WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Vote no' on UAW sellout at Chrysler! Elect rank-and-file committees for
contract fight!
கிறைஸ்லரில் ஐக்கிய கார்த்தொழிலாளர் சங்கத்தின் காட்டிக்கொடுப்பிற்கு எதிராக
"வேண்டாம்" என்று வாக்களியுங்கள்! போராட்டத்தை தொடர அனைத்து தொழிலார்கள் குழுக்களை தேர்ந்தெடுக்கவும்!
Statement of the Socialist Equality Party and World
Socialist Web Site
19 October 2007
Use this version to
print | Send this link by email |
Email the
author
கீழ்க்கண்ட அறிக்கை அமெரிக்கா முழுவதும் இருக்கும் கிறைஸ்லர் ஆலைகளின் ஐக்கிய
கார்த் தொழிலாளர் சங்க பிராந்திய பிரிவுகளிலும், ஒப்பந்தம் பற்றி இசைவு தெரிவிக்கும் கூட்டங்களில் வினியோகிக்கப்படுகிறது.
இது ஒரு pdf
வடிவமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. WSWS
வாசகர்கள் மற்றும் கார்த் தொழிலாளர்கள் இதை நகலெடுத்து பரந்த அளவில் வினியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் முழு நிபந்தனையற்ற சரணடைதலை கார்த்
தொழிலாளர்கள் உறுதியாக நிராகரித்து கிறைஸ்லர் மற்றும் அதன் வோல்ஸ்ட்ரீட் உரிமையாளர்களான
Cerberus Capital Management
க்கு எதிராக காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம்
Chrysler/Cerberus க்கு பெரும்பாலான ஆலைகள முடுவதற்கும்
நிறுவனத்தை துண்டாடி எஞ்சியுள்ளதை உயர்ந்த விலைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு மறுவிற்பனை செய்வதற்கும் பச்சை
விளக்கைக் காட்டுகிறது.
பல தலைமுறைகள் கார்த் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்து நலன்களையும்
கிட்டத்தட்ட அழித்துவிடுதலுக்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது. இதற்கு இசைவு கொடுக்கப்பட்டால், தற்பொழுது
வேலையில் இருக்கும், ஓய்வு பெற்ற மற்றும் வருங்காலத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேரழிவு தரக்கூடிய
விளைவுகள் ஏற்படும்.
ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்க தலைவர் ரோன் கெட்டில்பிங்கர் மற்றும்
துணைத்தலைவர் தளபதி ஹோலிபீல்ட் இருவரும் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடைய வேலைகள்,
ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதார நலன்கள் அனைத்தையும் ஒரு அறக்கட்டளை நிதியான பல பில்லியன்
VEBA
இற்கு வியாபாரம் செய்துள்ளனர். ஜெனரல் மோட்டர்ஸ், போர்ட், கிறைஸ்லர் ஆகியவை குறைவூதிய, வியர்வை
சிந்தும் ஆலைகளாக மாறும்: ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் பெரும் செல்வம் கொழிக்கும் பெருநிறுவன
நிர்வாகிகளாக மாறுவர்.
இத்தகைய வரலாற்று ரீதியான காட்டிக் கொடுப்பு --நிர்வாகத்துடன் பல
தலைமுறைகள் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் ஒத்துழைத்ததின் இறுதிக் கட்டம்-- தொழிலாளர்களுடைய
நலன்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் என்பது மடிந்துவிட்டது,
புதுப்பிக்கப்படமுடியாது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் பிடியில் இருந்து
கார்த் தொழிலாளர்கள் தங்களை விடுவித்துக் கொண்டு தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து முற்றிலும்
சுயாதீனமான முறையில் போராட புதிய போராட்ட அமைப்புக்களை கட்டமைத்துக் கொள்ளவேண்டும்.
அடிமட்ட தொழிலாளர்கள் கொண்ட குழுக்களை கார்த் தொழிலாளர்கள் அமைத்து
ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதுடன், ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்க
அதிகாரத்துவம் ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை மிரட்டுதல், வாக்குகள் எண்ணிக்கையை திரிபுபடுத்தல் ஆகியவற்றை
தடுத்து, உடன்பாட்டினை ஆமோதிக்கும் வாக்களிப்பையும் நன்கு கண்காணிக்க வேண்டும்.
ஒப்பந்தத்தை நிராகரித்தல் என்பது முதல் கட்டம்தான். ஐக்கிய கார்த்
தொழிலாளர் சங்கத்தின் கரங்களில் இருந்து ஒப்பந்தப் போராட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு, தொழிலாளர்களின்
வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், பணி நிலைமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கு போராட்டம் தொடக்கப்பட
வேண்டும். ஒரு தேசிய கார்த் தொழில் வேலைநிறுத்தம் தொடக்கப்பட்டு
GM, Ford, Delphi, Visteon
இன்னும் மற்ற தொழிலாளர்களை இணைத்தும், கனடா, இலத்தீன் அமெரிக்க, ஆசியா மற்றும் ஐரோப்பா
ஆகியவற்றில் இதே உலகந்தழுவிய கார் பெருநிறுவனங்களில் இருந்து தாக்குதல்களை எதிர்நோக்கியிருக்கும்
தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் நிலைமைகள், உரிமைகளின் பாதுகாப்பு ஒரு முற்றிலும் புதிய
அடித்தளத்தில் வளர்ச்சியுற வேண்டும். இதன் பொருள், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு
புதிய அரசியல் இயக்கத்தை கட்டமைப்பது ஆகும்; அது பெருவணிக இரு கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக இருக்க
வேண்டும்; இலாபங்களுக்காக அல்லது உயர் நிர்வாக அதிகாரிகளின் பங்குப் பெருக்கங்களுக்காக அல்லது
வோல்ஸ்ட்ரீட் ஊகவணிகக்காரர்களுக்காக என்று இல்லாமல் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்
திட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
பாதுகாப்பான, நல்ல ஊதியங்களை கொடுக்கும் வேலைகள், கெளரவமான
ஒய்வூதியத் தொகைகள், முழு சுகாதாரப் பாதுகாப்புக் காப்பீடு இவற்றிற்கு போதிய இருப்புக்கள் இல்லை என்னும்
கூற்றைத் தொழிலாளர்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இலாப முறையும், அதைப் பாதுகாக்கும் இரு-கட்சி
ஏகபோக உரிமையும் பெரும்பாலான மக்களின் அன்றாடத் தேவைகளை தற்கால கொள்ளைப் பிரபுக்களின்
தேவைகளுக்கு தாழ்த்தியுள்ளனர் என்பதுதான் பிரச்சினை. இதை மாற்றுவதற்கு, தொழிலாளர்கள் தங்களுடைய
சொந்தக் கட்சியைக் கொண்டு சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, விரிவாக்கம் என்ற
கொள்கைகளின் அடிப்படையில் (இதில் பணியிடங்கள் செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டும் என்பதும் அடங்கி இருக்கும்) இருக்கும் ஒரு சோசலிசத் திட்டத்திற்காக
போராடுவதற்கு அமைத்துக் கொள்ள வேண்டும்:
ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் கொடுத்துள்ள ஒப்பந்த சுருக்கம் அரைகுறை
உண்மைகள், பொய்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு பிரச்சாரமாகும். இதன் வேலைப் பாதுகாப்பு பற்றிய
பேச்சு ஒரு மோசடியாகும். சுகாதார நலன்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியங்கள்
பற்றிய உத்தரவாதங்கள் பற்றிய இதன் பேச்சு முற்றிலும் போலித்தனமானது ஆகும்.
ஒப்பந்தத்தின் விதிகள்
* வேலைகள்
குறைந்தது டெலாவார், டெட்ரோயிட், இந்தியானா மற்றும் மிசோரி உட்பட ஏழு
ஆலைகள் அடுத்த சில ஆண்டுகளில் அநேகமாக மூடப்பட்டுவிடும். அதன் தற்பொழுதைய 26 ஆலைகளில் எதையும்
தொடர்வதற்கான உறுதியை கிறைஸ்லர் கொடுக்கவில்லை; இதில் மிஷிகனில் உள்ள
Sterling Heights,
இலிநோய்யில் உள்ள Belvidere
நிறுவனங்களும் 2011 ஒப்பந்தம் முடிந்தவுடன் அடங்கும்.
இது செர்பரஸ் நிறுவனத்தை விற்பதற்கும் டஜன் கணக்கான ஆலைகளையும் மற்ற
நிலையங்களையும் மூடுவதற்கும் தகர்ப்பதற்குமான திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.
மற்றவற்றை பொறுத்தவரையில், இன்னும் மிருகத்தனமான வேகம், கட்டாய அதிக நேரப் பணி, தொழில்விதிகளில்
"வளைந்து கொடுக்கும் தன்மை" இவற்றை உள்ளூர் ஒப்பந்தங்களை சுமத்துவதை அடுத்து இருக்கும். வெளி
தொழிற்சாலைகளுக்கு பணிகளைக் கொடுத்தல், தற்காலிக தொழிலாளர்களை கூடுதலாக ஈடுபடுத்தல் ஆகியவை
அதிகப்படுத்தப்படும்.
11,000 மணித்தியால மற்றும் 5,000 மாதாந்த சம்பளம் பெறும் (அலுவலக)
தொழிலாளர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேலைக் குறைப்புக்கள் ஆகியவற்றைத் தவிர, மொத்தமாக பல
ஆலைகளை மூடுதல், தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்புதல் என்பவையும் செர்பரஸின் வணிகம் நடந்து கொள்ளும்
முறையை ஒட்டித்தான் இருக்கும்; செர்பரஸ் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, ஊதியங்களை தகர்த்து, நிறுவனங்களை
மகத்தான இலாபங்களுக்கு விற்பதில்தான் இது இழிவு பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த தனியார் பங்குச் சந்தை
நிறுவனம் ஐந்து நிறுவனங்களை அழித்துவிடவும், செயற்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் செய்யவும் திட்டங்களை
வகுத்துக் கொண்டிருக்கிறது.
* சுகாதார நலன்கள்
இந்த ஒப்பந்தம் 1950கள், 1960 களில் போராடிப் பெறப்பட்ட நிறுவனம்
நிதியுதவி அளிக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான மருத்து நலன்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
VEBA இன் கீழ்
இந்த நலன்கள் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை பொறுத்தும், பெரு முதலீட்டாளர்கள் இன்னும் ஆழ்ந்த
வெட்டுக்களை கொடுக்க அழுத்தம் தருவதைப் பொறுத்தும் அமையும்.
தற்பொழுது வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மட்டும்தான்
VEBA வின் உதவி
இருக்கும். ஒப்பந்தம் தொடங்கிய காலத்திற்கு பின்னர் வேலையில் சேரும் தொழிலாளர்களுக்கு அது பாதுகாப்பு
கொடுக்காது. இன்னும் சில ஆண்டுகளில் கிறைஸ்லரின் தொழிலாளர்களும் ஓய்வு பெற்ற உடன் மருத்துவப் பாதுகாப்பு
எதையும் பெறமாட்டார்கள். அவர்கள் 401(k) (புதிய
ஓய்வூதிய திட்டம்) இல் இருந்து கிடைக்கும் குறைந்த தொகையைத்தான் நம்பியிருக்க வேண்டும்; தங்கள் சுகாதார
நலன்களுக்கு தொழிலாளர்கள் பங்கு சந்தையின் ஏற்றத் தாழ்வுகளை நம்பி இருக்க வேண்டும். ஓய்வுபெற்றவர்கள்
எவ்வித பொருளாதார பாதுகாப்பும் இல்லாமல் நிற்பர்.
ஒரு பெருநிறுவன அமைப்பாக ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்க
மாற்றப்பட்டுவிடும். அமெரிக்காவில் இருக்கும் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றின்மீது கட்டுப்பாட்டைக்
கொள்ளும். ஆலோசகர்கள், முதலீட்டு நிறுவனங்கள், வக்கீல்கள், உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகள்
ஆகியோருக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுக்கப்படும். தன்னுடைய பெருநிறுவன தகுதியில் ஐக்கிய கார்த்
தொழிலாளர் சங்கம் சுகாதாரக் காப்பு கொடுக்கும் அமைப்பு என்னும் முறையில் நேரடியாக தன்னுடைய
உறுப்பினர்களின் நலன்களையே குறைத்துவிடும்.
இதைத்தவிர, தொழிற்சங்கம் தற்போதைய உறுப்பினர்களை மேலதிக
செலுத்துமதிக்கும் உட்படவும் மற்றும் அவர்களிடம் இருந்து பணக் குறைப்பை செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளது;
புதிதாக சேருபவர்களுக்கு மிகவும் குறைந்த சுகாதார நலன்கள்தான் கொடுக்கப்படும். அடுத்துவரும் ஒன்பது
ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் இன்னும் 3 சதவிகிதம் கூடுதலாக மருத்துவக்காப்பிற்காக கொடுக்க வேண்டும்;
அதன் பின்னர் 4 சதவிகிதம் கொடுக்க வேண்டும்.
* இரு-அடுக்கு ஊதிய முறை
கார்த் தொழிலாளர்கள் 1930களில் இருந்த மோசமான வேலை நிலைமைக்கு
திரும்பும் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ள தொழிற்சங்கத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
உட்படுவர். இந்த ஒப்பந்தம் ஊதிய வெட்டுக்கள் டெல்பி மாதிரியில் இருக்கும் என்றும், புதிய தொழிலாளர்களின்
ஊதியம் மணி ஒன்றுக்கு $14 டாலர் என்றும் இவ்விதத்தில் ஒரே வேலைக்கு சமான ஊதியம் என்ற கோட்பாட்டை
நிராகரித்து ஒற்றுமையையும் இல்லாதொழித்துவிடும்.
பல்லாயிரக்கணக்கான பணிமூப்பு உடைய தொழிலாளர்கள் வேலையில் இருந்து
அகற்றப்பட்டு புதிய தொழிலாளர்களுக்கு மரபார்ந்த ஊதியவிகிதத்தில் பாதி மட்டும் கொடுக்கப்படுவர். ஆரம்பதர
உற்பத்திமுறை மற்றும் சிறப்பு பயிற்சிபெற்ற வேலைகள் புதிதாக வரையறுக்கப்பட்டு, சில தொழிலாளர்கள்
முக்கியமான பிரிவுகளில் இல்லாததாக கருதப்பட்டு குறைவான ஊதியங்களையும் நலன்களையும் பெறுவர்.
இந்த ஒப்பந்தம் முழு ஆலைகளையும் பிரிவுகளையும் முக்கியமற்றைவை என வரையறை
செய்கிறது; இதில் Detroit Axle, Toledo
Machining, Marysville, Chrysler Transposrt, Mopar
ஆகியவை அடங்கும். இந்த ஆலைகள் அனைத்திலும் முழு தொழிலாளர்
பிரிவினரும் குறைந்த ஊதியங்களைப் பெறுவர்; வயதான உடன், அதிக ஊதியம் பெரும் தொழிலாளர்கள் வெளியே
அனுப்பப்படுவர்.
* ஊதிய முடக்கம்
தற்போதைய தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் தேக்க நிலையில் வைக்கப்படும்.
இதன் விளைவாக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் பணவீக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உட்படும். 1970ல் 67
நாட்கள் ஜெனரல் மோட்டர்ஸ் வேலைநிறுத்தத்தால் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்க தொழிலாளர்களால்
அடையப்பட்ட வாழ்க்கை செலவு அதிகரிப்பை ஈடுசெய்யும் (The
Cost of Living Adjustment) என்னும் உதவி
இப்பொழுது கைவிடப்படுகிறது. வாழ்க்கை செலவு அதிகரிப்பை ஈடுசெய்யும் உதவியின் அதிக பங்கு
VEBA நிதியை
உயர்த்துவதற்கு திருப்பிவிடப்படும்; தற்போதைய தொழிலாளர்களின் சுகாதாரச் செலவினங்களை கொடுப்பதற்கும்
பயன்படுத்தப்படும்.
* ஓய்வூதியங்கள்
தற்போதைய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெறுபவர்களின் ஓய்வூதியங்கள்
VEBA
விற்குள் ஓய்வூதிய நிதியங்கள் திசைதிருப்பப்படுவதால் இல்லாதொழிக்கப்படும். புதிதாக சேர்பவர்கள் முதலாளிகள்
கொடுக்கும் ஓய்வூதியத்தை பெற மாட்டார்கள். மாறாக அவர்கள் வரையறுக்கப்பட்ட அளிப்புத் திட்டத்தை ஏற்க
வேண்டும்; இது 401(k)
யை ஒத்திருக்கும். இது அனைத்து கார்த் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் அகற்றப்படுவதன் முதல் கட்டமாகும்.
கடந்த மே மாதம் கெட்டில்பிங்கர், கிறைஸ்லர் செர்பரசில் உள்ள வோல்ஸ்ட்ரீட்
வல்லுனர்களுக்கு விற்கப்படுவது என்பது "எமது உறுப்பினர்களின் சிறந்த நலன்களுக்கு உகந்தது" என்றார். உண்மையில்
அவர் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்காகத்தான் பேசினார்; இது ஆரம்பத்தில் இருந்தே கார்த்
தொழிலாளர்களின் நிலை ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம்
VEBA வின்
செல்வக் கொழிப்பின் மீது கட்டுப்பாட்டை கொள்வதற்காக தியாகம் செய்யும் நோக்கத்தைத்தான் கொண்டது;
இந்த ஒப்பந்தம் மூன்று பெரிய கார் நிறுவனங்களாலும் ஏற்கப்பட்டுவிட்டால் $70 பில்லியன் பணத்தை
VEBA பெறும்.
அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய தனியார் முதலீட்டுத் தொகுப்பின் மீது
கட்டுப்பாட்டை கொண்ட அளவில், Solidarity
House அதிகாரத்துவம் மிகப் பெரிய ஓடை போன்ற
வருமானத்தை உறுதியாகப் பெறும்; அதே நேரத்தில் அவர்கள் வேலைகள், ஊதியங்கள், தங்கள் உறுப்பினர்களின்
பிற நலன்களை குறைத்தல் இவற்றில் ஒத்துழைப்பர்.
இந்தக் காட்டிக் கொடுப்பு நிராகரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக,
அரசியல் படிப்பினைகள் இதில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தை
ஒரு இலாபம் பெரும் வணிகமாக மாற்றுவது என்பது தொழிற்சங்கம் அதிகரித்தளவில் அதன் உறுப்பினர்களின்
நலன்களுக்கு விரோதமாக நடந்து வருதல், கூடுதலான வகையில் ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவமாக அதன்
உறுப்பினர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய கடமை இல்லாதவர்கள் என்று நடைபெற்று வந்த நீண்ட வழிவகையின்
உச்சக் கட்டமாகும்.
இந்தக் காட்டிக் கொடுப்பு ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தினது மட்டுமல்லாது
உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கம் முழுவதினதும் முழுநோக்கினதும் கொள்கையினதும் தோல்வியில் வேர்களை
கொண்டுள்ளது.
1930களின் வர்க்கப் போராட்டங்களில் வெளிப்பட்டிருந்த தொழிற்சங்கங்களின்
தலைவர்கள் ஒரு தொழிற்கட்சி அமைப்பதை நிராகரித்து ஜனநாயகக் கட்சியுடன் தொழிற்சங்கங்களை இணைத்துக்
கொண்டனர். இது தொழிலாளர்களின் நலன்களை இலாபமுறைக்கு அடிபணியவைப்பதை குறித்ததுடன், அரசாங்கம்
நடத்தும் சமூகத் திட்டம், சுகாதாரக் காப்பு போன்றவற்றிற்கான ஒன்றிணைந்த போராட்டத்தை கைவிடுதல் என்ற
பொருளையும் கொடுக்கும். ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் தன்னுடைய சங்கத்தில் இருந்து 1930களின்
உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களை வழி நடத்திய சோசலிச, இடதுசாரி பிரிவினரை நீக்கிவிட்டது. அதற்குப் பதிலாக
தொழிலாள வர்க்கத்தின் மீது அமெரிக்க முதலாளித்துவம் செலுத்தும் பொருளாதார சர்வாதிகாரத்தை ஐக்கிய
கார்த் தொழிலாளர் சங்கம் ஏற்றது.
