World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Key naval witness in disappearance of Sri Lankan SEP member fails to appear in court

சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான வழக்கில் கடற்படையை சேர்ந்த பிரதான சாட்சி நீதிமன்றத்திற்கு வருகைதரவில்லை

By our correspondent
6 September 2007

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பான வழக்கில் தீர்க்கமான ஆதாரங்களை வழங்க வேண்டிய இலங்கை கடற்படை அதிகாரி, ஆகஸ்ட் 24 அன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தருமாறு கட்டளையிட்டும் அவர் வருகைதரவில்லை.

வடக்கில் ஊர்காவற்துறை தீவை வசிப்பிடமாகக் கொண்ட விமலேஸ்வரனும் மதிவதனனும் மார்ச் 22ம் திகதி மாலை காணாமல் போயுள்ளனர். அவர்கள் அயலில் உள்ள தீவான புங்குடுதீவில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணியளவில் இரு தீவுகளையும் இணைக்கும் நீண்ட கடல் பாலத்திற்குள் நுழைந்ததை சாட்சிகள் கண்டுள்ளனர். வடக்கிலுள்ள தீவுகள் பூராவும் இறுக்கமாக நிலைகொண்டுள்ள கடற்படை, கடல் பாலத்தின் இரு முனைகளிலும் சோதனை நிலையங்களை பராமரித்து வருகின்றது. காணாமல் போன இருவரும் அன்று இரவு திருமண வீடொன்றுக்கு செல்வதற்காக சில ஆடைகளை எடுத்துவர சென்றிருந்தனர்.

புங்குடுதீவில் உள்ள கோடைம்பர கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள சோதனை நிலையத்தின் ஊடாக காணாமல் போன இருவரும் மோட்டார் சயிக்கிளில் கடந்து சென்றதாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும், ஊர்காவற்துறையின் வேலனையில் உள்ள கஞ்சதேவ முகாமின் கட்டளை அதிகாரி சில்வா, விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் பற்றி எதுவும் தெரியாது என மறுப்பதோடு தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிப்பாய்கள் மக்களை கைதுசெய்வதில்லை என இந்த ஆண்டு முற்பகுதியில் சோ.ச.க. க்கு தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 3 நடந்த முன்னைய விசாரணையின் போது சாட்சியமளித்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர், கஞ்சதேவ முகாமின் கட்டளை அதிகாரி கடல் பாலத்தின் ஊர்காவற்துறை தொங்கலில் வீதித்தடை ஒன்றும் இல்லை என தனது பொலிஸ் நிலைய அதிகாரிக்கு அறிவித்துள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்தார். ஆனால், இந்தக் கூற்று கண்கண்ட சாட்சிகளின் கூற்றுக்களுடன் முரண்படுகின்றது. விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடுதீவு நோக்கி செல்லும் போது சுமார் மாலை 5.30 மணியளவில் பாலத்தின் வேலனைத் தொங்கலில் அவர்களை கடற்படை உத்தியோகத்தர்கள் நிறுத்திவைத்திருந்ததையும் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களை விசாரிப்பதையும் அந்த சாட்சிகள் நேரில் கண்டுள்ளனர். அங்கு வீதித் தடை இல்லை எனக் கூறுவது, அன்று அங்கு கடமையில் இருந்த சிப்பாய்களின் பெயர்களை மறைப்பதை இலக்காகக் கொண்ட சதியாகும்.

அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதவான் ஆகஸ்ட் 24 அன்று கட்டளை அதிகாரியை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டளையிட்டார். அவர் வருகைதரத் தவறியமை, இந்த காணாமல் போன சம்பவத்தில் அவரும் அவரது சிப்பாய்களும் சம்பந்தப்பட்டுள்ளதோடு இப்போது தடயங்களை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என்ற முடிவுக்கு மட்டுமே வலுசேர்க்கின்றது. கடைசியாக நடந்த விசாரணையில், பொலிசாரோ அல்லது சேவையில் உள்ள சிப்பாயோ சாதாரண பிரஜைகளைப் போல் நீதிமன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் என விளக்கிய நீதவான் அந்த அதிகாரி சமூகமளிக்காவிட்டால் பிடி ஆணை பிறப்பிப்பதாகவும் எச்சரித்தார்.

புங்குடுதீவின் கோடைம்பர முகாமின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகஸ்ட் 24 நடந்த நீதிமன்ற விசாரணைக்கு வருகை தந்ததோடு NPMR 2098 என்ற இலக்கத்திற்குரிய (மதிவதனனுக்கு சொந்தமான) மோட்டார் சைக்கிள் குறிப்பிட்ட தினம் மாலை 6.45 மணியளவில் புங்குடுதீவு சோதனை நிலையத்தைக் கடந்து சென்றுள்ளதாக உறுதிப்படுத்தினார். "வழமையாக நாங்கள் சோதனை நிலையத்தைக் கடந்து செல்லும் வாகனங்களின் இலக்கத்தை மட்டுமே பதிவுசெய்துகொள்வோம். அதில் பயணிப்பவர்களின் பெயர்கள் பதிவுசெய்யப்படமாட்டாது. ஆனால் அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதிப்போம். சந்தேகத்திற்குரியவர்களைக் கண்டுபிடித்தால் நாம் எமது முகாமுக்கு அறிவித்து முகாமில் கடமையில் இருக்கும் பொலிசாரிடம் அவரை ஒப்படைப்போம்," என அவர் தெரிவித்தார்.

