World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan workers picket to defend right to industrial action

இலங்கை தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாக்க மறியல் போராட்டம் நடத்தினர்

By our correspondents
10 October 2007

Back to screen version

அக்டோபர் 3ம் திகதி, சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்க அரசாங்கம் நீதிமன்றத்தை பயன்படுத்துவதை எதிர்த்து புகையிரதம், சுகாதார சேவை, பல்கலைக்கழகம், பாடசாலைகள், தொலைத்தொடர்பு துறை, துறைமுகம், ஊடகங்கள், பொது சேவைகள் மற்றும் இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த சுமார் 2,000 தொழிலாளர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்துவதை பகிஷ்கரிக்கும் ஆசிரியர்களின் நடவடிக்கையை உயர் நீதிமன்றம் தடைசெய்ததை அடுத்தே அரசாங்க மற்றும் தனியார்துறையை சேர்ந்த அறுபத்தியேழு தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தன. இந்த பகிஷ்கரிப்பை நிறுத்துமாறு ஆசிரியர்களுக்கு ஒரு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிப்பதற்காக நீதிமன்றம் ஐந்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. செப்டெம்பர் 13 நடந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் இலட்சக்கணக்கான அரசாங்கத்துறை ஆசிரியர்கள் இணைந்துகொண்டதை அடுத்தே ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த தண்டனையளிக்கும் சட்ட நடவடிக்கையை எடுத்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் செலவுமிக்க இனவாத யுத்தத்தின் விளைவாக வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அதன் தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதாகவே கடந்தவார ஆர்ப்பாட்டம் இருந்தது. மறுபுறம் இந்த மறியல் போராட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையானது தொழிலாளர்களின் எதிர்ப்பை கீழறுப்பதிலும் மற்றும் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் இன்றியமையாத அரசியல் விவகாரங்களை மறைத்து வைப்பதிலும் தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தப் பிரச்சாரத்தை ஒரே ஒரு பிரச்சினைக்குள் வரையறுப்பதில் தொழிற்சங்கத் தலைவர்கள் கவனமாக இருந்தனர். சுலோக அட்டைகளில் ஒரே ஒரு கோரிக்கையே இருந்தது: "நீதிமன்றத்தின் ஊடாக தொழிற்சங்கங்களை நசுக்குவதை நிறுத்து!" மறியல் போராட்டத்தில் கோசிக்கப்பட்ட கோரிக்கைகளும் இந்த விவகாரத்தைச் சூழவே இருந்தன. யுத்தம் எப்படியானதாக இருந்தாலும் அதைப்பற்றி அங்கு குறிப்பிடப்படவேயில்லை.

ஒப்பீட்டளவில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்குக் காரணம், அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் குறைவாக இருப்பது அல்ல. தொழிற்சங்க அதிகாரத்துவம் வேண்டுமென்றே பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திக்கொண்டது. இந்த மறியல் போராட்டம், ஒரு மணித்தியால பகல் உணவுவேளை போராட்டமாகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு கொழும்புக்குள் வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு பெரும் ஊர்வலத்தை நடத்துவதற்கான பரந்த பிரச்சாரங்கள் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.

தொழிற்சங்கத்தின் பாத்திரத்தைப் பற்றி விமர்சித்த பல தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்தனர். கொழும்பு பாடசாலையொன்றைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டதாவது: "இந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி தெரியாது, அதனால் என்னால் பங்குபற்ற முடியாமல் போய்விட்டது. தொழிலாளர்களதும் ஏனைய மக்களதும் ஜனநாயக உரிமைகளை கொடூரமாக நசுக்கும் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். நான் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றேன். ஏனெனில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை சரியாக ஏற்பாடு செய்யவில்லை. பெருமளவிலான தொழிலாளர்களுக்கு அதில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டது."

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நடந்த ஒரு சுருக்கமான கூட்டத்தில், இந்த 67 தொழிற்சங்கங்களது தலைவரான சமன் ரட்ணப்பிரிய உரையாற்றிய போது, "தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தை அடக்க தம்மிடம் "ஊசிமருந்து" ஒன்று (இடைக்காலத் தடைகளை சுட்டிக்காட்டி) இருப்பதாக சில அரசாங்க அமைச்சர்கள் கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் உங்களை அடக்க இப்போது எங்களிடம் ஒரு ஊசிமருந்து (ஆர்ப்பாட்டங்கள்) ஒன்று உண்டு... நீங்கள் உங்களுடைய அடங்குமுறையை சுருட்டிக்கொள்ளாவிட்டால், உழைக்கும் மக்கள் உங்களை மண்டியிடச் செய்வார்கள்," என கிளர்ச்சியாகத் தெரிவித்தார்.

புகையிரத தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியின் பொதுச் செயலாளர் சம்பத் ராஜிதவும் ஏனைய பேச்சாளர்களும் இதேபோன்ற கருத்துக்களையே குறிப்பிட்டனர். ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களின் பின்னால் உள்ள யுத்தத்தைப் பற்றி எந்தவொரு பேச்சாளரும் ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. யுத்தத்திற்கு பெருந்தொகையான பணம் செலவாகுவதால் அரசாங்கத்தால் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையை நிறைவற்ற முடியாது என இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் வெளிப்படையாக பிரகடனம் செய்துள்ளனர்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரதிபலித்த அரசாங்கம், தொழிலாளர்களை "தேசிய பாதுகாப்பை" ஆபத்துக்குள்ளாக்கும் தேசத் துரோகிகள் என்றும் அல்லது "பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள்" என்றும் கண்டனம் செய்துவருகின்றது. ஆர்பாட்டங்களை கலைக்க பொலிசார் பயன்படுத்தப்பட்டு வருவதோடு நீதிமன்றத்தைப் பயன்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளும் நசுக்கப்படுகின்றன. இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் யுத்தத்தைப் பற்றி எதுவும் பேசாததோடு, இராணுவச் செலவை பிரமாண்டமாக அதிகரிப்பதை சட்டப்பூர்வமானதாகவும் மெளனமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

தீவின் கிழக்கைப் போல் வடக்குக்கும் யுத்தத்தை விரிவுபடுத்தியுள்ள அரசாங்கம், இப்போது 2008ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டை பாராளுமன்றத்திற்கு முன்வைத்துள்ளது. அதில் இராணுவச் செலவு 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உழைக்கும் மக்களைப் பொறுத்தமட்டில், இது வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மேலும் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை மட்டுமே அர்த்தப்படுத்தும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் விளக்கியது போல், யுத்தத்தை எதிர்க்க ஒரு அரசியல் வேலைத் திட்டம் இன்றி தொழிலாளர்களால் அவர்களது மிகவும் அடிப்படையான உரிமைகளைக்கூட பாதுகாத்துக்கொள்ள முடியாது. ஆனால் தொழிற்சங்கங்கள் இந்த விவகாரத்தை எழுப்ப மறுப்பதோடு, யுத்தத்திற்கு நடைமுறையில் ஆதரவளிக்கும் அல்லது அதற்கு அடிபணிந்துபோன அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை எதிர்பார்க்கின்றன -இவை அனைத்தும் பிரச்சாரத்தை "விரிவுபடுத்தல்" என்ற பெயரிலேயே இடம்பெறுகின்றது.

அண்மைய வாரங்களில், வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரவு கோருவதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள் சந்தித்தனர். ஐ.தே.க. சில தலைவர்களையும் அதன் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கத்தின் (ஜே.எஸ்.எஸ்.) உறுப்பினர்கள் சிலரையும் மறியல் போராட்டத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.

1980 களில் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியேயாகும். ஆனால், 2001ல் அரசாங்கத்தை அமைத்த போது அது சர்வதேச "சமாதான முன்னெடுப்புகள்" எனப்படுவதை அணைத்துக்கொண்டது. அதன் மனது மாற்றத்திற்கும் சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாறாக, யுத்தம் வெளிநாட்டு முதலீடு மற்றும் இலாபங்களுக்குத் தடையாக உள்ளது என மேலும் மேலும் கருதிய, பலம்வாய்ந்த வர்த்தகர்களின் நலன்களுக்காகவே ஐ.தே.க. குரல்கொடுத்து வந்தது.

2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்ட ஐ.தே.க., ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தால் உள்நாட்டு யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு மேலும் மேலும் அடிபணிந்து போனது. வெளிப்படையான பேரினவாதக் கட்சிகளுக்கு ஐ.தே.க., 2002 யுத்த நிறுத்தத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என அழைப்புவிடுக்கவில்லை. ஐ.தே.க. வே இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்ததோடு 2002 மற்றும் 2003 காலப்பகுதியில் நடந்த புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது, இந்த உடன்படிக்கையில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட உடன்பாடுகளைக் கூட விளைபயனுள்ள விதத்தில் கைவிட்டுவிட்டது. இப்போது வாழ்க்கைத் தரம் சீரழிந்து வருவது பற்றி ஐ.தே.க. தலைவர்கள் அக்கறை காட்டினாலும், ஒரு புதிய ஐ.தே.க. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கோருகின்ற சந்தை சீர்திருத்தங்களை துரிதப்படுத்தும் என்பதில் நிச்சயமாக சந்தேகம் கிடையாது.

ஆயினும், இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள், ஐ.தே.க. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக அக்கறைகொண்டிருப்பதாக அவர்களை நம்பச் செய்வதற்கு ஏமாற்று வித்தைகளில் முயன்றுகொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, சந்தர்ப்பவாத நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) ஒரு கூட்டணிக்காக பிரச்சாரம் செய்கின்றது. ந.ச.ச.க. தலைவர்களில் ஒருவரும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவருமான லீனஸ் ஜயதிலக, அக்டோபர் 3 நடந்த ஆர்ப்பாட்டத்தில், "அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்காக அனைத்து (அரசியல்) பேதங்களையும் ஒரு புறம் வைத்துவிட்டு மற்றும் கட்சி நிறங்களை புறக்கணித்துவிட்டு, ஒரு பரந்த வெகுஜன இயக்கத்தை" கட்டியெழுப்புமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

அதே சமயம், இந்தத் தொழிற்சங்கங்கள், புலிகளை நிர்மூலமாக்குவதற்காக ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுக்கமாறு அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் கோரிக்கை விடுக்கும் சிங்களப் பேரினவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஆதரவைப் பெறவும் முயற்சிக்கின்றன. ஜே.வி.பி. யின் தொழிற்சங்கங்களில் ஒன்றான அனைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும் உயர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் ஒன்றாக இருந்த போதிலும், அதன் உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தில் பங்குபற்றவில்லை. இந்த இரு கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. ஜாதிக ஹெல உறுமய ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருப்பதோடு, ஜே.வி.பி. பாராளுமன்ற ஆதரவை வழங்குகின்றது.

அக்டோபர் 3 மறியல் போராட்டத்திற்கு, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), "ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் யுத்தத்தை எதிர்க்க வேண்டும்" என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு அதன் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியிலும் ஏனயை வேலைத் தலங்களிலும் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர்.

"யுத்தத்திற்கு எதிரான சுலோக அட்டையின்றி எங்களால் எப்படி மறியலில் ஈடுபட முடியும்?"

அக்டோபர் 3 மறியல் போராட்டத்தில் பங்குபற்றிய தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சிலாபத்தில் இருந்து வந்திருந்த ஒரு ஆசிரியர் தெரிவித்ததாவது: "நான் உங்களது துண்டுப் பிரசுரத்தை வாசித்தேன். நீங்கள் குறிப்பிடுவது போல், இந்தத் தாக்குதல்களுக்கான மையப் புள்ளி நீண்டகால இனவாத யுத்தமே. இந்த ஆர்ப்பாட்டத்தில், யுத்தத்திற்கு எதிரான ஒரு சுலோகத்தைக் கூட நான் காணவில்லை. ஒரு வெளிநாட்டுக்காரர் இந்த ஆர்ப்பாட்டத்தை டி.வி. யில் பார்த்தால், இது இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் நடவடிக்கை அல்ல என்றே அவர் நினைப்பார். தசாப்த காலமாக நீளும் யுத்தத்தின் அழிவுகரமான விளைவுகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் என்ற விதத்தில், இந்த இரத்தக்களரி யுத்தத்திற்கு எதிரான ஒரு சுலோக அட்டை கூட இல்லாமல் எப்படி மறியல் போராட்டம் செய்ய முடியும்?"

"அவர்கள் யுத்தத்துக்கு எதிரான சுலோகங்களை எழுப்பாததற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக ஜனாதிபதி இராஜபக்ஷ கேட்ட, 'நீங்கள் என்னை வடக்கு கிழக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்றச் சொல்கிறீர்களா? என்ற கேள்விக்கு அவர்கள் (தொழிற்சங்கத் தலைவர்கள்) நிச்சயமாக பதில் சொல்ல வேண்டிவரும் என்ற காரணத்தினாலேயே ஆகும்.

கொழும்பில் கொம்பனித்தெருயில் இருந்து வந்திருந்த ஒரு ஆசிரியர் தெரிவித்ததாவது: "வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமை என்பது, தொழில் மற்றும் தொழில் நிலைமைகளை பாதுகாப்பதற்காக உழைக்கும் மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையாகும். இந்த அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் அதை மீறியுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் மனித உரிமைகளை காப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டாலும், அவர்கள் மக்களின் ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் மீறிக்கொண்டிருப்பதையே நாம் காண்கின்றோம்.

"இராஜபக்ஷவின் இந்தக் குறுகிய கால ஆட்சியில் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்? எத்தனை பேர் காணமல்போயுள்ளார்கள்? எத்தனை பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள்?

"சம்பளக் கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் செய்ததற்காக அரசாங்கமும் சில ஊடகங்களும் ஆசிரியர்களை கண்டனம் செய்கின்றன. இது மாணவர்களின் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாக அவர்கள் கூறிக்கொள்கின்றார்கள். போதுமான வருமானம் இன்றி எங்களால் தொழில் செய்து வாழ முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா? எங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடுவது பிழையானது அல்ல. எங்களைக் குற்றஞ்சாட்டுகின்ற அரசாங்கமே கல்வி முறையை சீரழிக்கின்றது.

"எங்களது தலைவர்கள் சொல்வது போல் ஐ.தே.க. உடன் இணைந்து உங்களால் எந்தவொரு உரிமையையும் பாதுகாக்க முடியாது. நான் இந்த இரு கட்சிகளுக்கு இடையில் (ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க.) எந்தவொரு வேறுபாட்டையும் காணவில்லை. 1980 பொது வேலை நிறுத்தத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஐ.தே.க. அரசாங்கம் ஒரு சிறிய சம்பள உயர்வைக் கோரிய 100,000 தொழிலாளர்களை வேலையில் இருந்து இடை நிறுத்தியதுடன் யுத்தத்தை தொடக்கிவைத்ததும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களே.

"நான் உங்களது துண்டுப் பிரசுரத்தை முழுமையாக இன்னமும் வாசிக்கவில்லை. எவ்வாறெனினும், யுத்தத்திற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என நீங்கள் சொல்வதுடன் நான் உடன்படுகின்றேன்."

கொழும்பில் உள்ள பல்கலைக்கழக அனுமதி ஆணைக்குழுவின் தொழிலாளி கருத்துக் கூறுகையில்: "தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக சட்ட ரீதியில் தலையிடுவதானது தொழிலாளர் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இராஜபக்ஷ அரசாங்கம் தேர்தலில் வாக்குறுதியளித்தது போல் மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் உள்ளதாலேயே அது அடக்குமுறையை நாடுகின்றது.

"மக்களால் அவர்களின் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியவில்லை. கடந்த வாரம், அரசாங்கம் மாவு மற்றும் பான் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது. எங்களுடைய மாதாந்த சம்பளத்தில் முக்கால் பகுதிக்கும் மேலாக உணவுக்கும் போக்குவரத்துக்கும் செலவாகின்றது. எனது மாத சம்பளம் 10,000 த்திற்கும் (கிட்டத்தட்ட 80 அமெரிக்க டொலர்கள்) அதிகம் இல்லை. எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். நான் அவர்களது கல்வி செலவுக்காக மாதம் குறைந்தபட்சம் 3,000 ரூபா செலவிடவேண்டும். எனது மனைவிக்கு தொழில் கிடையாது.

"நான் ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவிற்கு வாக்களித்தேன். எனக்கு எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நம்பிக்கை இல்லை. அது ஐ.தே.க., ஜே.வி.பி. அல்லது ஜாதிக ஹெல உறுமய என்றாலும் சரி. அவர்கள் அனைவரும் எங்களின் வாக்குகளைப் பெறும் வரை மக்களை ஏமாற்றுவார்கள். நான் இந்த போராட்டத்தில் பங்குபற்றினாலும் எனக்கு தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நம்பிக்கை கிடையாது," என்றார். அவர் சம்பள உயர்வு தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் நடந்த வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்துவிட்டதாக விளக்கினார். "அரசாங்கம் எட்டு தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவது உட்பட தண்டனை நடவடிக்கையை எடுத்த போதிலும், தொழிற்சங்கங்கள் அவர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved