தாய் நாடு முதன்மையானது, ஏனையவை பின்னர்" என்ற ஜே.வி.பி. யின்
வாசகம், உழைக்கும் மக்கள் யுத்தத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. அதே
சமயம், அது தன்னை தொழிலாளர்களையும் கிராமப்புற ஏழைகளையும் பாதுகாக்கும் கட்சியாக காட்டிக்கொள்ள
முயற்சிக்கின்றது. பாராளுமன்றத்தில் நடந்த கூச்சல்களுக்கு மத்தியில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள்
யுத்தம் தொடர்பாக முழு அமைதியைக் காத்தனர்.
ஐ.தே.க. வாக்கெடுப்பு "சட்டவிரோதமானது" என்ற அதன் குற்றச்சாட்டை
அமைதியாக கைவிட்டுவிட்டது. இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஐ.தே.க. கொண்டுள்ள முரண்பாடுகள், கையாளும்
முறை தொடர்பானவை மட்டுமே. ஐ.தே.க. யின் நிலைப்பாடுகள், யுத்தம் பொருளாதாரத்தை பாதிப்பதோடு
இராணுவ பேரழிவிலேயே முடிவடையும் என்ற பெரும் வர்த்தகர் பிரிவினரின் அக்கறையையே பிரதிபலிக்கின்றது.
ஆனால் 1983ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடங்கிவைத்த ஐ.தே.க., புதுப்பிக்கப்பட்ட இராணுவத்
தாக்குதல்களை எதிர்க்கவில்லை.
அரசாங்கம் நிதி நெருக்கடியில் இருப்பது தெளிவு. கடந்த ஜூன் மாதம், மத்திய
அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் நிதி 60 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை முதலமைச்சர்கள்
கூட்டமொன்றில் முறைப்பாடு செய்தனர். வர்த்தக இணையமான மணி ரிபோர்ட், அரசாங்கம் இந்த
ஆண்டு அரசாங்க முதலீட்டுக்கான வரவு செலவில் 65 பில்லியன் ரூபாய்களை அல்லது 25 வீதத்தை குறைத்துள்ளதாக
ஆகஸ்ட் முற்பகுதியில் வெளிப்படுத்தியிருந்தது.
சர்வதேச நிதிச் சந்தையில் 500 மில்லியன் டொலர்களை சேகரித்துக்கொள்ளும்
திட்டம் தொடர்பாக மேலும் ஒரு முரண்பாடு வெடித்துள்ளது. பார்க்லேஸ் கெபிடல், ஹொங்கொங் அன்ட் ஷங்ஹாய்
பாங் (எச்.எஸ்.பி.சி.) மற்றும் ஜே.பி. ஸ்டான்லி மொர்கன் ஆகிய பெரும் வங்கிகளின் குழுவொன்று,
கடன்பத்திர விவகாரத்தை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசாங்கம் கடன் பெறுவதற்கான காரணத்தை
தட்டிக்கழிக்கின்றது. ஆரம்பத்தில் இந்த நிதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கானது என அது
தெரிவித்த போதிலும், குறிப்பாக அவற்றை அடையாளங்காட்ட அரசாங்கம் தவறிவிட்டது.
கடந்த வாரம் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகை,
"உட்கட்டமைப்புக்கான" கடன் என்ற அரசாங்கத்தின் கூற்றை கேள்விக்குள்ளாக்கியதோடு அதன் உண்மையான
காரணத்தையும் சுட்டிக்காட்டியது. "மிக மோசமான விவரக் குறிப்பு, இந்த நிதி பொருளாதார உற்பத்திக்காக
அன்றி இராணுவச் செலவுக்காக பயன்படுத்தப்படுவதாகவே இருக்கும்.''
பலவித உருமறைப்புக்கள் இடம்பெற்ற போதிலும், இந்தக் கடன் ஏதாவதொரு
வழியில் யுத்தத்திற்கு நிதியளிக்கவே பயன்படும். பணம் எவ்வாறு செலவிடப்படும் என்பது தொடர்பாக
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பாததால், அது சர்வதேச நாணய நிதியம் அல்லது ஏனைய
நிதியங்களில் இருந்து அபிவிருத்திக்கான கடன்களை எதிர்பார்ப்பதை விட, வர்த்தக வட்டி வீதத்தை செலுத்த
தயாராக உள்ளது. இந்த கடனின் அளவு பிரமாண்டமானதாக தெரியாமல் இருக்கும் அதே வேளை, அது
குறிப்பிடத்தக்க வகையில் வெளிநாட்டு கடனுடன் சேர்க்கப்படும். வெளிநாட்டுக் கடன் தொகை கடந்த ஜூன்
மாதமளவில் 1,014 பில்லியன் ரூபாய்களாகும் (8.95 பில்லியன் அமெரிக்க டொலர்). அமெரிக்காவில்
முதல்நிலை ஈட்டு கடன் முறையில் ஏற்பட்ட நெருக்கடியால் தூண்டிவிடப்பட்டுள்ள சர்வதேச நிதி நிலைகுலைவால்
பிணைப் பத்திரங்கள் வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விலைவாசி கட்டுமீறி அதிகரித்துள்ளது. வரிகளை அதிகரித்த அதே வாரம்,
அரசாங்கம் இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக ஷெல் கேஸ்ஸின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க
அனுமதித்துள்ளது. அரசாங்கம் கடந்த ஆண்டு சர்வதேச ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலையில் மாற்றங்களை செய்ய
அனுமதிக்க கம்பனியுடன் உடன்பட்டிருந்தது. செப்டெம்பர் 11, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக மீண்டும் பால்
மா விலையை 28 முதல் 39 வீதம் வரை அதிகரிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக நுகர்வோர் விவகார
அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான வருடாந்த பணவீக்கம் 17.3 வீதமாகும். இது ஜூலை மாத
வீதமான 17.6 ல் இருந்து சற்றே குறைந்துள்ள போதிலும், மத்திய வங்கியால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு ஒற்றை
ஸ்தான இலக்கத்தை நெருங்கக்கூட இல்லை. ஏனைய சர்வதேச நாணயங்களுக்கு எதிராக டொலர் சரிந்து வருகின்ற
நிலையிலும் கூட இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. ரூபாயின் வீழ்ச்சி கடந்த
ஜனவரியில் இருந்து செப்டெம்பர் வரை 106 ரூபாயில் இருந்து 113 ரூபாய்களை எட்டியுள்ளது.
பணவீக்கத்தை தடுக்கும் முயற்சியாக, மத்திய வங்கி ஒப்பீட்டுப் புள்ளி வட்டி வீதத்தை
10.5 வீதமாக, அதாவது ஐந்து ஆண்டுகளில் உயர்ந்த புள்ளியில் வைத்தது. எவ்வாறெனினும், கடன் வழங்குவதை
வரையறுத்தமை விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தாததோடு பொருளாதார வளர்ச்சி மந்த நிலையடைவதற்கு
மட்டுமே வழிவகுத்தது. இரண்டாவது காலாண்டு வளர்ச்சி வீதம் 6.1 வீதம் என புளூம்பேர்க் நியூஸ் சேர்வே
செப்டெம்பர் 12 அறிவித்திருந்தது. இது இரண்டு ஆண்டுகால மந்த நிலையில் உள்ள மொத்த தேசிய உற்பத்தியின்
கலாண்டு வளர்ச்சிக்கு சமமானதாகும்.
விலை அதிகரிப்பு தொடர்பான தனது அறிவிப்பை பாதுகாக்கும் வகையில் விளக்கமளித்த
நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்கத்தின் கொள்கைகளின் பொருளாதார தர்க்கத்தை
வெளிப்படையாக விளக்கினார்: "பாதுகாப்பு செலவு 140 பில்லியன் ரூபாய்கள். நாங்கள் துப்பாக்கி
குண்டுகளையும் எறிகணைகளையும் இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. எங்களால் (புலிகளின் தலைவரை) பிரபாகரனை
கெட்டப்போல் கொண்டு தாக்க முடியுமானால், நாங்கள் அந்நிய செலாவனியை செலவிட வேண்டியதில்லை." விலைவாசியை
கட்டுப்படுத்துவதாக அரசாங்கம் முன்னர் கொடுத்த வாக்குறுதியைப் பற்றி பத்திரிகையாளர்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய
போது, அவை வெறும் "அரசியல் சுலோகங்கள்" மட்டுமே என தூக்கியெறியும் விதத்தில் பிரகடனம் செய்தார்.
யுத்தத்தின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்ற முனையும் அரசாங்கத்தின்
வழிமுறைகளே இந்தப் புதிய வரிகளும் விலை அதிகரிப்பும் என்பது தெளிவு. |