 

விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் மனைவிமார்களின் சட்டத்தரணியான எஸ்.இ. ஏகநாதன், அந்த இருவரும் எங்கே போய்க்கொண்டிருந்தார்கள் எனக் கேட்டார். "அவர்கள் வேலனை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள்," என அந்த அதிகாரி தெரிவித்தார். ஊர்காவற்துறை தீவில் உள்ள வேலனை கடற்படை வீதித் தடையில் என்ன நடந்தது என்ற தெளிவான கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. வீதித்தடையில் இருந்த சிப்பாய்கள் குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதன் பேரில் அவர்களின் பெயர்கள் உட்பட எந்தவொரு தகவலையும் வழங்காமல் பொலிசாரும் கடற்படை அதிகாரிகளும் பல மாதங்களாக இழுத்தடிக்கின்றனர்.

செப்டெம்பர் 14ம் திகதியை வழக்கு விசாரணைக்காக உறுதிப்படுத்திய நீதவான், அன்றைய தினம் மன்றுக்கு சமூகமளிக்குமாறு வேலனை கடற்படை முகாமின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு அழைப்பாணை பிறப்பித்தார்.

இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தீவை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியதில் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காணாமல் போயுள்ள அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் விமலேஸ்வரனும் மதிவதனனும் அடங்குவர். பல சம்பவங்களில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அல்லது அவர்களின் மேற்பார்வையில் கொலைப் படைகள் இயங்குவதை பலமான சூழ்நிலை ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போதிலும், இந்த சம்பவங்கள் தொடர்பான தக்க விசாரணைகள் இதுவரையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஊர்காவற்துறை தீவில் நன்கு அறியப்பட்ட இரு சம்பவங்கள்:

* கடந்த ஆண்டு மே 13ம் திகதி மாலை, ஊர்காவற்துறை தீவில் அல்லைப்பிட்டி, வேலனை மற்றும் புளியங்கூடல் ஆகிய இடங்களில் நடந்த மூன்று தனித்தனி தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். கண்கண்ட சாட்சிகள் கடற்படையினரே கொலையாளிகள் என குற்றஞ்சாட்டியதோடு தாக்குதல்காரர்களில் சிலரை அடையாளங் காட்ட முடியும் எனவும் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தனர். கடற்படை சிப்பாய்களின் அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துவதற்கான வழிகளில் கடற்படையும் பொலிசாரும் மீண்டும் மீண்டும் தடங்கல்களை ஏற்படுத்தினர்.

பல மாதங்கள் தாமதித்து, பாதுகாப்பு காரணங்களால் இந்த அடையாள அணிவகுப்பை நாட்டின் ஏனைய பகுதியில், அதாவது கிழக்கில் திருகோணமலை அல்லது அம்பாறையில் நடத்த சட்டமா அதிபரிடம் அனுமதி கோரியிருப்பதாக கடந்த ஏப்பிரலில் பொலிசார் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர். இந்த பிரேரணை சாதாரண பொலிஸ் நடைமுறைகளை மீறுவதாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு பல சாட்சிகள் சிரமத்தை எதிர்கொள்வர். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட்டில் புதிய நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இந்த அடையாள அணிவகுப்பு தொடர்பான கடைசி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை.

* கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20, அல்லைப்பிட்டியில் புனித பிலிப் நேரி தேவாலயத்தின் கத்தோலிக்கப் பாதிரியார் திருச்செல்வன் நிஹால் ஜிம் பிரவுன் மற்றும் அவரது உதவியாளர் வென்செலஸ் வின்சஸ் விமலதாஸும் காணாமல் போயினர். அதற்கு முன்னர் அந்த பாதிரியாருக்கு கடற்படை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருந்தது. இந்த இருவரும் அல்லைப்பிட்டி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தை பலர் நேரில் கண்டுள்ளனர். அவர்கள் இருவரும் கடற்படை சோதனை நிலையத்தைக் கடந்ததும் துப்பாக்கி துளைக்காத கவசங்களை அணிந்திருந்த சிலர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

இந்த இருவரையும் கடற்படை கைதுசெய்யவில்லை என வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரால் உபாலி ரணவீர மறுப்புத் தெரிவித்தார். பாதிரியாரும் அவரது உதவியாளரும் அல்லைப்பிட்டி சோதனை நிலையத்தைக் கடந்து சென்று, பின்னர் உடனடியாக திரும்பி வந்ததோடு யாழ்ப்பாணத்தை நோக்கி சென்றதாக கடற்படை சிப்பாய்கள் தெரிவித்தனர். ஆனால், சோதனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதிவுப் புத்தகங்களை சோதனை செய்ய ஊர்காவற்துறை பொலிசாரை அனுமதிக்க கடற்படை மறுத்துவிட்டது.

விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கண்டுபிடித்து விடுவிக்க முழு விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கண்டனக் கடிதங்களை எழுதுமாறு உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடமும் ஆதரவாளர்களிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse, Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துக்கும் கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270, Colombo,
Sri Lanka
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தை பயன்படுத்துங்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved