World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா கிறைஸ்லர் வேலைநிறுத்த தொழிலாளர்கள் பேசுகின்றனர்: "நிறுவனங்களை போலவே, தொழிலாளர்களும் உலக அளவில் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது." By our reporting team புதனன்று காலை மிச்சிகனில் உள்ள Sterling Heights வாகன வெளித்தகடுகள் மற்றும் தொகுப்பு ஆலையில் கிறைஸ்லர் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை தொடங்கியபோது உலக சோசலிச வலைத் தளம் அவர்களுடைன் உரையாடியது. வேலைநிறுத்தத்தை தொடங்கிய ஆறு மணி நேரத்திற்கு பின்னர் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் (UAW) வேலைநிறுத்தத்தை கைவிட்டுவிட்டது. (See "UAW stages six-hour strike to push through contract betrayal at Chrysler") கிறைஸ்லரில் 13 ஆண்டுகளாக ஒரு உலோகத் தொழிலாளியாக பணிபுரியும் ரொபேர்ட் ஹொக்பேர்க் "பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் எங்கள் நலன்களை மெதுவாக விற்றுக் கொண்டிருக்கிறது; உடன்பாட்டின் மத்தியில் ஒப்பந்தங்களை பாதியில் மீண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தி நிறுவனத்திற்கு அது வேண்டுவதையெல்லாம் கொடுக்கிறது'' என கூறினார். "நீலக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களை மட்டும் குற்றம் கூறுவதற்கு இல்லை. நிர்வாகம் என்ன செய்கிறது? அவர்கள் இந்த ஆலையை நடத்த முடியாது''. "நிர்வாகமும் தொழிற்சங்கமும் ஒரு உள்ளூர் தொழிற்சாலையை மற்றொன்றிற்கு எதிராக மோத விடுகின்றன; "தற்கால செயல்பாட்டு ஒப்பந்தத்தை" ஏற்க வேண்டும் என்று எங்களிடம் வலியுறுத்துகின்றன; இல்லாவிடில் கார்கள் உற்பத்தி செய்வதற்கோ, வேலைகளை தக்க வைப்பதற்கோ எம்மிடம் ஒன்றும் இல்லை என்கின்றன. மூன்று பெரிய கார் தொழிலாளர்களும் ஒன்றாக இணைய வேண்டும், இல்லாவிடில் நமக்கு ஏதும் மிஞ்சப் போவது இல்லை. "செர்பெரஸ் (Cerberus) ஒரு தனியார் நிறுவனம்; அவர்கள் எவருக்கும் பதில் கூறத் தேவையில்லை. அவர்கள் மீது எவ்வித மேற்பார்வையோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லை." கிறைஸ்லரில் 11 ஆண்டுகள் பணியாற்றும், மற்றொரு தொழிலாளி கூறினார்: "நான் வெஸ்டிங்ஹெளசில் பணி புரிந்தேன். கிறைஸ்லரிடம் நான் வந்ததில் இருந்து அவர்கள் வேலைநீக்கம் செய்துவருவதுடன், கார்கள் விற்பனை குறைவிற்கும் தொழிலாளர்களை குறைகூறுகின்றனர். "மணிக்கணக்கு ஊதிய செலவுகள் மட்டும் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ஒரு வாகனத்தின் விலையில் ஊதியங்கள் 10 சதவிகிதம்தான் உள்ளன. இதே ஊதியங்களை கொடுப்பதற்கு Toyoto விற்கு எப்படி கட்டுபடியாகிறது? ஜப்பானிய முறை பற்றி எனக்கு முற்றிலும் தெரியாது; ஆனால் அவர்கள் அமெரிக்காவில் உயர்நிர்வாக அதிகாரிகளுக்கு கொடுப்பதுபோல் தங்கள் உயர்நிர்வாக அதிகாரிகளுக்கு ஊதியங்கள் கொடுப்பதில்லை. "எந்த மனிதன் 3 மில்லியன் டாலர்கள் அல்லது 6 மில்லியன் டாலர்கள் பெறும் தகுதியை கொண்டிருக்கிறான்? எங்களை செர்பெரஸிற்கு விற்றபோது டைம்லர் கிறைலர் தலைவர் Dieter Zetsche 3 பில்லியன் டாலர்களை மேலதிக கொடுப்பனவாக பெற்றார். கிறைஸ்லருடைய முதலாளி Tom LaSorda குறைந்தது 1 மில்லியன் டாலர்களையாவது பெற்றார். "இந்த ஆலையில் இருக்கும் நிர்வாகம் நாங்கள் வேலை பார்க்கும் தகடுகளை அழுத்தும் பெரிய கருவிகள் எதையும் சரிவர பராமரிப்பதில்லை: இதையொட்டி கூடுதலான பயனற்ற வீணான உலோகத் துண்டுகள் விழுகின்றன. அவர்கள் செய்வதெல்லாம் இயந்திரம் ஓடுவதற்காக சிறு திருத்தல்களை மட்டுந்தான். "கிறைஸ்லர் மலிவுவிலை உழைப்பைத்தேடி சீனாவிற்கு செல்ல விரும்புகிறது. இப்பொழுது தென் கொரியாவில் இருக்கும் தொழிலாளிகள் வேலை இழப்பு பற்றிக் குறைகூறுகின்றனர்; ஏனெனில் அங்குள்ள நிறுவனங்கள் அவர்களுக்கு அதிகம் கொடுப்பதாக நினைக்கின்றன. நிறுவனங்கள் போலவே, தொழிலாளர்கள் உலகந்தழுவிய அடிப்படையில் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நான் கருதுகிறேன். "மிச்சிகன் பொருளாதாரம் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு பின்னர் சந்தைச் சரிவு ஏற்பட்டால், VEBA விற்கு [தொழிற்சங்கக் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியம்] என்ன நேரிடும்? அதைத்தவிர சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள அனைத்து 401(k) ஓய்வுதியத் திட்டங்களுக்கும் என்ன நேரிடும். அவற்றிற்கு மதிப்பு ஏதும் இராது. "வோல் ஸ்ட்ரீட் கண்ணோட்டத்தில் இந்த ஒப்பந்தங்கள் மிகச்சிறந்தவை. எங்களைப் பொறுத்த வரையில் அவ்வாறு அல்ல." கிறைஸ்லரின் Sterling House தொகுப்பு தொழிற்சாலையில் எட்டு ஆண்டுகளாக தொழில்புரியும் ஒரு இளந்தொழிலாளியாக இருக்கும் Apollo Falconer, "நாங்கள் கேட்பது எல்லாம் நியாயமும், எங்களை சுரண்டக்கூடாது என்பதும்தான். ஓய்வு பெற்றவர்கள் நம்பியிருக்கும் சுகாதார நலன்களுக்கு என்ன நேரிடும்? நாங்கள் ஊதிய வெட்டுக்களை விரும்பவில்லை'' எனக்கூறினார்: "VEBA யை பொறுத்த வரையில், தொழிற்சங்க அலுவர்கள் பணத்தை ஏப்பம் விடுவர் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்; எப்படி, எங்கு போயிற்று என்று ஒருவருக்கும் தெரியவராது. ஓய்வு பெற்றவர்கள் பலரும் இங்கு உழைத்ததினால் முதுகு வலி உட்பட இன்னும் பல உடலியல் உபாதைகளை கொண்டுள்ளனர். "இளந் தொழிலாளிகளுக்கு இங்கு உறுதியற்ற வருங்காலம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு வேலை இருக்குமா? என்னுடைய ஊதியங்கள் வெட்டப்பட்டுவிடுமா? நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது; ஆனால் ஓய்வு பெறும்போது ஓய்வூதியத் திட்டம் ஏதும் எனக்குக் கிடைக்குமா? "இங்குள்ள பொருளாதாரம் முழுவதும் தொழிலாளர்கள் நல்ல ஊதியங்களை பெறுவதில் அடங்கியுள்ளது. இப்பொழுது வேலையின்மை பெருகிவருகிறது; பலர் தங்கள் வீடுகளை ஏலத்திற்கு விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நான் அறிவேன். "செர்பெரஸ் இங்கு எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவை சம்பாதிக்க முயல்கிறது. ஒரு அமெரிக்கருக்கு சொந்தமான நிறுவனத்தில் இப்பொழுது இருப்பதாக கூறுகிறார்கள். பெரிய விஷயம்தான். அதனால் ஜேர்மனியர்கள் உடைமையாளர்களாக இருந்ததை விட எங்களுக்கு நலன்கள் அதிகமாகிவிட்டனவா? எப்படிப் பார்த்தாலும் அதன் பொருள் என்ன? டோயோடாவில் இருந்து வந்துள்ள நிர்வாகியைத்தான் நாங்கள் கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு அவர் மற்றொரு நிறுவனத்திற்கு போய்விட முடியும். அவருக்கு அப்படியும் பெரிய மேலதிக கொடுப்பனவு கிடைக்கும். "ஈராக்கில் போர் நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒரு டிரில்லியன் டாலர்கள் கிடைக்கும்; ஆனால் சுகாதாரப் பாதுகாப்பு, நல்ல பள்ளிகள் ஆகியவற்றிற்கு பணம் இல்லை என்று கூறுகின்றனர்; இது உண்மையில் மோசமான நிலைதான்." 34 ஆண்டுகளாக கிறைஸ்லரில் பணி புரியும் ஜோ பேக்கர், "செர்பெரஸ் பெரும் பொருள் ஈட்டத்தான் இங்கு வந்துள்ளது. கார்த் தயாரிப்பு பற்றி ஒரு தனியார் பங்கு நிறுவனத்திற்கு என்ன தெரியும்? என கூறினார். "அனைத்து மூலப் பொருட்களும் நிறுவனத்தில் இருந்தாலும், 30 நாட்களில் நாங்கள் வெளியேற்றப்படலாம்; அது அவர்களை பாதிக்காது. மூன்று பெரிய நிறுவனங்களின் தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் வெளிவரவேண்டும். அது ஒன்றுதான் வோல் ஸ்ட்ரீட்டை பெரிதும் பாதிப்பிற்கு உட்படுத்தும். "போர்ட் இன்னும் பெரிய விட்டுக்கொடுப்புகளை கேட்கிறது. ஜெனரல் மோட்டர்ஸில் அவர்கள் இரு அடுக்கு ஊதியமுறையை கொண்டுவந்து விட்டனர். அது மிக மோசமானது ஆகும். நான் ஒரு மணி நேரத்திற்கு $30 பெறுகிறேன்; எனக்கு அடுத்தாற்போல் அதே வேலையை நீங்கள் செய்தால் உங்களுக்கு $15தான் கிடைக்கும்? ''VEBA விற்கு ஜெனரல் மோட்டர்ஸின் பங்குகள் கொடுக்கப்பட்டவுடன் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஜெனரல் மோட்டர்சின் மிகப் பெரிய பங்குதாரர் அமைப்பாக ஆகிவிடும் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் யாருக்காக உழைக்கப் போகின்றனர்? எங்களுக்காக அல்ல, ஜெனரல் மோட்டர்ஸிற்க்குத் தான்." ஒரு உலக சோசலிச வலைத் தள நிருபர் டிலாவரில் உள்ள வில்மிங்டன் Mopar உதிரிப்பாக ஆலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் வேலைநிறுத்தம் வாபஸ்பெறப்படுவதற்கு அரை மணி முன்பு பேசினார். ஆலையில் உள்ள ஒரு தொழிலாளரான Mark, தொழிற்சங்கக் கட்டுப்பாட்டில் உள்ள VEBA ஐ தான் கடுமையாக எதிர்ப்பதாக கூறினார்: "என்னுடைய ஓய்வூதிய நிதியத்தை தொழிற்சங்கம் பராமரிப்பதை நான் விரும்பவில்லை. அது நிர்வாகத்தின் பொறுப்பு ஆகும்." |