World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காUS general fires a new propaganda salvo against Iran அமெரிக்க இராணுவத் தளபதி ஈரானுக்கு எதிராக பிரச்சார பீரங்கியை முழக்குகிறார் By Peter Symonds ஈராக்கில் உள்ள அமெரிக்க உயர் தளபதி டேவிட் பெட்ரீயஸ், ஈரானுக்கு எதிரான பிரச்சாரப் போரை இன்னும் கூடுதலான ஒலித்தரத்திற்கு உயர்த்தி ஈரானிய புரட்சிகர காவலர் பிரிவினரின் (Iranian Revolutionary Guard Corp --IRGC) Quds Force தான் ஈராக்கிலுள்ள அமெரிக்க துருப்புக்கள் இறக்க காரணம் என்னும் புதிய குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஈரானிய எல்லை அருகே உள்ள ஒரு இராணுவத் தளத்தில் கடந்த வார இறுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள், வாஷிங்டனில் இருந்து வந்த தொடர்ந்த கசிவுகளை அடுத்து வெளிவந்து புஷ் நிர்வாகம் "பயங்கரவாத-எதிர்ப்பு முறையை" ஈரானுக்கு எதிராக நடத்தவுள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு போலிக் காரணமாக பயன்படுத்தலாம் என்ற குறிப்பைக் கொடுத்துள்ளன. பாக்தாத்தில் உள்ள தெஹ்ரானின் தூதரான ஹாசன் கசேமி கோமி, புஷ் நிர்வாகம் "பயங்கரவாத அமைப்பு" என்று முறையாக முத்திரையிடுவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் சிறப்புப் பிரிவான Quds Force ல் உறுப்பினர் என்று ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தார். கசேமி தூதரக விதிவிலக்கு கொண்டுள்ளார் என்பதை பெட்ரீயஸ் ஒப்புக் கொண்டாலும், "எனவே [பரிசீலனைக்கு] உட்படுத்தப்பட முடியாது என்பது வெளிப்படை" என்றார்; ஆனால் தளபதியின் கருத்துக்கள் தூதர் வெளியேற்றப்பட வேண்டும் அல்லது பிற தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு தளம் கொடுத்துள்ளது. அமெரிக்க இராணுவம் கடந்த ஓராண்டில் பல ஈரானிய அதிகாரிகளை சிறைபிடித்துள்ளது; இதில் அங்கீகாரம் பெற்றுள்ள தூதர்களும் அடங்குவர். கடந்த டிசம்பரில் அமெரிக்க துருப்புக்கள் குறைந்தது இரு தூதர்கள் உட்பட ஐந்து ஈரானியர்களை காவலில் வைத்து, ஈராக்கிய ஷியைட் போராளிகளுக்கு உதவுவதில் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒட்டி ஈராக்கிய அரசாங்கம் அவர்களை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம், "அமெரிக்கா ஈராக்கில் இருக்கும் ஈரானிய இணையங்களை தேடிப்பிடித்து அழிக்கும்" என்று ஜனாதிபதி புஷ் அறிவித்த சில மணி நேரங்களில், அமெரிக்க சிறப்புப் படை பிரிவினர் வட ஈராக் நகரமான இர்பில்லில் ஒரு ஈரானிய தொடர்பு அலுவலகத்தை தாக்கி நுழைந்தனர். அதிகாலை தாக்குதலில் ஐந்து ஈரானிய அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த மாதம் அமெரிக்க துருப்புக்கள் ஈரானிய அதிகாரி Aghai Farhadi ஐ காவலில் வைத்தனர்; இவர் குர்திஷ் வட்டார அரசாங்கத்துடன் வணிகப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக வந்திருந்தார். பர்ஹடியும், இர்பில் நகர ஐவரும் Quds Force உறுப்பினர்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது; இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஈராக்கிய அரசாங்கம் கோரிக்கைவிடுத்தும் இவர்கள் இன்னமும் சிறையில் உள்ளனர். கடந்த வாரம் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் செயல்பிரிவுத் தளபதியான Raymond Odierno வாஷிங்டன் போஸ்ட்டிடம், "இராணுவ வகையில் இர்பில் ஐவரை நாங்கள் காவலில் வைக்க வேண்டும்." என்றார். ஈரானிய அதிகாரிகளை பிடித்து வைப்பதில் இராணுவத்திற்கு என்ன மதிப்பு என்பது பற்றி அவர் விரிவாகக்கூறவில்லை. ஆனால் செய்தித்தாள் ஏப்ரல் மாதம் அவர்கள் விதியைப் பற்றி வெள்ளை மாளிகையில் நடந்த விவாதத்தில் துணை ஜனாதிபதி டிக் செனி ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் இது தெஹ்ரானுக்கு அதன் "நடவடிக்கைகள் கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளன என்ற தகவலை, அதாவது ஐவரும் பிணைக் கைதிகளாக பயன்படுத்தப்படுவர் என்பதை உணர்த்தும் என்று கூறினார். ஈரானிய தூதருக்கு எதிரான பெட்ரீயஸ்ஸின் குற்றச் சாட்டுக்கள் மற்ற ஏராளமான குற்றச் சாட்டுக்களின் ஒரு பகுதிதான். IRGC "அமெரிக்க துருப்புக்களை கொல்லும் வகையில் நடத்தப்படும் செயற்பாடுகள் சிலவற்றிற்கும், இன்னும் எதிர்ப்பிற்காக ஆயுதங்கள், பயிற்சி, நிதியம் ஆகியவற்றை கொடுத்துள்ள பொறுப்பை உடையது" என்று குற்றம் சாட்டியுள்ளார். IRGC 125,000 பேரை கொண்ட ஈரானிய இராணுவத்தின் ஒரு பகுதியாகும். CNN க்குத் தெரிவித்த கருத்துக்களில் பெட்ரீயஸ் அறிவித்தார்: "ஈரான் மிக நவீன RPG க்களை (ராக்கெட் மூலம் இயக்கப்படும் எறிகுண்டுகள்), RPG 29 களை அளித்துவருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஒரு சில தோள்மட்ட வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் கூடக் கொடுத்துள்ளது. சாலையோர குண்டுகள் என அழைக்கப்படும் வெடிப்புத் தன்மை நிறைந்த எறிகுண்டுகளையும் கொடுத்துள்ளது; சில 244 MM ராக்கெட்டுக்களையும், சிறு பீரங்கிகளை தவிர, சிறு பீரங்கி வெடி மருந்துகள் இன்னும் சிறிய வெடிபொருட்கள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளது."ஈரானியர்கள் "தெற்கு மாநிலங்களில் இருந்த சில கவர்னர்களின் படுகொலைகளில் தொடர்பு கொண்டுள்ளனர்" என்றும் தளபதி கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆதரவில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய தூதர்கள் இடையில் நடைபெற்ற அமெரிக்கத் தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பை ஸ்திரப்படுத்துதல் பற்றிய பேச்சுக்களை குறிப்பாக அவர் . புறந்தள்ளிவிட்டார். ஈரானிய உறுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், பெட்ரீயஸ், " இப்பொழுதே செயலில் 'எனக்கு காட்டு' என்பதில் நாங்கள் பெரிதும் இருக்கிறோம்" என்று கூறினார். பெட்ரீயஸின் எரியூட்டும் கருத்துக்கள், ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் மற்றும் பயிற்சி அளிக்கிறது என்ற வெள்ளமெனப் பெருகி வரும் அமெரிக்கப் பிரச்சாரத்துடன் இணைந்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகள் இப்பொழுது வாடிக்கையாக அதன் ஷியைட் பகுதிகளின் மீதான தாக்குதல்கள் "ஈரானிய ஆதரவு பெற்ற போராளிகள் நடத்திய தாக்குதலின் செயல்" என்று வர்ணிக்கின்றனர். கடந்த வெள்ளியன்று, டியாலா மாகாணத்தில் உள்ள முக்கியமான ஷியைட் கிராமத்தின்மீது வான்வழித் தாக்குதல்கள் குறைந்தது 25 பேரையாவது கொன்றன. அமெரிக்க இராணுவம் இந்த செயல்பாடு ஒரு "சிறப்புப் பிரிவினரை" இலக்கு கொண்டு நடத்தப்பட்டது என்றும் அதன் தலைவர் Quds படையுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் ஷியைட் போராளிகள் என்றும் கூறியது. ஒரு ஈராக்கிய போலீஸ் செய்தித் தொடர்பாளரும் சாட்சியும் AFP இடம் அத்தாக்குதலில் குறைந்தது நான்கு வீடுகளாவது தாக்கப்பட்டன என்றும் மகளிரும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தார். அமெரிக்கப் பிரச்சாரம் 2002 மற்றும் 2003 ஆரம்பத்தில் ஈராக் மீது சட்டவிரோத படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்காக கூறப்பட்ட அடுக்கடுக்கான பொய்களைத்தான் நினைவிற்கு கொண்டுவருகிறது. ஈராக்கில் ஈரானியக் குறுக்கீடு பற்றிய தன்னுடைய கூற்றுக்களை நியாயப்படுத்த பென்டகனின் ஒரே முயற்சி பெப்ருவரி மாதம் பாக்தாத்தில் செய்தியாளர் குழு ஒன்றிடம் கொடுக்கப்பட்ட கோப்புத் தொகுப்புத்தான். ஈரானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இயக்கப்படும் எறிகுண்டுகள், கையெறிகுண்டுகள் மற்றும் வெடிக்கும் தன்மையுடைய பொருட்கள் அனைத்தும் தெஹ்ரான் ஆயுதம் கொடுப்பதற்கு "நிரூபணம்" என்று காட்டப்பட்டன. "ஈரானிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்கள் தொடர்புடையவை" என்று அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்கப்பட்டதற்கு, பெயரிடாத அமெரிக்க அதிகாரி அவருடைய அத்தகைய முடிவு "ஒரு அனுமானம்தான்" என்று கூறிப்பிட்டார். பிரிட்டனுக்கு "உடன்பாடு" தெஹ்ரானுக்கு எதிரான சொற்போர் இப்படிப் பெருகியுள்ள தன்மை வெள்ளை மாளிகையின் தந்திரோபாய மறுதிசைவழிப்படுத்தலுடன் இணைந்துதான் உள்ளது. கடந்த வாரம் New Yorker ல் வந்துள்ள விரிவான கட்டுரை ஒன்றில், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் செய்தியாளர் சேமர் ஹெர்ஷ், புஷ் நிர்வாகம் ஈரானுடனான போருக்கு போலிக் காரணத்தை, ஈரானிடம் இருப்பதாக கூறப்படும் அணுசக்தித் திட்டத்தில் இருந்து ஈராக்கில் "குறுக்கீடு செய்கிறது என்று நகர்த்தியுள்ளது. ஹெர்ஷின் ஆதாரங்களின்படி, IRGC பயிற்சி மூகாம்கள், வெடிமருந்து சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உயர் ஆணை, கட்டுப்பாடு நிலையங்கள் மீது வான்வழியில் ஏவுகணைகளும் துல்லியமாக இயக்கப்படும் வெடிமருந்து எறிகுண்டுகளும் இராணுவத் திட்டத்தில் உள்ளன என்றும், இவை மிக முன்னேற்றமான கட்டத்தில் உள்ளன என்றும் இவற்றிற்கு கடற்படைக் கப்பல்களும், ஆகாய விமானங்களும் ஆதரவிற்கு நிற்கின்றன என்றும் கூறியுள்ளார். இப்படி இலக்குகள் மாற்றத்திற்கான ஒரு காரணம் ஈரான் அணுசக்தி நிலையங்கள் பற்றி புதிய ஐ.நா.பாதுகாப்புக் குழுத் தீர்மானத்திற்கு ரஷ்யாவும் சீனாவும் காட்டியுள்ள எதிர்ப்பு ஆகும். கடுமையான பொருளாதாரத் தடைகள் நவம்பர் மாத இறுதிவரை தாமதப்படுத்தப்பட்டுள்ளன; ஈரானுக்கு எதிரான ஐ.நா. அனுமதிக்கும் இராணுவ நடவடிக்கையை இந்த இரண்டு தடுப்பதிகார சக்திகள் ஏற்கும் என்று கூறுவதற்கும் இல்லை. போருக்கான காரணத்தை மாற்றும் வகையில், வெள்ளை மாளிகை தற்காப்பிற்காக செயல்படுவதாக கூறலாம் "ஈரானிய" நிகழ்வு ஒன்றிற்கு விடையிறுக்கும் வகையில் ----தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தயாரிப்பாக இருக்கலாம்---- அது அமெரிக்கத் துருப்புக்கள் இறப்பதை தவிர்க்க என்று ஐயத்திற்கு இடமின்றிக் கூறும். இத்தகைய தந்திரோபாயங்களின் மாற்றம் நெருக்கமான நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் அமெரிக்க முயற்சிகளுடனும் பிணைந்துள்ளது. இத்திட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து "மிக நேரிய வரவேற்பை" பெற்றுள்ளது என்று ஹெர்ஷ் குறிப்பிடுகிறார்; மேலும் ஆஸ்திரேலியா, இஸ்ரேல் இன்னும் சில நாடுகளும் "இது பற்றி அக்கறை காட்டியுள்ளதாகவும்" கூறுகிறார். ஆனால் பிரிட்டனை தளமாகக் கொண்டுள்ள Telegraph நேற்று பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் இத்திட்டத்தை எண்ணிப்பார்க்க மட்டுமில்லை, ஈரான்மீதான அமெரிக்க விமானத் தாக்குதல்களில் உடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கிறது. ஈரானின் அணுவாயுத நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டிஷ் ஆதரவு கிடையாது என்று பிரெளன் கூறிவிட்டதாக டெலிகிராப் தெரிவிக்கிறது; ஆனால் IRGC மீது தாக்குதல் நடத்துவதற்கு அது ஆதரவைக் கொடுக்கும். "ஒரு பயங்கரவாத-எதிர் நடவடிக்கை என்ற முறையில் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றால் பிரிட்டன் அதற்கு ஆதரவு தரும் என்ற குறிப்பை ஜனாதிபதி புஷ் பிரெளனுடன் ஜூலை மாதத்தில் பெற்றார். அதன் பின் பிரிட்டன் எந்த அளவிற்கு இராணுவ உதவியைத் தரமுடியும், அமெரிக்க விமானத் தாக்குதலை தொடர்ந்து ஈரான் கொடுக்கும் பதிலடியை எப்படிச் சமாளிக்கும் என்பவை மந்திரிகளாலும், அதிகாரிகளாலும் பென்டகன், மற்றும் பாதுகாப்பு அமைச்சரகத்தில் விவாதிக்கப்படுகின்றன" என்று செய்தித்தாள் கூறியுள்ளது. முன்னாள் உயர்மட்ட CIA அதிகாரியான Vincent Cannistrato டெலிகிராப்பிடம் அவருக்கு அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறைகளில் இருந்து வந்துள்ள தகவல்கள்படி, பிரிட்டிஷ் போர்விமானங்கள் ஆரம்பத் தாக்குதலில் நேரடியாக தொடர்பு கொண்டிராது என்றார். "பிரிட்டிஷார் இத்திட்டத்திற்கு முக்கிய துணையாக இருப்பர். இது அரசியல் காரணங்களுக்காக மட்டும் அல்ல: வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா கண்ணிகளை (Mine) அகற்றும் திறனை அதிகம் கொண்டிருக்கவில்லை. டச்சுக்காரர்களும், பிரிட்டிஷாரும் செய்வர். கடற்பிரிவில் பிரிட்டன் எத்தகைய பங்கை கொள்ளும் என்பது பற்றி பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகளுடன் புதிய விவாதங்கள் நடத்தப்படும். ஈரானியர்கள் பதிலடி கொடுத்தால் அவர்கள் ஹார்மஸ் ஜலசந்தியையே (Straits of Hormuz) மூடிவிடமுடியும்; அது முழு மேலைப் பகுதியையும் பாதிக்கும்" என்று அவர் கூறினார். இந்தக் கசிவுகளை கீழமுக்கும் வகையில் பிரெளன் நடந்து கொண்டுள்ளார். டெளனிங் தெரு செய்தித்தொடர்பாளர் ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்: "பிரதம மந்திரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி நடத்திய உரையாடல்களின் முக்கிய அம்சங்களை பற்றி நாங்கள் கருத்துக் கூறாவிட்டாலும், இப்படி நடந்ததாகக் கூறப்படுவதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இருவரும் ஜூலையில் ஈரான் பற்றிப் பேசினார்கள் என்று "பிரெளனுக்கு நெருக்கமாக இருக்கும் ஆதாரம் ஒன்று" தெரிவித்ததாக டெலிகிராப் கூறுகிறது. IRGC ஐ வான்வழிப் போர் மூலம் தாக்குதற்கு பிரிட்டனின் ஆதரவு, புஷ் நிர்வாகத்தின் ஈராக்கில் ஈரானின் குறுக்கீடுகள் பற்றி மட்டும் அல்லாமல் ஆப்கானிஸ்தானத்திலும் அது செய்வதாகக்கூறப்படும் குறுக்கீடுகள் பற்றிய கருத்துக்களின் விரிவாக்கத்துடன் பிணைந்துள்ளது. ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க அதிகாரிகள் ஈரான் தன்னுடைய முன்னாள் விரோதியான தாலிபானுக்கு ஆயுதங்கள் வழங்குவதாகக் கூறுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஈராக்கில் அல்-கொய்தாவிற்கு ஆயுதங்கள் கொடுத்துவருவதாகவும், அமெரிக்க தளத்தின்மீது நடைபெற்ற ராக்கெட் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் காங்கிரசிற்கு கொடுத்த அறிக்கையில் தளபதி பெட்ரீயஸ் ஈரான் ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக "ஒரு மாற்றுப் போரை" நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.நியூ யோர்க்கர் மற்றும் டெலிகிராப் கட்டுரைகள் இரண்டுமே புஷ் இதுவரை "நிர்வாக உத்தரவு" ஏதையும் கொடுக்கவில்லை என்று கூறுகின்றன. ஆனால் ஈராக்கில் ஒரு புதிய இராணுவ சாகசத்திற்காக வாஷிங்டனில் காட்டப்படும் அரசியல் வேகம் பிழைக்கு இடமில்லாமல் உள்ளது. கட்டுரைகள் வான்வழித் தாக்குதலின் குறைந்த வரம்பையும் வலியுறுத்துகின்றன. ஆரம்ப கணிப்புக்கள், திட்டங்கள் எப்படி இருந்தாலும், ஈரான் மீதான எந்தத் தாக்குதலும் ஒரு பெரிய போராக விரைவில் மாறக்கூடும் திறனைக் கொண்டுள்ளது; அது ஒரு பெரிய பிராந்திய பூசலைக் கொண்டுவரும். புஷ் நிர்வாகத்தின் முக்கிய இலக்கு IRGC ஐ அழிப்பதோ, ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதோ கூட அல்ல; மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றின்மீது சவாலுக்குட்படுத்த முடியாத அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுதல் என்பதுதான். |