World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Bomb blasts hit Bhutto's return to Pakistan பெனாசிர் பாகிஸ்தான் திரும்பியதையொட்டி நடந்த குண்டுவெடிப்புகள் By Peter Symonds நேற்றிரவு பாகிஸ்தான் நகரமான கராச்சியில், எட்டு ஆண்டுகள் புலம்பெயர்ந்த நிலையில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை வரவேற்க கூடியிருந்த பெரும் கூட்டத்தை இரண்டு குண்டு வெடிப்புகள் பிளந்தன. 125 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், 100 பேர் காயமுற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது, போலிசாரும் மீட்பு பணியாளர்களும் நிலைமையை ஆராய்ந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும். சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்த டிரக் ஒன்றின் மேலமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த பூட்டோ காயமின்றி தப்பினார், அவர் உடனடியாக அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்தவர்களில் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆதரவாளர்கள், போலிசார் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர். உள்ளூர் நேரப்படி காலை சுமார் 2 மணியளவில் துபாயில் இருந்து கராச்சியில் தரையிறங்கிய பூட்டோ, தான் உரையாற்றவிருந்த பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் நினைவிடத்தை நோக்கி வாகனத்தில் மிகவும் மெதுவாய் சென்று கொண்டிருந்தார். இரகசிய துப்பாக்கி சுடும் வீரர்கள், வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் உள்ளிட்ட சுமார் 20,000 போலிசார் மற்றும் துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதையில் சுமார் 150,000 முதல் 300,000 வரை மக்கள் திரண்டிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இரண்டு குண்டுகள் நள்ளிரவுக்கு சற்று பின்னர் வெடித்தன, பீதியையும் குழப்பத்தையும் உருவாக்கின. இதுவரை, எந்த அமைப்பும் சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. அல் கொய்தா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடைய குறைந்தது மூன்று குழுக்கள், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் அமெரிக்காவை ஆதரிப்பதற்காக, பூட்டோவை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. வாசிரிஸ்தானில் உள்ள ஒரு தலிபான் தளபதியான ஹாஜி ஓமர், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்: "பூட்டோ அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மீது தாக்குதல் மேற்கொண்டது போல் நாங்கள் பெனாசிர் மீதும் தாக்குதல் நடத்துவோம்." பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும், அமெரிக்காவும் இந்த குண்டுவெடிப்புகளுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். பல மாதங்களாக, இஸ்லாமிய மதவாத அமைப்புகள் மீது, குறிப்பாக ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் போன்ற பாஷ்தூன் பழங்குடி பகுதிகளில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளை பலப்படுத்தும் பொருட்டு - சிக்கலில் உள்ள அதிபரை பெனாசிர் பூட்டோவுடன் அதிகார-பகிர்வு ஒப்பந்தம் ஒன்றிற்கு புஷ் நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் எல்லைப்பகுதியில் இராணுவத்திற்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிர் துறந்துள்ளனர். முஷாரஃப் மற்றும் பூட்டோவுக்கும் இடையே அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, வாஷிங்டனால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட அரசியல் புரிதல் ஒன்று இரண்டு தலைவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான அனைத்து அடையாளங்களும் உள்ளன. அக்டோபர் 5ம் தேதியன்று முஷாரஃப் தேசிய சமாதான அவசரச் சட்டம் ஒன்றை அறிவித்தார், இது பூட்டோ 1996ம் ஆண்டு பதவி இழந்தபோது அவர் மீது கொண்டு வரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான தண்டனைகளில் இருந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பதிலுக்கு, அவரது கட்சி அக்டோபர் 6 அன்று முஷாரப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடக்கும் ஏமாற்று தேர்தலை எதிர்ப்பதில் அவர் கட்சி எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கவில்லை. ஜனவரியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சிக்கு தலைமையேற்கவும் அடுத்த புதிய பிரதமராகவும் பூட்டோ நாடு திரும்பியிருக்கிறார். ஆனால் முஷாரஃப்புடனான ஏற்பாடு பல்வேறு அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களை கொண்டிருக்கிறது. முஷாரஃப்பின் மறுதேர்வே இப்போது கேள்விகளுக்கு உள்ளாகியிருக்கிறது, ஏனென்றால் நாட்டின் அரசியல் சட்டமானது அதிபரே நாட்டின் இராணுவத் தளபதி பதவியையும் கொண்டிருப்பதை தடை செய்கிறது. உச்சநீதிமன்றம் தேர்தலை இரத்து செய்து, அவர் நவம்பர் 15 அன்று மறுபடியும் அதிபராக இரண்டாம் முறை பதவியேற்பதை தடுக்குமானால், முஷாரஃப் இராணுவச் சட்டத்தை கொண்டு வரலாம். 1999ம் ஆண்டு இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்த முஷாரஃப், அவரது உண்மையான ஒரே அதிகார மூலமான இராணுவத்தில் கட்டுப்பாட்டை இழக்க தயக்கம் காட்டுகிறார். ஒரு வழியாக இராணுவ தலைமைப் பதவியை உதற வேண்டும் என்கிற பூட்டோவின் கோரிக்கைக்கு அவர் சம்மதித்து விட்டார் என்றாலும், அது அவர் இரண்டாவது முறையாக ஐந்து-ஆண்டு கால அதிபர் பதவியில் அமர்ந்த பிறகு தான் என்று கூறி விட்டார். முஷாரஃப் சம்பிரதாயமான ஒரு பதவியை நிச்சயம் ஏற்க மாட்டார், பூட்டோவுடனான எந்த ஏற்பாட்டிலும் அவர் வெளிவிவகாரத்துறை, பாதுகாப்பு, மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டு அதிகாரத்தினை எதிர்பார்ப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது பங்குக்கு, பூட்டோவும் மூன்றாவது முறையாக பிரதமராவதில் ஏராளமான தொடர்ச்சியான தடைகளை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கான பொதுமன்னிப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் தேசிய சமாதான அவசரச் சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பல வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது, தவிர யார் ஒருவரும் இரு முறைக்கு மேல் பிரதமராக பதவி வகிக்க அரசியல் சட்டம் தடை செய்துள்ளது குறித்தும் அவர் ஏதேனும் சிந்தித்தாக வேண்டும். இது தவிர இராணுவ மற்றும் இராணுவ ஆதரவு ஆளும் கட்சியான PML (Q) க்கு உள்ளே இருந்தும் ஒட்டுமொத்தமான எதிர்ப்பை அவர் சமாளிக்க வேண்டியுள்ளது, எந்த ஒரு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திலும் இந்த அமைப்புகள் தவிர்க்கமுடியாதபடி அதிகாரத்தையும் சிறப்புரிமைகளையும் இழக்க வேண்டியிருக்கும். இராணுவ மற்றும்/அல்லது PML (Q) கட்சியை சேர்ந்த வெறுப்பூட்டும் கூறுகள் கூட நேற்றிரவு நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருக்கக் கூடும் என்கிற சாத்தியக் கூற்றை மறுப்பதிற்கில்லை. தாக்குதலுக்கு "தீவிரவாதிகள்" தான் காரணம் என்றும் தற்கொலைப் படையினர் தான் பொறுப்பு என்றும் போலீசார் உடனடியாகக் கூறி விட்டனர், என்றாலும் உண்மையில் இரண்டு குண்டுவெடிப்புகளின் முழு விவரங்களும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. முக்கியமாக பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி, ARYONE வேர்ல்ட் தொலைக்காட்சிக்கு துபாயில் இருந்து பேசுகையில் கூறினார்: "இந்த குண்டுவெடிப்புகளுக்கு அரசு தான் பொறுப்பு என குற்றம் சாட்டுகிறேன். இது உளவு அமைப்புகளின் வேலை." மத்தியஸ்தத்தின் பேரில் சர்வாதிகாரியான முஷாரஃப் உடன் பூட்டோவின் ஒப்பந்தம் ஜனநாயகக் காவலராக அவரது சொந்த நம்பிக்கைக்குரிய பாத்திரத்தை (பிம்பத்தை) சேதப்படுத்தியுள்ளது, அவரது மக்கள் செல்வாக்கை பாதித்துள்ளது, கட்சிக்குள்ளேயே அரசியல் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்ட சர்வதேசக் குடியரசு கல்வி நிறுவனம் என்னும் அமைப்பால் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, 28 சதவீதம் பாகிஸ்தானியர் மட்டுமே பூட்டோவை நாட்டின் மிகச் சிறந்த தலைவராக கருதுகின்றனர் - இது சென்ற கருத்துக் கணிப்பில் இருந்து 4 சதவீத சரிவு. மாறாக, 1999ல் முஷாரஃப்பால் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் செல்வாக்கு, 15 புள்ளிகள் அதிகரித்து 36 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பூட்டோ போலல்லாமல், அவர் முஷாரஃப்புடனான எந்த ஒப்பந்தத்தையும் எதிர்த்து வந்திருக்கிறார். நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்து, சென்ற மாதம் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோவுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ பதிலானது இதற்கு மேலும் வேறுபாட்டைக் கொண்டிருந்திருக்க முடியாது. இஸ்லாமாபாத்துக்கு ஷெரீப் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ஷெரீப்) கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துக் கொண்டனர், விமான நிலையத்தில் போலீசார் மற்றும் படையினர்களின் பலத்த பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் திரும்புவதற்கான நவாஸ் ஷெரீப் உரிமையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக, அவர் மீண்டும் விமானத்திற்குள் திணிக்கப்பட்டு சவுதி அரேபியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டார். பாகிஸ்தானுக்கு வெற்றிகரமாகத் திரும்பும் பூட்டோவின் சொந்த முயற்சியானது, இழந்த அரசியல் செல்வாக்கை கைப்பற்றும் ஒரு முயற்சி. அவர் ஷெரீப்பை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும் என்பதோடு அல்லாமல், 1986ல் புலம்பெயர்ந்த நிலையில் இருந்து அவர் திரும்பிய போதான நிகழ்வுகளையும் அவர் மீண்டும் நனவாக்க வேண்டியிருக்கிறது. 750,000 மக்கள் லாகூரில் அவரை வரவேற்க காத்திருந்தனர். அதன்பின் 1979ல் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரதமரான அவரது தந்தை ஸுல்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலேற்றிய இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியா உல் ஹக்கை எதிர்க்கும் முகமாக நாடு திரும்பினார் பூட்டோ. இப்போது, பூட்டோ இன்னுமொரு சர்வாதிகாரியான முஷாரஃப்புடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு நாடு திரும்பியுள்ளார். பிரிட்டிஷ் பத்திரிகையான எக்கோனாமிஸ்ட், பூட்டோவின் வருகையை ஒட்டிய நேற்றைய பரபரப்பும் ஆர்வமும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டவை என்றும் தொகை செலவழித்து கொண்டு வந்தவை என்றும் எழுதியுள்ளது. "சும்மா கூட்டம் கூடுவது என்கிற ஒன்றே பாகிஸ்தான் அரசியலில் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க, கராச்சி கூட்டத்திற்கு வழக்கத்திற்கும் அதிமாக செலவிடப்பட்டது," என்று அந்த பத்திரிகை எழுதியது. "ஒரு வாரத்திற்கும் மேலாக பூட்டோவின் 'ஜனநாயக வாகனம்' வரவிருந்த வழியெங்கும் சுமார் 16 கிமீ தூரத்திற்கு ஆயிரக்கணக்கான விளம்பர போர்டுகள் இந்த நிகழ்வை விளம்பரப்படுத்துவதற்காக ஆதரவாளர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்டன. "பெனாசிரே தாயகம் வரவேற்கிறது!" என்பது அவற்றில் இருந்த விளம்பர பாடல்களில் ஒன்று. "சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் கிராமப்புற பகுதிகளில் இருந்து கொடி அசைப்பாளர்களை கொண்டு வருவதற்காக, ஆயிரக்கணக்கான பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. கராச்சி விமானநிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியான சாஜித் ஹுசைன் கூறும் போது பஞ்சாப் மாகாணத்தில் இருந்து வந்த 100 வாகனங்களில் அவருடையதும் ஒன்று என்றார். உள்ளூர் டாக்டர் ஒருவர், தேர்தலில் போட்டியிட இவர் கட்சியில் டிக்கெட் கேட்கிறார், ஒரு பேருந்தை 75,000 ரூபாய்க்கு ($1,250) வாடகைக்கு எடுத்திருந்தார். 500 பேருந்துகளுக்கும் மேலாக வடக்கு சிந்து மாகாணத்தில், பூட்டோவின் சொந்த நகரமான லர்கானாவில் இருந்து நிரப்பப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் யார் பணம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டபோது, கட்சியின் சிந்து தலைவர் நிஸார் அகமது குஹ்ரோ ஆவேசமாகக் கூறினார்: 'நாங்கள் தான், நான் தான், வரி கட்டி - நாங்கள் இதனை நேசிக்கிறோம்!'" இந்த தொனியே பாகிஸ்தான் அரசியல் எவ்வளவு வலுவற்றதாக ஆகிவிட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. பூட்டோ, முஷாரஃப் அல்லது ஷெரீப் யாருக்குமே உறுதியான அரசியல் ஆதரவு இல்லை. ஒவ்வொருவருமே வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையை முன்னிறுத்தி தலைமையேற்றுள்ளனர், பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஜனநாயகமற்ற வழிமுறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு வழி அல்லது மற்றொன்றில், இவர்கள் எல்லோருமே புஷ் நிர்வாகத்தின் மோசடியான " பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும்", பாகிஸ்தானில் வெறுப்பை சம்பாதித்திருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பையும் ஆதரித்து வந்துள்ளனர். வலதுசாரி இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் சில ஆதாயங்களை பெற்றுள்ளன, ஆனால் பொதுமக்கள் கோபம் மற்றும் வெறுப்பின் பரந்த ஊற்றானது பாகிஸ்தான் அரசியல் கட்டமைப்பில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. பூட்டோவின் வருகையானது அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு பதிலாக அரசியல் நெருக்கடி மற்றும் நிலையற்ற தன்மையைத் தான் அநேகமாகக் கொண்டுவரப் போகிறது என்பதற்கான அறிகுறியே கராச்சி குண்டுவெடிப்புகள். |