World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Join the International Students for Social Equality!
Statement by the International Students for Social Equality

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பில் இணையுங்கள்!

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் குழுவின் அறிக்கை

30 August 2007

Back to screen version

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (International Students for Social Equality-ISSE) - சமத்துவமின்மைக்கும், யுத்தத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை கையில் எடுக்க உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பில் இணையுங்கள்! தொழிலாளர்கள் மற்றும் மாணவ இளைஞர்களுக்கான ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டி எழுப்புங்கள்!

உலக அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அசாதாரண அளவில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள மாணவர்கள் இம்மாதம் தங்கள் பள்ளிகளுக்கு திரும்புகின்றனர்.

அமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிந்து ஓர் ஆண்டுக்கு பின்னரும், ஈராக்கில் நடந்து வரும் யுத்தம் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தமது ஆர்வத்தை அமெரிக்க மக்கள் அந்த தேர்தலில் மிக தெளிவாக வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆக்கிரமிப்பின் விளைவாக ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு இருப்பதுடன், இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். மேலும், சுமார் 4,000-த்திற்கும் மேலான அமெரிக்க படையினர்கள் மற்றும் பிற கூட்டு படையினர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் - இவையனைத்திற்கும் காரணம், வளமிக்க, மற்றும் மூலோபாய ரீதியாக சிக்கலான பகுதியாக விளங்கும் மத்திய கிழக்கை, அமெரிக்க ஆளும் மேற்தட்டு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானம் செய்திருப்பது தான்.

இதற்கிடையில், புதிய தலையீடுகளுக்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஈராக்கிய தாக்குதலுக்கு கூறப்பட்ட சிடுமூஞ்சித்தனமான பொய்கள் நிரம்பிய அதே பாணியும் மற்றும் ஆத்திரமூட்டல்களும், தற்போது ஈரான் மீதும் கூறப்பட்டு வருகின்றன. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையானது, அமெரிக்கா மற்றும் ரஷ்யா, சீனா அல்லது பிற ஐரோப்பிய சக்திகளுக்கிடையே மிகச் சுலபமாக மோதலை தூண்டிவிடும். இது கற்பனைக்கு எட்டாத ஒரு சர்வதேச பேரழிவாக அமையும். புஷ்ஷின் வார்த்தைகளின்படி, "இருப்பத்தியோராம் நூற்றாண்டின் போர்களில்" ஈராக் தான் முதல் போர் என்பதாக அமைந்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு என கூறப்படுபவை அனைத்தும், பயனற்ற வார்த்தை விளையாட்டாக தங்களை காட்டிக் கொள்வதற்கும் மேலாக ஒன்றும் இல்லை. காங்கரசில் அதிகாரத்தைக் கூட்ட ஜனநாயகக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த, 2006-ம் ஆண்டு தேர்தலின் உண்மையான விளைவு, போர் தொடர்கையிலேயே பொதுமக்களின் கருத்துக்களை ஆற்றல் இழக்கச்செய்வதற்கு போதிய காலத்தை பெறுவதாகத்தான் இருந்திருக்கிறது. ஜனநாயக கட்சியினர் ஈராக் யுத்தத்திற்கு தேவையான நிதி அளிக்க திரும்பவும் வாக்களித்துள்ளனர் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கும் அவர்கள் ஆதரவளிப்பர்.

இராணுவ வரைவுதிட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இறுதியில், வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இராணுவ படையணிகளை முண்டு கொடுத்து நிறுத்தவும் பீரங்கி தீனியாகவும் அமெரிக்க இளைஞர்களை நிர்பந்தப்படுத்தி பயன்படுத்த- ஒரு வழியை கண்டுபிடிக்காத வரை அமெரிக்க ஆளும் மேற்தட்டின் ஏகாதிபத்திய அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ள முடியாது.

வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை மிக ஆழமாக பாதித்து வருகிறது. அதேசமயம் வங்கிகளையும், பெரும் பணக்காரர்களையும் மீட்டெடுக்க அரசாங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் பொருளாதார வீழ்ச்சியால் முதன்மையாக தாக்கப்பட்டு வருபவர்களுக்காக எதுவும் செய்யப்படுவதில்லை. குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து வருகின்றன; உயர்ந்து வரும் அடைமான தொகைகளால் கடன் தீர்க்க வழியற்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்; மாணவர்கள் உயர்ந்து வரும் கல்வி கட்டணங்களை செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். வருவாய் குறைந்து வருவதாகவும், சமத்துவமின்மை அதிகரித்து வருவதாகவும் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மில்லியன் கணக்கான மக்களை பணியில் இருந்து தூக்கி எறியக் கூடிய சர்வதேச கடன் நெருக்கடி மற்றும் வர்த்தக நெருக்கடியின் அபாயம் மிகவும் யதார்த்தமாகிவருகிறது.

சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக விரோதப்போக்கை அதிகரித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளையே அமெரிக்க அரசாங்கம் அழித்துவிட்டிருக்கிறது. முன்னென்றுமில்லாத அளவு உளவு திட்டங்களின் விரிவாக்கத்திலும், ஜனாதிபதியின் மாற்ற முடியாத அதிகாரங்களை உறுதிப்படுத்தவும், அரசியல் கருத்துக்களை குற்றகரமானதாக ஆக்குவதற்கு வளர்ந்து வரும் போக்கிலும்- சர்வாதிகாரம் மற்றும் ஒட்டுமொத்த அடக்குமுறைக்கான அடித்தளம் அமெரிக்காவில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச ஐக்கியத்திற்கான சளையாத போராட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு, தன்னை ஆதாரப்படுத்திக் கொள்கிறது. நாங்கள் அனைத்து விதமான தேசியவெறியையும் எதிர்க்கிறோம். இருபதாம் நூற்றாண்டில், போட்டியிடும் தேசிய அரசுகளின் மற்றும் அவற்றின் ஆளும் மேற்தட்டுக்களின் நலன்களை பாதுகாக்க தொடங்கப்பட்ட யுத்தத்தில் நூறு மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதே பாணி தான் தற்போதும் தொடர்கிறது.

எந்த நாட்டின் அரசியல் அமைப்பின், எந்த பிரிவும் யுத்தங்களை முடிவுக்கு கொண்டு வர போவதில்லை. இன்றைய யுத்தங்கள் மற்றும் நாளைய அச்சுறுத்தல்கள் அனைத்துமே மக்களின் சுயாதீனமான தலையீடுகளால் மட்டுமே தவிர்க்கப்பட முடியும்.

பள்ளிகள் திறக்க இருக்கின்ற வேளையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட, சோசலிச சமத்துவ கட்சியின் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பு, அமெரிக்கா மற்றும் உலகின் அனைத்து நாடுகளில் இருக்கும் மாணவர்களும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பில் இணையும்படியும் மற்றும் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதன் கிளையை கட்டியெழுப்பும்படியும் கேட்டுக் கொள்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved