Sri Lankan military intensifies drive
against LTTE
இலங்கை இராணுவம் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உக்கிரப்படுத்துகிறது
By Sarath Kumara
11 October 2007
Back to screen version
இலங்கை பாதுகாப்புப் படைகள் அண்மைய வாரங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிரான விமான, தரை மற்றும் கடல் தாக்குதல்களை உக்கிரப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இது பிரிவினைவாத அமைப்பின்
வடக்கு கோட்டை நோக்கிய பெரும் நகர்வுக்கான தயாரிப்பாகும். கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலான
பகுதிகளை கைப்பற்றிய பின்னர், அமைச்சர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் ஜெனரல்களும் புலிகளின் இராணுவ
இயலுமையை அழிக்கும் தமது நோக்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இராணுவத்தின் உக்கிரமான நடவடிக்கைகள், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு
இன்னமும் கட்டுப்படுவதாகவும் முற்றிலும் "தற்காப்பு" நடவடிக்கைகளிலேயே ஈடுபடுவதாகவும் அரசாங்கம் கூறிக்கொள்வதை
கேலிக்கூத்தாக்கியுள்ளது. கடந்த ஞாயிறன்று, மத்சுசீமா என்ற புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்றை கடற்படையினர் இலங்கையின்
தென் கடற்கரையில் இருந்து சுமார் 1,700 கிலோமீட்டர்கள் தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து
மூழ்கடித்ததோடு, அதில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தக் கப்பல், தொலைத் தொடர்பு உபகரணங்கள்,
ரேடார்கள், அதி சக்திவாய்ந்த வெளிப்புற படகு மோட்டார்கள் மற்றும் ஜெட் ஸ்கிஸ்கள் உள்ளடங்கிய இராணுவத் தளபாடங்களை
சுமந்து வந்ததாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின்படி, மத்சுசீமா இந்த ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட ஏழாவது கப்பலும் புலிகளின்
சரக்குக் கப்பல்களில் கடைசியுமாகும். கடந்த மாதம், இராணுவத் தளபாடங்களை கொண்டு சென்ற மூன்று புலிகளின்
கப்பல்களை மூழ்கடித்ததாக அரசாங்கம் அறிவித்தது --இதுவும் தீவில் இருந்து 1,400 கிலோமீட்டர் தூரத்தில் சர்வதேச
கடற்பரப்பிலேயே இடம்பெற்றுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி 40-45 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்துவதற்கு
முன்னதாக கடற்படையினர் இந்தக் கப்பலை நிறுத்தி, தேடுதல் நடத்தவோ அல்லது கைப்பற்றவோ முயற்சித்ததற்கான
அறிகுறிகள் கிடையாது.
இந்த வெற்றி மீதான நன்நிலை உணர்வால், செப்டெம்பர் 17 இந்த ஒரு பக்க கடற்படை
தாக்குதலில் சம்பந்தப்பட்ட கடற்படை சிப்பாய்களை பாராட்டுவதற்காக அரசாங்கம் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இங்கு பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ பிரகடனம்
செய்ததாவது: "இப்போது எங்களால் அடைய முடியாமல் உள்ள அரசியல் தீர்வில் தங்கியிருப்பதற்கும் அப்பால், நாங்கள்
இராணுவப்பலத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதத்தை தோற்கடிக்க தயாராக உள்ளோம்." அவரது கருத்துக்கள், மீண்டும்
சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்பும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டிக்கொண்டுள்ளது.
இராணுவம் தரை மற்றும் விமானத் தாக்குதல்களையும் தொடர்கின்றது. விமானப் படை,
புலிகளின் தலைமைத்துவம் நிலைகொண்டுள்ள கிளிநொச்சி நகரை அண்டிய பிரதேசங்கள் உட்பட புலிகளின் வடக்கு
கோட்டைகள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
செப்டெம்பர் 25, கடற் புலிகளின் தளங்கள் உள்ள பகுதியான வடமேற்கு கடற்கரைக்கு
அருகில் உள்ள பூனகரி மீதும் யுத்த விமானங்கள் குண்டுகளை வீசின. செப்டெம்பர் 29, முல்லைத்தீவு மாவட்டத்தில்
வல்லிப்புனம் பிரதேசம் கடுமையான குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. எதிரிகளின் பயிற்சி முகாம் ஒன்றைத் தாக்கியதாக
அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், விமானப்படை பொதுமக்களின் குடியிருப்புகளை இலக்குவைத்து தாக்குவதாக புலிகள்
குற்றஞ்சாட்டியுள்ளனர். அக்டோபர் 2, கிளிநொச்சிக்கு அருகில் விஸ்வமடு பிரதேசத்தை சேதமாக்க விமானப்படை கிபிர்
ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியது. ஆறு குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளதாக புலிகள் மீண்டும்
குற்றஞ்சாட்டினர்.
