WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
An interview with antiwar activist Cindy Sheehan
போர் எதிர்ப்பு நடவடிக்கையாளர் சின்டி ஷீஹனுடன் ஒரு பேட்டி
By David Walsh
5 September 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சின்டி ஷீஹன், தனது 24 வயது மகனை ஈராக் யுத்தத்தில் ஏப்ரல் 2004 -ல் இழந்தபோது
ஒரு பெரும் துன்பத்திற்கு ஆளானார். இந்த சோக சம்பவத்திற்கு சில ஆண்டுகளுக்கு பின்னர், டெக்சாசில், கிராவ்ஃபோர்டில்
உள்ள ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பண்ணையின் முன்னால் ஒரு போர் எதிர்ப்பு முகாமை நடத்திய பின் ஷீஹன் பிரபல்யம்
பெற்றார். ஒரு மாத காலம் நீடித்த இந்த எதிர்ப்பு போராட்டம், நவ காலனித்துவ தாக்குதல்களில் மற்றும்
ஈராக் ஆக்கிரமிப்பினால் உருவாகிய மனித உயிரிழப்புக்கள் மீதான கவனத்தை அமெரிக்காவிலும் மற்றும் உலகின் பல
பகுதிகளில் உள்ள பெருமளவிலான மக்களிடையே கொண்டு வந்தது.
ஷீஹனின் எதிர்ப்புபோராட்டம் அமெரிக்க மக்களின் கருத்தை மாற்றவும் மற்றும் அமெரிக்க
மக்களிடையே ஈராக் யுத்தத்திற்கு பரவலாக இருக்கும் எதிர்ப்பை மூடிமறைப்பதற்கு பெருமளவிலான முயற்சிகள்
தம்மால் எடுக்கப்படுவதை ஊடகங்கள் ஒத்துக் கொள்ளவும் உதவின.
அவர் விளக்கி இருந்தபடி, புஷ் அரசாங்கத்தை தாக்கும்வரையும் மற்றும் கலக்கமுற
செய்திருந்தவரை, ஷீஹன் இடதுசாரி தாராளவாத மற்றும் ஜனநாயக கட்சியின் சில அணிகளுக்கு ''விருப்பமானவராக''
மாறி இருந்தார். 2006ம் ஆண்டு நவம்பர் தேர்தலில், காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி மீண்டும்
பெரும்பான்மையை பெற்ற உடனே, நிலைமை முற்றிலுமாக மாறியது.
குறிப்பாக, ஈராக் யுத்த எதிர்ப்பின் விளைவாக பெரும்பான்மையாக அதிகாரத்திற்கு
கொண்டு வரப்பட்ட, அவையின் பேரவைத் தலைவர் நான்சி பிலோசி மற்றும் செனட்டின் பெரும்பான்மை தலைவர்
ஹாரி ரேய்டால் வழி நடத்தப்பட ஜனநாயகக் கட்சி, தாம் யுத்தச் செலவுகளை குறைக்கப் போவதில்லை
என்றும், புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் செனிக்கு எதிராக தொடர்ந்து குற்றஞ்சுமத்த போவதில்லை
என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினர்.
ஜனநாயகக் கட்சி காங்கிரஸில் இருந்து, சில மாதங்களுக்கு நடித்து காட்டிய பின்,
இறுதியாக 2007ன் மே மாதம் புஷ்ஷிடம் இறுதியாக சரணடைந்தததுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்
யுத்தங்களுக்கு கூடுதலாக 100 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் அங்கீகாரத்திற்கும் உதவி செய்ததன் மூலம்,
ஷீஹன் கொடுமையாக ஏமாற்றப்பட்டார். காங்கிரஸில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் அவரை கட்சியில் இருந்து
வெளியேற்றுவதாக அறிவித்தபோது, மே 26ல் வெளியிடப்பட்ட ஒரு பகிரங்ககடிதத்தில், அவர் பின்வருமாறு
குறிப்பிட்டார்: "அவருக்கு கூடுதல் பணத்தை அளிப்பதன் மூலம் அரசியலில் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள்
நினைக்கிறீர்கள், ஆனால் அது ஒரு அறவியல்ரீதியான வெறுப்பூட்டகூடியதும் மற்றும் ஈராக்கில் ஒவ்வொரு நொடியும்
ஆக்கிரமிப்பு நீடிக்கவும், நீங்கள் அனைவரும் உங்கள் கைகளில் கூடிய இரத்தக்கறையை கொண்டுள்ளது
போன்றதாகும்." என குறிப்பிட்டார்.
ஜனநாயகக் கட்சியுடன் பிரிவு ஏற்பட்ட பின்னர், ஷீஹனின் அறிவிப்பு, இடதுசாரி
தாராளவாத வட்டங்களில் மெளனமாக அல்லது பகைமை உணர்வுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
The Nation
இதழ் அந்த அறிவிப்பை தவிர்க்க விரும்பியது, அதே சமயம்,
Daily Kos, Democratic
Underground போன்றவை அவரின் கருத்துக்களை
எதிர்த்தன.
ஜூலையில், ஷீஹன், யுத்தத்திற்கு எதிராகவும் மற்றும் புஷ்ஷுடனான காங்கிரஸின்
சிக்கல்தன்மையை எதிர்த்து முழுநாடுபரந்த "மனிதநேய ஊர்வலம்" ஒன்றை ஏற்பாடு செய்ய உதவினார். அவையின்
பேரவைத் தலைவர் பிலோசி, புஷ் மீதான குற்றச்சாட்டை மீண்டும் முன்கொண்டுவரவில்லையானால், பிலோசியின்
சான்பிரான்சிஸ்கோ மாவட்டத்தில் தாம் சுயேட்சை வேட்பாளராக நிற்க இருப்பதாக தெரியப்படுத்தினார்,
அந்நேரத்தில் ஜூலை 23ல் ஊர்வலம் வாஷிங்டன் டிசி யை அடைந்திருந்தது.
ஜூலை 23ல், ஷீஹன் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதியான ஜோன் கன்யெர்ஸை அவர்
அலுவலகத்தில் சந்தித்து, குற்றஞ்சுமத்தும் பிரச்சனை பற்றி மீண்டும் வலியுறுத்தினர். மிச்சிகன் ஜனநாயகக் கட்சி
இந்த விசயத்தை ஆலோசிக்க மறுத்தபோது, ஷீஹனனும் அவரது கூட்டாளிகளும் உள்ளிருப்பு போராட்டத்தை
ஆரம்பித்ததும், கன்யெர்ஸ் உடனடியாக காவல்துறையை அழைத்தார். (பார்வையிடவும்:
"Iraq war opponent Cindy Sheehan
arrested at Democratic Congressman's office")
சான்பிரான்சிஸ்கோவில் ஆகஸ்ட் 9ம் தேதி பிலோசிக்கு எதிராக ஷீஹன், தாம்
போட்டியிட இருப்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர், ஷீஹனின் முயற்சிகள்
பயனற்றவை என ஏளனஞ்செய்து, The Nation
இதழின் கதா போலிட் என்பவர் அவரை அவமதித்து (பார்வையிடவும்:
"The Nation urges Cindy Sheehan not to run for Congress against Nancy
Pelosi") ஷீஹன் ஒரு
நடவடிக்கையாளராக தொடர்ந்து இருக்கவேண்டும் என அதிகாரமான முறையில் ஆலோசனை கூறினார்.
The Nation
இதழில் கேரி யெங்கால் எழுதப்பட்ட இரண்டாவது தலையங்கம், பிலோசியுடன் சவால் விட்டதற்காக ஷிஹனை தமது
"கவனிப்பில்" எடுத்து கொண்டது.
இதழின் ஆசிரியர் கத்ரீனா வான்டென் ஹூயூவெல்லுக்கு ஷீஹன் எழுதிய ஒரு கடிதத்தில்,
அவ்விதழ் ஒரு முறை அவருக்கு உபச்சாரம் நடத்தி இருந்ததாகவும், ஆனால் தற்போது யுத்த ஆதரவு அளிக்கும்
அவையின் பேரவை தலைவருக்கு (பிலோசி) ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மற்றும் அவர் பேச்சளவில் ஆக்கிரமிப்புக்கு
எதிராக இருந்தாலும், நடவடிக்கையில் ஜோர்ஜுக்கு நிறையப் பணம் அளித்து அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மிக சமீபத்தில், அதாவது ஆகஸ்ட் 30ல், தன்னால் எழுதப்பட்ட கடுமையற்ற மரியாதையான
பிரசுரத்திற்கு, கடுமையான மற்றும் சுய நியாயத்தை வலியுறுத்தும் மறுமொழியை ஷீஹன் எழுதி இருப்பதாக குற்றஞ்சாட்டி
ஒரு கடுமையான கடிதத்தை பிரசுரித்த கதா போலிட் மீண்டும்
The Nation
இதழில் எழுதப்பட்ட விசயத்திற்கு திரும்பி இருந்தார். போலிட், தனது நிலைப்பாட்டை தொடர்ந்து
பாதுகாத்துக்கொண்டு, "அவர் (ஷீஹன்) கடுமையான இந்த அரசியல் பிரச்சாரங்களில் எவ்வாறு நிலைக்க
முடியும்?" என மிகவும் ஆச்சரியப்படுகிறார்.
ஆகஸ்டு, 31ம் தேதி சின்டி ஷீஹனுடனான டேவிட் வால்ஷின் உரையாடல்
* * *
டேவிட் வோல்ஷ்: ஈராக் யுத்தம் தொடங்குவதற்கு முன் மற்றும் 2004ல்
உங்கள் மகன் இறப்புக்கு முன் உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருந்தது?
சின்டி
ஷீஹன்: நான் வெறுமனே வாக்களித்தேன். என் மகனின் இறப்பு எனக்கு தொடக்கமாக இருந்தது. நான்
யுத்தத்துடன் உடன்படாமல் இருந்தாலும், கேஸியின் மரணம் வரை நான் எந்த நடவடிக்கையிலோ அல்லது வேறு எதிலுமே
ஈடுபடவில்லை.
டேவிட் வோல்ஷ்: யுத்தம் தொடங்கிய போது, அதைப் பற்றிய உங்களின் அணுகுமுறை
என்னவாக இருந்தது?
சின்டி ஷீஹன்: கேஸி உட்பட எங்களின் முழு குடும்பத்திலும் யுத்தத்திற்கு உடன்பாடு
கிடையாது. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது வேறு எந்த வகையான செயல்பாட்டிலும் நான் பொருந்தி
இருக்கவில்லை. ஏனென்றால், என் வாழ்க்கை முழுவதுமே எனது பிள்ளைகள் மற்றும் என் பணியில் சுழன்று வந்தது. கேஸியின்
இறப்பு வரை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்காக வருத்தப்படுகிறேன்.
டேவிட் வோல்ஷ்: அந்த நேரத்தில் நீங்கள் எந்த பணியில் இருந்தீர்கள்?
சின்டி ஷீஹன்: கேஸி இறந்த போது, நாபா (கலிபோர்னியா) நாட்டில்
மருத்துவ பராமரிப்புக்கான தகுதியாளராக செயல்பட ஒரு வேலை கிடைத்திருந்தது. நாங்கள் 1993ல்
வாகாவில்லுக்கு (சான்பிரான்சிஸ்கோவின் வடகிழக்கில் 50 மைல்கள் தூரத்தில் உள்ளது) மாறிய பின்னர்,
இளைஞர்களுக்கான மந்திரியாக பணியாற்ற வேண்டி இருந்தததால், நான் செயின்ட் மேரி கிருஸ்துவ தேவாலயத்தில்
எட்டு ஆண்டுகள் இளைஞர்களுக்கான அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதே என் முக்கிய பணியாக
இருந்தது. அது ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.
