World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP letter to JVP demanding end to threats of violence

இலங்கை சோ.ச.க. வன்முறை அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு கோரி ஜே.வி.பி. க்கு கடிதம்

28 August 2007

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), பேராதனை பல்கலைக் கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (International Students for Social Equality -ISSE) அமைப்புக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தலை நிறுத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) அனுப்பியுள்ள கடிதத்தை இங்கு பிரசுரிக்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்துள்ளது. (பார்க்க "இலங்கை: ஜே.வி.பி. மாணவர் தலைவர் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பின் பல்கலைக்கழக குழுவுக்கு சரீர அச்சுறுத்தல் விடுக்கின்றார்").

திரு. டில்வின் சில்வா,

செயலாளர், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)

ஆகஸ்ட் 7ம் திகதி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உங்களது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை (அ.ப.மா.ஒ) சேர்ந்த மாணவர்களால், சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பினதும் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை அச்சுறுத்தல் தொடர்பாகவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் செனட் கட்டிடத்திற்கு முன்னால் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தியதோடு ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கும் மற்றும் இலங்கையில் புதுப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு யுத்தத்திற்கும் எதிராக மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோதே இந்த சம்பம் நடைபெற்றது. ஐ.எஸ்.எஸ்.இ. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விண்ணப்பித்து எழுத்து மூலமான அனுமதியை பெற்றிருந்தது.

பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு டசினுக்கும் அதிகமான அ.ப.மா.ஒ. உறுப்பினர்கள் அருகில் குழுமியிருந்ததோடு சுமார் ஒன்றரை மணிநேரம் நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தனர். சுமார் மு.ப. 10.30 மணியளவில் அ.ப.மா.ஒ. உறுப்பினர்களான சிந்தக துடுவகே, துஷ்மன்த அபேசிங்க மற்றும் ரங்கன ஜெயக்கொடி உட்பட பல மாணவர் தலைவர்கள் புத்தக தட்டை அணுகி, யாருடைய அனுமதியின் கீழ் அது ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கேட்டனர்.

பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி உள்ளது எனக் கூறியபோது, புத்தகங்களை காட்சிக்கு வைக்கவே ஐ.எஸ்.எஸ்.இ. க்கு அனுமதி உள்ளது, மாணவர்கள் மத்தியில் "பிரச்சாரம்" செய்ய அல்ல என சிந்தக போலியாக கூறினார். அவர் ஐ.எஸ்.எஸ்.இ. மற்றும் சோ.ச.க. உறுப்பினர்களை "அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும்" இல்லையேல் "நிலைமையும் விளைவுகளும் மோசமானதாக இருக்கும்" எனவும் கட்டளையிட்டார். நீங்கள் எங்களை அச்சுறுத்துகிறீர்களா எனக் கேட்டபோது, "ஆம். ஏன் எங்களால் அச்சுறுத்த முடியாதா! நீங்கள் வெளியே போகாவிட்டால் நாங்கள் உங்களை பலாத்காரமாக வெளியேற்றுவோம்," என சிந்தக கத்தினார். ஐ.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்ட அவர், "அவன் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குள் வந்தால் நாங்கள் அவனை அடிப்போம்" என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவற்றில் மிகவும் அக்கறை செலுத்த சோ.ச.க. கடமைப்பட்டுள்ளது. 1989-1990 காலகட்டத்தில் விடுக்கப்பட்ட இதேபோன்ற அச்சுறுத்தல்களை அடுத்து, எங்களுடைய உறுப்பினர்களான தோழர்கள் ஆர்.ஏ. பிடவல, பி.எச். குணபால, கிரேஷன் கீகியனகே ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர் என்பது உங்களுக்கு தெரியும்.

சின்தக துடுவகே, துஷ்மன்த அபேசிங்க மற்றும் ரங்கன ஜெயக்கொடியும் உங்களது அமைப்பின் அதிகாரத்தின் கீழ் செயற்படும் அ.ப.மா.ஒ. உறுப்பினர்களாகவே நாங்கள் கருத வேண்டும். செயலாளர் என்ற முறையில் அவர்களை கட்டுப்படுத்த வேண்டியது உங்களது பொறுப்பாகும். மீண்டும் இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால், அதற்கு அரசியல் ரீதியிலும் மட்டும் சட்ட ரீதியிலும் நீங்களே பொறுப்புச் சொல்ல வேண்டும்.

விஜே டயஸ்

பொதுச் செயலாளர்,

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved