WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Jim Lawrence, GM worker and 2004 SEP vice presidential candidate, speaks
on UAW-GM contract "Workers can no longer afford this system"
ஜெனரல் மோட்டார்ஸ்
தொழிலாளரும், 2004ம் ஆண்டில் சோசலிச
சமத்துவக் கட்சியின் அமெரிக்கத் துணை ஜனாதிபதி
வேட்பாளருமான ஜிம் லோரென்ஸ்
UAW-GM ஒப்பந்தம் பற்றிக் கூறுகிறார்:
"தொழிலாளர்களால் இந்த அமைப்புமுறையை பொறுத்துகொள்ளமுடியாது"
By our reporter
9 October 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் ஓய்வு பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ்
தொழிலாளியும், ஓகையோ டேடன் லோக்கல் 696 ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க உறுப்பினருமான ஜிம்
லோரென்ஸை பேட்டிக் கண்டனர். 1970 ஜெனரல் மோட்டார்ஸ்
வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற மூத்த தொழிலாளியான ஜிம்
லோரென்ஸ் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கின் நீண்ட நாளையை
உறுப்பினர் ஆவார். 2004 தேர்தலில் அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக
இருந்தார்.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உடன்பட்டுள்ள
ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி லோரென்ஸ் பேசினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய
சுகாதார நலன்கள் என்னும் நிறுவனத்தின் சட்டபூர்வக் கடமைகளை இந்த ஒப்பந்தம் அகற்றிவிடுவதுடன்
VEBA எனப்படும்
தன்னிச்சையான வேலைவழங்கும் நல அமைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறது; இது தொழிற்சங்கத்தால் நடாத்தப்படும்
ஒரு பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஓய்வு பெற்றவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நிதியம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் ஒரு இரண்டு அடுக்கு ஊதிய முறையை நிறுவுகிறது; அது புதிதாக
வேலைக்கு சேரும் தொழிலாளர்களின் ஊதியங்களை பாதியாகக் குறைப்பதுடன் அவர்களுடைய ஓய்வூதிய நலன்களை
அகற்றி அவர்களுடைய சுகாதார நலன்களையும் குறைத்துவிடும். ஏனைய சலுகைகளை தவிர, இது நடப்பில் இருக்கும்
நான்கு ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை என்று கூறுவதுடன் வாழக்கை விலை ஏற்றத்துடன் சரிசெய்வதற்கு
ஒதுக்கப்படும் நிதியையும் திசைதிருப்புகிறது; இவை ஜெனரல் மோட்டார்சின் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களுக்கும்
VEBA
வின் நிதியத்திற்கும் அவை செல்லும். அதைத்தவிர, இது தொடர்ந்த பல ஆலைகள் மூடப்படுவதற்கும் வகை செய்யும்.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க - ஜெனரல் மோட்டார்ஸ் ஒப்பந்தம்
WSWS: பேச்சுவார்த்தைகள் மூலம்
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில் இருக்கும்
VEBA திட்டம்
பற்றி உங்கள் கருத்து என்ன?
JL:
VEBA
திட்டம் என்பது, கார் தொழிலாளர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்டிக்கொடுப்பைத்தான் பிரதிபலிக்கிறது.
தங்களுடைய சுகாதாரப் பாதுகாப்பிற்கு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை நம்பும் ஒரு ஓய்வு பெற்ற
அல்லது பணிபுரியும் ஒரு தொழிலாளரை கூட நான் கண்டதில்லை. ஆலைகளை மூடுவதற்கும், வேலைப் பளுவை
அதிகரிப்பதற்கும் அதே நேரத்தில் ஊதியக் குறைவுகளை ஏற்படுத்துவதற்கும் கார்த்தொழில் அதிபர்களுடன் இணைந்து
செயலாற்றும் ஒரு அமைப்பை நாம் எப்படி நம்ப முடியும்? என்பதுதான் வினாவாக எழுந்துள்ளது. 600,000
வேலை இழப்புக்கள் ஏற்பட்டன என்பது ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் முற்றிலும் பயனற்றத்தன்மைக்கு
நிரூபணம் ஆகும்; மேலும் பொதுவாக தொழிற்சங்கவாதம் கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னோக்கினது நிரூபணமும்
ஆகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக போராட்டம் ஒரு அரசியல் தன்மையுடையது, தங்கள்
தேவைகளை கவனிக்கக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தை முன்கொண்டுவருவதற்கான மற்றும் அதை ஆதரிப்பதற்கான
உழைக்கும் மக்களின் அரசியல் சுயாதீனம் பற்றிய பிரச்சினை ஆகும்.
ஏனைய ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க ஒப்பந்தங்களை போலவே,
VEBA உடன்பாடும்
இரண்டு கருத்துக்களை கொண்டுள்ளது; கார் தொழிலதிபர்களின் இலாபங்களை பெருக்குவது மற்றும் ஐக்கிய கார்
தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தினரின் பைகளை நிரப்பிக்கொள்வது என்பதே அவை. அனைத்து கார்
தொழிலாளர்களும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்; ஏனெனில் இந்த
ஒப்பந்தம் கார் தொழிலாளர்களுக்கு ஒரு பின்னடைவு என்பது மட்டுமில்லாமல், நாட்டில் இருக்கும் தொழிற்துறை
தொழிலாளர்கள், மற்றும் உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் ஏற்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
WSWS: VEBA திட்டத்திற்கு
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஏன் உடன்பட்டது?
JL: உறுப்பினர்கள் எண்ணிக்கை
குறைவினால் கட்டண வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக, இந்த பெரிய ரொக்கக் குவிப்பை அதிகாரத்துவத்தின்
சலுகைகள் மற்றும் பிற சலுகைகளை காப்பதற்கு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் முற்படுகிறது. அதே
நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை உலகின் பெரும் நிதிய அமைப்புக்களில்
ஒன்றாக மாற்றுவதோடு, தொழிற்சங்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் இலாபம் அடைவதற்காக
தொழிலாளர்களின் நலன்கள் இன்னும் கூடுதலாக குறைக்கப்பட வேண்டும் என்பது அதன் இலக்காக போய்விடும்.
WSWS: வோல் ஸ்ரீட்
இத்திட்டத்திற்கு ஆதரவு தருவதாக நாங்கள் அறிகிறோம்.
JL: எவருக்கு இத்திட்டம் ஆதாயம்
என்பதற்கு இது மற்றொரு அடையாளம் ஆகும். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தத்தை
செய்துகொண்டது என்ற செய்தி வந்தவுடன் ஜெனரல் மோட்டார்சின் பங்கு ஒரே நாளில் 9.4 சதவிகிதம்
அதிகமாயிற்று. இது வியக்கத்தக்கதாகும்; நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு
தொழிற்சங்கம் நிறுவனத்தின் செல்வத்தை உண்மையில் ஒரே நாளில் இந்த அளவிற்கு உயர்த்தும் என்பது
வியக்கத்தக்கது ஆகும்.
WSWS: COLA எனப்படும்
வாழ்க்கை செலவு உயர்வை சரிசெய்தலில் ஒரு பகுதி
VEBA திட்டத்திற்கு திசை திருப்பப்படும், அது ஜெனரல்
மோட்டார்சின் சுகாதார செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும், ஊதிய உயர்வு ஏதும் கிடையாது, இரு அடுக்கு
ஊதிய, இலாப முறை ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் உள்ள மற்ற கூறுபாடுகள் ஆகும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள
மற்ற கூறுபாடுகளை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
JL: வாழ்க்கை செலவு உயர்வை
சரிசெய்தல் (COLA)
மீண்டும் திசை திருப்பப்படுவது என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கைகளில் பணம் செல்லுகிறது என்பதை
பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று அடுக்கு ஊதிய முறை
திட்டவட்டமாக கார்த் தொழிலாளர்களில் ஒரு பகுதி வறிய நிலையில் ஆலைகளில் செயல்படுவர், அவர்களுடைய
வாழ்க்கைத் தரங்கள் இன்னும் மோசமாகச் சரிந்து போகும். இது ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கடந்த
30 ஆண்டுகளாக செய்துவருவதின் தொடர்ச்சியாகும். 60 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டிருந்த நலன்களையெல்லாம்
இவர்கள் கைவிட்டுள்ளனர்; ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை கட்டமைப்பதற்கு பாடுபட்டவர்களுடைய
போராட்டத்தில் இப்பொழுதும் ஏதும் எஞ்சியிருக்கவில்லை. இதுதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு
காட்டிக் கொடுப்பு ஆகும்.
புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் என்பவற்றைப்பற்றி நாம் பேசிக்
கொண்டிருக்கையில், பல மூடும் ஆலைகளில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும்போது
எவ்வளவு புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்படுவர்? அப்படி அவர்கள் நியமிக்கப்பட்டாலும், பழைய கருத்தான
"அடிமைகள் கூடத்தான் வேலை பெறுகின்றனர்" என்பதுதான் நினைவிற்கு வருகிறது. இது முற்றிலும் ஏற்கத்தக்கது
அல்ல.
