World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

President Bush's history lesson

ஜனாதிபதி புஷ்ஷின் வரலாற்றுப் பாடம்

By Barry Grey
24 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

மிசெளரி கன்சாஸ் நகரத்தில் முன்னாள் வெளிநாட்டு யுத்த படையினரின் தேசிய மாநாட்டில் "முக்கிய வெளியுறவுக் கொள்கை உரை" என்று வெள்ளை மாளிகை கருதிய உரை ஒன்றை புதனன்று ஜனாதிபதி புஷ் நிகழ்ந்தினார்.

ஒரு இராணுவ கூட்டத்தினர் முன், ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் கொடுக்கும் உரையின் வழமையான நோக்கம், ஈராக்கில் ஏற்பட்டுள்ள இராணுவ "விரிவாக்கத்தை" பற்றி காங்கிரசில் அடுத்த மாதம் தளபதி டேவிட் பெட்ரீயஸ் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தூதராக இருக்கும் ரியன் கிரோக்கர் வழங்க இருக்கும் அறிக்கைக்கு முன்குரல் கொடுப்பது ஆகும்.

வழக்கமான வெற்றுப் பேச்சுக்கள், பொய்கள் என்று ஈராக்கில் அமெரிக்கா பெற்றுள்ள பேரழிவை இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம் இவற்றிற்கு எதிராக மனிதகுலத்தை பாதுகாக்கும் "கருத்தியல் போராட்டத்தின்" ''முன்னணி'' என்று சித்தரித்தல், மத்திய கிழக்கு முழுவதும் ஜனநாயகத்தின் ஆசிர்வாதங்களை பரப்புதல், அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுத்தல் என சித்தரித்தவகையில் புஷ்ஷின் உரை இருந்தது.

போருக்கு விரைவில் முடிவு வேண்டும் என அழைப்பு விடுத்தவர்கள் அனைவருக்கும் எதிராக இந்த உரை இயக்கப்பட்டிருந்தது. அவர்கள் "பின்வாங்குவதில் ஆர்வம்" உடையவர்கள் என்று புஷ் குற்றம் சாட்டி, வழக்கமான போருக்கு முழக்கம் கொடுக்கும் வகையில் 9/11 தாக்குதல்களையும் கூறி, ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் நீங்கிவிட்டால் பயங்கரவாதிகள் "அவர்களை தாயகத்திற்கும் துரத்திவருவர்", இன்னும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்படுவர் என்றும் கூறினார்.

ஆனால் உரையின் மத்திய பகுதி ஆசியாவில் அமெரிக்கத் தொடர்பு பற்றிய சிதைந்த வரலாற்று கருத்துக்கள் ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானுடன் அமெரிக்காவுடனான மோதல், கொரியப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகியவை பற்றிய திரிக்கப்பட்ட, உருக்குலைந்த மற்றும் அறியாமை நிறைந்த கருத்துக்களின் அடிப்படையில், புஷ் ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் குருதி சிந்துதலுக்கு ஒரு வரலாற்று நியாயப்படுத்தலை கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ஒரு வரலாற்றுப் பரிசீலனை என்பதை விட சிதைந்த கட்டுக்கதைக்கு ஒப்பான வகையில்தான், புஷ் ஆசியாவில் அமெரிக்க இராணுவத்தின் தலையீடுகள் பற்றி வாதிட்டார்; இவை மிக பெருந்தன்மையான, சிறந்த நோக்கங்களை கொண்டிருந்தன என்றும் பகுதி முழுவதும் ஜனநாயகம், செழிப்பு ஆகியவை மலர்வதற்கு வழிவகுத்துள்ளது என்றும் ஜப்பானிலும் தென் கொரியாவிலும் வலுவான அமெரிக்கச் சார்புடைய ஆட்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது ஈராக்கில் வருங்கால மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு ஒரு முன்னோடி என்றும் அமெரிக்கா உறுதியாக நின்று "பயங்கரவாதத்திற்கு" எதிரான 21ம் நூற்றாண்டுப் போரை நடத்தினால்தான் மத்திய கிழக்கு பரந்த அளவில் செழிக்கும் என்றும் கூறினார்.

''நாம் செய்து கொண்டிருக்கும் கடினமான, தேவையான பணிக்கு ஒரு முன்னோடி இருக்கிறது என்பது பற்றி, ஒரு வரலாற்று முன்னோக்கை அளிக்க நான் முற்படுகிறேன்; எனவேதான் நாம் வெற்றியடைவோம் என்ற உண்மையில் எனக்கு அத்துணை நம்பிக்கை இருக்கிறது" என்று புஷ் கூறினார்.

வரலாற்றுத் தன்மையில்லாத ஒப்புமை மற்றும் நயமற்ற கலவையை தன்னுடைய உரை முழுவதும் பயன்படுத்திய வகையில் இருந்த புஷ் தன்னுடைய போலி வரலாற்று வழிவகையைக் கூறும்போது ஆரம்பத்தில், "ஒரு சூரியஒளிமிக்க காலையில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஒரு எதிர்பாராத தாக்குதலில் மடிந்த கதையுடன் இன்றைய உரையைத் தொடக்க விரும்புகிறேன்; அத்தாக்குதலை ஒட்டி உலகின் ஒவ்வொரு மூலைக்கும் நம்மை அழைத்துச் சென்ற ஒரு போருக்குள் நுழைந்தோம்..." என்று கூறினார்.

"நான் கூறும் கதை தெரிந்தது போல் இருந்தால், அது சரிதான் --ஆனால் ஒன்று. நான் இப்பொழுது விவரித்த விரோதி அல் கொய்தா அல்ல, தாக்குதல் 9/11 அல்ல, பேரரசு ஒன்றும் ஓசாமா பின் லேடன் கருத்திற்கொண்டுள்ள தீவிரவாத காலீப் அரசும் அல்ல. மாறாக நான் விளக்கியது 1940 களில் இருந்து ஏகாதிபத்திய ஜப்பானினால் இப்போர் இயந்திரம், மற்றும் அதன் எதிர்பாராத விதத்தில் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தை தாக்கியதும் கிழக்கு ஆசியா முழுவதும் தன்னுடைய பேரரசை அது சுமத்த முற்பட்ட முயற்சியும்தான்." என்றார்.

இங்கு உண்மை வருகிறது! பேர்ல் ஹார்பர் 9/11 க்கு இணையாகிறது, ஏகாதிபத்திய ஜப்பான் அல் கொய்தாவிற்கு சமமாகிறது. சற்று வார்த்தை திறமையுடன் புஷ் செயல்பட்டு பின் லேடன் "கருத்திற் கொண்டுள்ள" காலிப் ஆட்சியையும் அவருடைய துண்டுதுண்டான பயங்கரவாதக் குழுக்களையும் இருபதாம் நூற்றாண்டு ஆசியாவின் மிக சக்தி வாய்ந்த இராணுவ ஏகாதிபத்திய நாட்டுடன் இணைத்துக்கூறும் நிர்ப்பந்தததிற்கு உள்ளாகிறார்.

புஷ்ஷினால் கூறப்பட்ட அனைத்து வரலாற்றுப் பிழைகள் மற்றும் அபத்தங்களுக்கு இங்கு விடையிறுக்க முடியாது. ஆனால் மிகவும் முக்கியமானவை பற்றிக் குறிப்பிடத்தான் வேண்டும்.

அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் நடந்த போரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போர் எனக்கூறுதல் பொருத்தமானதே எனத் தோன்றும். ஆனால் உண்மையில் அது பசுபிக்கில், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவில் செல்வாக்கை நிலைநாட்ட விரும்பும் இரு போட்டியிடும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான போராட்டமாகத்தான் இருந்தது. இருபதாம், இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் 1898 ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வெளிப்பட்டதில் தங்கள் வேர்களைக் கொண்டிருந்தது. அப்போரில் அமெரிக்க கியூபா, Puerto Rico மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

ஜப்பானுக்கு எதிரான அமெரிக்கப் போராட்டத்தை ஒரு மனிதாபிமான, ஜனநாயகச் செயற்பாடு என்று புஷ் விளக்குவது ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்களை அணுகுண்டால் எரித்ததை வசதியாக கூறாது விடுகிறது; அதில் கிட்டத்தட்ட 200,000இல் இருந்து 350,000 சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டனர். தன்னுடைய உரையில் புஷ், ஜப்பானிய பேரரசு அரியணையை அப்படியே தொடர வைக்க அமெரிக்கா மேற்கொண்ட முடிவைப் பற்றிப் புகழ்கிறார்; ஆனால் இச்செயலோ வாஷிங்டனின் ஜனநாயகத்திற்காக என்ற பாசாங்கை கேலிக்கூத்தாக்குகிறது.

ஜப்பானில், அமெரிக்காவின் சார்பில் போருக்குப்பின் ஆட்சி செலுத்திய தளபதி டுக்லாஸ் மக்கார்தரை, பாராளுமன்ற அமைப்புக்களை நிறுவியதற்காகவும் மகளிருக்கு வாக்குரிமை கொடுத்ததற்காகவும் புஷ் புகழ்கிறார். உண்மையில் போருக்குப் பின் ஜப்பானில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பேரழிவிற்குட்பட்ட நாட்டில் சோசலிச புரட்சி தோன்றிவிடுமோ என்ற அச்சத்தால்தான் பெரிதும் அமைந்திருந்தன.

அடுத்து 1950-53ல் நிகழ்ந்த கொரியப் போர் பற்றி புஷ் பேசுகிறார். "தென் கொரியாவை கம்யூனிஸ்ட் படையெடுப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்கா தலையிட்டது" என்று இவர் கூறுகிறார். இதுவும் இவருடைய கருத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகம் நிகழ்த்திய புனிதப் போர் ஆகும்.

ஆனால் பழமொழிகளின்படி உண்மை என்பது உறுதியானது ஆகும். தென் கொரியாவில் 1948ல் அமெரிக்கா இருத்திய சர்வாதிகாரி சிங்மன் ரீ பற்றி எக்குறிப்பையும் வசதியாக புஷ் கூறவில்லை; 1950ல் அவரைக் காப்பாற்றுவதற்காக இராணுவத் தலையீடு நிகழ்த்தியது பற்றியும் கூறவில்லை. போர் தொடக்கத்திற்கு முன் ரீயின் போலீஸ் அரசாங்கம் கம்யூனிஸ்டுகளையும் இடதுசாரித் தொழிலாளர்களையும் மாணவர்களையும் காவலில் வைத்துச் சித்திரவதை செய்திருந்தது. படுகொலைகள் பலவற்றை நிகழ்த்தியிருந்தது; அதில் ஜேஜூ (Jeju) தீவில் நடந்த இடதுசாரி எழுச்சி ஒன்று பெரும் இரத்தம்தோய்ந்த வகையில் அடக்கியதும் அடங்கும்.

1960ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு ரீ கட்டாயத்திற்கு உள்ளானார்; ஆனால் நிலைத்திருந்த போலீஸ் சர்வாதிகாரத்திற்கு அமெரிக்காவின் அரசியல், நிதிய மற்றும் இராணுவ உதவிகள் போருக்கு பின்பு மூன்று தசாப்தங்களாக தொடர்ந்தன.

முதலாளித்துவமல்லாத அடிப்படையில் கொரியா ஐக்கியப்படுவதை தடுப்பதற்கான அமெரிக்கப் படையெடுப்பு கிட்டத்தட்ட 2 மில்லியன் கொரியர்கள் மற்றும் கிட்டத்தட்ட 34,000 அமெரிக்கத் துருப்புக்கள் மரணத்தைத்தான் விளைவித்தது. மெக்ஆர்தர் மற்றும் பிற அமெரிக்கத் தளபதிகளால் செய்யப்பட்ட இராணுவப் பெரும் தவறுகள் ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினரின் இழப்பிற்கு நேரடிக் காரணங்களாக இருந்தன.

அந்த நேரத்தில் சீன மக்கள் குடியரசு முற்றிலும் நியாயமான வகையில் அமெரிக்கக் கைப்பாவை ஆட்சி ஒன்றை தன்னுடைய எல்லையில் நிறுவ முற்பட்ட வாஷிங்டனின் முயற்சியை எதிர்த்து மில்லியன்கணக்கான படையினர் இருந்த செம்படை மூலம் தலையிட்டது. தன்னுடைய சிதைந்த வரலாற்றில் ட்ரூமனுடைய இராணுவக் கொள்கையை பற்றிக் குறைகூறியதற்கும் சீனாமீது அணுவாயுதத் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் கூறிய மக்கார்தரை ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் பதவி நீக்கம் செய்தது பற்றியும் எந்தக் குறிப்பையும் புஷ் தரவில்லை.

மாறாக, இவருடைய இன்றைய ஈராக் போர் பற்றிக் குறைகூறுபவர்களுக்கு இணையாக அமெரிக்க அரசியல் கட்டமைப்பினுள் அரைநூற்றாண்டிற்கு முன் கொரியப் போரை விமர்சித்தவர்களுடன் இணைத்துப் பேசுகிறார். அப்பொழுது இத்தகைய தோல்வி மனப்பான்மை கொண்ட விமர்சகர்கள் தவறாகப் பேசினர், இப்பொழுதும் அவர்கள் தவறாகப் பேசுகின்றனர் என்று புஷ் குறிப்பிட்டார்.

உண்மையில் கொரியப்போர் அமெரிக்காவிற்கு தீவிரப் பின்னடைவாக இருந்து, வடகொரியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிறுவதற்கு வழிவகுத்த ஒரு சமரசத்தில்தான் முடிந்தது.

இதன்பின் புஷ் வியட்நாம் பற்றிப் பேசி, அரசியலில் இழிந்தவாதமான வியட்நாம் மக்கள் அனுபவித்த பெரும் சோகம் அமெரிக்கா பின்வாங்கியதால் என்றும் அது அந்நாட்டில் ஒரு தசாப்தம் நடந்த இராணுவ படுகொலைகளால் அல்ல என்ற வாதத்தை முன்வைக்கிறார். இந்தவாதம் பொதுவாக ஈராக்கில் தொடர்ந்து நடைபெறும் பேரழிவை நியாப்படுத்துவதற்கும் முன்வைக்கப்படுகிறது.

"...வியட்நாமின் ஒரு தவறாக எண்ணமளிக்காத மரபியம் என்பது, அமெரிக்கா பின்வாங்கியதால் மில்லியன் கணக்கான நிரபராதிகளான குடிமக்களுக்குப் பெரும் துயர் என்பதுதான்; அவர்களுடைய வேதனைகள் நம்மிடையே இன்று வழக்கத்தில் இருந்துவரும் "படகு மக்கள்", "மறு-கல்வி முகாம்கள்", "கொலைக்களங்கள்" போன்ற புதிய சொற்றடர்களை ஏற்படுத்தின." என்று புஷ் கூறுகிறார்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பொறுத்தவரை, அமெரிக்கா வியட்நாமில் நடத்திய போர் அமெரிக்க கொடூரங்களையும் போர்க்குற்றங்களையும் குறிக்கும் சொற்றொடர்களான "மை லாய்", "ஆரஞ்சு முகவர்", "நாபாம்", "கிறிஸ்துமஸ் குண்டுவீச்சு", " ஒரு கிராமத்தை காப்பாற்ற அதை அழித்தல்" போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது.

இம்மோதலின்போது, கிட்டத்தட்ட 3 முதல் 4 மில்லியன் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர்; இதைத் தவிர 1.5ல் இருந்து 2 மில்லியன் லாவோ, கம்போடியர்களும் கொல்லப்பட்டனர். கொரியாவில் நடந்ததை போலவே அமெரிக்கா தெற்கில் ஒரு மிருகத்தனமான, சர்வாதிகார, அமெரிக்கக் கைப்பாவை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் பணியில் தலையிட்டது. ஆசிய மக்கள் தேசிய சுதந்திரம், வெளிநாட்டு ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நியாயமான உணர்வை தகர்க்கும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் செயல்பட்டதைத்தான் இரு போர்களும் உதாரணம் காட்டின.

சீனாவிற்கும் வியட்நாமிற்கும் எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய தனது சந்ததியை சேர்ந்த அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முக்கியமான பிரிவைப் பற்றி புஷ் ஏதும் குறிப்பிடவில்லை.

வரலாற்றாளர் ரோபர்ட் டல்லேக் புஷ்ஷின் வியட்நாம் பற்றிய சிதைந்த குறிப்பு பற்றி கூறினார்: "நாம் பத்து ஆண்டுகள் வியட்நாமில் இருந்தோம். இரண்டாம் உலகப் போரில் ஒவ்வொரு களத்திலும் வீசப்பட்ட குண்டுகளைவிட அதிகமான குண்டுகளை வியட்நாமில் போட்டோம். 58,7000 அமெரிக்க உயிர்களைப் பறிகொடுத்தோம்; இது ஒரு வெளிநாட்டு மோதலில் இரண்டாம் மிக அதிகமான எண்ணிக்கை ஆகும்."