இப்போது நடைமுறையில் இல்லாத யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை
கண்காணிப்புக் குழு, சிறியளவிலான தரை மோதல்களை தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. செப்டெம்பர் 24-30
அதன் அறிக்கை, வடக்கு நகரமான வவுனியாவுக்கு அருகில் பம்பைமடுவில் இருந்து மன்னார் வீதியில் முருங்கனை நோக்கி
ஒவ்வொரு நாளும் செல் தாக்குதல்கள் தொடர்கின்றது என அறிவிக்கின்றது.
செப்டெம்பர் கடைசி வாரத்தில், ஆயுதப் படைகள் வடமேற்கில் மன்னார் கடற்கரையில்
இருந்தும் வவுனியாவுக்கு அருகில் ஓமந்தையில் இருந்தும் இரண்டு நிலைகளில் இருந்து தாக்குதல்களை முன்னெடுத்தது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இரு கடற்படை சிப்பாய்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர்
காயமடைந்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என சன்டே டைம்ஸ் பத்திரிகை
தெரிவிக்கின்றது.
கடந்த வாரம் மேலும் மோதல்கள் இடம்பெற்றன. கடந்த புதன் கிழமையும்
வியாழக்கிழமையும் ஓமந்தைக்கு மேற்கே விளாத்திக்குளத்தில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் 25 பேர்
காயமடைந்ததோடு ஒருவர் படுகாயமடைந்ததாகவும் லக்பிமநியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. கடுமையான
மோட்டார் தாக்குதலின் போது ஒரு இராணுவத் தளபதியும் இன்னுமொரு சிப்பாயும் காணாமல் போயுள்ளனர். பின்னர்
புலிகள் அவர்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இராணுவத்திடம் கையளித்தது.
திங்களன்று, மன்னாரில் பாதுகாப்பு முன்னரங்குப் பகுதி மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட
போது நான்கு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கிளாலி கடல்
ஏரிக்கு அருகில் நடந்த மோதல்களில் மேலும் இரு புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். "விடுவித்துள்ளதாக" அரசாங்கம்
கூறிக்கொள்ளும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் புலிகளுடன் சிறிய அளவிலான மோதல்கள் வெடித்துள்ளன.
மேலதிக நன்நம்பிக்கை
கடந்த ஆண்டு புலிகள் இராணுவப் பின்னடைவுகளை எதிர்கொண்டனர் என்பதில் சந்தேகம்
கிடையாது. எவ்வாறெனினும், நாட்டின் 24 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், இராணுவம் பல தடவைகள் புலிகளை
அழிக்க இயலுமையற்றது என்பதை ஒப்புவித்துள்ளது. இராணுவத் துணிச்சலுடன் முன்செல்ல இராஜபக்ஷ அரசாங்கம்
நெருக்குகின்ற அதே வேளை, சாத்தியமான அழிவு பற்றியும், அதே போல் பொருளாதாரத்தின் மீது யுத்தத்தின் தாக்கம்
பற்றியும் மற்றும் கூர்மையான சமூகப் பதட்டங்களின் எழுச்சியைப் பற்றியும் ஆளும் தட்டின் சில பகுதியினர் விழிப்புடன்
உள்ளனர்.
இராணுவ ஸ்தாபனத்துடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டுள்ள பாதுகாப்பு
செய்தியாளரான இக்பால் அத்தாஸ், கடந்த மாதம் புலிகளின் மூன்று கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் எழுதியபோது,
மேலதிக நன்நம்பிக்கைக்கு எதிராக பலமாக எச்சரிக்கை செய்தார். "தரை, கடல் மற்றும் விமானத் தாக்குதல்களை
நடத்திய போதிலும், புலி கெரில்லாக்கள் இராணுவ இயலுமையை தன்வசம் கொண்டுள்ளனர். அவர்களுடன் விவகாரத்தை
கையாள்வதில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிசாரின் தைரியமான பாத்திரத்தை பயனுள்ளதாக பலமாக
ஒப்புக்கொண்டாலும், கெரில்லாக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பிரச்சார குவியலுக்குள் புதைத்துவிடக்
கூடாது. அவ்வாறு செய்பவர்கள் அவர்களை மட்டுமே ஏமாற்றிக்கொள்கின்றார்கள்," என அவர் செப்டெம்பர் 23
சன்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருந்தார்.
செப்டெம்பர் 30 அவர் எழுதிய பத்தியில், கிழக்கு மாகாணம் பூராவும் அரசாங்கத்தின்
"வெற்றி", கூறுவது போல் கவலைக்கிடமற்றது அல்ல என்பதற்கான அறிகுறிகளை அத்தாஸ் சுட்டிக்காட்டினார். அதே
போல், வடக்கில் நடந்த மோதல்களில் "அதிகளவிலான உயிரிழந்தோர் தொகையை" குறிப்பிட்ட அவர் எழுதியதாவது:
"இன்னமும் பெருமளவில் கவலைக்கிடமான மட்டத்திற்கு வந்திருக்காவிட்டாலும், சிறு எண்ணிக்கையிலான கெரில்லாக்கள்
கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் செயற்திறனுடன் உள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை நகரம் மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களைச் சூழ கெரில்லா
புலனாய்வுப் படை உறுப்பினர்கள் நடமாடுவதாக செய்திகள் உள்ளன."
கிழக்கில் "கெரில்லாக்களின் நடவடிக்கை" "சிறியதாக இருந்தாலும் வளர்ச்சிகாண்கின்றது,
ஏனைய கடுமையான பிரச்சினைகளை முன்னறிவிக்கின்றது" என அத்தாஸ் எச்சரித்தார். அரசாங்கமும் இராணுவமும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்றிலும் கடுமையாக தமிழ் துணைப்படை குழுவொன்றிலேயே தங்கியிருக்கின்றன என அவர்
சுட்டிக்காட்டினார். கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான இந்த துணைப்படை, தலைமைத்துவம் கிழக்கை
அலட்சியம் செய்வதாகக் கூறிக்கொண்டு 2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்றது. கருணா குழு மற்றும் அதன் குண்டர்
நடைமுறைகள் சம்பந்தமான வெகுஜன பகைமை வளர்ச்சியடைவதில் சந்தேகம் கிடையாது. இந்தக் கருவி "பல கொலைகள்
மற்றும் கடத்தல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதை" அத்தாசே தெரிவித்துள்ளார். சிலர் அரசியல்
காரணங்களுக்காவும் ஏனையோர் பெருந்தொகையான பணத்தைக் கறப்பதற்காகவும் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது."
உக்கிரேனில் இருந்து மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் சாத்தியமான மோசடிகள்
தொடர்பாக அம்பலப்படுத்தியதற்காக ஏற்கனவே தொந்தரவுக்குள்ளாகியுள்ள அத்தாஸை, அரசாங்கமும் இராணுவமும் செப்டெம்பர்
20 எழுதிய பத்தி தொடர்பாக உடனடியாக கண்டனம் செய்தன. அவரது தகவல்கள் பொய்யானவை, அவை "அரசாங்கத்தின்
மீதும் பாதுகாப்பு படைகள் மீதும் சேறடிப்பதற்காக" செய்யப்பட்டவையே என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
உதிய நாணயக்கார பிரகடனம் செய்தார். அத்தாஸ் "நாட்டுப்பற்றில்லாதவர்" என முத்திரைகுத்திய அவர், "கண்ணுக்குப்
புலப்படாத கைகள் புலிகளுக்கு முண்டு கொடுக்க செயற்படுகின்றன," எனவும் தெரிவித்தார்.
நாணயக்காரவின் கருத்துக்கள் கொழும்பில் கொட்டப்பட்டுள்ள பேரினவாத சூழ்நிலையை
பிரதிபலிக்கின்றது. இது யுத்தத்திற்கு எதிர்ப்பவர்கள் மட்டுமன்றி, இராணுவத்தின் மூலோபாயத்தை எச்சரிக்கையுடன் விமர்சிக்கும்
அத்தாஸ் போன்றவர்களுக்கு கூட எதிரானதாகும். அரசாங்கம் வடக்கில் புதிய இராணுவத் தாக்குதல்களுக்குத் தயாராகின்ற
நிலையில், அது யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அதன் தாக்கத்தையிட்டு வளர்ச்சிகாணும் வெகுஜன எதிர்ப்பு
அலையை நசுக்குவதற்கு முரட்டுத் துணிச்சலுடன் முயற்சிக்கின்றது.
கடந்த ஆண்டு விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களில் தங்கியிருந்த
இராணுவ நடவடிக்கைகள் இப்போது ஆழ்கடல் கடற்படை நடவடிக்கைகளிலும் தங்கியிருக்கின்றது. இவை அனைத்தும் இலங்கை
போன்ற நாடுகளுக்கு அதி கூடிய செலவாகும். இந்த ஆண்டு பாதுகாப்புச் செலவை 45 வீதத்தால் பிரமாண்டமான அளவு
அதிகரித்த பின்னர், அதை அடுத்த ஆண்டுக்கு 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து (1.3 பில்லியன் அமெரிக்க டொலர்)
166 பில்லியன் ரூபா வரை, இன்னும் 20 வீதத்தால் ஊதிப்பெருக்கச் செய்ய அரசாங்கம் தயாராகின்றது.
தவிர்க்க முடியாத விதத்தில், விலை அதிகரிப்பு, அரசாங்கத் துறை தொழில்கள்,
மானியங்கள் மற்றும் சேவைகளில் வெட்டு, அதே போல் பொதுமக்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும்
இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற முறைகளில் சாதாரண உழைக்கும் மக்களே இதன் சுமைகளைத்
தாங்கத் தள்ளப்படுவர். |