World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: The LCR sets a new political trap for the working class

பிரான்ஸ்: தொழிலாளர் வர்க்கத்திற்கு LCR ஒரு புதிய அரசியல் பொறிக்கிடங்கை அமைக்கிறது

By Peter Schwarz
8 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Révolutionnaire -LCR) பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் சிதைவை எதிர்கொள்ளும் வகையில் ஒரு புதிய வலது-மையக் கட்சியை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு செய்கையில் ஒரு புதிய தலைமுறை, புரட்சிகர மார்க்சிசத்தின் பக்கம் திரும்புவதை தடுக்கவும், தொழிலாளர்கள் இளைஞர்கள் ஆகியோரிடையே வளர்ச்சியடைந்துவரும் தீவிரமயப்போக்கை எதிர்த்துப் போராடவும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு அவசரமாக தேவைப்படும் ஒரு இயங்குமுறையை உருவாக்கவும் முயல்கிறது.

LCR சார்பிலான பேச்சாளர் ஒலிவியே பெசன்ஸநோ, Port-Leucate ல் சமீபத்தில் "கோடைப் பல்கலைக்கழகம்" என்று கட்சி நடத்திய நிகழ்ச்சிகளின்போது ஒரு புதிய கட்சிக்கான திட்டங்களை அறிவித்தார். புதிய கட்சி "ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு" கட்சியாக இருக்கும் என்றும், ஆனால் LCR போல் அல்லாமல் ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்தவித தொடர்பையும் உரிமை கொண்டாடாது என்றும் தெரிவித்தார்.

பெசன்ஸநோ AFP செய்தி ஊடகத்திடம், வரலாற்றில் LCR ஒரு புதிய பக்கத்தைத் திறப்பதாக கூறினார். இந்தக்கருத்துரு "ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டுவதற்கல்ல", மாறாக "முதலாளித்துவ முறையைத் தவிர வேறு ஏதேனும் ஒன்றை அபிவிருத்தி செய்யவிரும்புவர்களுக்கான ஒரு முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை" கட்டுவதாகும் என்றார் அவர். புதிய அமைப்பு "அரசியலில் கன்னித்தன்மையை கொண்டு மற்ற தொடுவானங்களையும் இணைக்கும். ஒரு புதிய அரசியல் காலத்திற்கு ஒரு புதிய கட்சி, புதிய வேலைத்திட்டம் ஆகியவை தேவைப்படுகிறது."

இதே விதத்தில் Le Parisien இடம் அவர் கூறியதாவது: "அனைத்து முதலாளித்துவ எதிர்ப்பினர் மற்றும் மற்றொரு சமூகத்திற்கு வாதிடுவோர் அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்... LCR இன் இரண்டாம் பதிப்பையோ, முகமாற்றமுடைய பழைய கட்சியையோ அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இப்பொழுது நமக்குப் பின்னால் LCR விட்டுவிடப்பட வேண்டும். அது தன்னுடைய மரபியத்தை மறுக்காமல் அது வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்க வேண்டும். புதிய அரசியற் கட்டத்தில் புதிய கட்சி. இரு ட்ரொட்ஸ்கிச குழுக்கள் இருக்கும்போது, எதற்காக ஒரு ட்ரொட்ஸ்கிச குழு தேவை? நாங்கள் பேரவா படைத்தவர்களாக உள்ளோம். வெறும் பெயர் மாற்றத்துடன் நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. இக்காலக்கட்டம் சிறு கலாச்சாரப் புரட்சிகளுக்கு ஏற்றது அல்ல."

வலது-மைய வாதம்

"முதலாளித்துவ-எதிர்ப்பு" என்ற சொல்லினால் எவரும் ஏமாந்துவிட வேண்டாம். புதிய கட்சியின் இலக்கு முதலாளித்துவ ஒழுங்குமுறையை காப்பதில்தான் உள்ளது; அதுவோ நாட்டின் சோசலிச, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழுச் சரிவு நிலைக்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அதன் மிக முக்கிய கருவிகளை இழந்துள்ளது.

இக்கோடைகாலத்தில், மூன்றாம் முறை தொடர்சியாக ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிட்ட பின்னர், சோசலிஸ்ட் கட்சி வீழ்ச்சியில்தான் உள்ளது. முக்கிய கட்சிப் பிரமுகர்கள் இதைவிட்டு வெளியேறி ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் முகாமிற்குச் சென்றுவிட்ட பின்னர், கட்சியில் எஞ்சியிருப்பவர்கள் உட்பூசல் பிளவுகளில் சிக்கித் தவிக்கின்றனர்; அதே நேரத்தில் கட்சி இன்னும் கூடுதலான முறையில் வலதிற்கு நகர்கிறது. பல தசாப்தங்கள் சோசலிஸ்ட் கட்சியின் வாலைப் பிடித்து வாழ்ந்த பின்னர், பிரான்சில் ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன்று பிளவுற்ற அமைப்பு என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இச்சூழ்நிலையில், பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு, ஒரு புதிய தலைமுறையில் உடனடியாக நம்பிக்கையை இழக்காத, போதுமான அளவு "இடது" எனக் காட்டிக் கொள்ளும் ஒரு கட்சி அவசரமாக தேவைப்படுகிறது; அத்தகைய கட்சி தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் போர்க்குணத்தை குறைத்து சிதைக்கும் தன்மையை கொண்டிருக்கவும் வேண்டும். இத்தகைய வகையிலான கட்சியைத்தான் LCR வளர்க்க முற்படுகிறது.

பழைய அதிகாரத்துவ கருவிகளில் ஒரு காலத்தில் அரசியல் செல்வாக்கு கொண்டிருந்தவர்களுக்கு புதிய கட்சி தன்னுடைய கதவுகளை திறக்கும்; அதையும் தவிர ஒவ்வொரு வகை குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினர், மனக் குழப்பமுடையோருக்கும் வரவேற்பு தரும். ஜூலையில் LCR -ன் தேசிய தலைமையால் வழங்கப்பட்ட ஒரு வேண்டுகோளின்படி, அது முதலாளித்துவ எதிர்ப்பு, பெண்நிலைவாதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேசியம் மற்றும் சோசலிசம்" ஆக இருக்கும் மற்றும் "போராட்டங்களிலும் தேர்தல்களிலும் முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தைப் பின்பற்ற விரும்பும் அனைத்து தனிநபர்கள், மற்றும் செயற்பாட்டாளரின் குழுக்கள் அரசியல் நீரோட்டங்கள் ஆகியோருடன் ஒரு பொதுவிவாதத்தை மேற்கொள்ளும்."

"முதலாளித்துவ-எதிர்ப்பு" என்ற சொற்றொடர் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல் முகாமில் இருக்கும் ஒரு மிகப் பரந்த அரசியல் வண்ணங்களையும் உள்ளடக்கியது ஆகும். பல தசாப்தங்கள் மிக அதிக வேலையின்மை, பொதுநலச் செலவின வெட்டுக்கள் மற்றும் சமூக துருவமுனைப்படல் உருவாக்கப்படல் ஆகியவை வந்தபின், முதலாளித்துவம் சமூகத்தின் பரந்த அடுக்குகளிடையே இழிவிற்கு உட்படுத்துவிட்டது; மக்களைத் திருப்திப்படுத்தி பேசும் ஒவ்வொரு வகையான அரசியல் வாதியும் --அரசியலில் வலதில் இருப்பவர் உட்பட-- "புதிய தாராளவாதம்", "கலப்பற்ற முதலாளித்துவம்" அல்லது "சர்வதேச நிதியச் சந்தைகளின் சர்வாதிகாரம்" ஆகியவற்றைக் கண்டிக்கத் தயாராக உள்ளனர்.

முதலாளித்துவத்திற்கு ஆதரவை வெளிப்படையாக தருவதற்கு மிக மழுங்கிய தன்மை உடைய சமூக ஜனநாயகவாதிகள்தான் தயாராக இருப்பர். முதலாளித்துவ ஒழுங்கைக் காக்கும் "இடது" பிரிவுகளின் பரந்த பெரும்பான்மை, "முதலாளித்துவ-எதிர்ப்பு" என்னும் திரைக்கும் பின்னால் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர்; இதில் ஏமாற்றத்திற்கு உட்பட்ட சீர்திருத்தவாதிகள், இழிவிற்குட்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், வயது முதிர்ந்த ஸ்ராலினிஸ்டுகள், LCR க்கு மிகவும் உகந்த பெண்ணுரிமை, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆகியோரும் உள்ளனர். "முதலாளித்துவ எதிர்ப்பு" என்று காட்டிக் கொள்ளும் மிகத் தீவிர வலதையும் இப்பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதற்கு இல்லை.

"முதலாளித்துவ எதிர்ப்பு" என்னும் முத்திரை உறுதியற்றதும் வளைந்து கொடுக்கக் கூடியதாகவும் இருப்பதால், மிக அதிகமான அரசியல் குழப்பத்தை பரப்புவதற்கு அது பயன்படுத்தப்பட முடியும். பெயரளவிற்கு சோசலிசத்தை தழுவி அதேநேரத்தில் உறுதியாக முதலாளித்துவ ஒழுங்கிற்கு பாடுபடும் ஒரு வலது மையக் கட்சிக்கு அது மிகச் சிறப்பான குறியீடு ஆகும்; சிந்தனைத் தெளிவை வெறுக்கும் ஒரு கட்சி, உண்மையான புரட்சிகர மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான அரசியல் தெளிவின் செயல்முறையை வெறுக்கும் கட்சி ஆகும்.

ஒரு உண்மையான முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைத்தல், அதாவது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டமைத்தல் என்பது முதலாளித்துவ முகாம், அதன் சந்தர்ப்பவாத பின்பற்றுபவர்கள் ஆகியோரின் முகாமிலிருந்து தொடர்ச்சியான கருத்தியல் மற்றும் அரசியல் சித்திரிப்புக்களின் வழிவகைமூலம் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும். அதற்கு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்ட மார்க்சிச கட்சி தேவைப்படுகிறது. இதுதான் தொழிலாள இயக்கத்தின் முழு வரலாற்றின் மையப் படிப்பினை ஆகும்; குறிப்பாக ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி, மற்றும் நான்காம் அகிலத்தின் அனுபவமாகும்.

ஆனால், LCR அத்தகைய அணுகுமுறைக்கு கடுமையான எதிர்ப்பை கொண்டுள்ளது. Le Parisien இடம் பெசன்ஸநோ புதிய கட்சி "ஒரு உயர்தட்டு புரட்சிகர முன்னணிப் படையின் கட்சியாக" இருக்காது என்று அப்பட்டமாக கூறினார். அதே நேரத்தில் அது ஒரு தேசிய நோக்குநிலையை கொண்டிருக்கும். "புதிய தலைமை, நாட்டின் தோற்றம், வண்ணங்களை கட்டாயம் ஒத்திருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

LCR இன் தேசியத் தலைமை வெளியிட்டுள்ள முறையீடும் இதேபோல் கட்சியின் தேசிய நோக்குநிலை பற்றி வலியுறுத்திக் கூறுகிறது. "ஒழுங்குற அமைக்கப்பட்டுள்ள, போர்க்குணம் நிறைந்த, தேசிய, ஜனநாயக அரசியல் கட்டமைப்பிற்குள்ளே ஐக்கியப்படுவதற்கு விரும்பும் அனைவரும்" வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ட்ரொட்ஸ்கிசத்திற்கு விரோதப் போக்கு

புதிய கட்சியின் உண்மையான விரோதி முதலாளித்துவம் அல்ல, புரட்சிகர மார்க்சிசம் ஆகும். முதலாளித்துவ அரசியல் வண்ணமாலைக்குள் இருக்கும் அனைத்து சக்திகளும் புதிய கட்சியில் வரவேற்கப்படும் அதேவேளை, இடதில் இருக்கும் அனைத்துப் பிரிவுகளையும் அது அயராது, "குறுங்குழு வாதிகள்" எனக் கண்டித்து அது எதிர்க்கும். அதன் முக்கியமான இலக்கு உண்மையான ட்ரொட்ஸ்கிசவாதிகளை தனிமைப்படுத்துவது ஆகும்.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் அத்தகைய மையவாத அமைப்புடன் கணிசமான அனுபவத்தை கொண்டுள்ளது. 1930 களில் துல்லியமாக மையவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நான்காம் அகிலம் அபிவிருத்தி அடைந்தது.

அதே நேரத்தில், ஏராளமான தொழிலாளர்கள், 1933ல் ஹிட்லரிடம் சண்டையிடாமல் சரண் அடைந்த; மற்றும் ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தின் பேரழிவு விளைவுகளுக்கு பொறுப்பாயிருந்த ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அமைப்புக்களில் இருந்து பிரமைகளை விடுத்து திரும்பினர். ஜேர்மனியில் SAP (Socialist Workers Party), ஸ்பெயினில் (POUM - Party of Workers' Unity), France TM Marceau Pivert தலைமையில் PSOP (Socialist Workers and Peasants Party) ஆகியவை விரைவில் தங்கள் எண்ணிக்கையையும் செல்வாக்கையும் அதிகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை திசை திருப்ப முடிந்தது.

1936 இலையுதிர்காலத்தில் ஸ்பெயினில் POUM, புரட்சிகர இயக்கத்தின் உச்சக் கட்டத்தின்போது முதலாளித்துவ கட்டலோனிய மக்கள் முன்னணி அரசாங்கத்தில் நுழைய முடிந்தது; அதையொட்டி பிராங்கோவின் வெற்றிக்கும் ஸ்பெயினின் பாட்டாளி வர்க்கத்தின் தோல்விக்கும் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டம் இக்குழுக்களை சமூக ஜனநாயகம் அல்லது கொமின்டேர்னின் "இடது தொங்குசதைகள்" என்றும் "இவை அரசியல் நிலைபற்றி தலைகால் புரியாதவை என்றும் அதில் இருந்து புரட்சிகர முடிவுகளை பெறத் தெரியாதவை" என்றும் குறிப்பிட்டது.

LCR இப்பொழுது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து தம்மை ஒதுக்கி வைத்துக்கொள்ள வெளிப்படையாக முற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலில், LCR ட்ரொட்ஸ்கிசத்திற்கு பேச்சளவில் ஆதரவு கொடுப்பது கூட வரவிருக்கும் தன்னுடைய கட்சியின் சந்தர்ப்பவாதப் போக்கிற்கு பெரும் தடையாக இருக்கும் என்று கருதுகிறது.

இரண்டாவதாக, பெருகிய முறையில் தீவிரப்போக்கை கொண்டுள்ள புரட்சிகர முன்னோக்கை எதிர்நோக்கும் ஒரு புதிய தலைமுறையானது, கடந்த நூற்றாண்டு முழுவதும் புரட்சிகரத் தொழிலாளர்கள் இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களில் இருந்து விளைந்த அனைத்து படிப்பினைகளின் செறிந்த வெளிப்பாடான அம்மரபுடன் தொடர்பு கொள்ள வருவதை மிக உறுதியாய் எதிர்க்கின்ற காரணத்தால், இது ட்ரொட்ஸ்கிச மரபில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஆர்வத்தைக் கொண்டுள்ளது.

இது தொடர்பானதில் LCR மிகவும் நனவைக் கொண்டுள்ளது. Le Parisien க்குக் கொடுத்த பேட்டியில், பெசன்ஸநோ வெளிப்படையாக, "ஒரு புதிய போர்க்குண தலைமுறையின்" வெளிப்பாடு பற்றி, "எடுத்துக்காட்டாக, புறநகரங்களில் இருந்து வந்துள்ளது, மற்றும் அது கடந்த கால அரசியல் அனுபவங்களினால் பாதிக்கப்படாதிருக்கிறது" என்று கூறியுள்ளார்; மேலும் பெசன்ஸநோவின் விருப்பப்படி, அது அந்த அனுபவங்கள் பற்றிய புரிதலால் கட்டாயம் "பாதிக்கப்படாமலேயே" இருக்க வேண்டும்.

LCR இன் அரசியல் இருப்புநிலைக் குறிப்பு

LCR ட்ரொட்ஸ்கிசத்திற்கு காட்டியுள்ள விரோதப் போக்கு ஒன்றும் புதிதானதல்ல. அறிக்கைகள் வேறுவிதமாக இருந்தாலும், LCR ஒருபொழுதும் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருந்ததில்லை.

LCR உறுப்பாக இணைந்துள்ள சர்வதேச அமைப்பான, ஐக்கிய செயலகம் (United Secretariat) என்பது முன்பு மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் வழிநடத்தப்பட்டு, 1953ல் நான்காம் அகிலத்துடன் உடைத்துக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் என்ற கொள்கைகளை, ஸ்ராலினிச மற்றும் தேசிய இயக்கங்களை-- மாவோ முதல், அல்ஜீரிய FLN, Fidel Castro, Che Guevera மற்றும் நிக்கரகுவாவின் சான்டினிஸ்டாக்கள், பின்னர் மிகையில் கோர்பச்சேவ் வரை-- இவற்றை சந்தர்ப்பவாத வகையில் ஏற்றுக் கொள்ளலுக்கு ஆதரவாக, தூக்கி எறிந்தது. ஐக்கிய செயலகம்தான் சர்வதேச தொழிலாள வர்க்கம் பேரழிவு தரக்கூடிய தோல்விகளை கண்டதற்கான அரசியல் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

LCR, 1960களில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையினால் வெளியேற்றப்பட்ட ஒரு ஸ்ராலினிச மாணவர் அமைப்பில் இருந்து தோன்றி, ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சுப் பிரிவுடன் இணைந்தது. அல்ஜீரிய FLN (National Liberation Front) இன் தேசிய மரபுகளினால் அது பெரும் செல்வாக்கு செலுத்தப்பட்டது, ட்ரொட்ஸ்கிசத்தை விட அதுவே தீவிரமாக ஊக்கப்படுத்தப்பட்டது.

இப்பொழுது பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல், வணிக, செய்தி ஊடகப் பிரிவுகளில் முக்கிய பங்கு ஆற்றும் பல கணக்கிலடங்கா நபர்கள் இந்த அமைப்பில் இருந்தே வந்தவர்கள் ஆவர். LCR ன் நீண்ட நாள் தலைவரான அலன் கிறிவினுடைய செல்லப்பிள்ளையான ஒலிவியே பெசன்ஸநோ தன்னுடைய பங்கிற்கு, தான் ஒருபோதும் ஒரு ட்ரொட்ஸ்கிச வாதியாக இருந்ததில்லை என்று பீற்றிக் கொள்ளுவதுடன் ட்ரொட்ஸ்கிக்கு கொடுக்கும் மதிப்பை அவர் சே குவாராவிற்கும் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

1968ம் ஆண்டு பொது வேலை நிறுத்தம் மற்றும் மாணவர் எழுச்சியின்போது, LCR மாணவர்களை புதிய, புரட்சிகர முன்னணிப்படை என்று கூறி அவர்களை தொழிலாள வர்க்கத்தில் இருந்து தனிமைப்படுத்த உதவியது; இதையொட்டி தொழிலாள வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியினாலும் ஸ்ராலினிச ஆதிக்கம் நிறைந்திருந்த CGT தொழிற்சங்கத்தினாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது. இதையடுத்த ஆண்டுகளில் கட்சி, உத்தியோகபூர்வ "இடதிற்கு" ஒரு மூடிமறைப்பாக செயல்பட்டது; அதாவது பிரான்சுவா மித்திரோனால் 1970களின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட சோசலிஸ்ட், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான கூட்டு, பின்னர் பிரான்சில் அடுத்த மூன்றரை தசாப்த காலத்திற்கு முதலாளித்துவ ஒழுங்கின் முக்கிய முண்டுகோலாக இருந்தது.

உத்தியோகபூர்வ முதலாளித்துவ "இடதிற்கு" மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் ஒரு இடது மறைப்பை வழங்கி கட்சியால் ஆற்றப்பட்ட பாத்திரத்தை நினைவிற்கொண்டு, "Gauche de la gauche", அதாவது "இடதிற்கும் இடது" என்று பொருத்தமான பெயரில் LCR தன்னை அடிக்கடி விவரித்துக் கொண்டது.

இக்கட்சியின் பாத்திரம், ஒரு புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய முக்கியத்துவம் கொண்டது; உத்தியோகபூர்வ இடது கட்சிகளிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகள் விலகத் தொடங்கி, பெரும் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்பு அலைகள் ஆகியவற்றால் நாடு முழுவதும் அதிர்வடைந்தபோது இது ஏற்பட்டது. 2002ல் ஐந்து ஆண்டுகள் லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான "இடது" அரசாங்கத்தின் கசப்பான அனுபவங்களுக்கு பின்னர், மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வாக்குகளை "தீவிர இடது" என்று அழைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு போட்டனர்; இதில் பெசன்ஸநோவிற்கு போடப்பட்ட 1.2 மில்லியன் வாக்குகளும் உள்ளடங்கும். இந்த ஆண்டு வசந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலில், பெசன்ஸநோ மீண்டும் 1.5 மில்லியன் வாக்குகளை சேகரித்திருந்தார்.

ஒரு அரசியல் மாற்றீட்டை விரும்பிய வாக்காளர்களின் ஆதரவிற்கு LCR விடையிறுத்த விதம் அவர்களை உத்தியோகபூர்வ முதலாளித்துவ கட்சிகளின் பிடிக்குள் தள்ளிவிட்டதுதான். 2002ல், LCR தன்னுடைய வாக்காளர்களை கோலிச வேட்பாளரான ஜாக் சிராக்கிற்கு, ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் வாக்களிக்குமாறு கோரியது; இந்த ஆண்டு சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செகோலென் ரோயலுக்கு வாக்களிக்குமாறு பரிந்துரைத்தது.

பல ஆண்டுகளாக LCR, கம்யூனிஸ்ட் கட்சி, "இடது" சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் பல பெயரளவு இடது அமைப்புக்களை சோசலிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வட்டத்திற்குள் ஒரு புதிய குழுவாக கொண்டுவரும் இலக்கை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. ஜனவரி 2006ல் கூட, LCR இன் 16வது பேரவை மாநாடு அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு "வேண்டாம்" வாக்கு அளித்தவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கு அழைப்பு விடுத்தது. இத்தகைய முன்முயற்சிக்கு முன்மாதிரியாக இருந்தவை இத்தாலியில் உள்ள Rifondazione Comunista, மற்றும் பிரேசிலில் இருக்கும் லூலாவின் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை ஆகும். அவ்விரு நாடுகளிலும், ஐக்கிய செயலகத்தின் பிரிவுகள் இக்கட்சிகளில் சேர்ந்திருந்தன; ஐக்கிய செயலகத்தின் பிரேசிலில் பிரிவின் உறுப்பினர் ஒருவர் லூலாவின் மந்திரிசபையிலும் இடம் பெற்றார்.

இக்காலக்கட்டத்தில் LCR, முதலாளித்துவ ஒழுங்கிற்கு ஒரு முக்கியமான "இடது" தூணாக பிரான்சில் வளர்ச்சியுற்றது. வேலைநிறுத்த இயக்கங்களை தொழிற்சங்க அதிகாரத்துவம் நாசப்படுத்தியபொழுது பிந்தையதை பாதுகாத்தது, மற்றும் பழைய சீர்திருத்தவாத அமைப்புக்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வெறுப்படைந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் புதிய மற்றும் சுயாதீன அரசியல் நோக்குநிலையை எடுப்பதிலிருந்து தடுக்கும் வகையில் முறையாக செயல்பட்டது. பத்து ஆண்டுகள் தொடர்ந்த சமூக அரசியல் போராட்டத்திற்கு பின்னர், நிக்கோலா சார்க்கோசி போன்ற ஒரு வலதுசாரி, உத்தியோகபூர்வ இடதின் திவால்தன்மையையும், உண்மையான சோசலிச மாற்றீடு இல்லாத தன்மையையும் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்திற்கு வரமுடிந்ததற்கு LCR தான் நேரடிப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

மேலும் கூடுதலாக வலதிற்கு மாற்றம்

சார்க்கோசியின் தேர்வானது LCR கொள்கைகள்மீது பேரழிவு தரக்கூடிய அரசியல் தீர்ப்பை கொடுத்தது. 2006ல் முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் நடந்தபோது, LCR தெருக்களில் இருந்து வரும் அழுத்தம் கோலிச வலதுசாரிப் பிரிவை தற்காப்பிற்கு இட்டுச் சென்று சோசலிஸ்ட் கட்சியை மக்கள் இயக்கத்தின் நலன்களுக்கு ஆதரவளிக்கச் செய்யும் என்று அறிவித்தது. மாறாக, சோசலிஸ்ட் கட்சி, கீழிருந்து வந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் இன்னும் வலதிற்கு திரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி, LCR ஆதரவு கொடுத்திருந்த மற்ற அமைப்புக்கள், தனிநபர்களுடன் சேர்ந்து ஒரு புதிய "இடது" இயக்கம் ஏற்படுவதற்கு ஒரு அடிப்படையாக, சோசலிஸ்ட் கட்சியுடன் இன்னும் மிக நெருக்கமாகப் பிடித்துக் கொள்கின்றன.

ஐக்கிய செயலகத்தின் கொள்கையும் இதேபோல் பிரேசில், இத்தாலியில் சரிவுற்றது. லூலாவின் அரசாங்கம், சர்வதேச நிதிய வட்டங்களில் ஒரு முன்மாதிரி போல் கருதப்படுகிறது; Rifondazione Comunista என்னும் பிரோடியின் அரசாங்கத்தில் பங்கு கொண்டுள்ள கட்சி அரசாங்கத்தின் இராணுவவாதம் மற்றும் ஓய்வூதியத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு ஆதரவை கொடுக்கிறது. ஐக்கிய செயலகத்தின் சர்வதேச இதழான International Viewpoint, "Party of Communist Refoundation, ரோமனோ பிரோடியின் தலைமையில் இயங்கும் மைய இடது கூட்டணியில் கொண்டுள்ள பங்கின் இருப்புநிலைக் குறிப்பு பேரழிவை தருவதாகத்தான் உள்ளது" என்று ஒப்புக்கொள்ளுமாறு நிர்பந்தத்திற்கு ஆளானது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய தட்டுக்கள் தீவிரமயப்படுவது பழைய அதிகாரத்துவக் கருவிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியேதான் பெரும்பாலும் நடக்கிறது. சோசலிஸ்ட் கட்சியை சுற்றி அலைந்து கொண்டிருக்கும் செல்வாக்கிழந்த அமைப்புக்களுடன் ஒரு கூட்டிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்தால், தான் அமைதிக்குலைவிற்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று LCR அஞ்சுகிறது. இதுதான் ஒரு புதிய அமைப்பை இது நிறுவுவதற்குக் காரணமாகும்.

"ஒரு புதிய தலைமுறையை தளமாகக் கொள்ள வேண்டும் என்ற, ஒரு புதிய அத்தியாயத்தை திறக்க வேண்டிய கட்டத்தை அடைந்து விட்டோம்." என்று LCR தலைவர் அலன் கிறிவின் Liberation இடம் கூறினார். "பழைய தோழர்கள் அனைவரையும் நிராகரிக்கும் பிரச்சினை அல்ல இது; ஆனால், கட்டமைப்பு, முன்னாள் LCR கள், முன்னாள் CP க்கள், முன்னாள் PSU க்கள் ஆகியோர் மூலம் நடைபெறாது."

இதே நாளேடு பெசன்ஸநோவை மேற்கோளிடுகிறது: "மேலிருந்து விஷயங்கள் நகராமல் தடுக்கப்பட்டுவிட்டன; இப்பொழுது நாங்கள் காரியாளர்கள் மட்டத்தில் இருந்து செயல்பட முயல்கிறோம். Buffet, Laguiller and Bové (கம்யூனிஸ்ட் கட்சி, Lutte Ouvrière மற்றும் பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றின் தலைவர்கள்) ஆகியோர் ஒரு மேசையை சுற்றி நின்று பேசமாட்டார்கள்; மாறாக பெயர்கள் அற்ற குடியிருப்புத் தொகுதிகள் உள்ளூர் வட்டங்கள் ஆகியவற்றில்தான் பேசுவர்."

ஒரு புதிய கட்சிக்கான முன்முயற்சியை எடுக்கையில், LCR மறைமுகமாக தொழிலாள வர்க்கம் இடதிற்கு குறிப்பிடத்தக்க வகையில் சென்றுள்ளது என்பதை உணர்ந்து, தானும் அதற்கு ஏற்ப இன்னும் வலதிற்கு செல்கிறது. தன்னுடைய பங்கை இனி பழைய அமைப்புக்கள் காட்டிக் கொடுத்தலை மறைத்தல், அவற்றிற்கு ஆதரவு கொடுத்தல் என்பதோடு நிறுத்திக் கொள்ளமால், ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் பங்குகூட பெறும் சாத்தியம் உள்ளடங்கலான ஒரு பதிலீடாக முதலாளித்துவத்திற்கு தன்னுடைய சேவைகளை வழங்குவதற்கு இப்பொழுது முன்வருகிறது.

Le Parisien க்கு கொடுத்த பேட்டியொன்றில், பெசன்ஸநோ இதைத் தெளிவாக்கியுள்ளார். "புதிய அமைப்பு கூட்டணிகளை, உதாரணமாக சோசலிஸ்ட் கட்சியுடன் நிறுவ முயலுமா" என கேட்கப்பட்டதற்கு, பெசன்ஸநோ விடையிறுத்தார்; "நாம் தெளிவாக இருப்போம்; அதிகாரத்தை கண்டு நாங்கள் அஞ்சவில்லை."

புதிய அமைப்பு முயற்சி LCR வரலாற்றில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது என்று பெசன்ஸநோ கூறுகிறார். உண்மையில், இந்த அமைப்பு தான் வந்த பாதைகளை மூடத்தான் முயல்கிறது. "அரசியில் அளவில் கன்னித்தன்மை" என்று புதிய திட்டத்திற்கு பெசன்ஸநோ பெயரிட்டிருப்பது வினாதமானது ஆகும். அத்தகைய விவரிப்பு கடந்த நான்கு தசாப்தங்களாக தன்னை விலைமாது போல் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு கொடுத்திருந்த பங்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தை பல முறையும் முதுகில் குத்திய அமைப்பிற்கு சிறிதும் பொருந்தாது.

LCR ஒரு புதிய பொறியை தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படுத்த இருக்கும் முயற்சியை உலக சோசலிச வலைத்தளம் உறுதியாக எதிர்க்கும். LCR இன் சூழ்ச்சிக்கையாளல்களை அம்பலப்படுத்தி, எமது வாசகர்களுக்கு நான்காம் அகிலத்தின் செழிப்பான அரசியல் மரபியம் பற்றி எடுத்துரைப்பதுடன், உண்மையான ட்ரொட்ஸ்கிச கட்சி பிரான்சில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஒரு பகுதியாக கட்டியமைக்கப்படுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்தும்.