"புஷ் என்ன தெரிவிக்க விரும்புகிறார்? நாம் கடுமையாகப் போராடவில்லை, இன்னும் நீண்ட நாட்கள் அங்கு இருக்கவில்லை என்றா?"

புஷ் கூறாமல் விட்ட ஒரு இடைஞ்சல் கொடுக்கக்கூடிய விஷயம் அமெரிக்காவும் அதன் சைகோனில் இருந்த கைப்பாவை அரசாங்கமும் 1954 ஜெனிவா ஒப்பந்தங்களின் பிரிவை ஏற்ற நடக்க மறுத்தன என்பதுதான்; அவற்றின்படி தேசியத் தேர்தல்கள் ஒரு ஒன்றுபட்ட வியட்நாம் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க தேசியரீதியான தேர்தல்கள் 1956ல் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதியான ட்வைட் ஐசனோவர் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால் ஹோ சி மின் 80சதவகித வாக்குகளை பெற்றிருப்பார் என்று ஒப்புக் கொண்டிருந்தார்.

1975 வியட்நாமில் அமெரிக்கர்கள் தோல்வியுற்ற பின்னர் கம்போடிய கேமர் ரூஜ் நடத்திய பெரும் படுகொலைகள் பற்றிய கம்போடியாவின் "கொலைக்களங்களை" துணைக்கு அழைத்த முறையில் புஷ் குறிப்பிட்டது, ஒரு அமெரிக்கப் பங்கை பற்றிய விகாரமான மூடிமறைத்தல் ஆகும். கம்போடியாவில் நிகழ்ந்த கொடூரமான நிகழ்வுகள் அந்நாட்டில் 1970ல் அமெரிக்கர்களின் படையெடுப்பால் தோன்றியவை ஆகும். சட்டவிரோத கம்போடிய படையெடுப்பு 1974ம் ஆண்டு ரிச்சார்ட் நிக்சனுக்கு எதிரான பெரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருந்தது.

அமெரிக்கப் படையெடுப்பை தொடர்ந்து, வாஷிங்டன் நோர்டோம் சிகனூக்கின் அரசாங்கத்தை அகற்றி அமெரிக்கக் கைப்பாவையான லோன் நோலை பதவியில் இருந்த உத்தியைக் கையாண்டது; லோன் நோல் பின்னர் கேமர் ரூஜிடம் வீழ்ச்சி அடைந்தார். கேமர் ரூஜ்ஜின் இரத்தக் களரியின் நடுவே, அமெரிக்கா வியட்நாமிற்கு எதிராக கேமர் ரூஜ்ஜை ஆதரித்தது. கம்போடியாவினுள் வியட்நாமியர்கள் நுழைந்து கேமர் ரூஜ் ஆட்சியை வீழ்த்திய பின்னர்தான் அப்பயங்கரம் முடிவிற்கு வந்தது.

ஆசியாவில் மற்ற அமெரிக்க நடவடிக்கைகளையும் தன்னுடைய குறிப்பில் புஷ் நீக்கிவிட்டார்; 1965 ல் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவம் இந்தோனேசியாவில் சுகர்ட்டோவை அகற்றியது; அதையொட்டி 1 மில்லியன் தொழிலாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

வியட்நாம் போர் பற்றி விமர்சித்தவர்களை இழிவுபடுத்தும் வகையில், புஷ் ஒரு இலக்கியக் குறிப்பையும் கூறுகிறார்; 1955 ஆண்டு கிரகாம் கிரீன் வியட்நாமில் அமெரிக்க சூழ்ச்சி பற்றி The Quiet American என்று எழுதிய நாவலை மேற்கோளிட்டுள்ளார். இந்நாவலின் முக்கிய பாத்திரமான Alden Pyle, ஒரு "இளைய அரசாங்க முகவராக விளங்கி", "அமெரிக்க நோக்கம், நாட்டுப்பற்று ஆகியவற்றின் அடையாளமாக, ஒரு அபாயகரமான அப்பாவியாக இருந்தார்'' என்கிறார்.

ஆனால் Alden Pyle ஒரு இரகசிய அமெரிக்க உளவுத்துறை ஒற்றர், ஒரு வலதுசாரி இராணுவக் குண்டரை, கம்யூனிஸ்ட் தலைமையிலான தேசிய படைகளுக்கு மாற்று சக்தியாக உயர்த்த முயன்றதையும் மற்றும் சைகோனில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுவீச்சுத் தாக்குதலில் தொடர்புபடுத்தப்பட்டார் என்பதையும் புஷ் குறிப்பிட மறந்துவிட்டார். புஷ் புத்தகத்தை படித்ததில்லை என்பது ஒரு புறம் இருக்க படத்தையும் பார்த்ததில்லை என்று கவனத்துடன் கருதமுடியும்.

அமெரிக்கா வியட்நாமில் இருந்து வெளியேறியதுதான் ஏராளமான படுகொலைகள் பிற அட்டூழியங்கள் ஆகியவற்றிற்கு காரணம் என்று புஷ் கூறுவது, அமெரிக்கா ஈராக்கில் தன்னுடைய இராணுவ ஆக்கிரமிப்பை விலக்கிக் கொண்டால் ஈராக்கில் பெரும் குருதிக் களரி என்ற அச்சம் ஏற்படலாம் என்று இடைவிடாமல் கூறப்படும் கருத்துக்களுக்கு ஒரு வரலாற்று நம்பகத்தன்மை கொடுப்பது போலாகும்.

இது ஒரு போர்க் குற்றவாளியின் உகந்த வாதம்தான். 9/11 தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் கொண்டிராத, அமெரிக்க மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கொடுக்க முடியாத ஒரு நாட்டின்மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா ஒரு முழு சமூகத்தையும் அழிவிற்கு உட்படுத்தி அதன் நூறாயிரக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துள்ளது. அபு கிரைப் கொடுமையை அறிமுகம் செய்துள்ளது, குறுங்குழுவாத பூசல்கள் மற்றும் இனச்சுத்திகரித்தல்களையும் ஆதரித்து ஈராக்கை வாழும் நரகமாகச் செய்துவிட்டது.

ஈராக்கிய மக்களின் நலன்களில் அக்கறை எனக் கூறிக் கொள்ளும் அரசாங்கம்தான் இன்றும் கூட தன்னுடைய நடவடிக்களைகளினால் கொல்லப்படும் ஈராக்கியர்கள் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறது. அமெரிக்க இராணுவத் தலையீடுகளால் ஆசியாவில் கொல்லப்பட்ட மக்களுடைய மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் -- ஒருவேளை 10 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமாகக் கூட இருக்கும்.

பொய்களின் அடிப்படையில் தொடக்கப்பட்ட ஈராக்கிய போர், ஆசியாவில் அமெரிக்காவினால் செயல்படுத்தப்படும் ஏகாதிபத்திய கொள்ளை முறையின் புதிய செயலாகும். இன்னும் பலவும் தயாரிப்பில் உள்ளன.

அமெரிக்க தாராளவாதத்தின் பகுதி உத்தியேகபூர்வ குரலான நியூ யோர்க் டைம்ஸ் புஷ்ஷின் உரையை எதிர்கொண்டுள்ள விதம் குறிப்பிடத்தக்கது ஆகும். அதன் வியாழனன்று வெளிவந்த "செய்தி ஆய்வில்" Thom Shanker எழுதுகிறார்: "வரலாற்றளர்களின் கருத்தின்படி நடந்தவற்றை சான்றுகளுடன் கூறியதில் ஜனாதிபதி புஷ் சரியாகத்தான் இருந்துள்ளார்."

இவ்விதத்தில் புஷ்ஷின் இழிந்த பொய்களை கெளரவப்படுத்தும் முயற்சிகள், அவை ஏதோ வரலாற்று விவாதங்களுக்கு நியாயமான பங்களிப்பு என்று கூறுவது அமெரிக்க ஆளும் உயரடுக்கு மனச்சாட்சிக்கு புறம்பாக பேசுவது, அறியாமை, ஏமாற்றுத்தனம் என்பவற்றை கொண்ட ஒரு சூழ்நிலையில் உள்ளது என்பது பற்றிய குறிப்பு ஆகும்; மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களில் உத்தியோகபூர்வ கட்சிகள், நிறுவனங்களை அனைத்தும் உடந்தையாக இருப்பதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.