World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Bhutto implicates Pakistan's military-security establishment in assassination attempt பாகிஸ்தானின் இராணுவ-பாதுகாப்பு கட்டமைப்பை சிக்கலில் ஆழ்த்தியிருக்கும் பூட்டோ By Keith Jones பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நாடு திரும்பி கராச்சி வீதிகளில் பவனி வரும் வேளையில், ஒரு கையெறி குண்டும் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டும் வெடித்து சுமார் 24 மணி நேரங்கள் கழிந்த நிலையிலும், இதுவரை எந்த குழுவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. எட்டு வருடங்கள் புலம்பெயர்ந்த நிலையில் செலவழித்த பின்னர் வியாழனன்று நாடு திரும்பிய பூட்டோ இந்த சம்பவத்தில் காயமுறவில்லை. ஆனால், இந்த சம்பவம் பாகிஸ்தானின் வரலாற்றில் நடைபெற்ற மோசமான தீவிரவாதத் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இறந்த 136 பேர் மற்றும் காயமுற்ற நூற்றுக்கணக்கான பேரில் ஐம்பது PPP பாதுகாப்பு படை உறுப்பினர்கள் உட்பட அநேகம் பேர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை (PPP) சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் அமெரிக்க-ஆதரவு, இராணுவக் கட்டுப்பாட்டு அரசானது இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுக்கள் -தலிபான், அல்-கொய்தா, அல்லது ஒத்த எண்ணமுள்ள ஏராளமான பாகிஸ்தான் குழுக்களில் ஒன்று- தான் காரணம் என்று கூறியுள்ளது. சமீப வாரங்களில் இந்த குழுக்களில் பலவும் பூட்டோவை கொல்வதற்கு வெளிப்படையாக அழைப்புகள் விடுத்தன, ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடி பகுதிகளில் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வண்ணம் அங்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் கடும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது, 1999 இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இராணுவ பராமரிப்பு நிலை ஆதரவை வழங்கி வரும் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப்புடன் இணைந்து செயல்பட சம்மதித்தது இது போன்ற காரணங்களால் பூட்டோவின் செயல்பாடுகள் புஷ் நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்றிருந்தன. வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பூட்டோ கராச்சி வெடிகுண்டு சம்பவ பொறுப்பு குறித்து அரசின் கூற்றுகளை எதிர்த்து கேள்வி எழுப்பினார். இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் இந்த பின்னணியில் "தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்யும் சில தனிநபர்கள்" இருப்பதாக குற்றம் சாட்டினார். அவருக்கு எதிராக சதி செய்து வரும் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையில் உள்ள நபர்களின் பெயர்களை தான் சமீபத்தில் அதிபர் முஷாரஃப்புக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அவர் கூறினார். முன்னதாக, பாரிஸ்-மேட்ச் என்னும் பிரெஞ்சு இதழுக்கு பூட்டோ அளித்த பேட்டியில், "என்னை கொல்ல விரும்புவது யார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஜெனரல் ஜியாவின் முன்னர் இருந்த ஆட்சியின் மாண்புமிகுக்கள் தான் இன்று தீவிரவாதத்திற்கும் வெறித்தனத்திற்கும் பின்னணியில் இருக்கிறார்கள்." பெனாசிரின் தந்தையான ஸுல்பிகர் அலி பூட்டோவை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்த ஜியா அவரை தூக்கிலிடவும் செய்தார், பின் 1988 இல் படுகொலை செய்யப்படும் வரை, ஒரு கொடூரமான சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்திருந்த அவர், வாஷிங்டனின் உந்துதலின் பேரில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போரிட முஜாகிதீனை உருவாக்கினார். இருப்பினும், பெனாசிர் பூட்டோ இந்த தாக்குதலுக்கு முஷாரஃப் ஆட்சியையோ அல்லது இராணுவ உயர் தலைமையையோ சம்பந்தப்படுத்தவில்லை, இதன் மூலம் துபாயில் இருந்து அவரது கணவர் ஆஸிப் அலி சதாரி கூறிய கருத்துகளில் இருந்து தன்னை தள்ளிவைத்துக் கொண்டார். குண்டுவெடிப்பு நடந்த சிலமணி நேரங்களில், சதாரி, ஜியோ தொலைக்காட்சியில் தெரிவித்தார், "நான் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறேன்." PPP முஷாரஃப் ஆட்சியோடு