அமெரிக்க கார்த் தொழில் 1970களிலும் 1980களிலும் கொண்ட நெருக்கடிகளை
எதிர்கொண்ட விதத்தில் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் வர்க்கப் போராட்ட வடிவமைப்பு அனைத்தையும்
கைவிட்டதுடன் தேசிய தீவிரவாதத்தையும், பெருநிறுவனக் கொள்கையாக தொழிலாளர்-நிர்வாகம் பங்காளித்துவ
கொள்கையையும் ஏற்றது. இந்த அடிப்படையில் அது 1978ல் இருந்து மூன்று பெரிய ஐக்கிய கார்த் தொழிலாளர்
சங்க வேலைகளில் 600,000 தகர்க்கப்படுவதற்கு ஒத்துழைத்தது.
தம்மால் சுகாதார நலன்கள் விற்கப்பட்டதை மறைக்கும் முகமாக ஐக்கிய கார்த்
தொழிலாளர் சங்கம் ஜனநாயகக் கட்சிக்கு தேசிய சுகாதாரப் பாதுகாப்பு தொடங்குமாறு அழைப்பு விடுகிறது.
இது ஒரு கேலிக்கூத்து ஆகும். குடியரசுக் கட்சியினரைப் போலவே, ஜனநாயகக் கட்சிக்காரர்களும் பெரு வணிகத்தின்
நிதியத்தை பெறுகின்றனர். இதில் சுகாதாரப் பாதுகாப்பு ஏகபோக உரிமைகளும் அடங்கும்.
ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை கொண்டுள்ள காங்கிரஸ் புஷ்ஷிற்கு ஈரானில் போர்
நடத்துவதற்கு நூறாயிரக்கணக்கான பில்லியன்களை கொடுக்கிறது; அது விரைவில் $1 டிரில்லியன் என்ற நிதியைக் கடந்துவிடும்;
அதைத்தவிர ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் நூறாயிரக் கணக்கான ஈராக்கியர்களின் உயிர்களை
குடித்துள்ளது. இந்த பெரும் சோகத்தின் வீணான குருதி, செல்வம் ஆகியவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தினால்
சுமக்கப்படும்.
இரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கட்சிகளில் இருந்து சுயாதீனமான முறையில்,
முற்றிலும் அடிப்படையில் வேறுபட்ட சமூகக் கொள்கையின் அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தால் ஒரு அரசியல்
இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும்: பொருளாதார வாழ்வு பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் சொத்துக் குவிப்பிற்கு
பயன்படும் வகையில் அமைக்கப்படாமல் தொழிலாள வர்க்கம் மற்றும் சமூகம் முழுவதற்குமான தேவைகளை பூர்த்தி
செய்யும் வகையில் சீரமைக்கப்பட வேண்டும்.
சமூகம் நம்பியுள்ள பரந்த தொழில்கள் பெருநிறுவன நிர்வாகிகள், வோல்ஸ்ட்ரீட்
ஊகவணிகர்கள் ஆகியோரின் தனி உரிமையாக இனி இருக்கக்கூடாது. கார்த் தொழில் பொதுச்சொத்தாக மாற்றப்பட்டு,
தொழிலாளர்களால் ஜனநாயக முறையில் கட்டுபாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இக்கொள்கைதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத்
தளத்தால் முன்வைக்கப்படுகிறது. கார்த் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களை உலக சோசலிச வலைத்
தளத்துடன் இத்திட்டம் பற்றி விவாதிக்கவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமையை கட்டமைக்கவும்
தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். |