டேவிட் வோல்ஷ்: கடந்த மூன்று ஆண்டுகளில், ஜனநாயகக் கட்சி, யுத்த
எதிர்ப்பு இயக்கம் மற்றும் இடதுசாரிகளுடனான உங்களின் அனுபவம் பற்றி கூற முடியுமா?
சின்டி ஷீஹன்: டெக்சாஸின் கிராவ்ஃபோர்டுக்கு செல்வதற்கு முன்னால் ஓர்
ஆண்டு நான் யுத்த எதிர்ப்பு இயக்கத்துடன் ஈடுபட்டு இருந்தேன். 2004ம் ஆண்டு பிரச்சாரத்தின் போது, நான்
ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷூக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன்- நான் ஒருபோதும் ஜோன் கெரிக்காக
பிரச்சாரம் செய்யவில்லை. ஜோர்ஜ் புஷ்ஷூக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தேன். பின், தேர்தலுக்கு
பின்னர், Gold Star Families for Peace
(அமைதிக்கான கோல்டு ஸ்டார் குடும்பம்- ஈராக் யுத்தத்தில் இறந்தவர்களுக்கான அமைப்பு) இனை நான் கண்டு
கொண்டேன், பின் உரையாற்றுவதற்காக உலகெங்கும் சென்று வர ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் எழுதவும்
ஆரம்பித்தேன்.
2005ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, (மிச்சிகன் ஜனநாயக கட்சி உறுப்பினர்) ஜோன்
கன்யொர்ஸ், காங்கிரஸின் அடித்தளத்தில் டவுன்னிங் ஸ்ட்ரீட் கூட்ட அறிக்கை தொடர்பான விசாரணையில்
கலந்துகொண்டேன். (டவுன்னிங் ஸ்ட்ரீட் கூட்ட அறிக்கை -ஜூலை 23, 2002ல் யுத்தத்தின் உருவாக்கம் பற்றி
விவாதித்த பிரித்தானிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கூட்டம், ஒரு அமெரிக்க தாக்குதலை நியாயப்படுத்தவும்
மற்றும் சதாம் ஹுசைனை பதவிநீக்க "உளவுத்துறை மற்றும் தகவல்கள் அனைத்தும் பொருத்தமாக
இணைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தியது.)
ஜோ வில்சன் (தூதர்) யூரேனியத்தை பற்றி சாட்சியம் கூறினார். (இது ஹூசைன்
ஆட்சியில் நைகரில் இருந்து யூரேனியம் வாங்க முயற்சித்தது மோசடி என அம்பலப்படுத்தப்பட்ட முயற்சி). ரே
மெக்கோவர்ன் (முன்னால் சிஐஏ ஆய்வாளர்), போலியான உளவுத்துறை அறிக்கை குறித்து சாட்சி கூறினார்.
பொய்களாலான மனித உயிர்களின் இழப்பு மற்றும் என்ன நடந்தது என்பது பற்றி நான் சாட்சி கூறினேன். ஜோன்
போனிபெஜ் அரசியல் அமைப்பின் சிக்கல்கள் பற்றி சாட்சி கூறினார், அவர் ஒரு அரசியலமைப்பு சார்ந்த
வழக்கறிஞராவார்.
அதற்கு சிறிது காலத்திற்கு பின்னர், அதாவது அதன் பின்னர் சுமார் ஆறு வாரங்கள்
கழித்து, நான் கிராவ்ஃபோர்டுக்கு சென்றிருந்தேன். எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான
மக்களுக்கு நான் யார் என தெரிந்திருந்த போதிலும், என் எழுத்துக்கள் மற்றும் என்னுடன் நடந்த கடித
தொடர்புகள் படிக்கப்பட்டது- நான் முழுவதும் வேலையில் இருந்தேன், மாதத்தில் மூன்று வாரங்கள் எங்கேயாவது
உரையாற்றி கொண்டிருந்தேன். ஆகஸ்டு 6ம் தேதி, புஷ்ஷின் பண்ணைக்கு சென்றபோதுதான், நான் சர்வதேச
அளவிலும், தேசிய அளவிலும் எனது நடவடிக்கைகளுக்காக பிரபல்யமானேன்.
கிராவ்ஃபோர்டின் கேஸி முகாமிற்கு முன்னர், நான் காங்கிரஸில் பணியாற்றி
வந்தேன், ஜோன் கான்யெர்ஸ், டென்னிஸ் குசினிச், லெயின் உல்செ, மாக்சைன் வாட்டர்ஸ், பர்பரா லீ, ஜிம்
மெக்கொவர்ன் மற்றும் ஜிம் மெக்டெர்மோட் போன்ற காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பணியாற்றி கொண்டிருந்தேன்.
அதனால் நான் ஏற்கனவே காங்கிரஸின் முற்போக்கான உறுப்பினர்களுடன் பணியாற்றி வந்ததால், எனக்கு
டெக்சாஸில் இருந்து ரோன் பெளலுடன் நல்ல உறவு இருந்து வந்தது. எனக்கு காங்கிரஸ் தொடர்பாகவும் நல்ல
அனுபவம் இருந்தது.
ஆனால் கேஸி முகாமிற்கு பின்னர், அது முற்போக்கான காங்கிரஸ் அரசியல் குழுவிற்கு
தெரிந்த போது, ஜோன் கான்யெர்ஸ் உட்பட சார்லி ரேன்ஜெல் போன்றவர்கள், தமது நிகழ்ச்சிகளை
முன்னெடுக்கவும் மற்றும் என்னுடன் படங்கள் எடுத்து கொள்ளவும் என்னை அவர்களின் நிகழ்வுகளுக்கு அழைத்தார்கள்.
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சிறுபான்மையில் இருந்தபோதும் கூட, ஜோன் கான்யெர்ஸ், குற்றம் சுமத்துவது
தொடர்பான அவரின் கட்டுரைகளை கடந்த ஆண்டு பிரசுரித்தபோது எனக்கு அவரது ஒத்துழைப்பு கூட கிடைத்தது.
நெருக்கடியில் இருக்கும் அரசியல் அமைப்பு
(The Constitution in Crisis) என்ற
அவரின் புத்தகத்தில், அவர் என்னைப் பற்றியும் பேசுகிறார்.
ஆகவே ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்றபோது....நாங்கள்
தொடர்ந்து காங்கிரஸிலும் மற்றும் காங்கிரஸிற்கு எதிராகவும் கடுமையாக பணியாற்ற வேண்டி இருக்கும் என்பது
எனக்கு தெரியும். ஆனால், நாங்கள் குடியரசுகட்சியின் காங்கிரஸை விட கொஞ்சம் முன்னேறி இருக்கிறோம்
என்பதை நான் நம்பியிருந்தேன், அதனால் வெளிப்படையாக அது மிகவும் .....நான் சிறுபிள்ளைத்தனமாக கூற
விரும்பவில்லை, ஏனென்றால் ஜனநாயகக் கட்சி அதிகாரத்திற்கு வந்ததால் மட்டும் அனைத்திலும் மாற்றம்
வந்துவிடாது என்பதை நான் அறிவேன். ஆனால் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
ஜூலை 23ற்கு முன்னால், ஜோன் கான்யெர்ஸின் அலுவலகத்தில் எமது உள்ளமர்வு
போராட்டத்திற்கு முன்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருடன் மூன்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.
நவம்பர், 2006 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான்சி பிலோசி குற்றச்சாட்டுக்களை
கைவிட்டபோது, நான் உண்மையிலேயே மனம் தளர்ந்து விட்டேன். யுத்தத்திற்கு கூடுதல் பணம் அளிக்க அவர்கள்
ஜோர்ஜ் புஷ்ஷூக்கு வாக்களித்த போது, நான் மேலும் கடுமையாக மனச்சோர்வு அடைந்தேன். அதன் பின்னர்
தான் நான்சி பிலோசியுடன் சவால் விட நான் முடிவெடுத்தேன்.
மே மாதம் நான் ஓய்வு பெற்ற பின்னர், ஸ்கூட்டர் லிபியின் தண்டனையை ஜோர்ஜ்
புஷ் குறைத்த பின்னர், ஜூலையில் திரும்பி வந்து என் நண்பர் சகோதரர். லென்னெக்ஸ் இயர்வுட் உடன்
(விமானப்படை துணைப்படையில் இருப்பவர்) ஒத்துழைக்க முடிவு செய்தேன், ஏனென்றால் அவரின் யுத்த எதிர்ப்பு
நடவடிக்கைகளுக்காக, குறிப்பாக என்னுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக
இருப்பதாக கூறி அவர் விமானப்படையால் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனவே எங்களின் நாடு பரந்த மனிதநேய ஊர்வலத்தின்போது எனக்கு ஒரு யோசனை
தோன்றியது, அதாவது நான்சி பிலோசி குற்றச்சாட்டுக்களை மீண்டும் கொண்டுவரவில்லை என்றால், நான் 23ம்
தேதி டிசியில் இருந்து, அவருக்கு எதிராக களத்தில் இறங்குவேன் என முடிவு செய்தேன். தற்போது நாம் அந்த
நிலையில் தான் நின்று கொண்டிருக்கிறேன்.
டேவிட் வோல்ஷ்: பல வருடங்களுக்கு முன்பே தங்களின் பிரச்சாரம்
தொடங்கப்பட்ட நிலையில் இருப்பதால், இராணுவ குடும்பங்களில் இருந்து அல்லது ஈராக்கில் இருந்து திரும்பி
இருக்கும் படையினரிடமிருந்து அல்லது தற்போதும் தொடர்ந்து ஈராக்கில் இருப்பவர்களிடம் இருந்து எவ்வகையான
பிரதிபலிப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்?
சின்டி ஷீஹன்: யுத்தத்திற்கு எதிராக ஈராக் முன்னாள் படையினரிடமிருந்தும்
எனக்கு ஒத்துழைப்பு கிடைக்கின்றது. அவர்கள் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். முன்பு சேவையில்
இருந்த ஒரு படையினரில் அல்லது தற்போது பணியில் இருக்கும் ஒரு படையினரில் இருந்து, அதாவது ஐந்திற்கு ஒருவர்
தொடர்ந்து எனக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அவர்கள் அங்கு இருக்க விரும்பவில்லை. அவர்கள்,
அவர்களின் இராணுவ தளபதிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதை புரிந்து கொள்கிறார்கள்.
என் மகனை போன்று அவர்களில் பலர், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாகும்
முன்பாகவோ அல்லது செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகோ தங்கள் பொறுப்புணர்வாக மற்றும் நாட்டுக்கு
செய்யும் சேவையாக கருதி அதில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொறுப்புணர்வு சுரண்டப்படுவதாக
தற்போது கருதுகிறார்கள். ஈராக் யுத்தம், வியட்நாம் யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னால்
நடந்த அனைத்து யுத்தங்களில் கலந்துகொண்ட முன்னாள் படையினரிடம் இருந்தும் எனக்கு நிறைய ஒத்துழைப்பு
கிடைத்து வருகிறது.
டேவிட் வோல்ஷ்: ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், அங்கு
இரத்த வெள்ளம் ஏற்படும் என்ற விவாதத்தின் மீது உத்தியோகபூர்வமான அனைத்து அரசியல் பிரிவுகளிடம் இருந்தும்
நீங்கள் கேள்விப்படுவது என்ன?
சின்டி ஷீஹன்: நான் அசாதாரணமானவள் என்று நினைக்கிறேன், ஏனென்றால்
ஈராக்கியர்களுடன், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள், மூத்த
குடிமக்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் இதுவரை இரண்டு முறை ஜோர்டானுக்கு
பயணித்திருக்கிறேன். அவர்கள் அனைவருமே அமெரிக்கா வெளியேற வேண்டும் என்றே நினைக்கிறார்கள்,
ஏன்னென்றால் அமெரிக்கா வெளியேறினால் வன்முறைகள் அடங்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதில்
அமெரிக்கர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது முக்கியமென்று நான் கருதவில்லை, ஆனால் ஈராக் மக்கள் இதையே
விரும்புகிறார்கள். நான் கண்ட கடைசி கருத்துகணிப்பெடுப்பில் 80 சதவீத ஈராக்கியர்கள் அமெரிக்கா திரும்பி
செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள், ஆக்கிரப்பு முடிவுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக
உள்ளது.
டேவிட் வோல்ஷ்: மே மாத இறுதியில், ஜனநாயக கட்சியைப் பற்றிய
தங்களின் விமர்சனங்களுக்கு பிறகு, தங்களின் அனுபவங்கள் என்ன?
சின்டி ஷீஹன்: ஏற்கனவே என்னை ஆதரித்தவர்களான, டெய்லி கோஸ்
போன்றவர்களும், Democratic Underground
இல் இருந்தவர்களும் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் குரல் கொடுத்து
வருவதை கண்டேன். பின், நான்சி பிலோசியை நான் எதிர்த்து செல்ல முடிவு செய்தபோது, நான் பொதுகுழு
உறுப்பினராக இருக்கும் அமெரிக்க முற்போக்கு ஜனநாயக கட்சி, என்னையும், டெமாக்ரேட்ஸ்.காம்மையும் (Democrats.com)
ஆதரிக்க மறுத்து விட்டது. இது ஒரு விந்தையானதாக இருக்கின்றது. ஏனெனில் நான் எந்த கட்சியிலும் இணையாமல்
இருந்த போது என்ன கூறினேனோ, அதையே கூறும் நபராகவே இருக்கிறேன். நான் அதே இலக்குகளுடன், அதே
செயல்களை செய்து கொண்டு, அதே வார்த்தைகளை சொல்லி வரும் நபராகவே இருக்கிறேன்.
மார்ச், 2005ம் ஆண்டு முதல்
Nation இதழால் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு
இருக்கிறது. அவர்கள் என்னை மற்றும் என் பிரபலத்தன்மையை பலமுறை தமது நலன்களுக்காக சுரண்டியிருக்கிறார்கள்
என்றே நான் கருதுகிறேன். ஆனால் தற்போது அவர்கள் பதிப்பித்து வரும் தலையங்கங்கள், என் நிலையை குழி
தோண்டி புதைத்து வருவதாகவே நான் நினைக்கிறேன். அது என்னை கோப்படுத்தி வருகிறது. நீங்கள் ஜனநாயகக்
கட்சியினரை பற்றி கவலைப்படுகிறீர்களா அல்லது ஜனநாயகத்தை பற்றி கவலைப்படுகிறீர்களா? என்று கேட்கத்
தோன்றுகிறது. இவர்கள் ஜனநயாகக் கட்சியினரை பற்றியே கவலைப்படுகிறார்கள், ஜனநாயகத்தை பற்றி இவர்கள்
கவலைப்படுவதாக நான் எண்ணவில்லை.
டேவிட் வோல்ஷ்: வேட்பாளராக உங்களை அறிவித்த பின்னர், எந்த
வகையான பிரதிபலிப்புகளை நீங்கள் பெற்று வருகிறீர்கள்?
சின்டி ஷீஹன்: அதில் இரண்டு வேறுபட்ட அம்சங்கள் உள்ளன. ஒன்று,
தேசியரீதியான, இதில் சாதகமான பதில்கள் கிடைத்து வருகின்றன. சிலர் மட்டும் தனிப்பட்ட முறையில் என்னை
தொடர்பு கொண்டு, நான் என்ன செய்கிறேனோ, அது தவறான யோசனை என்று தாம் கருதுவதாக கூறி
இருந்தார்கள்.
சான்பிரான்சிஸ்கோவில், பெருமளவில் சாதகமான பதில்கள் கிடைத்திருக்கின்றன.
நான்சி பிலோசியை ஆதரிப்பவர்களிடம் இருந்து இரண்டு மின்னஞ்சல்களை மட்டுமே நான் பெற்றிருக்கிறேன். அவர்
கலிபோர்னியாவின் 8 ஆவது மாவட்டத்தில் மிகவும் வெறுக்கப்பட்டு இருக்கிறார். அவர் தேசியரீதியில் அங்கு எந்த
அளவிற்கு வெறுக்கப்பட்டு இருக்கிறார் என்று துல்லியமாக தெரியவில்லை. அங்கிருக்கும் மக்களில் மூன்றில் இரண்டு
பங்கினர், ஜோர்ஜ் புஷ் மற்றும் டிக் ஷெனி மீது குற்றஞ்சாட்டவே விரும்புகிறார்கள். நான்கில் மூன்று பங்கினர்,
அதற்கு மேலும் கூட இருக்கலாம், துருப்புகள் திரும்பி அழைக்கப்பட விரும்புகின்றனர்.
Presidio
கோட்டையை தனியார்மயமாக்கியது மற்றும் அவரின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட சில நில பேரங்கள் போன்ற
மறைமுக விசயங்களை அவர் செய்திருப்பதால், அவை அந்த மாவட்டங்களில் அவரை மிகவும் வெறுக்கும்படி
செய்திருக்கின்றன.
மிகவும் ஆழமான சிக்கல்களை புரிந்து கொள்ள கூடிய, ஆம், ஜோர்ஜ் புஷ் மற்றும்
டிக் ஷெனியை குற்றஞ்சாட்ட வேண்டி இருக்கிறது, ஆம், நமது துருப்புக்களை திரும்ப அழைக்கவேண்டி இருக்கிறது,
அதே சமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம், தொழிற்துறையின் அதிகாரம் மற்றும் மக்களால் அல்லாமல்
அமெரிக்காவின் அரசியல் அமைப்பு விஷேட நலன்களுக்காக பயன்படுத்தப்படுவது போன்ற அடித்தளத்தில் உள்ள
பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டி இருப்பதை புரிந்து கொள்ள கூடிய ஒரு மிகவும் நவீன மற்றும் அறிவுபூர்வமான
வாக்காளர் தொகுதியாக சான்பிரான்சிஸ்கோ இருக்கிறது.
டேவிட் வோல்ஷ்: இந்த சில ஆண்டுகளில் அரசியல் மற்றும் சமூகம் பற்றிய
உங்களின் சுய பார்வைகள் எவ்வாறு உருவாகி இருக்கின்றன; தற்போது அவை என்னென்ன?
சின்டி ஷீஹன்: யூசிஎல்ஏ இல் நான் ஒரு வரலாற்றுத்துறை பட்டம் பெற்றவர்.
நவீன வரலாற்று வகுப்புகளில் நீங்கள் இருந்தாலும் கூட, அமெரிக்காவின் உண்மையான வரலாறு உங்களுக்கு
கிடைக்காது. நாம் மக்களுக்காக என்ன செய்திருக்கிறோம். நான் எப்போதும் நினைத்திருக்கிறேன், அமெரிக்கா
ஒரு..... உலகத்தில் அமெரிக்கா ஒரு மிக சிறந்த நாடு என நான் ஒருபோதும் நினைத்ததே கிடையாது.
ஆனால் இதுவொரு நல்ல நாடாக இருந்தது மற்றும் நமது அரசாங்கம் பெரும்பான்மை நன்மைகளை
செய்திருப்பதாக நான் நினைத்தேன், மேலும் நன்மைகள் செய்யவும் முயன்றேன். ஆனால் என் மகனின் மரணத்திற்கு
பின், ஈராக் யுத்தத்தை பற்றி அமெரிக்காவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், யுத்தங்களை நாம்
செய்து கொண்டிருப்பதற்கான காரணத்தையும் மற்றும் நமது இராணுவ-தொழிற்துறை அதனுடன் எவ்வாறு
தொடர்புபட்டுள்ளது என்பது பற்றியும் பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறேன்.
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டிற்கும் இடையே முற்றிலும் மாறுபட்ட
வேறுபாடுகள் இருப்பதாக நான் நினைத்திருந்தேன், ஆனால் தற்போது அவற்றிற்கிடையே வேறுபாடுகள்
இருக்குமென்றால் அவை மிக மெல்லிய, மிக சிறிய வேறுபாடாகத் தான் எனக்குத் தெரிகிறது. நாம் மிகவும்
தைரியம்மிக்க ஜனநாயக கட்சியினரை கொண்டிருக்கிறோம், ஆனால் பொதுவாக நாம் ஒரு கட்சி அமைப்பையே
கொண்டிருக்கிறோம். கோர் விடல் இதை வங்கியர் கட்சி என்றழைக்கிறார், நான் இதை யுத்தக்கட்சி என்று
கூறுகிறேன்.
நம் நாட்டில் "தொழிற்துறையின் அதிகாரம்" (Corporatocracy)
நடந்து வருவதாகவே நான் நினைக்கிறேன். இங்கு ஜனநாயகம் இல்லை. ஏன்னென்றால், அரசியல்வாதிகள்,
முக்கியஸ்தர்கள் விரும்புவதை முன்னிறுத்தி செய்வார்களே தவிர, மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய
மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். மக்களுக்கு எது தேவையோ அதை அரசியல்வாதிகள்
செய்வார்களேயானால், ஏற்கனவே குற்றஞ்சாட்டும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் நாம், இந்நேரம்
அவற்றை எல்லாம் முடித்து கொண்டிருப்போம் என்று நான் நம்புகிறேன்.
அமெரிக்க ஏகாதிபத்தியம், இராணுவவாதம் மற்றும் இது போன்ற இன்னும் பலவற்றை
பற்றி நான் மிக நேர்த்தியாக தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் அமெரிக்க மக்களை மட்டுமே முழுமையாக
நம்புகிறேன். நாம் சரியாக வழிநடத்தப்பட்டு, சரியான தகவல்களை பெறுவோமேயானால் நம்மால் சரியான
முடிவுகளை எடுக்க முடியும். எண்பது சதவீத மக்கள் யுத்தத்தை ஆதரித்த நிலையில் இருந்து பெரும்பான்மையாக
நான்கில் மூன்று பங்கு மக்கள் யுத்தத்திற்கு எதிராக இருக்கும் அளவிற்கு ஒரு கடலளவிலான மாற்றத்தை நாம் இந்த
நாட்டில் கண்டு இருக்கிறோம்.
அமெரிக்காவில் தற்போது நடுத்தர மக்கள் பெரியளவில் கடனில் இருப்பதை நாம்
பார்க்கிறோம், நடுத்தர மக்கள் அழிந்து வருகிறார்கள். நமது அனைத்து நல்ல பணிகளும், நமது கூட்டுறவு
பணிகளும், நமது உற்பத்தி பணிகளும், பெருமளவில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன. மக்கள் தலைக்கு மேல்
வெள்ளம் போகாத நிலையில் தான் பணியாற்றி வருகிறார்கள்.
கேசி கொல்லப்படுவதற்கு முன்னர், நாட்டில் எனக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு
முன்னர், நான் மூன்று வேலையை பெற்றிருந்தேன். இதனால் உடல்நல காப்பீடு கிடைக்கும். நமக்கு முறையாக
தகவல் அளிக்கப்பட்டால், நம்மால் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
டேவிட் வோல்ஷ்: இங்கு இரண்டு விதமான அமெரிக்கா இருக்கிறது. ஜோர்ஜ்
புஷ் மற்றும் டிக் ஷெனி, வங்கியாளர் மற்றும் படைத்தளபதிகள் என ஒரு அமெரிக்காவும், யுத்தத்தை விரும்பாத
சாதாரண பொதுமக்களை கொண்ட மற்றொரு அமெரிக்காவும் இருக்கிறது.
சின்டி ஷீஹன்: இங்கு உருவாக்கப்பட்ட மேற்தட்டும் உள்ளது. நாமும்
இருக்கிறோம். ஊடகம், பொருள் நுகர்வு கலாச்சாரம் போன்ற பல காரணிகளும் இருக்கின்றன. மேலும்
ஊடகங்கள் நம்மை கடனுக்குள் தள்ளுகின்றன, நம்மை தொடர்ந்து பணிபுரிய வைக்கின்றன மற்றும் எதிர்ப்புகள்
தெரிவிக்க நம்மை அனுமதிப்பதில்லை. மேலும் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர தேவையான
மாற்றங்களையும் கொண்டு வர முடியவில்லை. மேல்மட்டமான மாற்றங்கள் மட்டும் அல்ல. அமெரிக்காவின்
பெருமளவிலான மக்கள் செய்யப்பட வேண்டிய மேல்மட்டமான மாற்றங்களை நன்கு அறிந்திருப்பார்கள், ஆனால்
அவர்கள் செய்யப்பட வேண்டிய அடிப்படை மாற்றங்கள் குறித்து அவ்வளவாக அறிந்திருக்கமாட்டார்கள் என்றே நான்
எண்ணுகிறேன்.
அமெரிக்காவை அழுத்தி வைத்திருப்பதில் ஊடகம் - அதே மக்களால் நடத்தப்படும்
யுத்தத்திற்கு இலாபம் அளிக்கும் நிறுவன முறை ஊடகம் - ஒரு பெரிய பங்கு வகித்திருக்கிறது. அது மிகவும்
வஞ்சகமானது. இது கடந்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது, குறிப்பாக ரீகனின் காலத்தில்
இருந்து, ஆனால் நாம் விழித்து கொண்டோம், தற்போது நாம் ஜோர்ஜ் புஷ்ஷை கொண்டிருக்கிறோம்.
ஜோர்ஜ் புஷ் ஒரு பிரச்சனையே அல்ல என்று நான் அடிக்கடி கூறி இருக்கிறேன்.
ஜனநாயகத்தின் அடியில் இருக்கும் சீழ்பிடித்த கட்டியாகவே நான் அவரை அழைத்து வருகிறேன். அந்த கட்டியை
நாம் மாற்றலாம், அதனால் என்ன ஆகப் போகிறது? மற்றொரு கட்டி உருவாகும். கட்டியை உருவாக்கும்
காரணத்தை கண்டறிந்து நாம் தீர்க்க வேண்டும். ஒரு அடிப்படையான நிலை, நாம் கொண்டிருக்கும் இந்த கொடிய
புற்றுநோய்க்கு..... .சிலர் நினைப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஹிலாரி கிளிண்டனை
தேர்ந்தெடுப்பது தான் என்றும், அதனால் நம் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும் நினைப்பார்கள்.
அவர்கள் உண்மையிலேயே புரிந்து கொள்ளவில்லை.
டேவிட் வோல்ஷ்: இருகட்சி ஆட்சிமுறை மற்றும் ஏதோ சில வகையான
மாற்றத்தின் தேவை குறித்தும் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். இவற்றிற்கெல்லாம் மாற்றாக எந்த வகையான கட்சி
அல்லது இயக்கத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
சின்டி ஷீஹன்: 2005, ஆகஸ்டின் கேஸி முகாமில் இருந்து, உலகம் முழுவதும்
நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதிகள், துணை
ஜனாதிபதிகள், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து அவர்களின் அமைப்பு முறைகளை தெரிந்து
கொண்டிருக்கிறேன். உங்களின் நம்பிக்கைகள், உங்களின் முக்கிய மதிப்புகள் மற்றும் உங்களின் ஆர்வங்களை
செயல்படுத்தும் ஒரு கட்சி இருக்கத்தக்க பாராளுமன்ற அமைப்பு முறையையே நான் விரும்புகிறேன். நீங்கள் பசுமை
கட்சியை, தொழிலாளர் கட்சியை, சோசலிச கட்சியை, கம்யூனிச கட்சியைச் சார்ந்து இருக்கலாம். அது,
அவர்கள் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக தாம் இருப்பது போன்று அவர்களுக்கு உணர்த்தும் மற்றும் அவர்களும் ஒரு
சில கருத்துக்களைக் கூற முடியும் மற்றும் அவர்களும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருப்பார்கள்.
மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினாலும் கூட, இரண்டு கட்சி ஆட்சிமுறையானது
ஒவ்வொருவரின் வாக்குரிமையையும் பறிக்கிறது. இது முக்கியஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்துவதுடன், மக்களை
முன்னிறுத்துவதில்லை. ஜனநாயகக் கட்சியுடன் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை, குடியரசு கட்சியுடன்
அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை, பசுமை கட்சியுடன் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை, ஆகவே
இவை எல்லாம் எங்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றன. இரண்டு துஷ்டர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? இல்லை.
நான் கூட்டு அரசாங்கத்தையே விரும்புகிறேன். பல்வேறு கட்சிகளை கொண்டிருக்கும் நிலையை ஆராய்ந்து பார்க்கும்
துணிவை அமெரிக்க மக்கள் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நாடு பல கட்சிகளைக்
கொண்டிருப்பது நல்ல விசயம் என்று நான் நினைக்கிறேன்.
என்னை அவர்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ளகூடிய ஒரு கட்சியை நான்
விரும்புகிறேன். மக்கள் அமைதிக் கட்சியை போன்று, அல்லது அது போன்ற வேறு ஏதாவது, அது உண்மையிலேயே
அரசியல் கலந்துரையாடலில், முடிவுகளிள் ஒரு விதமான அரசியல் வசனங்களை கொண்டிருக்க வேண்டும். அது ஓர்
அற்புதமாக இருக்கும்.
டேவிட் வோல்ஷ்: தேசத்தை பற்றிய உங்களின் மனோநிலை என்ன மற்றும்
இந்த நிலையில் உங்களை பற்றிய தேசத்தின் மனோநிலை என்ன?
சின்டி ஷீஹன்: உண்மையிலேயே ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. நான் ஒரு
நாள் சான்பிரான்சிஸ்கோவில் ஒரு முற்போக்கு வானொலி நிலைய நிகழ்ச்சியை கேட்டு கொண்டிருந்தேன்.
யுத்தத்தால் டேய்ன் ஃபெயின்ஸ்டின் (அமெரிக்க செனட் உறுப்பினர்) மற்றும் அவரது கணவர் எவ்வாறு ஆதாயம்
தேடி வருகிறார்கள் என்பது பற்றி Nation
இன் பணிப்பில் ஒரு கட்டுரையை ஒருவர் எழுதி இருந்தார்.
Nation
பின்னர் அதை வெளிவிடவில்லை.
அவர்கள் அதை வெளியிடாததற்கு கோரியிருந்த மன்னிப்பு என்னவென்றால், 'டேய்ன்
ஃபெயின்ஸ்டின் கலிபோர்னியாவில் எவ்வகையிலும் வெல்ல இருக்கிறார், அவரிடம் இருக்கும் செல்வாக்கை நாங்கள்
எவ்வகையிலும் இழக்க விரும்பவில்லை.' என்றிருந்தது. தேர்தல்களுக்கு பின்னர், கத்ரீனா வான்டென் ஹூய்வெல்,
ஃபெயின்ஸ்டினை புகழ்ந்து ஒரு தலையங்கம் எழுதி இருந்தார், அதில் - என்னவொரு அருமையான தலைமை பெண்மணி
என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். ஃபெயின்ஸ்டின் செனட்டில் இருந்தார். வான்டென் ஹூய்வெல் செல்வந்தர், அவர்
இந்த அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார். மேலும் அவர் கெளரவ நிலையை தக்க வைப்பதிலும் பங்கெடுக்கிறார்
என இந்த நபர் மிக தெளிவாக குறிப்பிடுகிறார். ஆகவே,
Nation உடன் நான் இருந்த நிலையை போன்ற
அதே நிலை இருப்பதாக நான் உணர்ந்தேன்.
கத்ரீனா வான்டென் ஹூன்வெல் எனக்கு எழுதிய கடிதத்தில், இது ஒரு வெறும்வாதம்
என்று குறிப்பிட்டு இருந்தார். பிலோசியை ஆதரிக்கின்றோம் என வெளிப்படையாக கூறாமல், அவர்கள் அந்த இரண்டு
கட்டுரைகளை கொண்டு என்ன செய்தார்கள் என்பது தான் அடிப்படையில் என் வேட்பு நிலைக்கு பின்னால் அவர்களால்
செய்யப்பட்ட இரகசிய தந்திரம் என்று நான் நினைக்கிறேன்.
டேவிட் வோல்ஷ்: தற்போது புஷ் நிர்வாகம் ஈரானுடன் ஒரு புதிய யுத்தத்தை
உருவாக்கும் நோக்கத்தில் உள்ளதே.
சின்டி ஷீஹன்: அது உண்மையிலேயே என்னை கவலைப்பட செய்கிறது. ஜனநாயக
கட்சியினர் தமது கடைசி நிதி வழங்கும் சட்டத்தில், இந்த நிதியை நாங்கள் உங்களுக்கு அளித்தால், ஈரான் மீதான
படையெடுப்பின் போது அங்கீகாரம் பெற நீங்கள் மீண்டும் காங்கிரசிற்கு வர வேண்டும் என்ற ஒரு ஷரத்தை
இணைத்திருந்தது. ஜோர்ஜ் புஷ் இதற்கு 'முடியாது' என்று கூறி விட்டார். எனவே ஜனநாயக கட்சியினர் அதை
வெளியில் எடுத்து விட்டனர்.
ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளாக, காங்கிரஸ்
தன்னைத்தானே
மதிப்பிழக்கசெய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. ஜனநாயகக்
கட்சியினர் காங்கிரசின் இரண்டு அவைகளையும் மீண்டும் பிடித்தபோது மாறக் கூடிய பல விசயங்களில் இதுவும்
ஒன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவர்கள் மிகவும் தைரியமாகவும், கடுமையாகவும் ஜோர்ஜ் புஷ்ஷை
எதிர்ப்பதில் செயல்படுவார்கள் என நான் நினைத்தேன். அதையே நான் நம்பினேன், ஆனால் அத்தகைய நிலை
இருக்கவில்லை என்பதை நாம் பார்த்து வருகிறோம். |