:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan military launches northern
offensive against LTTE
இலங்கை இராணுவம் புலிகளுக்கு எதிராக வடக்கில் தாக்குதல்களை முன்னெடுக்கின்றது
By Sarath Kumara
12 September 2007
Back to screen
version
இலங்கை இராணுவம் வடமேற்கு கடற்கரையை அன்டிய நிலபப்பரப்பைக் கைப்பற்றுவதற்காக
செப்டெம்பர் 1 முன்னெடுத்த புதிய இராணுவ நடவடிக்கை, தீவில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான
உள்நாட்டு யுத்தம் மேலும் உக்கிரமடைவதை குறிக்கின்றது. 2006 ஜூலையில் ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்த
தாக்குதல்களில் கிழக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, இராணுவம் புலிகளின் எஞ்சியுள்ள கோட்டையான
வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இராணுவம் ஏற்கனவே வவுனியா-மன்னார் வீதியில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டிலான
வன்னிக்குள் ஆராய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. உதாரணமாக ஜூன் 2 அன்று, ஓமந்தை மற்றும் பம்பைமடுவுக்கு
அருகில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிராந்தியத்தைக் கைப்பற்ற இரு இராணுவப் பிரிவுகள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை
முன்னெடுத்த போதிலும் பின்வாங்க நேரிட்டது. புலிகளின் எதிர்த் தாக்குதலில் குறைந்தபட்சம் 30 சிப்பாய்கள் கொல்லப்பட்டதோடு
82 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் நான்கு ஆட்டிலறி நிலைகள் தகர்க்கப்பட்டதுடன் இராணுவ
ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
அண்மைய தாக்குதலில், வட மாகாணத்தில் மன்னாருக்கு தெற்கே உள்ள சிலாவத்துறையையும்,
அதே போல் அரிப்பு, கொண்டச்சி மற்றும் முல்லிக்குளம் உட்பட அருகில் உள்ள பல மீன்பிடி கிராமங்களையும் இராணுவம்
கைப்பற்றிக்கொண்டது. இந்தப் பிரதேசம் வடக்கில் வன்னியில் உள்ள புலிகளின் பிரதான தளங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள
நிலையில் இராணுவம் சிறிய எதிர்த்தாக்குதல்களையே சந்தித்தது. இங்கு சில நூறு முஸ்லிம்களுடன் பெரும்பாலான தமிழர்கள்
வசிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட ஆயுதங்களை இறக்கி
விநியோகிக்கும் பிரதான தளத்தை கைப்பற்றிக்கொண்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தற்பெருமையுடன்
கூறிக்கொண்டார். இராணுவம் புலிகளுக்கு "பெரும் உயிரிழப்புக்களை" ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியபோதிலும்,
எண்ணிக்கைகளை வெளியிடவில்லை. எப்போதும் போலவே புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களால் சூழப்பட்ட
மற்றும் தக்கவைத்துக்கொள்ள கடினமான கிராமங்களை கைவிட்டுவிட்டனர்.
இந்த இராணுவ நடவடிக்கைகள் "தற்பாதுகாப்புக்கானது" மற்றும் "மனிதாபிமானது" என்ற
சாக்குப் போக்கை அரசாங்கமும் இராணுவமும் தூக்கிப் பிடிக்கின்ற போதிலும், 2002 யுத்த நிறுத்தத்தை மீறி புலிகளை
இராணுவ ரீதியில் அழிக்கும் அறிவிக்கப்படாத குறிக்கோள்கள் வெளிப்படையாக மூடி மறைக்கப்படுகின்றன. முந்தைய
தாக்குதல்களைப் போலவே, இராணுவம் தொடர்ச்சியான ஆட்டிலறி தாக்குதல்களுடனும் மற்றும் பல்குழல் ஏவுகணை
ஏவிகளை பயன்படுத்துவதன் மூலமுமே இந்த இராணுவ நடவடிக்கையையும் முன்னெடுத்தது. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான
மக்கள் இப்போது முருங்கன் மற்றும் நானாட்டானில் இரு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மோதல்களால் இடம்பெயரும் அகதிகளை ஏற்றிவந்த ஒரு வான் கிளேமோர் குண்டு
தாக்குதலுக்கு உள்ளானதில் ஒன்பது பேர் அதே இடத்தில் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் பின்னர் உயிரிழந்தனர்.
பிரதேசத்தில் பயங்கரத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்காக இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை இந்தக் குண்டை
வைத்ததாக புலிகள் குற்றஞ்சாட்டினர். இராணுவம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு குற்றத்தை புலிகள் மீது
சுமத்தியது. ஆனால் உள்ளூர் தமிழ் மக்களை ஏன் புலிகள் கொல்ல வேண்டும் என்பதற்கு விளக்கமளிக்கவில்லை.
இந்த கரையோரப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதில் உள்ள நீண்டகால குறிக்கோளை
கடற்படை பேச்சாளர் டி.கே.பி. திசாநாயக வெளிப்படுத்தியுள்ளார். இராணுவ இருப்பை பலப்படுத்தவும் மற்றும்
அரசாங்கத்தின் திட்டங்களை பாதுகாக்கவும் கடற்படை இரு தளங்களை அமைக்கும் என அவர் அறிவித்தார். பிரதேசத்தின்
பொருளாதார சாத்தியங்களை சுட்டிக்காட்டிய அவர்: "முல்லிக்குளம் மற்றும் சிலாவத்துறையில் கடற்படை முகாம்களை
ஸ்தாபித்தால் அவை மன்னார் பிராந்திய வளைகுடாவில் எண்ணெய் ஆய்வுக்கு மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்க
உதவியாக இருக்கும்" என தெரிவித்தார்.
செப்டெம்பர் 3 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பேச்சாளர் கேஹெலியே
ரம்புக்வெல்ல, அரசாங்கம் "பெரும் இராணுவத் தாக்குதலுக்கு" தயாராகிக்கொண்டிருக்கின்றது என்ற கூற்றை மூடி
மறைக்க முயற்சித்தார். அதே சமயம் அவர்: "எங்களது இலக்கு புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுவிப்பதே.
நாங்கள் இதை செய்யும் போது இந்த நடவடிக்கை தாக்குதலாகவோ அல்லது வேறு ஏதாவதாகவோ
பெயரிடப்பட்டாலும், அது சமாதானப் பேச்சுக்களுக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதாக அர்த்தப்படாது," என
பிரகடனம் செய்தார்.
அரசாங்க மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வரையறுக்கும் 2002 யுத்த
நிறுத்தத்தின் அடிப்படைகளை அரசாங்கம் தொடர்ந்தும் அங்கீகரிக்கவில்லை என்பதை ரம்புக்வெல்ல வெளிப்படையாக
தெளிவுபடுத்தினார். "யுத்த நிறுத்த உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்டிருந்தாலும் புலிகளுக்கு சொந்தமான பிரதேசங்கள்
கிடையாது. அனைத்து பிரதேசங்களும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சொந்தமானது என்ற வகையில் தற்காலிக
நடவடிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ளன," என அவர் தெரிவித்தார்.
"தமிழ் மக்களை விடுவிக்கும்" அவரது பேச்சு மோசடியானதாகும். புலிகள் தமிழ் மக்கள்
மீதான தமது கட்டுப்பாட்டை பராமரிக்க ஜனநாயக விரோத வழிமுறைகளை நிச்சயமாக நாடும் அதே வேளை,
இராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள மேலாதிக்கவாதத்தில் வேரூன்றியுள்ளதோடு முழு தமிழ் சிறுபான்மையினரையும் எதிரிகளாக
நடத்துகின்றது. கிழக்கில் "விடுவிக்கப்பட்ட" பிரதேசங்களில், புதிய பொருளாதார திட்டங்களை பாதுகாக்கவும் மற்றும்
முதலீட்டாளர்களை ஈர்க்கவும் உயர் பாதுகாப்பு வலயங்களால் முழுமைபடுத்தப்பட்ட இராணுவ ஆட்சிக்கு சமமான
ஒன்றையே பாதுகாப்புப் படைகள் அமுல்படுத்தியுள்ளன.
வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கில் தாக்குதல்களை முன்னெடுக்கும்
திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை என ஆகஸ்ட் 30 மலேசியாவில் பிரகடனம் செய்தார். "புலிகளை மீண்டும்
பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதே எங்களது தேவை" என அவர் ராய்ட்டருக்கு வலியுறுத்தினார். யுத்தத்திற்கு
அரசியல் தீர்வு பிரேரணை ஒன்றை அரசியலமைப்புக்கான அனைத்து கட்சிக் குழுவுக்கு முன்வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது
என அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து இரட்டைப் பேச்சுக்களும் ஒரு நிச்சயமான அரசியல் காரணத்துக்கே சேவை
செய்கின்றன. அரசாங்கம் புலிகளை இராணுவ ரீதியில் அழிக்க எண்ணுகின்ற அதே வேளை, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
சர்வதேச சமாதான முன்னெடுப்புகளுக்கு கட்டுப்பட்டவர் என்ற புனைகதையை பேணிவருகின்றார். தனது புதிய ஆக்கிரமிப்பு
யுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளையும் கண்களை மூடிக்கொண்டிருக்கச் செய்ய இந்த கிழிந்துபோன
சூழ்ச்சி பொருத்தமானதாகும்.
அரசாங்கம் உள்நாட்டில் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்புக்கும் முகங்கொடுக்கின்றது. மாற்றுக்
கொள்கை நிலையத்தால் ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, 53 வீதமான சிங்களவர்கள் உட்பட அனைத்து
சமூகத்தையும் சேர்ந்த 70 வீதமானவர்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு "சமாதான பேச்சுக்களையே" விரும்புகின்றனர்.
இராணுவ செலவில் பெருமளவிலான அதிகரிப்பானது சமூக செலவு மற்றும் மானிய வெட்டு மற்றும் விலை அதிகரிப்புக்கு
வழிவகுத்துள்ளதோடு பரந்த அதிருப்திக்கும் எண்ணெய் வார்க்கின்றது.
பொருளாதார தாக்கத்தில் அக்கறை செலுத்தாமல் யுத்தம் தொடரும் என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 26 இராணுவ பயிற்சி முடிவு ஒன்றின் போது உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய இராஜபக்ஷ:
"அரசாங்கம் கிழக்கை விடுவித்தது போலவே, புலிகளின் பிடியில் இருந்து வன்னியில் விடுவிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் பிரதேசங்களையும்
விடுவிக்க தீர்மானித்துள்ளது... தொடர்ந்தும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின் விளைவாக இராணுவ நடவடிக்கைகளுக்கு
தடை ஏற்படாது" எனத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 15 லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்சுக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இதை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தினார். "நாடு பாதியாகி முடிவடைவதை
விட நாடு வங்குரோத்தாகி முடிவடைவது சிறந்தது. எதிரியை தாக்கி நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் நீங்கள் சில
அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும்," எனத் தெரிவித்தார். "சுவரின் மேல் தள்ளப்பட்டு ஓடுவதற்கு இடமில்லாமல்
போகும்" ஆதலால் வடக்கில் புலிகள் போரிட வேண்டும் என அவர் எச்சரித்தார். இராணுவம் மேலும் 20,000
உறுப்பினர்களை சேகரிக்க எதிர்பார்க்கின்றது எனவும் அவர் கூறினார்.
உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமைகள் சுமத்தப்பட உள்ளன. இராஜபக்ஷ அரசாங்கம்
கடந்த ஆண்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்து, 5,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தால் அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளால் இயக்கப்படும் கொலைப் படைகள் மூலம்
நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் போயுள்ளனர்" அல்லது கொல்லப்பட்டுள்ளனர். மோதல்களால் மேலும் 200,000
பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேவையானளவு உணவு, தங்குமிடம் மற்றும் சேவைகள்
இன்றி மிகவும் மோசமான அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டிலான வன்னிப் பிரதேசத்தின்
மீதான முழு அளவு தாக்குதலானது மேலும் மனிதப் பேரழிவுகளை மட்டுமே உருவாக்கும்.
|