கொண்டிருக்கும் புரிதல் குறித்தும் மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கராச்சி விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் நிறுவனத் தந்தை முகமது அலி ஜின்னாவின் நினைவிடத்திற்கான வழியில் அவரது ஊர்வலம் சென்ற பாதையில், தாக்குதல் நடைபெற்றதற்கு பல மணி நேரம் முன்னதாகவே தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும் என்று பூட்டோ கோரியுள்ளார். "சூரியன் மறைந்ததும்," பூட்டோ கூறுகிறார், "தெரு விளக்குகளும் நிறுத்தப்பட்டு விட்டதை நாங்கள் கண்டோம். எங்களது பாதுகாப்பு வீரர்களுக்கு தற்கொலைப் படையினரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது...ஏனென்றால் எங்களால் பார்க்க முடியவில்லை." பூட்டோவின் சொந்த விரிவான பாதுகாப்பு படையைத் தவிர, அரசாங்கமும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினரை PPP ஊர்வல பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த தாக்குதல் நடந்த விதம் குறித்த குழப்பம் தொடர்கிறது. நான்கு பேர் வரை தாக்குதலில் ஈடுபட்டதாக பூட்டோ கூறியிருக்கிறார். ஆனால் சிந்து மாகாண உள்துறை செயலர், குலாம் மோஹதரம், வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தாக்குதலை ஒற்றை தற்கொலைப் படை தீவிரவாதி செய்ததாகக் கூறினார். வெள்ளிக்கிழமை டானில் வெளிவந்த ஒரு கட்டுரையின் படி, தாக்குதலில் தப்பித்தவர்கள் இந்த குண்டுவெடிப்பு ஒரு போலிஸ் வேனில் இருந்து வந்ததாக எண்ணி அரசாங்க பாதுகாப்பு படையினரை தூற்றவும் தாக்கவும் தொடங்கினர். பூட்டோ பயணம் செய்த பாதுகாப்பு வாகனத்தை தற்கொலைப் படை தீவிரவாதி நெருங்க முடியாத வண்ணம் இடையில் அந்த போலிஸ் வேன் இருந்ததால், தாக்குதலின் இலக்காக அந்த போலிஸ் வேன் இருந்து, அந்த போலிஸ் வேனில் இருந்து தான் குண்டு வெடித்தது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்ற காரணம் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது என்று செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்புகள் பாகிஸ்தானின் இராணுவ-பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பிரிவினராலும் திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் என்பது நிச்சயம் சாத்தியமான ஒன்று தான், அமெரிக்க கோரிக்கைகளுக்காக இஸ்லாமாபாத் தனது புவியியல்-அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்படுத்திக் கொண்ட பல மாற்றங்கள், செப்டம்பர் 2001ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது மற்றும் காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டது ஆகியவை உட்பட, இந்த அமைப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது- ஆனால் பூட்டோ இருக்கக் கூடாது என்று நினைப்பவர்களின் பட்டியல் இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த இராணுவ-பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பிரிவினர் அல்லது பாகிஸ்தான் அரசு மாற்றத்தால் மிரட்சியுற்றுள்ள அல்லது வருத்தமுற்றுள்ள இராணுவத்தின் மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் மட்டும் நின்று விடவில்லை. முஷாரஃபின் கூட்டணியினர் பலர், குறிப்பாக இராணுவ ஆதரவு PML (Q) தலைமைப் பதவிகளில் இருப்போர், பூட்டோவுடனான அதிகாரப்-பகிர்வு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வந்தனர், ஏனெனில் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் அவர்கள் ஓரங்கட்டப்படலாம் என்கின்ற சரியானதொரு பயம் தான். சிந்து மாகாணத்தின் தலைநகரம் கராச்சி மற்றும் அம்மாகாணத்தின் நிர்வாகம் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் (MQM) தலைமையில்வழி நடத்தப்படுகிறது, இந்த இயக்கம் கடந்த காலங்களில் PPP உடன் கடுமையாக சண்டையிட்டு வந்துள்ளது. MQM தான், முஷாரஃப் ஆசிர்வாதத்துடன், சென்ற மே மாதம் 12 மற்றும் 13ல், கராச்சியில் PPP ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டது, இதில் 40 பேருக்கும் மேல் இறந்து போயினர். இந்த வெடிகுண்டு சம்பவம் ஏற்கனவே உயர் அழுத்தத்தில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. அக்டோபர் 6 அன்று நடந்த மோசடி அதிபர் தேர்தலின் போது, முஷாரஃப்புக்கும் பூட்டோவுக்கும் இடையே ஒரு புரிதலை ஏற்படுத்துவதில் புஷ் நிர்வாகம் வெற்றி கண்டது, இதனால் தேர்தலின் சட்டபூர்வ அங்கீகரிப்பை கேள்விக்குரியதாக்கும் வண்ணம் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்யச் சொல்லி போராடிய எதிர்க்கட்சிகளுடன் PPP கைகோர்க்கவில்லை. இருப்பினும், அதிபர் அதிகார விஷயத்தில் பெரும் கருத்து வேறுபாடுகள் இன்னும் நிலவி வருகின்றன, பூட்டோவோ அடுத்த ஜனவரியில் திட்டமிடப்பட்டு இருக்கும் தேர்தலில் வென்று பிரதமராக விரும்புகிறார், அதற்கு இரண்டு முறைக்கு மேல் ஒருவர் பிரதமராக முடியாது என்கிற தடை இரத்து செய்யப்பட வேண்டும். கடந்த மாதத்தில் நடைபெற்ற மோசடியான அதிபர் தேர்தல் குறித்த அரசியல் சட்ட செல்லுபடியாகும் தன்மை மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக இருக்கும்போதே அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டது இவை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பூட்டோ தனது பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்னதாக முஷாரஃப் வேண்டுகோள் விடுத்திருந்தார். உச்சநீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் - இராணுவம் ஜனநாயகத்தை மிதித்துத் துவைக்க அனுமதித்த நீதிமன்றத்தின் நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது எதிர்பார்க்க முடியாதது, ஆனால் பாகிஸ்தானிய மேற்தட்டிற்குள்ளேயான தீவிர பூசல்களை பார்க்கும்போது சாத்தியமில்லாதது என்று ஒதுக்கி விடவும் முடியாதது - அவர் அவரகால நிலையை பிரகடனப்படுத்தலாம் என்று அவரது உதவியாளர்களும் நெருங்கிய வட்டாரங்களும் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். ஆனால், தனது சுதந்திரமான செயல்பாட்டை உறுதியாக வெளிப்படுத்துவதன் மூலம், இராணுவ ஆட்சியுடன் இணக்கமாக செயல்படுவதால் இழந்த மக்கள் செல்வாக்கை சரிக்கட்ட முடியும் என்ற நம்பிக்கையில் முஷாரஃப்பை எதிர்ப்பதற்கு பெனாசிர் முடிவு செய்திருக்கிறார். வெள்ளியன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பூட்டோ: "என்னைப் பொறுத்தவரை இந்தத் தாக்குதல் ஒரு தனிநபர் மீதானதல்ல, நான் பிரதிநிதியாக இருக்கும் ஒன்றின் மீது - இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், பாகிஸ்தானின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு மீதான தாக்குதல்." உண்மையில் முஷாரஃப்புடனான பூட்டோவின் உறுதியற்ற ஒப்பந்தந்தான் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய ஒன்று. இது வாஷிங்டனால் இடைத்தரகு வேலை செய்யப்பட்டது, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் வேட்டையாடும் எண்ணத்திலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் பேராவலின் அதீத ஆசையின் தொடர்ச்சியாக, அமெரிக்கா பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை ஆண்டுக்கணக்கில் ஆதரித்து வந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பேரம் தேசிய சமாதான அவசரச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது, இது பூட்டோ மற்றும் ஏராளமான பிற பாகிஸ்தானிய ஊழல் அரசியல்வாதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கிறது, புஷ் நிர்வாகத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் வரும் வருடங்களில் இராணுவத்தின் தலைமைப் பதவியில் முஷாரஃப் பாதுகாப்பாக இருக்கவும் வழி செய்கிறது. பூட்டோவின் நம்பிக்கை இரு-தரப்பாக இருக்கிறது. அதிகாரம் மற்றும் மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று அதீத கவலையுடன் எதிர்நோக்குகிறார். அதை விடவும் முக்கியமாக, அவரே அடிக்கடி கூறியுள்ளது போல், தெருப் போராட்டங்கள் முற்றி அரசியல் மேற்தட்டின் கட்டுப்பாடு விலகி, இராணுவம் நிலையற்ற தன்மை பெற்றுவிடக் கூடாது என்றும் அவர் எதிர்பார்க்கிறார். புஷ் நிர்வாகம் அதன் பங்கிற்கு பூட்டோவிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால், மாற்றியமைக்கப்பட்ட முஷாரஃப் ஆட்சிக்கு -இராணுவமும், வாஷிங்டனும் ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வரத்தக்க, அதே சமயம் ஒரு ஜனநாயக முக அமைப்பு கொண்டதான, இதன் மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் மற்றும் சண்டைகளுக்கு அச்சாணியாக திகழும் வகையில் - கூடுதல் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவது தான். |