ஊதிய உயர்வு இல்லை என்ற பிரச்சினையை பார்ப்போம்: பெரும்பாலான கார்த்
தொழிலாளர்களுக்கு ஊதியங்கள்தான் சுகாதர நலன்கள், கூடுதல் நேரப் பணி ஊதியம் போன்றவற்றின் தொகையை
நிர்ணயிக்கின்றன என்பது தெரியும். ஊதிய உயர்வு இல்லாவிட்டால், பாரிய இழப்புக்களை ஒப்பந்தம் நடைமுறையில்
இருக்கும் காலத்தில் தொழிலாளர்கள் அடைவர். இதேதான் வாழ்க்கை செலவு உயர்வை சரிசெய்தலுக்கும்
பொருந்தும்.
WSWS: வேலை உத்தரவாதங்களை
பெற்றுள்ளதாக ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம்
கூறுகிறதே.
JL: சமீபத்திய ஐக்கிய கார்
தொழிலாளர்கள் சங்கம் ஒப்பந்தங்களில் இருப்பது போலவே, இந்த ஒப்பந்தத்திலும் இத்தகைய வாசகங்கள்
கூறப்படுகின்றன. 1980களில் இருந்து ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் வேலைப் பாதுகாப்பு பற்றி
பேசிவந்துள்ளது. அப்பொழுது வேலை உறுதிகள் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தொழிலாளர்களிடம்
கூறியது. ஒரு ஒப்பந்தத்தில் "84ல் பழைய தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுத்து, இன்னமும் கூட்டு"
என்ற கோஷத்தைக் கூட ஒரு ஒப்பந்தத்தில் முன்வைத்திருந்தது. அவர்கள் "வேலையை மீட்டு இன்னமும் கூட்டு" எனக்
கூவியதற்கு பின்னர் நூறாயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன. எதை நம்பி வேலைப்பாதுகாப்பு
உத்தரவாதங்கள் எனக் கூறப்படுபவை உள்ளன? நிறுவனங்கள் ஓரளவு இலாபத்தை ஈட்டியபின்தான் புதிய
தொழிலாளர்களை நியமிப்பது அல்லது புதிய வேலையை ஏற்றல் என்பது முடியும்.
முதலாளித்துவ முறையின் கீழ், வேலைப் பாதுகாப்பு என ஒன்றும் கிடையாது.
இலாபத்தை அடைவதற்குத்தான் முதல் முன்னுரிமை என்ற நிலையில் வேலைப் பாதுகாப்பு பற்றிப்
பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. இது வெறும் வாய்ச்சவாடலாகும்.
WSWS: ஒரு ஓய்வு பெற்ற
தொழிலாளி என்னும் முறையில் இந்த ஒப்பந்தம் உங்களை எப்படிப் பாதிக்கும்?
JL: மருத்துவ பராமரிப்புக்குச்
செல்லும் வயது வராதவர்களை VEBA
எடுத்துக் கொள்ளும். 65 வயது கடந்த தொழிலாளர்களுக்கு முக்கிய காப்பீடு மருத்துவ பராமரிப்பு ஆகும்.
ஜெனரல் மோட்டார்ஸ் என்பது இரண்டாவது காப்பீடு ஆகும்; எதையும் இது அதிகம் கொடுத்துவிடுவதில்லை. இந்த
VEBA
திட்டம், ஓய்வு பெற்றவர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மீதான தாக்குதல் என்பது ஓய்வூதியங்கள்
மீதே நேரடித் தாக்குதல் நடத்துவதற்கான வகையில் இயக்கப்படும் ஒரு செயல் என்றுதான் நான் கவலை
கொண்டுள்ளேன். ஜெனரல் மோட்டார்ஸ் ஓய்வூதியப் பொறுப்புக்களையும் ஐக்கிய கார் தொழிலாளர்கள்
சங்கத்திற்கு கொடுத்து, இன்னும் செல்வக் குவிப்பையும் கொடுத்துவிடுமா? அது உறுதியாகக் கிடைக்கும்
ஓய்வூதியங்களின் முடிவு என்று ஆகிவிடும்; எப்படி சுகாதாரப் பாதுகாப்பு நலன்கள் ஜன்னல் வழியே தூக்கி
எறியப்படுகின்றனவோ, அப்படித்தான் இதுவும். அந்தக் கவலையைத்தான் நான் கொண்டுள்ளேன்.
அனைத்துமே அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன. இழக்கப்படாதது இழக்கப்பட
நேரிடலாம் என்ற அச்சுறுத்துலில் உள்ளது; இதற்குக் காரணம் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின்
பங்குதான்; அது பெருநிறுவனத்தின் ஒரு விரிவாக்க அமைப்பாகவே உள்ளது.
ஒருவர் அதிகாரத்துவத்தின் பகுதியாக இருந்தால் அல்லது மிகவும்
பிற்போக்கானவராக இருந்தால் ஒழிய, மற்றைய ஒவ்வொரு தொழிலாளிக்கும்
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் பற்றியும் பிற
தொழிற்சங்கங்கள் பற்றியும் உண்மையான நிலைப்பாடு தெரியும். அவர்கள் தொழிலாளர்களுக்காக இல்லை என்பது
தொழிலாளிக்கு தெரியும். இந்த தொழிலாளர் இயக்கத்தில் இருந்து முற்றிலுமாக தொழிற்சங்கத்தினர் அகற்றப்பட்டு
ஒரு புதிய தலைமை, சமூகத்தை மாற்றும் திட்டத்தை அடிப்படையாக கொண்டதை கட்டமைப்பதற்கான காலம்
கனிந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் என்ன செய்கிறது?
WSWS: ஐக்கிய கார்
தொழிலாளர்கள் சங்கம் ஒரு தொழிலாளர்கள் அமைப்பு என்று நீங்கள் கருகிறீர்களா?
JL: இல்லை, இல்லவே இல்லை.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஒரு தொழிலாளர்கள் அமைப்பே இல்லை. அது ஒரு வியாபாரம்.
உண்மையை எதிர்கொண்டே ஆகவேண்டும். அது ஒரு வியாபாரம்; இப்பொழுது
VEBA வும்
அதனிடம் மாற்றப்படுகையில், அது ஒரு பெரிய நிறுவனமாக, ஒரு வகையில் முதலீட்டு வங்கியாளராக மாறவுள்ளது.
அப்படித்தான் அது ஆகியிருக்கிறது; ஆனால் அது எப்படியும் ஒரு தொழிலாளர் அமைப்பு அல்ல. ஐக்கிய கார்
தொழிலாளர்கள் சங்கத்தினுள் தொழிலாளர்கள் அடங்கியுள்ளதால், அது ஒரு தொழிலாளர் அமைப்பு என்று
ஆகிவிடாது. இத்தொழிலாளர்கள் அந்த அமைப்பிற்குள் பொறியில் அகப்பட்டது போல் அகப்பட்டுள்ளனர்; இந்த
அமைப்பு ஆளும் வர்க்கம் மற்றும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் அதிகாரத்துவம் இவற்றை
வளப்படுத்துவதற்குத்தான் உள்ளது.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் இப்பொழுது ஓரு மாற்றீட்டு வகையிலான
வருமானத்தை பெற முயல்கிறது; எனவே அது ஒன்றும் உறுப்பினர்களிடம் இருந்து வரவேண்டிய கட்டணம் பற்றிக்
கவலைப்பட வேண்டியது இல்லை. இது உலகந்தழுவிய முறையுடன் தொடர்பு கொண்டுள்ளது. கார்கள் உற்பத்தி
நிறுவனங்களுடன் உற்பத்தி மற்றும் கார்கள் விற்பனையின் அடிப்படையில் கொள்ளப்படும் உடன்பாடுகளை மட்டும்
வைத்து ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தினால் தன்னை செல்வக் கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொள்ள
முடியாது. ஜெனரல் மோட்டார்ஸ் இப்பொழுது சந்தையில் 24 சதவிகிதத்தை கொண்டுள்ளது; ஐக்கிய கார்
தொழிலாளர்கள் சங்கம் கொடிகட்டி பறந்த நாட்களில் இந்த சதவிகிதம் 50 ஆக இருந்தது.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஒரு தேசியவாத பார்வையை கொண்டு
தொழிலாளரை தொழிலாளருக்கு எதிராக நிறுத்துகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக என்று மட்டும்
இல்லாமல், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்குள்ளேயே தொழிலாளர்கள் ஒப்பந்தங்களுக்கு ஏலம்
கேட்கின்றனர். மிக அதிக அளவு கொடுக்கத் தயாராக இருக்கும் உள்ளூர்ப்பிரிவு ஒரு உற்பத்தி ஒப்பந்தத்தை
மற்றொரு பிரிவில் இருக்கும் சகோதர, சகோதரிகளின் இழப்பில் பெற்றுக் கொள்ளும். எனவே இது சர்வதேச
அளவில் தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்துவது என்பது மட்டும் இல்லை.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு சர்வதேச தொழிலாளர் ஐக்கியம்
தேவையாகும்; ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் அதற்கு முற்றிலும் எதிர்ப்பைக் காட்டுகிறது; ஏனெனில்
அவ்வாறு நடந்துவிட்டால் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் அதிகாரத்துவத்திற்கு அதில் இடம் இருக்காது; அது
தக்கதேயாகும்.
WSWS: இந்த ஒப்பந்தத்திற்கு
தொழிலாளர்களிடையே கணிசமான எதிர்ப்பு இருக்கிறது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தலைமை கவலை
அடைந்துள்ளது வெளிப்படை. தொழிலாளர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் ஆலோசனை கூறுகிறீர்கள்?
JL: எல்லா இடங்களில் இருக்கும்
தொழிலாளர்களும் இந்த உடன்பாட்டை நிராகரிக்க வேண்டும்; அதே நேரத்தில் ஐக்கிய கார் தொழிலாளர்கள்
சங்கம் தலைமையிடத்தை கண்காணிக்க குழுக்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; அவர்கள் வாக்குகளை
எண்ணும்போது அங்கு இருக்க வேண்டும்; தொழிலாளர்களை ஒரு புது திசையில் அழைத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய
தலைமையை இருத்துவதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
இதை எதிர்கொள்ளுவது நலம். "S"
(சோசலிசம்) சொல் மீண்டும் தொழிலாளர்களிடையே
வரவேண்டும்; இல்லாவிடில் எங்கும் செல்ல முடியாது. சமூகம் மறு சீரமைக்கப்பட வேண்டும்; ஒரு சோசலிச
அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். வேறு விடை ஏதும் இல்லை. முதலாளித்துவம் அதன் போக்கில் முடிவைக்
கண்டுவிட்டது. தொழிலாளர்கள் இந்த முறையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
WSWS: முதலாளித்துவ வளர்ச்சியின்
பின்னணியில் இந்த ஒப்பந்தத்தை நிலைநிறுத்தும் பிரச்சினை பற்றி நீங்கள் விரிவாகக் கூறமுடியுமா?
JL: ஒரு காலத்தில் உலகச்
சந்தையில் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. உலகச் சந்தையில் தாங்கள்
பெற்றிருந்த மேலாதிக்கத்தால் அவர்கள் கார் தொழிலாளர்களுக்கு சில சலுகைகளை கொடுத்திருந்தனர். நிலைமை
மாறியவுடன், உலகந்தழுவிய முறை நடைமுறைக்கு வந்தபின், இரண்டாம் உலகப் போரினால் அழிக்கப்பட்டிருந்த
நாடுகள் மீண்டும் மறு கட்டமைப்பு பெற்ற பின், திடீரென ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் கொள்கைகள்
மாறின. பின் அதின் கொள்கைகள் மற்ற நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுடன் போட்டிக்கான தேவையை
பிரதிபலித்தன. அதன் பொருள் அமெரிக்க கார் தொழில், முதலாளிகளுக்கு சலுகைகளை கொடுக்க தொடங்கியது
என்பதே ஆகும். இந்த ஒப்பந்தம் அதன் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது.
ஜெனரல் மோட்டார்ஸ் உலகம் முழுவதும் தன்னுடைய இலாபங்களை
அதிகப்படுத்துவதற்காக துருவித்துருவித் தேடும். அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களை இன்னும் போட்டித்திறன்
மிக்கதாக்க - அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை கீழ்நோக்கி இட்டுச்செல்லும்
ஒப்பந்தங்களை பேசுவதற்கு முயற்சிப்பதன் மூலம் தொழிற்சங்கங்கள் பூகோளமயமாக்கலுக்கு விடையிறுக்கின்றன. அது
GM, Ford, Chrysler
ஆகிய நிறுவனங்களை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு இன்னும் ஈர்ப்பைக் கொடுக்கும். இது
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு நலன்களை கொடுக்கிறது; ஏனெனில் கூடுதலான உறுப்பினர்கள் சேருவார்கள்;
கூடுதலான உறுப்பினர்கள் என்றால் இதன் கருவூலத்தில் கூடுதலான பணக்குவிப்பு என்று பொருள் ஆகும்.
ஆனால் விட்டுக்கொடுப்புகளால் மட்டுமே அமெரிக்க கார் நிறுவனங்களின் சரிவைத்
தடுத்து நிறுத்த முடியாது; ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் எண்ணிக்கைச் சரிவையும் நிறுத்த
முடியாது. தொழிற்சங்கம்-நிறுவனங்கள் ஆகியவை 1980 களில் இருந்து நிறுவிய சட்டவிரோத நிதியங்கள்
போதவில்லை; எனவே தொழிற்சங்கங்கள் சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளையின் மீதே தம் கட்டுப்பாட்டைக்
கொண்டு, ஒரு இலாபம் சம்பாதிக்கும் வணிகமாக தம்மை மாற்றிக் கொள்ள விழைந்துள்ளன.
அதே நேரத்தில், உலகந்தழுவிய முறையே உண்மையில் உலகெங்கிலும் இருக்கும்
தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே முதலாளிகளால்தான் நாம் அனைவருமே
தாக்கப்படுகிறோம். நாம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சினைகள்தான் இருக்கின்றன. அதை உணராமல்,
நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்ளாமல், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அதன் கொள்ளை நலன்களின் பாதுகாப்பிற்காக
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் உழைத்துக் கொண்டு நம்மை இன்னும் கூடுதலான முறையில், முன்பு இருந்ததைவிட
அதிகமாக, பிரிக்க முயன்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவில் உள்ள கார்த்
தொழிலாளர்களை மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத்தான்
பிரதிபலிக்கிறது.
1970 ஜெனரல் மோட்டார்ஸ் வேலைநிறுத்தமும் வரலாற்றின் படிப்பினைகளும்
WSWS: நீங்கள் 1970 ஜெனரல்
மோட்டார்ஸ் வேலைநிறுத்ததில் ஈடுபட்டிருந்தீர்கள். அந்த வேலைநிறுத்தத்தில் உங்கள் அனுபவம் என்ன?
JL: வேலைநிறுத்தம் மிகவும்
முக்கியம் என்று நான் நினைத்தேன்; ஏனெனில் "30, பின் வெளியேறுதல்" [அதாவது 30 ஆண்டுகள் உழைப்பிற்கு
பின்னர் ஓய்வும், நலன்களும் உத்தரவாதம்" என்பதை] பெறுவதற்கு நாங்கள் வேலைநிறுத்தம் செய்தோம்.
ஒவ்வொரு கார்த் தொழிலாளியும் இதைத்தான் பெற விரும்பினார். ஆலைகளில் இருந்த கொடூரமான
நிலைமையினால், உடல் நலம் இருக்கும்போதே வெளியேறி அதன் பின்னர் ஒரு கெளரவமான வாழ்க்கையை
வாழலாம் என்ற நம்பிக்கையைக் கொள்ள விரும்பினோம். ஆனால் இந்த
VEBA ஒப்பந்தம்
அவை அனைத்தையும் தகர்க்கிறது.
அது ஒரு மூன்று மாத காலம், குளிரோடு வெளியில் நின்று போராடிய நேரம்;
முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் உண்மையில் நலனைக் கொடுத்தது; வாழ்க்கை செலவு உயர்வை சரிசெய்தல்,
ஓய்வூதியத் திட்டங்கள் நாடு முழுவதும் இருந்த மக்களுக்கு
இயல்பாக கிடைத்தது. அப்போராட்டங்களின் முக்கியத்துவம் அதுதான்; கார் தொழிலாளர்களுக்கு என்று மட்டும்
இல்லாமல் அனைவருக்கும் கிடைத்தது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் இன்று எதிர்த்திசையில் ஒரு
வடிவமைப்பை அமைப்பது போல் வடிவமைக்கின்றது.
WSWS: நிர்வாகத்திற்கு எதிரான
போராட்டம் என்ற விதத்தில் அக்காலத்தில் தொழிலாளர்களுடைய கண்ணோட்டம் எவ்வாறு இருந்தது?
JL: 60 களிலும், 70 களிலும்,
கார்த் தொழிலாளர்கள் தங்களை ஒரு வர்க்கத்தின் பகுதியாகவே பார்த்தனர். இங்கு அமெரிக்காவில் மட்டும்
நடைபெற்ற போராட்டத்தின் பகுதி அல்ல அது, உலகம் முழுவதும் நடந்த போராட்டத்தின் பகுதியாகும்.
பிரான்சில் அப்பொழுதுதான் மே-ஜூலை வேலைநிறுத்தம் நடந்தது. வியட்நாம் போருக்கு எதிரான போராட்டம்
நடந்து கொண்டிருந்தது; அதைத் தவிர குடியுரிமைகள் போராட்டமும் நடந்து வந்தது. வியட்நாம் போருக்கு
எதிராகக் கூட ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் குரல் எழுப்பியது. இன்று அப்படி நடக்கும் என்று நீங்கள்
கற்பனை செய்ய முடியுமா? அவர்கள் கறுப்பின தொழிலாளர்களின் குடிமை உரிமைகளுக்கான போராட்டத்திற்கு
ஆதரவு கொடுத்தனர். இன்று அவர்கள் ஆவணமற்ற குடியேறும் தொழிலாளர்கள்மீது கொண்டுள்ள அணுகுமுறையைப்
பாருங்கள். எந்த அளவிற்கு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் சீரழிந்து உள்ளது என்பதை அது காட்டுகிறது.
இன்று நம்பமுடியாது எனக்கூறக்கூடிய அளவிற்கு, அன்று பெரும்பாலான
தொழிலாளர்கள் உண்மையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடைய அமைப்புக்கள், தங்கள் உரிமைகளை காக்க
உள்ளன என்று நினைத்தனர். இன்று அப்படிப்பட்ட தன்மையை நாம் காண்பதற்கு இல்லை.
WSWS: 1970ல் ஒரு அஞ்சல்
துறை வேலைநிறுத்தம் இருந்தது; மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஏராளமாக இருந்தன. ஒரு
பெரும் எழுச்சியின் கொதிநிலை இருந்தது.
JL: முதலாளித்துவ முறை ஒரு
நெருக்கடியில் இருந்தது என்பதை அது பிரதிபலித்தது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அது அமைப்பு முறைக்கு எதிரான நனவு மிக்க போராட்டம் என்று அது இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்; ஒவ்வொருவரும் போராட்டத்தில் முழுமூச்சுடன் இருந்தனர். ஒவ்வொரு
போராட்டமும் அடுத்த போராட்டத்திற்கு வலிமையைக் கொடுத்தது.
இந்தப் போராட்டங்கள் பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டதால் முடிவிற்கு வந்தன;
ஏனெனில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை உருவாக்கும் ஒரு வெகுஜன இயக்கம் ஏதும் இல்லை;
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியில் இருந்து உடைத்துக் கொள்ள, உலகின் மற்ற பகுதிகளில் சமூக ஜனநாயகக்
கட்சி மற்றும் ஸ்ராலினிச கட்சிகளிடம் இருந்து உடைத்துக் கொள்ள இயக்கம் ஏதும் இல்லை. அதுதான் இயக்கத்தின்
பலவீனமாயிற்று; எனவேதான் நாம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறோமோ அங்கு தள்ளப்பட்டுள்ளோம்;
ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தொழிலாளர்களுக்கு அவர்கள் செல்ல வேண்டிய பாதையின் வழியியே அழைத்துச்
செல்லும் தலைமை இல்லை.
WSWS:
Soldiers for Solidarity
போன்று, உதாரணத்திற்கு, சிலர் இருந்தனர்; அவர்கள் தொழிற்சங்கத்தின் போர்க்குணமிக்க மரபுகளைப்
புதுப்பிக்க வேண்டும் என்றும் Gettelfinger
மற்றும் நிறுவனத்தின் மீது அழுத்தம் கொடுத்து, அவர்களை கூறுவதற்கு இணங்காமல் இருக்க வேண்டும் என்கின்றனர்.
JL: அது ஏற்கனவே தோற்றுவிட்ட
ஒரு கொள்கையாகும். Soldiers of
Solidarity என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்
அடிப்படையான இடது மறைப்பு ஆகும். அதன் உறுப்பினர்கள் பலரும் முன்னாள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர்;
தங்கள் நிலைமையை இழந்தவர்கள்; மீண்டும் தொழிற்சங்கத்திற்குள் தங்கள் பதவிகளை பெறவேண்டும் என்று
நினைப்பவர்கள்.
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தினுள் மோசமானவர்கள் உள்ளனர் என்பது
பிரச்சினை அல்ல. தொழிற்சங்க வாதம் மற்றும் தேசியவாதம் என்ற முழுக்கருத்துப் படிவங்களும்
தோல்வியுற்றுள்ளன; இனி அவை நன்கு செயலாற்ற முடியாது; இன்னம் சொல்லப்போனால் முதலில் இருந்தே
சரியாகச் செயல்படவில்லை. இன்னும் கூடுதலான போர்க்குணமிக்க புதிய தொழிற்சங்கத்தை தொடக்குவது என்பது
பிரச்சினை அல்ல. எந்த தொழிற்சங்கமாவது அதைச் செய்யுமா? ஊதிய அடிமை முறையின் விதிகள் பற்றி அவை
பேச்சுவார்த்தைகள்தான் நடத்தும். பெருநிறுவனம், "இதை எங்களால் செய்யமுடியாது, நாங்கள் ஆலையை மூடப்
போகிறோம்" என்று கூறியவுடன் தொழிற்சங்கங்கள் தாழ்ந்து போய்விடும். பிரச்சினை என்பது
தொழிற்சங்கவாதமே, தனிப்பட்ட தலைவர்கள் என்பதாக இல்லை.
WSWS: நீங்கள் ஏன் சோசலிச
இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?
JL: 1970 வேலைநிறுத்த
காலத்தின், வெளியே சிலர் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். இக்குழுவினர்
Workers League
என்று சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி ஆகும். ஒரு துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் ஜனநாயகக் கட்சிக்கு
ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கொடுக்கும் ஆதரவு பற்றியும், அலபாமா மாநிலத்தின் பிரிவினைவாத
கவர்னர் ஜோர்ஜ் வாலஸ் அக்கட்சியைச் சேர்ந்தவர் என்ற உண்மை பற்றியும், மிஷிகனில் தொடக்கத் தேர்தலில்
கணிசமான வாக்குகளை பெற்றுவருகிறார் என்றும், இப்பகுதி ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்துடைய தாயகம்
என்றும் கூறப்பட்டிருந்தது. அவர் மிஷிகன் தொடக்கத் தேர்தலில் வெற்றிபெற்றார். ஒரு கறுப்பின கார்த்
தொழிலாளி என்னும் முறையில் நான் நினைக்கத் தலைப்பட்டேன்: "எஎமது அமைப்பு எப்படி வாலஸ் போன்ற ஒரு
மனிதரை தனக்குள் போற்றி ஆதரிக்கலாம்?"
Workers League இல் இருந்து
வந்தவர்கள் ஒரு தொழிலாளர் கட்சியை அமைப்பது பற்றி, தொழிற்சங்கங்களை அடைப்படையாகக் கொண்டு
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன அரசியல் கட்சி கட்டமைக்கப்பட வேண்டிய தேவை பற்றிப் பேசினர்.
தொழிற்சங்கங்களுக்கு அந்த நேரத்தில் ஆதரவு கொடுத்திருந்த நான், இது ஒரு பெரிய விஷயம் என்று கருதினேன்.
இறுதியில் நாம் நமக்கே அதிகாரம் என்பதற்காக போராட முடியும். நாம் ஒன்றும் ஜெனரல் மோட்டார்சிடம்
பிச்சை எடுக்க வேண்டியது இல்லை; ஜனநாயகக் கட்சியினரிடம் பிச்சை எடுக்க வேண்டாம், குடியரசுக்
கட்சியினரிடம் பிச்சை எடுக்க வேண்டியது இல்லை. நமக்கான போராட்டத்தை நாமே தொடங்கி நமக்குத்
தேவையானதை பெறலாம். எனவேதான் நான் அதில் சேர்ந்தேன். பின்னர் நான் கண்டுபிடித்தபடி, அப்பொழுது
தொழிற்சங்க அடித்தளத்தில் ஒரு தொழிலாளர் கட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. தொழிற்சங்கங்கள்
தொடர்ந்து இழிசரிவு பெற்ற நிலையில், அவற்றை தளமாகக் கொண்ட ஒரு கட்சி நமக்குத் தேவையில்லை என்பது
வெளிப்படையாயிற்று.
இந்த ஒப்பந்தம் தொழிலாளர்கள் ஒரு முழுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு
சமூகத்தை ஜனநாயக முறையில், சமத்துவ வகைகளில், மறு சீரமைக்கத் தயாரிக்க வேண்டும் என்ற குறிப்பை
காட்டுகிறது. அது ஒன்றுதான் தக்க விடையாகும்.
ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் மடிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்கள்
கொல்லப்பட்டனர், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றனர்; இவை அனைத்தும் ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப்
போரினால், ஒரு குற்றம் சார்ந்த செயலினால். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் தன்னுடைய உறுப்பினர்கள்
மீதான தாக்குதலை ஜெனரல் மோட்டார்ஸ் நடத்தியது பற்றி எப்படிப் பேசுவதில்லையோ, அப்படித்தான் அது ஈராக்
மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் பெரும் தீமை கொடுக்கும் போர்களுக்கு எதிராகவும் பேசவில்லை; ஈரானுக்கு எதிராக
தயாரிக்கப்படும் போருக்கு எதிராகவும் அது பேசாது.
தொழிலாள வர்க்கம் இவற்றை நிறுத்துவதற்கு தக்க அரசியல் வழிவகையை
கொண்டிருக்கவில்லை. அரசியல் அதிகாரம் இல்லாவிட்டால் இந்த நடவடிக்கைப் போக்கை மாற்றுவதற்கு வழி ஏதும்
இல்லை.
கார் தொழிலாளர்களுக்கு செய்முறை, தொழில்நுட்பம் என மிகச் சிறந்த கார்களை
குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யவும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் கார்த் தொழிலாளர்களுக்கு
உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அமைக்கவும் முடியும். ஆனால் இலாபமுறையை அடிப்படையாக கொண்ட ஒரு
வடிவமைப்பின்கீழ் இது சாதிக்கப்பட முடியாது. இலாபம் என்று இல்லாமல், தேவையை அடிப்படையாகக் கொண்டு
நாம் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
போர்முரசுகள் பெரிதாக, அடிக்கடி முழங்குகையில், ஒன்று நிச்சயம்: முரண்பாடுகள்
வெடித்தெழுவதை தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் ஒன்றினால்தான் முடியும்.
அதற்கு தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய கட்சி தேவை; அது சோசலிச சமத்துவக் கட்சிதான்
என்பதை நான் நம்புகிறேன். |